சாதி ஒழிப்பு எப்படி?
சாதி ஒழிப்பு எப்படி?

சாதி ஒழிப்பு எப்படி?

இந்திய சமூகத்தில் சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும், சாதி தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டவேண்டும் என்பதில் ஜனநாயகவாதிகளும் கம்யூனிஸ்டுகளும் ஒரே கொள்கை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சாதியை ஒழிப்பது எப்படி? என்பது நம்முன் உள்ள கேள்வி.

சமூக உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உற்பத்தியை ஒழுங்கமைத்து வளர்ப்பதற்காகவே இங்கே சாதிகள் உருவாகியது என்று மார்க்சிய ஆய்வு முறை கூறுகிறது. ஆகவே நவீன உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் புதிய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தேவையற்ற உற்பத்தி உறவுகள் மாற்றியமைக்கப்படும் போது இங்கு சாதிகள் ஒழிக்கப்படும் என்று மார்க்சியம் அறிவிக்கிறது.

இந்திய துணைக்கண்டத்தில் நீண்டகாலமாக உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடைகள் உள்ளது. ஆகவே இங்கே நவீன உற்பத்தி சக்திகள் வளரவில்லை, அதன் காரணமாகவே இங்கே சாதிகள் இன்னும் ஒழியவில்லை, சாதி தீண்டாமை கொடுமைகளும் முடிவிற்கு வரவில்லை.

நீண்டகாலத்திற்கு முன்னால் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு நிலப்பிரபுத்து மன்னராட்சி தடையாக இருந்தது. அதன் பின்னர் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகளின் காலனிய ஆட்சி தடையாக இருந்தது. தற்போது ஏகாதிபத்தியவாதிகளின் புதிய காலனிய ஆட்சி முறையானது இங்கு சுதந்திரமான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் மேலதிகத் தடையாக உள்ளது.

ஆகவே வளர்ச்சிக்குத் தடையாக உள்ள புதிய காலனிய ஆட்சிக்கு முடிவுகட்டி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சோவியத்து வடிவத்திலான மக்கள் ஜனநாயக குடியரசு ஆட்சி முறையை இங்கு உருவாக்குவதன் மூலம் மட்டுமே இங்குள்ள ஏழை விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அரசியல் அதிகாரம் கிடைக்கும். இந்த வர்க்கங்கள் மட்டுமே சாதியை ஒழிப்பதிலும் சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதில் மிகவும் ஆர்வம் உள்ள வர்க்கங்களாக இருக்கிற காரணத்தால் இந்த வர்க்கங்களின் கைகளில் அரசியல் அதிகாரம் வந்தால் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதிகள் ஒழிக்கப்படும், சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்டப்படும் என்று மார்க்சியவாதிகள் உறுதிபட கூறுகிறார்கள்.

இதற்கு மாறாக நிலவுகின்ற அரசமைப்பிற்குள் அதாவது ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களது எடுபிடி பெருமுதலாளிகளின் ஆட்சி அதிகாரத்தின் கீழே அவர்களது ஆட்சியை ஏற்றுக்கொண்டே அவர்களின் மூலமாகவே சில சில்லரை சலுகைகளை கெஞ்சிப் பெறுவதன் மூலமே சாதிகளை ஒழித்துவிடலாம் என்று அம்பேத்காரரும் பொரியாரும் கூறினார்கள். அவர்களது இந்தக் கொள்கையை பின்பற்றுபவர்களால் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் சாதியை ஒழிக்கமுடியாது. இது நடைமுறை உண்மையாகும்.

இங்குள்ள சி.பி.ஐ. போன்ற கம்யூனிஸ்டு கட்சிகளின் நோக்கம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்பதல்ல. மாறாக இவர்களும் அம்பேத்கார் மற்றும் பெரியாரைப் போலவே நிலவுகின்ற சமூக அமைப்பிற்குள்ளே அதாவது இந்த பாராளுமன்ற ஆட்சி முறைக்குள்ளே பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்ற கருத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருப்பதால் இவர்களாலும் அம்பேத்காரியவாதிகளைப் போலவே சாதியை ஒழிக்க முடியவில்லை.

புரட்சிகர கம்யூனிச குழுக்களும் லெனினிய முறையில் கட்சியை கட்டாமலும் புதிய காலனிய ஆட்சியை ஒழிப்பதற்கான ஒரு விஞ்ஞானப் பூர்வமான திட்டம் இல்லாததாலும் அதன் அடிப்படையில் மக்களை திரட்டிட தவறியதாலும் அவர்களாலும் இங்கு சாதியை ஒழிக்க முடியவில்லை.

ஆகவே சாதியை ஒழிக்க மார்க்சியம் காட்டும் வழியில் அதனை சாதிப்பதற்குத் தேவையான ஒரு புரட்சிகரமான திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு புரட்சிகர கட்சியின் தலைமையில் மக்களை திரட்டி போராடி புதிய காலனியத்திற்கு முடிவு கட்டுவதன் மூலமே இங்கே சாதிகளை ஒழிக்க முடியும், சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவுகட்ட முடியும். தோழர் ரவீந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *