
மேற்கண்ட தலைப்பில் ஒரு கட்டுரை இணையத்தில் வாசிக்க கிடைத்தது. வாசிக்க சுவாரசியமாகத்தான் இருந்த்து. நம்பத்தான் கடினமாக இருந்த்து.
சமீபத்தில் நடந்த சீனாவின் மக்கள் படை அணிவகுப்பில் உரையாற்றிய சீன அதிபர் ஜீஜின்பிங், சீனா மார்க்சியத்தின் அடிப்படைகளை நோக்கி திரும்ப வேண்டும் எனக் கூறியிருந்தாராம்.
உலகில் பலரும் மாவோ மார்க்சிய வழிமுறையை பின்பற்றியவர் என்றும், டெங்சியோபிங் முதலாளித்துவ வழிமுறையை பின்பற்றியவர் என்றும் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால் சீனா அவ்வாறு கருதவில்லை என்கிறார்.
மாசேதுங் அவருடைய காலத்து சர்வதேச நிலைகளுக்கு ஏற்ப செயல்பட்டவர். டெங்சியோபிங் அவருடைய காலத்து நிலைகளுக்கு ஏற்ப குறிப்பாக 70களில் ஏற்பட்ட சர்வதேச சூழலுக்கு ஏற்ப சீனாவிற்கான சோசலிசப் பாதையை வகுத்தளித்தவர் என்கிறார்.
குறிப்பான சர்வதேச புறநிலை எதார்த்தங்களுக்கு ஏற்ப சீனாவிற்கான பாதையை வகுத்தளித்தவர்கள்தான் மாவோ, டெங் மற்றும் ஜீ என்கிறது சீன பொதுவுடைமைக் கட்சி. இதனைச் சர்வதேச பொதுவுடைமையாளர்கள் புரிந்து கொண்டு சீனாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.
இக்கட்டுரையில் தங்களின் தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தும் விதமாக 20ம் நூற்றாண்டு உலகப் பொருளாதார போக்கை வரைந்து காட்டுகிறார்கள். மாவோவின் லட்சியங்களும், டெங்கின் லட்சியங்களும் ஒன்றுதான். டெங் ஒன்றும் மார்க்சியத்தை மறுப்பவர் கிடையாது. 20 ம் நூற்றாண்டின் ஆரம்பங்கள் முதல் மத்திய காலகட்டம்வரை இருந்த உலக பொருளாதார ஒழுங்கும், இயங்குமுறையும், இயக்கிய அடிப்படைகளும் வேறு, பிற்பாதியில் இவற்றில் ஏற்பட்ட மாற்றங்களுக்கேற்ப டெங் புதிய கொள்கையை திட்டங்களை சீனத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் என வாதிடுகிறார்கள்.
மாவோ ஸ்டாலினின் சோசலிசத்திற்கான பார்வையை விமர்சனப்பூர்வமாக அணுகினார். அவர் அரசுடைமை, திட்டமிட்ட பொருளாதாரம், வேலை அனைவருக்கும் உரிமை என்பவை மட்டும் போதாது. சோசலிசம் முதலாளித்துவத்திற்கு மாற்றாக தனக்கென்று பிரத்யேகமான சமூக மதிப்பீடுகளையும், பொருளாதார விதிகளையும் கொண்டது என்றார்.
மாவோ சோசலிசத்திற்கான பாதையில் முதலாளித்துவ அம்சங்களும் பொதுவுடைமை அம்சங்களும் கலந்தே இருக்கும் என்றார். அதிலும் 20ம் நூற்றாண்டின் பிந்தைய கட்டத்தில் சோசலிசத்திற்கு மாறிய நாடுகளில் முதலாளித்துவ அம்சங்கள் அதிகமாகவும், பொதுவுடைமை அம்சங்கள் குறைவாகவும் தான் இருக்கும்.
மாவோ பல பண்பாட்டுப் புரட்சிகளின் ஊடாக நூற்றாண்டுகள் போராட்டத்தால் மட்டுமே பொதுவுடைமைக்கான சமூக மதிப்பீடுகளையும், பொருளாதார விதிகளையும் உருவாக்க முடியும் என உணர்ந்தே இருந்தார் எனக் கூறுகிறது இக்கட்டுரை.
உலகம் ஏகபோக உற்பத்தி முதலாளித்துவ முறையிலிருந்து ஏகபோக நிதிமூலதன முதலாளித்துவ முறைக்கு 70களில் மாறத் துவங்கியது. அதனை சரியாக புரிந்து கொண்டு டெங் தொழில்நுடபம், மூலதனம், சந்தை ஆகியவற்றை பெற்று வேகமாக சீனாவை தொழில்மயமாக்கினார் என்கிறது.
மிகை உற்பத்தி நெருக்கடியிலிருந்து மீள உலகம் கையாண்ட யுக்தியை டெங் சரியாக புரிந்து கொண்டிருந்தார் என்பதை அவருடைய எழுத்துக்கள் நிரூபிக்கின்றன என்கிறது.
உலக பொருளாதார சங்கிலியின் இயக்கப் போக்கில் மூலதனம் மூன்றாம் உலக நாடுகளில் முதலீடு செய்யப்படும் நிலை உருவாவதை டெங் முன்னூகித்தார். அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார். மூலதனமும், தொழிற்துறையும் மூன்றாம் உலக நாடுகளுக்கு குறை கூலி உழைப்பை எதிர்பார்த்து மாறியதன் விளைவாக சர்வதேச தொழிலாளி வர்க்கம் தன் பேர ஆற்றலை சர்வதேச அளவில் இழந்த்து. ஆனால் சீனா இவ்வழியில் முன்னேறி தனிநபர் வருமான அளவை அதிகரித்து காட்டுவதன் விளைவாக, அனைத்து மூன்றாம் உலக நாடுகளும் இவ்வழியை பின்பற்றும், அதைத் தொடர்ந்து கூலி சர்வதேச அளவில் சமத்தன்மை அடைந்து, தொழிலாளி வர்க்கம் மீண்டும் தன் பேர ஆற்றலைப் பெறும், 2049ல் சீனப்பாதையை பின்பற்றி வளர்ந்து உலக தொழிலாளி வர்க்கம் முன்னெப்போதும் இல்லாத வலிமையை பெறும் என டெங் குறிப்பிட்டாராம்.
மூன்றாம் கட்டத்தில் ஜீஜின்பிங் பழைய உலமயமாக்கல் இனி நீடிக்காது என்பதை புரிந்து கொண்டிருக்கிறாராம். ஆனால் அமெரிக்காவைப் போல தனது தொழிற்துறைகளை வேறு மூன்றாம் உலகங்களுக்கு மாற்றிவிட்டு தானும் மூலதனத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக மாற முடியாது. அதற்கான பொருளியல், வரலாற்றுப் பின்புலம் சீனாவிற்கு இல்லையென கருதிகிறார்கள்.
அதற்காகத்தான் Belt Road திட்டத்தை ஜீ அரசு முன்மொழிகிறதாம். இதில் அனைத்து பின்தங்கிய நாடுகளும் பயனடையுமாம். இத்திட்டத்திற்காக செலவிட வர்த்தக உபரி சீனாவிடம் ஏராளமாக உள்ளதாம். ஆனாலும் எத்தனை காலத்திற்கு வருமானம் இன்றி முதலீடு செய்யமுடியும்? மேலும் இதன் மூலமாக பல நாடுகள் சீனாவின் கடன் வலையில் வீழ்ந்துவிடுமா?
சீனா இதனை எவ்வாறு எதிர் கொள்ளும்? சீனா பிற முதலாளித்துவ நாடுகளைப் போல அல்ல. உற்பத்தியின் உபரி முழுதும் சீன அரசின் கையில் உள்ளது. அதனால் அதனை அது லாபமற்ற உலக உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு செலவிட முடியும். ஆனால் முதலாளித்துவ நாடுகளில் உபரி தனிநபர்களால் உறிஞ்சப்படுகிறது. அவர்கள் உடனடி லாபம் தரும் பகுதிகளிலேயே முதலீடு செய்வார்கள். நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்ய மாட்டார்கள். இத்திட்டத்தால் பின்தங்கிய நாடுகள் பயனைடையும். இப்பொழுதே கூட ஏகாதிபத்திய நாடுகளைவிட குறைவான வட்டிக்குத்தான் சீனா கடன் தருகிறது. பல ஆப்பிரிக்க நாடுகளில் வட்டியைக் கூட தள்ளுபடி செய்கிறது. பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளின் மொத்த கடனில் சீனாவினுடையது 10 அல்லது 12 சதவீதம்தான் எனவே இத்திட்டத்தால் பல நாடுகள் சீனாவின் கடன் வலையில் வீழும் என்பது தவறான ஏகாதிபத்திய பிரச்சாரங்கள் என்கிறார்கள்.
மேலும் முழுமையாக நிலவுடைமை உறவுகளிலிருந்து விடுதலை பெறாமல், அதனால் அவர்களின் உற்பத்தி திறன் முழுமையாக வெளிவராமல் இருக்கும் நாடுகள் அச்சிக்கலிலிருந்து வெளிவர அது உதவியாக இருக்கும் என்கிறார்கள்.
சீனாவின் இத்திட்டத்தால் முதலாளித்துவ உலகின் எதிர்காலமே கேள்விக்கு உள்ளாகும் என்பதை உணர்ந்து அமெரிக்கா போன்றவை அரசு நிறுவனங்கள், அரசு முதலீடு ஆகியவற்றை கைவிடுமாறு சீனாவை தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். எங்களின் உள்நாட்டு விவகாரங்களிலும், இறையாண்மையிலும் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்பதை தெளிவாக சீனா உறுதியாக கூறி வருகிறதாம்.
நவதாராளவாத உலகமயமாக்கல் அதன் இறுதியை எட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில் கோட்பாட்டுரீதியாக அதற்கு மாற்றுத்தரப்பு முதலாளித்துவத்தில் இல்லை. இந்த சாதகமான சூழலை உலக பொதுவுடைமையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெல்ட் ரோடு திட்டம் மூன்றாம் உலக நாடுகளுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு. நிலச்சீர்திருத்தம், நிலவுடைமை பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்தல் ஆகிய நோக்கங்களுக்கு நிச்சயம் இது ஊக்கம் அளிக்கும் 2035ல் உலக தொழிலாளி வர்க்கத்தின் கூலி சர்வதேச அளவில் சம்மாகும். அப்பொழுது மீண்டும் தொழிலாளி வர்க்கம் அரசியல் அரங்கில் முன்னணிக்கு வருவார்கள் என இக்கட்டுரையில் பிரம்மாண்டமான கற்பனை கோட்டையை கண்முன் கட்டிக் காட்டுகிறார். இதன் நம்பகத்தன்மை எப்படி இருந்தாலும், இன்றைய சீனாவையும், உலக பொருளாதார போக்கையும் புரிந்து கொள்ள இது போன்ற கட்டுரைகள் வாசிக்க வேண்டியது அவசியம்.