டாக்டர் அம்பேத்கர் முதலாளித்துவ சீர்சிருத்தவாதியா புரட்சியாளரா?
டாக்டர் அம்பேத்கர் முதலாளித்துவ சீர்சிருத்தவாதியா புரட்சியாளரா?

டாக்டர் அம்பேத்கர் முதலாளித்துவ சீர்சிருத்தவாதியா புரட்சியாளரா?

( தோழர். கோபாட் காந்தி அவர்களால் எழுதப்பட்டு பிரண்டியர் இதழில் 90 களில் வந்த கட்டுரை. புதிய ஜனநாயகம் இதழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.)

மகாராஷ்டிரத்தில் மகர் என்ற மிகவும் தீண்டத்தகாத சாதியில் அம்பேத்கர் பிறந்தார். இவருடைய தகப்பனார் ராணுவத்தில் சுபேதார்- மேஜர். மகா என்ற இடத்தில் இருந்த ராணுவ பள்ளியில் தலைமை ஆசிரியராக அவர் பணியாற்றினார்.(1892 வரை தீண்டத்தகாதவர்கள் காலனி ராணுவத்தில் சேர்க்கப்படும் எல்லா ராணுவ வீரர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் அடிப்படை கல்வி கொடுப்பதும் அமுலில் இருந்தது.)
1891 ஏப்ரல் 14 ல் அம்பத்கர் மகர் சாதியில் அவரது பெற்றோருக்கு பதினான்காவது குழந்தையாக மகாராஷ்டிரத்தில் பிறந்தார். அவரது தந்தை ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்பு அவர்களது குடும்பம் டாப்பிலிலும் பின்பு ஷதோரவிலும் இறுதியாக பம்பாயிலும் குடியேறியது.
சிறுநகரங்களில் பள்ளி படிப்பு காலங்களில் அவர் சாதிய கொடுமைகளால் துன்பப்பட்டார். பம்பாயில் தனது பள்ளி இறுதிப் படிப்பை முடித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக அவரைப் படிக்க வைக்கவில்லை தந்தை மிகவும் சிரமப்பட்டார். சீர்திருத்தவாதியும் எழுத்தாளருமான கெலாங்கர் என்பவரது உதவியால் கல்லூரி படிப்பினை பரோடா மன்னரின் உதவியோடு மும்பையில் பயின்றார். பின் 1913 ஜீனில் , மீண்டும் மன்னரின் உதவியோடு அமெரிக்கா சென்று பயின்றார். தாழ்த்தப்பட்ட வகுப்பில் படிப்பதற்காக வெளிநாடு சென்ற முதல் மனிதர்யாவார். அதன் மூலம் தனது சமூகத்துக்கு பெருமை சேர்த்தவர்.

சாதிய அடக்குமுறை சூழ்நிலையில் இருந்து விலகி இருந்ததால் அம்பேத்கர் சுதந்திரமான உணர்வோடு கடுமையாக உழைத்து கிடைத்த வாய்ப்பை பயனுள்ளதாக மாற்றிக் கொண்டார். அமெரிக்க ஜனநாயகம்ததாலும் , பார்க் , ஜே எஸ். மில் மற்றும் ஜாண்டிவே போன்றோரின் சிந்தனையாலும் கவரப்பட்டார். நாடாளுமன்ற ஜனநாயகத்திலும் அரசியல் சட்டத்திலும் திடமான நம்பிக்கையை வளர்த்து கொண்டார். அமெரிக்காவில் லாலா லஜபதி ராயினை சந்திக்கிறார். அம்பேத்கரை கெதர் கட்சியிலோ அல்லது அரசியலிலோ பங்கெடுக்க வைக்க ராய் முயற்சித்த போது படிப்புதான் முக்கியம் எனக் கூறி மறுக்கிறார்.

1916 ஆண்டு தனது டாக்டர் படிப்புக்கான ஆராய்ச்சியை முடித்தார் கூடுதல் உதவித்தொகையை பெற முடியாமல் போனதால் லண்டனில் அவர் படிப்பை தொடர முடியவில்லை. எனவே 1917 நாடு திரும்புகிறார். பின் பரோடா மன்னரிடம் வேலை செய்கிறார் . பரோடா மன்னரிடம் பணியாற்றிய போது மிகவும் பாரபட்சமாக நடத்தப்பட்டதால் அந்த வேலையை விட்டு வெளியேறுகிறார். வேலைக்காகவும் பணம் சம்பாதிக்கவும் பல வழிகளிலும் முயன்றார். சேமிப்பு மற்றும் பங்கு மார்க்கெட் நிறுவனங்களில் சிலகாலம் ஆலோசகராக இருந்தார்.
1918 நவம்பரில் சைடன்ஹோம் கல்லுரியில் பேராசிரியராக சேர்ந்தார். தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிகழ்ச்சிகளில் அவர் ஊக்கமாக பங்கேற்ற போதிலும்,தனியொருவராக முக்நாயக் எனும் பத்திரிகையை தொடங்கி நடத்தி வந்தார். தீண்டத்தகாதவர்கள் மத்தியில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு அம்பேத்கர் உயர்சாதி சீர்திருத்தவாதிகளின் போலித்தனமான ஆதரவு நடவடிக்கைகளை வெறுத்தார்.
1924 மார்ச் மாதம் “பகிஷ்கிரித் ஹிடாகரிணி சபா” எனும் சொந்த அமைப்பை நிறுவினர்.அம்பேத்கர் அதற்கு ஆணையாளராகவும், சர்சி மன் லால் சீதல்வாத் தலைவராகவும் இருந்தனர்.
தீண்டத்தகாதவர்களிடையே பொதுக்கல்வி மற்றும் தொழிற்கல்வியை பரவச் செய்வதும் அவர்களது குறைகளை பிரதி நிதித்துவப் படுத்துவது தான் குறிக்கோள் .

தீண்டத்தகாதவர் முன்னேற்றத்துக்கு கல்வி அவசியமென அம்பேத்கர் நம்பினார். அதற்கு தன்னேயே உதாரணமாக கொண்டு பொது அறிவையும் தகுதிகளையும் வளர்த்து கொண்டார். ஆனால் நாடு முழுவதும் மாணவர்களின் உணர்வோ இதற்கு நேர்மாறாக இருந்தது. மாணவர்கள் படிப்பை துறந்து விடுதலைப் போரில் குதித்தனர். அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் அவசியத்தை காலம் தாழ்த்தியே உணர்ந்தார். எனினும் கல்விக்கு முக்கியமாக உயர்கல்விக்கு எப்போதுமே முக்கியத்துவம் அளித்து வந்தார். மேற்படிப்பில் இவருடைய சாதனைகளுக்காக தீண்டத்தகாதவர்களிடம் முக்கியமாக மகர் சாதியினரிடையே மிகவும் பிரபலமானார். தீண்டத்தகாதவர்கள் சார்பாக பல்வேறு கமிஷன்கள் மற்றும் மாநாடுகளில் அம்பேத்கர் அறிவுபூர்வமாகவும் மதிப்புமிக்க முறையிலும் பிரதிநிதித்துவப்படுத்தவதை ஆங்கிலேயர் கண்டனர்.

1928 அக்டோபரில் நாடு முழுவதும் சைமன் கமிசனை புறக்கணித்த போது அம்பேத்கர் சைமன் கமிசனுக்கு அழைக்கப்பட்டார்.சைமன் கமிசனில் அவர் கலந்து கொண்ட அதே நேரத்தில் நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டத்தை பிரிட்டிஷ் அரசு மிருகத்தனத்தோடு அடக்கியது. அவரது கல்லூரி நண்பர் லஜபதி ராய் மாண்டார்.
1930 க்கும் 1932 க்கும் இடையே நடந்த மூன்று வட்ட மேஜை மாநாடுகளிலும் அம்பேத்கர் ஒடுக்கப்படும் மக்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியினர் கூட இரண்டு மாநாடுகளை புறக்கணித்தனர். பின்னர் அரசியல் நிர்ணய சட்ட திருத்தங்களுக்கான வெள்ளை அறிக்கையை பரிசீலிக்கும் கூட்டு ஆலோசனைக் கமிட்டியில் பங்கேற்று 1933 மே மாதம் அவர் லண்டன் சென்றார்.

1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு சிறிது காலம் முன்னர் நாடே கொதிப்படைந்து வெள்ளையர் ஆட்சி மீது கோபம் கொப்பளிக்க நின்ற போது வைசிராயின் அமைச்சரவையில் தொழிலாளர் அமைச்சராக பதவி ஏற்க பிரிட்டிஷ் அரசின் அழைப்பை ஏற்று மந்திரியானார். அவர் தொழிலாளர் மந்திரியாக இருந்தபோது பிரிட்டிஷாரின் இந்த முயற்சிகளுக்கு சாதகமாக ஆயுத தளவாட ஆலைகளில் நிர்வாக தொழிலாளர் ஆலோசனை சபைகளை நிறுவி பெருமளவு உதவினார். மேலும் இந்த ஆலைகளுக்கு ஆள் சேர்க்க வேலைவாய்ப்பு நிறுவனங்களை நிறுவப்பட்ட பாடுபட்டார். இதோடு இவைகளில் பணியாற்ற தீண்டத்தகாத மாணவர்களை தொழில் கல்வி பயிற்சி பெற உதவினார்.

முஸ்லீம் லீகின் ஆதரவு பெற்ற பின்னர் 1946 ல் அவர் சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் . பின்னர் அரசியல் நிர்ணய சட்டத்தை வகுத்தளிக்கும் கமிட்டியின் தலைவராக பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டார்.வெள்ளை ஆட்சியில் நடந்த தேர்தல்கள் முற்றிலும் ஜனநாயக விரோதமானவை. 1935 ம் ஆண்டின் காலனிய சட்டத்தை அடிப்படையாக கொண்டது. மொத்த மக்கட் தொகையில் 13 சதவீதத்தினருக்கு மட்டுமே வாக்குரிமை. அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 2 சதவீதத்தினருக்கு மட்டுமே வாக்குரிமை தரப்பட்டது . 1946 இடைக்கால அரசாங்கத்தில் ஜெக ஜீவன் ராம் பங்கெடுத்து கொண்டதும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்தி விட்டதாக உற்சாகமடைந்தார்.

அதே ஆண்டு அக்டோபர் 15 ல் மீண்டும் லண்டன் சென்று அட்லியையும், சர்ச்சிலையும் சந்தித்து , i).நிர்வாகத்திலும் சட்டசபையிலும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு கூடுதல் பிரதி நிதித்துவம் வேண்டும். ii).இடைக்கால அரசாங்கத்தில் குறைந்த பட்சம் மேலும் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் அங்கம் வகிக்க வேண்டும் . iii).1935 ம் ஆண்டின் காலனிய சட்டம் மேலும் 10 ஆண்டுகளுக்கு (1946 லிருந்து ) அமுலப்டுத்திய பின்னரே அதிகாரத்தை இந்தியர் கைகளுக்கு மாற்ற வேண்டும். என்ற மூன்று கோரிக்கைகளை முன் வைத்தார் . ஆனால் பிரிட்டிஷ் அரசு இதை ஏற்கவில்லை .

நீண்டகாலமாக கடைபிடித்து வந்த காங்கிரஸ் எதிர்ப்பு, வெறுப்பு துவேசனை பிரச்சாரம் என்ற நிலையை விட்டு அதிகார மாற்றத்துக்குபின்னர், காங்கிரஸ் மந்திரி சபையில் சட்ட அமைச்சரானார். தனது படிப்பை முடிக்க மீண்டும் லண்டன் செல்லும் முன்பே தீண்டத்தகதாவர்களின் உறுதியான தலைவர் என்பதை அம்பேத்கர் வெளிப்படுத்தினார். தீண்டத்தகாத பல சாதியினரை அவர் அணிதிரட்ட முயன்றாலும் இவருடைய அதரவாளர்கள் பெரும்பாலும் இவரது மகார் சாதியினராகவும், மாங் சாதியினராகவுமே இருந்தனர்.

மகார்கள் , குறிப்பாக இந்த இயக்கங்களுக்கும் மாற்றங்களுக்கும் சாதகமான நிலையில் இருந்தனர் . மராட்டியத்தில் பரந்து விரிந்த தீண்டத்தகாதவர்களிடையே மிகப் பெரும் பிரிவினரான இவர்கள், சமார் சாதியினரைப் போல் வேலைத்திறன் மிக்கவர்களல்ல. அனாலும் பொதுவாக கிராம ஊழியர்களாகவும், அரசாங்க அலுவலர்களாகவும் , எல்லைக் காவலர்களாகவும் பிணைங்களை அப்புறப்படுத்தபவர்களாகவும் இருந்தனர். இவ்வேலைகளுக்காக அவர்களுக்கு வாட்டன் எனப்படும் துண்டு நிலம் பயிரிடக் கொடுக்கப்பட்டது.

அவர்களது பரம்பரைத் தொழிலுக்கு மாற்றாக 1892 வரை அவர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கல்வியும் போதிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியினால் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தினால் கிராமங்களில் மகர்களின் நிலைமை மிகவும் சீரழிந்தது.அவர்கள் ஆலைகளில் வேலை தேடி நகரங்களுக்கு குடி பெயர்ந்தனர். ராணுவத்த்தில் சேர்ந்த மகார்கள் பெற்ற கல்வியினால் கிடைத்த தெளிவும் , மாகத்மா புலேவின் சமூக சீர்திருத்த இயக்கங்களில் பங்குபெற்ற அனுபவமும் அம்பேத்கரின் கருத்துக்கள் முளைவிடுவதற்கான பூமியாக இருந்தது.சத்திய்ஷோடக் தலைவர்களான ஜெடே , ஜவால்கர்,ஆனந்தசாமி ஆகியோரால் நடத்தப்பட்ட பார்ப்பனியத்துக்கு எதிரான போர்க்குணமிக்க வெகுஜன இயக்கங்களும் இதற்கு பேருதவியாக இருந்தது.

பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் மாநாடுகளை அடிக்கடி அம்பேத்கார் வழிகாட்டியாகவும் தலைமையேற்றும் நடத்தி வந்தார். திறமையான பேச்சாளரான அம்பேத்கார் தனது உணர்ச்சிமிக்க சொற்பொழிவுகளில் வாட்டன் நிலத்தில் உழுது பயிரிட்டு அல்லற்படுவதையும்,அழுகிய இறைச்சியை உண்ணுவதையும் விட்டொழித்து விட்டு அரசியல் உரிமைகளைப் பெறவும் முக்கியமாக கல்வி கற்கவும் தூண்டினார்.

இவரது நடவடிக்கைகள் பெரும்பாலும் சட்ட வரம்புக்கு உட்பட்டதாகும் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டதாகும் அதன் கடமையை மீறாமலும் இருந்தது. தீண்டத்தகாதவர்கள் அதிகாரத்துக்கான பதவிக்கு வந்தால்தான் நிலைமை மாறும் என்று அவர் கருதினார். அதனால்தான் பிரிட்டிஷாரின் கமிஷன்கள் கலந்துகொண்ட போதெல்லாம் தீண்டத்தகாதவர்களுக்கு சட்டசபையிலும் அரசாங்கத்திலும் அதிக இடங்களை ஒதுக்குமாறு வலியுறுத்தினார். சைமன் கமிஷனின் கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித் தேர்தல் தொகுதிகளைக் கோரினார். பின்னர் காந்தியின் நிர்ப்பந்தத்தால் கூட்டு தேர்தல் தொகுதிகளுக்கு ஒத்துக்கொண்டார். தீண்டத்தகாதவர்கள் எல்லா பொது இடங்களையும் பயன்படுத்த அனுமதிக்குமாறு சட்டசபையில் எஸ்கே.போலே தீர்மானம் கொண்டுவந்தபோது அதை அம்பேத்கர் தீவிரமாக ஆதரித்தார். வட்டன் நிலங்களை ரயத்துவாரி நிலமாக மாற்றக்கோருவது, தீண்டாமை ஒழிப்பு மசோதா கொண்டு வந்தது, மதக் கட்டுப்பாடு ஆசாரம் என்ற பெயரில் தீண்டத்தகாதவர்களின் மீது ஏவப்படும் அடக்குமுறைகளை எதிர்க்கும் மசோதா மசோதா முதலான சீர்திருத்தங்களை முன்முயற்சியோடு சட்டசபையில் கோரினார்.

அம்பேத்கார் பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் சொற்பொழிவு நடத்தியது மட்டுமன்றி எப்போதாவது சட்டத்திற்கு உட்பட்ட வெகுஜன அரசியல் இயக்கங்களையும் நடத்தினார். 1927இல் இவர் உருவாக்கிய மகத் சத்தியாகிரகம் என்ற மக்கள்திரள் நடவடிக்கையை பாதியிலேயே விலக்கிக்கொண்டு சட்டவாத பொந்துக்குள் தள்ளிவிட்டார். மகத்தில் உள்ள சௌதார் குளத்தில் ஒடுக்கப்பட்ட சாதியின் உரிமையை நிலைநாட்ட அம்பேத்கர் கடுமையாக முயன்றார். கீழ் சாதியினருக்கு சாதகமாக உள்ள அரசாங்க தீர்மானத்தை காட்டி அம்பேத்கர் தலைமையில் தீண்டத்தகாதவர்கள் அணிதிரண்டு அக்குளத்தில் தண்ணீர் குடிப்பது என தீர்மானித்தனர். 1927 மார்ச்சில் வெற்றிகரமாக மாநாடு நடத்தி முடித்த பின்னர் அனைவரும் அணிதிரண்டு சென்று குளத்தில் இறங்கினர்.பின்னர் அவர்கள் கலைந்து சென்ற போது உயர் சாதி இந்துக்களால் தாக்கப்பட்டனர். அது சுத்தப்படுத்தப்பட்ட குலம் மேலும் தனியாருக்கு சொந்தமானது என்று கூறி நீதிமன்றத்தில் மேல்சாதியினர் வழக்கு தொடுத்தனர். அம்பேத்கர் மீண்டும் ஒரு மாநாடு கூட்டி இதே நடவடிக்கையை தொடர தீர்மானித்தார் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் 1927 டிசம்பரில் மாநாட்டை நடத்தி மனு சாஸ்திரத்தை தீயிட்டுக் கொளுத்தினார். பின்னர் பிரிட்டிஷ் நீதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்கி நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை குளத்துக்கு போகும் நடவடிக்கையை நிறுத்தி வைத்துவிட்டு பின்வருமாறு கூறினார் “நமது போராட்டம் சாதி இந்துக்களுக்கு எதிரானது. இதனால் வெளியில் நமக்கு ஓரளவுதான் ஆதரவு உள்ளது. இதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் நாம் அரசாங்கத்தை விரோதித்து கொண்டு நமது போராட்டத்தின் மூலம் எதிர் தரப்புக்கு போய் விடக்கூடாது. இதனால் நமக்கு ஒரு பலனும் விளையப் போவதில்லை.” எனவே நீதிமன்ற தீர்ப்பு வர வரை காத்திருப்பு என முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு 10 ஆண்டுகள் கழித்துதான் வெளியானது.

பெரியார் ஈவேராவின் திருவாதவூர் கோயில் நுழைவு போராட்டத்தால் உற்சாகமடைந்த அம்பேத்கரும் 1927இல் அமராவதியிலும் 1930இல் நாசிக்கிளும் கோயில் நுழைவுப் போராட்டங்களில் பங்கேற்றார். அமராவதி கோயில் நிர்வாகம் தீண்டத்தகாதவர்களுக்கு கோயிலை திறந்து விட மறுத்தது. இதையொட்டி நகரில் பதட்ட நிலை நிலவியது.

அம்பேத்கர் தலைமையில் மாநாடு நடந்து முடிந்தது. கோயிலை நோக்கி ஊர்வலம் புறப்பட்டது. ஆனால் அன்றைய மாகாண சட்ட சபை உறுப்பினரும் அம்பாதேவி கோவில் நிர்வாக கமிட்டி தலைவருமான கபார் டே என்பவரின் வற்புறுத்தலால் திட்டம் திடீரென தள்ளி வைக்கப்பட்டு இருதரப்பினரும் சமரசத்திற்கு வர அவகாசம் அளிப்பது என முடிவானது. அதேசமயம் நாசிக்கில் உள்ள காலாராம் கோயில் நுழைவு போராட்டம் 1930 மார்ச்சில் காந்தி தண்டி யாத்திரை புறப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு தொடங்கி நீண்டகால போராட்டமாக தொடர்ந்தது அந்த கோயில் இதனால் ஒரு வருடத்திற்கு மூடிக் கிடந்தது.

கடைசியாக 1935ல் அம்பேத்கர் கோவில் நுழைவு போராட்டத்தை கைவிட்டுவிட்டு தங்கள் அரசியல் உரிமையை பெறுவதற்கு கவனம் செலுத்தும்படி அறைகூவி அழைத்தார். இந்து மதத்திற்குள்லேயே சமமான அந்தஸ்தை பெறும் போராட்டம் கடைசியில் தோல்வி முடிந்தது.பின்னர் மதம் மாறுவது என்ற சிறுபிள்ளைத்தனமான முடிவுக்கு அம்பேத்கர் வந்தடைந்தார்.

தீண்டத்தகாதவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கு அம்பேத்கர் முக்கிய கவனம் செலுத்தி வந்த போதிலும் தேசியவாதிகளுக்காக சில சமயம் போராடினார் என்பதைத்தவிர இவர் தேசிய போராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை. உண்மையில் முழு சுதந்திரத்தை விட பிரிட்டிஷாரின் சுயாட்சி அந்தஸ்து ஆதரவளித்தார் .
இந்தியாவில் பிரிட்டிஷாரின் கொள்ளை பற்றிய பரந்த அறிவு அவரது ஆராய்ச்சிகளும் பேச்சுக்களும் அளித்த போதிலும் வெள்ளையரை எதிர்த்த போராட்டத்தில் எப்போதாவதுதான் கலந்து கொண்டார். இவர் காங்கிரசை எதிர்த்தார். ஹரிசன சேவை என்ற நேர்மையற்ற தந்திரமான செய்கைக்காக காந்தியை தாக்கினார். சாதி இந்துக்களின் ஆதிக்கத்தையும் பிரிட்டிஷாரின் கொள்ளையையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது என்று அம்பேத்கர் எண்ணினார். அதனால் சாதிக் கொடுமைக்கு எதிராக முக்கியத்துவம் கொடுத்து பிரிட்டிஷாரோடு ஒத்துழைப்பாக நடந்து கொண்டார். இந்தப் போக்கு அவருடைய முழு வாழ்க்கையிலும் நடவடிக்கைகளும் தெளிவாக பிரதிபலித்தது. காங்கிரஸ் கட்சி சாதி இந்துக்களின் ஆதிக்கம் உடையதாகவும் அதன் தலைமை பிரிட்டிஷாரை எதிர்ப்பதே அரிதாக இருந்தது காங்கிரசை வெறுத்து ஒதுக்கி அம்பேத்கர் காங்கிரசுக்கு வெளியே உள்ள பல்வேறு ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுடன் ஒன்றிணைந்து போராட முன்வரவில்லை.

1937இல் அம்பேத்கர் சுதந்திரத் தொழிலாளர் கட்சியை நிறுவினார் அப்போது நடந்த பம்பாய் மாகாண சட்டசபை தேர்தலில் இக்கட்சி போட்டியிட்டு 17 இடங்களில் 13 இல் வெற்றி பெற்றது. தொழிலாளி வர்க்கத்தினிடையே வளர்ந்துவரும் கம்யூனிச மாயத் தோற்றத்திற்கு நாங்கள்தான் உண்மையான மாற்று என்று அக்கட்சி பிரகடனப்படுத்தியது. 1942இல் இக்கட்சி கலைக்கப்பட்டு தாழ்த்தப்பட்டோர் சங்கம் என்று அகில இந்திய கட்சி அமைக்கப்பட்டது .

கம்யூனிஸ்ட்கள் பற்றி அம்பேத்கர் உடைய கருத்துக்களும் கட்டுரைகளும் குழப்பமானது. அக்காலத்தில் அவர் வக்கிரமான கம்யூனிச எதிர்ப்பாளர். இந்திய கம்யூனிஸ்டுகளை கடுமையாக சாடி வந்தவர் கம்யூனிச சிந்தனைகளுக்கும் நற்சான்றிதழ் கொடுத்தார் ஆனால் நடைமுறையில் ஒரு சில சந்தர்ப்பங்கள் தவிர அவர் உறுதியான கம்யூனிஸ எதிர்ப்பாளராக இருந்தார்.

அம்பேத்கருடைய கம்யூனிச எதிர்ப்பு 1920 களிலேயே ஆரம்பித்துவிட்டது அந்த காலகட்டத்தில் பம்பாயில் உழைக்கும் மக்கள் நல சங்கங்கள் பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவர்களான எஸ். கே.போலே போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் அமைக்கப்பட்டது. பின்னர் இச்சங்கங்கள் கிரிணி காம்கார் மகாமண்டல் என்ற தொழிற்சங்கமாக மாறி பின்னர் கிரிணி காம்கார் யூனியன் என்ற பெயரில் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் செயல்பட்டது. 1924ல் பார்ப்பனரல்லாதோர் கட்சித் தலைவர்களான பாஸ்கர் ராவ் ஜாதவ் , கோவிந்தராஜ் ஷிண்டே போன்றோர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களின் முயற்சிகளை முறியடிக்க ஆலைகளில் சாதிவாரியான தொழிற்சங்கங்களை நிறுவலாம் என்ற பிரிட்டீஷாருக்கு ஆலோசனை கூறினார். எச். பி. மோடி மற்றும் பெருமுதலாளிகளின் சங்கத்திடம் இருந்து அவர்கள் பிரச்சாரத்திற்கு நிதியுதவி பெற்றதாக கூறப்பட்டது. அதேசமயம் அவர்களது ‘கைவாரி’ என்னும் செய்தித்தாளுக்கு ‘கிராஃபோர்டு’ பங்கு மார்க்கெட் முதலாளிகளிடமிருந்து நிதி உதவி பெற்றனர்.
1928ல் பம்பாயில் ஆறுமாத காலம் நடந்த பஞ்சாலை தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த வேலைநிறுத்த போராட்டத்தை அம்பேத்கர் தீவிரமாக எதிர்த்தார். ஈ.டி. சாசுன் ஆலையின் மேலாளர் ஸ்டோன்ஸ் என்பவரால் ஊக்குவிக்கப்பட்ட அம்பேத்கரும் எஸ் கே போலே தீண்டத்தகாதவரிடம் சென்று வேலைக்கு திரும்புமாறு கூறினார். ‘அதிக சம்பளம் கிடைக்கக்கூடிய நெசவுத் துறையில் தீண்டத்தகாவர்களையும் அனுமதிக்க கம்யூனிஸ்ட்கள் கோரிக்கை வைக்கவில்லை மேலும் வேலை நிறுத்தப் போராட்டத்தை பொருளாதார நலன்களுக்காக அல்லாமல் அரசியல் புரட்சிக்காக கம்யூனிஸ்டுகள் பயன்படுத்துகிறார்கள்’ என்று கேடாக பிரச்சாரம் செய்து தீண்டத்தகாதவர்களை போராட்டத்திலிருந்து திசை திருப்பினர்.

1929 மீரட் சதி வழக்கில் கிரிணி காம்கார் தலைவர்கள் கைது செய்தபோது மீண்டும் ஒருவேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போதும் தீண்டத்தகாதவர்கள் பொருளாதாரச் சுமையை தாங்கிக்கொள்ள முடியாது என்று கூறி போராட்டத்தை எதிர்த்து ஒடுக்கப்படும் சாதியினரை திசை திருப்பவும் செய்தார். 1938 மார்ச்சில் பம்பாய் சட்டசபையில் காங்கிரஸ் அரசாங்கம் தொழிலுறவு மசோதா கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை மட்டுமே அம்பேத்கார் ஆதரித்துள்ளார்.

1950களில் நேருவின் வெளிநாட்டு கொள்கையை அம்பேத்கர் எதிர்த்தபோது அவருடைய கம்யூனிஸ எதிர்ப்பு தீவிரமாக வெளிப்பட்டது. அமெரிக்காவின் ராணுவ கூட்டமைப்பான சீட்டோ வில் சேராத தற்கு நேருவை அவர் கண்டித்தார். அவரைப் பொறுத்தவரை சீட்டோ சுதந்திர நாடுகளின் அமைப்பு என்றும் அதன்மூலம் ரசியாவின் எதிர்கால ஆக்கிரமிப்பை தடுக்கலாம் என்று கருதினார். “10 ஐரோப்பிய நாடுகளையும் ஆசியாவில் பாதையும் விழு ங்கி விட்ட ரஷ்ய கம்யூனிச பூதத் த்துடன் வேறு இணங்கி போகிறார்.” என்று குற்றம் சாட்டினார். நேருவின் சமாதான சகவாழ்வு கொள்கையை எதிர்த்தார் . “தன் வழியில் எதிர்க்கப்படும் ஒவ்வொன்றையும் விழுங்கி விடும் காட்டு தீயை போன்றது கம்யூனிசம் . எப்படிப் பார்த்தாலும் கம்யூனிச கொள்கை மிக மோசமானது.” என்று ராஜ்யசபாவில் சாடினார்.

சீக்கிய மதத்துக்கு மாறிவிடுவது என்ற கருத்தையும் அம்பேத்கார் கொண்டிருந்தார். முஸ்லிம்களோடு சரளமாக பழகி வந்த போதிலும் அவர்களுடைய குறுகிய மனப்பான்மை மற்றும் குழுவாத தன்மையால் முஸ்லிம்களை வெறுத்தார். அவர்களுக்கு தனித் தேர்தல் தொகுதிகள் ஒதுக்குவதையும் எதிர்த்தார். 1940இல் பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கை எழுந்த போது அன்று இப்பிரச்சினையில் பெரும் குழப்பம் தழுவியபோது சட்ட நுணுக்கங்களையும் தக்க விவாதங்களையும் கொண்ட ‘பாகிஸ்தான் பற்றிய சிந்தனைகள் என்ற நூலை எழுதினார் . அதில் பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவளித்தார். முஸ்லிம் தேசியம் இருப்பதை இயல்பாக ஏற்க வேண்டும் என்றும், முஸ்லிம்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள் எனவே இந்தியாவுடன் சேர்ந்து இருப்பதைவிட பாகிஸ்தான் பிரிந்து செல்வதே நல்லது என்று அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

1945இல் அம்பேத்கர் எழுதிய இந்தியாவுக்கான அரசியல் சட்டத்தில் பழங்குடியினருக்கு எவ்வித அரசியல் உரிமையும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் அரசியல் ரீதியாக போதுமான அளவு வளரவில்லை அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் உரிமை கொடுப்பது அவர்கள் சொந்த நலனுக்கு எதிரானது என்று வாதிட்டார். எல்லா ஒடுக்கப்படும் மக்களின் நலனுக்காக அல்லாமல் இப்படி ஒரு பிரிவினரை தனிமைப்படுத்துவது தவறு என்று அவரை விமர்சித்த போது “துன்பப்படும் மக்களின் தலைவராக இருக்க நான் முயற்சிக்கவில்லை தீண்டத்தகாத மக்களின் நலனுக்காக இருப்பது என்பதே என்னுடைய சக்திக்கு போதும் போதுமானதாக உள்ளது.” என்றார்.

1951ஆம் ஆண்டு இந்து சட்டத் தொகுப்பு மசோதா கொண்டுவரப்பட்டபோது நேரு அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். காங்கிரசை கடுமையாக எதிர்த்தார். பின்னர், 1951இல் பொதுத் தேர்தலின்போது சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டார் . 1952 ல் உ. பி . ஜமிந்தார்களுக்கு ஆதரவாக , உ. பி. ஜமீன்தாரி ஒழிப்பு மற்றும் அரசியல் சட்டத்தை எதிர்த்து அவர்களுக்காக வாதாடினார்.

1956ல் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறினார்.இந்திய குடியரசு கட்சியை உருவாக்கிய பின்னர் 1956 டிசம்பர் 5 ஆம் நாள் இறந்தார். மஹர் ஜாதி மற்றும் சில சாதிகளுக்கு ஊக்கமளித்து அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்ததைத் தவிர அம்பேத்கருடைய வாழ்க்கையில் வேறொன்றுமில்லை. தீண்டத்தகாதவர்களாக உயர்ந்த அதிகாரங்களை அடையலாம் குறைந்தபட்சம் சமுதாயத்தில் அவர்களுடைய அந்தஸ்தை அரசாங்கத்தில் ஒரு அதிகாரி ஆவதன் மூலமோ அல்லது உயர் கல்வியை பெறுவதன் மூலமோ அல்லது இரண்டின் மூலமோ உயர்த்திக் கொள்ளலாம் என காட்டினார். இது முந்தைய நூற்றாண்டில் தீண்டத்தகாதவர் எண்ணியும் பார்க்க முடியாததாக இருந்தது.

அம்பேத்கர் வாழ்க்கையில் காணப்படும் இந்த உண்மைகளில் ஒன்று அவரை முழுவதுமாக கண்டனம் செய்வதன் மூலமும் அல்லது அவரை மிகப்பெரிய புரட்சியாளராக சித்தரிப்பதன் மூலம் ஒருசில இடதுசாரிகளால் மறைக்கப்படுகிறது. ஒரு நிலையான இடத்தில் அவரை நிறுத்த வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவரின் படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை எடுத்துக் காட்டி தங்கள் கருத்துகளை நிரூபிக்கும் போதிலும் அதன் மூலம் அவர்கள் எதார்த்தத்தை சிதைக்கிறார்கள். அம்பேத்கர் கிட்டத்தட்ட ஒரு புரட்சிவாதிதான் என்று நிரூபிக்க முயலும் போக்கு மிகவும் காலாவதியான ஒன்றாகும். அவருடைய வாழ்வும் நடவடிக்கைகளும் இதை நிரூபிப்பதாக இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *