லெட்சுமி நாராயன் ரெட்டி. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவப் பணிகளைச் செய்து வந்தவர். 56 வயது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் தன்னுடைய கனவு மருத்துவமனையை ஏப்ரல் நான்காம் தேதிதான் திறந்திருக்கிறார். மறுநாள் ஐந்தாம் தேதி ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்கிறார். அதுதான் தன்னுடைய கடைசி மருத்துவப் பணி என்பதை அவர் நினைத்திருந்திருக்க மாட்டார். 24 நான்கு மணி நேரம் கூடச் செல்லவில்லை. கொரோனாத் தொற்றுப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமோ…? என்ற அளவிற்கு ஒரு அச்சம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. தாமதிக்காமல் தன்னைப் பரிசோதித்துக் கொள்கிறார். கால் நூற்றாண்டிற்கும் மேலாக மருத்துவம் செய்தவர். ஏராளமான மருத்துவ நண்பர்களைக் கொண்டவர். வசதி படைத்த உறவினர்கள். பரிசோதனையின் முடிவு அவருக்கு ஒன்றும் அதிர்ச்சி தரவில்லை. முடிவு பாசிட்டிவ். கொரோனாவை எதிர்கொள்ளத் தயாராகிறார். சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறார். மருத்துவ நண்பர்களை உதவிக்கு அழைக்கிறார். ஆம்புலன்ஸ் ஒட்டுனர்களை உதவிக்கு அழைக்கிறார். அனைவருமே தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டார்கள். இப்போது அவருக்கென நண்பர்களோ, உறவினர்களோ இல்லாமல் போய்விட்டார்கள். உலகமே இருண்டுவிட்டதைப் போல உணர்கிறார்.காலம் எவ்வளவு கொடுமையானது. மனம் உடைந்து போகிறார் மருத்துவர் ரெட்டி. நோயைவிட அவர் வாழ்ந்த சமூகம் அவரைக் கைவிட்டது கண்டு இதயம் நொறுங்கிப்போகிறார். ஏப்ரல் 5-ஆம் தேதி, தான் நினைத்ததைப்போலவே அப்பல்லோ மருத்துவ மனையில் அட்மிட் ஆகிவிட்டார். இந்த 24 மணி நேரம் அவருக்கு 24 ஆண்டுகளைப் போலக் கடந்தது. கொரோனா எல்லோரையும் கொன்றுவிடுவதில்லை?. ஆகப்பெரும் சிகிச்சைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார். ஒரு மருத்துவராக அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் வாழ்ந்த இந்தச் சமூகத்தின் முன்பாக அவர் தோற்றுவிட்டார். மூத்த மருத்துவரான ரெட்டி நேற்று (13.04.2020) அதிகாலை 4.30 மணியளவில் இறந்தே போய்விட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிமிடம் முதல் தன்னுடைய கடைசி மூச்சை நிறுத்திக் கொள்ளும் வரை அவர் நினைத்திருக்கக்கூடும்… கொரோனாவை விட இந்தச் சமூகமூம், தான் நேசித்த உறவுகளும் எத்தகையக் கொடூரமான மனம் படைத்தவர்கள், அல்லது அறியாமையில் உள்ளவர்கள் என்று…..ஆம், அவர் நினைத்ததுதான் இப்போது நடந்திருக்கிறது.ரெட்டியின் மனைவி, இரண்டு பிள்ளைகள், அவருடைய ஓட்டுனர் என அனைவரும் இப்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்கள். ரெட்டியின் உடலுக்கு இப்போது யாரும் உரிமை கோரவில்லை. அவர் நம்பி வந்த மருத்துவமனை உட்பட. செத்த பின்பும் இப்போது மீண்டும் ஒருமுறை சாகடிக்கப்பட்டிருக்கிறார் ரெட்டி.ஒருவரின் வாழ்வரிமை என்பது, இறந்த பின்னரும் அவர் கண்ணியமாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதையும் சேர்த்தே உள்ளடக்கியுள்ளது.சென்னை அம்பத்தூர் மின் மயானத்தில் ரெட்டியின் உடலை எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராடியிருக்கிறார்கள். பல மணி நேரத்திற்குப் பிறகு அவரது உடல் மீண்டும் மருத்துவமனையின் பிணவறைக்கே கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.மின் மயான ஊழியர் அச்சம் கொள்வதற்கு நியாயம் இருக்கிறது. அந்த ஊழியரின் அச்சம் ஒரு பாதுகாப்பான உடையின் மூலம் தவிர்க்கப்படக்கூடியது. ஆனால், பல ஆண்டுகளாக மின் மயானத்தின் அருகில் வசிப்பவர்கள், இந்த மருத்துவரின் உடலை எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது அறியாமையின் உச்சம். இது ஏதோ அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மக்களின் அறியாமை மட்டும் அல்ல. நாடுமுழுவதும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்தக் கொடுங்காலம் நமக்கு உணர்த்துகிறது.வீட்டை விட்டு மருத்துவர்களை வெளியேற்றுவது, மருத்துவப் பணியாளர்களுக்கு உணவு தர மறுப்பது போன்ற “கூட்டு மனசாட்சி”தான் அம்பத்தூர் மக்களிடமும் வெளிப்பட்டிருக்கிறது.உலகிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டுள்ளதாக பெருமை போற்றப்படும் தமிழகத்தில்தான் இந்த அவலம் ஏற்பட்டிருக்கிறது. இறந்துபோனவர் எவராக இருந்தால் என்ன, சடலத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். தமிழக அரசும், ஆந்திர அரசும் மருத்துவர் ரெட்டிக்குச் செய்ய வேண்டிய இறுதி மரியாதையைச் செய்து அடக்கம் செய்ய வேண்டும். மக்களின் அறியாமையைப் போக்க வேண்டும்.ஒரே நாடு, ஒரே ரேசன் அட்டை என்று பேசப்படும் இந்தத் தருணத்தில் மருத்துவர் ரெட்டியின் மரணம்கூட தமிழகத்தின் கணக்கில் வராமல் போய்விட்டது. ஆந்திர அரசு தனது மரணப் பட்டியலில் ஒரு எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டுள்ளது.மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம் என்ற பெயரில், கைதட்டியது, விளக்கு வைத்தது எல்லாமே வெற்று ஆரவாரமாகவே போயிருக்கிறது. நாம் கட்டமைத்துள்ள கூட்டு மனசாட்சி என்பது கொரோனா-வைவிட மிகக் கொடூரமானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்க்ப்பட்டுள்ளது.கொரோனாவிற்கு எதிரான போரில் முன்வரிசையில் இருப்பவர்கள் மருத்துவப் பணியாளர்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தப் போரில் மருத்துவர்கள்தான் இணையற்ற வீரர்கள். அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. யாரோ ஒரு தனியார் மருத்துவர் என்று நாம் எளிதில் புறந்தள்ளவிடக் கூடாது.நாடும், நாட்டு மக்களும் தங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு மருத்துவப் பணியாளர்களும் உணர வேண்டும். அந்த நம்பிக்கைதான் நம்மைக் காக்கும்.”கூட்டு மனசாட்சி”யின் கோர முகத்தை நாம் மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டிவிட வேண்டாம்.#ஆ_தமிழ்மணி_வழக்கறிஞர்#self_quarantine_day_2114.04.2020/04.00pm#Tamilmani_advocate_post