தலித்தியத்தை தேடி-2
தலித்தியத்தை தேடி-2

தலித்தியத்தை தேடி-2

அகநிலைவாதம்-

ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை ஒடுக்கப்படுவர்களால் தான் உணர முடியும் என்ற வாதம் ஒரு அகவுணர்வு சிந்தனையாகும். ஆனால் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை புரிந்து கொள்ள முடியும்.  இவ்வாறு உணர்வின் அடிப்படையில் இருந்து ஆய்வை முன்வைக்க முடியாது. அகவுணர்வின் அடிப்படையில் ஆய்வை முன்வைப்பது இயங்கியல் பொருள்முதல்வாத வகைப்பட்ட ஆய்வுமுறையில்லை.

பல ஆய்வு முறைகள் இருக்கின்றன, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சித்தாந்தத்திற்கு சேவகம் செய்கின்றன. அதேபோல் மார்க்சீயத்திற்கு ஆய்வுமுறை என்பது இருக்கின்றது. இதுவே இயங்கியல்-வரலாற்றுப் பொருள்முதல் வாதம் ஆகும். இதற்குள் எவ்வகையான உள்ளடக்கக் கூறுகள் உள்ளடங்கி இருக்கின்றது என்பதைப் பார்ப்போம். இவற்றின் மூலமாக சமூகப் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதற்கும் சரியான பாதைக்கு வரவும் இவைகள் துணை செய்கின்றன. சமூகத்தின் பிரச்சினைகளை பொருளாதார உற்பத்தி முறைகளில் இருந்து தான் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் படி வலியுறுத்துகின்றது. ஒவ்வொரு தனிமனிதர்களையும் சமூக அமைப்பிலிருந்து தான் பார்க்கக் கோருகின்றது. ஒரு குறிப்பிட்ட முடிவிலிருந்து அதனை பொதுமைப்படுத்துதலும் முடியாததாகும்.

இதற்கு நம்மூர் பழமொழியை இங்கு பார்ப்பது பொருந்தும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது எவ்வகையிலும் பொருந்தாது. இது ஒரு குறிப்பிட்ட ஒரு தேற்றத்தில் இருந்து ஒரு கணக்கை தீர்ப்பதைப் போன்றதாகும். ஆனால் ஒரு தேற்றத்திலிருந்து ஒரு விடைபெற முயல்வது சமூக விஞ்ஞானத்திற்கு பொருந்தாது. புறத்திலிருந்து அகத்தை நோக்கிச் செல்லல் வேண்டும் மாறாக அகத்திலிருந்து புறத்தை நோக்கியல்ல மார்க்சியம் கூறுகின்றார் சமூகம் எவ்வாறு உள்ளதோ, அதற்கு ஏற்றவாறாகவே தனிமனிதர்களும் படைக்கப்படுகின்றார்கள். மார்க்சிய ஆய்வாளர்களின் அணுகுமுறையானது புறவயத்தை அடிப்படையாகக் கொண்டே ஆய்வினை மேற்கொள்வதாகும், அதாவது பொதுமையான -பொருளில் இருந்து ஆகும்.

சாதிய உணர்வும், சாதியை வைத்து அரசியல் செய்யும் போக்கும் என்பது சாதிய அடையாளத்தைக் கொண்ட கட்சிகளை உருவாக்கிவிடுகின்றது. இன்றைய சாதிகளான தேவர், நாடார், வன்னியர், வெள்ளாள கவுண்டர், நாயுடு, ரெட்டி, முதலியார், நாட்டுக்கோட்டை செட்டி, பிள்ளை, கோனார் முதலியனவும் இன்ன பிற ‘ஆண்ட பரம்பரை’ கனவில்  மிதக்கின்றார்கள். இந்தச் சாதிகள் அனைத்தும் ஆண்ட பரம்பரையாக நிறுவன எண்ணுவது சமூக விஞ்ஞானப் பார்வைக்கு முரணானது. காரணம் சாதிகளாக இருக்கின்ற போதிலும் வர்க்க ரீதியாக பிரிந்தே உள்ளார்கள். இவர்கள் வர்க்க ரீதியாக பிரிந்திருக்கின்ற சாதிகளில் உள்ள அனைவரும்  அந்தஸ்தினை ஒரே அளவில் சமூகத்தில் கொண்டிருக்க முடியாது.

இங்கு சாதியக் கட்டமைப்பு என்ன?  இனக்குழுமம் எவ்வாறு தேசிய இனமாகின்றது? தேசிய இனம் எவ்வாறு தேசமாகின்றது என்ற புரிதல் தேவை என்றால் சமூக விஞ்ஞானப் பார்வை அவசியாகும்.

சமூகத்தினை ஆராயும் போக்கினை அறிந்து கொள்ள சாதியக் கட்டமைப்பு என்பதை விஞ்ஞானப் பார்வைக்கு உட்படுத்த வேண்டும். குறிப்பான பின்னவீனத்துவ அரசியல் போக்கு என்பது 1984களில் பின்னரும், சோவியத் வீழ்ச்சியின் பின்னாரான காலம் என்பது சமூக விஞ்ஞான அறிவு என்பது படுபிற்போக்கு நிலையை அடைந்துள்ளது. சமூக ஆய்வில் புதிய புதிய கண்ணோட்டங்கள் – ஆய்வுக் கண்ணோட்டங்கள் என்ற முறையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதில் சாதியந்தன் புத்தி குலமந்தன் ஆசாராசம் என்று சாதியே எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக முன்னிறுத்தியது. சாதியப்புத்தியே அனைத்துக்  காரணம் என்று சாதியைச் சுற்றியே கேள்விகளை தொடுத்தது. இங்கு இயங்கியல் பொருள்முதல்வாதம் நுண்ணிய ரீதியில் அகற்றப்பட்டது. இன்று பெரும் பேச்சாளப் பெருமக்களாக முற்போக்கு முகமூடி அணிந்து வலம்வருபவர்களின் போக்கு  இருக்கின்றது. அனைத்தையும் சாதிய அடிப்படையில் விளங்கிக் கொள்ள வைப்பதற்கான ஆழக்கிடங்கை உருவாக்கியவர்கள் இவர்களும் பொறுப்பானவர்கள் தான். 

பாரதியின் படைப்புகள் அவரின் வெளிப்பாடுகளை சாதியை உணர்வை நிறுவதன் ஊடாக அணுகுமுறை முன்னிறுத்தப்பட்டது அதுபோல வாஞ்சிநாதனின் பார்ப்பண சிந்தனையே அவரை ஆஸை கொல்ல துணைநின்றது போன்று சாதியைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்த இயங்கியல் மறுப்பு போக்கு என்பது சிந்தனை என்பதே வாழ்நிலை தான் உணர்வுகளை தீர்மானிப்பது என்பதை மறுத்து உணர்வு- பிறப்புத் தான் சிந்தனையை தீர்மானிக்கின்றது என்ற மார்க்சிய எதிர்நிலைக் கருத்து முன்னிறுத்தப்பட்டது.

அன்றைய கொலனித்துவ அதிகாரியாக இருந்த ஆஸ் என்பவனர் முதலாளித்துவ சமூகப் பொருளாதார உற்பத்திற்கேற்ப முதலாளித்துவ ஜனநாயகத்தை ஏற்படுத்தினார் என்பதால் ஆஸ் ஆக்கிரமிப்புச் செய்திருந்த கொலணித்துவத்தின் அதிகார வர்க்கம் என்பதை மறுத்து விட்டு தியாகியாக்குவது அபர்த்தமான பார்வையாகும்.   இவ்வாறான பார்வைக்கு மாற்றாக சமூக விஞ்ஞானப் பார்வை என்பது அவசியமானதாகும். சாதியமே நிர்ணயிக்கும் காரணியாக கொள்வது சாதியவாதத்திற்கு உட்பட்டதேயாகும்.

இவர்கள்  நவீன தேசிய இனங்கள், நவீன தேசங்கள் பற்றிய விஞ்ஞானப் பார்வை இல்லாத அவலத்தை அவதானிக்க முடிகின்றது. தேசிய இனங்கள், தேசங்களாக வளரும் என்ற சிந்தனைப் போக்கினையும்  முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்கள் வளரும் என்ற புரிதல் என்பது (taboo) தவிர்த்தலுக்கு உள்ளாகின்றது.  இன்றைய சாதி- தேசியவாதிகள் சாதியம் என்பது தந்தை  பெரியார், மு.கருணாநிதி போன்றோரின் சாதிப் பின்புலத்தை கிளறி எடுத்து தமிழரை வேற்று மானிலத்தவர்கள் தமிழர்களை ஆள்கின்றார்கள் என்ற சிந்தனை வடிவத்தை ஏற்படுத்தி தமிழ் தேசிய இனத்தினுள் தூய தமிழ் சாதிகளைத் தேடுகின்றார்கள். தூய தமிழ் தேசியம் என்பதை தமிழ் சாதிகளைக் கொண்டு கட்டமைக்க முற்படுகின்றார்கள்.

தலித்தாக இருந்தால் தான் தலித்துக்களின் உணர்வை அறியமுடியும், ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்தால் தான் ஒடுக்கப்பட்ட சாதியில் வலியை புரிந்து கொள்ள முடியும் என்று எதற்கும் சாதியமே அளவு கோளாக நிறுத்தப்பட்டது. சாதியத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் சாதியைச் சேர்ந்தவர்களால் தான் முழுமையான இலக்கியம் படைக்க முடியும் என்ற கருத்து விதைக்கப்பட்டு மற்றைய கருத்துக்களை பலவீனமாக்கப்பட்டது. 

தனிமனிதர்களுக்குள்ளேயே பிரச்சனைக்கான தீர்வைக் காணும் உச்சமே ‘‘தன்னைச் சாதிவெறியன் அல்ல என மறுபடியும் மறுபடியும் நிரூபிக்காதவரை ஒவ்வொரு வெள்ளாளனும் சாதி வெறியனேஎன்பதாகும்.  இது தலித்தியவாதத்தின் உச்சமான அடையாளக் கோட்பாடாக முன்னிறுத்தப்படுகின்றது. பார்ப்பணியம், யாழ்சைவவேளாளம் என்ற நிலமானியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மாத்திரம் உரித்தானதாக இட்டுக்கட்டுகின்றது.

தமிழகத்தில் பொதுவுடமைக்கட்சிகளில் உள்ள பதவிகளில் இடவொதுக்கீடு கோரும் அவலம் என்பது தமிழகத்தில் அடையாள அரசியல் ஊடாக கோரப்படுகின்றது. பொதுவுடமைக் கட்சியில் சேர்வதற்கும், அடிப்படை உறுப்பினராக சேர்வதற்கும் விதிகள் உண்டு. ஊழியர்களின் பயிற்சிக் காலம் எவ்வளவு முக்கியமோ அதேபோல உறுப்பினரின் (பால், சாதிக்கு அப்பால்) அரசியல் முதிர்ச்சியும், அரசியல்மயப்படுத்தப்பட்ட நிலை என்பது முக்கியமானதாகும். இங்கு ஒரு தோழர் போதிய அரசியல்அறிவைப் பெருக்கும் வகையில் கட்சி துணை நிற்க வேண்டும். ஒவ்வொரு தோழர்களையும் உயர்ந்த சிந்தனைதளத்திற்கு வளர்த்து விடுவதான் கட்சியின் கடமையாகும்.  அரசியல்மயப்படுத்தல் ஊடாக கட்சியில் பொறுப்புக்கள் கொடுக்கப்படுகின்றன. இங்கு அரசியல் உள்ளடக்கத்தை மறுத்த அராஜகப் போக்கே அடையாள அரசியல் ஊடாக தாராளவாத முதலாளித்துவக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

இந்த மேலான்மை கருத்தியல் கொண்ட சமூகமே தன்னை சுற்றியும் வரலாற்றை எழுதியுள்ளது.  சமூக ஒழுங்கு ஆதிக்க வர்க்கதின் சமூக ஒழுங்காக பேணப்பட்டு வந்துள்ளது. தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் என்ற கருத்தோட்டம் கொடுப்பவர்கள் யார்? இந்தியப் பத்திரிகை இந்துவில் பாடல்வேறு-ராகம் ஒன்றுதான் என்ற தலைப்பில் “மாமன்னர் மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், மாமன்னர் பூலித்தேவன், மாவீரன் சுந்தரலிங்கம், மாவீரன் வௌ்ளையத் தேவன், தீரன் சின்னமலை, மாவீரன் கோபால் நாயக்கர், ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த வீரநங்கை குயிலி, மாவீரன் ஊமத்துரை உள்ளிட்டவர்கள் அப்படித்தான் அழித்தொழிக்கப் பட்டனர்.”
http://tamil.thehindu.com/opinion/columns/பாடல்வேறு%25E ( பாடல் வேறுராகம் ஒன்றுதான்!)

இவர்களில் குயிலியின் பெயரை மாத்திரம் எழுதுகின்ற போது சாதியை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இந்த சமூகம் இருக்கின்றது. சாதியச் சிந்தனை மறுவுற்பத்தி செய்யும் இடமாக பொருளாதார அமைப்பும் அதுசார்ந்த நிறுவனங்கள், தொலைத்தொடர்பு, கலாசாலையும் முக்கிய பாத்திரத்தினை வகிக்கின்றது. அனைத்து சமூகத்தளத்தில் உள்ளது போலவே கலாசாலை ஆய்வுமுறை, அது கற்பிக்கும் வரலாறு பற்றியும் ஒரு மாறுதலைக் கொண்டு வரவேண்டும். 

மேலாதிக்கத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகின்ற போது அடையாளங்கள் புதுப்பிக்கப்படுகின்றதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இன்னுமொரு செய்தி ‘‘பகத்சிங் உடன் தூக்கிலிடப்பட்ட அஸ்வகுல்லா கானை எத்தனை பேருக்கு தெரியும்…?

இசுலாமியர்களின் தியாகங்கள் மறைக்கப்படுவதையும், மறக்கடிக்கப்படுவதையும் நினைவுகூர்வோம்‘‘ இங்கு வரலாறுகள் என்பது  பொது இலட்சியத்தின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பின்னால் உருவாகின்ற பிரித்துப் பார்க்கின்ற சிந்தனை என்பது தத்தம் அடையாளங்களுடன் இணைத்துக் கொள்வதாகும்.  மனிதர்களின் சிந்தனைகளை வரலாற்றோட்டத்துடன் இணைத்துப் பார்க்காத விளைவுகளின் வெளிப்பாடாவும் கொள்ள முடியும்.

தோழர் வேலனின் இணைய பகுதியில் இருந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *