ஜாதியா – வர்க்கமோ இந்திய சமூக அமைப்பைப் புரிந்துகொள்வதற்கும் விளக்குவதற்கும் உள்ளீடான கருத்தாக இருப்பது எது? சென்ற நூற்றாண்டிலிருந்து இக் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது தொடக்கத்தில் இங்கு நிலவிய சாதிய சமூகத்தை புரிந்து கொள்வதில் குழப்பம் அடைந்தனர் .போகப்போக இந்த அமைப்பு முறை தங்களது அதிகாரத்துக்கு எவ்வித ஊறும் விளைவிக்காத்தால் கவலையின்றி அரசோச்சினர்.
ஐரோப்பாவிலிருந்து வந்த கிறிஸ்தவ மதமும் அதற்கு முன்னதாக வந்திருந்த இஸ்லாம் மதமும் இந்தியாவில் தோன்றி பிறகு வெளியேறிய பௌத்த மதமும் ஜீவகாருண்யம் பேசி தோற்றுப் போன ஜைனமோ, தமிழர்களின் மாதமாக கருதப்படும் சைவமோ மற்றும் உள்ள பல்வேறு மதப் பிரிவுகளோ ஞானிகளோ, மேதைகளோ இந்திய சாதியத்தையும் தீண்டாமையையும் அசைத்துப் பார்த்து ஓய்ந்து போய் விட்டார்கள். அதன் வேரின் ஆழத்தைக் கண்டறிய முடியாமல் குனிந்தபடியே இன்னும் பலர் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
மறுப்பவர்கள் எப்படித்தான் மறுத்தாலும் காரணத்தைக் கண்டறிந்து மாற்றிய தத்துவமே. வரலாற்று பொருள் முதல்வாத அடிப்படையில் உலகிலுள்ள மற்ற சமூக அமைப்புகள் போன்றே இந்திய சமூக அமைப்பும் அதில் சில தனித் தன்மைகள். (விரிவான பகுதி பின்).
இந்தியப் புரட்சி எதிர்நோக்குகின்ற தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக ஜாதிய பற்றிய ஒரு சரியான புரிதலை ஏற்படுத்துகின்ற முயற்சி.
இந்திய வரலாற்றில் ஒரே களங்கமாய், இந்திய புரட்சிக்கு ஒரு சவாலாய் இன்றளவும் சாதி நிலவி வருகின்றது. உலகின் எந்த ஒரு மூலையிலும் பிறகும் எவன் ஒருவன் மீதும் மதம் வர்க்க முத்திரைகள் மட்டுமே பதிக்கப்படுகின்றன. இவ்விரண்டையும் அவன் விரும்பினால் மாற்றிக் கொள்வதற்கு அச் சமூகங்கள் கோட்பாட்டளவில் தடையேதும் விதிப்பதில்லை . ஆனால் இந்தியாவில் பிறக்கின்ற ஒருவன் இவைத்தவிர சாதிய முத்திரையும் தரித்துக் கொண்டு தான் இம்மண்ணில் கால் பதிக்க வேண்டியிருக்கிறது.
சாதியத்தினை புரிந்து கொள்வதற்கு பற்பல அணுகுமுறைகள், சாதியை வெற்றி கொள்வதற்கு பல கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனாலும் மார்க்சீயம் சாதியத்தைப் பற்றிய முன்னோறிய புரிதலை கொடுத்துள்ளது.
அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் முதலாளித்துவ சகாப்பத்தில் நுழைந்த போது நிறுவனமயப்பட்ட உரிமைகளை அனைவரும் கிடைக்க இடையறாது குரல் கொடுத்தார்கள். ஆனால் அவர்களை பொதுவுடைமைச் சிந்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவோ, உற்பத்திமுறையை மாற்றியமைப்பதன் ஊடாக மாற்றம் கொள்ள முடியும் என்று நம்பியவர்கள் அல்ல.
மேலும் சாதியம் பற்றி தெளிவடைய
இந்து மதம் சாதி மற்றும் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அது சாதி முறைக்கும், தீண்டாமைக்கும் புனிதத்தன்மையை வழங்குகிறது. எனினும் இந்துமதம் ஒரு மதம் என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான சமூகவேர்களும், சாதி மற்றும் தீண்டாமை நிலைத்திருப்பதற்கான சமூக வேர்களும் வெவ்வேறானவையாகும். மதம் ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்க சமுதாயத்திற்குள் (ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறைக்குள்) மட்டுமே அடங்கியிருக்கவில்லை. நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாத்து வரும் ஒரு மதம் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்ட பிறகும், முதலாளித்துவ ஒழுங்கு முறைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துக் கொன்டு, புதிய சுரண்டல்காரர்களும் ஒடுக்குமுறையாளர்களான முதலாளிகளுக்குச் சேவை செய்யக்கூடிய ஒரு ஆன்மீக ஒடுக்குமுறை கருவியாக மாறிவிடமுடியும். கத்தோலிக்க மதச் சபையின் வரலாறு இதற்கு ஒரு சான்றாகும். நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாக்க வந்த கத்தோலிக்க மதச் சபை, ஒரு நீண்ட நெடிய போரட்டத்துக்குப் பிறகு நிலப்பிரபுத்துவம் தோற்கடிக்கப்பட்டதும், அது முதலாளித்துவ ஒழுங்குமுறைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொண்டு, மீண்டும் புதிய சுரண்டல்காரர்களும் ஒடுக்குமுறையாளர்களுமான முதலாளிகளுக்குச் சேவை செய்யும் ஒரு ஆன்மீக ஒடுக்குமுறைக் கருவியாக மாறிவிட்டது.
இந்துமதம் இப்போது சாதி மற்றும் தீண்டாமையைத் தனது அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை ஒழிக்கப்பட்ட பிறகும் தன்னை புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டு தொடர்ந்து உயிர்வாழ்வது சாத்தியமானதேயாகும். புதியக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயத்தில் ஏற்படும் முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொண்டு தரகு முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்கிறது. இதிலிருந்தே மேற்கூறப்பட்ட சாத்தியப்பாட்டை அறியலாம். ஆனால் சாதிமுறை என்ற சமூக நிகழ்வுப்போக்கு அவ்வாறு தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. ஏனெனில் பரம்பரைத் தொழில் பிரிவினை (Social Division of Labour) அடிப்படையில் சாதிமுறை தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. ஆகையால் சாதி மற்றும் தீண்டாமையின் சமூகவேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமண முறை, உயர்வுதாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவப் பண்பாடே காரணமாகும். ஆகையால் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், பண்பாடும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டால் சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் தகர்ந்துவிடும். அதற்கு அடுத்த சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் சாதிமுறை தொடர முடியாது. இவ்வாறு, மதம் ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான வேர்களும், சாதிமுறை ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்து நிற்பதற்கான வேர்களும் வெவ்வேறானவை என்பதைக் காணலாம்.
மதம் சுரண்டலின் விளைவாகத் தோன்றும் ஒரு சமூக நிகழ்வாகும். சுரண்டலும். வர்க்க சமுதாயமும் ஒழிக்கப்பட்டு ஒரு சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதின் மூலம் மதத்தை ஒழிக்க முடியும். அத்தகைய ஒரு சமூக அமைப்பை ஏற்படுத்துவதற்கிடையில், மத ஒடுக்குமுறையிலிருந்து அரசியல் சுதந்திரம் பெறும் பொருட்டே மதநிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்துடன் எந்த சம்பந்தமும் கொண்டிருக்கக்கூடாது என்ற ஒரு தீர்வும், வர்க்க முரண்பாடுகள் நிலவும் சமுதாயத்தில் மக்கள் மதநம்பிக்கை கொள்வதற்கான சமூக வேர்கள் இருப்பதால் மக்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் பொருட்டும் அதே சமயம் மத மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான உரிமை என்ற முறையில் நாத்திகப் பிரச்சாரம் செய்வதற்கும், நாத்திகனாக இருப்பதற்கான உரிமையும் இருக்க வேண்டுமென்பதற்காகவும் மதம் தனிநபரது சொந்த விவகாரமாக்கப்பட வேண்டும் என்ற மற்றொரு தீர்வும் வைக்கப்படுகிறது.
நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்ட பிறகும் நிலைத்திருக்கக் கூடிய மதத்திற்கு எதிராக வைக்கப்படும் தீர்வுகள், நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்படுவதோடு ஒழிந்துவிடக் கூடிய சாதி மற்றும் தீண்டாமைக்கும் பொருந்தாது. ஆகையால் மதத்திற்கு எதிராக வைக்கப்படும் மேற்கூறப்பட்ட இரண்டு தீர்வுகள் சாதி ஒழிப்பதற்கு உகந்ததல்ல.
மேலும் தொடரும்…