சமூகத்தில் பெண்கள் நிலை-3
சமூகத்தில் பெண்கள் நிலை-3

சமூகத்தில் பெண்கள் நிலை-3

பெண்களின் உடை

நாட்டின் கலாச்சாரக் காவலர்களுக்கு பெண்கள் அணியும் உடை மீது எப்போதும் ஒரு கண். இந்த நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் சுமந்து திரியும் கருவியாக இவர்கள் பெண் உடலையே பார்க்கிறார்கள்.

கொடூரமான பாலியல் பலாத்காரக் கொலைகளுக்குச் சாக்கடையாக மாறிபோன ஆண் மனத்தின் வக்கிரங்களைக் காரணம் காட்டாமல், காவு கொள்ளப்பட்ட பெண்ணின் நடை, உடை, பாவனைகள் மீதே கேள்விகள் எழுப்படுகின்றன. மாணவிகள் ஜீன்ஸ், டி ஷர்ட் போன்ற ஆடைகள் அணியக் கூடாது என்பதான கட்டுப்பாடுகளைப் பல கல்வி நிறுவனங்களும் வலியுறுத்துகின்றன. சமுக ஆர்வலர்கள், ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளால் சமத்துவமாக’ மாணவர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் சில கல்வி நிறுவனங்களால் விதிக்கப்படுக்கின்றன.

நாங்கள் படிப்பை விட ஒழுக்கத்திற்குத்தான் முக்கியத்துவம் தருகிறோம் என்று விளக்கம் அளிக்கும் இந்த ஒழுக்கக் காவலர்களால் உண்மையில் மாணவர்களிடம் ஒழுக்கத்தையோ கட்டுப்பாட்டையோ கொண்டு சேர்க்க முடிந்ததா?

ஒரு பெண் தன் உடலை முழுவதுமாக மறைந்துக் கொண்டு வீதியில் சென்றால் மட்டும், அவளுக்கு எதிரான வன்முறைகள் நிகழாமல் இருந்துவிடுமா?

பாதிப்புக்குள்ளான பெண்கள் உடை விஷயத்தால்தான் அந்த பாதிப்புக்கு உள்ளானார்களா? உடைக் கட்டுப்பாட்டினால் வன்முறையையும் குற்றங்களையும் குறைத்து ஒழுக்கத்தை நிலைநாட்ட முடியாது. ஆடைகள் நம் உடலை மறைத்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டவையே. அவை நம்மைப் பாதுகாக்கும் கவசம் அல்ல. தவிர, உடை என்பது வெறும் கடமைக்காக அணிவதல்ல.

உடையில் ஒருவரது விருப்பம், அழகுணர்ச்சி, சுதந்திர உணர்ச்சி ஆகியவை வெளிப்படுகின்றன. இவற்றை வெளிப்படுத்தும் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் தேவை. குறிப்பாக, சுதந்திரச் சிந்தனைகள் அதிகமாக இருக்கும் இளம் பருவத்தினருக்கு இது அவசியம் தேவை. எந்த உடை ‘கண்ணியமானது’, எது கவர்ச்சிகரமானது’, எது ஆபாசமானது’ என்பவை எல்லாம் நபருக்கு நபர், சூழலுக்குச் சூழல் மாறுபடக்கூடிய அளவுகோல்கள்.

ஒருவருக்கு கண்ணியமானதாகத் தெரியும் உடை இன்னொருவர் கண்ணுக்கு ஆபாசமானதாகத் தெரியலாம். ஒரு சிலர் எதை அணிந்தாலும் பிறர் கண்ணுக்கு வசீகரமாகத் தெரியலாம். இவற்றையெல்லாம் பொதுமைப்படுத்தவே முடியாது. எனவே எந்த உடையை அணிய வேண்டும் என்பதை முடிவுசெய்யும் உரிமையையும் பொறூப்பையும் அவரவருக்கே விட்டுவிடுவதுதான் பக்குவமான சமுதாயத்தின் அணுகுமுறையாக இருக்க முடியும்.

அதே சமயத்தில், ஒரு சூழல், குறிப்பிட்ட ஒரு தருணம் ஆகியவை சார்ந்து தமக்குத்தாமே விதித்துக்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகளைப் பெரும்பாலான பெண்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

வேலைக்குச் செல்லும்போது அதிக வேலைப்பாடுகள் இல்லாத ஆடைகளும், விழாக்களுக்குச் செல்லும்போது கண்கவர் ஆடைகள் எனவும் சில விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். எனவே வெளியிலிருந்து யாரும் இதை அவர்கள் மீது திணிக்கத் தேவையில்லை. மொத்தத்தில், ஒருவர் அணியும் உடை அவரது சுதந்திரம். அடையாளம். அதைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரமோ தடுப்பதற்கான உரிமையோ யாருக்கும் இருக்க முடியாது.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *