தோழர் பாலன்
தோழர் பாலன்

தோழர் பாலன்

செப்டம்பர் 12 தோழர் பாலன் ஆளும் வர்க்கப் போலீசாரால் கொல்லப்பட்ட தினம். யார் இந்த பாலன்? சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்.ஸி படித்தப் பட்டதாரி. தருமபுரி குமாரசாமிப் பேட்டையைச் சேர்ந்த ஒரு நெசவாளரின் மகன். வசந்தத்தின் இடி முழக்கமென எழுந்த நக்சல்பாரி இயக்கத்தின் முதல் வெகுசன களநாயகன். 1980 களில் தருமபுரியில் ஆர்த்தெழுந்து ஆதிக்கப் பண்ணைகளை அழித்தொழித்த முன்னோடி அவர் செய்த போராட்டங்கள் பல. உதாரணமாய் சொல்ல வேண்டுமானால், செவத்தாக்கவுண்டன் என்கிற கந்து வட்டிக்காரன் மிக கொடியவன். இவனது மகன் அரங்கநாதன் அன்றைய ஆளும் கட்சி எம்.எல்.ஏ.இதை வைத்து செவத்தான் எளிய மக்களை கந்து வட்டிக் கொடுமைகள் செய்து வாட்டி வதைத்தான். ஒருமுறை எளிய கூலி தொழிலாளியை செவத்தான் அடித்து விட்டான் அந்த தொழிலாளி சமீபத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர். அடிபட்ட வேகத்தில் மயக்கமாகி விட்டார். விசயத்தை கேள்விப்பட்ட தோழர் பாலன் தனது வாலிபர் சங்கத் தோழர்களோடு களத்துக்கு வந்தார் சற்றும் யோசிக்காமல் கந்து வட்டிக்காரன் செவத்தானை மரத்தில் கட்டி வைத்து உதைத்தார் களத்துக்கு அரங்கநாதன் தூண்டுதலால் போலீஸ் வந்தது இன்ஸ்பெக்டர் சிவகுரு செவத்தானை விடுவிக்கச் சொன்னான். தோழர் பாலன் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உரிய நட்ட ஈடு கேட்டார். அன்றைய மதிப்பில் நானூறு தர முடிவாகியது. செவத்தானிடம் அப்போது முன்னூறு மதிப்புள்ள சைக்கிள் இருந்தது. மீதி நூறு ரூபாய்க்கு இன்ஸ்பெக்டர் சிவகுரு தன் கையால் புரோநோட்டு எழுதிக் கொடுத்தான்.இதைத்தான் தோழர் பாலன் தன் கையில் வைத்துக் கொண்டு மேடைதோறும் ஒரு பணக்காரனுக்கு புரோநோட்டு எழுதித் தரும் போலீஸ் ஏழைக்காக எழுதி தருமா? என வினா எழுப்பினார். இதை வைத்து ஏழைப்பங்காளன் என பீலா விட்ட எம்.ஜி.ஆர் ஆணையின் படி வால்டர் தேவாரம் என்ற இரத்த வெறி பிடித்த போலீஸ் உயரதிகாரி தோழர் பாலனை சீரியம்பட்டி என்ற கிராமத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் கைது செய்தான். பாலக்கோடு போலீஸ் ஸ்டேசனில் பாலனின் காலை முறித்தான். பிறகு, பாலன் இறந்து விடுவார் என்று நினைத்து தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் தூக்கி கடாசினான். ஆனால், அன்புள்ளம் கொண்ட மருத்துவர்கள் அவரை காப்பாற்றி விட தேவாரம் வெறி கொண்டு பாலனை சென்னை மருத்துவமனைக்கு மாற்றினான். வழியெங்கும் சித்ரவதைகள் தொடர்ந்தன. இதன் காரணமாய் சென்னை மருத்துவமனையில் தோழர் பாலன் வீர மரணமடைந்தார். இறக்கும் தருணத்தில் தோழர் சொன்ன வார்த்தைகள் இதுதான் ‘என்னைக் கொன்று விடலாம். என் கொள்கையை கொல்ல முடியாது. என்னைப் போல எண்ணற்ற இளைஞர்கள் போராட்டக் களத்துக்கு வருவார்கள். இந்த நாடு விடுதலை பெறும். மார்க்சிய லெனினியம் நீடூழி வாழ்க!’ பகத்சிங்கை கூட எதிரிகள் இந்த அளவுக்கு சித்ரவதை செய்யவில்லை. ஏனெனில், தோழர் பாலன் நக்சல்பாரி என்பதே. எனது ‘தறியுடன்…’ நாவலை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்துள்ளேன் தோழர் பாலன் நினைவு நீடுழி வாழ்க. இதே செப்டம்பரில் வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆளும் வர்க்கத்தால் கொல்லப்பட்ட நக்சல்பாரி தியாகிகள் தோழர் அப்பு, தமிழரசன், சந்திரகுமார், சந்திரசேகர், மாடக்கோட்டை சுப்பு நினைவு நீடுழி வாழ்க.

மக்களின் தோழன் பாலன் எம்.ஜி.ஆர் அரசின் அராஜக செயல்பாடுகளால் அடித்துக் கொல்லப்பட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 15 நக்சல்பாரி புரட்சியாளர்கள் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். ஏழைகளின் பங்காளன் என நீட்டி முழங்கிக் கொண்டிருந்த எம்ஜிஆரின் மறுப்பக்கம் அது.தமிழகமெங்கும் நக்சல்பாரிகளின் உதிரம் உறையாத காவல் நிலையங்களே இல்லை என்ற கொடூரமான காலகட்டம் அது. அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் மக்களின் விடுதலைக்காக தீரமுடன் போராடிய முற்போக்கு இயக்கங்களில் தமிழக வரலாற்றில் நக்சல் பாரிகளுக்கு என்றைக்கும் முன்வரிசையில் இடம் உண்டு.படுகொலை செய்யப்பட்டவர்கள் ஒருபுறம் என்றால் அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள், சித்திரவதை செய்யப் பட்டவர்கள், ஆயுள் தண்டனைகளுக்கு ஆளாகி ஜெயிலிலேயே தனது இளமைக் காலங்களைத் தொலைத்தவர்கள் என தனக்குள்ளே ஒரு மாபெரும் தியாக வரலாற்றை கொண்டிருக்கிறது இந்த நக்சல்பாரி இயக்கம்.பல இளைஞர்கள் வழக்குகளை முடித்து பிணையில் வெளிவருவதற்கு முன்பாகவே சிறை வாசலில் மற்றொரு வழக்குக்காக கைது செய்யப்படுவதும்,புரட்சிப் பணிகளில் ஈடுபட்ட ஆண்கள் ஜெயிலில் இருக்கும் சமயங்களில் “பொதுவுடமைன்னா படுக்கிறது கூடவா” என பெண்களிடம் சீண்டுவதுமாக ஈன செயலில் ஈடுபட்டது கேடுகெட்ட தமிழக காவல்துறை.தனது சிறை அனுபவம் பற்றிய குறிப்புகளில் தியாகு சொல்வார். ‘சிறைக்குள் யாரும் நீண்ட நாளைக்கு தைரியசாலிகளாக நடிக்க முடியாது என்று.’ அதுபோலத்தான் நடைமுறையில் இயங்குகின்ற புரட்சிகர இயக்கங்களிலும்.அங்கு மக்கள்மீது பற்று கொண்டவர்களுக்கும் எஃகு போன்ற மன திடம் கொண்டவர்களுக்கும் தான் கொண்ட லட்சியத்தில் உறுதியான பிடிப்பு உள்ளவர்களுக்கு மட்டும்தான் வேலை. தலைமையில் இருந்தவர்களின் அகவய வாத போக்கினாலும், புரட்சிகர விரோத மனோபாவங்களாலும், துரோகத்தனத்தினாலும் எண்ணற்ற தோழர்களின் தியாகங்கள் விழலுக்கு இறைத்த நீராய் வீணாகிப் போயின.அடக்குமுறை காலங்களில் பேசுகின்ற மேடைகளில் இருந்து ஓடி ஒளிந்து வீட்டில் பதுங்கி இருந்துவிட்டு ஓய்வு பெற்று ‘சேப்பாக’ வீட்டுக்கு வந்திட்ட பின்னால் வீராவேசம் பேசுபவர்களும், நான்கு வரிகளை எழுதிவிட்டு நானும் புரட்சியாளன் என்று காலரை தூக்கிக்கொண்டு திரும்புபவர்களும், அடுத்தவர்களின் மீது முத்திரை குத்துவதற்கு என்று ரப்பர் ஸ்டாம்புகளை தயாரித்துக் கொண்டு அலைந்து கொண்டிருப்பவர்களும், கைது நடவடிக்கைகள் இல்லை என்றால் மட்டுமே கூட்டத்துக்கு ஏற்பாடு செய்பவர்களும், போஸ்டர் போட்டு அதை மட்டுமே புரட்சிகர பணி என்று சிலாகிப்பவர்களும் இன்றைக்கு நக்சல்பாரிகள் என்று அறிவித்துக் கொண்டு இருக்கின்ற வினோதங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. எது எப்படி ஆனாலும் ஒன்று மட்டும் நிச்சயம். என்ன நோக்கத்திற்காக அன்றைக்கு இந்திய வானில் நக்சல்பாரி இயக்கம் வசந்தத்தின் இடிமுழக்கமாக எழுந்ததோ அந்த நோக்கம் இன்றைக்கும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது. முன்பைவிட கூர்மையாகவும், ஆழமாகவும். தேவைகள்தான் வரலாற்று இயக்கங்களை எப்போதும் தீர்மானிக்கின்றன. தனது எல்லா தடைகளையும் கடந்து நக்சல்பாரி இயக்கம் மீண்டு எழும். மக்களை ஒளிமிகுந்த ஓர் வருங்காலத்திற்கு அது அழைத்துச் செல்லும்.வாழ்க செப்டம்பர் தியாகிகளின் வீர நினைவுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *