தற்காலத்தில் தத்துவத்தின் அவசியத்தை சில அறிஞர்கள் சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கும் காலத்தில் தத்துவத்தின் அவசியத்தை, குறிப்பாக சோசலிச தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவத்தின் அவசியம் குறித்து மார்க்சிய ஆசான் எங்கல்சின் கருத்து கீழ்கண்டவாறு. ஐரோப்பிய கண்டத்தில் ஏனைய நாடுகளில் இருந்த தொழிலாளி வர்க்கங்களைவிட ஜெர்மனியின் தொழிலாளி வர்க்கத்திற்கு முக்கியமான இரண்டு சாதகமான சூழ்நிலை இருந்தது. முதலில் ஐரோப்பாவிலேயே தத்துவார்த்த ரீதியாக தேர்வுபெற்றவர்கள். ஜெர்மன் தத்துவங்கள் இல்லாமல் குறிப்பாக ஹெகலின் தத்துவம் இல்லாமல் ஜெர்மனியில் விஞ்ஞான சோசலிசம் ஏது?. இந்த ஹெகலின் விஞ்ஞான சோசலிச தத்துவத்திற்கு நிகராக இதுவரை எந்தவொரு தத்துவமும் வெளிவரவில்லை. அதற்கு நிகராக எழப்போவதும் இல்லை. தொழிலாளி வர்க்கத்திற்கு என்று ஏற்பட்ட தத்துவம் ஆதலால் இந்த விஞ்ஞான சோசலிசமானது அவர்களின் இரத்தத்திலும் சதையிலும் அவ்வளவு சுலபமாக ஊறிப்போனது. இத்தகைய கணக்கிட முடியாத அளவு சாதகமான சூழ்நிலையா என்று கேள்வி எழுந்தால், இத்தகைய தத்துவம் இல்லாததால் பிரிட்டனில், வளர்ந்த ஸ்தாபனமும், இயக்கமும் இருந்தும் அங்கு தொழிலாளி வர்க்கம் நிதானமாக ஊர்ந்துகொண்டிருக்கிறது. பிரான்சிலும், பெல்ஜியத்திலும் பிரௌதானின் தத்துவத்தால் குழப்பம்தான் அதிகரித்துள்ளது. இதில் ஸபெயினிலும் இத்தாலியிலும் பாகூனின் தத்துவத்தில் ஒரு கேலிக்கூத்திற்கு ஆளானார்கள். ( ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம், எங்கல்ஸ் பக்கம்- 16 ) இங்கே தொழிலாளர்கள் பிரௌதனின் தத்துவம் மற்றும் பாகூனின் தத்துவங்களான விஞ்ஞான சோசலிச தத்துவத்திற்கு ( மார்க்சியம்) மாறான தத்துவங்களின் செல்வாக்கில் இருந்த காரணத்தால் எண்ணிக்கையில் அதிகமான தொழிலாளர்களின் அமைப்புகளால் பலமான அமைப்புகளாக முடியவில்லை. ஆனால் இந்த அமைப்புகளுக்குப் பின்னால் தோன்றிய ஜெர்மன் தொழிலாளர்களின் அமைப்பு விஞ்ஞான சோசலிச தத்துவ வளர்ச்சி பெற்றிருந்ததன் காரணமாக ஜெர்மன் தொழிலாளர்கள் அமைப்பு பலமாக இருந்தது என்று எங்கல்ஸ் விளக்குகிறார். அவர் மேலும் விளக்குகையில் ஜெர்மனியின் தொழிலாளர் வர்க்கம் பிரிட்டீஷ், மற்றும் பிரெஞ்ச் போராட்ட படிப்பினையின் அடிப்படையில் உருவானது என்பதை மறக்கலாகாது. அதே நேரத்தில் விலைமதிப்பற்ற அவர்களின் போராட்டத்திலிருந்து அவர்கள் செய்த தவறுகளை தவிர்த்து இயக்கத்தினை நடத்திட வேண்டும். பிரிட்டீஷ் தொழிற்சங்க இயக்கமும், பிரெஞ்சு அரசியல் போராட்டமான பாரீஸ் கம்யூன், முன்னுதாரணமாக இல்லாவிட்டால் நாம் எங்கிருப்போம்? என்று கேள்வி எழுப்பி தொழிலாளிவர்க்கங்களின் போராட்ட அனுபவங்களை கற்றுத் தோர்வதும், நாம் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நமது தத்துவ அறிவை அனுபவத்தின் ஊடாக செழுமைப்படுத்தி தத்துவ அறிவை வளர்த்து முன்னேற வேண்டும் என்று எங்கல்ஸ் வழிகாட்டுகிறார். ஆகவே நமது கடமை அடிப்படை மார்க்சிய- லெனினிய தத்துவ அறிவை கற்றுத் தேர்தல், அதனை வளர்த்தல், வர்க்கங்களிடம் அதனை போதித்து பயிற்சி அளித்தல் மேலும் இந்த விஞ்ஞான சோசலித தத்துவத்தினை மறுத்து பிற தத்துவங்களை முன்கொண்டுவரும் அறிவாளிகளின் கருத்துக்களை விஞ்ஞான வழியில் முறியடித்தல் போன்ற சித்தாந்தப் பணிகள் நம்முன் உள்ளது. அதனை நிறைவேற்றிட நாம் ஒன்றுபடுவோம்.