ஒரு இடதுசாரி என்று கூறிக் கொள்ளும் பத்திரிக்கை வலதுசாரியாக செயல்படும் கேவலத்தை எங்கே சொல்வது???
முதலாளித்துவ பத்திரிக்கை கூட செய்தியை ஆய்ந்து அதன் தன்மையை பேசுகிறது ஆனால் சட்டம் தன் கடமை செய்யும் என்று ஏமாற்றும் வலதுசாரிகளை விட எந்த இடத்திலும் வித்தியாசமின்றி துளியும் கூச்சம் நாச்சமின்றி எழுதும் இவர்களை என்னவென்று சொல்வது???
வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை… விவசாயிகள் விரோத மோடி அரசுக்கு கிடைத்த அடி…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….
புதுதில்லி:
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சட்டங்களை நிறுத்திவைக்கக்கூட முடியாது என்று பிடிவாதம் பிடித்து வந்தவிவசாயிகள் விரோத மோடி அரசுக்கு கிடைத்த அடியாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமைந்துள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரங் களை அழிக்கும் வகையிலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதாயம் தரும் வகையிலும் மத்திய பாஜகஅரசு 3 வேளாண் திருத்த சட்டங்களை கொண்டுவந்தது. இச்சட்டங் களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லைகளை முற்றுகையிட்டு பல்வேறு மாநில விவசாயிகள் 48 நாட்களுக்கும் மேலாக கடுங்குளிரையும் தாங்கிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் அரசியல் கட்சிகள்,மாணவர், வாலிபர், மாதர் அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. பல விவசாயிகள் போராட்ட ஸ்தலத்தில் உயிரிழந்தனர். சட்டங்களை ரத்து செய்யக்கோரி சிலர் தற்கொலை செய்துகொண்டனர்.
இப்போராட்டத்தில் பெண்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையிலும் மத்திய பாஜக அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே விசுவாசமாக செயல்பட்டது. போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பல கட்டபேச்சுவார்த்தைகளில்,வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்றுபிடிவாதமாக கூறிவந்தது. சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று விவசாயிகள் உறுதியுடன் தெரிவித்து,போராட்டத்தை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் மத்திய அரசுகொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன்மீது நடைபெற்ற விசாரணையில், விவசாயசங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில்தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர். ஆனால் ஜனவரி 7 ஆம் தேதி நடந்த மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையிலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டிரிய ஜனதாதள எம்.பி. மனோஜ் கே. ஜா உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் திங்களன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வுமுன்பு விசாரணைக்கு வந்தன.இவற்றின் மீது நடந்த விசாரணையில், விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் விதத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கத் தயார் என்றால் விவசாயிகளுடன் பேச்சு\வார்த்தை நடத்த குழு அமைக்கிறோம். சட்டங்களை அமல்படுத்த அரசு பிடிவாதம் பிடிப்பது ஏன்?
சட்டங்களை நீங்கள் ரத்து செய்கிறீர்களா? அல்லது நாங்கள் உத்தரவிட்டு ரத்து செய்யவா? என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அப்போதும்கூட,வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை உச்சநீதிமன்றம் தடுக்க முடியாது என்று மத்திய அரசு தரப்பில் அராஜகமாக தெரிவிக்கப்பட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது ஜனவரி 12 செவ்வாயன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது விவசாயிகள் தரப்பில்ஆஜரான வழக்கறிஞர் எம்.எல்.சர்மா கூறுகையில், நீதிமன்றம் அமைக்கும் குழு முன்பு ஆஜராகமுடியாது என விவசாயிகள் கூறியுள்ளனர். ஒப்பந்த சாகுபடி என்பது வார்த்தை விளையாட்டுதான்; பயிர் இழப்பு ஏற்பட்டால் நிறுவனங் களுக்கு நஷ்டஈடு தர நேரிடும். நிறுவனங்கள் இழப்பீடு கேட்டால் நிலங்களை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று தெரிவித்தார். இதனை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், 3 வேளாண் சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா என்று மீண்டும் கேள்வி எழுப்பினர். மத்திய அரசிடம் கேட்டுச் சொல்லுமாறு தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலிடம் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பின்னர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சட்டங்களை மதிக்க வேண்டியது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எங்களுக்குள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு விவகாரங்களை தீர்க்க நாங்கள் முயலு கிறோம். அவற்றில் ஒன்று சட்டங்களுக்கு தற்காலிக தடை விதித்து,குழு அமைப்பது. இந்த குழு எங்களுக்கானது. விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என விரும்புபவர்கள் குழுவுக்கு செல்லலாம். இந்த குழுஉத்தரவுகளை பிறப்பிக்கவோ அல்லது உங்களை தண்டிக்கவோ செய்யாது. அறிக்கையை மட்டுமே எங்களிடம் சமர்ப்பிக்கும் .மத்திய அரசு புதிதாக உருவாக்கிய 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதிக்கிறோம். மறு உத்தரவு வரும் வரை புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது. புதிய வேளாண் சட்டங்கள் குறித்து முடிவெடுக்க 4 பேர் கொண்ட குழுவையும் நியமித்து உத்தரவிடுகிறோம். விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழுநியமிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை,குறைகளை குழுவிடம் விவசாயிகள் தெரிவிக்க வேண்டும். சுமூகத்தீர்வு காண விரும்புவோர் குழுவிடம் தங்களின் கோரிக்கைகளை முன் வைக்கட்டும். விவசாயிகள் கமிட்டிக்கு செல்லமாட்டோம் எனகூறும் வாதங்களை கேட்க நாங்கள்விரும்பவில்லை. நீதிமன்ற கமிட்டிக்கு செல்ல விருப்பம் இல்லாத விவசாயிகள் போராடபோகலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்குழு
விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் குழு உறுப்பினர்கள் பெயரை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த குழுவில் ஹர்சிம்ரத் மான், வேளாண் பொருளியல் அறிஞர் அசோக் குலாத்தி, வேளாண் ஆராய்ச்சியாளர் பிரமோத் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வாழ்வா, சாவா பிரச்சனை
“இவை வாழ்வா, சாவா என்றபிரச்சனைகளாகும். நாங்கள்சட்டங்களுடன் சம்பந்தப்பட்டி ருக்கிறோம். நாங்கள் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பாகவும் கவலை கொண்டிருக்கிறோம். இப்பிரச்சனையை மிகச்சிறந்த முறையில் தீர்த்திடவே நாங்கள்முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். எங்களிடம் உள்ள அதிகாரங் களின்கீழ், இந்தச் சட்டங்களை நிறுத்தி வைக்கிறோம்,” என்று தலைமை நீதிபதி கூறினார்.“இப்பிரச்சனைத் தீர்த்திடவே நாங்கள் விரும்புகிறோம்.அதனால் தான் ஒரு குழுவை அமைத்திருக்கிறோம். அதில் இடம்பெறு வதற்கான நபர்களின் பெயர் களைக் கொடுங்கள், நாங்கள் தீர்மானிக்கிறோம்,” என்றும் தலைமை நீதிபதி மேலும் கூறினார்.உச்சநீதிமன்றம் நால்வரின் பெயர்களைக் குழுவிற்குக் கூறியது.அதில் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா அவர்களும் ஒருவராவார். எனினும் அவர் குழுவிற்குத் தலைமையேற்க மறுத்துவிட்டார்.அரசாங்கத்தின் சார்பில் பிரச்சனையைத் தீர்க்க மேலும் கால அவகாசம் கோரப்பட்டது. இதற்கு, தலைமை நீதிபதி பாப்டே, “நீங்கள் இந்தப் பிரச்சனையை வலுவாகக் கையாள்வதாக நாங்கள் பார்க்க வில்லை. ஒருவேளை ரத்த ஆறு ஓடினால் யார் பொறுப்பேற்பது?” என்று அரசு வழக்குரைஞரைப் பார்த்து தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். (ந.நி.)
தீக்கதிரின் கட்டுரை மேலே, த இந்து கட்டுரை கீழே
உச்ச நீதிமன்றம் அமைத்த குழு வேளாண் சட்டங்களுக்கும், அரசுக்கும் ஆதரவானது; நாங்கள் ஆஜராகமாட்டோம்: விவசாயிகள் சங்கத்தினர் திட்டவட்டம்
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அமைத்த குழு வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானது, அரசுக்கு ஆதரவானது. அந்த குழுவின் முன் ஆஜராகமாட்டோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்்த்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம், சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.
அதுமட்டுமல்லாமல் வேளாண் சட்டங்கள் குறித்த கவலைகள், பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கவும், சிக்கல்களைக் களையவும் 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழுவில், “ பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா(மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசியஇயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி” ஆகியோரை நியமித்தது.
ஆனால், இந்த குழுவில் உள்ளவர்கள் அரசுக்கு ஆதரவானவர்கள், வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள். ஆதலால், குழுவின் முன் ஆஜராகமாட்டோம் என விவசாயிகள் சங்கத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
டெல்லி சிங்கு எல்லையில் நேற்று விவசாயிகள் சங்கத்தினர் நிருபர்ளுக்கு கூட்டாகப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது. விவசாயிகள் தலைவர் பல்பீர் சிங் ராஜ்வால் கூறுகையில் “ உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைக்கக் கோரி விவசாயிகள் கேட்கவே இல்லை. இந்த திட்டத்துக்குப்பின்னால் மத்திய அரசு இருக்கிறது.
உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் உள்ள சார்பற்றவர்கள் அல்ல. வேளாண் சட்டங்கள் எவ்வாறு விவசாயிகளுக்கு ஆதரவானது என எழுதியவர்கள். எங்கள் போராட்டம் தொடரும். எந்த குழுவின் கொள்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள். எங்கள் போராட்டத்தை திசைதிருப்ப மத்திய அ ரசு முயல்கிறது. 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடக்கும். உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த சட்டங்களை ரத்து செய்யட்டும். ” எனத் தெரிவி்த்தார்
மற்றொரு விவசாயி சங்கத் தலைவர் தர்ஷன் சிங் கூறுகையில் “ நாங்கள் எந்த குழுவின் முன்பும் ஆஜராகமாட்டோம். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து தீர்வு காணட்டும். எந்தக் குழுவும் தேவையில்லை. இந்த குழுவின் நோக்கமே போராட்டத்தைத் தணிக்கத்தான்” எனத் தெரிவித்தார்.

40 விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் “ உச்ச நீதிமன்றம் தன்னுடைய சொந்த அறிவுக்கு உட்பட்டு குழுவை உருவாக்கியுள்ளது. இதைப் பற்றி வேறுஏதும் கூற விரும்பவில்லை. எந்தவிதமான குழுவும் தலையிட்டு பேசும் விவகாரத்தில் விவசாயிகள் சங்கத்துக்கு விருப்பமில்லை, நாங்களும் ஆஜராகமாட்டோம். இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள்,எழுதியவர்கள். எங்கள் பேச்சுவார்த்தை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமும், அதன் கொள்கை வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டங்கள் குறித்துத்தான். பல்வேறு சக்திகள் மூலம் எங்கள் போராட்டத்தை வலுவிழக்கச் செய்கிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து இந்திய கிசான் சங்கார்ஷ் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில் “ பல்வேறு சக்திகளால் நீதிமன்றம் தவறாக வழிநடத்தப்படுகிறது என தெளிவாகத் தெரிகிறது. நீதிமன்றம் அமைத்தகுழுவில் உள்ள 3 பேர் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்கள்.” எனத் தெரிவித்தது.