ஜெய்பீம் – யாருக்கான படம்?
ஜெய்பீம் – யாருக்கான படம்?

ஜெய்பீம் – யாருக்கான படம்?

ஜெய்பீம் படம் விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டவையா?சி.பழனி

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இப்படத்தை நான் விமர்சனம் செய்த பொழுது எழுந்த முத்திரை குத்தும் போக்கை தவிர்க்க மேலும் கலை இலக்கியம் பற்றிய புரிதல் தேவை என்பதற்கான என் சிறிய முன்னுரை வாசித்து தெளிவடைந்து பின் இச் சினிமா(ஜெய்பீம் படம்) எந்த வர்க்க நலன் சார்ந்தவை மேலும் இதனை மார்க்சிய பார்வையில் எப்படி புரிந்துக் கொள்வது என்பதனை விரிவாக பேச உள்ளேன்.

என் எழுத்து முற்றும் முடிவு என்றோ நான் சொன்னவை மட்டுமே சரியானவை என்றோ நான் வாதிடவில்லை. ஒரு மார்க்சிய பார்வையில் எப்படி உற்று நோக்குவது இந்த படத்தை என்பதே இந்த எழுத்தின் நோக்கம் தோழமைகளே.

கலை இலக்கியம் என்ன?

கலை  தெய்வீகமானது மர்மமானது புரிந்து கொள்ள முடியாத புதிரானது.  கலைஞன் தெய்வீகப் பிறவி என்று கூறுவது யாவும் வெறும் பொய்மையே.

நிலவுடைமை சமூகத்தில் பல்வேறு பிரிவு மக்கள் தமக்கான கலைகளை தங்கள் வாழ்வியலோடு வளர்த்து வந்தனர் (துன்பவியலை பேசும் ஒப்பாரி பாடலும் கூட்டு உழைப்பில் ஈடுபடும் பொழுது கூட்டு பாட்டுகலும் இதில் அடங்கும்) ஆனால் நிலவுடைமை சமூகம் தன் கட்டுக்கோப்புக்குள் கலைகளை கட்டிக் காத்தது.

ஆனால் இன்றைய வளர்ந்துள்ள இச்சமூகத்தில் கலைகள் பல வடிவங்களாக விரிவடைந்து சில சுதந்திரமான கண்ணோட்டத்தில் வளர்ந்து வந்துள்ளது.

இன்று

கலை அமைப்பு பணி பற்றிய நுட்பங்களை கற்காமலே கலைஞர்கள் கலைகளை படைப்பதும், சாதாரண மக்களும் அவற்றை சுவைப்பதையும் காணலாம் . இதுவே கலையின் இன்றைய தனிச்சிறப்பு ஏனெனில் கலைகள் யாவும் மனித உணர்வுகளின் தொகுப்பாகும் மனித உழைப்பில் இருந்தே கலைகள் தோன்றுகின்றன கலையை சுவைபவனும் (ரசிபவனும்) மனிதனே.

“கலையும் விஞ்ஞானமும் சமூக உழைப்பில் இருந்து தோன்றியவை; இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக உள்ள இருவகைப்பட்ட வடிவங்கள்; இவை இரண்டும் மானிட உழைப்பிலே வேர்கொண்டுள்ளன” என மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சன் கூறுகிறார்.

கலைஞனும் சமூகத்தில் வாழ்வதால் எத்தனை கற்பனையாக கலையை படைத்தாலும் தன்னிச்சையாக படைத்தாலும் அது சமுதாயத்தை ஒட்டியதாக இருப்பதை காணலாம். அக்கலை சமுதாயத்துடன் தொடர்பு கொண்டு சமூகத்தில் காணும் இன்ப துன்ப நிகழ்வுகளை உணர்வுபடுத்தி உழைக்கும் மக்கள் தன் சக்தியை மீண்டும் பெற முயல வேண்டும்.

கலையும் கலைஞனின் சமூக பங்களிப்பும்

கலைஞனுடைய  படைப்பு சமுதாய உணர்வு மட்டத்தில் ஏந் நிலையில் உள்ளது என்பது முக்கியமாகும். சமுதாயத்தில் சமத்துவம் சமூக நீதியை நிலைநாட்டி மனிதரது உழைப்பில் ஆர்வம் காட்டி  மேலும் உழைப்பிற்கு உந்துசக்தியாக உயர்த்தி பிடித்து எல்லா ஒடுக்குமுறைகளையும் தகர்க்கும் போராட்டத்தை தொடங்கி வைக்கும் கலை படைப்பே உயர்ந்த கலை படிப்பாகும்.

ஒரு கலைஞன் கலையை படைக்கும் பொழுது எல்லா உருவகத்திலும் புரட்சியை வேண்டியே நிற்காது,  இருந்தாலும் அவை எந்த வர்க்க நலனில் உள்ளது என்பதை கணக்கில் கொண்டு பார்த்தால், அவர்கள் நோக்கம் ஒடுக்கப்பட்ட வர்க்க நலன் சார்ந்ததா அல்லது ஆளும் வர்க்க நலன் சார்ந்ததா என்று விமர்சகர்கள் தன்னுடைய விமர்சனக் கண்ணோட்டத்தில் இருந்து அணுக வேண்டும்.

கலையும் ரசிகனும்

தனிநபர்கள் சினிமாவின் கதையோடு தமது வாழ்க்கை சம்பவத்தை இனங்கண்டு ஒன்றிவிடலாம். உதாரணமாக காதலில் தோல்வியுற்ற ஒருவர் சில சினிமாக்கள் ஒருதலை காதல், காதல் தோல்வி பேசும் படங்களோடு தன்னுடைய வாழ்க்கையோடு ஒன்றிபோவதை ஏற்று கொள்வதை போன்றே பல்வேறு ஒடுக்குமுறை ஆளாகும் பலரும் தன் மீது இழைக்கப்பட்ட குற்றங்களை சினிமாவில் பார்க்கும் பொழுது அந்த வலிகளை இதன் ஊடாக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளலாம் அதன் வடிகாலாக இதனை காணும் அவருக்கு தீர்வாக என்ன சொல்வது என்பதே கலைஞனின் வெற்றி அடங்கி உள்ளது.

மார்க்சிய ஆசான்கள் பேசும் எதார்த்தம்

 “எதார்த்தம் என்பது உண்மை. Realism என்ற ஆங்கில பதத்தையே எதார்த்தம் என கலை இலக்கிய விமர்சனங்களின் போது தமிழில் பயன்படுத்துவது மரபாகிவிட்டது என்கிறார்”, தோழர் செ. கணேசலிங்கம் அவர்கள்.

எதார்த்தம் என்பது மார்க்ஸ் எங்கெல்ஸின் வழிவந்த வார்த்தையாகும் . எங்கெல்ஸ் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டதை பின்வருமாறு பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் விளக்குகிறார், “யதார்த்த நெறி என்பது நுணுக்க விபரங்களின் உண்மையுடைமை தவிர, வகை மாதிரிக்கு பொருத்தமான பாத்திரங்களை நிலைமைகளுக்கு இணங்க மெய்மை குன்றாத வகையில் சித்தரித்தலாகும்” என்பதே ஏங்கெல்ஸ்  மணிமொழி என்கிறார்.

மேலும்

“யதார்த்தவாதம் சமுதாய முரண்பாடுகளும் அவற்றுக்குக் காரணமான பௌதீக நிலைமைகளுமே வாழ்க்கையின் தன்மைக்குக் காரணம் எனக் கண்டு “துன்பமே இயற்கை ” என்னும் சொல்லை மாற்ற முயலும் உள்ளங்களின் நம்பிக்கைக் குரல்” என்று க.கைலாசபதியே கூறுகிறார்.

இனி சினிமா பற்றி

சினிமாவானது முதலாளித்துவ ஆதிக்கத்தின் விற்பனை பொருளாகவே இன்றும் உள்ளன. இங்கு நிலபிரபுத்துவ சிந்தனைகளும் மதிப்புகளும் இன்றும் ஆதிக்கம் பெற்று இருப்பதால் அவற்றை கலை இலக்கியம் மூலமாக முதலாளித்துவம் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கிறது.

சமுதாய உணர்வை கருத்தில் கொண்டு சமுதாயத்தை மாற்றி அமைக்கக்கூடிய புரட்சிகர சினிமா பிற கலை இலக்கியங்களை ஆக்கி மக்களுக்கு வழங்க கூடிய பொருளாதார வாய்ப்புகள் இன்னும் முற்போக்கு இடதுசாரி சிந்தனையாளர்கள் இன்னும் முன்னேறவில்லை.

இந்த நிலையில் மக்கள் முதலாளித்துவ சந்தையின் பொருட்களை வாங்குவது போலவே முதலாளிகள் வழங்கும் கலை இலக்கியங்களையும்  ரசிக்க வேண்டிய கட்டத்தில்தான் உள்ளனர் என்றால் மிகையாகாது என்பேன்.

டால்ஸ்டாய் புரட்சிகளை ஏற்ற புரட்சிகர எழுத்தாளர் அல்ல ஆயினும் தோழர் லெனின் ரஷ்ய நிலப்பிரபுத்துவக் கொடுமைகளை டால்ஸ்டாயின் எழுத்துக்கள் மூலமே அறிந்தேன் என்று கூறினார் இதுவே நாம் எதிர்பார்க்கும் விமர்சனப் போக்கு இங்கேதான் கலைஞனின் படைப்பு உள்ளது.

கலை இலக்கியம் கருத்தியல் சார்ந்தவை மேற்கட்டுமானத்தை சார்ந்த ஒன்று.  மதம் பற்றி மார்க்ஸ் கூறும் போது “மக்களின் அபினி ” என்று மட்டும் கூறவில்லை “ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு இதயமற்ற உலகின் இதயம்” “ஆத்மா அற்ற நிலையின் ஆத்மா” என்றும் கூறிய பின்னரே “மதம் மக்களின் அபின்” என்று சொன்னார்.

அபினி வெறும் மயக்கம் மட்டும் தருவதல்ல ஒரு பொய்மையான தற்காலிக சந்தோஷத்தையும் தருவதாகும் .இதை ஒழித்து எதார்த்தமான நிரந்தர மகிழ்வு ஏற்படுத்துவதற்கு பொய்மையின் தேவையை விடுவிப்பதற்கேற்ற சூழலை, கடப்பாடுகளை மன நிலைமைகளை நாம் ஏற்படுத்த வேண்டும்.

பெரும்பாலான மக்கள் சினிமாவின் பல்வேறு  கலை வடிவங்களில் மயங்கி விடுகின்றனர். தற்காலிக பொய்மை மகிழ்வில் மயங்கி  ஆர்ப்பரிக்கின்றனர்.

எப்படி கோயில் ஆராதனைகளில் கோயில் பூஜைகளில் தன்னை மறந்து ஏதேதோ வார்த்தைகளை கூறி அங்கே மயங்கிக் கிடப்பது போல சினிமாவில் காட்டப்படும் பல்வேறு கற்பனைகளில் மூழ்கி கிடப்பதும் மதம் கடவுள் போன்ற கற்பனைகளே அன்றி வேறென்ன?.

மீண்டும் நாம் மார்க்சின் கூற்றுப்படி வருவோம் மதம் என்ற அபினி மூலம் மக்களை பிரித்தும் மோதவிட்டும் தற்காலிக திருப்தி பெறுவதிலேயே இன்றும் மதவாதிகளும் ஓட்டு அரசியல்வாதிகளும் குறியாக உள்ளனர். மக்களுக்கு இதை உணர்த்தி நிரந்தர மகிழ்ச்சியுடன் சேர்ந்து நல்வாழ்வு கிடைப்கேற்ற சூழலை கடப்பாடுகளை மன நிலைகளை ஏற்படுத்தி பொய்மைகளிலிருந்து அவர்களை விடுவிக்கும். முயற்சிகளில் மக்களை நாம் ஈடுபடுத்த முயல வேண்டும்.

மார்க்சியம் எல்லாத்துறைகளிலும் குறுகிய நோக்கத்திற்கு விரோதமானது. உலக நாகரிகம் என்னும் வளர்ச்சிப்பாதையில் மார்க்சியம் தோன்றி முன்னேற்றம் அடைகிறது. எல்லா காலங்களிலும் வாழ்ந்து மறைந்த மூளை கூர்மையுடையோர்  மூளைகள் எழுப்பி உள்ள வினாக்களுக்கெல்லாம் விடை கூறுவது மார்க்சியம்- லெனின் ( மார்க்சிய அழகியல்- பேரா. நா. வானமாமலை பக்கம் 6).

இனி இச் சினிமா மீதான என் விமர்சனம் தொடரும்…

நான் இதற்க்கு முன் வைத்த விமர்சனமானது ஒரு கலையை எப்படி ரசிப்பது அதற்கான அளகோல் மற்றும் படம் பெயர் சம்பந்தமான விளக்கம் கொடுத்தேன் இந்த இணையத்தில் காணலாம் (https://ilakkaithedi.com/1666-2/) ஒவ்வொரு நபரும் அக்குறிப்பிட்ட கலையைப் பற்றிய அறிவு அனுபவத்தை முன்வைத்து பேசுவது அவரின் ரசனை மட்டம் அளவில் தன்மையும் வேறுபட்டு இருக்கும் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.       

மேலும் இப்பொழுது எழுதுவதன் நோக்கம் இன்று ஜெய்பீம் படத்தை தூக்கி  நிறுத்தி கொண்டாடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகளின் (என்போரின்) அரசியல் வருமையை கருத்தில் கொண்டு எழுதும் கட்டாயத்தில் உள்ளேன்.

தங்களை மார்க்சியவாதிகளாகவும் முற்போக்குவாதிகளாகவும் காட்டிக் கொள்ளும் இவர்கள் எப்படி இந்த பின் நவீனத்துவ அடையாள அரசியலில் சிக்குண்டு கொண்டனர் என்பதனை தேடுவதே இந்தப் பதிவின் நோக்கம்.

அப்படியெனில் படத்தை பற்றி விமர்சனம் இல்லையா என்பவர்களுக்கு, அந்த இயக்குனர் தான் சொல்லிவிட்டாரே இந்த படம் முழுக்க கற்பனையானதே, படத்தில் பார்வதியின் ரோல் இல்லை, எக்ஸ்சட்ரா எக்ஸ்சட்ரா இப்படி இருக்கும் பொழுது (https://www.facebook.com/watch/?v=906975503267650)

நாம் இதனை பற்றி கேள்வி எழுபுவது ஏன்?

சூரியா பின்னால் போவோம், சூரிய தோழர் என்று ஆர்பரிக்கும் வசனங்களை தாங்கி வரும் இந்த சிவப்பு சித்தாந்தவாதிகள் அடையாள அரசியல் என்ற பின் நவீனத்துவ குப்பைக்குள் மூழ்கி சிக்கி திக்குமுக்காடுவதோடு தனது அணிகளையும் குழப்பி சந்தர்பவாத அரசியலில் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். இவர்கள் 1905க்கு முன் லெனின் சொன்ன அந்த திருத்தல்வாதிகள்தான் என்றால் 1956 க்கு பிறகு ரு.சோ.க.க.யின் 20 காங்கிரசில் கொண்டுவந்த மார்க்சியம் அல்லாத நவீன திருத்தல் வாதத்தை பிடித்துக் கொண்டுள்ள மார்க்சியத்தை மறுக்கும் மார்க்சிய வாதிகளாக உள்ள போது நாம் பேசுவது அவர்கள் புரிந்துக் கொள்வது கடினமே. அதற்காகத்தான் இவர்கள் சூரியா படத்தை ஆதரிப்பதும் இவர்கள் நிலைப்பாட்டை விமர்சிப்போரை எல்லோரையும் இவர்கள் முத்திரை குத்தும் பொழுது இவர்களின் அரசியல் கேள்விக் குறியாகிறது..

நான் தொடர்ந்து கேட்க்கும் கேள்விகளுக்கு அந்த தோழர்கள் பதிலளிக்காமலே கடந்து செல்லும் மெத்தன போக்கு என்ன எப்படி என்பதை விவாதிக்க வேண்டி உள்ளது.

முதலாளிதுவ வாதிகள் கூட copy right, royalty என்னும் பொழுது யாரின் கதையை பேசினாரோ அவருக்கான பங்களிப்பு செய்யும் பொழுது, இங்கே நீங்கள் பேசும் புரட்சியாளரின் பங்களிப்பு என்ன?. சாதி வாதிகளை மத வாதிகளையும் படம் தோலுரித்து காட்டி விட்டதாக பேசும் நீங்கள் ஏன் இவரின் கதையில் சொல்லப் பட்டுள்ளது போல் அந்த அம்மாவின் வீட்டை காட்டி இருக்கலாமே. அங்கே இவரின் முற்போக்கு எங்கே போய் ஒழிந்துக்கொண்டது? இப்படி கேள்விகள் அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் அவை சாரம்சத்தில் இவர்களின் பிழைப்புவாதத்தை சுட்டிக் காட்டும் அவ்வளுவே ஆனால் நமது நோக்கம் இன்று இந்த நிலைக்கு இந்த சிவப்பு சிந்தாந்தவாதிகளாக காட்டிக் கொள்ளும் இவர்களின் நிலைக்கு காரணம் என்ன ஏன் என்பதே தோழமைகளே.

ஜெய்பீம் பேசியவை வர்க்க அரசியலா ? அடையாள அரசியலா?

ஜெய்பீம் ஏதோ புரட்சி கோட்பாட்டை தூக்கி நிறுதியதாக நினைக்கும் ஒவ்வொருவரும் வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் படத்தை அணுகும் படிக் கேட்டுக் கொள்கிறேன்.

படம் என்பது உண்மை சம்பவத்தின் அடிப்படையாகக் கொண்டது என்று கூறுவதோடு, படம்  ஒடுக்குமுறைக்கு எதிரான படம் என்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை படமாக்கி உள்ளதாக டைரக்டர் கூறுகிறார் உண்மையில் படத்தைப்பற்றி அதன் தன்மை பற்றி அதன் பின்புலம் பற்றி தேடுவதே எனது இந்த பதிவின் நோக்கம்.

28 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் படம் எடுக்கப்பட்டதாக சொல்லுகின்றனர்.

படத்தை  முதல் முதலில் பார்த்து முதல்வர் ஸ்டாலின் படத்தின் மீதான தனது கருத்தை தெரிவிக்கிறார். உண்மை சம்பவங்கள் என்ற படம் கதை மிக கனமாக உள்ளது. ஏனென்றால் நான் அன்று மிசா காலத்தில் அனுபவித்த அதே போல் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் மீது போலீசின் நடவடிக்கைகள் உள்ளது என்கின்றார்.

அப்படியெனில் இந்த ஒடுக்குமுறைக்கும் இந்த வன்மமான அந்த  ஒடுக்குமுறையை யார் கட்டவிழ்த்து உள்ளனர். படத்தை படமாக்கிய டைரக்டர் என்ன சொல்லுகிறார் கேளுங்கள்? இது உண்மை தன்மையை புரிந்து கொள்ளவும் உதவும்.

அதிகாரத்துக்கு எதிராகப் பேசி உள்ளேன் என்கிறார் இங்கே அதிகாரம் படைத்தவர்கள் யார்? யார் கையில் அதிகாரம் உள்ளது?

சாதி ரீதியாக மக்களை பிரித்து வைத்துள்ளதும், ஜாதி கட்சிகளை ஊட்டி வளர்ப்பதும் யார்? இங்கு நடக்கும் ஒவ்வொரு வன்முறைக்கும் அடுக்கு முறைக்கும் தோல் கொடுப்பது யார்?

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மருந்தாக இந்த படம் உள்ளதா? அப்படி என்றால் இவை உண்மையை அடிப்படையாக கொண்ட படம் என்றால் ஏன் வரலாற்று உண்மையை திரிக்கிறது?

1989 ம் ஆண்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது அவர்களுக்கு தெரியாதா?  ராமதாஸ் போன்றோர் தன்னை கம்யூனிஸ்டுகளாகவும் நக்சல்பாரிகளாவும்  அறிவித்துக் கொண்டு  ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாக தன்னை அறிவித்துக் கொண்டு இருந்த காலகட்டம் அவை.

அப்போது  மக்களிடையே ஜாதி வன்மத்தை  வளர்த்து விடாத  காலமாகும். காவல்துறையால்  ராஜாகண்ணு கொலை செய்யப்பட்டதை எதிர்த்து அனைத்து கட்சிகளோடு பாட்டாளி மக்கள் கட்சியும் அன்று போராடியது என்பதை இங்கே எதிர்நிலையில் கொண்டு நிறுத்தும் படத்தின் நோக்கம் என்ன?

உண்மை சம்பவத்தை பேசுவதாக கூறும் டைரக்டர் பேசுவது இங்கே என்ன?

அந்த பாதிக்கப்பட்ட பார்வதி கொடுத்துள்ள தகவல் அந்த ஊர் மக்கள்  கொடுத்த ஆதரவும் அவர்களுக்காக போராடியதையும் சுட்டிக்காட்டியுள்ளதை இந்த படம் தலைகீழாக அதே மக்கள் அவர்களுக்கு எதிராக நிற்பதாகவும் அவர்களை வன்மமாக தாக்குவதாகவும் காட்டியுள்ளது மேலும் படத்தில் காட்டியுள்ளது போல் அந்த ஊரில் நடந்த திருட்டு அல்ல மேலும் போலீஸ் கொலை செய்த நடந்த சம்பவங்கள் வேறானவை!

டைரக்டர் தன்னுடைய கலை பார்வையில் படத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் சிந்தித்து அதனை படமாக்கி உள்ளதாக கூறுகின்றார் அப்படி எனும் பொழுது தன்னுடைய கோர்ட் சீனில் ஒவ்வொரு படத்தை வைப்பதையும் அவர்களின் பின்னணி அறிந்து  சிந்தித்து செயல்பட்டதாக கூறும் அவர் தான், தெறியாமல் காலண்டரை தவறுதலாக வைத்துவிட்டார் என்றே வாதிட்டாலும்,  அந்த தாக்குதலுக்கு உள்ளான ஒடுக்கப்பட்ட மக்களோடு போராடிய மக்களையே  ஜாதிவாதிகளாக ஒடுக்குபவர்களா அடையாளப்படுத்தப்படுத்தும் இவரின் உண்மை தன்மை இங்கே தான் நிர்வாணமாகி போனது.

தவறான கருத்தை ஏற்படுத்திய இவர் தன் மார்கெட் தேவைக்காக பல பூசல்களை உருவாக்கினார் அவை அவரின் selling point of view என்பதா!! Marketing technique என்பதா நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

தான் வருத்தப்பட்டு தனது தவறை திருத்திக் கொள்ள முன்வரவில்லை அதிலிருந்து அவருடைய உள்நோக்கம் தெளிவாகிறது.

ஜெய்பீம் – யாருக்கான படம்?

தோற்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் திரைப்படமாக இருந்தாலும் உள்ளடக்கத்தில் ஜெய்பீம் திரைப்படமானது ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான படமாகத்தான் வெளிவந்திருக்கிறது. இந்த சட்ட அமைப்பிற்குள், இந்த போலீசு அமைப்பிற்குள் சில ‘நல்ல” மனிதர்கள் இருந்து விடுவதாலேயே நீதி என்பது ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் வர்க்கத்திற்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தி விடுகிறது. மக்களின் போராட்டத்தை சட்டப்போராட்டத்திற்கு பின்தொடர சொல்கிறது.

சட்டத்தை நான் ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறேன் என்கிறார் சந்துருவாக வரும் நடிகர் சூர்யா.

படத்தில் ராஜாக்கண்ணுவாக நடிக்காமல் வக்கீல் சந்துருவாக சூர்யா நடிப்பது என்பதே கதை ராஜாக்கண்ணுவை பற்றியதோ அல்லது இருளர் சமூகத்தை பற்றியதோ அல்ல என்பதையும் சந்துரு என்ற நேர்மையான வழக்கறிஞர் பற்றியது என்னும் பொழுது பேச வந்தவை ஒன்று பேசியது ஒன்றாக உள்ளது.

இன்று நீதியரசர் சந்துருவை தூக்கி நிறுத்தும் பலர் தெரிந்துக் கொள்ள வேண்டிய வரலாற்று நிகழ்வு பா.ம.க நிறுவனர் ராமதாசுடன் அவர்களது சமூகம் சார்ந்து நடந்த நிகழ்ச்சிகளில் மேடையேறவும் தயங்கியவரல்ல.

பேரா. கல்யாணியாக நடித்திருப்பவர் பேரா. காளிஸ்வரன். இருவருமே என்ஜிஓ க்களில் சில பத்தாண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருபவர்கள் என்பது ஒருபுறமிருக்க, ராமதாசின் ஆரம்ப கால அரசியல் பிரவேசத்தின்போது அவருக்கு புரட்சியாளர் பட்டம் கொடுத்த நிறப்பிரிகை கும்பலில் இருந்தவர்களில் கல்யாணியும் ஒருவர். இன்னும் சிலரில் விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும், பேரா அ.மார்க்சும் அடங்குவர்.

சந்துரு இந்தப்படம் தொடர்பாக நிறைய நேர்காணல்களை யூடியூப் சேனல்களுக்கு தந்து கொண்டிருக்கிறார்.

படம் குறிப்பிட்ட பகுதி அந்த குறிப்பிட்ட மக்களை போலீஸ் அரசு ஒடுக்குவதையும்  அவை காலம் காலமாக நடைபெற்று வருவதாக காட்டும் படம், அதை தட்டிக் கேட்க்க சந்துரு போன்ற நேர்மையான வக்கீலை காட்டும் பொழுது, உண்மையில் கம்யூனிஸ்ட் கோவிந்தன் புறக்கணிக்க பட்டத்தையும், ஒரு கம்யூனிஸ்ட் போராட்டம், அரசியல் போராட்டமாக இல்லாமல் சட்டவாத போரட்டமாக சுருங்கியது போலவே, ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தை (சட்டவாத போராட்டத்தில் பின்புலமாக இருந்தவர்கள்) ஜாதி போராட்டமாக பட குழுவினர் காட்டியதில் இருந்தே அவர்களின் உள் நோக்கம் என்னவென்று புரிந்துகொள்ள முடியாத பலர், வர்க்க போராட்டம் என்பது வர்க்க எதிரிகளுக்கு எதிரானதே இங்கோ   சாதிகளுக்குள்ளே தீ மூட்டி உள்ள மர்மம் என்னே அதே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி அல்லவோ?

உண்மையில் முக்கிய முரண் இங்கே என்ன?  ஒடுக்கும் அரசு எந்திரமா? அதே அரசால் பாராட்டி சீராட்டி வளர விடும் ஜாதியா?

சொல்லுங்கள்?

படம் அப்பட்டமாக மக்கள் பிரச்சினையை கையில் எடுத்தது போல் காட்டிக் கொண்டாலும் அதன் நுண் அரசியல் மக்கள் பிரச்சினையை பேசுவது போல் ஜாதி துவேசத்தை மக்களிடையே விதைத்து அறுவடை செய்துக் கொண்டுள்ளது  அவைதானே அவர்கள் எதிர்பார்த்தது? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் சிந்திப்பீர்களா?

இவைதான் ஜெய்பீம் சாதித்தவை, வர்க்க பேதாம் பேச வேண்டிய படம் சாதிகளை முரணாக அதன் குறியீட்டால் காண்பித்து கதை களத்தில் எதிரான அரசு எந்திரத்தை எதிர்த்து போராடாமல் கதை களத்தில் இல்லாத சாதிகளுக்கிடையில் சண்டை மூட்டியது எவ்வளவு திறன் வாய்ந்த செயல் என்பதனை புரிந்துகொள்ள வேண்டாமோ?

மற்றவை நேரத்தை வீண்னடிக்கும் விவாதம்.

பின் குறிப்பு:- அடையாள அரசியல் இப்படத்தில் எப்படி கோலோச்சியது என்பதனை நான் இங்கே பேசவில்லை. ஏனெனில் படத்தின் பெயரிலே அடையாள அரசியலை புகுத்தி விட்டபின் அதனை தேட ஒன்றும் இல்லை.

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ftamilneyantove%2Fposts%2F6807349149339104&show_text=true&width=500″ width=”500″ height=”233″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *