தேர்தல்களில் பங்குகொள்வது பொருந்தாது
தேர்தல்களில் பங்குகொள்வது பொருந்தாது

தேர்தல்களில் பங்குகொள்வது பொருந்தாது

நான் குழம்பி உள்ள நிலையில் இப் பதிவு எழுதி கொண்டுள்ளேன் இதனை இரு பகுதியாக பதிவிட முடியும் ஆகவே

இந்திய நாடாளுமன்ற முறையிலான தேர்தல்களில் பங்குகொள்வது பொருந்தாது:இரண்டு வகை செயல்தந்திரங்கள்: முதலாளித்துவ நாடுகளில், நாடாளுமன்றமுறை அரசியல் வழியில் காலாவதியாகாத போது, பரந்துபட்ட மக்கள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதின் அவசியத்தையும், பாட்டாளிவர்க்க சோசலிஸ்ட் சோவியத் அமைப்புகளை நிறுவுவதின் அவசியத்தையும் ஏற்க செய்யும் பொருட்டு அவர்களைச் சித்தாந்த வழியிலும், அரசியல் வழியிலும், நடைமுறை வழியிலும் தயார்செய்யும் நோக்கத்திற்காக, நாடாளுமன்ற முறையிலான அமைப்புகளிலும் தேர்தல்களிலும் பங்குகொள்ளும் செயல் தந்திரகள் பாட்டாளி வர்க்கக் கட்சிகளால் வகுக்கப்படுகின்றன. புரட்சி எழுச்சியின் போது தாக்குதல் செயல் தந்திரங்களை மேற்கொள்ளும் பொருட்டும், ஆட்சி அதிகாரத்தை எதிர்த்துக் கிளர்ந்தெழும் பரந்துபட்ட புரட்சிகர மக்களின் போராட்டங்களைத் திசை திருப்பும்பொருட்டும் ஆளும் வர்க்கங்கள் போலி நாடாளுமன்றத்தை முன்வைத்து தேர்தல்கள் நடத்துவது போன்ற சதிச்செயல் களைச் செயலிழக்கச் செய்யும் பொருட்டும், பெரும் திரளான மக்கள் சோவியத் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தைக் கலைக்கத் தயாராக இருக்கும் போதும் புறக்கணிப்புச் செயல் தந்திரங்கள் வகுக்கப்படுகின்றன.இரண்டுமே ஒரு குறிப்பிட்டத் தருணத்தில் நாட்டின் புரட்சி அலை ஏற்ற, இறக்கத்துக்கு ஏற்பவே வகுக்கப்படுகின்றன. ஒன்று புரட்சி அலை தணிந்து இருக்கும் போதும், மற்றொன்று புரட்சி அலை எழுச்சியின் போதும் வகுக்கப்படுகின்றன. இருப்பினும் இரண்டின் நோக்கமும் ஒன்றே.இரண்டுவகை செயல் தந்திரத்தை வகுப்பதின் நோக்கமும் முதலாளித்துவ நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பாட்டாளிவர்க்கச் சோசலிஸ்ட்டு சோவியத் அதிகாரத்தை நிறுவுதல் என்னும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் போர்தந்திரத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே ஆகும்.நாடு தழுவிய எழுச்சியும் நாடாளுமன்றத் தேர்தலும்: முதலாளித்துவ நாடாளுமன்றத்தைக் கலைப்பதும் பாட்டாளி வர்க்கச் சோசலிஸ்ட் அதிகாரத்தை நிறுவுவதும் அமைதியான முறையில் நிகழ்வதல்ல. ஓர் உள்நாட்டு யுத்தத்தின் மூலம் நிகழ்வதாகும்.முதலாளித்துவ நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு யுத்தம் ஒரு ஆயுதம் தாங்கிய எழுச்சியின் மூலம் நாடு தழுவிய அளவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் பொருட்டு பாட்டாளிவர்க்கமும் பிற உழைக்கும் மக்களும் பாட்டாளிவர்க்கக் கட்சியின் தலைமையில் நடத்தப்படுவதாகும். இந்நோக்கத்திற்காக நாடாளுமன்றத்தில் பங்கு கொண்டு பரந்து பட்ட மக்களை நாடாளுமன்றத்தைக் கலைப்பதின் அவசியத்தையும் சோவியத் அமைப்புகளை நிறுவுவதின் அவசியத்தையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கான தயாரிப்பு, நாடுதழுவிய அளவில் செய்யக் கூடியதாகும். அதைப் போன்றே புரட்சி அலை எழுச்சியின்போது மேற்கொள்ளப்படும் செயல்தந்திரங்களும். பெரும்திரளான மக்கள் சோவியத் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான தயார் நிலையும், அதன் அடிப்படையில் அமையும் புறக்கணிப்பும் நாடுதழுவிய அளவில் செய்யக் கூடியதாகும். அந்நாடுகளில் புரட்சி அலை தணிவதும், புரட்சி அலை எழுச்சியுறுவதும், இரண்டுமே நாடுதழுவிய அளவில் இருப்பதால் அவ்வாறு அமைகிறது. இதற்கு ஏற்றவாறே அரசியல் தந்திரங்களும் போராட்டம் மற்றும் அமைப்பு வடிவங்களும் – முழக்கங்களும் அவற்றை மாற்றிச் செல்லுதலும், சட்டரீதியான போராட்டத்துடன் சட்ட விரோதமானதையும் இணைத்தல் நாடாளுமன்ற முறைக்குப் புறம்பான போராட்ட வடிவத்துடன் இணைத்தல், இன்னும் பிறவும் அமைகின்றன.தொகுத்துக் கூறுவோமானால், பங்கு கொள்வதின் நோக்கம் :நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கும், சோவியத் முறையிலான அரசு அமைப்புகளைக் கட்டியமைப்பதற்கும், பரந்துபட்ட மக்களைத் தயாரிப்பதாகும், புறக்கணிப்பதற்கான நிபந்தனை புரட்சி எழுச்சியின்போது தாக்குதல் செயல்தந்திரத்தை மேற்கொள்வதற்கான நிலைமைகளும் நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் சோவியத்துக்களைக் கட்டியமைப்பதற்கும் தயாராக இருப்பதும் ஆகும். இரண்டுமே ஏககாலத்தில் நாடுதழுவிய அளவில் நிகழ்பவையாகும். இந்த அளவுகோல்கள் அல்லது நிபந்தனைகள் முதலாளித்துவ நாடுகளில் நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்குகொள்வதற்கும், அல்லது அவற்றைப் புறக்கணிப்பதற்குமான செயல்தந்திரங்களை வகுப்பதற்கு அடிப்படையாக அமைகின்றன. இவை அனைத்தும் நாடு தழுவிய எழுச்சி என்ற உள்நாட்டு யுத்தத்தின் மூலம் பாட்டாளிவர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போர்த்தந்திரத்திற்குச் சேவை செய்யும் முறையில் வகுக்கப்படுகின்றன.புரட்சியின் சமச்சீரற்ற வளர்ச்சியும் நாடாளுமன்றமும்: மேற்கூறப்பட்ட அளவுகோல்களும் நிபந்தனைகளும் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் சமச்சீரற்ற வளர்ச்சியுடைய நாட்டில், அவ்வாறு சமச்சீரற்ற வளர்ச்சியுற்றிருப்பதின் காரணமாக புரட்சியின் எழுச்சியும் சமச்சீரற்ற வளர்ச்சியுறும் நிலைமைகளில் நாடாளுமன்ற முறை பற்றிய செயல் தந்திரங்களை வகுப்பதற்குப் பொருந்துமா? இந்தியாவிற்குப் பொருந்துமா? அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஏற்ற தாழ்வாக (சமச்சீரற்ற முறையில்) வளர்ச்சி பெற்றுள்ள நாட்டில், புரட்சியின் புறவயமான அம்சம் ஏற்ற தாழ்வான முறையில் வளர்சியுறுவதால் புரட்சியின் அகச் சக்திகளின் வளர்ச்சியும் ஏற்ற தாழ்வாக இருக்கின்றது. ஆகையால் புரட்சி அலை தணிவதும், புரட்சி அலை எழுச்சியுறுவதும் ஏற்ற தாழ்வானதாகவே இருக்கின்றன. ஒரே நேரத்தில், நாடு தழுவிய அளவில் பரந்துப்பட்ட மக்கள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதின் அவசியத்தையும், சோவியத் அமைப்புகளை நிறுவுவதின் அவசியத்தையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு, அவர்களைச் சித்தாந்த வழியிலும் அரசியல் வழியிலும் நடைமுறை வழியிலும் தயார் செய்தல் நாடுதழுவிய அளவில் நடைபெறுவது சாத்தியமானதல்ல எனவேதான் அதன் அடிப்படையில் நாடாளுமன்ற அமைப்புகளில் பங்கு கொள்ளும் செயல் தந்திரத்தை நிர்ணயம் செய்ய முடியாது. செயல்படுத்தவும் முடியாது. அதைப் போன்றே புரட்சி அலை எழுச்சியும் நாடு தழுவிய அளவில் ஏற்படுகின்ற ஒன்றாக இல்லாததால், தாக்குதல் செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்வதும், நாடு தழுவிய அளவில் பெரும் திரளான மக்கள் சோவியத் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு தயாராக இருப்பதும் சாத்தியமில்லை. எனவே இதன் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் புறக்கணிப்புச் செயல்தந்திரம் வகுக்க முடியாது. இத்தகைய நாடுகளில் புரட்சி எழுச்சி சமச்சீரற்ற முறையில் வளர்ச்சியுறுவதின் காரணமாக ஏக காலத்தில் ஒரு நாடு தழுவிய அளவில் புரட்சி எழுச்சிக்கு வாய்ப்பில்லை. எனவே ஒரு நாடு தழுவிய அளவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மாறாக, பிரதேசவாரியாக விடுவிப்பதிலும் தளங்களை நிர்மாணிப்பதிலும் அதன் மூலம் நாடு தழுவிய எழுச்சியைத் துரிதப்படுத்துவதும், புரட்சி யுத்ததின் குணாதிசயமாக இருக்கின்றது. இதுவே புரட்சி யுத்தத்தை நடத்துவதற்கான மார்க்கத்தையும் இந் நாடுகளில் போர்த் தந்திர, செயல் தந்திர கோட்பாடுகள் பலவற்றையும் தீர்மானிக்கின்றது. இராணுவ போர்த்தந்திர, செயல்தந்திர கோட்பாடுகளை மட்டுமல்ல, அரசியல் போர்த்தந்திர, செயல்தந்திர கோட்பாடுகள் பலவும் இதனால் தீர்மானிக்கப்படுகின்றது. எனவே பிரதேச ரீதியில் விடுவித்து நாட்டின் புரட்சி எழுச்சியைத் துரிதப்படுத்தும், இறுதியாக நாடு முழுவதையும் விடுதலை செய்யும் புரட்சிகர யுத்தத்தோடு முதலாளித்துவ நாடாளுமன்ற முறையில் பங்குகொள்வதற்கும் மற்றும் புறக்கணிப்பதற்கும் முதலாளித்துவ நாடுகளில் வைக்கப்படும் நிபந்தனைகளும் மற்றும் நிலைமைகளும் பொருந்தாது. நாட்டின் ஒரு சில பிரதேசங்களை விடுதலை செய்வதற்கான போராட்டத்தையும் (அரசு இயந்திரத்தை தகர்த்தெறிந்துவிட்டு சோவியத்துக்கள் நிறுவுவதற்கான போராட்டத்தையும்) பிறபகுதிகளில் தேர்தல்களில் பங்குகொள்ளுதலையும் மற்றும் நாடாளுமன்ற முறையைப் பயன்படுத்தலையும் ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்க இயலாது என்பது மட்டுமல்ல; சாத்தியமானது மல்ல. சட்டரீதியான போரட்டத்தையும், சட்டவிரோதமான போராட்டத்தையும் ஒன்றிணைத்தல் மற்றும் நாடாளுமன்ற முறைக்கு அப்பாற்பட்ட முறையிலான போராட்டத்தையும் ஒன்றிணைத்தல் ஆகியவையும் இதுவும் ஒன்றல்ல. தவிர புரட்சி எழுச்சிக்குத் தயாரிக்கும் பணியோடு இணைக்கப் பட்டாலும், புரட்சி எழுச்சியின்போது தாக்குதல் செயல்தந்திரங்கள் வகுத்துக்கொள்வதை அடிப்படையாக கொள்ளாமலும், புரட்சி இயக்கத்தின் புறநிலை அம்சத்தின் வளர்ச்சிப் போக்குக்கு இசைவாக இல்லாமலும் திட்டமிடப்படுகின்ற செயல்தந்திரங்கள் தன்னியல்பானதாகவோ சீர்திருத்த வகைப்பட்டதாகவோ, அராஜகமானதாகவோ அல்லது அரசியல் அதிகாரத்தைப் புரட்சிகர முறையில் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொள்ளாததாகவோ அமையும். எனவே அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஏற்றத்தாழ்வாக வளர்ச்சி பெற்றுள்ள நமது நாட்டில், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற அமைப்புமுறை மற்றும் தேர்தல்களில் பங்கு கொள்ளுதல் அதே நேரத்தில் சில பகுதிகளில் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டத்தையும் ஒன்றிணைத்தல் என்பது சாத்தியமல்ல. ஆகவே நமது நாட்டில் நாடாளுமன்றமுறை மற்றும் தேர்தல்களைப் புறக்கணிப்பது சரியானதும் தகுந்ததும் ஆகும். நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்குகொள்ளும் செயல்தந்திரம் பொருந்தாது. நாடாளுமன்றமுறை அமைப்புகளிலும், தேர்தல்களிலும் பங்கெடுப்பதில்லை என்பதால் சட்டரீதியான போராட்ட முறைகளையும், வெளிப்படையான போராட்ட முறைகளையும், பயன் படுத்தக்கூடாது என்று கொள்ளக்கூடாது. சட்டரீதியான போரட்டதினைச் சட்டவிரோதமான போராட்டத்துடன் ஒன்றிணைக்கக் கூடாது என்றோ, இரகசியமான போராட்ட வடிவங்களையும், வெளிப்படையான போராட்ட வடிவங்களையும் ஒன்றிணைக்கக் கூடாது என்றோ கொள்ளக் கூடாது.

நாடாளுமன்றமும் தற்காலிகப் புரட்சி அரசாங்கமும்: முதலாளித்துவ நாடாளுமன்றத்தை ஒரு பிரச்சார மேடையாக பயன்படுத்தும் செயல்தந்திரமும் தற்காலிகப் புரட்சி அரசாங்கம் மற்றும் அதில் ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி பங்குகொள்வது பற்றிய செயல்தந்திரமும் வெவ்வேறானவை. இரண்டும் ஒன்றல்ல. தற்காலிக புரட்சி அரசாங்கம் மற்றும் அதில் பாட்டாளி வர்க்கம் பங்கு கொள்வது பற்றிய செயல்தந்திரம் குறித்த மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளும், போதனைகளும் அரைக் காலனிய அரைநிலப்பிரபுத்துவ இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப் பாதைக்குப் பொருந்துமா என்பது நம் முன்னால் உள்ள பிரச்சனையாகும். போர்த்தந்திரத்திற்குத் துணைபுரியும்பொருட்டு அதன் வெற்றிக்கான பதையை நிச்சயமானதாக ஆக்கும் பொருட்டு ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நிலவுகின்ற திட்ட வட்டமான நிலைமைகளுக்கு ஏற்றவாறு அதாவது எதிரிகள் முகாமிலும் பாட்டாளிவர்க்க முகாமிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு பாட்டாளி வர்க்கக் கட்சியின் நடத்தை விதியைத் தீர்மானிப்பது செயல் தந்திரத்தின் முக்கியமான பணியாகும். எனவே ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தின் புரட்சிப் பணிகளடங்கிய கட்சியின் பொது வேலை திட்டத்தை நிறைவேற்றுவதை நிச்சயமானதாகவும், எளிமையானதாகவும் ஆக்கும்பொருட்டு எதிரி முகாமிலும் நமது முகாமிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு இசைவாகவும் பொது எதிரியை எதிர்த்த அனைத்து சக்திகளையும் பாட்டாளி வர்க்கம் தனது அணியில் சேர்க்கும் வண்ணம் அப்பொது வேலை திட்டத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பான திட்டத்தைவகுத்துக் கொள்வது இயல்பானதாகும். ஆகையால் தற்காலிகப் புரட்சி அரசாங்கம் பற்றிய மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளும், போதனைகளும் நமது புரட்சியின் மக்கள் யுத்தப் பாதைக்குப் பொதுவாக பொருந்தக் கூடியது என்றாலும் அவற்றை இன்றைய கட்டத்தில் இந்தியப் புரட்சியில் பாட்டாளி வர்க்கக் கட்சியின் பிரயோகம் கூட இந்தியாவின் புறநிலைமைகளுக்கு ஏற்றவாறு அமைகிறது.இப்பிரச்சனை குறித்த லெனினிய போதனைகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:1. தற்காலிகப் புரட்சி அரசாங்கம் எனபது புரட்சியின் ஒரு வரலாற்றுக் கட்டத்திற்குள் தொடர்ச்சியான சில இடைமாற்றங்களும், இடைமாற்றக் கட்டங்களும் இல்லாமல் ஒரு பின்தங்கிய நாட்டில் அதை ஒரு சோஷலிசப் புரட்சியாக மாற்றிட முடியாது என்பதின் அடிப்படையில், அதற்கு ஏற்றவாறு வகுத்துக் கொள்ளப்படும் செயல் தந்திரம் ஆகும்.2. தற்காலிகப் புரட்சி அரசாங்கம் என்னும் செயல் தந்திரம் புரட்சி எழுச்சியின் போது பாட்டாளிவர்க்கக் கட்சி தாக்குதல் செயல் தந்திரங்களைச் செயல் படுத்துவதற்கான ஒரு அமைப்பு வடிவமும் போராட்ட வடிவமும் ஆகும்.3. தற்காலிகப்புரட்சி அரசாங்கம் என்பது ஒரு நாட்டில் ஏற்கனவே நிலவியுள்ள அரசமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு அமைக்கப்படுகின்ற ஒரு அரசாங்கம் அல்ல. அதற்கு மாறாக அது மேலிருந்து நடத்தப்படும் போராட்ட வடிவமாகும் என்பது மட்டுமல்லாமல் அதுவே ஒரு “புரட்சி எழுச்சியின் உறுப்பாகிய புரட்சி அரசாங்கம்” ஆகும். இத்தற்காலிகப் புரட்சி அரசாங்கம் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு சபையாகவும், அனைத்து மக்களுடைய -தாகவும், அரசியலை நிர்ணயிப்பதற்குரிய அதிகாரமும் பலமும் பெற்றுயிருக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.4. புரட்சியின் வரலாற்றுக் கட்டத்திற்குள் ஒரு காலப்பகுதியின் புறநிலைமைகளோடும் பாட்டாளிவர்க்க ஜனநாயகத்தின் குறிக்கோளோடும் பொருந்தும்படியான செயலுக்குரிய ஒரு வேலை திட்டத்தை நிறைவேற்றுவது இந்தத் தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தின் பணியாகும். இத்திட்டம் உடனடியான அரசியல், பொருளாதார மாற்றங்கள் பற்றிய வேலைத் திட்டமாகும். ஒருபுறத்தில், அவற்றை இன்றுள்ள சமுதாய, பொருளாதார உறவு முறைகளின் அடிப்படையிலே, முற்றாக நடைமுறையில் சாதிக்கக்கூடியதும், மறுபுறத்தில், அடுத்து முன்னோக்கி அடியெடுத்து வைப்பதற்கும் அக்கட்டப் புரட்சியின் பணிகளைச் சாதிப்பதற்கும் சோசலிசத்திற்கு மாறிச் செல்வதற்கும் அது தேவைப்படுகின்றது.5. தற்காலிகப் புரட்சி அரசாங்கம் என்பது ஒருபுறம் அரசதிகாரத்தைப் பற்றிய அராஜக கருத்துக்களுடனும், மறுபுறம் சீர்திருத்த வாதத்துடனும் முற்றாக முறித்துக்கொள்வதால் இத்தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி பங்குகொள்வது கோட்பாடு ரீதியில் அனுமதிக்கத் தக்கது.6. கோட்பாடு ரீதியில் அனுமதிக்கதக்கதாய் இருந்தப் போதிலும் நடைமுறைப் பொருத்தமுடையதா? எந்த நிலைமையின் கீழ் மேலிருந்து நடத்தும் இப்போராட்ட வடிவம் பொருத்த முடையது? போன்ற வினாக்களுக்குப் பதில் சக்திகளின் பரஸ்பர ஒப்பு போன்ற ஸ்தூலமான நிலைமைகள் பற்றி உடனடியாக சொல்வது சாத்தியமில்லாததால் தற்சமயம் சொல்லக்கூடாது. ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி கலந்து கொள்வதின் தன்மையையும் குறிக்கோளையும் மட்டும்தான் குறிக்க முடியும்.தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி பங்கு கொள்வது பின்வரும் இரண்டு நோக்கங்களைக் கொண்டதாகும்:எதிர்ப்புரட்சி முயற்சிகளை எதிர்த்து விட்டுக் கொடுக்காமல் போராடுவது.தொழிலாளி வர்க்கத்தின் சுதந்திரமான நலன்களைப் பாதுகாப்பது, இப்படிப்பட்டப் போராட்டத்தில் எதிர்ப் புரட்சியை எதிர்த்து உண்மையான போர் நடத்தும் பணியைப் பற்றி கவனம் செலுத்துமாறு பாட்டாளி வர்க்கக் கட்சி அறைகூவி அழைப்பது பொருத்தமானதாகும்.7. கடைசியாகப் பகுப்பாய்ந்து பார்க்கும்போது அரசியல் சுதந்திரம் வர்க்கப் போராட்டம் பற்றிய மாபெரும் பிரச்சினைகளைப் பலம் ஒன்றுதான் தீர்மானிக்கிறது. பாதுகாப்புக்கு மட்டுமின்றி தாக்குதலுக்கும் இந்த பலத்தைத் தயாரிப்பதும் ஒழுங்கமைப்பதும் தீவிரமாகப் பயன்படுத்துவதும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் வேலையாகும். ஒரு புதிய சகாப்தத்தில், அரசியல் எழுச்சிகளும், புரட்சிகளும் நடக்கும் காலப்பகுதியில் பழைய மாறுதலற்ற சூத்திரங்களோடு ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி தன்னை நிறுத்திக்கொள்வது அனுமதிக்கத்தக்கதல்ல. மேலிருந்து செயல்புரியவும் மிகவலுவான தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்யவேண்டும். அப்படிப்பட்ட செயலுக்குரிய நிலைமைகளையும் வடிவங்களையும் பயில வேண்டும்.8. மேலிருந்து செயல்புரிய முடியாமற் போகக்கூடிய நிலைமையில் பாட்டாளி வர்க்கக் கட்சி தக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தத்தை ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி கொண்டு வரவேண்டும். கீழிருந்து நிர்ப்பந்தத்தை செயல்படுத்தும் பொருட்டு (1) பாட்டாளிவர்க்கம் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும். (2) ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி பாட்டாளி வர்க்கத்துக்குத் தலைமை வகித்திருக்க வேண்டும். இவ்வாறு ஆயுதம் ஏந்தி செலுத்தும் நிர்ப்பந்தத்தின் நோக்கம்: புரட்சியின் ஆதாயங்களைப் பாதுகாப்பது, கெட்டிப்படுத்துவது, விரிவுபடுத்துவது – அதாவது புரட்சியின் ஆதாயங்களை முதலாளித்துவ வர்க்கம் அபகரித்துக் கொண்டு விடாமல் தடுத்து நிறுத்துவதாகவும் அந்த ஆதாயங்கள் நம் குறிப்பான வேலை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதாகவும் அமைய வேண்டும்.(ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள் – லெனின் நூல் திரட்டு தொகுதி.1 பக்கம் 95 – 180 வரை காண்க.) தற்காலிகப் புரட்சி அரசாங்கம் பற்றிய லெனினிய போதனையும் கோட்பாடும் பொருந்தக்கூடியது என்றாலும் நடைமுறைப் பொருத்தமுடையதா என்ற பிரச்சனையைத் தீர்மானிப்பதில் பின்வரும் அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்:1. அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதயிலும் ஏற்ற தாழ்வான வளர்ச்சி பெற்றுள்ள இந்தியாவில், புரட்சியின் புறவயமான அம்சம் ஏற்றத்தாழ்வான முறையில் வளர்ச்சியுறுவதால் புரட்சியில் அகசக்தியின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வாகவே இருக்கிறது. இவ்வம்சம் புரட்சி யுத்தத்தை நடத்துவதற்கான மார்க்கத்தையும் இந்நாட்டின் அரசியல் மற்றும் இராணுவப் போர்த்தந்திர, செயல்தந்திர கோட்பாடுகள் பலவற்றையும் தீர்மானிக்கிறது.2. இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் சாராமாக விவசாயப் புரட்சி இருப்பதுடன் விவசாயப் பிரச்சனை புரட்சியின் மையமான பிரச்சினையாகவும் இருக்கிறது. தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி பங்குகொள்வது என்பதும் தற்போதைய நிலையிலுள்ள தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கூட்டுச் சர்வாதிகார அரசில் உள்ள பாராளுமன்ற முறையிலான அரசாங்கங்களில் பங்கு கொள்வது என்பதும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானது. முன்னால் கூறப்படுவது லெனினியக் கோட்பாடு வழியில் அமைந்ந ஒரு சரியான பாட்டாளிவர்க்கச் செயல்தந்திரமாகும்.இரண்டாவது வகைப்பட்டது இந்நாட்டில் வலது, இடது போலிக் கம்யூனிஸ்டுகள் பயன்படுத்தும் சீர்திருத்தச் செயல் தந்திரங்கள் ஆகும். இப்போலிக் கம்யூனிஸ்டுகளால் செயல்படுத்தப்படும் சீர்திருத்தச் செயல்தந்திரங்கள் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவைச் செய்யக் கூடியதாகவும் புரட்சியைத் திசை திருப்புவதாகவுமே இருக்கிறது. இச் செயல்தந்திரங்கள் மேற்கொள்ளப் படுவதற்கான காரணங்களில்;ஒன்று, பாட்டாளி வர்க்கம் ஆயுதப்படை கொண்டு அரசியல் அதிகாரத்தை வெல்ல வேண்டும் என்பதற்கு மாறாக சோசலிசத்திற்குச் சமாதான மாற்றம் என்ற பாதையை மேற்கொள்வது;இரண்டு, இந்திய நாடாளுமன்றத்தைக் குறித்து செயல் தந்திரங்களை வகுத்துக் கொள்வதில் லெனினியச் செயல் தந்திரத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொண்டு இந்தியாவில் நிலவும் புறவயமான நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்து அல்லது வேண்டுமென்றே மறைத்து முதலாளிய நாடாளுமன்ற அமைப்புகளில் பங்குகொள்ளும் சீர்திருத்தச் செயல்தந்திரங்களை வகுத்துக்கொள்வது ஆகியனவாகும்.இந்தப் பாராளுமன்ற முறையை மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முடியும். இந்தப் பாராளுமன்ற முறையிலான அரசாங்கங்களைப் புரட்சியின் தயாரிப்புக்கான ஆயுதங்களாகப் பயன்படுத்த முடியும் என்று சொல்லப்படும் வாதங்கள், சந்தர்ப்பவாதிகளினுடைய செப்பிடுவித்தை ஆகுமேயொழிய இந்தியப் பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்திற்குச் சேவை செய்யக் கூடியது அல்ல. இறுதியாக தொகுத்துக் கூறுவோமானால், அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஏற்றத் தாழ்வான வளர்ச்சி பெற்றுள்ள அரைக்காலனிய-அரை நிலப் பிரபுத்துவ இந்திய நாட்டின் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப்பாதைக்கு நாடாளுமன்ற அமைப்பு முறையிலும் தேர்தலிலும் பங்கு கொள்வது உகந்ததல்ல. தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் செயல்தந்திரம் இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப் பாதைக்கு கோட்பாடு ரீதியில் பொருந்தக் கூடியதே ஆகும்.

சமரன் – ஜனவரி, 1989. முடிவுறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *