தோழர் கோ.கேசவன்
தோழர் கோ.கேசவன்

தோழர் கோ.கேசவன்

தோழர் கோ.கேசவன் காலமாகி 19 ஆண்டுகள் சென்று விட்டன. இன்றைக்கு கார்ப்பரேட் பன்னாட்டு கம்பெனிகளின் கொள்கை நலன்களுக்கான இந்துத்துவா பாசிசத்தின் நரேந்திர மோடி ஆட்சி டெல்லியில் நடைபெற்று வரும் சூழலில் பேராசிரியர் கோ.கேசவனின் வாழ்க்கையை, படைப்புகளை நினைவு கூர்வதும், திறனாய்வதும் அவசியமானதொரு பணியாகின்றது.நுகர்வு வெறியும், சுயநலமும், தன்னகங்காரமும் உள்ள தமிழக அறிவு இன்று மேலோங்கி உள்ளது. தான், தன்குடும்பம், தன் வாழ்வு என்று தாழ்ந்து தாழ்ந்து பிள்ளைப் பூச்சியாய் கசிந்து போவதான சூழலில் பரந்து விரிந்து மானுட வாழ்க்கை கண்ணோட்டத்துடன் தன்னை முக்கியப்படுத்திக் கொண்டவர் தோழர் கோ.கேசவன்.தோழர்.கேசவன் முதுகலைப்பட்டம் பெற்று இரண்டாண்டுகள் மொழி பெயர்ப்பாளராகவும், பின்பு வாழ்நாள் முடியும் வரை தமிழ்ப் போராசிரியராகவும் பணியாற்றியவர்.ஆரம்ப நாட்களில் தி.மு.க அனுதாபியாக, இருந்து பின்பு இடதுசாரி கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர், எழுபதுகளின் ஆரம்பத்தில் வளர்ந்த வானம்பாடி இலக்கிய இயக்கம் தெளிவான அரசியல் வழிகாட்டுதலும், தலைமையும் இன்மையால் தேய்ந்து நெருக்கடி கால கட்டத்தில்(1975) மறைந்து போனது. இத்தகைய பின்னணியில் நெருக்கடி நிலையை எதிர்த்து, பிள்ளை பாண்டியன் என்ற பெயரில் சில கவிதைகளை எழுதினார். அடக்குமுறை உச்சத்தில் இருந்த நெருக்கடிநிலையை விமர்சித்து எழுதிய சிலரில் கேசவனும் ஒருவர் என்பது பதிவு செய்ய வேண்டிய தகவல் ஆகும். இந்தப்பண்பு அவர் வாழ்நாள் இறுதிவரை தொடர்ந்தது.ஆரம்பத்தில் இந்திய கம்யூஸ்ட்டு கட்சி {மார்க்சிஸ்ட்}யிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து கேசவன் பணியாற்றினார். அப்பொழுது எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 1979இல் ‘மண்ணும் மனித உறவுகளும்’ என்ற நூலாக வெளியிடப்பட்டது. பரவலாக பாராட்டப்பட்ட இந்நூல் கேசவனுக்கு மார்க்சிய ஆய்வாளர், கைலாசபதியின் சீடர் என்ற பெருமைகளைத் தேடித் தந்தது. பின்பு சி.பி. எம்.மின் திரிபுவாத நிலைபாடுகளை உணர்ந்து அதிலிருந்து விலகினார். புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியான இ.க.க(மா.லெ) (மக்கள் யுத்தம்) உடன் தன்னை இணைத்துக் கொண்டார்.இயக்கத்தின் தேவைகளை ஒட்டி மாரிஸ் கான் போர்த்தின்-“இயக்கவியல் பொருள் முதல்வாதம்”, ஜார்ஜ் தாம்சனின் “மனித சமூகச் சாரம்” போன்றவைகளை மொழி பெயர்த்தார். புரட்சிகர பண்பாட்டு இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவராகவும், செந்தாரகை ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் இருந்து புரட்சிகரப்பணிகளை ஆற்றினார். செந்தூரன் என்ற புனைபெயரில் ஏகாதிபத்திய – நிலவுடைமை கருத்துக்களையும் திரிபுவாத தத்துவங்களையும் அம்பலப்படுத்தி எழுதினார்.தொடர்ந்து சமரன், தோழமை, மக்கள் தளம், பொதுவுடைமை ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுக்களிலும் இருந்து பங்களிப்பு செய்தார். மக்கள் பண்பாட்டு பேரவையின் பல கூட்டங்களில் கலந்து கொண்டதோடு, மக்கள் பண்பாடு இதழிலும் தொடர்ந்து கட்டுரைகளை எழுதினார்.90களில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்நவீனத்துவம் உட்பட பல்வேறு பிற்போக்கு கருத்துகளை முறியடிக்க அயராது உழைத்தார். தனது சர்க்கரை நோயையும் பொருட்படுத்தாது கடுமையாக பாடுபட்டதால் தோழர் கேசவன் 16.9.1998 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.புரட்சிகர ஆளுமைநக்சல்பாரி பாதையை தனது அரசியல் வழியாக கோ.கேசவன் ஏற்றவுடன் அவர் எழுதிய நூல் “பள்ளு இலக்கியம் ஒரு சமூகப்பார்வை” என்பதாகும். தலித் மக்கள் பற்றி விரிவாகப் பேசும் இந்நூல் எழுத தோழருக்கு உந்து கோலாக இருந்தது நக்சல்பாரி அரசியல் கண்ணோட்டமே ஆகும். இந்நூலில் தலித் மக்கள் விடுதலை என்பது பாராளுமன்ற சனநாயக மாயைகளைத் தகர்த்து, ஆயுதம் தாங்கி உழவர் போராட்டமாக மலரும்போது மட்டுமே சாத்தியம் என்று கேசவன் தெளிவாக விளக்குகிறார். இதற்காக காவல்துறை கேசவனை விசாரணை என்ற பெயரில் நெருக்கடிக்க உள்ளாகியது. கேசவன் அடக்குமுறையை உறுதியாக எதிர்கொண்டார். இந்தத் தெளிவும் உறுதியாக தோழரிடம் இறுதிவரை இருந்ததை அவரின் சாதியம், தாழ்த்தப்பட்டோரும் சமூக விடுதலையும் நூல்களைப் படிக்கும் வாசகர்கள் அறியமுடியும்.புரட்சி பண்பாட்டு இயக்கம் ஆரம்பித்து பின்பு அதன் நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ‘இலக்கிய விமர்சனம் ஒரு மார்க்சிய பார்வை’ என்ற நூலை பேராசிரியர் கோ.கேசவன் எழுதினார். பண்பாட்டு அமைப்பில் தலைமைப் பொறுப்பில் இருந்த தோழர் சரியாகவே அதை நிறைவேற்றும் வண்ணம் அத்தளத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டார். செந்தாரகை இதழில் பல கட்டுரைகள் எழுதினார். ‘நமது இலக்குகள்’ என்ற தொடர் கட்டுரை நிலவுடைமை பிற்போக்குத் தனங்களை, ஏகாதிபத்திய சீரழிவுகளை மட்டும் தோலுரிக்கவில்லை….. பல்வேறு நவீன திரிபுவாத கருத்துகளையும் அம்பலப்படுத்துவதாக அந்நூல் இருந்தது. ஆய்வாளராக மட்டுமல்லாமல்….. கல்லூரி ஆசிரியர் சங்கத்திலும் பங்கேற்று, இச்சங்கம் நடத்திய பல போராட்டங்களில் முன்னணிப் போராளியாக இருந்தது வழிநடத்தினார்.90களில் முன்னாள் சோலிச நாடுகளின் தகர்வும் ஏகாதிபத்தியங்களின் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரமும் அறிவு ஜீவிகளின் மத்தியிலும், நடுத்தர வர்க்கத்தினிடமும் ஊசலாட்டத்தை ஏற்படுத்தியது. கம்யூனிசத் தத்துவம், புரட்சி, சோசலிச சமூகம் என்று பலவற்றையும் கேள்விக்குள்ளாக்கியது. கேசவன் இந்தப் போக்குகளை எதிர்த்துப் போராடினார். “ரசியப் புரட்சி மாயையா?” என்ற நூலை எழுதினார்.நரசிம்மராவ் காலம் தொட்டு உலகமயமாதல், தாராளமயமாதல் என்று பல விதங்களில் ஏகாதிபத்திய சுரண்டல் அதிகரித்தது. உலகமயமாதல் தலித் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது முதல் ஏகாதிபத்திய சீரழிவுத் தத்துவமான பின் நவீனத்துவம் வரை பல சரக்குகளை ஆர்ப்பாட்டமாகச் சிலர் தமிழகக் களத்தில் இறக்கி விட்டனர். தலித் மக்கள், பெண்கள், தேசிய இன விடுதலைப் போராட்டங்களை இத்தத்துவ பின்னணியில் வியாக்யானம் செய்து அப்போராட்டங்களைச் சிதறடித்து நீர்த்துப் போக வைக்க முயன்றனர். தோழர் கேசவன் அதைத் தனக்கே உரிய முறையில் எதிர்கொண்டார்.1987க்குப் பின்பு தமிழக நக்சல்பாரி இயக்கத்தில் பின்னடைவு ஏற்பட்டதை ஒட்டி புரட்சிப் பண்பாடு இயக்கம் மறைந்து போனது. கேசவன் பணியானது சிறிது திசை திரும்பியது. ஆனாலும், மார்க்சிய அடிப்படையில் திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், தலித் இயக்கம் பற்றியும், பெரியார், அம்பேத்கார், சிங்காரவேலர் போன்றோரின் பணிகள்-படைப்புகள் பற்றியும் வரலாற்று அடிப்படையிலான மதிப்பீட்டு ஆய்வு நூல்களைச் செய்தார். இவையெல்லாம் பொதுவுடைமை இயக்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் விலை மதிப்பற்ற அறிவுச் செல்வங்களாக என்றும் விளங்கும்.சிலரின் இறப்பு இறகை விட இலேசானது என்றும், சிலரது இறப்பு மலையை விட கனமானது என்றும் தோழர் மாவோ குறிப்பிடுவார். இந்தியச் சூழலில், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டுச் சூழலில் திரிபுவாத தற்கால நவீன திரிபுவாத சக்திகள், சீர்திருத்த இயக்கங்கள், ஓட்டுப் பொறுக்கும் திராவிட இயக்கங்கள் ஆகியவற்றின் துணையோடு இந்துத்துவம் பாசிச பரிவாரங்கள் அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலைமையில், ஏகாதிபத்திய சீரழித்தத்துவமான பின்நவீனத்துவம் தான் முற்போக்கானது என்று ஏமாற்றுவது முதற்கொண்டு திராவிட இயக்கமே மண்ணுகேற்ற மார்க்சியம் என்று பிழைப்பு நடத்துவது வரை உள்ள அறிவுச் சூழ்நிலையில் இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதலியல் ஆய்வு அடிப்படையில் பல்வேறு தளங்களில் 33 நூல்களையும், இன்னும் பல கட்டுரைகளையும் எழுதிய மார்க்சிய ஆய்வாளரும், நக்சல்பாரி இயக்கத் தோழருமான தோழர் கோ.கேசவன் அவர்களின் இழப்பை மேற்கண்டவாறு மதிப்பிடுவது மிகையானது அல்ல.

11Vchinnadurai Durai, Sundara Cholan and 9 others5 Comments4 SharesShare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *