கொரொனா குறித்து நான் இதுவரை ஏதும் எழுதவில்லை. இது மருத்துவர்கள் பேசவேண்டிய காலம். இந்தத் துயரக் காலத்தில், “நாங்கள் அப்போதே சொன்னோம் கேட்டீர்களா?” என்று சூழலியல் சார்ந்த பதிவுகளைப் போடுவது சரியல்ல என்று ஒதுங்கியிருந்தேன். ஆனால், கொரொனா சிக்கலுக்குத் தீர்வாக இந்திய ஒன்றியம் முழுதும் குப்பென்று கிளம்புகின்ற ஆன்மீக அறிவியலாளர்களின் கருத்துகள் சகிப்புத்தன்மையின் எல்லைகளை மீற வைக்கின்றன. கொரொனா என்கிற நுண்ணுயிரி கடவுள்களையும் மதங்களையும் தொடர்பு எல்லைக்கு அப்பால் விரட்டியடித்துள்ள நிலையிலும் அபத்தங்கள் உச்சத்தைத் தொடுகின்றன.
மருத்துவத்தின் துணையோடு துயரினை வெல்ல வேண்டிய நேரத்தில் ஆட்சியாளர்கள் கோடங்கிகளாக மாறி உடுக்கடித்து நம்மைக் கற்காலத்துக்கு அனுப்ப முனைகின்றனர். இது தற்போது மட்டும் நிகழும் காட்சியன்று. வடவர்களின் இந்த ஆன்மீக அறிவியல் தீர்வுகள் முந்தைய காங்கிரஸ் கால ஆட்சியிலும் முன்வைக்கப்பட்டுள்ளன. அரியலூர் மருதையாற்றுப் பாலத்தில் இருமுறை நடந்த விபத்துகளைத் தொடர்ந்து அன்றைய ரயில்வே துணை அமைச்சராக இருந்த மாதவராவ் சிந்தியா அங்குள்ள தீய ஆவிகளை விரட்ட யாகம் செய்யுமாறு அறிவுறுத்தினார். போபால் துயர நிகழ்வின்போது பேரிடருக்கு தீய ஆவிகளே காரணம் என்று கூறி சுற்றுச்சூழலை தூய்மை செய்ய அன்றைய ஆட்சியாளர்களால் ‘அதிருத்ர யாகம்’ நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் அம்மையார் ஆட்சிக்காலத்திலும் அரசியல் தீர்வுக்கு ஆன்மீக அறிவியல் முறையில் யாகங்கள் நடந்ததை அறிவோம். அந்த மரபின் தொடர்ச்சியாக ஏப்ரல் 1, 4 தேதிகளில் பூட்டப்பட்ட கோயில்களில் ‘கிருமி சம்ஹார யாகம்’ செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. யாகத்தால்தான் கொரொனா ஒழிந்தது எனப் பிற்பாடு சொல்லிக்கொள்ள இது வசதி. மருத்துவர்களின் திறமையும் ஊழியர்களின் உழைப்பும் எக்கேடு கெட்டால் எவருக்கென்ன? அதற்குதான் கைத்தட்டி விட்டோமே?
அதர்வ வேதத்தில் கிருமி அறிவியல்
கிருமி சம்ஹார மந்திரங்கள் அதர்வ வேதத்தில் உள்ளன. கிருமி என்கிற சொல்லுக்கு ஆர்.டி.எச். கிரிஃப்த் புழு (Worm) என்றுதான் விளக்கம் கொடுத்துள்ளார். அவை, நுண்ணுயிர் என்கிற பொருளில் கையாளப்படவில்லை. அது, கண்களுக்குப் புலனாகும் உயிரியாகவே உள்ளது. ஒரு சுலோகத்தில் (1:67:2) கிருமி நான்கு கண்களையுடைய புழுவாகவும், வெண்மை மற்றும் பல நிறங்களை உடையதாகவும், கிருமியின் விலா எலும்பு நசுக்கப்படுவதாகவும் விவரணைகள் உள்ளன. அவற்றைக் கண்டறிய நுண்ணோக்கி தேவையில்லை போலும்.
ஒரேயொரு சுலோகத்தில் (1:66:2) ‘கண்ணுக்கு புலப்படாத’ என்கிற சொல் இருப்பது உண்மைதான். ஆனாலும் குருரு, அலாண்டு, ச்சாலுனாஸ் போன்ற கிருமிகளை இந்திரன் தனது பெரிய அரவைக் கல்லில் தானியங்களை இட்டு அரைப்பது போல அரைத்து விடுவாராம் (1:66:1) என்கிற பதத்தில் அதன் உருவ தோற்றம் குறித்த அய்யம் எழுகிறது. மனித உடல் தவிரப் பசுவின் உடல், மலைகள், காடுகள், தாவரங்கள், கால்நடைகள், தண்ணீர் ஆகிய சுற்றுச்சூழலிலுள்ள கிருமிகளின் முழுத் தலைமுறையையும் நாசம் செய்வேன் (1:66:5) என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பலமுறை நடத்தப்பட்டுள்ள கிருமி சம்ஹார யாகங்களினால் கிருமிகளின் தலைமுறையே ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தக் கொரொனா வைரஸ் மட்டும் அடங்காது போலுள்ளது. அது ஏழாவது வகைமையாகக் கொவிட்-19 என்ற அவதாரம் எடுத்துள்ளது. பகவான் அவதாரம் எடுக்கிறாரோ இல்லையோ நுண்ணுயிரிகள் எடுக்கின்றன. ஆனால், யாகங்களினால் என்ன பலன்? என்று மட்டும் கேட்கக்கூடாது. ஒரு சுலோகத்தில் (1:67:6) ‘நீ எவற்றால் முட்டுகிறாயோ அவற்றை உடைத்து உன்னைக் கொல்வேன்’ என்கிற வரி வருகிறது. இது அடிப்படையில் மாட்டின் கொம்பு பற்றிய உருவகம். மேய்ச்சல் நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரியர்களுக்கு இத்தகைய கற்பனை தோன்றுவது இயல்பானதே. ஆனால், தற்காலத்தில் இந்த உருவகத்தை, ‘பார்த்தீர்களா அன்றே கொரொனாவுக்குக் கொம்பு போன்ற அமைப்பு இருப்பதை வேதம் கண்டுப்பிடித்துவிட்டது’ என்று கிளம்பப் போகும் ஆன்மீக அறிவியலாளர்களை நினைத்தால்தான் வயிற்றைக் கலக்குகிறது.
அதிர்வலை அறிவியலும் பிளேக் நோயும்
சில நாட்களுக்கு முன் நிறைய ‘வைப்ரேசன் சயன்டிஸ்டுகள்’ தோன்றியதைப் பார்த்தோம். பிரதமர் கைத்தட்ட சொன்னதும், கைகளைத் தட்டினால் அல்லது உலோகத்தைத் தட்டி ஒலியெழுப்பினால் நுண்ணுயிரிகள் ஓடிவிடும் என்கிற அறிவியல் தத்துவங்களை நாடறிந்த நடிகர்களே உதிர்த்தனர். அப்படித் தட்டிய பிறகே கொரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. வெளியில் மேய்ந்த வைரஸ்கள் அனைத்தும் அதிர்வலைக்கு அஞ்சி மனித உடலுக்குள் ஒளிந்திருக்கலாம். கேட்டால் பிளேக் நோய் பரவிய காலத்தில் ஆலயமணிகள் ஒலிக்கச் செய்ததால்தான் நோய் ஒழிந்தது என்று மேற்குலக நிகழ்வை சான்றாகக் காட்டுகின்றனர். அது என்ன சான்று?
தேவாலய மணிகள் ஒலித்துப் பிளேக் நோய் குறைந்தது என்கிற கூற்றைச் சோவியத் பொறியாளரான கார்போவ் என்பவர் ஆய்வு செய்தார். அவர், உலோக மணியிலிருந்து எழுந்த கேளா ஒலியை (Ultra Sound) தாக்குப்பிடிக்க முடியாமல்தான் எலிகள் தொலைவாக ஓடியொளிந்தன என்பதை அறிந்தார். எலிகள்தான் பிளேக் நோயைப் பரப்பும் வாகனம். அவை பதுங்கியதால் நோய்ப் பரவல் கட்டுப்பட்டது. இந்த உண்மை புரியாமல் நுண்ணுயிரிகளே ஓடிஒளிந்தது போலப் பேசப்படுகிறது. இந்தச் செய்தியை இங்குப் பரப்புபவர்கள் யார் தெரியுமா? பிளேக் நோயைக் கட்டுப்படுத்த பிரிட்டிசார் எலிகளை ஒழிக்க முனைந்தபோது, ‘அவை விநாயகரின் வாகனம், அழிக்கக்கூடாது’ என்று எதிர்ப்புக்குரல் கொடுத்த பாலகங்காதரரின் வாரிசுகளே!.
கோவிட்-19 தனக்கென எந்த உயிரி வாகனத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. அதுவே தன்னிச்சையாய் அலைகிறது. அவை, ஒலியலைகளுக்கு அஞ்சி எந்தக் கால்களால் ஓடும்?
மந்திரங்கள் அறிவியலா?
மந்திரத்துக்குப் பலன் உண்டு. அதுவொரு தொல் அறிவியல் (Proto Science) என்கிற கருத்தை தூக்கிக்கொண்டு சிலர் ஓடிவருகின்றனர். பிரிட்டிஷ் அறிவியலாளர் ஜோசப் நீதாம், ‘அறிவியலும் மந்திரமும் தொடக்கத்தில் பிரித்தறிய முடியாத தொல் அறிவியலாக இருந்தன’ என்று கூறியது உண்மையே. ஆனால், அது தொல்காலத்துக்கு மட்டுமே பொருந்தும். நவீன காலத்துக்கு அல்ல. அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்பவர்கள் என்.என்.பட்டாச்சார்யாவின் கருத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘மந்திரத்தின் இயல்பான நோக்கம் உற்பத்தி ஆற்றல் சார்ந்த பொருளாதாரம்தான்’
அதர்வ வேத மந்திரங்கள் உள்ளிட்ட இதர மந்திரங்களும் உற்பத்தி ஆற்றல் சார்ந்த மந்திரங்களே. அவை கால்நடை மேய்ச்சல் பொருளாதாரத்தைச் சார்ந்திருந்த ஆரியர்களின் மந்திரங்கள். அதர்வ வேதத்தின் இரு கிருமி சம்ஹார மந்திரங்களில் ஒன்று முழுக்கவும் கால்நடைகளுக்குக் குறிப்பாகப் பசுக்களுக்கான கிருமி சம்ஹாரத்தைப் பற்றிப் பேசுவதாகும். இன்றைக்கு என்ன மொத்த சமூகமும் பால் பண்ணைகளா வைத்துக் கொண்டிருக்கிறோம்?
மானுடவியல் பார்வையில், ‘இயற்கையின் இயக்க விதிகள் சரிவரப் புரியாத ஆதிமனிதர்கள் இயற்கையைக் கட்டுப்படுத்தவும், இயற்கையிலிருந்து சில பலன்களைப் பெறவும் உருவாக்கியதே மந்திரம்’ ஆகும். ‘ஆவியுலகக் கோட்பாடு (Animism) ஆதிக்கம் செலுத்திய இடமெங்கிலும் மந்திரங்கள் தோன்றின’ என்பார் அறிஞர் பெய்சன். ஆதிமனிதருக்கு இடி, மின்னல், மழையைப் போன்றே நோய்களும் இயற்கையின் புரியாத புதிராக விளங்கியது. நோய்களால் தொடர்ந்து ஏற்பட்ட மரணங்களால் அவர்கள் கலவரமடைந்தனர். உற்பத்திக்கான மந்திரங்களைப் போலவே அழிப்புக்கான மந்திரங்களையும் உருவாக்கினர். அதாவது, மனிதர்களையும் கால்நடைகளையும் பயிர்களையும் பாதிக்கும் ஆற்றல்களை அழிக்கும் மந்திரங்கள் உருவாக்கப்பட்டன.
மந்திரங்கள் மதங்களுக்கு முற்பட்டவை. ரிக் வேத மந்திரங்கள் உருவாக்கப்பட்டபோது ஆரியர்களிடம் கடவுள்கள் இருந்தாலும் மதம் இல்லை. பின்னர், மதம் உருவானபோது மந்திரங்கள் உள்ளிட்ட புராதன பழக்க வழக்கங்கள் மதத்துக்குள் அடைக்கலம் புகுந்தன என்பார் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா. அதனால், தொடக்க கால மந்திரங்களும் இணைந்து புகுந்தன. அதற்கு, மந்திரங்களின் மூன்று உட்கூறுகளான விருப்பம், செயல், சொல் ஆகியவை மதத்தின் நிலைக்கும் பொருந்தியதே காரணம். விருப்பம் என்பது அடைய வேண்டிய பலன். செயல் என்பது மந்திரச் சடங்குகள். சொல் என்பது மந்திரங்கள்.
பலியாடுகள்
மானுடத்தின் அநாகரிக காலத்தில் உளவியல் வழிக்காட்டியாக மந்திரங்கள் தேவைப்பட்டன என்பார் சட்டோபாத்யாயா. ஆனால், அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள நாகரிக காலத்தில் மந்திரங்களின் உளவியல் பலன் காலாவதியாகி விட்டன. இந்த உண்மையை அறிந்தவர்கள் அதிலிருந்து அறிவுபூர்வமாக விலகி நிற்கிறார்கள். அறியாதவர்கள் Scapegoat என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுபோன்ற பலியாடு கோட்பாட்டு மனநிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இதற்கு மத வேறுபாடுகள் கிடையாது. .
நம் துன்பங்களைப் பிறருக்கோ அல்லது பிற பொருட்களுக்கோ மாற்றமுடியும் என்பது அநாகரிக காலச் சிந்தனைகளுள் ஒன்று. அதற்கான ஊடகமே பலியாடு. சான்றாக, சனாதன கோட்பாட்டைப் பின்பற்றும் ஒருவர் தான் பாவங்களைச் சம்பாதித்துள்ளதாக நம்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தன் மரணப்படுக்கையில் இருக்கும்போது அவருக்கு முன்பாகப் பசு ஒன்று நிறுத்தப்படும். அவர் அதன் வாலை தடவிக் கொடுப்பார். அப்போது அவரது பாவங்கள் பசு மாட்டுக்கு மாற்றப்படும். பாவங்களை வாங்கிய அந்த மாட்டை, சவுண்டி பார்ப்பனர் ஒருவர் தானமாகப் பெற்று அழைத்துச் செல்வார்.
மத அரசியல் கிளர்வுறும் தற்காலத்தில் நமது அறிவையும் மாட்டின் வாலைத் தடவி எங்கோ கடத்திவிடுகிறோம். அதற்கான பலனை பெறுபவர் யார் என்று யோசிப்பதில்லை. அதனால்தான், மோடி மஸ்தான் வித்தைக் காட்டுவது போலப் பிரதமர் கைத்தட்ட சொன்னால் தட்டுகிறோம். மின்விளக்கை அணைத்து அகல்விளக்கு ஏற்றச் சொன்னால் அதற்கும் அணியமாகிறோம். பிரபஞ்சத்தில் எட்டுக் கோள்கள் மட்டுமே இருந்தாலும் ஒன்பது மணி ஒன்பது நிமிடம் என்பதற்கு நவக்கிரக அறிவியல் விளக்கங்கள் கொடுக்கவும் ஆயத்தமாகிறோம்.
மோசமாகும் பொருளாதாரச் சிக்கல் முதல் என்.ஆர்.சி சிக்கல் வரை எதையும் ஒன்பது நிமிட இருட்டுக்குள் ஒளித்துவிட முடியாது. அகல்விளக்கு என்ன மின்விளக்குகளாலும் அகற்ற முடியாத இருள் நமக்காகக் காத்திருக்கிறது. திட்டமிடாது செயற்படுத்தப்பட்ட ஊரடங்கால் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடந்த ஆயிரக்கணக்கான மனிதர்களுள் ஒருவராக நாம் இருந்தால் கைத்தட்டுவோமா? அவர்களைப் போன்ற பலரது வாழ்க்கையை இருளில் தள்ளிவிட்டு நாம் விளக்கேற்றுவது அயோக்கியத்தனமில்லையா? அல்லது ஏப்ரல் 5 ந்தேதி பாஜக கட்சியின் 40வது ஆண்டு நிறைவு நாள் என்பதால் அதற்கான கொண்டாட்டமா இது?
ஒட்டுமொத்தமாக அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களும் பூட்டப்பட்டுக் கடவுள்கள் நீண்ட விடுப்பில் சென்றுள்ள நிலையில் தற்போதாவது நாம் மூளைக்குக் கொஞ்சம் வேலைக் கொடுத்து யோசிக்கலாம். உலக நாடுகளிலேயே இந்திய ஒன்றியத்தின் அரசியல் சாசனத்தில் மட்டும்தான், ‘அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமை’ என்று எழுதப்பட்டுள்ளதாம். அது அசல் அறிவியலா? அசட்டு அறிவியலா? என்பதை நாம்தாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
கொரொனா ஒளிப்படம் – நன்றி : BBC