தொல்காப்பிய காலச்சமூகத்தில் பெண்ணடிமை
தொல்காப்பிய காலச்சமூகத்தில் பெண்ணடிமை

தொல்காப்பிய காலச்சமூகத்தில் பெண்ணடிமை

 பண்டைய கால மன்னர் சமுதாயக் கட்டமைப்பினை வெளிப்படுத்திய இலக்கண நூலான தொல்காப்பியம்  அகம், புறம் சார்ந்த செயல்பாடுகளையும் எடுத்தியம்புகிறது. அன்றைய காலத்தில் அதிகாரத்தில் இருந்தோர்கள், பெண்களுக்கெனப் பல கட்டுபாடுகளை சமூக பண்பாடுகளாய் விதித்து, பெண்களுக்கு எதிரான  பல்வேறு வகையான ஒடுக்குமுறைகளையும், அரங்கேற்றியிருப்பதைத் தொல்காப்பிய இலக்கண வழியும் அறிய முடிகிறது.

பெண்ணிற்குரிய தகுதிகளாக,

 அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
 
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப  (களவு-96)

 இந்நூற்பாவின் வழி பெண்களுக்கு அச்சம், நாணம், மடம் ஆகிய மூன்றும் அடிப்படைத் தகுதிகளாக இலக்கணம் வகுத்துள்ளது.

 ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
 
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
 
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
 
மிக்கோ னயினுங் கடிவரை இன்றே (களவு-90)

 இந்நூற்பாவில் ஒத்த தகுதியையுடைய தலைவனும், தலைவியும் எதிர்ப்பட்டு காதல் கொள்வர். இதில் தலைவனின் தகுதியைவிட தலைவியின் தகுதி மிகுதல் கூடாது என மேற்கூறிய நூற்பா குறிப்பிடுகின்றது. இதன்மூலம் ஆண்களின் தகுதியை விட பெண்களின் தகுதிகள் குறைத்து தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுவதன் மூலம் ”பெண்ணடிமைத்தனத்தின்” மூடத்தனத்தினை நன்கு அறிய முடிகிறது.

 காதலின் குறிப்பு, இடம் ஆகியவற்றால் வேட்கைப் புலப்படபெண் நிற்பது இயல்பு என்றும், நாணம், மடம் பெண்மைக்குரியதால், பெண்ணானவள் காதல் நிகழும்போது  துவக்கத்தில் பேசக்கூடாது என்பதனை,

 காமத் திணையிற் கண்நின்று வரூஉம்
 
நாணும் மடனும் பெண்மையை ஆகலின்
 
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
 
நெறிப்பட வாரா அவள் வயின் ஆன (களவு – 106)

 என்ற நூற்பா வெளிப்படுத்துவதன் மூலம் அச்சம், மடம், நாணம் என்ற கோட்பாட்டினில் பெண்ணினத்திற்கு எதிரான ஒடுக்கு முறையை – நிர்பந்தத்தை உருவாக்கிய சமுதாய நிலையை அறிய முடிகிறது.

 சொல்லெதிர் சொல்லல் அருமைத் தாகலின்
 
அல்ல கூற்றுமொழி அவள்வயி னான  (களவு-108)

 தலைவன் சொல்லிற்கு எதிர்சொல் பேசுதல் அருமையானது எனக் கூறி, பின்னர் பேசாது நிற்பதே தலைவியிடம் நிகழும் நிகழ்வாகும் என்பதன் மூலம், தவறு செய்த தலைவனைப் பேசுதல் அருமையானது தான் ஆனால் பேசக்கூடாது என மறைமுகமாய்க் கட்டளையிடப்படுவதைக் காணமுடிகிறது.

 உயிரினும் சிறந்தன்று நானே நாணிணும்
 
செயிர்தீர் காட்சிக் கற்புசிறந் தன்றெனத்
 
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
 
காமக் கிழவன் உள்வழிப் படினும்
 
தாவில் நன்மொழி கிளவி கிளப்பினும்
 
ஆவகை பிறவும் தோன்றுமென் பொருளே (களவு-111)

 உயிரை விடச் சிறந்தது நாணம். நாணத்தை விடச் சிறந்தது கற்பு என்ற முன்னோர் கூற்றோடு தவறு  செய்த தலைவனைத் தலைவி வருத்தமுற பேசாது  ”கற்பு’ எனும் ஒன்றுமில்லா நிலைக்குப் பொருள் கூறி, உயிரையும் விட சிறந்ததாக உடையது கற்பு என உருவாக்கி, அது முன்னோர் மொழியெனவும் தவறு செய்த கணவனை எதிர்த்து எதுவும் பேசக்கூடாது எனவும், அப்படிப் பேசினால் அது கற்பிற்கு இலக்கணமாய் இருக்காது என்றும் ‘கற்பு’ என்ற வெற்று இலக்கணத்தைப் பண்டைய ஆணாதிக்கச் சமுதாயம் பெண்களின் மீது திணித்து பெருங் கொடுமையைச் சுமத்தியதை அறிய முடிகிறது.

சங்க இலக்கியத்தில் பெண் அடிமை

 சங்க காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்த நெய்தல் நிலப்பகுதிகளிலும் உணவு உற்பத்தி செய்து வாழ்ந்த மருதநிலப் பகுதிகளிலும் அடிமைமுறை வழக்கிலிருந்தது. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவியரையும், பிற பெண்டிரையும் சிறை பிடித்து வந்ததைச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்ட பெண்கள் காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள அம்பலங்களில் விளக்கேற்றி நிற்பதனைக் கூறும் பொழுது ”கொண்டி மகளிர்”- என்று இவர்களைப் பட்டினப்பாலையாசிரியர் குறிப்பிடுகிறார். கொண்டி- என்பதற்கு கொள்ளை என்று பொருள் கொண்டு, பிறர்நாட்டில் கொள்ளையிட்டுக் கொணர்ந்த பெண்டிர் எனறு  ”கொண்டி மகளிர்” – என்ற என்னும் சொல்லுக்கு உரையாசிரியர்கள் விளக்கம் தருகின்றனர். இன்றையத் தமிழகமும், கேரளத்தின் பெரும்பகுதியும் மூவேந்தர்களாலும், பல  குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டது என்பதை நினைவில் கொண்டால் பிறர் நாடு என்பது பெரும்பாலும் தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதியினையே குறிக்கும் என்பதனை உணரலாம். எனவே போரில் தோற்ற தமிழ் மன்னர்களின் மனைவியரும் அந்நாட்டு மகளிரும் அடிமைகளாகப் பகைவர் நாட்டில் பணிபுரிந்துள்ளனர் என்பது தெளிவு.  முல்லைக்கலியில் (108:27-33) இடம்பெறும் ஒரு பாடல் மகளிரின் பணிகளைக் குறிப்பிடுகிறது. தன் நெஞ்சை இருப்பிடமாகக் கொண்டு தன்னை அடிமையாக்கித் தலைவன் ஒருவன் தலைவியிடம் கூறுகிறான். அவன் கூறியதைக் கேட்ட தலைவி அதற்கு மறுமொழியாக,

 இளமாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால் என் நெஞ்சம்
 
களமாகக் கொண்டு ஆண்டாய்; ஒர் கள்வியை அல்லையோ ?
 
நின்நெஞ்சம் களமாகக் கொண்டுயாம் ஆள, எமக்கு எவன் எளிதாகும்
 
புனத்துளான் என்னைக்குப் புகாஉய்த்துக் கொடுப்பதோ ?
 
இனத்துள்ளான் எந்தைக்குக் கலத்தொடு செய்வதோ?
 
தினைக் காலூன் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ?

 உன் நெஞ்சை எனக்கு இருப்பிடமாகக் கொண்டு உன்னை அடிமையாக்குதல் எளிதான செயலாகுமா?
 உன் நெஞ்சானது தினைப்புனத்தில் இருக்கும் என் தமையனுக்கு உணவு கொண்டு சென்று கொடுக்குமா?   பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டிருக்கும் என் தந்தைக்குக் கறவைக் கலன் கொண்டு செல்லுமா? அறுத்த திணைத்தாளிடையே என் தாய் மேயவிட்டிருக்கும் கன்றை மேய்க்குமா? என்று வினவுகிறாள்.

 மேய்ச்சல் நில வாழ்க்கையில் தனிச்சொத்துரிமை உருவாகிறது என்ற சமூகவியல் உண்மையின் அடிப்படையில் மேற்கூறிய வரிகளை நோக்கினால் தனிச் சொத்துரிமையின் துணைப்படைப்பாக அடிமை முறை உருவாகியுள்ளதை நாம் உணரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *