கியூபாவில் 1959 ல் நடைபெற்றது ஒரு புரட்சி என்றும், சே வும் பிடலும் போராளிகள் அல்லது கம்யூனிஸ்டுகள் என்றும் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 1961 ல் நடைபெற்ற பே ஆஃப் பிக் இன்வேசன் நிகழ்வுக்கு பின் தான் தன்னை ஒரு கம்யூனிஸ்டு என்று பிடல் சொல்லிக் கொண்டார். உண்மையில் கடைசி வரை அவர் ஓரளவு பின்பற்றியது கியூப தேசிய தந்தையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சாகச வீரனுமான ஜோஸ் மார்த்தியைத்தான். எனவே இல்லாத கம்யூனிச பட்டத்தை பிடல் மீது சுமத்தி அதில் திருத்தல் வாதம் இருக்கிறதா என பேனை பெருமாளாக்கும் வேளையில் ஈடுபடுமளவுக்கு போகின்றவர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
ஒருவர் தன்னை கம்யூனிஸ்டு என்று சொல்வதே அவர் கம்யூனிஸ்டு என்பதற்கான சான்று என்றால் நிச்சயம் பிடல் மட்டுமல்ல தா.பா கூட கம்யூனிஸ்டுதான். மருத்துவர் அய்யா, கலைஞர்,.. நமது சோ கால்டுகள் வரையிலும். ஆனால் எதார்த்தம் என்பது உங்களது திசைவழி மற்றும் கோட்பாடு நடைமுறை இவற்றை பரிசீலித்து பின் வரையறுக்க சொல்கிறது. அப்படி பரிசீலித்தால் ஜோஸ் மார்த்தி மட்டுமில்லாது 1946 ல் மெக்சிகோ போய் தஞ்சமடைந்த பிடல் போன்றோரை ஆக்ரமித்த கோட்பாடு என்பது ஜார்ஜிசம் தான். அது என்ன ஜார்ஜிசம் என்று கேட்பவர்களுக்கு மார்க்சின் ஒரு எடுகோளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முதலாளித்துவ பகோடபத்தின் கடைசி புகழிடமே ஜார்ஜிசம் என்பார் மார்க்ஸ்.
மார்க்சின் சம காலத்தில் வாழ்ந்த அமெரிக்க அரசியல் பொருளாதார அறிஞரும், தத்துவவியலாளருமான ஹென்ரி ஜார்ஜின் இந்த கோட்பாடு இயற்கை மூலதனமான நிலத்தின் மீதான வரியை மாத்திரம் வசூலிக்கும் ஒற்றை வரிமுறையை கோரியது. அதாவது எல்லா உற்பத்தியும் இயற்கையை சார்ந்து இருப்பதால் இயற்கை மீது அதீத வரி வசூலிப்பதன் மூலம் மோனோபோலியை தவிர்க்கலாம் மீறி வசூலாகும் வரி சமூகத்திற்கு பயன்படும் என்றெல்லாம் சொன்னார். லெனின் கட்சி கட்டும் காலத்தில் இவர்களையும் எதிர்த்து போராட வேண்டியதாயிற்று. இந்த தத்துவம் இந்த வரிமுறையின் காரணமாக சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் என்று அடித்து விட்டார்கள். இதில் இரண்டு பிரச்சினைகள் இருந்தன. ஒன்று அரசு பற்றிய புரிதல் குறைபாடு. அரசு வடிவம் ஏதேச்சதிகாரமாக மாற வேண்டிய கட்டாயத்தை இது கொண்டிருந்த்து. இன்னொன்று பெருவீத உற்பத்திக்கு இந்த பொருளாதார அமைப்பு எதிரானது. இன்று இதன் வளர்ச்சி முறை 1977 க்கு பிறகு பொதுமக்களுக்கான செலவு மீது வரி விதிப்பது என மாறி நம்மூர் டோல்கேட் வரிவசூல் வடிவில் வந்து நிற்கிறது.
ஜார்ஜிசத்தின் முன்னோடிகள் அமெரிக்க விடுதலைப் போராட்ட காலத்திலேயே தோன்றி விட்டார்கள். லிபரட்டேரியன்கள் என்று குறிப்பிடும் இவர்களை பிரெஞ்சு புரட்சி காலத்தில் ஜாக்கோபியன்கள் நாடு கடத்தினர். இந்த லிபரட்டேரியன்களின் ஆதி கர்தாக்களில் ஒருவர் தான் தாமஸ் ஜெபர்சன். பிற்காலத்தில் இவர்களின் பிரசங்கங்கள் மூலம் தான் ஜெர்மானியில் நாசிக்கட்சியும் உருவானது. கம்யூனிசத்திற்கு மாறிச்செல்லும் போக்கினை இது தடுப்பதாக சொன்னார் மார்க்ஸ். ஆனால் மார்க்சிசம் மிகவும் வறட்சியாக இருப்பதாக சொன்னார் ஜார்ஜ். டால்ஸ்டாய் போன்றவர்கள் கூட ஜார்ஜிசத்தை ஆதரித்தார்கள். தாமஸ் பெய்ன் இவர்களது முன்னோடி. பெர்னாட்சாவும் ஐன்ஸ்டீனும் கூட ஜார்ஜை பாராட்டி யிருக்கிறார்கள். ஜார்ஜின் வளர்ச்சியும் வறுமையும் நூல் மிகவும் புகழ்பெற்றது.
**
1930 களின் இறுதியில் ட்ராட்ஸ்கி மெக்சிகோ வருகிறார். அவர் அப்படி கடைசியில் தஞ்சமடைவதற்கான புறச்சூழல் அப்போது அங்கு நிலவியது. காரணம் மார்க்சிய எதிர்ப்பாளர்களை சேர்க்கும் மையமாக அதனை ராக்பெல்லர் பவுண்டேசன் மாற்றியிருந்த்து. ப்ராங்பர்ட் பள்ளி உள்ளிட்ட இறையியல் விடுதலை, சுற்றுச்சூழல் மார்க்சியம், இன சாதி ஒழிப்பு மார்க்சியம் .. என கலர் கலரான வெபரின் வாரிசுகள் கூட அமர்ந்திருந்தனர். வெபர் குறித்த கழுவி ஊத்தல்களை லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும் நூலில் பார்க்கலாம். ஆக்சிஜனை கண்டறிந்த ஜோசப் ப்ரீட்ஸ்லி போன்ற அறிவியலாளர்களும் இந்த லிபரட்டேரியன் ஐடியாலஜிக்கு தப்பவில்லை.
மெக்சிகோ என்பது முன்னர் பலமுறை நாம் பார்த்தது போல அமெரிக்க முதலாளிகளின் பிற்காலத்தில் உலக முதலாளிகளின் சோதனைச் சாலை என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அது முதலாளித்துவ நெருக்கடிகளை சமாளிப்பதற்கான ஆய்வுகளாக இருப்பதையும் எவரும் புரிந்துகொள்ள முடியும். இன்று பேசப்படும் கள்ளப்பணம் அல்லது கருப்பு சந்தை என்பது கூட முதலாளித்துவம் விரும்பியே பிற்காலத்தில் தன்னோடு சேர்த்து பயணிப்பது தான். அதாவது தனக்கான ஷாக் அப்சர்வராக இந்த நிழல் பொருளாதாரத்தை மூலதனத்தின் உபரி வழிநடத்திக் கொண்டு தான் இருக்கிறது. அப்படி அவர்கள் ஊறுருவ விரும்பிய ருசிய, சீன பொருளாதாரத்திற்காக நடத்திய பொம்மை புரட்சிதான் காஸ்ட்ரோவும் சேவும் 1959 ல் நடத்திய பாடிஸ்டாவுக்கெதிரான ஆயுதம் தாங்கிய எழுச்சி.
ப்ராங்பர்ட் பள்ளிகளின் மூலாதாரம் மெக்சிகோவில் இருப்பதால் தான் கம்யூனிசத்தில் இருந்து விலகியோடும் மனிதர்களும், சாகச நாயகர்களும் இங்கு வந்து ஒன்று கலப்பதை எளிதில் இனம் காண முடியும். அது தென்னமெரிக்க நாடுகளின் நாயகர்களும், ருசிய சோசலிச புரட்சியின் எதிர் புரட்சியாளர்களும், பிற மூன்றாம் உலக விடுதலைப் போராட்ட வீர்ரகளும் கைகுலுக்கி திட்டமிடும் இடமாக மாறியது. திட்டங்களையும் கோட்பாடுகளையும் பரிசோதித்து பார்க்க பிரிந்து கிடந்த லத்தீன் அமெரிக்க சிறு நாடுகளே போதுமானதாக இருந்த்து. அதனால் தான் அவர்களே அமர்த்திய செல்லப்பிள்ளை பாடிஸ்டாவுக்கு எதிராக கோட்பாடுகளை மடலாயங்கள் படித்த கல்விக்கூடங்கள் வழியாக பலருக்கும் சொல்லி தேற்றிப் பார்த்தார்கள். அதில் ஓரளவு நடுத்தர வர்க்க பின்னணி கொண்ட பிடல் தெரிவு செய்யப்பட்டார்.
முதலாளிகள் இப்படி ஒரு போராளிக் குழுவை உருவாக்கும் போதே அதற்குள் தங்களது கையாள் ஒருவனை மாற்று சித்தாந்த தளத்தில் அனுப்பி வைப்பார்கள். அப்படி ராக்பெல்லர் பவுண்டேசனுக்கு சிக்கிய நபர் தான் சே குவேரா. அதனால் இப்போது ஐம்பதாண்டுகளாக சே குறித்த பிம்பங்களை கட்டியமைக்கும் ஹாலிவுட்டின் நோக்கம் வெளிப்படையானது தான். அதற்கு புணுகுப் பூனையின் எச்சத்தை நுகர வேண்டிய தேவை ஏதுமில்லை. பின்னாட்களில் பொலிவியாவுக்கு புரட்சி செய்ய கிளம்பிய சே யின் கனவு அப்போது பொலிவராக இருந்தாலும், ராக்பெல்லருக்கோ ட்ராட்ஸ்கியின் ஓரே நேரத்தில் உலகப் புரட்சி என்ற கோட்பாட்டை பரிசோதிப்பதற்கான நபராக தெரிந்தார். அதில் நேரிட்ட சில்லறை முரண்பாட்டினால் சே கொல்லப்படவில்லை. மாறாக அந்த சோதனையின் முடிவுகள் கிடைத்து விட்டதால் பொம்மையை கழுத்தை வெட்டியது அமெரிக்க ஏகாதிபத்தியம். இதுதான் போராளி சே இன் கதை. இதில் அவர் மாவோ உடன் உடன்பட்ட தருணமெல்லாம் காமெடியின் சீரியசான பக்கம்.
**
ஜார்ஜிசம் அமலாவதை கணிக்க இரண்டு விசயங்களே போதுமானவை. ஒன்று அது பொருளுற்பத்தியில் தன்னிறைவை நோக்கி கொண்டு செல்லாது. அது விவசாய உற்பத்தி முறையோ அல்லது நகரம் சார்ந்த உற்பத்தி முறையோ இதுதான் சாத்தியம். மாறாக சேவைத் துறையை வளர்த்தெடுக்கும். காரணம் நிலத்தின் மீதான வரி தொழில்முனைவோரை பின்னுக்கிழுத்து பெருவீத உற்பத்தியை கட்டுப்படுத்தும். கடைசியில் பெருவீத உற்பத்தியோ அல்லது பொருளுற்பத்தியோ அரசின் ஏகபோகமாக மாறினால் தான் நாடு பிழைக்கும். இப்படி குவியும் அதிகாரம் அரசினை ஏதேச்சதிகார போக்கிற்கு கொண்டு போகும். கியூபாவிலும் இதுதான் நடைபெற்றது. சர்க்கரை விளையும் பூமியில் சில பல விவசாய முயற்சிகளும் கூட தன்னிறைவை எட்ட வேண்டிய தேவை ருசிய வீழ்ச்சிக்கு பிறகு அதாவது அவர்களுக்கு ஆதரவு கிட்டாத போதுதான் ஏற்பட்டது. அதுதான் வீட்டுத்தோட்டம் போன்ற சோதனை முயற்சிகள். பிற்காலத்தில் மருத்துவர்கள் தாதிகள் போன்றோரை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்த்து ஜார்ஜிசத்தின் தோல்வி யால் கியூபா.
சர்க்கரை ஏற்றுமதியின் மூலம் பிற தேவைகளை ஈட்டிய கியூபாவுக்கு அது ருசிய தொங்கு சதை நாடாக இருந்த வரை பிரச்சினையில்லை. பிறகு கையேந்த வேண்டிய நிலைமை. இன்னொன்று சேவைத் துறையின் வளர்ச்சியை சாத்தியமாக்கியது எதுவெனில் வருமான வரி உழைப்பு மீது கிடையாது. எனவே கியூபா போன்ற நாடுகளில் தொழில் துவங்குவதை விட வேலைக்கு போவது தான் உத்தம்மான வேலை என்பதால் தான் அங்கு மருத்துவர்கள், தாதிகள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் எல்லாம் சாத்தியமாயின. இதனைக் கொண்டு உலக அரசியல் மற்றும் நட்புறவு சரியாக சொன்னால் ஊடாடி உளவு பார்ப்பதற்கு மருந்து மருத்துவர்கள் சாத்தியமானால் படைகள் என உலகமெல்லாம் அனுப்பியபடி இருந்தார் காஸ்ட்ரோ.
இப்போது எல்லோரும் சொல்கிறார்கள். கியூபாவின் உழைக்கும் மக்களில் 60 சதவீதம் பெண்கள் என்று. ஆனால் 1994 காட் ஒப்பந்த காலத்தில் காஸ்ட்ரோ சொன்ன ஒரு வாக்கியம் நினைவிற்கு வருகிறது. ’ஆம். எங்களின் விலைமாது பெண்கள் கூட குறைந்தபட்சம் ஒரு பட்டதாரியாகத்தான் இருப்பார்..’ இதனை காஸ்ட்ரோ சொன்னது ஒரு கழிவிரக்க சூழலில் இருந்து. ஆனால் மூன்றாம் உலக நாடுகளும் சரி அறிவுஜீவிகள் என சொல்லிக் கொள்வோரும் சரி இதனை பெருமித உணர்வாக மடைமாற்றிக் காட்டினார்கள். விலைமாதர்களை தோற்றுவிக்கும் தேவை ஒரு போலி சோசலிச நாட்டில் கூட ஏற்படாது. ஆனால் ஜார்ஜிசத்தின் தோல்வி கியூபாவை ஒரு கத்தோலிக்க ஆர்ச் பிஷப் இன் கட்டுப்பாட்டில் வாழும் பங்கு கிராமத்தின் பொருளாதாரம் போல மாற்றியிருந்த்து.
கியூபாவின் சாதனைகளை பட்டியலிட்டு நமது சோ கால்டு கம்யூனிஸ்டுகள் ஒரு போலி சோசலிசம் அல்லது குட்டிமுதலாளித்துவ சோசலிசம் என்று கூட சொல்லக் கூடாதா என்று ஏங்குகிறார்கள். இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பும் குழந்தையின் நிலைமையில் இருந்தால் உங்களது கூற்றை ஏற்கலாம் நண்பர்களே.. சாதனைகளை ஆர்ச் பிஷப் கள் அவ்வளவு ஏன் மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் கூட செய்தால் அவரை கம்யூனிஸ்டு என்று சொல்லி விடுவதா.. ஜார்ஜிசம் என்பது அமெரிக்கா என்ற மதுக்கோப்பையின் மீது தூவப்பட்ட ஐஸ் கட்டி. அதே ஐஸ் கட்டியைத்தான் நீங்கள் சொல்லும் திரிபுவாதமும் நரோத்னியமும் இயற்கை பழச்சாறாக வைத்து அதன் மீது கொட்டி குழந்தைக்கு தருகிறது. இரண்டும் வேறு வேறு என்றாலும் நீராலும் இணைகின்றீர்கள் நீவிர்.
ஜார்ஜிசத்தின் கொடுமையினால் மக்களின் அடிமைத்தன உணர்வு அதிகரிப்பதும், ஜனநாயக உணர்வு மழுங்குவதும் வளர்ச்சியை காட்டி கம்யூனிச பாதுகாப்பு என்ற பெயரில் தப்பிக்க முடியும் என்பதை ராக்பெல்லர் பவுண்டேசன் நடத்தி காட்டியிருக்கிறது. பாசிசம் போன்ற தனக்கே ஆப்பு வைக்கும் முயற்சிகளை விட இத்தகைய குட்டி முதலாளித்துவ சிந்தனை முறைகளே தனக்கு பாதுகாப்பு என்பதையும் தெரிந்து கொண்டு விட்டார்கள். தென்னமெரிக்க கண்டத்து நாடுகளின் எதிர்ப்புணர்வுகளின் குவிமையமாக கியூபாவை மாற்றுவதில் பிடலுக்கு உடன் நின்றவர்களும் மேற்படி முதலாளிகளின் கும்பல் தான். உலகப் புரட்சியா ஒரு நாட்டில் புரட்சியா என்ற தாய விளையாட்டில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, குறிப்பாக மாபெரும் விவாதம் முன்னுக்கு வந்த தருணத்தில் இருந்து அமெரிக்கா ஆடுவதற்கு ஒரு முதலாளித்துவ உலக கண்ணோட்டம் இருந்தாலும், இந்த சோதனையின் மாடுல்கள் எல்லாமுமே வெபர், ட்ராட்ஸ்கி, ஜார்ஜ் போன்ற பல நபர்களது பங்களிப்பில் இருந்தும் வருகிறது. ஜார்ஜிசம் சமூக விடுதலையை அரசியல் விடுதலை உடன் இணைத்து இருப்பதாக சொல்வதால் அது படு கவர்ச்சியாக புரட்சியாளர்களை குறிப்பாக நடுத்தர வர்க்க பின்னணி கொண்ட கட்சிகளை கவிழ்த்தும் விடுகிறது.
**
568 முறை சாவிலிருந்து தப்பியவர், நேரடியாக 1961 போரில் தலைமை ஏற்றவர், அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் முழங்கியவர் என்றெல்லாம் நாயக பிம்பங்களை இப்போது ஜெயாவுக்கு எழுப்புவது போல பிடலுக்கும் எழுப்பியவர்கள் சாட்சாத் உலக தா பாண்டியன் கள் தான். ஆனால் இதெல்லாம் சாமான்ய மக்களின் அரசியல் ஒருங்கிணைப்புக்கு எதிராக நிற்பதை இந்த அறிஞர் பெருமக்கள் கண்டுகொள்ளவேயில்லை. காரணம் அந்த அரசியல் அவர்களுக்கு ஊறுகாய். இவர்களுக்குள்ளும் இன்னொரு காஸ்ட்ரோ வாய்ப்பு கிடைக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
இளமையில் கூச்ச சுபாவம் உள்ள காஸ்ட்ரோ பின்னாட்களில் 1956 நீதிமன்ற உரையில் வரலாறு எங்களை விடுதலை செய்யும் என்றாரே அந்த அளவு பேச்சாளராகி விட்டார் என்றார்கள். அந்த உரையிலேயே காஸ்ட்ரோ தெளிவாக ஜார்ஜிசத்தை விளக்கியிருப்பார், ஆனால் பெயரை மாத்திரம் மறைத்து விட்டு. போர் வீரனில் நல்ல போர் வீரனை காட்டி சிவில் சமூகத்தின் உரிமைக்காக பாடுபடும் போர் வீரனை உருவாக்க விரும்புவார். கூலி உயர்வு, வாடகை குறைப்பு என பலவற்றை சொல்லியிருப்பார். இதெல்லாம் முதலாளித்துவம் அரசு குறித்த மாற்றுக் கருத்துக்கள் பரவ எடுத்த முயற்சிகள். மறுபுறம் சோதனை சாலைகளில் முதலாளித்துவத்தை காட்டாத ஒரு தொழில்மயமாவதை எதிர்பார்த்தார்கள் இந்த நரோத்னிக் வகையறாக்கள்.
பாடிஸ்டா நீதிமன்ற உரையில் நடுத்தர வர்க்க சாகச அரசியல் கொடி கட்டிப் பறக்கும். பின்னாட்களில் நக்சல்பாரியில் கேட்ட அதே குரலை காஸ்ட்ரோவிடமும் கேட்க முடியும். நாட்டுக்காக உயிர் துறப்பதென்பது வாழ்வதற்கு சம்மானது என்று தியாகத்திற்கு மனதை தயார்படுத்திய காஸ்ட்ரோ வகையறாக்கள் எல்லாவற்றையும் ஒளி இருள், நல்ல ராணுவம் கெட்ட ராணுவம், நல்ல நீதிபதி … என எதிர்மறையாக பிரித்து மதிப்பிட்டனர். வரலாறு எங்களை விடுதலை செய்யும் என்ற கடைசி வாக்கியம் கூட என்னை விடுவிக்காமல் சிறையில் இருக்கும் என் தோழர்களோடு சேர்த்து விடுங்கள் என்று சொல்லியிருக்கும். கடைசி நேர தவிப்பு மனித குமாரனுக்கு வந்த்தை விட தெளிவாக வைக்க காஸ்ட்ரோவை பின்னிருந்து இயக்கியது எது ? என்பது தான் முக்கியமானது.
638 முறை கொல்ல பார்த்த அமெரிக்கா.. கதையை கேட்டால் இப்போது சபாநாயகர் தனபாலின் சாதியை முன்வைத்து அவரை ஏன் ஜெயல்லிதா உணவு அமைச்சராக போட்டார் அதற்கு எப்படி அவர் வீட்டில் பிற அதிமுக எம்எல்ஏ க்கள் சாப்பிட வர மாட்டார்கள் என்ற நிலமை காரணமாக இருந்த்து என்பதை கூறும் கதைகள் குறிப்பாக வாட்ஸ் அப் மூலம் பரவும் கதைகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது. நகரத்திற்காக மனிதர்களை பயிற்றுவிக்கிறார்கள், பண்ணை மனிதர்களாக வளர பயிற்றுவிக்க வேண்டும் என பண்ணையடிமைகள் நிறைந்த நாட்டில் பேசும் காஸ்ட்ரோவின் அரசியல் பண்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்டில் காதலி கூட கொல்ல அனுப்ப்பட்டதாக கதை சொல்லித்தானே ஆக வேண்டும். பதி விரதைகள் லத்தீனுக்கு மாத்திரம் விலக்கமா என்ன?
அதெல்லாமிருக்க ஒரு மனிதனை கொல்வதன் மூலம் ஒரு கோட்பாடு அல்லது சித்தாந்தம் காணாமல் போய் விடும் என சாரு மஜூம்தாரின் கள்ளக்குழந்தைகள் எதிர்பார்த்து இலவம் பஞ்சு கதையாக காத்திருக்கலாம். ஆனால் முதலாளிகளுக்கு தெரியாதா என்ன? அவர்களே உண்டாக்கி உலவ விட்ட கதைதான் இது. இல்லை சர்ஜிகல் ட்ரையலை சரியாக நடத்த தெரிந்த அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஒரு நாட்டையே இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் கபளீகரம் செய்ய இயலும் காலத்தில், ஒரு தனி மனிதர் பிடிபடுவது இயலாமல் போவது சாத்தியமா?
**
கியூபாவில் இருந்து வெளியேறிவர்கள் எல்லோரும் மார்க்சிய எதிரிகள் எல்லாம் அல்ல. இன்னும் சொல்லப் போனால் மூன்று பத்தாண்டுகளில் சில மா லெ குழுக்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடி விட்டனர். ஜார்ஜிசம் கணக்கில் கொள்ளாத கல்வியளித்தல் என்பது தோற்றுவிக்கும் இன்றைய உலக சந்தை பலரையும் வட அமெரிக்கா நோக்கி தள்ளியது. தொன்னூறுகளுக்கு பிறகு கெடுபிடிகளை காஸ்ட்ரோ தளர்த்திய பிறகு அனைவரும் வரத் துவங்கினர். ஆயினும் இதன் சதவீதம் 20 ஐ தாண்டவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
2008 க்கு பிறகல்ல, அதற்கு முன்னரே கியூபா என்ற சோதனைச் சாலையின் தேவை அமெரிக்காவுக்கு குறைந்து போனதால் பிடல் வாழ்விழந்த மதபோதகரின் நிலைமைக்கு கீழிறங்கிப் போனார். உலகமய பொருளாதாரத்தை ஊட்டி வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்த பிறகு குறைந்தபட்ச தேசிய இன விடுதலை உணர்வுகளை கூட பிற நாடுகளுக்கு அங்கீகரிக்கும் தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறத் துவங்கினார். அமெரிக்க கட்டளையை தலையால் எடுத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் அன்றைய கியூப நிலைமை இருந்த்தே இதற்கு காரணம். 2008 நெருக்கடி நிலையோடு ஓய்வுக்கு போன பிறகு அருங்காட்சியக புலி தான் காஸ்ட்ரோ. இது காஸ்ட்ரோவுக்கு பொருந்துவதல்ல பிரச்சினை, மொத்த கியூபாவுமே இந்த நிலைமைக்கு போனது தான் துயரம்.
ருசிய சமூக ஏகாதிபத்திய சார்பு நிலையை எடுத்த காஸ்ட்ரோ சீனாவுடனும் நெருங்கிய தொடர்பை பேண எடுத்துக் கொண்ட தளங்களில் ஒன்றுதான் அணி சேரா இயக்கம். இது சோவியத் சார்பு போல தோற்றமளித்தாலும் பலரும் அமெரிக்க ஆதரவு அணியில் தான் அப்போதும் இருந்தனர். காஸ்ட்ரோவும் அதில் ஒருவர்.
1983 ல் அணிசேரா நாடுகளின் மாநாடு தில்லியில் நடக்கிறது. நட்வர் சிங் விழா பொறுப்பாளர். பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் மாநாட்டு திடலில் இருந்து வெளியேறுகிறார். காரணம் அங்கு வந்துள்ள ஜோர்டான் மன்னருடன் மேடையை பகிர வேண்டிய அவசியம். நட்வர் சிங் உடனடியாக மாநாட்டுக்கு வந்திருந்த பிடல் காஸ்ட்ரோவை அணுகினார். பிடல் உடனடியாக யாசரிடம் போய் ‘இந்திரா உங்களுக்கு என்ன வேண்டும்?’ எனக் கேட்டார். ‘உடன் பிறந்த சகோதரி’ என்றார் அராபத். ‘உடன் பிறந்த சகோதரியின் வீட்டுக்கு வந்த சகோதரன் போலவா நடந்து கொள்கிறீர்கள்?’ எனக் கேட்டாராம். உடனே வெட்கமடைந்த யாசர் அராபத் மாநாட்டு மேடைக்கு திரும்பி வந்தாராம்.
1968 போரில் ஒரு புறம் இசுரேலுடனும், இன்னொரு புறம் சகோதர இசுலாமிய நாடுகளுடனும் இணைந்து போரிட்ட பாலஸ்தீனத்தை முடிவில் ஆக்ரமித்த நாடுகளில் ஜோர்டானும் பெரிய நாடு. ஏகாதிபத்தியத்தின் செல்லப் பிள்ளைதான் மன்னரும் கூட. ஆனால் இழந்து போன பாலஸ்தீனத்து உரிமையை யாசர் அராபத்தின் முறை மாமன் சீர் வந்து காவு கொடுத்த்து. அதுவும் போராளி காஸ்ட்ரோவின் பெயரால்..
காஸ்ட்ரோ வரலாறு உங்களை மன்னிக்காது.
நீங்கள் நினைத்தால் பணிவதற்கும் நினைத்தால் விடுதலை அடையவும்
பாலஸ்தீன விடுதலை ஒன்றும் யாசர் அராபத்தின் முறைமாமன் சீர்வரிசை அல்ல (தேவர் மகன் படத்தின் நாசர் பேசும் வசனம் போல படிக்கவும்)
சரி உங்களை சொல்லி குற்றமில்லை. நீங்கள் மார்த்தியின் அப்போஸ்தலரா இல்லை ராக்பெல்லரின் செல்லப்பிள்ளையா என கண்டுபிடிக்க இயலாத மக்களைப் பொறுத்தவரை …
காஸ்ட்ரோ தான் எங்கள் கலிங்கப்பட்டி முறைமாமன்.