குயில்களின் கூவல் (சிறுகதை)-செ. கணேசலிங்கன்
குயில்களின் கூவல் (சிறுகதை)-செ. கணேசலிங்கன்

குயில்களின் கூவல் (சிறுகதை)-செ. கணேசலிங்கன்

“சேனா என்னிடம் வருவதாகச் சொன்னன். வந்தால் ஏதாவது செய்தி சொல்ல வேண்டுமா” என்றுமட்டும் கேட்டேன்.திடீரென பால் பொங்கி வழிவதுபோல சீதா கேவிக் கேவி குரலுடன் விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டாள். என், நிலை தர்மசங்கடமாகிவிட்டது; அதிகம் பழகாக என்முன்னே ஒருபடித்த இளம் பெண் அழுகிறாளே. காரணம் எதுவும் அறியாது நான் குழம்பினேன்.‘இவர் மிஸ்டர் சேனாரட்ன. சேனா என்று அழைப்போம். எனக்கு மிகவும் வேண்டியவர். இங்கே இரவு தங்சிச் செல்ல உதவவும்.நீண்ட நாள் நண்பரான குனத்திலகா இரவு 9 மணி வரையில் ஒரு இளைஞரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினர். ‘எனக்கு அவசர வேலை இருக்கிறது மன்னிக்கவும். அவர் உடனே காரில் ஏறிப் போய் விட்டார். அவரது அவசரம் எனக்குப் புதிதல்ல. மிகச் சுறுசுறுப்பானவர். எதற்கு உதவுவதிலும் முன்னிற்பவர். அவருக்கு இந்திய முறையிலான சைவ உணவு மிகவும் பிடிக்கும். வீட்டுக்கோ, ஒட்டலுக்கோ மத்தியான உணவிற்குப் போக முடியாவிடின் ஒரு மணிக்குச் சாப்பிட வருவதாக டெலிபோன் செய்வார். ஆனால் வந்துசேர இரண்டு மணி ஆகிவிடும்.வலிந்து சிரிக்க முயன்ற அந்த வாலிபனை நிமிர்ந்தான். அழுக்கடைந்த சட்டை, வாராத தலை முகத்தில் தாடி வளர்ந்திருந்தது. படித்த இளைஞன்தான். ஆனாலும் சிங்களம்தவிர வேறு மொழியில் பேசத் தெரியாது. ஆங்கிலம் ஓரளவு புரியும். பேச வராது. சிங்களம் நன்கு பேசத்தக்க எனது மகனின் உதவியுடன் மாற்று உடை கொடுத்தேன். பின் குளிக்கச் செய்து, உடைகளைத் தோய்த்து உலரப்போடச் செய்தேன், மனைவியார் தோசை சுட்டுக் கொடுக்க ஆர்வமாகச் சாப்பிட்டான். அவன் பற்றிய விபரங்களைக் கேட்டறிய நான் விரும்பவில்லை. மேலும், மொழி ஒரு பிரச்சனையாக இருந்தது. காலையில் ஏழு மணிவரையில் தூக்கம்விட்டு எழுந்ததும் உடைகளை மாற்றிக் கொண்டு காப்பிமட்டும் அருந்திவிட்டுப் புறப்பட்டு விட்டான்.பின், இரண்டு மூன்று மாதம் கழிந்திருக்கும். இரவு 10 மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டது. திறந்தபோது சேனாவே. அவனது வரட்டுச் சிரிப்பிலிருந்தே எதற்காக வந்துள்ளான் என்பதை அறிந்து கொண்டேன். யாவும் உதவினேன். முன்போல நீண்ட மேசை ஒன்றில் பாய் தலையணைபோட்டுத் தூங்க ஏற்பாடு செய்தேன்.இரவு 2 மணிவரை இருக்கும். பயங்கர சத்தம் கே ட் டு விழித்தேன். “ஆ, ஊ” என்ற ஒலியோடு சிங்களத்தில் பலத்த ஓசை கேட்டது. இரண்டு மூன்று நிமிடம் வரையிருக்கும். சேனாவின் அருகில் சென்றபோது சத்தம் ஓய்ந்துவிட்டது, உடலெல்லாம் வியர்த்திருந்தது. மீண்டும் குறட்டைச் சத்தம் தொடர்ந்தது. அரவம் ஏற்படுத்தாது வந்து படுத்துக் கொண்டேன். அவ்வேளை விழித்துவிட்ட என் மகன் சேனா சத்தமிட்ட சிங்களச் சொற்கள் சிலவற்றை தமிழிற் கூறினன். பிராய் டின் கனவு பற்றிய கருத்துக்கள் ஒரளவு படித்திருந்தேன். நினைவிலி மனதின் புலம்பல் எவருக்கும் நடைபெறலாம் என சமாதானம் செய்து கொண்டேன்.இரண்டு மாதங்கள்வரை கழிந்திருக்கும். வெள்ளவத்தை நடை பாதையில் சேனாவை பொழுது கருகும்வேளை ஒரு பெண்ணுேடு பார்த்தேன். இவன் சேனாவா என்ற சந்தேகமே ஏற்பட்டது. அவன் என்னைப் பார்த்துச் சிரித்த பின்னரே அவன் சேனாதான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். அந்தப் பெண்ணிற்கு என்னைப் பற்றி சுட் டிக் காட்டி ஏதோ கூறுவதுபோல் இருந்தது. இருவரும் சிரித்தபடியே என் எதிரே வந்தனர்.முன் கண்டவர்களால் தற்போது சேனாவை அடையாளமே காண முடியாது. வெள்ளை சட்டையும் முழு நீள கால்சட்டையும் அணிந்திருந்தான். சவரம் செய்து, தலை சீவியிருந்தான். உசாரான தோற்றம், அவனது நடையும் சிரிப்பும் அவனைப் பற்றி முன்னர் நான் கொண்டி ருந்த கருத்தையே மாற்றிவிட்டன.”சீதா” என்று அந்தப் பெண்ணைப் பெயர்மட்டுமே சொல்லி அறிமுகப்படுத்தினன். அவள் கரிய நிறந்தான். ஆனால் எடுப்பான தோற்றம். கூரான நாடி. பளிச்சென்ற பல்வரிசை, மயிரைப் பின்னிவிட்டிருந்தாள். சாதாரண நூல்சேலைதான் உடுத்திருந்தாள். ஜாக்கெட் கைகள் இடையோடு அளவாகப் பொருந்தும்விதமாக அழகாகத் தைக் கப்பட்டிருந்தது. கல்லுரரிவரை படித்த பெண் என்பது நன்கு தெரிந்தது. அவள் ஆங்கிலத்தில் நன்கு பேசினாள்.இருவரையும் என் புத்தகக் கடைக்கு அழைத்துச் சென்றேன். இரண்டு ஸ்டூலைப் போடச் செய்து உட்காரும்படி வேண்டினேன். அவர்கள் உட்காரவில்லை. இருவரும் அங்கிருந்த நூல்களை நோட்டம் போட்டு’இரண்டு மூன்று நூல்களையும் ஒரிரு சஞ்சிகைகளையும் வாங்கிக் கொண்டனர். பணம் வேண்டாம் என்ற போதும் அந்தப் பெண் வற்புறுத்திப் பணம் தத்தாள். இருவரும் விடை பெற்றுச் சென்றனர்.சீதா அவனின் காதலியா? உறவினரா என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. நானும் கேட்கவில்லை. முன்னெரு தடவை இச்சந்தேகத்தில் நான் குட்டுபட்டது நினைவில் வந்தது.ஒரு இளம் பெண்ணுடன் நாடகம் பார்க்க வந்த நண்பனைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டு விட்டேன்.”கேள் பிரெண்டா? காதலியா?? “என் சிஸ்டர். விடுமுறைக்கு வந்திருக்கிறாள்.”முகத்தில் அறைந்தது போலாயிற்று. ‘சொறி” என்று சொல்லிச் சமாளித்தேன். அதன் பின்னர் அந்த நண்பனைக் காணும்போதெல்லாம் மனம் கூசியது.மீண்டும் ஒருதடவை மாலையில் இருவரும் புத்தகக் கடைக்கு வந்திருந்தனர். சில நூல்கள் வாங்கிச் சென்றனர், சீதா வாங்கிய நூல்கள் எனக்கு அவள்மேல் ஓர் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது. அறிவில் நாட்டமும் அரசியலில் ஆர்வமும்முள்ள பெண்கள் சிங்களமக்களிடை உள்ளார்களே என்று வியந்தேன்.ஆறு வருடங்கள்வரை கழிந்துவிட்டன. அவர்களை நான் காணவில்லை. அவர்கள் புத்தகக் கடைக்கும் வரவில்லை.சீதாவை இரண்டு மூன்று தடவை எதிர்பாராது கண்டிருக்கிறேன். ஒரு தடவை கடைத்தெரு வழியாகப் புறக்கோட்டை மெயின் விதி தடைபாதையில் சென்று கொண்டிருந்தபோது அவள் எதிரேயுள்ள நடை பாதையால் போய்க் கொண்டிருந்தாள், நான் அவளைக் காணாதது போலச் சென்றுவிட்டேன். மற்றொருதடவை பஸ்ஸில் செல்லும்போது கொள்ளுப்பிட்டியில் காலிவிதி நடைபாதையில் எவரோ தோழியருடன் செல்வதுபோல் தெரிந்தது. அவளைக் காணும்போது சேனாவின் நினைவு வந்துவிடும். சேனாவைத் திடீரென ஒருநாள் கொட்டாஞ்சேனையில் நண்பர்களுடன் கண்டேன். உடல் இளைத்துப் போயிருந்தது. நெற்றியிலே ஆறிய காயவடு. முகத்திலே முன்பு கண்ட ஒளியில்லை. ஆழ்ந்த கண்கள் மட் டும் முன்போல் உக்கிரங் கொண்டதாயிருந்தது. . . . .’அய்யா, சுகமா? வூட்டுக்கு வருவேன்.” தமிழில் கூறியது வியப்பாகவே இருந்தது. என்னாள் சிரித்துக் கொண்டே நான் வீடு நோக்கி நடந்தேன். ஆறு வருடங்களில் எங்கோ தமிழில் சில சொற்களைப் பேசப் பழகி விட்டான்! சீதாவையும் அவனையும் எண்ணி என்மனம் வட்டமிட்டுக் கொண்டே இருந்தது. என் நண் பன் குணரட்ன லண்டனில் குடியேறியது போலாகிவிட்டான். அவனுடன் இவர்களைப் பற்றி விசாரிக்க எண்ணியிருந்தேன். ஒருதடவை விடுமுறையில் அவன் வந்திருந்தபோது வீட்டிற்குச் சாப்பிடவந்திருந்தான், அரைமணி நேரமே. சாப்பிட்டதும் ஓடிவிட்டான். அவ்வேளையும், சேனாபற்றிக் கேட்க மறந்துவிட்டேன்.அன்று இரவு 8 மணி. கடையடைக்கும் வேளை. ஒரு கதவுமட்டும் திறந்திருந்தது. சீதாமட்டும் கடைக்குள் நுழைந்தபோது எனக்கே வியப்பாயிருந்தது. ஏதோ நூல்களைப் பார்க்க வந்தது போலிருந்தது. முகத்தில் முன்போன்ற கலகலப்பில்லை. ஒருவித சோகம் படிந்திருந்தது. உடல் மெலிந்திருந்தது.”டயட்’ பண்ணுகிறளா? நானே பேச்சுக் கொடுத்தேன். பல ஆண்டுகளாக அறிய வேண்டு மென என் மனம் குடைந்து கொண்டிருந்தது.”சேனா வரவில்லையா? வினா என்னை அறியாமலே வந்துவிட்டது, அவள் திரும்பி என்னைப் பார்த்தாள். விசித்திரமான பார்வை. தவறாக ஏதோ கேட்டுவிட்டேனே என என்மனம் சஞ்சலப்பட்டது.”சொறி, உங்களைக் கண்டு கனகாலம். சேனாவைப் போனவாரம் எங்கோ தெருவில் கண்டேன். வீட்டுக்கு வாறதாகச் சொன்னான். உங்களுக்குள்ள உறவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கேட்டதற்காக மன்னிக்கவும்.” .”உங்க வீட்டுக்கு வருவதாகச் சொன்னரா?” அவள் குரலில் வியப்புக் கேவல், முகம் கவலையில் தோய்ந்திருந்தது: “ஆமாம். உங்களை வந்து பார்ப்பதில்லையா? நான் ஏதாவது அவனிடம் சொல்ல வேண்டுமா?”அவள் கண்கள் கலங்கின. கைக்குட்டையை எடுத்து வாயிலிருத்து அவளை மிஞ்சி வந்த விம்மலுடன் கூடிய அழுகையை அடக்க முயன்றாள்.என் நிலை மிகவும் கஷ்டமாகிவிட்டது. கதவைச் சாத்திவிட்டு கடை உதவியாளரை வெளியே நிற்கும்படி சமிக்கை செய்தேன்.சீதாவை எதிரே உட்காரச் செய்தேன். இத்தனை பெரிய துன்பம் தரும் நிகழ்ச்சி என்ன நடந்தது? வளர்ந்த பெண், முற்போக்கான உரிமை பெற்ற பெண், அதிகம் பழகாத என் முன்னே கண்ணிர் விடுகிறாளே.”நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னியுங்கள். சேனாவுக்கும் உங்களுக்கும் உள்ள உறவைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. உங்கள் கவலையைப் போக்க என்னால் ஏதாவது செய்யமுடியுமானுல் சொல் லுங்கள்.”அவளின் விம்மல் சிலநேரத்தில் ஓய்ந்தது. கண்ணிரைத் துடைத்து, தன்னை அறியாது என்முன்னே அழுததற்கு வெட்கமடைவது போல சிரித்துச் சமாளிக்க முயன்றாள்.நடந்த விசயத்தை அவள் மூலம் அறிய ஆவல்பட்டேன்.அவள் கூறிய செய்திகள் யாவும் பயங்கரமாயிருந்தன. அத்தனை அதிர்ச்சி தரும் செய்திகளை நான் கேட்டதேயில்லை. நான் எத்தனே அப்பாவியாக இருந்தேன் என்பது என் மனதை வெட்கிக்கச் செய்தது.சேன சாதாரண ஆளில்லை. 1971க் கிளர்ச்சியின்போது ஒரு மாவட்டத்தில் முக்கிய பங்கெடுத்த தலைவன். கிளர்ச்சியின் தோல்வியை ஒட்டி அவன் மேல் இராணுவமும் பொலிசும் வலை விரித்திருந்தது. அவன் தலைமறைவாயிருந்தபோது தமிழர்வீடு பாதுகாப்பாக இருக்கும் என்றே இருதடவைகள் என் வீட்டில் இரவில் வந்து தங்கி இருக்கிறான்.பின்னர் சீதாவின் காதலியாக வெளியே காட்டி நாடகம் நடத்தினர். அவளும் இயக்கத்தின் ஓர் அனுதாபியாக இருந்தாள். கொழும் பிற்கு கட்சி அலுவலாக, தலைமறைவாக வரும் வேளைக்காக இந்நாடகம் நடைபெற்றது. ஐந்து தடவைமட்டுமே இந்நாடகம் நடைபெற்றது. அவனை ஒரு புரட்சி வீரனுகக் கருதி உள்ளுற சீதா அவனைக் காதலித்தாள். நாலாவது தடவை அவன் பாதுகாப்பு நாடகத்திற்கு வந்திருக்கும் பொழுது அவள் தனது காதல் அவனிடம் வெளியிட்டாள்.’நீ ஆபத்தான மனிதனைக் காதலிக்கிருய் நன்கு சித்தித்து முடிவு செய்’ என்று சேனா அவளை எச்சரித்தான். அவள் சிறிதும் மசியவில்லை. நாலாவது சந்திப்பின்போது காதல் உறுதியானது. இரக்கத்தில் ஏற்பட்ட காதல்.”என்ன நடந்தாலும் நான் உங்களுக்காகக் காத்திருப்பேன்.””நான் உன்னைத் தவிர எந்தப் பெண்ணையும் தொடமாட்டேன்.” சேனா கையில் அடித்துச் சத்தியம் செய்ததாகச் சீதா தெரிவித்தாள்” அதன் பின்னர் கடைசித் தடவையே சந்தித்து உறவு கொண்டாடினர்.சேனாவைப் பற்றி அதன் பின்னர் ஒரு தகவலுமேயில்லை. இராணுவத்தினரின் வலையில் அவன் விழுந்திருக்கலாம் என அவள் சந்தேகித்தாள். நாள்தோறும் தூக்கமின்றி அவன் வரவுக்காகக் காத்திருந்தாள். இரண்டு வருடங்களின் பின் ஒரு சிறு கடிதம்மட்டும் அவளுக்குக் கிடைத்தது. அது சிறையிலிருந்து எழுதப்பட்டதாகத் தெரிந்தது.‘என்னை மன்னித்துவிடு. மறந்து விடு சேனா. “சேனா”’ என்பது தலைமறைவு காலத்தில் சூட்டிய பல கற்பனைப் பெயர்களில் ஒன்று. அதனால் பின்னர் சிறையில் கூட அவனைச் சென்று பார்த்துப்பேச முடியவில்லை. அவன் கடிதத்தால் அவள் சிறிதும், அசையவில்லை. அவன் என்றோ ஒருநாள் தன்னிடம் வருவான் எனக் காத்திருந்தாள்.தேர்தல் முடிந்து யு. என். பி. அரசு வந்தது. 1977 நவம்பரில் அரசியல் சிறைக் கைதிகள் யாவரும் விடுதலை பெற்றனர். அவன் தன்னைத்தேடி வருவான் எனக் காத்திருந்தாள்.நாலு மாதமாகிவிட்டது. வரவேயில்லை. நான் அவனைக் கண்டேன் என்பதே அவளைக் கலங்கச் செய்துவிட்டது.அது எத்தனை கொடுமை. அவளின் இதயத்தையும் 6 வருட துன்பத்தையும் என்னால் நன்கு உணர முடிந்தது.சேனா என்ற வீர புருஷனை ஒருபுறம் எண்ணி வியந்தேன். மறுபக்கம்: ஒரு புரட்சிவீரன் ஒரு பெண்ணை ஏமாற்றிவிட்டுத் திரிகிறானே என்ற போது ஆத்திரம் வந்தது. புரட்சியாளருக்குக் காதல் ஒரு விளையாட்டா என்று மனம் நொந்தது. ஒரு தலைவனே இப்படியென்றால் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ இப்படியானவர்களா என எண்ணி ஆத்திரப்பட்டேன்.சீதாவிற்கு நான் ஆறுதல் கூறினேன். எப்படியும் அவன் என்னிடம் வருவான். உன்னிடம் அழைத்துவருவேன். உன் ஆறு ஆண்டின் சோக கீதத்தை நிறுத்துவேன். கவலை வேண்டாம் என ஆறுதல்கூறி அவள் வீட்டு முகவரியைப் பெற்றுக் கொண்டேன்.கதவைத் திறந்து அவளை வழியனுப்பினேன். நன்றி கூறிக்கொண்டே அவள் நடந்தாள்.அவளது கைகளிலும் இடையிலும் ஒட்டியிருந்த ஜாக்கெட் தொய்ந்துபோயிருந்ததைப் பார்த்தேன். என் நெஞ்சு நொந்தது.அன்று தொடக்கம் ஒரு குயிலின் அலறற் கூவல் என் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஒரு குயிலா? நாட்டிலே புரட்சி பேசிய இளைஞர்களால் கைவிடப்பட்டு இப்படி எத்தனை குயில்கள் கூவுகின் நனவோ! வழியில்,தெருவில் சேனாவைப்போல் ஆராவது செல்லும் போதும் அவளு என்ற பிரக்ஞையே மனதில் எழுந்து கொண்டிருந்தது•கடைசியாக ஒருநாள் இரவு சேனா வந்து சேர்ந்தான். முன்போன்ற அழுக்கு உடையுடனல்ல. அது சதுரக்கோடிட்ட சேட், கரிய நிற கால் சட்டை என் மனம் நிலையிலில்லை. உள்ளே அழைத்து உபசரித்தேன்.தமிழிலும், ஆங்கிலத்திலும் சில சொற்களை இணைத்துப் பேசப் பழகியிருந்தான்.சிறையில் இருந்தவேளை பேசப் பழகியதாகக் கூறினன்,”தோசை” என்று பழமையை நினைந்து சிரித்தபடியே கேட்டான். சூடாக மனைவியால் சுட்டுத்தர ஆர்வத்தோடு சாப்பிட்டான். முன்போலவே அன்றிரவு தங்குவதாகக் கூறினான். சாரம் ஒன்று கொடுத்தேன். மாற்றிக் கட்டிக் கொண்டான்.படுப்பதற்குப் பாய் விரித்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அங்கு தனிமையில் சீதாவின் கதையை எடுத்தேன்.“உன் தனிப்பட்ட பிரைவேட் விஷயத்தில் தலையிடுவதற்காக மன்னிக்கவும். என் மனச்சாட்சி உறுத்துவதைப் பேசித்தான் ஆகவேண்டும்.” ஆங்கிலத்தில் தொடர்ந்தேன். அவன் எதிர்பார்க்காத விஷயம் என்பது முகபாவத்தில் தெரிந்தது. அவன் எதுவுமே பேசாது மெளனமாக இருந்தான். அந்நிலை எனது கோபத்தைக் கிளறியது. சீதாவின் கலங்கிய தோற்றம் என் கண் முன்னே தோன்றியது.என் ஆத்திரமெல்லாம் சேர்த்துத் திட்டித் தீர்க்கத் தொடங்கினேன்,”சீதா எத்தனை தியாகம் செய்தாள்? உன் உறுதிமொழியை நம்பிக் கொண்டே இன்னும் வாழ்கிறாள். நீ ஏன் இன்னும் போய்ப் பார்க்கவில்லை? புரட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு பெண்களை ஏமாற்றும் கயவர்கள் உங்கள் கட்சியில் இப்படி எத்தனைபேர் இருக்கிறீர்கள். நாணயமில்லாத நயவஞ்சகர்கள். காதல் என்பது மனித வாழ்வின் உன்னதமான காலகட்டம். புரட்சிக்காரரைக் காதலிக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை.காதல் புரட்சிக்கு இடையூருக இருப்பதாயின் பழகும்போதே இடம் தராது நடந்திருக்க வேண்டும். உங்கள் அணியைச் சார்ந்தவர்களெல்லாம் புரட்சியின் பெயரைச் சொல்லிப் பெண்களே ஏமாற்றுபவர்க்ளா? உங்களைப்போன்ற கண்ணியம் இல்லாதவர்களுடன் நான் பழகவே விரும்பவில்லை. இப்பொழுதே நீ என் வீட்டைவிட்டுப் போயிடலாம்.”என் திட்டுகள் அவனுக்குக் கோபமூட்டவில்லை. கவலை ததும்ப நின்றான்.”நீ ஏன் பேசாமல் நிற்கிறாய். உனக்கு மானம் வெட்கமில்லயா? என்று பின்னரும் சொன்னேன். அன்றுபோல் ஆத்திரப்பட்டு நான் ஒரு வரைத் திட்டிய நாட்கள் மிகக் குறைவே.ஆனால், அவனது செயல் ஒரு கணத்தில் என் வாயை அடைத்து விட்டது. சிந்தனையில் ஒரே அடி. மூச்சுப் பேச்சற்று ஊமையாக நின்றேன்.”ஐயா, இங்கே பார். மிலிட்டரி டார்ச்சர்.” அரையில் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்துக் கீழே விட்டான். அவனது ஆண்குறி எல்லாம் சிதைந்த நிலையில் இருந்தது. என் கொதிப்படைந்த இரத்தமெல்லாம் உறைந்துபோக அசை வற்று நின்றேன்.”இப்படி நமக்குமட்டுமில்லை. எத்தனையோ. தோழர்கள். வெளியே சொல்லுறது வெட்கமில்லையா.”தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கில, தமிழ் வார்த்தைகளில் அந்த வதைக் கொடுமைகள் பற்றிக் கூறினான்.அதன் பின்னர், குயில்களின் கூவல்கள் கேட்கும் போதெல்லாம் சீதாக்களின் அலறலே என் நெஞ்சைக் குடைந்துகொண்டிருக்கின்றன. (நான் சிறுகதை நாவல் என்றால் அதனை படித்து முடிக்காமல் விடமாட்டேன் இருந்தும் அண்மைகால மாக படிப்பதும் எழுதுவதும் மிகவும் அதிகமாக இருப்பதால் கதைகளை வாசிப்பதை நிறுத்தி விட்டேன் அண்மையில் ஒரு தோழரின் படைப்பை வாசித்தேன் அதன் மீதான விமர்சனம் எழுத வேண்டும் இருந்தும் இந்த ஆசிரியரின் பல நூல் வாசித்துள்ளேன் அவை மிகவும் வித்தியாசமானவை ஆகவே தேவைக்கருதி சில வாக்கியங்களை திருத்தியும் நாம் வாசிக்க இலகுவாக மாற்றி உள்ளேன் மற்றவை ஈழத் தமிழில் உள்ளன்.)(படம் உதவி இணையம்)LikeCommentShare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *