ரோஹித் வெமுலா மற்றும் முத்துகிருஷ்ணனை படுகொலை செய்த இந்துத்துவ சாதிவெறி பாசிசத்தை தலித்தியத்தால் வீழ்த்த இயலாது.
ஏபிவிபி –ஆர் எஸ் எஸ் கும்பலை தடை செய்ய போராடுவோம் !!
சாதி எனும் பல்லாயிரத்து ஆண்டு ஒடுக்குமுறையை எவ்வாறு ஒழிப்பது ? எனும் கேள்விக்கு சாதியின் வேர் நிலவுடமை உற்பத்தி முறையே எனவும் , அந்த மிக பிற்போக்கான உற்பத்தி முறையை ஒழிக்க வேண்டும் எனவும் மார்க்சியம் நமக்கு சொல்கிறது. இந்த உற்பத்தி முறை தரகுமுதலாளித்துவ உற்பத்தி மற்றும் அந்நிய ஏகாதிபத்திய உற்பத்தியோடு கள்ள உறவு வைத்துள்ளது. ஆகவே இம்மூன்று பகைகளையும் அறுத்தெறிந்தால் மட்டுமே சாதியை அழித்து ஒழிக்க இயலும். இங்கு சாதியின் வேர் இந்து மதம் எனவும் , பார்ப்பனீயம் எனவும் பார்க்கும் இயல்பு உள்ளது. இந்து மதம் , பார்ப்பனியம் இரண்டும் இந்துத்துவ பாசிசத்தின் கருவிகள் என்பதும் , இந்துத்துவ பாசிசமுமே ஏகாதிபத்தியத்தின் கருவி என்பதும் நாம் உணரவேண்டிய செய்தி. அமெரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாட தொடங்கிவிட்டது என்பது அமெரிக்காவின் தீவிர பொருளியல் நெருக்கடியை உணர்த்துகிறது. இங்கு இந்துத்துவ பாசிசம் , சாதிவெறி பாசிசம் மற்றும் இனவெறி பாசிசம் தீவிரம் பெறுவது மேலும் ஆழப்படும். காரணம் இங்கு மாபெரும் அரசியல் பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றுவருகிறது. நாம் சாதிய -மதவாத அடையாள அரசியலுக்கு பலியாகாமல் , பாராளுமன்ற மாயையைகளில் இருந்து மக்களை மீட்டு , ஒரு புதிய சனநாயக புரட்சியை முன்னெடுக்க சபதம் ஏற்போம். கொலை செய்த ஏபிவிபி –ஆர் எஸ் எஸ் கும்பலை தடை செய்ய போராடுவோம் !!