தலித்தியத்தை தேடி-3
தலித்தியத்தை தேடி-3

தலித்தியத்தை தேடி-3

தலித்தியமா? வர்க்கமா?

தலித் – தலித்தியம் என்பது ஒரு அரசியல் போக்காக இந்தியாவில் உருவாகியது. இந்த உருவாக்கம் புரட்சிகர நிலைப்பாடுகளில் இருந்து தன்னியல்பான அடையாள அரசியலை சாதிகளில் உள்ள உயர் வர்க்கத்தவர்களாலும், புத்திஜீவிகளினாலும் முன்னிறுத்தப்பட்டது.  தலித்தியம் என்றால் என்ன என்று அறியும் நோக்குடன் முகப்புத்தகத்தில் அரசியல் ரீதியாக செயற்பாட்டில் உள்ளவர்களுடன் கேள்வி எழுப்பியிருந்தேன். அவர்களில் பலர் தமது கருத்தை தெரிவித்திருந்தார்கள். இது பொதுவெளியில் பெற்றதினால் தனிநபர்களின் பெயர்களை இடவில்லை அக் கருத்துக்களைப் பார்ப்போம்.

”சமூகத்தின் பொதுவான அளவுகோளில் இருந்து தலித்களின் பிரச்னையைப் பார்க்காமல்,  பிரத்யோகமாக தலித்துக்களின் கோணத்தில் இருந்து அணுகுவது. அதாவது சமூகத்தை வர்க்கமாகப் பார்ப்பதை கறாராக மறுத்து சாதியாக பார்க்கிறது தலித்தியம். தலித் மக்களின் பிரச்னைக்கான தீர்வையும், சாதி வாதத்தை பேசியே பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையை இது வழங்குகிறது.

ஆதிக்க சாதியில் ஏழைகள் இருந்தபோதிலும் அவர்கள் உயர்சாதியின் பண்புகளுடனேயே இருப்பதால், வர்க்க வேறுபாடு சாதியை ஒழித்துவிடாது என்பது தலித்தியத்தின் பிரதானமான நம்பிக்கை, கோட்பாடு.

இது தலித்தியம் பற்றி நான் புரிந்துகொள்வது. ஆனால் இதன் மீதான என் விமர்சனம் வேறு. அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கொண்ட சமூகத்தில், சாதி வேறுபாட்டை கலைவதே எந்த இயக்கமாக இருந்தாலும், அதன் மைய நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் தலித்தியம் என்பது சாதி வேறுபாட்டை மேலும், இறுக்கமாக் கட்டுகிறது. அதனால் மைய நோக்கத்தில் அது சிதைவுறுகிறது.

மாறாக, உழைக்கும் மக்கள் என்ற பொதுவான தளத்தில் ஒன்று சேரும்போதுதான் அது அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் ஒன்றிணைக்க முடியும். ஆதிக்க சாதியாக இருந்தாலும், அதில் உள்ள பணக்காரன், தன் சொந்த சாதியை சேர்ந்த ஏழை மக்களை கசக்கி பிழியவே செய்கிறான்.”

”தலித்மக்களின் அடையாளம், வாழ்வியல், பிரச்சினைகள், மனித உரிமை-பொருளாதார-அரசியல் போராட்டங்கள், இலக்கியம், பண்பாடு போன்ற அம்சங்களை ஆயும் இயல் தலித்தியல் எனலாம்.  இலங்கையில் தலித்துக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என குறிப்பிடப்படுவர்,  எனவே தலித்தியலை தாழ்த்தப்பட்டவர் இயல் என்று இலங்கை வழக்கப்படி குறிப்பிடலாம். ”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அட்டவணை சாதிகள்  (Schedule Castes) என்றும் குறிப்பிடப் பெற்றுள்ள தீண்டாதோர்க்கும்,  பழங்குடி மக்களுக்கும் (Schedule Tribes) தலித்துக்கள் என்பது பொதுப் பெயராகும்” என்று அம்போத்கரும் தலித் மனித உரிமை போராட்டம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. எனினும் பொருளாதார நிலையில் பிற்பட்ட பிரிவினரும் (Backward Classes) மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களில் பலரும் தங்களை தலித்துக்கள் என்றோ அல்லது தலித்துக்களுடனோ அடையாளப்படுத்துகின்றனர். மேலும் சர்வதேச மட்டத்தில் ஒடுக்குமுறைகளை அனுபவிக்கும் கறுப்பின, மற்றும் முதற்குடி மக்களையும் தலித்துக்கள் என்று அடையாளப்படுவதுண்டு (ta.wikipedia.org)

பாவலரேறு பெருஞ்சித்திரனார் “”இனி எல்லாவற்றுக்கும் மேலாக, இக்கால், தங்களை ‘தலித்’ என்னும் சொல்லால் கூறிக் கொள்வது தங்கள் ‘தமிழினத்தினர்’ என்னும் மெய்மத்தையே இழந்து கொள்ளும் இழிவு சான்றதாகும். ‘தலித்’ ( Dalith) என்னும் மராட்டியச் சொல்லுக்கு பள்ளம், பள்ளத்தாக்கு, என்பது பொருள். இச்சொல் இடவாகு பொருளாக பள்ளத்தில் வீழ்த்தப்பட்டவன், அல்லது தள்ளப்பட்டவன் அல்லது அமுக்கப்பட்டவன் என்றெல்லாம் பொருள் தரும். இதற்கு அடக்கப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்தில் Depressed  என்னும் சொல்லுக்கு ‘அழுத்தப்பட்டவன்’ என்னும் பொருள் கொண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினரை Depressed Class என்று அழைப்பது போல், ‘தலித்’ என்னும் சொல்லால் இவர்கள் ‘வீழ்த்தப்பட்டவர்கள்’ ‘பின் தள்ளப்பட்டவர்கள், ‘அடக்கப்பட்டவர்கள்’‘ ,  ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ என்று அழைத்துக் கொள்கின்றனர். இச்சொல் இந்தியாவின் அனைத்து இனக் கூறினர்க்கு ஒரு பொதுவான சொல்லாக வழங்கப் பெறுவது ஒரு வகையில்தக்கதே எனினும், தமிழின வரலாற்றடிபடையில் ‘தாங்கள் சார்ந்த இனத்தில் மூதாதையர்’ என்பதையும், பார்ப்பனரை எதிர்த்து வெளியேறிவர் என்னும் பெருமையும் குறிக்கும் பழந்தமிழர் என்னும் சொல்லைவிடச் சிறந்ததாகக் கொள்ளமுடியாது. எனவே ‘தலித்’ என்பதால் இன இழப்பே ஏற்படும். இன இழப்பு அச்சு அடையாளமற்ற நாடோடி ஏதிலியர் என்னும் நிலையை ஏற்படுத்தி விடலாம். மேலும் இன்றைய இனமீட்பு முயற்சிகளுக்கிடையில்  இச்சொல் பொருளும் பொருத்தமும் உடையதன்று. எனவே இறுதியாக தமிழினத்தில் ‘தாழ்த்தப்பட்டவர்’ ‘ஆதிதிராவிடர்’ ‘அரிஜன்’ ‘தலித்’ என்றெல்லாம் பிறரால் கூறப்பெறும் அல்லது தாங்களே கூறிக் கொள்ளும் சில வகுப்பினர், எந்த நிலையிலும் தமிழ் மொழிக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், மற்ற இலக்கிய, கலை, பண்பாடு நாகரீகங்களுக்கும் முழு உரிமையுடைய வகையில் தங்களை பழந்தமிழர் என்றே கூறி, இன நிலையில் நிலை நிறுத்திக் கொள்ளவும், பெருமைப்பட்டுக் கொள்ளவும், அரசியல், பொருளியல் நிலையில் தங்களுக்குற்ற உரிமைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளவும் பாடுபடுவார்களாக. … (- பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1994ம் ஆண்டு ‘தமிழ்நிலம்’ இதழில் ‘ஆதிதிராவிடன் என்பது வரலாற்று பிழை!’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி.  ‘சாதி ஒழிப்பு’ என்னும் நூலில் தொகுக்கப்பட்டது பாவலரேறு பெருஞ்சித்தனார்.)

தலித்தியத்திற்கு பெருஞ்சித்தனார் கூறும் விளக்கம் என்பது தமிழ் தேசியவாதத்திற்கு அப்பால் முதலாளித்துவ (விளிம்புநிலை பற்றிப் பகுதியையும் கவனிக்க) சமத்துவத்தினை வழங்காத  நிலையில், மக்கள் கூட்டத்தினை ஒரு வரையறைக்குள் அழுத்திவிடும் நிலைக்குள் தான் இன்றையப் போக்கு இருக்கின்றது. பெருஞ்சித்தனார் முன்வைக்கும் ஜனநாயக உரிமையை கவனத்தில் கொள்ளுதல் தகும். ஒரு மக்கள் கூட்டம் தன்னை தாழ்ந்தவர்கள் என ஏன் பிரகடனப்படுத்த வேண்டும். தம்மை தாழ்ந்தவர்கள் என்று பிரகடனப்படுத்தி உரிமையை பிச்சையாக பெறவேண்டிய தேவை எந்தக் குடிகளுக்கும் இல்லை. இது குறைந்தபட்சம் இந்த முதலாளித்துவ உலகில் உள்ள நீதி நெறியாகும்.

ஆனால் தெய்வத்தின் பெயர் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர்ந்த அந்தஸ்துக் கொடுத்து உயர்த்த காந்தி நினைத்தார். ஆதனாற் போலும் ஹரியின் புதல்வர்கள் என ஒடுக்கப்பட்டவர்களுக்கு சூட்டிக் கொண்டார். கடவுள் பெயரை அழைத்துக் கொள்வதும் பேரா. நா.  வானமாமலை கூறுவது போல் பழமைக்கு இருக்கின்ற நன்மதிப்புக் காரணமாக பழைய தத்துவங்களில் இருந்து தம்மை அழைத்துக் கொண்டதாகவும் எடுத்துக் கொள்ள முடிகின்றது. பழைமையையும், அறியாமையையும் பயன்படுத்தி உழுத்துப் போன சமூக அமைப்பை நிலை நிறுத்தப் பாவித்துக் கொண்டார்.

இன்றைய வரலாற்றுப் படிப்பினையின் இருந்து சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு வறியவர்களுக்கும் பிச்சை போடுவது போல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அறிவுஜீவிகள் திருமுழுக்கு (கிறிஸ்தவச் சடங்கு பாவத்தைப் போக்குவது) கொடுத்து உயர்ந்த நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அறிவுஜீவிகள் (பின்நவீனத்துவ- கருத்துமுதல்வாதிகள்) கருதிக் கொண்டனர். உழைக்கும் வர்க்கத்தை வர்க்க ரீதியாக ஐக்கியப்படுத்தி சமூகத்தை மாற்றுவதற்கு பதிலாக கௌரவம், சலுகை, பதவிக்கான பாசாங்கு அரசியலை முன்னிறுத்துகின்றார்கள். இது தமிழ் தேசம் (nation)  என்ற கட்டமைப்பிற்கு எதிரான நிகழ்வைத் தான் தலித்தியம் கொடுக்கின்றது. தேசத்தின் உருவாக்கம் ஒரு தொடரான பண்பாடு, மொழி, பொருளாதாரம், நிலம் என்ற அமைப்பினுள் சமூகத்தினை ஒருங்கமைக்கவிடாது தடுக்கின்றது. சாதிய வெறியும், தலித்தியமும் இங்கு ஒரு நிரை கோட்டில் பயணிக்கின்றது.  மக்களின் கூட்டு மனநிலையைச் சிதைத்து  அகமுரண்பாடுகளை முன்னிறுத்தும் கயமை அரசியல் முன்னிறுத்தப்படுகின்றது.

தமிழக தலித்தியவாதிகள், சாதியக் கட்சிகள் அந்த மக்களை தேர்தலின் போது சாதிய அடையாளத்தை புதுப்பித்தே வந்துள்ளனர். இவர்கள் அடையாள அரசியல் ஊடாக ஜனநாயக உரிமையை ஒப்பிட்ட ரீதியாக பெற்றுக் கொண்டாலும் சாதிய அடையாளம் என்பதை மறையவில்லை. கடந்து வந்த பொருளாதார அமைப்பின் ஊடாகப் பெற்ற போலிச் சிந்தனை என்பது சமூகத்தில் சாதிய, மதச் சிந்தனை ஊடாக தொடர்ச்சியாக உயிர்வாழ்கின்றது.  சாதிய அடையாளம் என்பது அதிகாரத்திற்கானதாக பயன்படுத்தப்படுகின்றது.

ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி ஒடுக்கப்பட்ட சாதிகளாக இருந்து பேசினால் தான் ஒடுக்குமுறையின் தாற்பரியம் புரியும் என்ற காரணத்தினால் என்னவோ தலித்தியத்தைப் பற்றிப் பேசுவதற்கும், தலித்திய இலக்கியங்களை படைப்பதற்கும் தலித்துக்களினால் மாத்திரம் தான் முடியும் என்று சட்டவரையறை வகுத்துள்ளார்கள்.  உழைக்கும் மக்களின் வர்க்கமானது அனைத்துச் சாதிகளிலும், இனங்களிலும், தேசங்களிலும் உள்ளார்கள். இந்தப் பொருளாதார அமைப்பில் இலக்கியம் படைக்க முடியாதுள்ள எத்தனையோ திறமைசாலிகளை இந்தச் சமூகம் இழந்துள்ளது. உழைக்கும் வர்க்கத்தில் உள்ளவர்களின் உற்பத்திச் சக்தியை வளர்த்தெடுப்பதற்கும், சந்தர்ப்பம் கொடுப்பதற்கும் இசைவான சமூகப் பொருளாதார அமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை.

சாதியை புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்கள் சமூகத்தளத்தில் எதிர்ரொலித்துக் கொண்டிருக்கின்றது. சாதியத்திற்கு எதிராக போராடுவதற்கான கோட்பாடு என்பது மார்க்சியர்களைப் பொறுத்தவரை எதிர்ப்புரட்சிகரக் கூறுகளை சமாளிக்க வேண்டியிருக்கின்றது. மார்க்சியம் சாதியைப் பற்றிய புரிதலை நிறைவாகவே முன்வைத்திருக்கின்றது. மார்க்சின் கோட்பாடுகளை புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்ற அறிவாளிகள் தம் இருப்பிற்காக பற்பல கோட்பாடுகளையும், விளக்கங்களையும் கொடுத்து  வந்திருக்கின்றார்கள். இதில் தலித்திய அறிவாளிகள் சாதியமானது பொருளாதார அமைப்பின் உற்பத்தியே என்பதை ஏற்க மறுக்கின்றார்கள். இவர்களைப் பொறுத்தவரை “பார்ப்பணியம், யாழ்சைவவேளாளம் “ என்பதே இவர்களின் எதிரியாகக் கொள்கின்றார்கள். பார்ப்பணிய, யாழ்சைவவேளாளச் (நிலப்பிரபுத்துவத்தின் பின்னரான) சிந்தனை என்பதை ஒரு பொருளாதார உற்பத்தி உறவின் மேல் உருவான ஒரு சிந்தனை என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. சாதியமைப்பை நிலைபெறவைத்திருக்கும் சமூக அமைப்பைப் மாற்றவேண்டும் என்ற கருத்தை ஏற்க மறுப்பவர்களாகவும் உள்ளார்கள். “பார்ப்பணிய, யாழ்சைவவேளாளச்” சிந்தனை என்பது இன்றைய முதலாளியச் சிந்தனையை உள்வாங்கி தனக்குள் இசைவான தன்னை தகவமைத்துக் கொள்கின்றது. இன்றைய குறைவிருத்திப் முதலாளித்துவ பொருளாதாரத்தில் சாதியம் தொடர்ச்சியாக உள்வாங்குகின்றது.

“யாழ்சைவவேளாளம், பார்ப்பணியம்” என்பது நிலப்பிரபுத்துவச் சிந்தனையாகும். இதனை ஏற்க மறுப்பவர்கள் “சாதி அந்தன் புத்தி குலம் அந்தன் ஆசாரம்” என்ற பழமொழியை சரி என்றே ஏற்றுக் கொள்ள வேண்டிவரும். இதேவேளை முதலாளித்துவ பொருளாதார அமைப்பு உருப்பெற்ற பின்னரும் அது மறைந்து விடாது தொடர்ச்சியாக உயர்வாழ்கின்றது. மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் பழைய உற்பத்தி உறவிற்கே சொந்தமான சமூக உறவுகளை பாதுகாக்கின்றது. இவ்வாறாக பழைய உற்பத்தி உறவிற்கு உரித்தான ஆட்சியலகில் அரைநிலப்பிரபுத்துவ சிந்தனை இருப்பை உறுதிசெய்து சமரசம் செய்து கொண்டுள்ளதை கவனத்தில் கொள்தல் வேண்டும்.

இவ்வாறே பார்ப்பணிய, யாழ்சைவவேளாளச் சிந்தனை என்பது ஒடுக்குமுறை சிந்தனையோட்டம். இந்தச் சிந்தனையை பிறப்பில் வேளாளராகவோ, பார்ப்பணர் ஆகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நிலப்பிரபுத்துவச் சிந்தனை என்பது அனைத்து சமூக்கத்தின் உறுப்பினர்களிடையே சாதிவேறுபாடின்றி புரையோடிப்போயுள்ளது. நாம் இன்றைய பொருளாதார அமைப்பில் இருக்கும் சமூகஉறவானது அரைநிலபிரபுத்துவ,  குறைவிருத்தி முதலாளியச் சிந்தனையின் படிதான் இந்த சமூக உறுப்பினர்கள் நடந்து கொள்கின்றனர். இன்றைய சிந்தனையை சைவவேளாளம், பார்ப்பணியம் என்பதை சாதியாகக் கொண்டு பிரச்சாரப்படுத்தப்படுகின்றது. இதனால் சாதிகளில் உள்ள உழைக்கும் வர்க்கத்தினை அரவணைப்பதில் தவறுவிடப்படுகின்றது.

ஆதிப் பொதுவுடமைச் சமூகத்தில் இனக்குழும சமூகத்தில் சாதியம் இருந்திருக்க முடியாது. சாதியம் கூட நிலப்பிரபுத்துவ பொருளாதார அமைப்பில் உருவாகியது. பொருளாதார அமைப்பில் உருவானதுதான் சாதியம் மதச் சித்தாந்தங்கள். அவை ஒன்று திடீரென முளைக்க முடியாது. நாம் சாதியைப் பற்றி பேசுகின்ற போது பல வரலாற்றுத் தடயங்களை தொட்டுச் செல்ல வேண்டும். சாதியம் என்பது நிலப்பிரபுத்துவத்தின் வளர்ச்சிக் கட்டத்தின் ஊடனே ஆழப்படுத்தப்படுகின்றது. சாதியம் என்பது ஒரு மதப்பிரிவினரான வைணவ- மனுநீதியைப் போற்றும் சிந்தனையின் ஆழப்படுத்தல் என்பது பொருளாதார வளர்ச்சின் ஊடாகவும், பண்டங்கள் பரிவர்த்தணை உருவாக்கப்படுகின்றது. பண்டங்களின் பரிவர்த்தனை ஊடாக பொருளிற்கான விலை  நிர்ணயம் கொடுக்கப்படுகின்றது. பண்டமாற்றத்தின் ஊடாகப் பெறும் பணத்தின் ஒரு பகுதி  உபரியை ஏற்படுத்துக் கொள்கின்றது. பண்டமாற்றில் இருந்து பெறப்படும் ஒரு பகுதியை கூலியாகக் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறான மேலதிக வருவாய் சொத்துக்களை உருவாக்கிக் கொள்கின்றது. சாதியம் நிறுவனமயப்படுவதற்கு பொருளாதார வளர்ச்சி முக்கியமானதாகும். சொத்துடமை வர்க்கத்தின் தயவில் உழைக்காது வாழும் சோம்பேறிகளும் உருவாக்கப்படுகின்றார்கள். இந்தச் மூளைஉழைப்பை வழங்கும் கூட்டத்திற்கு வெகுமானம் கொடுத்து அரச சபையிலும் கோவில்களில் நிறுத்தப்படுகின்றார்கள். நிலப்பிரபுத்துவத்திற்குரிய மதியுரைஞ்ஞர்களாக உருவாகும் காலம். இந்த மதியுரைஞ்ஞர்களால் அரசின் உதவியுடன் உருவாக்கப்பட்டது தான் (சாதியச்) அந்தப் பொருளாதாரத்திற்குரிய சிந்தனையோட்டம்.

“பொருளாதாரச் சமத்துவத்தால் சமுதாயப் பேதாபேதங்கள் அகன்றுவிடும் என்பது மேல் நாடுகளுக்குச் சற்றுப் பொருத்தமானதாயிருக்கலாம். மேல்நாட்டு மக்கள் எல்லோருமே ஒரே மதத்தைத் தழுவியவர்கள் ஆவார்கள். எனவே இயல்பிலேயே அங்குச் சமுதாயத்தில் பேதா பேதம் இல்லாமலிருந்து வருகிறது. நம் நாட்டு நிலை அப்படி இல்லை. (இங்குப் பிறவியிலேயே பேதாபேதம் கற்பிக்கப்பட்டு மக்கள் பல சாதிகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்).” (38.3.13)  (பெரியார்) முதலாளித்துவம் அது வகித்த முற்போக்குப் பாத்திரத்தை இழந்து விட்டது என்பதை பெரியார் காலத்திலேயே இழந்துவிட்டிருந்தது. ஏகாதிபத்திய காலத்தில் உலகைப் பங்கிட தொடங்கிவிட்டிருந்தது. இதே வேளை ஐரோப்பாவில் உள்ள சமத்துவம் என்ன எவ்வாறு இருந்தது என்பது பற்றிய கேள்விக் குறியாகும். ஏனெனில் மேற்கத்தைய சமூகத்தில் ஏற்றத் தாழ்வு கொண்டதாக இருந்து வந்துள்ளது. மேற்கு மீதான மயக்கம் இருந்த காரணத்தினால்  மேற்கத்தை கலாச்சாரத்தினை, மொழியை இந்தியர்கள் பின்பற்றுமாறு கேட்டிருந்தார். இங்கு தந்தை பெரியார் சுயேட்சையான, சுதேசக் கலாச்சாரத்தினை உருவாக்கிக் கொள்ள அவரால் முடியவில்லை.  இங்கு தந்தை பெரியார் நிலமானியத்தின் பிற்போக்குச் கலாச்சாரத்தினை விட முதலாளித்துவ ஜனநாயகம் என்பது முன்னேறிய ஜனநாயகத்தை பின்பற்றுமாறு கோரியது அந்தக் காலகட்டத்தில் சரியான நிலைப்பாடானதே.

இங்கு ஒடுக்கும் சிந்தனை என்பது ஒரு சாதிக்குரியாக வரையறுக்க முடியாது. இந்தப் பார்வை சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் போது எதிர்நிலைக் கருத்துக்கள் முன்வைக்கின்றனர். தலித்தியவாதிகள் “முதலாளித்துவத்தையும்,  நிலப்பிரபுத்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்ப்பதைவிட சாதியத்தை எதிர்ப்பதுதான் இங்கே முக்கியம். ஏனெனில் இங்கே சாதியத்துடன் தான் எல்லாமே பின்னிப்பிணைந்திருக்கின்றன. பெண்விடுதலைக்கு வர்க்க விடுதலையே வழிவகுக்கும் என்பது புகட்டப்பட்டுள்ள பாடம்.” எனக்கருதும் போக்கு அறிவுசார் பிரிவினரிடம் இருக்கின்றது.

இவர்கள் தமது ஆழுமையைப் பயன்படுத்தி ஒரு அரசியல் போக்கை நிர்ணயிக்க கோருகின்றார்கள். இவ்வாறானவர்களின் சிந்தனையை எங்கெல்ஸ் பின்வருமாறு கூறுகின்றார். முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளுக்கும் முதிர்ச்சியற்ற வர்க்க நிலைமைகளுக்கும் இணைவாய் முதிர்ச்சியற்ற கோட்பாடுகளை அவர்கள் முன்வைத்தனர் என்றார். சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் புதையுண்டு இன்னும் மறைந்தே கிடந்தது. இந்தத் தீர்வினைக் கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள்.”

இவ்வாறான சிந்தனை கொண்ட அறிவுசார் பிரிவினரின் சிந்தனையின் வெளிப்பாடாக இந்தியாவில் தலித்தியம் என்றும், விளிம்பு நிலை என்றும் மக்களை விழித்துக் வரையறுத்துக் கொண்டனர்.  மேற்கூறிய வரையறைக்குள் உட்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலைக்காக போராட சாதியச் சங்கங்களை, கட்சிகளை உருவாக்கிக் கொண்டனர். இந்த சாதியச் சங்கங்கள் தேர்தலுக்காக மக்களை பிளவுபடுத்தும் கட்சிகளாக உருமாறிக் கொண்டுள்ளது. முள்ளிவாய்க்காலின் பின்னர் வேலைவாய்ப்பு, அமைதி, அபிவிருத்தி என்று உரிமையை சோற்றுக்கு இணையாக பொருத்தி செயற்படும் இணக்க அரசியலுக்கு ஒப்பாகும்.

இவர்கள் சாதியம் என்பது ஒரு சாதியின் சதி என்பதும், ஒரு குறிப்பிட்ட சாதிக்கெதிரான சிந்தனை என்பது அந்த சாதியச் சமுதாயத்தில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களை, உழைக்கும் வர்க்கத்தை  கவனத்தில் எடுப்பதில்லை. இந்தத் தவறு இலங்கையில் வர்க்கப் போராட்டத்திற்கு தடையாக இருக்கும். ஏனெனில் மனுதர்ம கோட்பாட்டின் படி நான்காம் படிநிலையில் உள்ள சூத்திரரான வேளாளர்களே ஆதிக்கச் சாதியாக கொள்ளப்படுகின்றார்கள். இவர்களை நோக்கியே இன்றைய தலித்தியம் வெறுப்புணர்வை பறைசாற்றுகின்றது. “வேளாளம்” என்பதே கொலணித்துவ காலத்திலும்,  ஆறுமுகநாவலர் காலத்திலும் உருவாக்கப்பட்ட சமூக கட்டமைப்பின் உருவானது என்பதை தலித்தியவாதிகள் புரிந்து கொண்டார்களா என்பது தெரியாது.

இலங்கையில் பிரம்மஞான  (The Theosophical Society) அமைப்பின் தாக்கத்தினால்

இந்திய தத்துவத்திலும், கிரேக்க மாயக் கொள்கைகளிலும், கிறிஸ்தவத்தில் இருந்தும் தமக்கான நம்பிக்கையை பின்புலமாக கொண்டனர்.

இவர்கள் அறிவின் பிறப்பிடமாக எகிப்தைக் கொண்டனர் எந்த மதமும் உண்மையை விட பெரியதில்லை என்று நம்பினர். ஆனால் எல்லா மதங்களும் உண்மையை அடைவதற்கான வழி என்று ஏற்றுக் கொண்டனர்.

வாழ்க்கையின் உண்மையை ஆரிய அல்லது வௌ்ளை சகோதரத்துவம் என்ற உயர்ந்த நிலையை அடையும் வழி என்று நம்பினர். இவர்களின் சித்தாந்தத்தின் மூலம் உயர்குலத்தை உருவாக்க முடியும் எனவும் கருதினர்.

இவர்களின் தத்துவ நிலைப்பாட்டை புத்தரின் முக்தி நிலைக்கு ஒப்பானதாகக் கொள்வர். இந்தச் சிந்தனையின் உற்பத்தியாகிய இலங்கையைச் சேர்ந்த அனாகரிக தருமபாலா என்ற புத்த துறவி இவர்களின் ஆரிய வௌ்ளை சகோதரத்துவக் கருத்துப் பால் ஈர்ப்பு கொண்டு அவர்களின் ஒரு சீடராக இருந்துள்ளார்.

ஆனாகரிக தர்மபாலா சிங்கள இயக்கத்தின் தந்தையாக ஆரியமே உயர்ந்தது என்ற கருத்தாக்கத்துடன் நாட்டின் விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபட்டவராவார். ஆரிய மேன்மைக் கருத்துருவாக்கத்தின் சிங்கள இனவெறிச் சிந்தனைக்கு ஒரு உரம் போட்ட நிகழ்வாகக் கொள்ள முடியும். 

ஆனால் பிரம்மஞான  (The Theosophical Society) அமைப்பின்  அப்பால் சிந்தித்த அனாகரிக தர்மபாலாவின் சிங்கள தேசிய கருத்துருவாக்கம் என்பது ஆறுமுகநாவலரின் சைவம்- தமிழ்- வேளாளம் என்ற கருத்துருவாக்கம் நிலப்பிரபுத்துவ பிற்போக்குச் சிந்தனை சார்ந்ததாகும். இது தர்மபாலாவின் சிங்கள தேசத்தினை உருவாக்குவதற்கு எதிர்நிலை கொண்டதாகும்.  தேசிய இனப்பெருமைக்கான கருத்துருவாக்கம் என்பது சிங்கள மக்கள் மத்தியில் முதலில் உருவாகியிருக்கின்றது.  சிங்கள தேசிய இனப்பெருமைக்கு எதிர்வினையாக தமிழ் தேசிய உருவாக்கத்தின் கருத்துருவாக்கம் மெதுவாக  உருவாக்கம் பெற்றிருக்கின்றது. ஆனால் அது வேகமாக வளர்ந்து கொள்ளவில்லை. இந்தக் காலத்தில் தமிழ் கட்சிகளின் ஆளுமையில் இருந்து தரகுமுதலாளித்துவ (அன்னிய ஏலவாளர்கள், சொந்த மக்களை நம்பாதவர்கள், மக்களின் வளர்ச்சியில் எவ்விதத்திலும் நேரடித் தொடர்பு கொள்ளாதவர்கள்) அரசியல் தவறுக்  அரசியல் கோசங்கள் என்பது பிற்போக்குத் தன்மை கொண்டதாக இருந்துள்ளது. 

தொடர்ச்சி  http://velanவேலன்.blogspot.no/2016/03/5.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *