அன்பு தோழர்களே உலகின் பல நாடுகளில் புரட்சி நடந்து முடிந்து இன்று எதிர்புரட்சியால் முதலாளிதுவ நாடுகளாக திருத்தல்வாதிகளாக மாறி விட்டனர் என்று பேசும் நாம்.நமது நாட்டில் இதுவரை புரட்சிக்கான பங்களிப்பு இடதுசாரி இயக்கங்களின் பல்வேறு போக்குகள் இன்று புரட்சியாளர்கள் முன் உள்ள பணி பற்றி விவாதிக்க ஆரோக்கியமான விவாதம் தேவை என்று நினைக்கிறேன்.
எனது எழுத்துகள் கடந்தகால மார்க்சிய எழுத்தாளர்களின் துணையுடன் ஒரு பருந்து பார்வையாக எழுத நினைக்கிறேன் ஏனெனில் 12 செப்டம்பருக்கு முன் மா-லெ அமைப்புகளின் இன்றைய நிலையை அலசி ஆராய்ந்து முன் வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் தோழர்களே.
நமது இன்றைய இடதுசாரி என்று கூறிக் கொள்வோரின் நிலை, ஐந்து குருடர்கள் யானை பார்த்த கதையை உள்ளது. . ஒவ்வொரு குருடனும் யானையின் ஒரு பகுதியை மட்டுமே தொட்டுத் தடவி ஆராய்ந்து, அப்பகுதியையே யானையின் முழுமையெனக் கருதித் தான் தொட்ட பகுதி தானறிந்த எப்பொருளை ஒத்திருந்ததோ அப்பொருளையே யானையும் ஒத்திருக்கும் என்ற முடிவுக்கு வந்து, மற்றவர்களுடன் கடுமையாக வாதிட்டதைப் போலவே
எந்தவொரு விஷயத்தையும் பல்வேறு கோணங்களினின்றும் பார்க்கவும் முழுமையையும் பகுதியையும் உறவுபடுத்தியும் வேறுபடுத்தியும் ஆராயவும் தவறும்போது, நமது பார்வை குறைபாடுடையதாகி நமது முடிவுகள் முழுமையற்றனவாகின்றன.
இன்றுவரை, மனிதர் தம் குறைபாடான பார்வைகள் மூலம் பெறும் தகவல்களை ஒன்றிணைத்துப் பொதுவான கொள்கைகளை வகுத்து அவற்றை நடைமுறை மூலம் பரிசீலனை செய்து சீர்ப்படுத்தித் தவறானவற்றை நிராகரித்துப் புதிய கொள்கைகளை வகுத்து மனித அறிவை முன்னெடுத்து வந்துள்ளனர். இந்த மனித அறிவின் இறுதி ஆதாரம் நடைமுறையேயன்றி வேறில்லை.
பொதுமைப்படுத்தப்பட்டு, கொள்கையாக வளர்ச்சி செய்யப்படாத நடைமுறை குறைபாடுடையது. அத்தகைய நடைமுறை அனுபவத்தை மட்டுமே சார்ந்திருக்கும் அறிவு அரைகுறையானது. நடைமுறையினின்று கொள்கைக்கும், கொள்கையினின்று நடைமுறைக்குமான பரிமாறல் மூலமே மனித அறிவு வளர்ச்சி பெற்று முழுமையை அடைகிறது. ஐந்து குருடர்களும் தத்தமது நேரடி அனுபவங்கட்கு அப்பால் அறிவைத் தேட மறுத்ததாலும் அந்த அனுபவங்களை முழுமையாகக் கருதிப் பொருளின் பிற அம்சங்களைப் புறக்கணித்ததாலும் அவர்களது நடைமுறை குறைபாடான அறிவையே தந்தது. இயங்கியல் சாராத வரட்டுத்தனமான பொருள்முதல்வாதமும் யானை பார்த்த குருடர்களின் நிலையில்தான் உள்ளது.
ஐந்து குருடர்களும் யானையின் ஒரு பகுதியை முழு யானையாகவும், தத்தம் குறுகிய அனுபவங்களை முழுமையானவை எனவுங் கருதித் தவறு செய்தார்களாயினும், அவர்கள் சொன்னவற்றில் உண்மையின் ஒரு பக்கம் இருந்தது.அவர்களது விளக்கத்தின் பல்வேறு தவறுகள் அவர்களது நடைமுறையின் போதாமையுடனும் தம் அனுபவத்தை அறிவாக வளர்ச்சி செய்யும் முறையின் குறைபாடுகளுடனும் தொடர்புடையன.
இப்படியாக பல்வேறு கருத்து சிதறல்களாக உள்ள இந்திய இடதுசாரி பற்றி ஒரு தேடுதலுக்கான முன்னுறையே இவை தோழர்களே…. தொடரும் முதல் பதிவுடன் அடுத்து….