சாரு மசூம்தார் –   அழித்தொழிக்க முடியாத வரலாற்று முத்திரை – தியாகு
சாரு மசூம்தார் – அழித்தொழிக்க முடியாத வரலாற்று முத்திரை – தியாகு

சாரு மசூம்தார் – அழித்தொழிக்க முடியாத வரலாற்று முத்திரை – தியாகு

தோழர் சாரு மசூம்தாரின் ஒரே ஒரு கட்டுரை –
அல்லது அவர் ஆற்றிய உரையாகவும் இருக்கலாம் — என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. லிபரேசன் ஏட்டில் வெளிவந்த அந்த உரையின் தலைப்பு “இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும்” (TO THE YOUTH AND STUDENTS) என்பது. உண்மையான எழுச்சியுரை!

இப்போது பேராசிரியர் மருதமுத்துவாக அறியப்படும் தோழர் இராதாகி்ருஷ்ணன் வீட்டில்தான் நான் அந்த உரையைப் படித்தேன். இளைஞர்களும் மாணவர்களும் குடும்பத்தையும் படிப்பையும் துறந்து கிராமங்களுக்குச் சென்று உழவர்களோடும் உழவுத் தொழிலாளர்களோடும் கலந்து வாழ்ந்து அவர்களை ஆயுதப் போராட்டத்துக்கு (சரியாகச் சொன்னால் வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பதற்கு) அணியப்படுத்த வேண்டும் என்பது சாருவின் அறைகூவல்.
தோழர் இராதாவிடம் “நான் போகட்டுமா?” என்றேன். கட்சித் தொடர்பு கிடைக்கட்டும், அது வரை இப்போது செய்து கொண்டிருக்கும் வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம் என்றார். அப்போது நாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளில் ஒன்று என்னை ஆசிரியராகக் கொண்டு ஒரு திங்களேடு (புதிய உலகம்) தொடங்குவது.

அடுத்த சில நாளில் கட்சித் தொடர்பு கிடைத்தது. தோழர் ஏ.எம்.கே. வந்திருந்தார். என்னை “proletarian student” என்று மற்றவர்களிடம் சொன்னாராம். அவர் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்து விட்டுச் சொன்னார்: “புரட்சி இப்போது அவசரம். இப்படிப் புரட்சிக்கு வரக்கூடிய ஒருவரைப் பத்திரிகை
நடத்துவதற்குப் பயன்படுத்த வேண்டாம். உடனே கிராமத்துக்கு அனுப்புங்கள்.” அடுத்த இரண்டு நாளில் அவர் சொன்ன இடத்துக்கு – பெரும்பண்ணையூர் சேரி – போய்ச்சேர்ந்தேன்.

அடுத்த சில நாளில் திருச்சிராப்பள்ளிக்கு என்னை அனுப்பினார்கள். ஓர் ஆதரவாளரின் இல்லம். காலையில் வீட்டுக்குள் நுழையும் போதே எதிரில் அமர்ந்திருந்தவர் … சாரு மசூம்தார்! வசந்தத்தின் இடிமுழக்கமாம் நக்சல்பாரி இயக்கம் கண்ட சாரு மசூம்தார்! என்னைப் பற்றி ஏற்கெனவே அவரிடம் சொல்லியிருந்தார்கள். தமிழ்நாட்டில் எனக்கு முன்பே சில மாணவர்கள் இயக்கத்தில் சேர்ந்திருந்தாலும் படிப்பையும் குடும்பத்தையும் துறந்து இயக்கப் பணிக்கு வந்த முதல் மாணவன் நான்தான். அதற்காக அவர் என்னைப் பாராட்டி வாழ்த்தினார். நான் அவருடைய லிபரேஷன் கட்டுரையைப் பற்றிச் சொன்னேன்.

பக்கத்தில் உட்கார வைத்து என் படிப்பு, குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டார். புரட்சியின் தேவை பற்றி ஊக்கமாகப் பேசினார். நாடெங்கும் புரட்சி பரவி வருவதாகச் சொன்னார். சிறிகாகுளம் பற்றிய செய்திகள் தெரியுமா? என்று கேட்டார். தெரியும், படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றேன்.

சிறிது நேரத்தில் அன்றைய தினமணி .நாளேடு வந்தது. முதன்மைச் செய்திகளைப் படித்துச் சொல்லச் சொன்னார். நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறு செய்தி என் கண்ணில்பட்டது. விசாகப்பட்டினம் மத்திய சிறையிலிருந்து 11 முக்கிய நக்சலைட்டு (அல்லது தீவிர கம்யுனிஸ்டு?) தலைவர்கள் தப்பி விட்டார்கள் என்ற செய்தியைப் படித்து முடிப்பதற்குள்ளேயே சாரு துள்ளிக் குதித்து விட்டார். அளப்பரிய மகிழ்ச்சியில் என் தொடையில் தட்டவும் செய்தார். செய்தியை மீண்டும் படிக்கச் சொன்னார்.

ஒரு சிறு பெட்டியில் வைத்திருந்த புகையிலையை எடுத்து வெள்ளைத் தாளில் சுருட்டி மெல்லிய சிகரட் செய்து பற்ற வைத்துக் கொண்டார். நான் பிரமிப்புடன் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

விசாகப்பட்டினம் சிறையிலிருந்து தோழர்கள் தப்பியிருப்பதன் முக்கியத்துவத்தை எனக்கு விளக்கிச் சொன்னார். ஒவ்வொரு நாளும் சில தோழர்களை வெளியே கொண்டுபோய்ச் சுட்டு விட்டுத் தப்பியோடியவர்களைச் சுட்டதாகச் சொல்கிறார்கள். நேற்று அப்படிக் கொண்டுபோகிற செய்தி சிறை ஊழியர்களுக்கோ அதிகாரிகளுக்கோ தெரிந்து இவர்களைத் தப்ப வைத்திருக்க வேண்டும் என்றார்.

ஆந்திரக் காவல்துறைத் தலைமை அதிகாரி இந்த 11 பேரையும் சிறிகாகுளம் மாவட்டம் தவிர இந்தியாவி்ல் எங்கு போனாலும் பிடித்து விடுவோம் என்று கூறியிருப்பதைப் படித்துக் காட்டினேன். அதெல்லாம் நடக்காது என்றார். பகலுணவுக்குப் பிறகு விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன்.
பிறகு நான் கேள்விப்பட்ட செய்தி: மறு நாள் அந்த 11 தோழர்களும் சென்னை வந்து சாருவைப் பார்த்தார்களாம். அவர்களை சாரு ஆரத் தழுவி வரவேற்று, அளவளாவி, தன் பெட்டியைத் திறந்து செலவுக்குப் பணமும் கொடுத்து வழியனுப்பி வைத்தாராம்.

அவர்கள் இங்கிருந்து இரயிலேறி ஆந்திரம் சென்று சிறிகாகுளத்துக்கும் போய் விட்டார்கள். அடுத்த சில காலத்தில் அவர்கள் ஒவ்வொருவராகப் பிடிபட்டர்கள் . பிடிபட்டவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கல்கத்தாவில் பிடிபட்ட தோழர் நாகபூசனம் பட்நாயக் மட்டுமே உயிர் பிழைத்தார்.

தோழர் சாரு மசூம்தாரை நான் நேரில் சந்தித்த முதலும் கடைசியுமான நிகழ்வு இதுதான். இனி நான் எழுதுகிறவை பிறரிடமிருந்து அறிந்தவை அல்லது அவரது நிலைப்பாடு குறித்தவை.

நான் சந்திப்பதற்கு சற்று முன்போ பின்போ நிகழ்ந்த ஒரு செய்தி — தோழர் ஏ.எம். கோதண்டராமன் (ஏ.எம்.கே.) வாயிலாகத் தெரிந்து கொண்டது: திருத்துறைப்பூண்டி வட்டத்தின் ஒரு பகுதியான தலைஞாயிறு பகுதியில் தீவிர கம்யூனிஸ்டு இயக்கம் ஓரளவு வலுவாக இருந்தது. அப்போது அந்தப்பகுதியில் நக்சல்பாரி இயக்கம் என்று சொல்லாமல் தீ.கம்யூனிஸ்டுக் கட்சி என்றே சொல்லிக் கொண்டனர்.

சி.பி.எம் கட்சியில் பெரும் நெருக்கடி ஏற்பட்டு அதை சமாளிப்பதற்காக நாகையிலிருந்து தோழர் ஏ.ஜி.கே.யை அனுப்பி வைத்தனர். அப்படியும் பல ஊர்கள் (சேரிகள்) மொத்தமாக தீ.கம்யூனிஸ்டில் சேர்ந்தன. தீ.கம்யூனிஸ்டு ஊர்வலங்கள் பொதுக் கூட்டங்கள் அன்றாடம் நிகழ்ந்தன. பல இடங்களில் கொடியேற்றிக் கொண்டாடினர். சி.பி.ஐ. திமுக கட்சிகளிலிருந்தும் ஏராளமானவர்கள் தீ.கம்யூனிஸ்டில் சேர்ந்தனர்.

மக்கள் திரண்டெழுந்து போய் வயலில் விளைந்த நெல்லை அறுவடை செய்து தமக்கிடையே பகிர்ந்து கொண்டார்கள். ஒரு நிலக்கிழாரிடமிருந்து நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுப் பகிர்ந்தளிக்கப்பட்டன. நிலக்கிழார்கள் நடுங்கிப் போயினர். கேட்காமலே கூலி உயர்வு தர முன்வந்தனர். அந்த நேரத்தில் இந்து ஆங்கில நாளேட்டில் என்.ராம் “தென்னகத்தின் நக்சல்பாரி” (NAXALBARI OF THE SOUTH) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.

இந்தப் பின்னணியில்தான் தோழர் சாரு மசூம்தார் தலைஞாயிறு செல்கிறார் – தோழர் ஏ.எம்.கே. அவரை அங்கே அழைத்துச் சென்றார். முக்கியத் தலைவர்கள் எல்லாம் கூடியிருந்தனர். அந்தப்பகுதியில் அது வரை நடந்த இயக்கம் குறித்து ஏ.எம்.கே. விளக்கினார். உள்ளூர்த் தலைவர்களை அறிமுகம் செய்து அவர்கள் கூறியவற்றையும் மொழிபெயர்த்துச் சொன்னார். மலேயா கோவிந்தசாமி மலேயாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு இங்கே வந்தவர். காடந்தேத்தி முருகையன் விவசாயத் தொழிலாளி, ஒரு கண்ணில் பார்வையிழந்தவர். சி.பி.எம். கட்சியிலிருந்து வந்தவர். பச்சை கணேசன் தி.மு.க.விலிருந்து வந்தவர். மணக்குடி இராமச்சந்திரன் சி.பி.ஐ. கட்சியிலிருந்து வந்தவர். அரிச்சந்திரன் என்றொரு தோழரும் இருந்தார்.

கடைசியாக சாரு பேசினார்.. நெல்பறிமுதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பிணையில் வந்தவர்கள் இனி நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டாம், தலைமறைவாகி இயக்கம் கட்டுங்கள் என்று சாரு கூறியதை யாரும் ஏற்கவில்லை. மகள் திருமணம் முடியட்டும், பிறகு தலைமறைவாகிறேன் என்று மலேயா கோவிந்தசாமி சொல்லிப் பார்த்தார். சாரு ஏற்கவில்லை.

“இனி ஊர்வலம் போவது, கூட்டம் நடத்துவது, கொடிஏற்றுவது இந்த வேலையெல்லாம் வேண்டாம், அழித்தொழிப்பு தவிர வேறு எதுவும் செய்ய வேண்டாம். அது யாரால் முடியாதோ அவர்கள் போகலாம்” என்று கூறி விட்டார். அனைவருக்கும் ஏமாற்றம். தோழர் ஏ.எம்.கே.க்கும்தான். ஆனால் அவரால் அதை வெளிக்காட்ட முடியவில்லை. வெளியே வந்த பிறகு ஏ.எம்.கே.யிடம் சாரு சொன்னார்:
“இவர்கள் சரிப்பட மாட்டர்கள். புரட்சிக்காக எதுவும் செய்யக் கூடிய இளைஞர்களைக் காட்டுங்கள், நான் அவர்களைப் பார்க்க வேண்டும்’ என்றார்.

தலைவர்களுக்குத் தெரியாமல் கூட்டப்பட்ட அந்த இளைஞர்களிடம் சாரு ஊக்கமாகப் பேசினார். புரட்சியை இனியும் காலந்தாழ்த்த முடியாது என்றார். அதற்கு ஒரே வழி வர்க்கப் பகைவர்களை அழித்தொழிப்புச் செய்வதுதான் என்றார். உங்கள் பகுதியில் அழித்தொழிக்கப்பட வேண்டிய ஆதிக்க நிலக்கிழார்கள் யார் என்று விசாரித்தார். இளைஞர்கள் மூன்று பேரைச் சொன்னார்கள். மூவரில் யார் மோசம் என்று கேட்ட போது ஒருவரைச் சொன்னார்கள். சரி, முடித்து விடுங்கள் என்றார். “நான் வரும் வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து புறப்படுகிறேன், அதற்குள் நல்ல செய்தி வரவேண்டும்” என்றார். எல்லாரும் தலையாட்டினார்கள்.

சாரு சென்னையிலிருந்து வண்டி ஏறுவதற்குள் செய்தி வந்தது — மலேயா கோவிந்தசாமி, காடந்தேத்தி முருகையன், பச்சை கணேசன், மணக்குடி இராமச்சந்திரன் அரிச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் இயக்கத்திலிருந்து வெளியேறி அவரவர் தாய்க் கட்சிக்கே திரும்பினார்கள் என்ற செய்தி!

அழித்தொழிப்புக்கு அணியமான அந்த இளைஞர்களை சந்திக்க ஏ.எம்.கே. சில நாள் கழித்து அந்தப் பகுதிக்குத் திரும்பிச் சென்ற போது என்னையும் அழைத்துப் போனார். கொட்டும் மழையில் முன்னிரவு நேரம் மணக்குடிக்குச் சென்றோம். இராமச்சந்திரன் தோழர் ஏ.எம்.கே.யின் சேறுபடிந்த கால்களைத் தண்ணீர் ஊற்றிக் கையால் தேய்த்துக் கழுவி விட்டார். ஏ.எம்.கே.யின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், “வேறொன்றும் செய்ய முடியவில்லை, இதையாவது செய்ய அனுமதியுங்கள்” என்றார். இவரிடம் இனி அரசியல் பேச முடியாது என்று புரிந்து கொண்டோம். அன்றிரவு உண்டு முடித்து, ஓதம்கொண்ட தரையில் செய்தித்தாள்களை விரித்துப் படுத்துக் கொண்டோம். எங்களைச் சுற்றி ஆடுகள், குட்டிகள் மழைக்கு ஒதுங்க வேறு இடம் இல்லாமல் நெருக்கிக் கிடந்தன. சிறிது நேரம் உறங்கி விழித்த போது எங்கள் மேல் எல்லாம் ஆட்டுப் புழுக்கைகள் கொட்டிக் கிடந்தன.

தலைமறைவு வாழ்க்கையில் இரவு தங்குமிடத்திலிருந்து விடிவதற்கு முன் வெளியே கிளம்பி விட வேண்டும் என்ற விதியை ஒட்டி நங்கள் கிளம்பி விட்டோம். தோழர் காடந்தேத்தி முருகையன் அந்தக் கட்டத்தில் அப்பகுதியில் எங்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். உழைத்துப் பிழைக்கும் உழவுத் தொழிலாளி – ஒரு கண்ணில் பார்வையில்லை – கணவன் மனைவி இருவரும் வயதேறிய நிலையிலும் கூலிவேலை செய்து அந்தக் கூலியைக் கையில் கொடுத்து எங்களை அனுப்பி வைப்பார்கள்.

இயக்கம் என்று மிஞ்சியவர்கள் தோழர் மூர்த்தியும் இன்னும் சில இளைஞர்களும்தான். அவர்களுக்கான அமைப்புப் பொறுப்பு நான். நானோ அவர்களிடம் அழித்தொழிப்பை மட்டுமே வலியுறுத்திக் கொண்டிருந்தேன். பெருமங்கலம், திருவோணம், அடுத்துத் தலைஞாயிறு, பிறகு எல்லாரும் சேர்ந்து இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவை முடிப்பது என்று பிற்காலத்தில் திட்டமிட்டோம். பெருமங்கலத்தில் அரைகுறையாக முடிந்தது. திருவோணத்தில் நான் பிடிபட்டு விட்டேன். நானறிந்த வரை தலைஞாயிறு கதை அத்துடன் முடிந்தது. ‘தென்னகத்தின் நக்சல்பாரி’ சாருவின் அழித்தொழிப்பு மட்டும் என்ற சாகச உத்தியால் இப்படித் தடயமின்றி மறைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

தென்னாற்காடு மாவட்டம் கொடுக்கூருக்கு ஒரு முறை அனுப்பி வைக்கப்பட்டேன். காலையில் பல்துலக்கி முகம் கழுவி காலில் தண்ணீர் ஊற்றப் போகும் போது ஒருவர் அவசரமாகத் தடுத்தார்: “இந்தத் தண்ணி வாய் கொப்பளிக்க மட்டும்தான். கால் கழுவ வேறு தண்ணி இருக்கு.” அவர் காட்டிய நீர் மஞ்சளாக இருந்தது. சேற்று நீர் போல!
அந்த நேரம் குளத்து நீரில் படிக்காரம் போட்டுத் தெளிய வைத்துத்தான் குடிக்கப் பயன்படுத்தி வந்தார்களாம். அப்படிச் செய்யாமல் அதைக் குடித்தால் நரம்புச் சிலந்தி என்ற நோய் வரும். காலிலிருந்து நரம்பு வெளியே வந்து நீண்டு செல்லும். அதை வெட்டவும் முடியாது. நூற்கண்டு போல் சுற்றிக் கட்டி வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

சாரு மசூம்தார் அந்தப் பகுதிக்கு வந்த போது குடிக்கக் கொடுத்த தண்ணீரைப் பார்த்து “இது என்ன ஐஸ் டீயா?” என்று கேட்டுள்ளார். அவர்கள் அதற்கான விளக்கத்தைக் கூறிய போது அதிர்ந்து போனாராம்: “இதைக் காய்ச்சி வடிகட்டித்தான் குடிக்க வேண்டும். நம் தோழர்களையும் மக்களையும் இப்படியெல்லாம் இழக்க முடியாது.” பிறகு படிக்காரம் போட்டுத் தெளிய வைத்த நீர் கொண்டுவந்து கொடுத்தார்களாம்.

“தோழர்களை இழக்கக் கூடாது” – சாரு அடிக்கடிஇதைச் சொல்லி வந்தார். தலைவர்கள் அனைவரும் சேர்ந்து பயணம் செய்யக் கூடாது என்பார். எல்லாரும் கூண்டோடு பிடிபடும் ஆபத்தை மட்டுமல்லாமல், விபத்து நேரிடும் கெடுவாய்ப்பையும் காரணமாகச் சொல்வார். அழித்தொழிப்புக்குக் கூட துப்பாக்கியோ வெடிகுண்டோ நவீன ஆயுதங்களோ பயன்படுத்தக் கூடாது, அரிவாள் கத்தி போன்ற மரபுவழி ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தி வந்தார். ஆயுதப் போராட்டத்திலிருந்து மக்கள் அயன்மைப்படக் கூடாது என்று இதற்குக் காரணமும் சொன்னார்.

ஆனால் தொலைவாகப் பயணம் செய்யும் தோழர்கள் மட்டும் திடீரென்று சுற்றி வளைக்கப்பட்டால் பயன்படுத்தவென கைத்துப்பாக்கி வைத்துக் கொள்ளச் சொன்னார். ஏனென்றால் “தோழர்களை நாம் இழக்கக் கூடாது.”

அழித்தொழிப்பின் மீது சாருவுக்கு அபார நம்பிக்கை! பத்து முறை அழித்தொழிப்பில் ஈடுபட்டவன் சாவுக்கஞ்சாத புதிய மனிதனாகி விடுவான் என்பார். தலைவர்கள் உட்பட ஒவ்வொரு தோழரும் அழித்தொழிப்புச் செயலில் பங்கு பெற வேண்டும் என்பார். “பகைவனின் குருதியில் கைநனைக்காதவன் கம்யூனிஸ்டே அல்ல” என்பது சாருவின் புகழ் மிக்க வாசகங்களில் ஒன்று. இது குறித்து மையக் குழுவில் விவாதம் வந்த போது, பீகாரைச் சேர்ந்த சத்யநாராண சிங் “நானுமா சாரு?” என்று கேட்டாராம். அவர் அவ்வளவு குண்டு!

திருவோணம் அழித்தொழிப்பில் தானும் பங்கேற்க வேண்டும் என்று தோழர் ஏ.எம்.கே. விரும்பியது எனக்குத் தெரியும். அதற்காகவே அவர் வருவதற்கு ஒரு நாள் இருக்கும் போதே அதை முடிக்க எண்ணி, அவ்வாறே முடித்தோம்.

கொலைக் குற்றம், சதிக் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதும் சாருவின் முழக்கங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தோம். தலைவர் மாவோ ஏற்ற புரட்சி வழி என்று பெருமிதம் கொண்டோம். சீனத்தின் தலைவர் எமது தலைவர்! சீனத்தின் பாதை எமது பாதை! என்று நீதிமன்றத்திலும் முழக்கமிட்டோம். எல்லாவற்றுக்கும் மேலாக, “எழுபதுகளைப் புரட்சியின் பத்தாண்டு ஆக்குவோம்!” என்ற சாருவின் முழக்கத்தை அப்படியே நம்பினோம். 1980க்குள் இந்தியப் புரட்சி வெற்றி பெற்று விடும் என்று உண்மையாகவே எதிர்பார்த்தோம்.

நான் சென்னை சிறையில் இருந்த போது கைதாகி வந்த புலவர், “பழைய கணிப்பு எல்லாம் மாறி விட்டது, இரண்டு மூன்று வருடத்தில் புரட்சி வெற்றி பெற்று விடும் என்று சாரு சொல்லி விட்டார்” என்றார். அதையும் நம்பி மற்றத் தோழர்களுக்கும் நம்பிக்கையூட்டினேன்.

திருச்சிராப்பள்ளி சிறையில் பழைய கண்டத்தில் நானும் புலவர் கலியபெருமாளும் தோழர்கள் ரெங்கசாமி லெனின், குருமூர்த்தியும் தூக்குக் கைதிகளாக இருந்த போது அது வரையிலுமான நம்பிக்கைகளைக் கேள்விக்கு உள்ளாக்கினேன். வர்க்கப் போராட்டத்தின் ஒரே வடிவம் அழித்தொழிப்பு என்ற நிலைப்பாடு சரியா? கட்சியும் ஆயுதப் படையும் அல்லாத வர்க்க அமைப்புகள், மக்கள்திரள் அமைப்புகள் தேவையா, இல்லையா?

இப்படிப் புரட்சியின் குறுவுத்திகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, சீனப் புரட்சியின் படிப்பினைகள் குறித்தும் பேசினோம்.
மேதை லெனின் நூல்கள், கட்டுரைகளைப் படித்ததும் இடைக்காலத்தில் தோழர் ஏ.ஜி. கஸ்துரி ரெங்கன் என்னிடம் எழுப்பியிருந்த வினாக்களுமே எனக்குத் தூண்டுதலாய் இருந்தன. அழித்தொழிப்பு மீது நம்பிக்கை இழந்து விட்டேன். சாருவின் ஆண்டுக் கணிப்புகளை என்னால் ஏற்க முடியவில்லை. இதை நான் வெளிப்படுத்திய போது மற்றத் தோழர்கள் என் மீது கடுமையாக ஆத்திரப்பட்டார்கள். புலவர் என்னை வர்க்க எதிரி என்றே சாடினார்.

இந்த விவாதத்தில் சாருவை நான் கடுமையாகக் குற்றாய்வு செய்ய நேரிட்டது. அந்த நேரம் எங்கோ மறைவிடத்திலிருந்து அவர் தந்த பேட்டி வெளிவந்தது. அவரிடம் கேட்கப்பட்ட ஒரு வினா: சீனத்தில் போலவே இந்தியாவிலும் நீண்ட பயணம் நடக்குமா? நடக்கும், இங்கே சிறிகாகுளத்திலிருந்து பீர்பூம் வரை நடக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

எடுத்த எடுப்பிலேயே நான் இந்தக் கருத்தை மறுத்தேன். வேண்டுமானால் சிறிகாகுளத்திலிருந்து புறப்பட்டு வரங்கல் வரை செல்லலாம். அதற்கு மேல் ஆந்திர எல்லையைத் தாண்டி மத்தியப் பிரதேசத்துக்குள் நுழைய முடியாது. இதற்கு மொழி வேறுபாட்டையே காரணமாகச் சொன்னேன்.
சீனத்தில் தெற்கே காண்டனிலிருந்து வடக்கே ஏனான் வரை ஏறத்தாழ ஒரே மொழிதான். சீனம் போலல்லாமல் இந்தியா பல மொழிகள் பேசும் நாடாக இருப்பது புரட்சிக்குப் பெருந்தடை என்று சொன்னேன்.

சிறிகாகுளத்திலிருந்து புறப்படும் நம் படையில் தெலுங்கு பேசும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பழங்குடி மக்களே பெரும்பான்மையாக இருப்பர். இவர்களால் ம.பி.யில் இந்தி பேசும் மக்களுடன் ஒன்றுகலக்க முடியாது. இந்தி, ஒரியம், போஜ்புரி, வங்காளி என்று பல மொழிகள் தெரிந்த படையைக் கட்ட முடியாது. அல்லது எங்கு போனாலும் மொழிபெயர்ப்பாளர்களைத் துணைக்கு அழைத்துச் செல்ல முடியாது.

மக்களின் குமுக வாழ்வுக்கே ஊடகமான மொழி புரட்சிக்கு எப்படித் தடையாக முடியும்? என்ற கேள்வி அப்போது எனக்கோ மற்றத் தோழர்களுக்கோ எழவில்லை. இந்தியப் புரட்சி என்ற குறிக்கோளை மாறாத ஒன்றாக நாங்கள் கருதிக் கொண்டிருந்ததே காரணம். என்னைப் பொறுத்த வரை மொழியைப் புரட்சியோடு தொடர்புபடுத்தும் சிந்தனையின் விதை விழுந்தது அப்போதுதான். அந்த விதை முளைத்து வளர்ந்து தமிழகப் புரட்சி என்னும் ஏரண முடிவை அடைவதற்கு குமுக மாற்றத்தில் மொழியின் பங்கு குறித்து செறிவான கோட்பாட்டுக் கல்வியும் நேர்மையான நடைமுறை மீளாய்வும் தேவைப்பட்டன.

ஒரு கட்டத்தில் எங்கள் விவாதம் தந்திரவுத்திகளைத் தாண்டி அடிப்படைத் திட்டம் பற்றிய கேள்விகளுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. தோழர் சாரு மசூம்தாரின் பெரும்பிழை அவரது அழித்தொழிப்புத் திட்டம் கூட இல்லை, சீனத்தைப் பார்த்தொழுகும் முயற்சிதான் என்ற முடிவுக்கு வந்தேன்.

சீனத்தைப் பார்த்தொழுகும் முயற்சி போல் அபத்தம் வேறில்லை. “சீனத்தின் பாதை எமது பாதை!” என்ற முழக்கம் “சீனத்தின் தலைவர் எம் தலைவர்!” என்று நீண்டு “சீனத்தின் துணைத் தலைவர் எம் துணைத் தலைவர்!” என்று சிதைந்து போயிற்று.
இதெல்லாம் முட்டாள்தனம் என்பதை சீனக் கட்சியே இவர்களுக்குச் சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால் சீனத்தைப் பார்த்தொழுகும் அபத்த முயற்சிக்கு சீனக் கட்சியும் சீனத் தலைவர் மாவோவும் பொறுப்பில்லை என்று விடுபட முடியாது.
சீன அரசுக்கும் இந்திய அரசுக்குமான உறவில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும், எல்லைச் சிக்கலிலும், திபெத் தொடர்பாகவும் நேரிட்ட திருப்பங்களுக்கும் ஏற்ப இந்தியப் புரட்சி பற்றிய சீனக் கட்சியின் பார்வைகள் மாறின என்பதையும் மறுக்கவியலாது.

சாருவின் பிழகளுக்குப் பின்னால் மாவோ இருந்தார் என்று சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை.
உடனடி ஆயுதப் போராட்டம் என்ற நடைமுறைக்குப் பொருத்தமாகவே இந்தியச் சமூகம் பற்றிய வரையறுப்புகள் சாரு உள்ளிட்ட தலைமையால் வலிந்து திணிக்கப்பட்டன.

அரைக்காலனிய அரைப்பிரத்துவச் சமூகம், இந்தியப் பெருமுதலாளிகள் அதிகாரவர்க்கத் தரகு முதலாளிகள், இந்திய அரசு வல்லாதிக்கத்தின் கைப்பாவை அரசு … இவை யாவும் புரட்சிக்கு முந்தைய சீனச் சமூகம், சீன முதலாளிகள், சீன அரசு பற்றிய சீனக் கட்சியின் நிலைப்பாடுகளை அப்படியே பார்த்தொழுகும் முயற்சிகளே தவிர வேறல்ல.
சீனத்தில் போலவே இந்தியாவிலும் புரட்சியின் பாதை மக்கள்-போர்தான் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த அடிப்படைப் புரிதலிலிருந்துதான் சாரு சீனத்தில் போலவே இந்தியாவிலும் ‘நீண்ட பயணம்’ நடத்துவது பற்றிப் பேசினார்.

எங்கள் விவாதத்தில் சாருவின் மண்டை உருண்டு கொண்டிருந்த நேரத்தில்தான் அவர் காவல்துறையிடம் பிடிபட்ட செய்தி வந்தது. நாங்கள் உண்மையில் அதிர்ந்து போனோம். அடுத்து (1972 சூலை 28) அவரது சாவுச் செய்தியும் வந்தது. சில தோழர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். இந்தச் செய்திகள் இன்று வரலாறு. என்னைப் பொறுத்த வரை கடுமையான கருத்து மாறுபாடுகளுக்கு நடுவிலும் அவர் மீது உணர்ச்சிமயமான பிடிப்பு வைத்திருந்தேன். அவர் வார்த்தைதானே என்னைப் புரட்சிக்கு அழைத்து வந்தது! சாருவைப் பற்றி ஒரு பாடல் எழுதி குருவிடம் கொடுத்துப் பாடச் சொன்னேன். முதல் வரி நினைவுள்ளது: இறந்தும் இறவாத சாரு எனும் தோழனே!

சாருவைப் பற்றிய மதிப்பீடு என்பது நக்சல்பாரி இயக்கம் பற்றிய வரலாற்று மதிப்பீடே ஆகும். நக்சல்பாரி இயக்கம் ஒரு கலகத்தைக் குறித்தது. நீதிக்கான கலகங்கள் யாவும் நியாயமானவை. சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான கலகம் என்ற வகையிலும், சொல்லளவில் புரட்சியும், செயலளவில் பதவி அரசியலும் ஆகிய சி.பி.எம். தலைமையின் வாய்ப்பிய (சந்தர்ப்பவாத) அணுகுமுறைக்கும் எதிரான கலகம் என்ற வகையிலும் நக்சல் இயக்கப் பிறப்புக்கு வரலாற்று நியாயம் உண்டு.

இப்படி ஒரு வரலாற்று நியாயம் இருந்த படியால்தான் நக்சல்பாரி என்ற சிற்றூரில் தீப்பொறியாக எழுந்த இயக்கம் ஓரளவுக்கு இந்தியத் துணைக்கண்டமெங்கும் காட்டுத் தீயாகப் பரவிற்று எனலாம். இதில் சாரு மசூம்தாரின் எழுத்துக்கும் பேச்சுக்கும் துடிப்பான செயல்பாட்டுக்கும் உழைப்புக்கும் ஈகத்துக்கும் பெரும் பங்குண்டு.

நக்சல் இயக்கம் என்பதொரு கலகம், வரலாற்று நியாயம் கொண்ட கலகம்! ஆனால் கலகம் வேறு, புரட்சி வேறு. கலகம் புரட்சியாக மாறத் தவறி விட்டது என்பதுதான் நக்சல் இயக்கத்திற்கு நேர்ந்த அடிப்படைத் தோல்வி. இந்தத் தோல்வியிலும் சாருவுக்குப் பெரும்பங்குண்டு என்பதை மறுக்க இயலாது.

இந்தக் குறைகளைக் களைந்து, வெற்றிகளிலிருந்து ஊக்கமும் தோல்விகளிலிருந்து பாடமும் பெற்று, மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகள் நடப்பது நம்பிக்கையளிக்கும் செய்தி.
நக்சல்பாரி இயக்கத்தின் வெற்றிகளும் தோல்விகளும், சாதனைகளும் வேதனைகளும் கலந்த வரலாற்றில் தோழர் சாரு மசூம்தாரின் முத்திரையை – அவருக்குப் பிடித்தமான மொழியில் சொன்னால் – எவராலும் அழித்தொழிக்க முடியாது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++தியாகு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *