திருத்தல்வாதம் எதிர்ப்போம்-2
திருத்தல்வாதம் எதிர்ப்போம்-2

திருத்தல்வாதம் எதிர்ப்போம்-2

முதலில் சிங்கூர்நந்திகிராமத்தில் சி.பி.எம். குண்டர்களையும் போலீசையும் கொண்டு வெறியாட்டம். பின்னர் மித்னாபுரில் அதிகார வர்க்கத்தையும் போலீசையும் கொண்டு பாசிச பயங்கரவாதம். மே.வங்கத்தை ஆளும் திருத்தல்வாத சி.பி.எம். கட்சியினர் உழைக்கும் மக்களின் எதிரிகளாக, பாசிஸ்டுகளாகச் சீரழிந்து விட்டதற்கு அண்மைக்கால நிரூபணங்களே இவை. இந்த திருத்தல்வாதகளை நேற்றுவரை நம்பிய மே.வங்க உழைக்கும் மக்களே. அவர்களின் பாசிச ஒடுக்குமுறைக்கும் முதலாளித்துவ சேவைக்கும் எதிராகப் பேரெழுச்சியில் இறங்கியுள்ள நிலையில், புரட்சியை நேசிக்கும் சி.பி.எம். அணிகள் இனியும் இத்துரோகக் கட்சியில் நீடிக்க அடிப்படை ஏதாவது இருக்கிறதா?

CPI,CPM தோழர்கள் சிந்திக்க, இந்த சம்பவங்களை கூறுவதன் நோக்கம் இந்த செயல்பாட்டிலிருந்து உண்மை நிலையை புரிந்து கொள்ளதான்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான அமர்த்யா சென், மே.வங்கத்தைச் சேர்ந்தவர். அவர், “பசியும் பட்டினியும்தான் மிகக் கொடிய வன்முறை” என்றார். தமது மக்களுக்கு உணவளிக்காத அரசுதான், அம்மக்கள் மீது வன்முறையை ஏவும் கொடிய குற்றவாளி என்று அவர் சாடியுள்ளார்.( 2008 ல்) அவரது வாதப்படி, குற்றவாளியான மே.வங்க இடதுசாரி அரசு, பசி-பட்டினி எனும் வன்முறையை லால்கார் பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து ஏவி வந்துள்ள போதிலும், இம்மக்கள் நல்வாழ்வை எதிர்பார்த்து அமைதியாகவே காத்திருந்தார்கள்.

 “மக்கள் பிரச்சினையை கையில் எடுத்த இப்பயங்கரவாதத்தை மாவோயிஸ்ட்டுகள் செய்தனர், அதைப் பின்னாலிருந்து கொண்டு இயக்கி வரும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளையும் முறியடிக்க மாநிலப் போலீசுப் படை போதாது; மைய அரசின் துணை ராணுவப் படைகளையும் அனுப்ப வேண்டும்” என்று டெல்லிக்குப் பறந்தார், திருத்தல்வாத முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அரசியலில் எதிரெதிர் முகாம்களில் உள்ள காங்கிரசும் சி.பி.எம்.மும் லால்கார் மக்களின் ‘பயங்கரவாதத்தை’ ஒழிப்பதில் ஓரணியில் நின்றன. முதலில் மூன்று கம்பெனி துணை இராணுவப் படைகளை அனுப்பிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அடுத்ததாக “கோப்ரா” அதிரடிப்படையையும் எல்லைப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவினரையும் லால்காருக்கு ஏவினார். மொத்தம் எவ்வளவு போலீசு – துணை ராணுவப் படையினர் லால்காரில் குவிக்கப்பட்டனர் என்ற விவரத்தை இன்றுவரை அரசு அறிவிக்கவில்லை. மாவோயிஸ்டுகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்த மைய அரசு, லால்கார் காடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றி அழிப்பது என்ற பெயரில் இவ்வட்டாரமெங்கும் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. மே.வங்க இடதுசாரி அரசு அதற்கு ஒத்தூதியது.

இப்பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க லால்கார் பழங்குடியின மக்கள் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டும் அகலமான குழிகளை வெட்டியும் தடையரண்களை ஏற்படுத்தி, வில்-அம்பு, கோடாரிகளுடன் அரசு பயங்கரவாதப் படைகளை மறித்து நின்றார்கள். “அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தாதீர்கள்; நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக உள்ளோம்” என்று பழங்குடியின மக்களின் போராட்டக் கமிட்டி மத்திய-மாநில அரசுகளிடம் பலமுறை கோரிய போதிலும், அவை ஏற்க மறுத்துவிட்டன. மறித்து நின்ற மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கிராமங்களைச் சூறையாடி கண்ணில்பட்டவர்களைக் கொடூரமாகத் தாக்கி போலீசும் துணை இராணுவப் படைகளும் வெறியாட்டம் போட்டன. இப்படி ஒவ்வொரு கிராமமாகச் சுற்றி வளைத்து அரசு பயங்கரவாதிகள் தாக்குவதையும், இதற்குத் துணையாக வான் படையின் ஹெலிகாப்டர்கள் வட்டமிடுவதையும் கண்டு அஞ்சிய மக்கள், கிராமங்களை விட்டு வெளியேறி நகரத்திலுள்ள பள்ளிகள் – மைதானங்களில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.

லால்கார் பகுதிக்குள் பத்திரிகையாளர்களோ, மனித உரிமை அமைப்பினரோ, தன்னார்வக் குழுக்களோ நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அரசு பயங்கரவாத அட்டூழியங்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் மூடிமறைக்கப்படுகின்றன. இக்கொடுஞ்செயலுக்கு எதிராக பிரபல வரலாற்றியலாளரான சுமித் சர்க்கார், பிரபல எழுத்தாளர் பிரஃபுல் பித்வா, மகாசுவேதாதேவி, கலைஞர்களான தருண் சன்யால், கௌதம் கோஷ், அபர்ணா சென் முதலானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் மனித உரிமை இயக்கத்தினரும் அறிவுத்துறையினரும் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்.

லால்கார் மக்களை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் தூண்டிவிட்டு அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று திருத்தல்வாத ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும்போதே, எந்த மாவோயிஸ்டு தூண்டுதலும் இல்லாமல் பிர்பூம் மாவட்டம் போல்பூரில் மே.வங்க அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு அண்மையில் போராட்டத்தை நடத்தியுள்ளனர். போராடிய விவசாயிகளை போலீசும் சி.பி.எம். குண்டர்களும் கூட்டுச் சேர்ந்து தாக்கி ஒடுக்குவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே படம் பிடித்து அம்பலப்படுத்துகின்றன.

புரட்சி சவடால் அடித்து வந்த திருத்தல்வாதிகள், ஏகாத்தியபத்திய சுரண்டலின் உச்சகட்ட சூழலில் உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும் குண்டர்படைகளை ஏவி மக்களைக் குதறும் பாசிச பயங்கரவாதிகளாகவும் சீரழிந்து விட்டதை சிங்கூர்-நந்திகிராமம் முதல் இன்று லால்காரில் நடந்துள்ள வெறியாட்டங்கள் வரை திரும்பத் திரும்ப நிரூபித்துக் காட்டுகின்றன. காங்கிரசு அரசும் மே.வங்க ‘இடதுசாரி’ அரசும் கூட்டுச் சேர்ந்து பயங்கரவாத வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு, லால்காரை ‘விடுதலை’ செய்து ‘அமைதி’யை நிலைநாட்டிவிட்டதாக அறிவிக்கின்றன. இவ்வளவுக்குப் பின்னரும் நாட்டு மக்கள் நடுநிலை வகிக்கவோ ‘இடதுசாரி’ அரசு மீது நம்பிக்கை வைக்கவோ அடிப்படை இல்லை. அரசு பயங்கரவாத அடக்குமுறைக்கு உழைக்கும் மக்கள் அடங்கிக் கிடந்ததாக வரலாறுமில்லை.

புதிய ஜனநாயகம், ஜூலை-2009

போலி திருத்தல்வாதிகள் ஆண்ட மே.வங்க மாநிலம் இதுவரை கண்டிராத பழங்குடியின மக்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி! கடந்த நவம்பர் முதல் வாரத்தில் வெடித்தெழுந்த இப்பேரெழுச்சி மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் புயல் போலச் சுழன்று வீசியது. “ஐயோ! மாவோயிஸ்டு பயங்கரவாதிகள்! சிங்கூர்நந்திகிராமத்தைத் தொடர்ந்து இங்கேயும் ஊடுருவி விட்டார்கள்” என்று அலறியது, மே.வங்க திருத்தல்வாத அரசு. “மூன்று மாவட்டங்களில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து விட்டது” என்று புலம்பின முதலாளித்துவ நாளேடுகள். […]

தோழர்களே மற்றவை நாளை தொடருவேன்….சி.பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *