குடும்பத்தின் தோற்றம் – எங்கெல்ஸ்
குடும்பத்தின் தோற்றம் – எங்கெல்ஸ்

குடும்பத்தின் தோற்றம் – எங்கெல்ஸ்

குடும்பம், தனிச்சொத்து, அரசு என்ற எங்கெல்சின் நூல்.

மார்கனின் ஆய்வுகளில் இருந்து மனித குல வளர்ச்சியை காட்டுமிராண்டி காலம், அநாகரிகர் காலம், நாகரிக காலம் என்று பிரிக்கிறார். காட்டு மிராண்டி காலத்தின் கடைக்கட்டம், இடைக்கட்டம், தலைக்கட்டம் அதே போல அநாகரிகர் காலத்தின் கடைக்கட்டம், இடைக்கட்டம், தலைக்கட்டம் ஒவ்வொன்றையும் வர்ணிக்கிறார். இந்த கட்டங்களில் மனிதர்களின் உணவு உற்பத்திக்கான கருவிகள், போர்க்கருவிகள், விலங்குகளை வளர்த்தல், பயிர்த் தொழில் செய்தல் ஆகியவற்றின் அடிப்படையை விளக்குகிறார்.

காட்டுமிராண்டி காலத்தின் கடைக்கட்டத்தில் மனித மாமிசம் உண்ணும் பழக்கம் கூட இருந்திருக்கிறது. இதை நவீன உலகில் எந்தக் குழுவிலும் காண முடியாது என்பதுதான் விஷயம்.

காட்டுமிராண்டி காலத்தின் இடைக்கட்டத்தின் போது மீன் உணவு, நெருப்பின் பயன்பாடு தொடங்குகிறது. கற்கருவிகள், உணவை நெருப்பில் சமைத்து உண்பது ஆகியவை வளர்ச்சியடைந்திருக்கின்றன.

தலைக்கட்டம் வில்லும் அம்பும் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தொடங்குகிறது. வேட்டையாடுதல் முதன்மையாக இருக்கிறது. மண்பாண்டங்கள் இன்னும் செய்யவில்லை. கூடைகள், மரச் சாமான்களை பயன்படுத்துகின்றனர். வீடு கட்டிக் கொள்கின்றனர். இந்த முன்னேற்றங்கள் எல்லாம் அமெரிக்க செவ்விந்தியர்களிடையே காணப்படுகிறது.

அநாகரிகர் காலத்தில் கடைக்கட்டத்தில் மண்பாண்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழைய உலகத்துக்கும் புதிய உலகத்துக்கும் இடையே வேறுபாடுகள் தோன்றுகின்றன. பழைய உலகத்தில் எல்லா மிருகங்களும், சாகுபடி செய்யும் எல்லா தானிய வகைகளும் இருந்தன. அமெரிக்காவில் லாமா என்ற மிருகமும், மக்காச் சோளமும் மட்டுமே இருந்தன.

அநாகரிகர் காலத்தின் இடைக்கட்டத்தில் விலங்குகள் பழக்கப்படுகின்றன, கிழக்கு கண்டத்தில். பயிர்களை நீர்ப்பாசனம் மூலம் சாகுபடி செய்தல் தொடங்குகிறது. மேற்குக் கண்டத்தில் ஐரோப்பியர் வருகை வரையில் இந்தக் கட்டத்திலேயே நீடிக்கின்றனர். மண்பாண்டங்கள் செய்யவில்லை. வீடுகளில் வசித்தனர். இரும்பின் பயன் தெரியாது.

கிழக்குக் கோளத்தில் பாலுக்கும் இறைச்சிக்கும் விலங்குகளை பழக்குவதில் இருந்து இந்தக் கட்டம் தொடங்குகிறது. கால்நடைகளை திரட்டுதல், பெரிய மந்தைகளை உருவாக்குதல் இவற்றில் ஈடுபட்ட ஆரியர்களும் செமைட்டுகளும் எஞ்சிய அநாகரிக மக்கள் திரளிலிருந்து வேறுபடுத்திக் காண்கின்றனர்.

“கால்நடைகளைப் பழக்கி வளர்த்தல், பெரிய மந்தைகளை திரட்டியமைத்தல் ஆகியவை ஆரியர்களையும் செமைட்டுகளையும் எஞ்சிய அநாகரிக மக்கள் திரளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற காரணமாக இருந்திருக்கலாம்”. (பக்கம் 41)

“கால்நடைகளை அமைத்தல் வசதியுள்ள இடங்களில் மேய்ச்சல் வாழ்க்கைக்கு இட்டுச் சென்றது. ஆரியர்களிடையே இது இந்தியா, ஆக்ஸஸ் நதி… ஆகியவற்றின் புல்வளமிக்க சமவெளிப் பிரதேசங்களில் ஏற்பட்டது.”

இந்தக் குழுவினர் “அநேகமாக வாழ்வதற்குத் தகுதியற்ற பிரதேசங்களிலிருந்து வந்தனர்”. மேய்ச்சல் வாழ்க்கையில் ஈடுபட்ட பிறகு புல்லும் நீரும் நிறைந்த சமவெளி பிரதேசங்களைத் தாமாகவே கைவிட்டு தனது முன்னோர்கள் வசித்த காட்டுப் பிரதேசங்களுக்குத் திரும்பிச் சென்று விட கருதியிருக்க மாட்டார்கள் (பக்கம் 42)

“கால்நடைகளுக்குத் தீவனம் அளிக்க வேண்டிய அவசியத்தை முன்னிட்டுத்தான் தானியச் சாகுபடி இங்கே கொண்டு வரப்பட்டது, சிறிது காலத்துக்குப் பிறகுதான் அது மனித உட்டத்துக்கு முக்கியமாயிற்று” (பக்கம் 42).

“ஆரியர்களும் செமைட்டுகளும் இறைச்சி, பால் ஆகியனவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொண்டதும் குழந்தை வளர்ப்பில் இந்த உணவு ஏற்படுத்திய அனுகூலமான விளைவுகளும் இந்த இரண்டு இனங்களின் உயர்ந்த வளர்ச்சியை ஒருவேளை விளக்கக் கூடும்” (பக்கம் 43)

“இந்தக் கட்டத்தில் மனித இறைச்சியைத் தின்னும் பழக்கம் படிப்படியாக மறைந்து விடுகிறது”

அநாகரிகர் காலத்தின் தலைக்கட்டம் “இரும்புக் கனிமம் உருக்கப்படுவதிலிருந்து தொடங்குகிறது. எழுத்துக்களை கண்டுபிடித்தல், இலக்கிய ஆவணங்களுக்கு அதைப் பயன்படுத்துதல், மூலம் இது நாகரிக நிலைக்கு முன்னேறுகிறது. இக்கட்டம் கிழக்குக் கோளார்த்தன் ஒன்றில் மட்டுமே சுயேச்சையாகக் கடக்கப்படுகிறது.

1. வீர யுகத்தைச் சேர்ந்த கிரேக்கர்களும் (இலியாட், ஒடிசி)
2. ரோமாபுரி நிறுவப்படுவதற்கு சற்று முன்பிருந்த இத்தாலிய இனக்குழுக்களும்
3. டாசிட்டஸ் காலத்திய ஜெர்மானியர்களும்
4. வைக்கிங்குகளின் காலத்திய நார்மன்களும் இந்தக் கட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இங்குதான் இரும்புக் கலப்பைக் கொழுவை பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தித் திறன் பல மடங்கு அதிகரிக்கிறது. மக்கள் தொகை பெருகுகிறது. காடுகள் வெட்டித் திருத்தப்படுகின்றன.

ஹோமரின் கவிதைகளில் குறிப்பாக இலியாத் காவியத்தில் அநாகரிக நிலையின் தலைக்கட்டம் உச்சியிலிருப்பதைப் பார்க்கிறோம்.

காட்டுமிராண்டி நிலை – பயன்படுத்துவதற்குத் தயாராக இருந்த உற்பத்திப் பொருட்களை பயன்படுத்துவதே மேலோங்கியிருந்த ஒரு நிலை; மனிதன் உற்பத்தி செய்த பொருட்கள், பிரதானமாக, இப்படி பயன்படுத்துவதற்கு வசதியாக இருந்த கருவிகளே ஆகும்.

அநாகரிக நிலை – கால்நடை வளர்ப்பு, நிலத்தில் பயிரிடுதல் ஆகிவை குறித்த அறிவைப் பெற்ற கட்டம் இது; மனித நடவடிக்கைகளின் மூலம் இயற்கையின் உற்பத்தித் திறனைப் பெருக்குகின்ற வழிமுறைகள் இக்கட்டத்தில் கற்றுக் கொள்ளப்பட்டன.

நாகரிக நிலை – இயற்கைப் பொருட்களை மேலும் பண்படுத்திக் கொள்வது பற்றி, தொழில் மற்றும் கலையைப் பற்றி அறிவைப் பெற்ற கட்டம் இது.

குடும்பம் என்ற தலைப்பைப் பற்றி.

முதலில் மார்கன் கண்டறிந்த இரோகாஸ் இனக்குழுவினர் மத்தியில் காணப்படும் இரத்த உறவுமுறை, குடும்ப உறவுமுறைகளைப் பற்றிய விவரிப்பு. இதற்கான அடித்தளம் என்னவாக இருக்கும்?

மனிதர்கள் பரிணாம வளர்ச்சியில் கூட்டாக வாழும் கட்டத்தை நிச்சயம் கடந்து சென்றிருக்க வேண்டும். அப்போது வரைமுறையற்ற புணர்ச்சி என்ற முறை இருந்திருக்க வேண்டும். இதை முறைகேடான புணர்ச்சி, பொது மகளிர் முறை, விபச்சாரம் என்றெல்லாம் பேசுவது நவீன கால புனிதங்களை பரிணாம வளர்ச்சிக்கட்டத்துக்குப் பொருத்துவது ஆகும்.

பறவைகளைப் போல இணைகளாக வாழ்வது மனிதர்களின் காட்டுமிராண்டி காலத்துக்கு பொருத்தமற்றதாகும். பிற விலங்குகளில் மந்தைக்கும் குடும்பத்துக்கும் இடையே ஒரு பகைநிலை தொடர்ந்து நிலவுகிறது. எனவே, மந்தை ஒன்றுபட்டு, உறுதியாக நிற்க வரைமுறையற்ற புணர்ச்சி, பொறாமை உணர்வை கட்டுப்படுத்துதல், சகிப்புத் தன்மை இருந்திருக்க வேண்டும்.

இந்த குடும்ப உறவுகள் அப்பா, சித்தப்பா, பெரியப்பா என அப்பாக்கள், அம்மா, சித்தி, பெரியம்மா என்று அம்மாக்கள் அவர்களது குழந்தைகள் எல்லாம் அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகள். அப்பாவின் தங்கை, அக்கா – அத்தைகள், அம்மாவின் அண்ணன், தம்பி – மாமாக்கள் அவர்களது குழந்தைகள் மச்சான்கள் என்று அமைவது குடும்ப உறவுகளாக இருக்கிறது. இது தமிழர்களின் உறவுக்கும் பொருந்தி வருகிறது.

“ஹவாய்த் தீவுகளிலுள்ள குடும்பத்துடன் பொருந்துகின்ற அமெரிக்க இரத்த உறவுமுறைப்படி சகோதரனும் சகோதரியும் ஒரே குழந்தைக்குத் தந்தையாகவும் தாயாகவும் இருக்க முடியாது. அதற்கு மாறாக, ஹவாய்த் தீவுகளின் இரத்த உறவுமுறைப்படி பார்த்தால் இதுவே விதியாக இருந்த ஒரு குடும்பம் இருந்திருக்க வேண்டும்.

ஆதிகாலத்தில் குழு மணமே நிலவுகிறது. முழுக்குழுக்களாக ஆண்களும் முழுக்குழுக்களாக பெண்களும் ஒருவருக்கொருவர் சொந்தமாயுள்ளனர். இந்த வடிவத்தில் பொறாமைக்குச் சிறிதும் இடம் கிடையாது. சகோதரனும் சகோதரியும் கணவன், மனைவியாக வாழ்ந்தது மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் குழதைகளுக்கும் பாலியல் உறவுகள் இருப்பது அனுமதிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இரத்த உறவுக் குடும்பம் என்பதைப் பற்றி படிக்கிறோம்.

ஒரு தலைமுறையைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திருமண உறவு கொண்டவர்கள். பெற்றோர் தலைமுறையும், குழந்தைகள் தலைமுறையும் திருமண உறவிலிருந்து விலக்கப்பட்டவர்கள். இந்தக் கட்டத்தில் சகோதரன், சகோதரி திருமண உறவு சகஜமாக அடங்கியிருந்தது. ஆனால், பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உறவு தடை செய்யப்பட்டிருக்கிறது.

“இரத்த உறவுக் குடும்பம் என்பது அழிந்து விட்டது. வரலாற்றுக்குத் தெரிந்த மிகவும் வளர்ச்சியற்ற மக்களினங்கள் கூட இந்தக் குடும்ப வடிவத்துக்கு நிரூபிக்கக் கூடிய உதாரணங்களைத் தரவில்லை” எனினும் அது இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரும்படி ஹவாய்த் தீவுகள் வகைப்பட்ட இரத்த உறவுமுறை நம்மை நிர்ப்பந்திருக்கிறது.

அடுத்து பூனலூவா குடும்பம். இதில் தலைமுறைகளுக்கு இடையே மட்டுமின்றி, இரத்த சொந்தங்களுக்கு இடையே உறவு தடை செய்யப்படுகிறது.

“இயற்கைத் தேர்வு என்ற கோட்பாடு செயல்படுவதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்”. இந்த முன்னேற்றத்தின் மூலமாக, ஒரு இரத்தத்தைக் கொண்டே வம்ச விருத்தி செய்வது தடை செய்யப்பட்ட இனக்குழுக்கள், சகோதரர் சகோதரிகளிடையே திருமணம் நடப்பது விதியாகவும், கடமையாகவும் இருந்து வந்த இனக்குழுக்களை விட அதிக வேகமாகவும் முழுமையாகவும் நிச்சயமாக வளர்ச்சியடைந்திருக்கும் – பக்கம் 63

“உலகத்தின் எல்லா அநாகரிக மக்களினங்களின் என்று இல்லாவிட்டாலும் அவற்றில் மிகப் பெரும்பான்மையானவற்றின் சமூக அமைப்புக்குக உலம்தான் அடிப்படையாக இருந்தது, கிரீசிலும் ரோமாபுரியிலும் அதிலிருந்து நேரடியாக நாம் நாகரிகத்துக்குச் செல்கிறோம்”.

ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் தங்களுடன் உறவு கொள்வது தடுக்கப்பட்டது. அந்தத் தாயின் சகோதரிகளின் குழந்தைகளும் தாயின் குழந்தைகளாகக் கருதப்பட்டனர். ஒவ்வொரு தாயும் அதனது கணவனின் எல்லா சகோதரர்களையும் கணவனாகக் கொண்டிருந்தாள். அதே போல ஒவ்வொரு ஆணும் தனது மனைவியில் எல்லா சகோதரிகளையும் மனைவியாகக் கொண்டிருந்தான்.

இதுதான் சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை உறவுகளுக்கான அடிப்படையாக அமைந்தது. இதில் மாமா, அத்தை உறவுகளில் திருமண உறவுமுறை அடங்கியிருப்பது இன்னும் தென் தமிழகத்தில் நிலவுகிறது.

“மிகவும் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் குலம் என்னும் அமைப்பு பூனலுவா குடும்பத்திலிருந்துதான் நேரடியாகத் தோன்றியதாகத் தெரிகிறது”. (பக்கம் 68).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *