ஒன்றியத் தலைநகர் டில்லியிலிருந்து 50 ஆயிரம் மக்கள் குழந்தைகளோடும், மிஞ்சிய மூட்டை முடிச்சுகளோடும் தங்கள் சொந்த கிராமங்களை நோக்கி நடைபயணமாக புலம் பெயர்கிறார்கள். நீண்ட நெடிய வரிசை, நெரிசல் மிகுந்த கூட்டம், பட்டினியை எதிர்கொண்டு நிற்கிற பஞ்சடைத்துப் போன ஏக்கப்பார்வை, குழந்தைகளையாவது காப்பாற்றுவோம் என்கிற துயரம் தோய்ந்த கவலை, உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போயுள்ள அந்த மக்களின் நெடும்பயணம் நெஞ்சாங்கூட்டில் ஒரு பெருத்த கணத்தை உண்டாக்குகிறது.
உலகின் மிகப்பெரிய, துயரம் மிகுந்த இடப்பெயர்வாக வரலாறு பதித்துக் கொண்டிருப்பது 1995ஆம் ஆண்டு யாழ் நகரில் இருந்து இடம்பெயர்ந்த ஈழத்தமிழரின் இடப்பெயர்வு தான். பல லட்சம் மக்கள் நீண்ட வரிசையில் காடுகள் மலைகள் ஆறுகள் கடந்து கிழக்கு நோக்கி நகர்ந்த அந்த இடப்பெயர்வின் காட்சிகள் இன்னமும் மேல் இமையின் கீழாக அப்படியே இருக்கின்றன.
இங்கே… இன்றைக்கு….
அய்நூறு ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து
தலை நகரத்திற்கு போனால் எப்படியும் வயிற்றுக்காவது கஞ்சி உறுதியாகும் என்கிற நம்பிக்கையோடு தங்கள் சொந்த மண்ணை, சொந்த பந்தங்களை
விட்டு விட்டு டில்லிக்குப் பிழைக்க வந்த அந்த மக்களின் ஒரே மூலதனம் உழைப்பு மட்டும்தான்.
எந்த வேலையைக் கொடுத்தாலும் சரி… எவ்வளவு நேரம் ஆனாலும் சரி…
கொஞ்சமாய்
கோதுமை கஞ்சியோ, மொந்தையான சப்பாத்தியோ…
ஏதோ ஒன்றைத் தின்றுவிட்டு உயிர்தேய உழைக்கிற மக்கள் இவர்கள்.
இன்றைக்கு
பளபளக்கும் சாலைகள், சொகுசு பயணத்தை எளிதாக்கிய பாலங்கள்,
பங்களாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என தலைநகர் டில்லியின் மினுமினுப்பில் உறைந்திருக்கின்றன இந்த உழைக்கும் மக்களின் உதிரம்.!
டில்லியின் ஒவ்வொரு அங்குல முன்னேற்றமும்,
நலமும் சுகமும் இன்றைக்கு தெருவிலே நிற்கிற இந்த அபலைகளின் உழைப்பால் தான் என்பதை அங்குள்ள ஒவ்வொரு பிடி மண்ணும் சொல்லும்.
கை ரிக்ஷா இழுப்பவர்களாய், சாக்கடையை சுத்தம் செய்பவர்களாக, ஆலைக்கூலிகளாக இந்த அன்றாடங்காய்ச்சிகளின் உழைப்பு சொல்லிமாளாது. ஆனால், உயிரையும் உதிரத்தையும் உறிஞ்சிக் கொழுத்த தில்லி,
இந்த மக்களுக்கு திருப்பித் தந்தது கேவலம் துயரமான சூழலில் “போ” என விரட்டி விட்டு வேடிக்கை பார்க்கும் நன்றிகெட்ட தனம் தான்.
கைகளை முறுக்கி, குரலை உயர்த்தி, செவாலியே சிவாஜியை மிஞ்சும் பாவனையோடு பேசுகிற பிரதமர், இந்த கூலிகளின் கொடுமைக்கு வெட்கப்பட வேண்டும்!உங்கள் கண் முன்னால் தானே இந்தத் துயரம் நடக்கிறது.
ஏதேதோ கணக்கெடுப்புகள் என்று சொல்லி…
ஆகா ஓகோ என்று நீட்டி முழங்குகிற அமித்ஷாவுக்கு
டில்லி மாநகரில் ஒண்டக் குடிசையின்றி, நிற்க நிழலுமின்றி, வந்தேறிகளாய், உழைப்பைச் செலுத்தி வரும் இந்த மக்கள் எத்தனை பேர் என்கிற கணக்கு தெரியவில்லையா.? இல்லை
இந்த மக்களின் துயரம் கண்ணுக்குத் தெரியவில்லையா.? ஊரடங்கு அமல்படுத்தினால் இந்த மக்களால் ஒருவேளை பசியடங்க வழியுண்டா.? என்பதைக் கூட புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்கள் மக்களாட்சியின் மானக்கேடு.!
ஏழைக்கட்சி நடத்துவதாக சொல்லி ஆட்சியை தக்க வைத்துள்ள கெஜ்ரிவாலுக்கும் இந்தக் கேள்விகள் பொருந்தும்.
உங்களிடம் என்ன கட்டமைப்பு இல்லை..!?
பிஞ்சுக் குழந்தைகள், வயசுப் பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர் என இந்த ஏழைக் கூட்டம் உயிர் பிழைப்போமா? கொரோனா நம்மை தொற்றுமா? என்கிற கேள்விகளுக்கு விடை தேடக் கூட நேரமில்லாமல் நன்றிகெட்ட டெல்லியிலிருந்து நடைபயணம் தொடங்கினார்களே அப்போது டில்லி மாநில அரசும் ஒன்றிய உள்துறையும் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்..?
இந்த மக்களுக்கான தற்காலிக முகாம்கள், உணவு, மருத்துவ வசதிகள் ஆகியவற்றை கடந்த 20ஆம் தேதிக்கு முன்பாகவே திட்டமிட்டு இருக்க வேண்டுமா.? இல்லையா?
இதைக்கூட செய்வதற்கு துப்புகெட்ட ஆட்சிதான் டெல்லியிலே இருக்கிற கபடதாரிகளின் ஆட்சி என்பதை மனிதநேயம் கொண்ட யாவரும் உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும்.
மாநில அரசுகளின் வரிவசூலைப் பறித்துக்கொண்டு, அவசர காலத்தில் பயன்படுத்த வேண்டிய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியையும் கையாடல் செய்து,
ஆயுள் காப்பீட்டுக் கழக நிதியையும் கொள்ளையடித்து, அத்தனையும் கொண்டுபோய் கார்ப்பரேட்டுகளின் காலடியில் கொட்டிவிட்டு,
மக்களை மடையர்களாக்கும் போலியான, பொய்யான, பாவனையான உரைகளையும்,
வெற்று தேசபக்த முழக்கங்களையும் மட்டுமே உபதேசமாக உளறிக் கொண்டிருக்கிற,
ஒரு கபட நாடக பேர்வழி நாட்டை, மக்களை காப்பாற்ற வக்கற்றவர் என்பதற்கான கண்ணீர் சாட்சிதான் டில்லியிலிருந்து புலம்பெயர்ந்துள்ள மக்கள்..!
மாநில அரசுகள் கேட்கிற உதவிகளைச் செய்யாமல் வெற்று உபதேசம் மட்டுமே செய்கிற இந்திய அரசின் பிரதமரோ, ஒன்றிய ஆட்சியாளர்களோ நிச்சயம் இந்த நாட்டு மக்களை காப்பாற்ற மாட்டார்கள்.
கொரோனா இரண்டாம் கட்டத்தை கடந்து மூன்றாம் கட்டமான சமூக தொற்றாக பரவினாலும் சரி, நான்காம் கட்டமான பேரழிவானாலும் சரி, இந்த கார்ப்பரேட் கைப்பாவைகள்
ராமன் கோயில் கட்டவும்,
மதவெறி கதாகாலட்சேபம் செய்யவும், நீலிக்கண்ணீர் வடித்து மக்களையும், உலகத்தையும் ஏமாற்றிவிட துணிவார்களே தவிர, இவர்கள் மக்களைக் காக்கும் முயற்சிக்கு முன்வரமாட்டார்கள் என்பதையே இந்தக் கொடும் இடம்பெயர்வு நமக்கு எச்சரிக்கிறது.
இந்த இக்கட்டான நெருக்கடியான சூழலில் சுகாதாரத் துறையையும், பொதுவிநியோக துறையையும், உள்ளாட்சித் துறையையும் கடந்த 50 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக வைத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டு அரசுக்கு நாம் முன்வைக்கிற முக்கிய வேண்டுகோள்…
தயவு செய்து பொது விநியோகத் துறை மூலம் தன்னார்வலர்களைக் கொண்டு மக்களின் உணவுத் தேவையை நிறைவேற்றி
பட்டினி இல்லாத சூழலை உறுதிப்படுத்துங்கள்.
சுகாதாரத் துறையும், உள்ளாட்சித் துறையும் இணைந்து வீடு வீடாக தனித்திருத்தலை, நோய்த்தொற்று பரவாமல் தடுத்தலை உறுதிப்படுத்துங்கள்.
மக்கள் தமிழ்நாட்டு அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள். எல்லாவற்றுக்கும் முன்பாக தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் இந்த முயற்சியில் ஒருங்கிணைத்து ஈடுபடுத்துங்கள் என தமிழ்நாடு முதலமைச்சரை அன்போடு வேண்டுகிறோம்..!- காசு நாகராசன் முக நூலில்