தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள் – நா.வானமாமலை
தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள் – நா.வானமாமலை

தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள் – நா.வானமாமலை

தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள் – நா.வானமாமலை

(1966 ஆம் ஆண்டு ஆராய்ச்சி இதழில் வெளிவந்தது)

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக வரலாற்று சான்றுகள் பல வெளியாகியுள்ளன. புதைபொருள் ஆராய்ச்சியாலும் கல்வெட்டு ஆராய்ச்சியாலும் இலக்கிய நூல்களிலுள்ள வரலாற்று சம்பவங்கள் குறித்த ஆராய்ச்சியாலும் பற்பல வரலாற்று நிகழ்ச்சிகள் ஆராய்ச்சியாளர்களது கவனத்திற்கு வந்துள்ளன.
வரலாறு நிகழ்ச்சிகளின் கோர்வையல்ல. வரலாற்று ஆசிரியர் நிகழ்ச்சிகளைத் தமது கண்ணோட்டத்திற்கு ஏற்ற முறையில் பகுத்து ஆராய்ந்து அவற்றிற்குப் பொருள் கொடுக்கிறார்கள். அதனாலேயே ஒரேவிதமான நிகழ்ச்சிகள் கண்ணோட்ட வேறுபாட்டால் இருவிதமான பொருள் பெறுவதுண்டு.
தமிழக வரலாற்று துறையில் இருவகையான கண்ணோட்டங்களை நாம் காண்கிறோம். ஒவ்வொரு கண்ணோட்டமும் குறிப்பிட்ட அரசியல் – சமூகச் சூழ்நிலையில் எழுகின்றது. பின்னர் அக்கண்ணோட்டம் வரலாற்று நிகழ்ச்சிகளுக்குக் குறிப்பிட்ட முறையில் பொருள் அளிக்கின்றது. இவ்வாறு வரலாற்றின் பொருள், கண்ணோட்டத்தைப் பொறுத்ததாகி விடுகிறது.
நமது வரலாற்றை நாம் அறிந்து கொள்வதற்கு மேற்குறித்த இரு கண்ணோட்டங்கள் எவ்வகையில் வழி காட்டுகின்றன? எச்சூழ்நிலையில் அவை எழுந்தன? அவற்றின் மூலம் வரலாற்றுண்மையை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியுமா? என்னும் வினாக்களுக்கு விடை காண முயலுவோம்.
இந்திய வரலாறு முதன்முதலில் ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்களால் எழுதப்பட்டது. அவர்களில் வின்சென்ட் ஸ்மித் முக்கியமானவர். அவர் சரித்திரம் எழுத மேனாட்டு ஆசிரியர்களது கீழ்த்திசைத் தத்துவ ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டார்.

ஆங்கில ஆதிக்க இந்நாட்டில் பரவுவதற்கு முன் இந்தியாவில் தோன்றியிருந்த நாகரிகத்தைப் பற்றி உயர்வான எண்ணம் அவருக்குக் கிடையாது. ஆங்கில ஆதிக்கம் இந்நாட்டில் பரவியது இந்நாட்டின் தவப்பயன் என்று எண்ணினார். ஆங்கில ஆட்சியின் மேன்மையை விளம்பரப்படுத்த விரும்பினார். இக்கண்ணோட்டம் வரலாற்றுண்மைகளை அவருடைய போக்கில் காண உதவிற்று. இவரைப் போன்றே பல ஆங்கில ஆசிரியர்கள் இந்நாட்டு உண்மைகளைக் கண்டார்கள். இது ஏகாதிபத்தியக் கண்ணோட்டமாகும். இவர்கள் இந்நாட்டு மக்களின் ஒற்றுமையை விரும்பவில்லை. எனவே ஒவ்வொரு இன மக்களின் நாகரிகத்தையும் தனிப்பட்டதாகவும், ஒன்றிற்கொன்று முரண்பட்டதாகவும் வருணித்தார்கள். ஆரிய நாகரிகம், திராவிட நாகரிகம் இவற்றிடையே தவிர்க்க முடியாத முரண்பாடுகள் இருப்பது ஆகிய தன்மைகளை இவர்கள் கண்ணோட்டக் கண்ணாடி மூலம் பெரிதாக்கிக் கொண்டார்கள். இந்து முஸ்லீம் முரண்பாடுகளைப் பெரிதாக்கி வரலாற்றில் அதனையே நமது இடைக்கால வரலாற்றின் அச்சாணியாக்கிக் காட்டினார்கள். ஆங்கில ஆசிரியர்களில் சிலர் ஆரிய நாகரிகத்தை உயர்த்தினர். சிலர் இந்து மன்னர் ஆட்சியை உயர்த்திப் பேசினர். இன முரண்பாடுகளையும் மிக விரிவாக எழுதினர்.

இந்நூற்கள்தாம் நமது தமிழக வரலாற்று ஆசிரியர்களின் மூலநூல்கள். அவற்றை அவர்கள் பயன்படுத்திய விதத்தை நாம் ஆராய்தல் வேண்டும்.

தமிழக வரலாற்றை எழுதியவர்களில் இரு கண்ணோட்டங்கள் கொண்டவர்கள் உண்டு என்று முன்னர்க் குறிப்பிட்டேன். முதல் கண்ணோட்டம் எது என்று தற்போது காண்போம்.
தமிழக வரலாற்றில் சிற்சில பகுதிகளை முதன் முதலில் எழுதியவர்கள் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரியார், பி.டி.ஸ்ரீனிவாச அய்யங்கார் முதலியோர். இவர்கள் யாவரும் ஆங்கில ஆட்சிக் காலத்தில் ‘அறிவாளி’ வர்க்கம் என்று கருதப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இவ்வர்க்கம் ஆங்கில ஆட்சியில் அதன் உதவியோடு உயர்ந்து அதன் ஆதிக்கத்தில் பணிபுரிந்தது. ஆரிய உயர்வு பற்றி தமக்கே உரிய உணர்வு, ஆங்கில ஆசிரியர்களால் போற்றப்பட்டது கண்டு பெருமை கொண்டது. ஆரிய நாகரிகம், வேதநூல்கள், உபநிஷதத் தத்துவங்கள், வடமொழி நூல்களில் காணப்படும் அரசியல் கருத்துகள் இவற்றை ஆங்கிலேய மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் உணர்ந்து அவற்றைப் பெருமையோடு போற்றினர். ஆங்கில நாகரிகம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எவ்வாறு கீழ் நிலையிலுள்ள இந்திய நாகரிகத்தை மாற்றியமைத்ததோ, அதுபோலவே இந்தியாவின் பழங்காலத்திலுள்ள பல்வேறு நாகரிகங்களையும் ஆரிய நாகரிகம், மாற்றியமைத்தது என எண்ணினர். இந்நாகரிகத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாட்டில் ‘பிராமணர்’கள் என்ற அவர்கள் நினைத்தனர். உதாரணமாக, எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்காரின் சொற்பொழிவுகளுக்கு, அவர் எழுதிய முன்னுரையில் இக்கருத்தை அவரே கூறுகிறார்:

‘தென்னாட்டில்’ பிராமணருடைய ஸ்தானம் தனித்தன்மை வாய்ந்தது, வெளிநாட்டாருடைய மதிப்பீட்டில், வேதகால முறை, அடிப்படை மாறுதல் எதுவுமின்றித் தென்னாட்டில் நிலவி வருகிறது. தென்னாட்டில் பிராமணருடைய ஸ்தானம் பற்றிய விவாதம் தற்பொழுது முன்னணிக்கு வந்துள்ளது. இந்நிலையில் வரலாற்று ரீதியாக இப்பிரச்சினையை ஆராய்வது அவசியம். இந்தியச் சமூகத்தில் பிராமணருடைய ஸ்தானம் பற்றிய ‘ஸ்த பாதப் பிராமணம்’ கூறுகிறது. தென்னாட்டிலும் அதே ஸ்தானம் அவர்களுக்கு இருந்தது (வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்குக் குடியேறிய காலத்திலிருந்து சமீபக் காலம் வரை இந்நிலை மாறவில்லை). அவர்களுக்கு இரண்டு பொறுப்புகள் சமூகத்தில் இருந்தன. ஒன்று சமூக நன்மைக்காக யாகம் முதலிய வழிபாடுகளைச் செய்வது; மற்றொன்று கல்வி கேள்விகளைப் பாதுகாத்து வளர்ப்பது. இவற்றைப் பாதுகாப்பது என்றால் இவற்றைச் சமூகத்தில் பரப்புவதும் அடங்கும்.

கிடைக்கும் ஆதாரங்களினின்றும், பிராமணர் தங்களது கடமையைத் திறமையாகச் செய்து, தங்கள் நடைமுறையினின்றும் பிறமக்களின் உயர்வுக்கு வழிகாட்ட உதாரணமாகத் திகழ்ந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்குக் கீழ்நிலையிலிருந்த பிறர் அவர்களைப் பின்பற்றி அவர்களுடைய நிலைக்கு உயர முயன்றார்கள். எனவே இந்தியாவிலுள்ள பெருவாரியான மக்களின் சமூகம் உயர்வதற்குப் பிராமணர்கள் முக்கியக் காரணமாக இருந்தார்கள். தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற பெயர்களைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். பிராமண முறை சமுதாய அமைப்பே கல்வி, நாகரிகம் முதலியன தமிழ் நாட்டில் முன்னேறியதற்குக் காரணம்
இந்த மேற்கோளிலிருந்து தமிழக வரலாற்றின் ஒரு கண்ணோட்டம் தெளிவாயிற்று. மேலும் அது எழுந்த சமூகச் சூழ்நிலையும் ஒருவாறு விளங்கப்பட்டது.

இனி இரண்டாவது கண்ணோட்டத்தை ஆராய்வோம்.
தமிழ்நாட்டில் பிராமணருக்குச் சமமாகத் தங்களைக் கருதிக் கொண்ட சைவர்களான முதலியார், பிள்ளை, சைவச் செட்டியார்கள், நகரத்தார், கவுண்டர் முதலிய நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைச் சார்ந்தவரும் சமூக நிலையில் பிராமணருடைய ஆதிக்கம், தங்களுக்கு வேண்டுமென்று எண்ணினர். ஆங்கில ஆதிக்கத்தில் ‘அறிவாளி வர்க்க’ மாகத் தாங்கள் உயர வேண்டுமென எண்ணினர். பிராமணர்களுடைய ஆரிய நாகரிகக் கொள்கை இவர்களுக்கு வரப்பிரசாதமாகக் கிடைத்தது. இவர்களும் ஒரு தத்துவத்தை உருவாக்கிக் கொண்டனர் அதற்கு அடிப்படை ஆரிய, திராவிட நாகரிகங்களிலுள்ள முரண்பாடுகளைப் பற்றி, ஆங்கில ஆசிரியர்களுடைய கருத்துகள் தாம் தமிழிலக்கியத்தில் இவர்கள் தென்னாட்டு பெருமையைக் கண்டார்கள் தமிழின் சிறப்பையும், தமிழ் நாட்டின் தொன்மையையும் நிறுவ இவர்கள் வரலாறு காணத் துணிந்தனர். இச்சமயம் ‘மோகன்ஜதாரோ ஹரப்பா’ அகழ்வு ஆராய்ச்சிகள் வெளிவந்தன. அவற்றைப் பற்றி ஹீராஸ் பாதிரியார் என்ற மேனாட்டு ஆராய்ச்சியாளர் கருத்துகளை விமர்சனம் எதுவுமின்றி அப்படியே ஏற்று கொண்டனர். பிராமணர்கள் ஆரிய உயர்வைப் பற்றி எழுதினால் இவர்கள் ஆரிய இழிவையும் திராவிட உயர்வையும் பற்றி எழுதினர்.
வரலாற்று நிகழ்ச்சிகளைத் திராவிட உயர்வு என்ற கண்ணோட்டத்தில் இவர்கள் கண்டனர். வேதகால முறை தமிழ் நாட்டில் மாறாமல் இருக்கிறதென்று, முதல் கண்ணோட்டமுடையவர்கள் கூறினால் இவர்கள் தற்கால முதல், தமிழ்நாடும், திராவிட நாடும் எவ்விதத்திலும் மாறவில்லை என்று கூறினர். தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தேட, தென்னாட்டு வரலாறே, திராவிட ஆரிய முரண்பாடுதான் என்று கூறினர். இராமாயணக் கதையை ஆரியத் திராவிடப் போராகச் சித்தரித்தனர். சுக்கிரீவனையும், அனுமனையும் ஆரிய அடிவருடிகளாக்கினர். வாலியை ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்கத் திராவிட வீரனாக்கினர். ஆரியர் ஆதிக்கத்தை எதிர்க்கத் திராவிட நாடு என்றும் போராடியுள்ளது; இது விடுதலை காக்கும் உணர்வு என்று அந்த மூச்சில் வடநாட்டை அடக்கியாண்டான் கரிகாலன் என்றும், கனக விசயர் தலையில் கல்லேற்றிக் கொணர்ந்தான் செங்குட்டுவன் என்றும் ஆதிக்கப்பெருமை பேசுவர். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்ற பெயரைக் கொண்டு, பெரும் போர் ஒன்று நடந்ததாக ஆதாரமின்றியே கயிறு திரிப்பர்.

இவ்விரண்டு போக்குடையோர் ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் தனித் தனியே விரித்து வைத்த இரண்டு வலைகளில் விழுந்து அதனையே வரலாற்று ஆதாரமாகக் கற்பனை செய்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டு வரலாற்றை இவ்விரு கண்ணோட்டமுடையோராலும் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், இவையிரண்டுமே விஞ்ஞானக் கண்ணோட்டங்களல்ல.

தமிழ்நாட்டு வரலாற்றை உண்மையாக்கிப் புரிந்து கொள்வதற்குத் தமிழ்நாட்டு வளர்ச்சியையும் பிற இனங்களோடு தமிழர் சமுதாயம் கொண்ட தொடர்புகளையும் ஆராய வேண்டும்.

தமிழர் சமுதாய வளர்ச்சியை வரலாற்று தொடக்ககால முதல் ஆராய்வதற்கு, சிற்சில பிராமிக்க கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும் ஆதாரமாக அமையக் கூடும். புத்த மத வரலாற்று நூல்களும், சைவ வைணவச் சமய நூல்களும் ஓரளவு உதவி புரிய ……. ஏராளமான கல்வெட்டுகள்…. அவையாவும் பெயர்த்து எழுதப்பட்டால் வரலாற்றின் அடிப்படை செம்மையாக அமையும். காசுகள், பழம் பொருட்கள் முதலியவை பற்றிய ஆராய்ச்சி இனிதான் தொடங்க வேண்டும். அவை மேற்கொள்ளப்பட்டால் சரித்திரத்தைப் பற்றிய புதிய உண்மைகள் வெளியாகும். தமிழ் நாட்டு பண்டைய நகரங்கள் இருந்து மறைந்து போன இடங்கள் அகழ்ந்து ஆராயப்பட்டால், புதிய புதிய உண்மைகள் வெளியாகும்.

இவ்வாறு கிடைக்கும் ஆதாரங்களின் சமுதாய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு வரலாறு எழுதப்பட வேண்டும். மலையிலும் கடற்கரையிலும் சிறு குடியாக வாழ்ந்த தமிழன், தனது உழைப்பினால் உற்பத்திச் சக்திகளை வளர்த்து முன்னேறி, முல்லை நிலத்திலும், மருதத்திலும் பெருவாழ்வடைந்த பேரரசுகளை நிறுவி, பல்வேறு நாட்டு மக்களோடு நேசப்பான்மையோடும், போர் புரிந்தும் எவ்வாறு வாழ்ந்தான் என்பதைச் சமூக வளர்ச்சி அடிப்படையில் அன்றி எழுத முடியாது இது போலவே பிற இன மக்களும், படிப்படியாக வளர்ச்சி பெற்றனர். இந்தியாவில் வளர்ச்சி பெற்ற பல இனங்களைச் சேர்ந்த மக்கள் வாணிபத்தின் மூலம், அறிவு தேடுதலின் மூலம் நிலப்பிரபுத்துவப் போர் வெளியர் தூண்டுதலாலும், சிற்சில வேளைகள் நேச உறவும், சிற்சில வேளைகள் போரின் மூலமாகவும் தொடர்பு பெற்றனர்.
இவற்றால் சமூக வளர்ச்சிகள் சிக்கலடைந்தன. பண்பாட்டு கலப்புகள் ஏற்பட்டன. சமுதாய மாறுதலுக்கேற்ற வகையில் பண்பாட்டு மாறுதல்களும் நிகழ்ந்துள்ளன.
ஒரு இன மக்களின் பண்பாட்டில் வளர்ச்சியுறும் அம்சங்களும் உண்டு; தேய்வுறும் அம்சங்களும் உண்டு பண்பாட்டு கலப்பு நிகழும்போது சூழ்நிலை, இரு பண்பாடுகளின் பக்குவ நிலை பொறுத்துப் பண்பாட்டு அம்சங்கள் சில இணையும், சில அம்சங்கள் இணையா.

இதை மனத்துள் கொண்டு தமிழர் சமுதாய வளர்ச்சிப் போக்கை உண்மையாகச் சித்தரிக்கும் வரலாறு எழுதப்பட வேண்டும். இனக்கண்ணோட்டமோ சாதிக் கண்ணோட்டமோ உண்மையைக் காண உதவாது. வரலாறு ஒரு சமூக விஞ்ஞானம். அது பல விஞ்ஞானங்களின் துணையோடு எழுதப்பட வேண்டும். மானிட இயல், அகழ்வு ஆராய்ச்சி, காசு ஆராய்ச்சி, சமூக இயல், அரசியல், பொருளாதாரம் ஆகிய விஞ்ஞானங்களின் துணையோடு வரலாறு எழுதப்பட வேண்டும். இலக்கியமும் கலைகளும் சமூக வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் சரித்திரம் எழுதத் துணையாகும்.
இத்தகைய கண்ணோட்டத்தை உருவாக்குவது உண்மை வரலாறு காண விரும்புவோர் கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *