கீன்சிய பொருளாதாரக் கொள்கையும் பாசிசமும்
கீன்சிய பொருளாதாரக் கொள்கையும் பாசிசமும்

கீன்சிய பொருளாதாரக் கொள்கையும் பாசிசமும்

கீன்சியம் குறித்த மார்க்சியப் பார்வை.மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி

கீன்சியம் குறித்த மார்க்சியப் பார்வை.

  • “ஏகாதிபத்திய கீன்சியத்திற்கு” வால் பிடிப்பதை எதிர்ப்போம்!
  • தரகு முதலாளிய வர்க்கத்திற்குத் துணைபோகும் பிற்போக்கு சக்திகளை இனம் காண்போம்! தனிமைப்படுத்துவோம்!
  • புரட்சிகர மாற்றத்திற்காக புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைவோம்!

1930 இல் ஏற்பட்ட பொது நெருக்கடி மற்றும் அதனால் உலகம் முழுவதும் உருவான கிளர்ச்சிகளை சமாளிக்கவும், சோவியத் யூனியன் மற்றும் கம்யூனிசத்தின்பால் தொழிலாளி வர்க்கம் ஈர்க்கப்படாமல் இருப்பதற்காகவும், ‘சமூக நலக் கொள்கை’ என்ற பெயரில் ஏகபோகங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட கொள்கையே கீன்சியமாகும்.

தற்போது மீண்டும் பொது நெருக்கடியும், கொரோனா தொற்றுநோயும் இந்த ஏகபோக அமைப்பை திவாலாக்கியுள்ளது. இன்றைக்கு பொருளாதார நெருக்கடி 1930 ஆம் ஆண்டைவிட மிகவும் ஆழப்பட்டுள்ளது. இன்றைய பொது நெருக்கடிக்குத் தீர்வு ஏகபோகத்திற்கு முடிவு கட்டுவதுதான் என்று கிளர்ந்து எழுந்து கொண்டிருக்கும் உலக உழைக்கும் மக்களை அமைப்பாக்கி, ஒரு புரட்சிகர மாற்றத்திற்குத் திட்டமிட வேண்டிய சூழலில், பழைய சுரண்டல் முறையைத் தக்க வைப்பதற்காக 1930 ஆம் ஆண்டுகளில் எப்படி மக்களை கம்யூனிசத்தின்பால் சென்றுவிடாமல் தடுப்பதற்காக ஏகபோக அமைப்பிற்கு உள்ளேயே ஒரு சீர்திருத்தவாத, எதிர்புரட்சிகரத் தீர்வை ஏகாதிபத்தியவாதிகள் முன்வைத்தார்களோ, அதைப்போன்றே இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதை எதிர்த்து மக்கள் சோஷலிசம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னால் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, டிராட்ஸ்கியக் கைக்கூலி அடிமைகள் மீண்டும் ‘கீன்சியத்தை’ தீர்வாக முன்வைக்கின்றனர். இதை எதிர்த்து முறியடிப்பது புரட்சிகர சக்திகளின் கடமையாகும்.

மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்ற இவ்வேளையில், குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களையும், முறைசாராத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், உழைக்கும் பெண்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரையும் அணிதிரட்ட புதிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியுள்ளது. பாசிசத்திற்கெதிரான மாற்று அரசியல், பொருளாதார, கலாச்சாரத்திற்கான போராட்டங்களையும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. நெருக்கடிகள் மாற்றங்களைக் கொண்டு வரலாம்; ஆனால் புரட்சிகர மாற்றங்கள் வலுமிக்க புரட்சிகரக் கட்சியின் மூலம் மட்டுமே சாத்தியமாகும். ஒரு சரியான புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைப்பதற்கு இன்றைய சர்வதேச சூழலைப் பற்றிய மதிப்பீடும் பார்வையும் நமக்குத் தேவையாகும். இதைப் பற்றி நாம் சுருக்கமாகக் காண்போம்.

கொரோனா தொற்றுநோயும் சர்வதேசிய நெருக்கடியும்

கொரோனா தொற்றுநோய், அதன் தோற்றம், உலகளாவிய பரவல் மற்றும் இங்குள்ள நெருக்கடி ஆகியவை இன்றைய நவீன தாராளமயக் கொள்கையுடன் பிரிக்கமுடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன. முதலாளித்துவ-ஏகாதிபத்திய அமைப்பின் கீழ் இலாப நோக்கத்தில் இயங்கும் முழு சுகாதார அமைப்பும் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளது. இந்தத் தொற்றுநோய் ஒரு சுகாதார நெருக்கடியாக மட்டுமல்லாமல், முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருளாதார சரிவுக்கும் வழிவகுத்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோயின் விளைவுகள் உலகப் போர்கள் உள்ளிட்ட முந்தைய அனைத்து நெருக்கடிகளையும் விட மிகவும் கொடியதாக உள்ளது. குறிப்பாக, இரண்டாம் உலகப் போர் முடிந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ள இவ்வேளையில், கொரோனா பெருந் தொற்றின் காரணமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளில் ஏற்பட்டுள்ள மிக உயர்ந்த இறப்பு எண்ணிக்கையானது, அமெரிக்க தலைமையிலான முதலாளித்துவத்தின் அரசியல்-பொருளாதார மற்றும் சமூக திவால் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது. 

குறிப்பாக, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்கள் எதிர்மறையாக இருக்கிறது. உற்பத்தி, வர்த்தகம், மற்றும் சுற்றுலா உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்டு ​​உலகப் பொருளாதாரமே முடங்கியுள்ளது. இது 1930 களின் பெரும் மந்தநிலையை விடப் பன்மடங்கு மிகவும் மோசமான நிலையாகும்.

இந்த கொரோனா தொற்று உலகமயமாக்கப்பட்ட உற்பத்தியின் அஸ்திவாரங்கள் அனைத்தையும் உடைத்து, அதன் தேவை மற்றும் வழங்கல் சங்கிலிகளை (Demand and supply chain) முற்றிலுமாகச் சிதைத்துள்ளது. பிரெட்டன் வுட்ஸ் நிறுவனங்களால் கடந்த ஏப்ரல் மாதத்தில் செய்யப்பட்ட மதிப்பீடுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியானது சுமார் 9 லட்சம் கோடி டாலர் (இது ஜெர்மனி மற்றும் ஜப்பானின் ஒருங்கிணைந்த மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் சமம்) வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய கணிப்பின்படி, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியானது -6.0 சதவீதமாக சரிந்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை முறையே -7.2, -7.0, -6.5, -5.9 மற்றும் -5.2 என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சி விகிதங்களைக் கொண்டு மிகக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. ஐரோப்பியப்பகுதிப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 2020 இல் -7.7 சதவீதத்தை எட்டி பெரும் வீழ்ச்சியடையும் என்று ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதார விவகார ஆணையர் பாலோ ஜென்டிலோனி கூறியுள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020 ஆம் ஆண்டில் -6.3 சதவிகிதம் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1949 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சரிவாகும். 

மேலும், ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன்-அமெரிக்கவில் உள்ள புதியகாலனிய நாடுகளின் நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. கோல்ட்மேன் சாக்ஸின் மே மூன்றாம் வாரத்திய ஒரு பகுப்பாய்வின் படி, 2020 ஆம் ஆண்டினுடைய இரண்டாவது காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 45 சதவிகிதம் சுருங்கும் என்றும், 2020-21 நிதியாண்டில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதம் சரியும் என்றும் கணித்துள்ளது. இதை மெய்ப்பிக்கும் விதமாக இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வேலையின்மை, வறுமை, பற்றாக்குறை போன்ற இந்தப் பொருளாதாரத் தொற்றுநோய்களின் விளைவுகளை ஏகாதிபத்திய அமைப்பினுள் தீர்க்கவோ அல்லது நிர்வகிக்கவோ முடியாது என்பதை நிரூபித்து வருகின்றன. 

சமீபத்திய ஐ.எல்.ஓ (I.L.O) கணிப்புகளின்படி, இந்த ஆண்டு உலகளாவிய வேலையின்மை 150 கோடியாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் உணவுக்கான குறைந்தபட்ச வருமானம் கூட இல்லாத ஏழைகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டும் என்றும், அவர்களில் 40 சதவீதம் பேர் இந்தியர்களாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளி வர்க்கத்தினரின் வருமானம் 3.4 இலட்சம் கோடி டாலர் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் விளைவாக மறுபுறம், உலகளாவிய சமத்துவமின்மை மிகவும் அதிகரித்துள்ளது பில் கேட்ஸ் (மைக்ரோசாப்ட்), மார்க் ஜுக்கர்பெர்க் (பேஸ்புக்) மற்றும் ஜெஃப் பெசோஸ் (அமேசான்) தலைமையிலான 8 சூப்பர் கார்ப்பரேட் பில்லியனர்கள் உலக மக்கள்தொகையில் 50 சதவீதத்தினரின் செல்வத்தை விட அதிகமான செல்வத்தைக் குவித்து வைத்துள்ளனர்.

ஆக்ஸ்பாம் அறிக்கை (2020) உலகின் 2153 கோடீஸ்வரர்களின் மொத்த செல்வத்தை உலக மக்களில் 60 சதவீதத்தினரின் செல்வத்திற்கு சமமானதாக மதிப்பிடுகிறது. இன்று நிலவும் ஏற்றத்தாழ்வுகள் என்பது சமூகத்தின் மிகவும் அழிவுகரமான நிலைகளை எடுத்துக்காட்டுகிறது. தொற்றுநோய்களின் போது கூட தடையின்றித் தொடரும் கார்ப்பரேட்களின் புதிய தாராளமயக் கொள்கைகளால் ஏழை எளிய உழைக்கும் மக்களின் உழைப்பும் அவர்களின் செல்வாதாரங்களும் தொடர்ந்து அதிக அளவில் சூறையாடப்படுகின்றன.

உலகின் முதன்மை வல்லரசு என்று கூறிக்கொள்ளும் அமெரிக்காவானது கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிப்புக்கு உள்ளாக நேர்ந்தது மட்டுமல்லாமல், அதிக அளவில் உயிர்ப்பலி கொடுத்த நாடாகவும் திகழ்கிறது. இவ்வாறு கொரோனா பெருந்தொற்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திவால் நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. தற்போதைய இந்தச் சூழ்நிலையில், சீன ஏகாதிபத்தியத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான உலக மேலாதிக்கத்திற்கான போட்டிக்கான பலாபலத்தின் இடைவெளி குறைந்து உள்ளதைக் காண முடிகிறது.

அமெரிக்காவின் வீழ்ச்சியும் சீனாவின் எழுச்சியும்

1870 களில், மையப்படுத்தப்பட்ட உற்பத்தி மற்றும் நிதி மூலதனத்தின் வளர்ச்சியின் காரணமாக அமெரிக்கா உலகின் முன்னணி பொருளாதார சக்தியாக மாறியது என்றாலும், பிரிட்டன், “சூரியன் ஒருபோதும் அஸ்தமிக்காத பேரரசை” வைத்திருந்தது. மோர்கன் மற்றும் ராக்பெல்லர் தலைமையிலான உலகின் முதல் பில்லியன் டாலர் நிறுவனங்களாக முறையே யு.எஸ். ஸ்டீல் கார்ப்பரேஷன் (U.S. Steel Corporation) மற்றும் ஸ்டாண்டர்ட் ஆயில் கம்பெனிகளின் (Standard Oil) உருவாக்கம் என்பது, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிதி மற்றும் உற்பத்தியில் உலகத் தலைவராக அமெரிக்காவை மாற்றியது.

இந்த நேரத்தில் பிரிட்டனைத் தாண்டி, அமெரிக்காவானது அதன் தொழில்துறை மற்றும் நிதி மேலாண்மையுடன், உலக வர்த்தகம், மூலதன ஏற்றுமதி மற்றும் உலகின் கடன் வழங்குபவர் ஆகியவற்றுடன் இணக்கமான அரசியல் மற்றும் இராணுவப் பரிமாணங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது.

ஏகாதிபத்திய சக்தியாகவும், மிகவும் சக்திவாய்ந்த மூலதன ஏற்றுமதியாளனாகவும், உலகின் முக்கியக் கடன் வழங்குவோராகவும்; பவுண்டு, ஸ்டெர்லிங் உடன் டாலர் ஒரு பெரிய இருப்பு நாணயமாகவும் மாறியது. மேலும், இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு உலகை ஆட்சி செலுத்தி அடிமைப்படுத்தும் சர்வதேச நாணயமாகவும், அமெரிக்காவின் புதியகாலனிய மேலாதிக்கத்தின் முக்கியக் கருவியாகவும் டாலர் இருந்து வந்தது. இப்போது இந்த நிலை தகர்க்கப்பட்டுள்ளது. இதற்கு கொரோனா தொற்றுநோய் மட்டுமே காரணமல்ல, அதற்கு முன்பே இது தொடங்கி விட்டது.

Covid-19 க்கு முன்னதாக, அதாவது, 2019 ஆம் ஆண்டின் இறுதியில், கொள்முதல் சக்தி சமநிலை (Purchasing Power Parity (PPP)) அடிப்படையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21.44 லட்சம் கோடி டாலர்களைக் கொண்ட அமெரிக்காவை 27.3 லட்சம் கோடி டாலர் கொண்ட சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விஞ்சிவிட்டது. சீனாவின் வர்த்தக அளவு 4.43 லட்சம் கோடி டாலராகும். அதில் அமெரிக்காவின் மதிப்பு மட்டும் 3.89 லட்சம் கோடி டாலராகும். இது கிட்டதட்ட அதன் வர்த்தகத்தில் மொத்தம் 80 சதவீதமாகும். 

2000 ஆம் ஆண்டில், உலகின் 80 சதவீத நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்தன. தற்போது அது 30 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதே சமயத்தில் சீனா இன்று உலக நாடுகளில் 60 சதவீதத்தை வர்த்தகப் பங்காளிகளாகக் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், RCEP (பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு – பத்து ஆசியான் (ASEAN) நாடுகள் மற்றும் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் கொரியாவை உள்ளடக்கியது) மற்றும் ரஷ்யா அதன் உலகளாவிய வர்த்தகத்தில் 50 சதவீதத்தைக் கொண்டு சீனாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளாக மாறியுள்ளன. சீன ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி என்பது மலிவான உழைப்பு அடிப்படையிலான “உலகின் பட்டறை” (Cheap Labour – Based “Workshop of the World”) மற்றும் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்ததாகும். ஹூவாய் 5 ஜி யை (Huaawei’s 5G) மூடுவதாக அறிவிக்கப்பட்ட நடவடிக்கை உட்பட சீன விநியோகச் சங்கிலிகளை வெட்டுவதற்கான சமீபத்திய அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் எல்லாம் வெறும் வாய்ச்சவடால்களாகவே தெரிகிறது. ஏனெனில், தற்போது கிட்டத்தட்ட 80 சதவீத அமெரிக்கத் தொழில்களின் விநியோகச் சங்கிலிகள் (supply Chains) சீனாவுடன் நேரடி அல்லது மறைமுகத் தொடர்புகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக மருத்துவ விநியோகத் துறையில், சீனாவை 90 சதவீதம் அளவுக்கு அமெரிக்கா சார்ந்துள்ளது என்பது Covid-19 சூழலில் நன்கு வெளிப்பட்டுள்ளது.

மூலதன ஏற்றுமதித் துறையிலும், சீனா அதன் புதிய காலனிய நலன்களைக் கொண்டு அமெரிக்காவை முந்தியுள்ளது. “ஒன் பெல்ட் ஒன் ரோடு” (OBOR- One Belt One Road) திட்ட முன்முயற்சியில் இருந்து இது தெளிவாகிறது. அதன் பொருளாதார அளவைப் பொறுத்தவரை முந்தைய மார்ஷல் திட்டத்தை (அதாவது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஐரோப்பாவின் போருக்குப் பிந்தைய புனரமைப்புக்கான உந்து சக்தியாக செயல்பட்ட அமெரிக்காவின் ஐரோப்பிய மீட்புத் திட்டம்) விட பெரியது. 

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் -அமெரிக்கா வரை பரவியுள்ள 1 இலட்சம்கோடி டாலர் மதிப்புள்ள மூலதன ஏற்றுமதியைக் கருத்தில் கொண்டு அதன் மீது சீனா தனது மேலாதிக்கத்தை நிறுவுவதை அடிப்படையாகக் கொண்டு, இந்த OBOR திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை செயல்படுத்தும் நாடுகளில் சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்தகைய ஒப்பந்தங்கள் அடிப்படையில் புதியகாலனிய கட்டுப்பாடுகளைக் கொண்டவை.

அமெரிக்க ஏகாதிபத்தியம் கொரோனா தொற்றுநோயை “சீன வைரஸ்” என்று வகைப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், வென்டிலேட்டர்கள், முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு அலகுகள் உள்ளிட்ட 31 டன் மருத்துவ உபகரணங்களை சீனா இத்தாலிக்கு ஏற்றுமதி செய்தது. இத்தாலியானது ளிஙிளிஸி திட்டத்தில் கையெழுத்திட்டதானது இந்த ஏற்றுமதிக்கு அடிப்படையாக இருந்து நடைமுறைபடுத்தப்பட்டது. இந்த தொற்றுநோய் அதற்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது.

அமெரிக்கா தலைமையிலான பல பிராந்திய பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் பலவீனமடைந்து வருகின்றன. தொற்றுநோயின் பின்னணியில், அமெரிக்கா தலைமையிலான ஜி 7 மற்றும் ஜி 20 போன்ற பல சர்வதேச கூட்டமைப்புகள் சீர்குலைந்துள்ளன. டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மையின் (Trans Pacific Partnership (TPP)) சீர்குலைவு இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ கூட அதன் ஒற்றுமையை இழந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தனது சொந்த “ஐரோப்பிய இராணுவக் கட்டமைப்பை” உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. மறுபுறம், 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக வர்த்தக அமைப்பில் இணைந்த சீனா, அதன் வளர்ந்து வரும் அரசியல்-பொருளாதார செல்வாக்கைப் பயன்படுத்தி பல பிராந்திய மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் மேலாண்மை செலுத்தி வருகிறது.

உண்மையில், உலக வர்த்தக அமைப்பின் விதிகள் சிலவற்றின் படி, பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்கள் என்பது மூலதனம் மற்றும் சந்தையை சர்வதேசமயமாக்குவதற்கான ஒரு நுழைவாயில் என்று கூறுகிறது. இத்தகைய சூழலில்,ஸிசிணிறி என்பது வரலாற்றின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை உள்ளடக்கியதாகும். தற்போது, முன்னணி ஏகாதிபத்திய சக்தியான சீனா தனது மலிவான தயாரிப்புகளை ஸிசிணிறி இல் சந்தைப்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கியது ஆகும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), பிரிக்ஸ் (BRICS) போன்றவற்றில் சீன ஏகாதிபத்தியத்தின் ஆர்வம் பிரதானமாக இருக்கிறது. அதே நேரத்தில் சீனாவின் தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB))யானது அமெரிக்காவின் தலைமையின் கீழுள்ள ஆசிய பொருளாதாரக் குழுவான ஆசிய அபிவிருத்தி வங்கியை (Asian Development Bank-ADB) விட பல மடங்கு பெரிய நிறுவனமாகும். அமெரிக்க ஏகபோக நிறுவனங்களான ராக்பெல்லர்-ஃபோர்டு பவுண்டேஷன் எப்படி மாபெரும் தொண்டு நிறுவனங்களாகவும்; புதியகாலனிய நலன்களை உத்திரவாதம் செய்வதற்கென்றே எப்படிச் செயல்படுகிறதோ, அதைப் போன்றே சீன ஏகாதிபத்தியமும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. ஆப்பிரிக்காவுக்கு 5,00,000 சோதனைக் கருவிகள் மற்றும் 10,00,000 முகமூடிகள் அடங்கிய மருத்துவ உதவியை உடனடியாக வழங்கியதிலிருந்து சீனாவின் உலக மேலாதிக்கத்திற்குத் துணை செய்வதற்கும் ஆப்பிரிக்காவில் புதிய காலனியத்தை ஆழப்படுத்துவதற்கும் செயல்படுத்தியுள்ளது. சீனாவின் ‘அலிபாபா’ பெரும் தொண்டு நிறுவனமாக உலக அரசியலில் கால்பதித்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில், அதன் இராணுவச் செலவினம் மட்டும் 2019 ஆம் ஆண்டில் 732 பில்லியன் டாலர்களாக (1 பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் 7000 கோடியாகும்) இருக்கிறது. அதாவது உலக மொத்த இராணுவச் செலவில் இதன் பங்கு மட்டும் 38 சதவீதமாகும். இதனைத் தொடர்ந்து 261 பில்லியன் டாலர் மதிப்புடன் சீனா இரண்டாவது இடத்திலும், 71 பில்லியன் டாலர் மதிப்புடன் அமெரிக்காவின் அடிமைக் கூட்டாளியான இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார அடித்தளங்கள் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது மிகப்பெரிய இராணுவச் செலவினங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், அதன் இராணுவ மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குமான திறன் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது.

இதன் விளைவாக இரு ஏகாதிபத்தியங்களுக்கும் இடையேயான முரண்பாடு மிகவும் கூர்மையடைந்துள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியில் வர்த்தகப் போர்களும், புவிசார் அரசியல் பதட்டங்களும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் கூர்மையடைந்துள்ளன. வரலாற்றில் சிதைந்துபோகும் பேரரசு ஒருபோதும் சண்டையின்றி அதன் மேலாதிக்க நிலையில் இருந்து கீழே இறங்காது. அதனால் தற்போது அமெரிக்கா தனது மேலாதிக்கத்தைத் தக்கவைப்பதற்கு, போருக்கான திரட்டல்களையும் திட்டமிடல்களையும் வேகமாக செயல்படுத்திவருகிறது.

கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக உலகப் பொருளாதாரத்தை மிகப்பெரிய சிக்கலுக்குள் தள்ளியுள்ள இந்த சூழலில்தான், இன்று ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதாரா நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக- தீர்வுகாண்பதற்காக மூன்று வழிமுறைகள் முன்வைக்கப்படுகின்றன.

1) முதலாவதாக, புதிய தாராளமயத்திற்கு முந்தைய, அரசின் தலையீட்டுடன் நடைபெறக் கூடிய (ரிமீஹ்ஸீமீsவீணீஸீ விஷீபீமீறீ) ‘சமூகநலன்சார்’ முதலாளித்துவ அமைப்பு முறைக்குச் செல்வது.

2) இரண்டாவதாக, இந்த நெருக்கடியை மேலும் ஒரு வாய்ப்பாகக் கொண்டு புதிய தாராளமயக் கொள்கைகளை தீவிரப்படுத்துவது. இதை தற்பொழுதுள்ள வலதுசாரி அரசுகளை மேலும் வலிமைப்படுத்தி மக்களை ஒடுக்குவதின் மூலம் சாத்தியப்படுத்துவது.

3) மூன்றாவதாக, முதலாளித்துவ நாடுகள் சோசலிசப் பாதையை நோக்கிச் செல்வது. புதிய காலனிய நாடுகளில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து ஏகாதிபத்தியத்தையும் ஆளும் தரகு முதலாளித்துவத்தையும் தூக்கியெறிந்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்திச் செல்வது. 

கடந்த சில ஆண்டுகளகாவே புதிய தாராளமயத்திற்கு எதிராக ஏராளமான மக்கள்போராட்டங்கள் பலநாடுகளில் நடைபெற்றுவருகிறது. இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பெரும்பாலான மக்கள் மத்தியில் சோசலிசப் பாதைதான் ஒரே தீர்வு என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதையேதான் வரலாறும் நடைமுறையும் நிரூபித்துள்ளது. இது வெல்லக்கூடிய பாதை என்பது தொழிலாளிவர்க்கத்தின் உறுதியான நம்பிக்கையுமாகும். இதுதான் சரியான மார்க்சியப் பாதையுமாகும். அதை விடுத்து மேற்சொன்ன முதல் இரண்டு வழிமுறைகளுமே ஏகபோக ஆதிக்கத்திற்கும் மற்றும் புதிய காலனிய நலன்களுக்கும் சேவைசெய்வதாகும். ஏகாதிபத்திய பொருளாதாரத்திற்கு வால் பிடிப்பதேயாகும். இவைகுறித்து விரிவாகக் காண்போம்.

கீன்சியமும் வரலாற்றில் அதன் பாத்திரமும்

1930 களில் ஏற்பட்ட உலக முதலாளித்துவத்தின் பொதுநெருக்கடிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையே கீன்சியமாகும். ஏகபோக மூலதனத்தைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சீர்திருத்தக் கொள்கை மற்றும் நடவடிக்கைதான் கீன்சியமாகும். அது திட்டவட்டமாக மார்க்சிய நிலைபாட்டிற்கு எதிரானது. முதலாளித்துவமே சாஸ்வதமானது, அது தன்னைத்தானே சரிப்படுத்திக் கொள்ளக்கூடியது, எப்போதும் மேல்நோக்கிய வளர்ச்சியையே கொண்டது என்ற முந்தைய முதலாளித்துவ மதிப்பீடானது உண்மையல்ல, மாயத்தோற்றம்தான் என்பதை பிரிட்டனைச் சேர்ந்த மறைந்த சர் ஜான் மேனார்டு கீன்ஸ் அவர்களின் கருத்தாக்கத்திற்குப் பிறகு, முதலாளித்துவப் பொருளியலாளர்கள் உணர்ந்தனர். கீன்சியக் கோட்பாடானது மதிப்பு மற்றும் உபரிமதிப்பு பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை நிராகரித்தது. அதேவேளையில், முதலாளித்துவ உற்பத்திமுறையானது தான் உற்பத்திசெய்யும் பொருட்களுக்குத் தேவையான வாடிக்கையாளர்களையும் தானாகவே உருவாக்கிக் கொள்ளும். அதாவது, உற்பத்தியும் நுகர்வும் ஒன்றையொன்று சமநிலைப்படுத்திக்கொள்ளும் என்று அதுநாள்வரை முதலாளித்துவவாதிகள் நம்பிக்கொண்டிருந்த “சேயின் விதியை”(says law) தவறு என்று கீன்ஸ் கூறினார். அதற்குப் பதிலாக ஏகபோக நிலைமைகளில் முதலீட்டுக்குப் பயன்படுத்தப்படாமல் பெருமளவில் குவிக்கப்படுகின்ற மனோ நிலையானதுதான் (Psychology) தவிர்க்கமுடியாமல் சந்தைக்கான பற்றாக்குறையை உருவாக்குகிறது என்றார். இதன் காரணமாகவே மிகை உற்பத்தியும் வேலையில்லாத் திண்டாட்டமும் உருவாகிறது என்றார். இந்தச்சூழல் சரிப்படுத்தப்படவில்லை என்றால் பொருளாதார நெருக்கடியானது மேலும் மோசமடைவதுடன் பெரிய அளவிலான வேலையில்லாத் திண்டாட்டத்தையும், மோசமான ஏகாதிபத்தியப் போர்களையும் உருவாக்கும் என்றும், அதன் விளைவு சோசலிசப் புரட்சிக்குக் காரணமாகிவிடும் என்றும் எச்சரித்தார்.

1936ஆம் வருடத்தில் வெளியிடப்பட்ட அவரின் “வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுவான கோட்பாடு” (The General Theory of Employment, Intrest and Money) என்ற புத்தகத்தில் மக்களின் வேலையின்மையும் மற்றும் அதற்கான அடிப்படை நிலவுவதையும், மேலும் “தேவையில் நிலவும் பற்றாக்குறைதான்” பிரச்சினையின் அடிப்படை என்று ஒத்துக்கொண்டாலும், அவர் முதலாளித்துவச் சிந்தனையாளராக இருந்த காரணத்தால் “தேவையில் நிலவும் பற்றாக்குறை” என்பது முதலாளித்துவத்தின் கீழ் இயங்கும் உற்பத்தியின் சமூகத்தன்மைக்கும் சுவீகரித்தலின் தனியார் தன்மைக்கும் இடையிலான முரண்பாடு நிலவுவதுதான் இதற்கான அடிப்படைக் காரணம் என்பதை அவர் காணமறுத்தார். உற்பத்தி உறவுகளில் இது நிலவுகிறது என்று காண்பதற்குப் பதிலாக நுகர்வுப் பற்றாக்குறை, வேலையின்மை மற்றும் நெருக்கடிக்கான காரணங்களை எல்லாம் மக்களின் உளவியலில் தேடமுயற்சித்தார். அவர் கூறுகிறார்: “அடிப்படையான உளவியல் விதி என்னவென்றால் மனிதர்கள் தங்களின் வருவாய் அதிகரிக்கும் பொழுது தங்களின் நுகர்வை அதிகரித்துக் கொள்வார்கள் என்பது ஒரு பொதுவான விதியாக உள்ளது. ஆனால் அவர்களின் வருவாய் அதிகரிப்பதன் அளவிற்கு நுகர்வு அதிகரிப்பதில்லை.” வேறொரு வகையில் சொல்லப்போனால் வருவாய் அதிகரிப்பு என்பது ஒப்பீட்டளவிற்கு நுகர்வைக் குறைப்பதற்கு இட்டுச்செல்கிறது. இந்த நுகர்வானது தேவை, உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு இவற்றின் வீழ்ச்சியில் வெளிப்படுத்திக் கொள்கிறது.

கீன்ஸ் கூறுவது என்னவென்றால் அரசு தலையீடற்ற பொருளாதார இயக்கம் என்பது, அதாவது தாராளவாதப் பொருளாதாரம் என்பது மனிதனின் தேவைக்குப் போதுமான அளவிற்கு உற்பத்தி செய்யவோ, வேலையின்மையை ஒழிக்கவோ ஆற்றல் பெற்றதாக இல்லை. அவர் அதிகபட்சம் அக்கறை கொள்வது மிதமிஞ்சிய வேலையின்மையைப் பற்றித்தான். ஏனென்றால் அது சமூக கிளர்ச்சிகளுக்கோ அல்லது புரட்சிக்கோ இட்டுச்செல்லலாம் என்றார். எனவே வேலைவாய்ப்பின் பொதுவான மட்டத்தை உயர்த்தும் பொருட்டு ஒரு தீர்மானமான காரணியாக அரசு முதலீட்டையும், தனியார் முதலீட்டையும் உயர்த்த வேண்டும் என்று கீன்சால் முன்வைக்கப்பட்டது. 

அவருடைய வர்க்க நிலைபாட்டின் காரணமாக முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பொருளாதார விதிகளின் காரணமாகத்தான் “பெருமளவிற்கு தேவையில் பற்றாக்குறை” நிலவுகின்றது என்ற உண்மையைப் பார்க்க மறுத்தார். வேலையின்மை என்பது முதலாளித்துவச் சந்தை இயக்கத்தில் உள்ள ஒரு தொழில்நுட்பத் தவறு என்று கீன்ஸியம் கூறுகிறது. ஆனால், இதற்கு மாறாக மார்க்ஸியமானது மூலதனத் திரட்சிப்போக்கின் இன்றியமையாத ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக வேலையின்மையைக் காண்கிறது. கீன்ஸின் கருத்திற்கு மாறாக, முதலாளித்துவம் எப்பொழுதுமே வேலையில்லாதோரின் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டே செல்லும், அத்தகைய செயல்போக்கு என்பது தொழிலாளி வர்க்கத்தை தீவிரமாக சுரண்டுவதுதான், தொழிலாளிவர்க்கத்தின் மீதான மூலதன ஆதிக்கத்திற்கு இது அடிப்படையாகும். கீன்ஸியக் கொள்கையானது அரசு தலையிடா பொருளாதாரக் கொள்கையின் (Laissez – Faire) மீது விமர்சனம் வைத்த போதிலும் அது முதலாளித்துவ நெருக்கடியை வேறொரு முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு தீர்க்க முயற்சிப்பது தவிர வேறொன்றுமில்லை.

கீன்ஸியக் கொள்கையின்படி முதலாளித்துவத்தின் வேர்களும், கிளைகளும் அடிப்படையாகவே ஆரோக்கியமாக உள்ளன. இப்பொழுது தேவைப்படுவது என்னவென்றால் அதீதமாக வளர்ந்த கிளைகளை சற்று வெட்டிச் சரிசெய்வதுதான். அது நுகர்வோரின் மற்றும் பலதரப்பட்டோரின் தேவையை அதிகரிப்பதற்கென ஊகவாணிபத்தின் மீது ஒரு கட்டுப்பாடு தேவை என்னும் மேலாண்மையை வடிவமைத்தல், பற்றாக்குறை நிதி, பொருத்தமான வரி மற்றும் பண நடவடிக்கை இவற்றைப் பற்றிய ஒரு அறைகூவலை விடுத்தது. இருப்பினும் கீன்ஸியக் கொள்கை அடிப்படையிலேயே தோல்வி கண்டுவிட்டது. கீன்ஸின் பார்வையின்படி முதலீடு செய்யப்பட்டாலும் கூட வேலை வாய்ப்புகள் உற்பத்தி செய்யப்படவில்லை. ஏனென்றால் கீன்ஸ் பிரதிநிதித்துவப் படுத்தும் புதிய முதலீடுகள் யாவும் தொழில்நுட்பம் உயர்வாக உள்ள துறைகளில் மட்டுமே முதலீடு செய்யமுடியும். அதற்கு ஒரு சிறிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களே தேவைப்பட்டார்கள். 

இவ்வாறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி பராமரித்து வந்தால் சுழற்சியாக வரும் பொருளாதார நெருக்கடியை இல்லாமல் செய்யலாம் அல்லது சிறிய அளவினதாக ஆக்கலாம் என்றும் கீன்ஸ் கூறினார். இதன் உச்சபட்ச விளைவாக முதலாளித்துவத்தின் பொதுநெருக்கடியை குணப்படுத்தலாம் என்று கீன்ஸ் பிரகடனம் செய்தார். இதுவே “முற்போக்கு முதலாளித்துவம்“, “மேலாண்மைகொண்ட பொருளாதாரம்“, மற்றும் “சமூகநல அரசு” ஆகியவற்றின் கோட்பாடாக இருந்தது. கீன்ஸ் கருதுவதுபோல் முதலாளித்துவ நெருக்கடிகள் தீர்க்கப் படமுடியாதது என்பதை வரலாறு நிருபித்துள்ளது. மார்க்ஸ் கூறுவதாவது: “முதலாளித்துவம் சமூகரீதியான உழைப்பு என்பதை நடைமுறைப்படுத்துகின்றது. ஆனால் சமூகரீதியான உழைப்பின் காரணமாக செய்யப்படும் பிரம்மாண்டமான உற்பத்தியின் பலன்கள் சமூகரீதியாய் பங்கிடப்படுவதில்லை. மாறாக அவை உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்களால் கைக்கொள்ளப்பட்டு அவர்களின் சொந்தப் பயன்பாட்டுக்கு மட்டுமே என்று ஆகின்றது. அதாவது பெரும்பான்மையான மக்களுக்கு உற்பத்தி சக்தியின் வளர்ச்சியால் எந்தப் பயனும் இல்லை.”

உற்பத்திச் சக்திகளின் கட்டற்ற வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இந்த நிகழ்வுப்போக்கு முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் விதிக்கும் வரம்புகளை மூர்க்கமாக அடித்துத் தகர்க்கிறது. இதன் காரணமாக உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே மோதலைத் தோற்றுவிக்கிறது. இந்த மோதல் ஒரு நெருக்கடியில்தான் ஓய்கிறது.

சரி, இந்த இயக்கப்போக்கின் மறுமுனையில், அதாவது உழைப்பாளி மக்களின் மத்தியில் நடப்பதென்ன? “லாப வேட்டை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. அதேநேரத்தில் மனித உழைப்புச் சக்திக்கான தேவையை ஒப்பீட்டளவில் குறைக்கிறது. அதாவது வேலையற்றோரின் சேமப்படை ஒன்றை உருவாக்குகிறது. முதலாளித்துவம் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து, எந்த அளவுக்கு உற்பத்தித்திறன் அதிகரிக்கிறதோ அதன் நேர்விகிதத்தில் மனித உழைப்பின் தேவையைக் குறைக்கிறது.”

முதலாளித்துவ நெருக்கடி குறித்து முதலாளித்துவ மற்றும் சமூக ஜனநாயகக் கோட்பாட்டாளர்கள் செய்யும் ஆய்வு முதலாளித்துவத்தின் உள்முரண்பாட்டை மூடிமறைக்கும், மறுதலிக்கும் முயற்சியாகவே உள்ளது. அதுதான் கீன்சினுடைய ஆய்வுமாகும். நெருக்கடியிலிருந்து முதலாளித்துவம் மீளவும் அதனை மறக்கவும் நெருக்கடி என்பது ஏதோ சில கணக்குகள் தவறாகிப் போனதால் ஏற்படுவதைப் போலவும், முதலாளித்துவத்தின் சட்டகத்திற்குள் அதற்கு ஆபத்தில்லாமல் நெருக்கடியைச் சமாளித்து விடலாம் என்பது போலவும் கூறப்பட்டது. மார்க்ஸ், நெருக்கடி என்பது முதலாளித்துவத்தின் சாரத்திலிருந்து உருவாகிறது என்று அவதானிக்கிறார். முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பண்பாகிய சமூகரீதியான உற்பத்தி – முதலாளித்துவக் கைக்கொள்ளல் என்ற முரண்பாட்டிலிருந்து உருவாகிறது. முதலாளித்துவ உற்பத்திமுறை என்பதே நெருக்கடியின் தோற்றுவாய். முதலாளித்துவ உற்பத்திமுறை இருக்கும்வரை நெருக்கடி தவிர்க்க இயலாததும் வெல்ல இயலாததும் ஆகும். நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டுமெனில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் முடிவுக்கு வர வேண்டும். அதை விடுத்து அதற்குள்ளாகவே தீர்வைத் தேடுவது என்பது முதலாளித்துவத்தின் தொங்குசதையாக மாறுவதேயாகும்.

சரி, கீன்ஸிய வழிகாட்டுதலின்படி உண்மையில் நடைமுறையில் நடந்தது என்னவென்றால் இராணுவமயமாக்குவதின் மூலம் ஏகாதிபத்திய பொருளாதாரத்தை உத்வேகப்படுத்த முயற்சித்ததுதான். தனியார் மற்றும் பொதுச்செலவு இரண்டிலும் ஒரு அதிகரிப்பைப் பரிந்துரைக்கையில் கீன்ஸ் ஆயுத உற்பத்தியை மனதில் கொண்டிருந்தார். ஆனால் கீன்ஸால் பரிந்துரைக்கப்பட்ட ஆயுத உற்பத்தி தொழிற்சாலையின் விரிவாக்கமானது உழைப்பாளி மக்களின் பங்கைக் கொண்டும், மக்களுக்கான உற்பத்தியை தடைப் படுத்துவதன் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடிந்தது. முதலாளித்துவ சமூக அமைப்பில் அப்படித்தான் செய்ய முடியும். அது நுகர்வைக் குறைப்பதற்கும், வேலையின்மையை அதிகரிப்பதற்கும், மேலும் பொருளாதார நெருக்கடியை ஆழப்படுத்துவதற்குமே இட்டுச்சென்றது.

மேலும் தெளிவாகக் கூறுவதானால் ஆயுத உற்பத்தியும், இராணுவமயமாக்குதலும் பெருமளவிளான பொருள் வளங்களையும், உழைப்பையும் சமூக உற்பத்திக்குச் செல்லவிடாமல் தடுத்தன. பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தோமேயானால் இராணுவ உற்பத்தி மற்றும் ஆயுதப்படையினரை பராமரிப்பது இவை இரண்டும் சமுதாய உற்பத்தியில் உற்பத்தி சாராத தேவையற்ற பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. திரும்பவும் மார்க்ஸ் கூறுவதாவது: “நேரடியான பொருளாதார சொற்களில் குறிப்பிடுவோமானால் யுத்தமானது தேசத்திற்கான மூலதனத்தை தண்ணீருக்குள் கரைப்பதுதான்”. 

நுகர்வு பற்றிய பிரச்சனையை அணுகிய அடிப்படையில்தான் கீன்சியத்தின் அடிப்படையான தவறு இருந்தது. பெருமளவிலான வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் “பொருளாதார நெருக்கடிக்கும் அடிப்படையான காரணமாக இருக்கக்கூடிய முதலாளித்துவ உற்பத்தியின் அடிப்படையான உறவுகளைப் பற்றி கண்டுகொள்ளாமலே அது விட்டுவிடுகிறது.” உற்பத்திக்கும் நுகர்விற்குமிடையிலான இடைவெளியை “கீன்சியத்தால் இல்லாமல் செய்யமுடியாது. அரசினால் செய்யப்படும் பொதுச்செலவின் மூலம் அந்த இடைவெளி இட்டு நிரப்பப்படும் என்றாலும், மீண்டும் அந்த இடைவெளி தோன்றுகிறது. ஏனென்றால், உற்பத்தியானது இலாபத்திற்கானதாகத் தொடர்கிறது. அது வலது கையால் கொடுப்பதை இடது கையால் பறித்துக்கொள்கிறது. இலாபம் ஒன்றே இயக்குசக்தியாக உள்ள அமைப்புமுறையில் இலாப இடைவெளி எப்போதுமே இருக்கும். இந்த இடைவெளிதான் நெருக்கடிக்கான காரணத்தின் வேராக உள்ளது. கீன்சின் கூற்றுக்கு மாற்றாக பெருமளவிலான வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டுமானால் முதலாளித்துவத்தையே ஒழிப்பதின் மூலம்தான் நிறைவேறும். சோவியத் யூனியனின் அனுபவம் அதைத்தான் நிரூபித்தது.

கீன்சையும், அவரது குறிப்பிட்ட முன்வைப்புகளையும் நிராகரித்த பெரும்பாலான முதலாளித்துவ பொருளியலாளர்களும், அவரது திட்டத்தின் இதயப்பகுதியாக இருந்த பிரதான யோசனையான பொருளாதார நெருக்கடி ஆழப்பட்டிருக்கும் இதுபோன்ற காலங்களில் தொழிற்துறையில் அரசு தலையீடு செய்து உற்பத்தியைத் தூண்டிவிடுவதின் மூலம் பெரிய அளவிலான வேலையில்லாத் திண்டாட்டத்தினால் உருவாகும் புரட்சிகரச் சூழலைத் தடுக்கவேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டனர். முற்போக்கான சொற்றொடர்களால் வழக்கமாக அலங்காரப்படுத்தப்பட்டாலும் கீன்சியம் அடிப்படையில் ஏகபோக மூலதனத்தின் குரலாகவே இருந்தது. “கீன்சியக் கோட்பாடானது ஏகபோக மூலதன ஆதிக்கத்தின் நலனுக்கு இணக்கமானதாகவே இருந்தது.

கீன்சியமும் அமெரிக்க ஏகாதிபத்தியமும்

எல்லா பெரிய முதலாளித்துவ சக்திகளும், குறிப்பாக அமெரிக்காவும் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளில் கீன்சிய கொள்கைகளையே கடைபிடித்தன. உதாரணமாக, அன்றைய அமெரிக்க அதிபர் ஐசனோவர் “அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இனியும் ஒரு மந்தநிலையை நாம் அனுமதிக்கமாட்டோம்” என்று அறிவித்தார். இந்தக் காலகட்டத்தில் ஐக்கியநாடுகள் சபையும்கூட கீன்சியக் கொள்கையின் அடிப்படைகளைப் பிரதிபலித்தது. மார்க்ஸ் முன்பே கூறியபடி முதலாளித்துவவாதிகள் வேலையில்லாத சேமிப்புப் பட்டாளத்தை நோக்கியே எப்போதும் நகர்வார்கள். ஆனால், 1929-33 காலகட்டத்தில் ஏற்பட்டது போன்ற வேலையில்லாப் பட்டாளம் உருவாகுமானால் அதனுடைய புரட்சிகர விளைவுகளைக் கண்டு அஞ்சினார்கள். எனவே, அவர்களின் கொள்கையாக கீன்சியம் இருந்தது.

உலகின் சமூகஜனநாயகவாதிகள் தங்களது பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமாக கீன்சியத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அவர்களைப் பொறுத்தவரை கீன்ஸ் மார்க்சுக்கு மாற்றாக இருந்தார். கீன்சியம் அடிப்படையில் பிற்போக்குத்தன்மை கொண்டது. அது இருவேறு வகையில் வளர்ந்தது. முதலாவது வகையான கீன்சியவாதிகள் ஏகபோக மூலதனத்திற்காக நேரடியாகவே பேசியவர்கள். பொருளாதார நெருக்கடியை தடுக்கவோ அல்லது குறைக்கவோ கார்ப்பரேட்டுகளுக்கு நேரடியாகவே சலுகைகள் அளிக்கவேண்டும். அதன் மூலம் பொருளாதார அமைப்புமுறை ஒட்டுமொத்தத்தையும் தூண்டிவிடலாம் என்று அவர்கள் கருதினர். அந்தக் காலகட்டத்தில் பிரம்மாண்டமான அதிகப்படியான இலாபத்தை ஈட்டித்தரக்கூடிய போர்த் தளவாடங்களை உற்பத்தி செய்வதையே அடிப்படையாகத் திட்டமிட்டனர். அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீவிரமான உலக ஆக்கிரமிப்பிற்கான திட்டத்தோடு மிகவும் பொருந்திப்போனது. இதுபோன்றே கீன்சியத்தின் பிரதிநிதியான ஐசனோவர், சாலைகள் அமைப்பது, வெள்ளக் கட்டுப்பாடு போன்ற பெரிய திட்டங்களை தொடங்கவும்கூட சாத்தியமானது. ஆனால், இவை எல்லாமும் உச்சபட்ச இலாபத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே திட்டமிடப்பட்டது.

கீன்சியம் அதன் ஆதரவாளர்களால் கூறப்படுவதுபோல் “மேலாண்மை செய்யப்பட்ட பொருளாதாரம்” அல்ல. வரியும், வட்டிவிகிதமும் உற்பத்தியில் செல்வாக்கு செலுத்துவது பற்றிய அறியாமையும், தொழிற்துறையில் போர்த்தளவாட உற்பத்திக்கான உத்தரவுகளின் மூலம் அரசின் ஊக்கத்தைப் பெறுவது என்ற அதன் செயல்முறையும் எந்த வகையிலும் அராஜகமான மற்றும் பரபரப்புத் தன்மைகளை தனது குணமாகக் கொண்ட முதலாளித்துவத்தின் அடிப்படையை மாற்றிவிடாது என்பதை அது அறியவில்லை.

திட்டமிட்ட அல்லது மேலாண்மைக்கு உட்படுத்தப்பட்ட உற்பத்தி என்பது முதலாளித்துவத்தின் கீழ் சாத்தியமில்லை. 1933-39 ல் ரூஸ்வெல்ட்டால் கொண்டுவரப்பட்ட “பம்ப் பிரைமிங்” என்று அழைக்கப்பட்ட ஊக்க நடவடிக்கை தோல்வியடைந்தது போல், கீன்சியக் கொள்கையால் சுழற்சியான பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது. உண்மையில், சுழற்சியான நெருக்கடிகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, தனது திட்டமிட்ட போர்த்தளவாட உற்பத்தியானது நீண்டகால அடிப்படையில் முதலாளித்துவத்தின் சுழற்சியான நெருக்கடியையும், பொதுநெருக்கடியையும் கீன்சியம் இன்னும் மோசமான அளவில் உருவாக்கக்கூடியதாகவே இருந்தது. கீன்சிய நடவடிக்கைகளால் முதலாளித்துவத்தை நெருக்கடிக்கு உள்ளாகாத கொள்கையாக மாற்றிவிட முடியவில்லை. அது தொழிற்துறைக்கு தற்காலிகமான ஒரு வாழ்வையே கொடுத்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட முதலாளித்துவ உலகம் முழுமையிலும் பொருளாதார நெருக்கடிக்கான அறிகுறிகள் அதிகரித்து வருவது இதற்கான தோற்றமாகக் காணலாம். போர்த்தளவாட உற்பத்தி, குறிப்பாக இன்றைய பிரம்மாண்ட அளவில், அடிப்படையில் விரயமானது என்பது மட்டுமல்லாமல் இறுதியில் முதலாளித்துவப் பொருளாதாரம் ஒட்டுமொத்தத்தையும் பலவீனப்படுத்தக் கூடியதாகும்.

கீன்சியம், சொல்லப்படுவதுபோல் “சமூகநல அரசு” என்பதற்கானதல்ல. தோழர் ஸ்டாலின் குறிப்பிட்டது போல, “தற்போதைய முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கையானது மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கானது அல்ல. மாறாக ஏகபோகங்களுக்காக உற்பத்தியாளர்களிடமிருந்து உச்சபட்ச இலாபத்தைப் பிழிந்தெடுப்பதே ஆகும்.” அவர் மேலும் கூறுகையில், “ஏகபோக மூலதனத்தின் நோக்கம் ஏதேனும் இலாபத்தைப் பெறுவதல்ல. மாறாக உச்சபட்ச இலாபத்தை அடைவதே அதன் முதன்மையான நோக்கம். அதுதான் நவீன முதலாளித்துவத்தின் அடிப்படையான பொருளாதார விதியாகும். நவீன முதலாளித்துவத்தின் அடிப்படைப் பொருளாதார விதியின் முக்கியமான அம்சங்கள் மற்றும் தேவைகளை கீழ்க்காணும் வகையில் வகைப்படுத்தலாம்: சுரண்டலின் மூலமாக அதிகப்படியான முதலாளித்துவ இலாபத்தைப் பெறுவது, குறிப்பிட்ட நாட்டின் பெரும்பான்மையான மக்களின் வாழ்வை அழித்து ஏழ்மைக்கு உள்ளாக்குவது, பிறநாடுகளின் மக்களை அடிமைப்படுத்தி கொள்ளையை நிறுவனமயமாக்குவது, குறிப்பாக பின்தங்கிய நாடுகளை, மற்றும் கடைசியாக,தேசியப் பொருளாதாரத்தை போர் மற்றும் இராணுவமயமாக்குவது. அவற்றை உச்சபட்ச இலாபத்தைப் பெறுவதற்குப் பயன்படுத்துவது” என்றார். ஏகபோக முதலாளித்துவத்தின் இந்த அடிப்படை விதிகளை கீன்சியத்தால் மாற்றிவிட முடியாது. அதேவேளையில், “முற்போக்கு முதலாளித்துவத்தின்” துவக்கமாக கீன்சியத்தை பிரதிநிதித்துவப் படுத்தமுடியாது. அது “அழுகிப்போன முதலாளித்துவ அமைப்பின் பிற்போக்கு வடிவமாகும். உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் பொதுநெருக்கடியில் உருவான கீன்சியத்தால் நெருக்கடியைத் தீர்க்கமுடியாது. மாறாக தீவிரப்படுத்தவே செய்தது.” இதுதான் வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மையுமாகும். 

புதிய காலனியமும் கீன்சியமும்

இரண்டாம் உலகப் போருக்குப் பின், புதிய காலனியாதிக்கமுறைக்கு கீன்சியப் பொருளாதாரம்தான் அடிப்படையானது. அன்று நிலவிய பொருளாதார, அரசியல், இராணுவ மற்றும் பண்பாட்டு அமைப்புகளை பயன்படுத்துவதன் மூலம், அம்முறை பொதுவாகச் செயலாக்கப்பட்டது. ஏகாதிபத்திய நாடுகளில், தாராளவாதக் கொள்கையைக் கைவிட்டு, அனைத்தும் அரசின் ஏகபோகத் தனியுரிமைக்கு என மாற்றம் நிகழ்ந்தது. பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளில் அரசு தலையிட, கட்டுப்படுத்த, திட்டமிட அது வழிவகுத்தது. அரசு தலையீட்டின் விளைவாக உருவான ஏகபோக நிதி மூலதனக் குவிப்பும், முதலாளித்துவ அரசு நிர்வாகங்களுக்கும், பன்னாட்டுக் கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் நிதிக் கழகங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பும், இராணுவ, போர்த் தளவாட, ஆயுதங்களின் உற்பத்தியாளர்களுக்கு ஒதுக்கீடும், ஆயுத உற்பத்தி சார்ந்த ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கு அரசுகள் நிதியளித்தலும், அரசுகளின் வரவு செலவுத் திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தை நிலைப்படுத்தி, சமூகநல நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும், முதலாளித்துவக் கொடுமைகளை குறைத்துக் காட்டுதலுமாக ஏகாதிபத்திய நாடுகள் அல்லது புதிய காலனியாதிக்க நாடுகள் என்ற பேதமில்லாமல் செயல்படுத்தப்பட்டது. சந்தையில் போதுமான தேவையின்மையால் ஏற்படும் முதலாளித்துவ பொருளாதார தேக்க நிலை ஒரு புறம்,சோசலிசமும் தேசிய விடுதலை இயக்கங்களும் முன்வைக்கும் அரசியல் சவால்கள் மறுபுறம் என இவைகளை எதிர்கொள்ள முதலாளித்தால் முன்வைக்கப்பட்ட தீர்வே “வளர்ச்சிசார் அரசு” என்பதாகும். 

கீன்ஸ் முன்வைத்த அரசுத் தலையீடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் முதன்மை முதலீட்டாளராக அரசு இருப்பது ஆகியவை குறித்து மார்க்சிய, வர்க்கத் தொலைநோக்கில் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும். கீன்ஸ் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட “நிறுவனங்களை அரசுமயமாக்குதல்” அல்லது “தேசியமயமாக்குதல்” அல்லது “பொருளாதாரத்தின் மீது அதிகாரம் செலுத்தும் உயரடுக்குகளில் பொதுத்துறை இருத்தல் என சொல்லப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும், நிலவும் முதலாளித்துவ வர்க்க உற்பத்தி உறவுமுறைகளுக்கோ, நிதி மூலதனத்தின் நீண்ட கால நலன்களுக்கோ எவ்வகையிலும் எதிரானதல்ல. கீன்ஸ் குறிப்பிட்டுள்ளபடி பல நிறுவனங்களை அரசு கையகப்படுத்துவதும், அடிப்படைக் கட்டமைப்புக்கான தொழில்களில் பொதுத் துறை மூலம் முதலீடுகள் செய்வதும் யாருடைய நலன்களுக்கானவை? துல்லியமாக ஏகாதிபத்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்கானவைதான். அடிப்படைக் கட்டுமான தொழில்களை நிறுவுவதற்கும், வழக்கொழிந்து போன, பயன்படுத்த லாயக்கில்லாத கருவிகளையும், எந்திரங்களையும் மாற்றுவதற்குத் தேவைப்படும் மிகப்பெரும் செலவினத்தை, தொழிலாளி வர்க்கத்தின்- உழைக்கும் மக்கள், சாதாரண மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவிட்டு அவர்களின் தோள்கள் மீதே சுமத்தியது. 

ஏகாதிபத்தியவாதிகள், தரகுமுதலாளிகளைப் பொறுத்தவரை, அரசுத் தலையீடு மற்றும் பொதுத்துறை ஆகியவை திறந்து விடப்பட்ட வாசல்களாகும். அதன் வழியேதான் நாட்டின் மொத்த தேசிய வருவாய் மற்றும் செல்வ வளங்களை முதலாளித்துவச் சுரண்டல் வர்க்கங்கள் பயன்பெறும் வகையிலான மடைமாற்றம் நடைபெறுகிறது. அது இராணுவமயமாக்கல், மானியங்கள் அளித்தல், வரிச்சலுகைகள் மற்றும் உறுதி செய்யப்பட்ட சந்தை ஆகியவைகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறே கீன்சியம்கொண்டு பல நாடுகளில் புதிய காலனியமுறை ஆழப்படுத்தப்பட்டது. 

அரசுத் தலையீடு என்பது, இவ்வாறு பெரும் ஏகபோக கம்பெனிகளை, குழுமங்களை பாதிக்கும் பொருளாதார நெருக்கடியின் கடும் விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டே செயல்படுத்தப்பட்டன. அது நெருக்கடியின் சுமைகளை தொழிலாளிகளின் தோள்கள் மீது சுமத்துகிறது. குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகளின் அரசுகள், தத்தம் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள், முதலீடுகளை ஏற்றுமதி செய்வதை உறுதிப்படுத்துகின்றன. அன்னிய முதலீடுகள் எதிர்கொள்ளும் ஆபத்துகளிலிருந்து அவைகளைப் பாதுகாக்கின்றன. கச்சாப் பொருட்கள், சந்தைகள் மீது நேரடி இராணுவ மேலாண்மை இல்லாத நிலையில், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை புதிய காலனி நாடுகளில் கொண்டு குவிப்பதற்கு நிதியுதவி செய்யப்பட்டன. புதிய காலனிய முறையில், பணிந்து போகிற தொழிலாளிகளையும் தொழிலாளர் விரோதச் சட்டங்களையும், உருவாக்கி செயல்படுத்தும் முதலாளித்துவ மற்றும் தரகு அதிகார வர்க்க அரசு, நிதி மூலதனத்தில் தவிர்க்க முடியாதது. அதை வலுவாக நடைமுறைபடுத்திய பொருளாதாரக் கொள்கைதான் கீன்சியமாகும். எனவே, எந்தவகையிலும், கீன்சியம், என்பது ஆளும் வர்க்கத்தின் நலன்களை மேலாண்மை செய்ததே ஒழிய ஏகாதிபத்திய அடிமை தாசர்கள் கூறுவது போல் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கையில் எந்த ஒளியையும் ஏற்றவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், அரசு செலவினங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்ததற்கு மற்றுமொரு காரணம் உண்டு. தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட திருப்புமுனை, கண்டுபிடிப்புகளின் விரைவான முன்னேற்றம் மற்றும் பொருளாதாரத்தில் தோன்றிய புதிய துறைகள் ஆகியவைகளே அவைகள். இந்நிலை, ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக மிகப்பெரிய அளவில் முதலீடுகளைக் கோரின. கணிசமான ஆய்வுகள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் அவர்களின் இளைய பங்காளிகளின் கீழ் உள்ள கார்ப்பரேட் ஆய்வு மையங்களிலும், தனியார் ஆய்வகங்களிலும் செய்யப்பட்டன. ஆனால், கீன்சியக் காலத்தில் புதிய காலனியாதிக்க முறையில், நிதி மூலதனத்தின் தனிச் சிறப்பம்சம் என்பது, விரிவான முறையில் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக அரசு நிதியை பயன்படுத்துவதே ஆகும். எடுத்துக்காட்டாக, ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான மொத்த செலவினத்தில் 1960 தொடங்கிய ஆண்டுகளின் நடுவில் அமெரிக்கா 64% அரசு நிதியை தனது பங்காக செலவழித்துள்ளது. பிரான்சிலும், பிரிட்டனிலும் முறையே 63% மற்றும் 57% அரசு நிதி கார்ப்பரேட்களின் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கு (ஸி&ஞி) செலவிடப்பட்டுள்ளது. இவ்வறிவியல் ஆய்வுகளில், விண்வெளியியல், மின்னணுவியல், தொழில் சார்ந்த மின் மற்றும் வேதியியல், அணு இயற்பியல், உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் இதர துறைகளின் ஆய்வு ஆகியவற்றில் மிகப்பெரும்பான்மையானவை, அடிப்படையில் இராணுவப் பயன்பாடு சார்ந்தவைகளாகும். இத்துறைகளில், மிகப்பெருந் தொகைக்கான முதலீடுகளை முன்னிறுத்தி, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் முதலீடுகள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஒன்றிணைக்கப்பட்டன. இதனால் மூலதனத்தை ஒருமுகப்படுத்துவதும், குவிமையப்படுத்துவதும் ஒருபுறம் நடக்கிறது. மறுபுறம், உயர்ந்த அளவிற்கு, சமூகமயமாக்கப்படும் உற்பத்தியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதுதான் முதலாளித்துவ முரண்பாட்டின் அடிப்படையாகும். இது தாராளவாதக் கொள்கையாக இருந்தாலும் சரி அல்லது கீன்சிய கொள்கையாக இருந்தாலும் சரி முதலாளித்துவ பொருளுற்பத்திமுறையில் சரிசெய்யமுடியாததும், தவிர்க்கமுடியாததுமாகும். லெனின் அவரது மகத்தான படைப்பான, “ஏகாதிபத்தியம்-முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “முதலாளித்துவம், ஏகாதிபத்தியமாக மாறும் கட்டத்தில், ஒரு விரிவான சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தியை நோக்கி அது நேரடியாக முன்னேறும்; அது சொல்வதென்னவென்றால், முதலாளிகளை, அவர்களின் விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மாறாக அது இழுத்து வரும். அது ஒருவகையிலான மாறுதலுக்கு, முழுமையான சுதந்திர போட்டி நிறைந்த சந்தை முறையிலிருந்து, முழுமையான சமூகமயமாக்க உற்பத்தி முறையிலான, புதிய சமூக ஒழுங்கிற்கு, வழிவகுக்கும்.”

சமூகமயமாக்கப்பட்ட அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை குறிப்பிட்டே லெனின், அவ்வாறு கூறினார். இதனால் ஏற்படும் விளைவு என்னவென்றால் அவர் மேலும் கூறுகிறார்: “உற்பத்தி சமூகமயமாகும்; ஆனால் பணஒதுக்கீடு மட்டும் தனியார்களுக்குத்தான்.” நிதி மூலதனம், முதலாளித்துவ அரசு எந்திரத்தை திறமையாகப் பயன்படுத்தி இப்பணஒதுக்கீட்டை ஊக்குவிக்கும். உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தை, நலிந்த மக்களை, கடும் சுரண்டலுக்கு உட்படுத்தும்.

இவ்வாறு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், முதலாளித்துவத்தின் தத்துவமான கீன்சியம் நடைமுறையில் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தையும், முதலாளித்துவ அரசையும் ஒரே பொறியமைவாக்கி முதலாளித்துவ – ஏகாதிபத்திய முறையை பாதுகாக்க முயற்சித்தது. இத்தத்துவம், தொழிலாளி வர்க்கத்தையும், முற்போக்கு சக்திகளையும் அடக்குமுறைக்கு உட்படுத்தி, சாதாரண மக்களை ஏமாற்றி, நிதி முதலாளிகளைக் கொழுக்க வைத்தது. தேசிய விடுதலைப் போராட்டங்களை அடக்கியது. புதியகாலனிய ஆதிக்கத்திற்காக இராணுவத்தையும், போர்களையும் ஏவிவிட்டது. 

சர்வதேச கீன்சியம், முதலாளியாகவும், பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டாளராகவும் அரசின் பங்கு இருக்க வேண்டுமென்பதன் மூலம் அது தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. மேலும், முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையில் சமரசம் செய்பவராக அரசை இருக்கச் செய்தது. சமூக உற்பத்திப் பொருட்களை கொள்முதல் செய்பவராக அரசு இருக்க வேண்டுமென்றது. பன்னாட்டு தேசிய கார்ப்பரேட்டுகளின் நிதியாளராக பணியாற்றச் சொன்னது. சர்வதேச நிதி ஒப்பந்தங்களில் தரகராக அரசை இயங்கச் சொன்னது. ஏகாதிபத்தியம் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைமைகளை சில அரசியல் சூழல்கள் ஏற்படுத்தி, காக்கும் சில நடவடிக்கைகளுக்கும் இட்டுச் சென்றது. அவை யாவை? இரண்டாம் உலகப் போருக்குப் பின் பெருமிதத்துடன் எழுந்து நின்ற சோசலிசக் கட்டமைப்பு, அதன் சமரசமில்லா பாசிச எதிர்ப்பு ஒருபுறம். பாசிசத்துடன் கூடிக்குலாவிய நிதிமுதலாளிகள் குழுவின் அவமானகரமான தோல்வி மறுபுறம் என்பதுடன் மகத்தான தேசிய விடுதலைப் போராட்ட சக்திகளின் எழுச்சி ஆகியவைகளே அவைகள். இதன் விளைவே, விரிவுபடுத்தப்பட்ட பொருளாதார மக்கள் நலக் கொள்கைகள் என்ற பெயரில், கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை, லாபத்தை உறுதிப்படுத்தியது கீன்சியம். 

முதலீடுகளின் மீதான கட்டுப்பாடு, உள்நாட்டுப் பொருளாதார மேலாண்மையில் செயலூக்கத்துடன் கூடிய அரசின் தலையீடு, ஏகபோக மூலதனத்தையும், உலகப் பொருளாதாரத்தையும் நிலைநிறுத்த, சர்வதேச நிதி முறைமை உட்பட அனைத்தையும் முறைப்படுத்தல், திட்டமிடுதல் ஆகியவைகள் அனைத்தும் கீன்ஸ் முன்வைத்ததேயாகும். இந்த கீன்சிய பரிந்துரை, ஏகாதிபத்திய அறிவாளிகளுக்கும், கொள்கை வகுப்பவர்களுக்கும் இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய ஆண்டுகளில் வேதமானது. ஆனால், இவ்வாறு அரசின் தலையீடு அதிகரிப்பு என்பது கீன்சியத்தின் ஒரு பக்கமே. அதன் முக்கியமான மறுபக்கம், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஏகாதிபத்திய புதிய காலனியாதிக்க ஒழுங்குமுறை தொடர்புடையது. அது கீன்சியக் கட்டமைப்புக்குள் ஆப்பிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் “வளர்ச்சிப் பாதை” என்ற அடிப்படையில் பரிணமிக்க வைப்பதற்கான அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய முன்முயற்சியே. இம்முயற்சி புதிய காலனியாதிக்கத்தின் தவிர்க்க முடியாத உள்ளார்ந்த பகுதியாக இருந்தது. 

கம்யூனிசத்தின் மீதான அச்சம், தேசிய விடுதலை இயக்கங்களில் தோன்றிய முற்போக்கான, புரட்சிகரக் கோட்பாடுகள் ஆகியவற்றிடமிருந்து ஏகபோக முலதனத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவையே இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சேமநல அரசு என்ற கீன்சிய கொள்கைகளைத் தோற்றுவித்தது.

“வளர்ச்சிப் பொருளாதாரம்” பற்றிய தத்துவம், நடைமுறைகள் குறித்த ஆதரவு ஏகாதிபத்தியங்களிடமிருந்தே வந்தன. “வளர்ச்சிப் பொருளாதாரம்” குறித்த இக்கோட்பாடு ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன்-அமெரிக்க நாடுகளில், ஒருபுறம், மக்களை ஏமாற்றும் ஒரு கருத்தாயுதமாகப் பயன்பட்டது. அறிவாளிகளில் ஒரு பகுதியினரை ஆளும் தரகுமுதலாளிகளுடன் இணைந்து நின்று ஏகாதிபத்தியத்தின் பக்கம் வெற்றிகரமாக நிற்கவைக்கப்பட்டனர். 

புதிய காலனியாதிக்க நாடுகளில், ‘உலகு தழுவிய பொருளாதார வளர்ச்சியைப் பரிந்துரைக்கும் ஆதரவாளர்கள் யாவரும் அமெரிக்கப் பொருளாதார நிறுவனங்கள், சமூக அறிவியல் ஆய்வு மையங்கள், அரசுத் துறைகள் மற்றும் உலக வங்கி ஆகியனவற்றோடு ஒருங்கிணைந்த தொடர்புடைய, பொருளாதார அறிஞர்கள், கொள்கை வல்லுநர்கள், சிந்தனையாளர்களே ஆவர். இதனையொத்த “வளர்ச்சிப் பொருளாதாரம்” குறித்த வடிவத்தை முதன்முதலில் முன்னுரைத்தவர் அமெரிக்க அரசுத் துறை மற்றும் உலக வங்கியின் வல்லுநருமான டபுள்யு. ரோஸ்டோவ் ஆவார். வரலாற்றுப் போக்குகள் எதுவாயிருந்தாலும், அனைத்துவித சமூகங்களும் கடந்து செல்ல வேண்டிய “ஐந்து நிலைகள்” என்ற கோட்பாட்டை அவர் அளித்தார். மார்க்ஸின் வரலாற்றுப் பொருள்முதல்வாத விளக்கத்திற்கு ஒரு மாற்றுக் கோட்பாடு போன்றதாகக் கருதி, அவருடைய “பொருளாதார வளர்ச்சியின் படிநிலைகள்: பொதுவுடைமையல்லா அறிக்கை” என்ற புத்தகத்தில், சமூகம் ஐந்து வகையான வளர்ச்சி நிலையில் பயணித்துள்ளது என்றுகூறி, அந்த ஐந்து நிலைகளை கீழ்க்கண்டவாறு ரோஸ்டோவ் குறிப்பிடுகிறார்: அ) ஆதி சமூகம் ஆ) வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகள் விதித்தல் இ) மேலெழும்புதல் ஈ) முதிர்ச்சி உ) மக்கள்திரளின் உயர்நுகர்வு

புதிய காலனியாதிக்க நாடுகளில் நிலவும் பொருளாதாரப் பின்னடைவோ அல்லது “வளர்ச்சியின்மையோ”, தேவையான அளவு சேமிப்பும், மூலதனமும் இல்லாத நிலைமையால்தான் என விளக்கப்படுகிறது. இந்நாடுகளில் ஏற்கனவே உள்ள குறைவான வருவாய் நிலையில், சேமிப்பையோ, மூலதனத்தையோ அதிகரிப்பது என்பது இயலாதது ஆகும். இக்கோட்பாட்டின் அடிப்படையான பிழை என்னவென்றால், “வளர்ச்சியின்மை”க்குக் காரணமான, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடைபெறும் காலனி ஆதிக்க கொள்ளையை அது அலட்சியப்படுத்தியதுதான். “பொருளாதார வளர்ச்சி” பேசும் கோட்பாட்டளர்கள், இந்நாடுகளில் உள்ள சமகாலச் சூழல்களை, தற்போதுள்ள ஏகாதிபத்திய நாடுகளில் நிலவிய முதலாளித்துவத்திற்கு முந்தைய காலத்துடன் சாதாரணமாக ஒப்பிடுகிறார்கள். ரோஸ்டோவ் மற்றும் அவரைப் போன்ற தரகுப் பொருளாதார வல்லுநர்கள், ஆப்பிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தரகுமுதலாளித்துவ ஆட்சிமுறையைப் பரிந்துரைக்கிறார்கள். இத்திட்டத்தில் விவரித்துள்ள வளர்ச்சிக்கான அடுத்தடுத்த படிநிலைகளைக் கடந்துவர அன்னியமூலதன உதவியை நாடச்சொல்கிறார். வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால் ஏகாதிபத்திய மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்தை சார்ந்துதான் வளர்ச்சி என்பது சாத்தியமாகும். அதன்படி புதிய காலனிய நாடுகள் ஏகாதிபத்தியத்தை நிலையாக சார்ந்திருப்பதுதான் வளர்ச்சிக்கான அடிப்படையாகும் என்று ரோஸ்டோவ் கூறுகிறார். ரோஸ்டோவின் வளர்ச்சிக் கோட்பாடு, புதிய காலனியாதிக்க நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கேற்ப தகவமைக்கப்பட்ட சர்வதேச கீன்சியத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. 

புதிய காலனிய இந்தியாவும் கீன்சியமும்

இரண்டாம் உலகயுத்தக் காலகட்டத்தில் 60 லட்சம் மக்கள் ஐரோப்பா முழுவதும் பாசிச பயங்கரவாத தாக்குதல்களினால் கொல்லப்பட்டனர். குறிப்பாக, அதே காலகட்டத்தில் 1943 முதல் 1944 வரை இந்தியாவில் பிரிவினைக்கு முன்னால் வங்கத்தில் மட்டும் 30 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இதற்குக் காரணம் அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் கடைபிடித்த கீன்சியப் பொருளாதாரக் கொள்கையும், அதனால் தோன்றிய லாப பணவீக்கமும் (Profit Inflation) தான். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், வெகுமக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான கூலியை கடுமையாகச் சுரண்டி, தன்னுடைய லாபத்தை அதிகரித்து, நாடுபிடிக்கும் யுத்தத்திற்கு மொத்த லாபத்தையும் திருப்பியது. இதில் கீன்சின் நேரடிப் பங்கு மிகவும் முக்கியமானது. கீன்ஸ்தான் அன்றைய கட்டத்தில் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கு இந்திய மூலதனத்தை இராணுவக் கட்டமைப்பிற்கு பயன்படுத்துவது தொடர்பான ஆலோசகராக இருந்தார். கீன்சியமும், அதனால் ஏற்பட்ட மனிதப் பேரழிவுகள் என்பதும் எண்ணிலடங்காதது. மேலே குறிபிடப்பட்டுள்ளது மூழ்கியிருக்கும் பனிப்பாறையின் மீது தெரியும் சிறு முனை மட்டுமே. கீன்சியமானது இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒரு பெரும் துயரம் மட்டுமல்ல, அது நிதி மூலதனத்திற்கு ஆற்றிய சேவை என்பது மறுக்கவும் மறைக்கவும் முடியாத உண்மையாகும்.

இந்த புதிய காலனியாதிக்க “வளர்ச்சித் திட்டமுறை”க்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்தியப்பொருளாதாரமுறை இருந்தது. அநேகமாக இந்தியாவில் நேருவால் கடைபிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கை என்பது கீன்சிய, ரோஸ்டோவிய பரிந்துரைகளின் கலவையாகும். நேருவின் இந்தக் கொள்கை என்பது, பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் அரசியல் அதிகாரத்தை இந்தியாவின் அரசியல் பிரதிநிதிகளான ஆளும் தரகுமுதலாளி வர்க்கத்திற்கு மாற்றுவதற்கு முன்பே தயாரிக்கப்பட்டுவிட்டது. இந்தியத் தரகுமுதலாளி வர்க்கத்தின் தலைவர்களான, டாட்டா, பிர்லா ஆகியோர் இதற்கான முன்முயற்சியை மேற்கொண்டனர். இந்த முன்னோக்குத் திட்டத்திற்கு “இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம்” என பெயரிடப்பட்டது. அந்தத் திட்டம்தான் “பாம்பே திட்டம்” அல்லது “டாட்டா-பிர்லா திட்டம்” என பரவலாக அறியப்பட்டதாகும். பொருளாதாரத்தின், அடிப்படைக் கட்டமைப்புத் தொழில்கள் மற்றும் முக்கியத் தொழில்களில் செயலூக்கமிக்க அரசுத் தலையீடு, மற்றும் கட்டுப்பாட்டைக் கோரிய, அன்று நிலவிய “வளர்ச்சி” குறித்த பார்வைக்கு இசைவானதாக அது இருந்தது. அதே நேரத்தில் அது ரோஸ்டோவ் ஆலோசனைக்கேற்ப, பொருளாதார வளர்ச்சிக்கான செயலூக்கியாக அன்னிய மூலதனத்தையும், தொழில்நுட்பத்தையும், சார்ந்திருப்பதை உத்திரவாதப்படுத்தியது.

ஏகாதிபத்திய நிதி மூலதனத்தாலும், தரகு முதலாளித்துவத்தாலும், முன்வைக்கப்பட்ட அரசுத் தலையீடு கருத்தாக்கம் என்பது, அவர்கள் பொதுத்துறையின் மீது கொண்ட பற்றினால் அல்ல என்பது வெளிப்படையானது. ஆனால் அன்றைய வரலாற்றுச் சூழல்களின் தேவைகளும், அதன் இறுதிப் பயனாளர்கள் முதலாளிகள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுமே உரிய காரணங்களாகும். பொதுத் துறையில் உருவான திட்டங்கள் பலவும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனியார் முதலீட்டுத் துறையின் விரைவான, விரிவான முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதற்கே இட்டுச்சென்றன.

வரலாற்று வழியில் உலகப்போருக்குப் பிறகான தசாப்தத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கடைபிடிக்க நேர்ந்த சமூகநல அரசுக்கொள்கையைப் போன்றே, புதிய தாராளவாதக் கொள்கையை அமல்படுத்துவதற்கு முந்தையகாலம் வரையிலான அரசுத் தலையீடு மூலமான வளர்ச்சி என்ற நேருவின் கொள்கை என்பது தரகுமுதலாளித்துவ இந்திய ஆளும்வர்க்கத்தின் நலனிலிருந்து உருவாக்கப்பட்ட கொள்கையாகவே இருந்தது. உதாரணமாக, 1947 லிருந்து 1955 வரையிலான முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவுவரை காலனிய காலகட்ட கொள்கையிலிருந்து எந்த விலகலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஏற்கெனவே இருந்ததை அப்படியே தொடர்ந்தது நேரு அரசு. எனவே, இந்தக் காலகட்டத்தில் புதிய கொள்கை அறிக்கை ஏதும் இல்லை. 1949 ம் ஆண்டு ஏப்ரல் 6ந்தேதி பாராளுமன்றத்தில் வெளியிட்ட சிறப்பு அறிக்கையின் மூலம் எந்தவிதமான தடங்கலுமின்றி தொழில்நடத்த எல்லா வசதிகளும் செய்துதரப்படும் என்று ஏகாதிபத்தியவாதிகளுக்கு உத்தரவாதம் கொடுத்தார். இந்தக் காலகட்டத்தில் உலகவங்கிக் குழுக்கள் இந்தியாவில் “சார்பு தொழிற்துறையை” வடிவமைப்பதற்கான வழிமுறைகளை வகுத்தளிக்க உதவிசெய்தது. உதாரணமாக, அமெரிக்க மற்றும் பிரிட்டனின் மூலதனப் பங்களிப்போடு 1955 ஜனவரியில் துவங்கப்பட்ட இந்திய தொழிற்துறைக்கான கடன் மற்றும் முதலீட்டுக்கான கழகம் என்ற தனியார் நிதிநிறுவனம் ஏகாதிபத்திய முயற்சிகளுக்கு இடமளிப்பதாக இருந்தது. ‘மூலதனம்’ என்கிற இந்தியத் தரகு முதலாளித்துவ வாதிகளின் வாயாக இருந்த பத்திரிகை பின்வருமாறு கூறியது: “தனியார் நிறுவனங்களின் உற்பத்தித்திறனை வளர்த்தல், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத்திறனைப் பரப்புதல், தனியார் தொழில்செய்வோருக்கும் அரசாங்க அதிகாரிகளுக்குமிடையில் நெருங்கிய ஒத்துழைப்பு, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற ஜனநாயக உலகின் முன்னணி நாடுகளின் முழுமையான ஆதரவு” என அதன்கட்டமைப்பில் எல்லாவற்றையும் உள்ளடக்கமாக வரிசைப்படுத்தியிருந்தது.

இதற்கிடையே, முதல் ஐந்தாண்டுத் திட்டம் வெற்றியடைவதில் ஏகாதிபத்தியவாதிகளும் குறிப்பான அக்கறை எடுத்துக்கொண்டனர். முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான நிதியளவான ரூ.1960 கோடியில் அன்னிய உதவி என்பது ரூ.200 கோடியாக இருந்தது. அதாவது திட்ட மதிப்பீட்டில் 10% ற்கும் அதிகமாக இருந்தது. அதில் 70% மான ரூ.135 கோடி அமெரிக்காவின் மூலதனமாக இருந்தது. 17% உலகவங்கியினுடையது. இதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆரம்பகாலத்தில் இருந்தே திட்ட முன்னுரிமைகளில் செல்வாக்கு செலுத்தியது. இந்த சமயத்தில் ராவுல் பிரிபிஷ்ச் தலைமையிலான இலத்தீன் அமெரிக்காவிற்கான ஐக்கியநாடுகள் சபையின் பொருளாதாரக்குழு கீன்சிய பொருளாதாரத் தத்துவத்தை உயர்த்திப் பிடித்து அறிக்கை ஒன்று வெளியிட்டது. அது புதியகாலனிய நாடுகளில் “உள்ளார்ந்து கவனித்தல்” அல்லது “இறக்குமதிக்குப் பதிலான தொழில்மயமாக்கல்” என்ற வியூகத்தை தொடங்குவதின் தேவையை உணர்ந்தது. இந்த வியூகத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்றுக்கொள்ளும்போது, புதியகாலனிய நாடுகளில் உள்நாட்டின் வர்க்க அடிப்படைகள் மற்றும் விவசாய உற்பத்தி உறவுகளில் அடிப்படை மாற்றம் எதுவும் நிகழாதவரையில் நிதிமூலதனத்தின் நீண்டகால நலன்கள் உறுதிசெய்யப்படும் என்பதை ஏகாதிபத்திய சிந்தனையாளர்கள் சரியாகப் புரிந்தே செயல்பட்டனர். இறக்குமதிக் கட்டுப்பாடு மற்றும் உள்ளார்ந்த செயல்பாடு என்றபெயரில் வர்த்தகக் கட்டுப்பாடுகள், வரிச்சுவர்கள் போன்றவை அமல்படுத்தப்பட்டன. சுயசார்பு என்பது போன்ற தோற்றங்களை உருவாக்கினாலும் அன்னிய மூலதனமின்றி, தொழில்நுட்பமின்றி, ஏகாதிபத்தியச் சந்தையைச் சார்ந்திராமல் இறக்குமதிக்குப் பதிலான தொழில்மயமாக்கல் என்பது செயல்படக்கூடியதல்ல என்பது உண்மையானது. எனவே, உள்ளார்ந்த செயல்பாட்டு வழியிலான தொழில்மயமாக்கம் என்றபெயரில் உருவாக்கப்பட்ட உயர்ந்த வரிச்சுவர்களைத் தாண்டியும் அன்னிய மூலதனம் நுழைவது சாத்தியமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டமானது இறக்குமதிக்குப் பதிலான தொழில்மயமாக்கும் வியூகத்துடன் 1956 ல் துவங்கப்பட்டது என்பது பொதுவான கருத்தாக்கமாகும். இரண்டாவது திட்டவடிவம் அல்லது நேரு-மஹாலனோபி திட்டம் என்றழைக்கப்பட்ட மாதிரியானது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த 30 பொருளாதாரவாதிகளின் பங்களிப்போடு வரைவாக்கம் செய்யப்பட்டு சோவியத் யூனியனைச் சேர்ந்த வல்லுனர்களையும் வைத்துக்கொண்டு தொழிற்துறை கொள்கைத் தீர்மானம் 1956 ல் அறிவிக்கப்பட்டது. அடிப்படையான, முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் மற்றும் கட்டமைப்புகளை 1944 ம் ஆண்டின் பம்பாய் திட்டம் அல்லது டாட்டா-பிர்லா திட்டத்தின் அடிப்படையில் பொதுத் துறைகளாகக் கட்டமைப்பது என்பது இந்தக் கொள்கையின் அடிப்படை அம்சமாகத் தீர்மானிக்கப்பட்டது. அது ஏகாதிபத்திய மற்றும் தரகுமுதலாளித்துவ மூலதனத்தின் நலன்களுக்கு முரணானதாக இல்லை.

சமூக அவசியங்களையும், அடிப்படைக் கட்டமைப்புகளையும் நிறுவுவதன் மூலம் குறைந்த அளவு இலாபமே கிடைக்கும் என்பதனால் அவற்றை பொதுத்துறை மூலம் செய்வது என்ற முடிவு ஏகாதிபத்தியவாதிகளுக்கும், தரகுமுதலாளித்துவவாதிகளுக்கும் நீண்டகால அடிப்படையில் பலனளிப்பது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டது. அது அவர்கள் இலாபத்தை அள்ளிக்குவிக்க ஏதுவாக செலவில்லாத, அபாயமில்லாத பின்புலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. உதாரணமாக, “சோசலிச வடிவிலான சமூகம்” என்றழைக்கப்டுகின்ற நேரு-மஹாலனோபி மாதிரியை முழுவதுமாக ஆதரித்து ஏகாதிபத்திய நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்துறையினரின் தலைமை அமைப்பான ‘அசோசெம்’ என்கிற தொழிற்கூட்டமைப்பின் தலைவர் H.M.L. வில்லியம்ஸ் 1960 ல் கூறுகையில்: “அதிகப்படியான முதலீடு மற்றும் பயனளிக்கும் காலத்தின் இடைவெளி போன்றவற்றின் காரணமாக தனியார் முதலாளிகள் முதலீடு செய்யத் தயங்குகின்ற அடிப்படையான மற்றும் கனரகத் தொழிற்சாலைகளை அமைப்பது என்ற வகையில் அரசுநிறுவனங்கள் செயல்படுவது என்ற கருத்தாக்கத்தின் பேரில் இந்தியாவில் இரும்பு, கனரக இயந்திரங்கள், கனரக இரசாயன ஆலைகள் மற்றும் இயந்திரக்கருவிகள், இயந்திரங்களுக்கான ஆலைகள் போன்றவற்றில் பொதுத்துறை நிறுவனங்கள் வளர்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. அரசின் இந்த விரிவாக்க நடவடிக்கையின் மூலம் தனியார் தொழிற்துறையின் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளையும், ஊக்கத்தையும் அளிக்கமுடியும் என்று பரவலாக அங்கீகரிக்கப்பட்டது.”

1969 ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) என இரண்டு கட்சிகளுமே இந்திராகாந்தி “சோசலிஸ்டாக மாறிவருகிறார்” என்று அடையாள அங்கி அணிவித்தபோதும், அப்போதைய அசோசெம்மின் தலைவர் யி.வி பார்சனும் ஏற்கனவே அசோசெம்மின் தலைவர் கூறியதையே கிட்டத்தட்ட மீண்டும் கூறினார். அதாவது: “சோசலிசம் என்பது இந்தியாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக எப்போதும் இருந்துவருகிறது. அதன் அரசியலமைப்புச் சட்டத்திலும் எழுதப்பட்டிருக்கிறது…. வங்கிகள் தேசியமயமாக்கல் என்பது சாரத்தில் ஒரு அரசியல் நடவடிக்கை மற்றும் அரசியல் வெற்றியாகும். அதனால், நாங்கள் தொழில்செய்யும் முறையில் பெருத்த மாற்றமோ, அதற்கான அறிகுறியோ எதுவும் இதுவரை கண்ணுக்குத் தெரியவில்லை. தனியார் துறையின் சமூகத்திற்குப் பயன்பாடான மதிப்பிற்குரிய பங்களிப்புடன் கூடிய கலப்புப் பொருளாதாரம் என்ற கொள்கையை கைவிடுவதற்கான எந்த ஆலோசனையும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை என்பது எல்லாவற்றிலும் முக்கியமானதாகும்…” தற்போதைய அரசின் பகிர்ந்தளிக்கும் முறையிலிருந்து தனியார்துறை தொடர்ச்சியாக முன்னேறவும், அழுத்தமான, முக்கியமான பங்களிப்பைச் செலுத்தவும் முடியும். எங்களுக்கு சோசலிசத்தால் ஆபத்தில்லை.”

என்றாலும், நேரு அரசாங்கம் போட்டுக்கொண்டிருந்த “சோசலிச முகமூடி”யை ஏகாதிபத்தியம் முழுமையாக அங்கீகரித்தது என்று பொருள் கொள்ளக்கூடாது. உதாரணமாக, உலகவங்கியின் அப்போதைய தலைவர் ஈகின் பிளாக் 1956 ல் இந்தியாவை எச்சரித்தார்: “இந்திய மற்றும் அன்னிய தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கும் ஊக்கத்தில்தான் இந்தியாவின் நலன் இருக்கிறது என்பதை நான் முதலில் அழுத்தமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஒவ்வொரு ஊக்கமும் பொருளாதார வளர்ச்சிக்கும், குறிப்பாக தொழிற்துறை வளர்ச்சிக்கும் அதிகப்படியான பங்களிப்பைச் செலுத்தும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கத்தின் செயல்பாடு கட்டாயம் இருக்கவேண்டும் என்பதை நான் அங்கீகரிக்கும் அதேவேளையில் தனியார் நிறுவனங்களின் திறனை இந்தியாவில் பொதுவாகவே குறைத்து மதிப்பிடப்படுவதுடன் தனியார் செயல்பாடுகள் இங்கே தேவையில்லாமல் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் தீர்க்கமான பார்வை எனக்கிருக்கிறது”. உலகவங்கியின் இந்த விமர்சனத்திற்கு முகம்கொடுக்கும் வகையிலும், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளை சமாதானப்படுத்தவும் உடனடியாக நேரு அரசாங்கம், நிதியமைச்சர் கிருஷ்ணமாச்சாரி தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது. அந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான H.V.R. ஐயங்கார் அமெரிக்கவிடம் இவ்வாறு மன்றாடினார்: “இந்தியாவில் வடிவமைக்கப்படும் ‘சோசலிசம்’ என்பது எந்தவிதமாக கற்பனை செய்தாலும் கம்யூனிசம் என்று பொருளாகாது; அது அரசுமுதலாளித்துவம் என்பதாக பொருள்கொள்ளக் கூடாது; இந்த அமைப்புமுறையானது தனியார் நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்திலும் அது முக்கியப் பங்காற்றும்; இந்த அமைப்பு முறையானது தனியார் சொத்துடமையை மதிக்கிறது. அரசு அந்த சொத்துடமைகளை எடுத்துக்கொள்ள நேரும்போது அவற்றிற்கு இழப்பீடுகள் வழங்கப்படுகிறது. இந்த அமைப்புமுறையில் அமெரிக்காவின் சமூகக் கண்ணோட்டத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் எதுவும் இல்லை”. 50களின் பிற்பகுதியில் கல்பிரைத் அவர்களால் இந்த நிலைப்பாடு பின்வருமாறு அங்கீகரிக்கப்பட்டது: “கிட்டத்தட்ட எந்தவிதமான சோதனை நடத்தப்பட்டாலும் இந்தியாவின் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் வழிகாட்டுதலைவிட பொதுமக்களின் வழிகாட்டுதலுக்கும், இயக்குதலுக்கும் குறைந்த அளவு முக்கியத்துவமே அளிக்கப்படுகிறது. உண்மையில் உலகிலேயே குறைந்த கட்டுப்பாடு அல்லது திட்டமிடல் உள்ள பொருளாதாரத்தில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது”.

இவ்வாறாக, நேரு-மஹலானோபியின் (Nehru – Mahalanobis Strategy) வளர்ச்சிக்கான மாதிரியின் கொள்கை அடிப்படைகளின் திசைவழியானது, டாட்டா-பிர்லா திட்டத்தில் விவரிக்கப்படும் இந்தியத் தரகுமுதலாளிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியவாதிகளின் நிதிமூலதனத்தின் நலனுக்கு ஏற்றவகையிலும் செயல்படுத்தப்பட்டது. 50 களின் இடையிலிருந்தே, முதலில் சி.பி.ஐ கட்சியும் பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியும் நேரு மற்றும் இந்திராகாந்தியின் சோசலிச அடையாளத்திற்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே, அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய நலனிலிருந்து புதியகாலனிய நாடுகளுக்காக வரையறுக்கப்பட்ட, கீன்சியக் கொள்கையின் அடிப்படையில் உலக அளவில் அமல்படுத்தப்பட்ட இறக்குமதிக்குப் பதிலான கொள்கைக்கேற்பவே நேருவின் இறக்குமதிக்குப் பதிலான தொழிற்துறை கொள்கையும் அமைந்திருந்தது.

ஏகாதிபத்திய மூலதனம் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் பொதுத்துறை மூலமாக கட்டியமைக்கப்பட்ட தொழிற்சாலைகள் யாவும் மக்களுக்குப் பயன்படக்கூடிய பொருட்களையும், சேவைகளையும் செய்யக்கூடிய பெரிய அளவிலான உற்பத்திக்குப் பதிலாக, வசதிபடைத்தவர்களுக்கான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன. இது உள்நாட்டுச் சந்தையின் பின்தங்கிய நிலைமையிலிருந்து வருவதாகும். அதை மாற்ற வேண்டுமானால் நில உறவுகளில் அடிப்படையான மாற்றங்கள் கொண்டுவந்தால் மட்டுமே முடியும். இந்தியாவின் மக்கள்தொகையில் மேல்தட்டு வர்க்கத்தின் அளவு என்பது பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை விட அதிகமானது என்பதால் மக்களின் பெரும்பகுதியினருக்கு வாங்கும்சக்தி இல்லையென்றாலும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும், அவற்றின் தரகுக்கூட்டத்திற்கும் இந்தியச் சந்தை கவரக்கூடியதாக இருக்கிறது. எனவே, கூடுதல் வரி மற்றும் பாதுகாப்பு என்ற முகமூடியுடன் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளில் ஊடுருவிய அன்னிய மூலதனம் பல்வேறு வகையான நுகர்பொருள் தயாரிப்பின் மூலம் பெருத்த இலாபத்தை அள்ளிக் குவித்தது. இதன்விளைவாக இலாபம், ஈவுத்தொகை, உரிமைத்தொகை, தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் என்ற பெயர்களில் நாட்டில் இருந்து பெருந்தொகை ஏகாதிபத்திய நாடுகளுக்கு கொண்டுசெல்லப்படுவது தங்குதடையின்றி நடைபெற்றது. அத்துடன் உணவுப்பொருட்கள் இறக்குமதியும் அதிகரித்தது. குறுகிய காலத்திலேயே நேருவின் அரசியல் பொருளாதாரச் செயல்பாடானது வர்த்தகப் பற்றாக்குறையை அதிகமாக்கியது. உள்நாட்டில் உள்ள பின்தங்கிய நிலவுடைமை உற்பத்தி உறவுகளும் மாநிலங்களுக்கிடையே சமத்துவமின்மையும் தீவிரமடைந்ததுடன் புதியகாலனிய நிறுவனங்களைச் சார்ந்து நிற்பதும் அதிகரித்தது.

நெருக்கடியின் வெளிப்பாடாக, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் துவங்கப்பட்ட 2 ஆண்டுகளிலேயே 1958 இல் நாடு மிகத் தீவிரமான அன்னிய செலாவணி நெருக்கடியில் இருப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை மணியை அடித்தது. இதனைத் தொடர்ந்து நேரு அரசாங்கம் உடனடியாக இன்னொரு உயர்மட்டக் குழுவை வாஷிங்டனுக்கு அனுப்பிவைத்தது. அதன்விளைவாக அமெரிக்காவின் உத்தரவின் பேரில் உலகவங்கியின் தலைமையில் 1958 லேயே இந்தியாவுக்கு உதவும் அமைப்பொன்று (Aid India Consortium) நிறுவப்பட்டது. 1970 களில் கீன்சியத்தின் மரணத்தைத் தொடர்ந்து, அரசு தலைமையிலான வளர்ச்சி என்ற நேருவிய கொள்கை 1980 ல் வீழும்வரையும் ‘உதவி’ அல்லது மூலதனக் கடன் என்றபெயரில் இந்தியாவுக்குள் பாய்ச்சப்பட்ட ஏகாதிபத்திய மூலதனத்தை மேற்பார்வை செலுத்தும் நோக்கத்துடனான உச்சபட்ச ஏற்பாடாக AIC-யே இருந்தது.

இந்த ஏற்பாடுகள் பிரட்டன்வுட்ஸ் அமைப்புகள் மூலமாக இந்தியப் பொருளாதாரக் கொள்கை வகுப்பதிலும், திட்ட முன்னுரிமைகளில் நேரடியாக செல்வாக்குச் செலுத்தவும் அமெரிக்காவிற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அது பனிப்போர் காலத்தில் இந்தியாவின் முக்கியமான துறைகளில் கால்களைப் பதித்து சோவியத் யூனியனைவிட அதிகப்படியான பலனை அமெரிக்க ஏகாதிபத்தியம் பெறுவதற்கு உதவியது. இந்தக் காலகட்டத்தில் இருந்து மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் முக்கியமான பதவிகளில், திட்டக்குழுவில், இந்திய ரிசர்வ் வங்கியிலும்கூட அமெரிக்காவில் பயிற்சிபெற்ற நிபுணர்கள் நியமிக்கப்படுவதை இந்தியா கண்டது. “நிபுணர்கள் கருத்து” பகிர்தல் என்றபெயரில் பிரதமரின் அலுவலகத்திலும்கூட அமெரிக்க ஏஜெண்டுகள் எளிதில் ஊடுருவினர் என்பதுடன், முக்கிய ஆவணங்களைப் பார்க்கும் வாய்ப்பையும் பெற்றனர். அதன்மூலம் இந்தியாவின்மீது புதியகாலனிய ஆதிக்கத்தை தொடர்வதற்குத் தேவையான தகவல்களைப் பெறவும் வழிவகுத்தது. புதுடெல்லியில் உலகவங்கியின் ‘நிரந்தர இருப்பிடத் திட்டமும்‘, புதுடெல்லியில் இருந்த ஃபோர்டு பவுண்டேஷனும் இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தன. இது ‘சோசலிசம்‘, ‘பொதுத்துறை’, ‘சுயசார்பு’ போன்ற முழக்கங்களுக்கு நடுவே ஏகாதிபத்திய மூலதனத்தைச் சார்ந்து இந்தியாவை எப்போதும் புதியகாலனியாக நீடிக்கச் செய்வதை உறுதிசெய்தது.

முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அன்னிய உதவி -கடன் மற்றும் மானியம் என்பவை 10% ஆக இருந்த நிலையில், நேருவிய மாதிரியின் சுயசார்பு மற்றும் சோசலிசம் என்று மிகப்பரவலாகப் பேசப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அது 30%ற்கும் மேலாக அதிகரித்திருந்தது. புதியகாலனிய உலக ஒழுங்கின் தலைவர் என்ற வகையில் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின் அன்னிய உதவியில் 55% த்தினை பங்களிக்கக்கூடிய பெரிய நிதியளிப்பாளராக அமெரிக்க ஏகாதிபத்தியம் இருந்தது. சோவியத் யூனியனின் பங்களிப்பு என்பது 5.4% ஆக இருந்தது. உலகவங்கி உள்ளிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலுள்ள ஆதாரங்களிலிருந்துதான் 90% அன்னிய உதவியும் இருந்தது.

1951 ல் முதல் திட்டம் தொடங்கும் நிலையில் அன்னியக்கடன் என்பது ஜீரோ என்று இருந்ததிலிருந்து இரண்டாவது திட்டகாலத்தின் முடிவான 1961 ல் அன்னியக்கடன் என்பது ரூ.1053 கோடியாக சேர்ந்து போயிருந்தது. முக்கியமாக PL480 திட்டத்தின்படி உணவு இறக்குமதி அதிகரித்தது. ஏகாதிபத்தியங்களின் உத்தரவுப்படி குறைந்தவிலையில் ஏற்றுமதியும், அதிகவிலையில் இறக்குமதியும் செய்யப்பட்டது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஈவுத்தொகை, உரிமைத்தொகை, தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகக் கட்டணம், இலாபம் போன்ற வடிவங்களில் அன்னியச் செலாவணி பெரிய அளவில் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சென்றதானது வர்த்தகப் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கியது. இதன் விளைவு இந்திய சமூகத்தில் கூலி உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் பாரிய முரண்பாடு ஏற்பட்டது. ஒரு சிறு கும்பலிடம் செல்வம் சேர்ந்தது என்பதும், பெரும்பான்மை உழைக்கும் மக்கள் பஞ்சைப் பராரிகளாக மாற்றப்பட்டனர் என்பதையும் கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையைப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.

இந்தியப் பெருமுதலாளித்துவத்தின் வளர்ச்சி (1963-1976)

(1976 இல் ரூபாய் 100 கோடிக்கு மேல் சொத்துக்கள்)

பெயர்19631966197219761976 லாபம் மட்டும்

டாடா 375520685981107

பிர்லா 283447589974130

மாஃபத்லால் 4010721928441

சிங்கானியா 553413722436

சிந்தியா 466412721725

தப்பார் 638513220442

பங்கூர் 629814019620

ஸ்ரீராம் 507313818716

சாராபாய் 34571301835

கிர்லோஸ்கர் 194511417728

ஏ.சி.சி. 779113716920

மகேந்திரா 20438314412

பஜாஜ் 17409514314

வால்சாந் 53839913511

மோடி 11196211607

கஸ்தூர்பாய்
லால்பாய் 34498610917

(ஆதாரம்: எகனாமிக் டைம்ஸ் வழங்கிய தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது, பிப்ரவரி 14, 1977.)

1980 ஆம் ஆண்டுகளில் புதிய காலனித்துவ கடன் நெருக்கடியில் சிக்கி ஆப்ரோ-ஆசிய-லத்தீன் அமெரிக்க நாடுகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டன. இந்த நெருக்கடிக்கு இந்தியா விதிவிலக்கல்ல. 1980 கள் வரை நீடித்திருந்த நேருவால் கட்டியமைக்கப்பட்ட வளர்ச்சி என்பது முழுவதும், ஏகாதிபத்திய உதவியின் மீதான சார்பு நடவடிக்கையால் வந்தவை என்பது மேற்கூறிய ஆதாரங்களின் மூலம் அறிய முடியும். உதாரணமாக, நான்காவது திட்டத்தின் வரைவுத் தயாரிப்பு முழுவதும் வாஷிங்டனில் உள்ள ஏகாதிபத்திய சிந்தனைக் குழுக்களுடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்டதாகும். அதில் இந்தியாவை “வெளிநாட்டு உதவியை பூஜ்ஜியமாக” மாற்றும் இலக்கை அடைவதற்கான காலக்கெடுவாக 1981 ஆம் ஆண்டை அறிவித்திருந்தனர். ஆனால், நடந்ததென்னவோ அதற்கு முரண்பாடாக ஐ.எம்.எஃப் அமைத்த தீர்க்கமுடியாத கடன் பொறிக்குள் நாடு இழுத்துச் செல்லப்பட்ட ஆண்டாக 1981 மாறியது. இந்தியாவை ஏகாதிபத்தியக் கடன் பொறியமைவில் சிக்கவைத்து தனது புதிய காலனிய ஆதிக்கத்தை நிறுவியது அமெரிக்க ஏகாதிபத்தியம். கீழே உள்ள அட்டவனையை பார்த்தாலே இதனை நாம் புரிந்துகொள்ள முடியும்.

இவ்வாறாக ஒட்டுமொத்த இந்தியாவும் நேரு காலம் தொடங்கி ஏகபோக மூலதனத்திற்கும், அதன் புதிய காலனிய அடிமைதனத்திற்கும் சேவை செய்ததே ஒழிய, கீன்சியமானது இந்தியப் பொருளாதாரத்தின் சுயசார்பை கட்டியமைக்க வில்லை. அது மேலும் நாட்டை புதிய வழியில் புதிய முறையில் அடிமைப்படுத்தியது.

கீன்சியமும் பசுமைப் புரட்சியும்

புதிய காலனிய நாடுகளில் பொதுத்துறை என்ற கட்டமைப்பின் கீழ் ஒட்டுமொத்த விவசாயத் துறையையும், நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ஒரு சர்வதேச நிகழ்வுப் போக்குதான் பசுமைப்புரட்சி. கீன்சியப் பொருளாதாரக் காலகட்டத்தில் விவசாயத்துறையில் ஆராய்ச்சி, முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகிய அனைத்தும் பசுமைப்புரட்சி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த பசுமைப்புரட்சி என்ற வார்த்தையை முதன்முதலில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) முன்னாள் இயக்குனர் வில்லியம் கவுட் பயன்படுத்தினார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “விவசாயத்துறையில் இது ஒரு பெரும்புரட்சியை உருவாக்குகிறது. இது சோவியத்துகளைப் போன்ற ஒரு வன்முறையான சிவப்புப் புரட்சி அல்ல; ஈரானின் ஷா போன்ற வெள்ளைப் புரட்சியும் அல்ல; அதற்கு மாறாக, நான் அதை பசுமைப் புரட்சி என்று அழைக்கிறேன்.” 

இந்தியாவில் உணவு நெருக்கடியை சமாளிப்பதற்கும் வேளாண்மைத் துறையில் தன்னிறைவு அடைவதற்கும் மிகப்பெரிய தடையாகவுள்ள பிற்போக்கான நிலவுடைமை உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதற்கு மாறாக,- நிலச்சீர்திருத்தம் செய்து உழுபவனுக்கு நிலம் சொந்தமாக்கி அதன் மூலமாக வேளாண்மைத் துறையில் தன்னிறைவை அடைவதற்குப் பதிலாக, இந்தியாவின் வேளாண்மை முழுவதையும் ஒட்டுமொத்தமாக அந்நிய மூலதனத்திற்கு அடகு வைக்கப்பட்டது தான் பசுமைப்புரட்சியின் அடிப்படையாகும்.

1950-51 முதல் 1980-81 வரை அன்னிய உதவியும்  அதன் இந்தியப் பயன்பாடும் (ரூ.கோடி)

வருடம்1950-51 முதல் 1966-68 வரை1969-70 முதல் 1980-81 வரை1950-51 முதல் 1980-81 வரை
ஆதாரம்மொத்தம்சதவீதம்மொத்தம்சதவீதம்மொத்தம்சதவீதம்
கூட்டமைப்பு உறுப்பினர்கள்714392.41256184.91970486.5
சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பா5256.78105.513355.9
மற்றவை700.916559.817257.6
மொத்தம்77381001502610022764100
முக்கிய நன்கொடையாளர்கள்
அமெரிக்கா419254.17156811.63576025.3
அ. கடன்கள் மற்றும் மானியங்கள்193024.0010117.63294112.9
ஆ. றிலி 480/665226228.855574.00281912.4
பிரிட்டன்5256.60169611.5022219.8
மேற்கு ஜெர்மனி5376.7012378.3017747.8
ஜப்பான்2583.509266.5011845.2
சோவியத் யூனியன்4295.405944.0610234.5
உலக வங்கி (மிஞிகி உள்பட)102613.30419327.90521923.0

(ஆதாரம்: பொருளாதார ஆய்விலிருந்து பெறப்பட்டது.)

இந்தியாவின் உணவு நெருக்கடியும் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளும் குறித்த ஃபோர்டு பவுண்டேசன் அறிக்கையை 1959இல் அந்தக் குழுதான் தயாரித்தது. ஃபோர்டு குழுவின் இந்த அறிக்கை இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கான வழியையும் இந்திய விவசாயத்தில் அமெரிக்காவும், பிற நாடுகடந்த நிறுவனங்களும், அதாவது பன்னாட்டு நிறுவனங்களும் ஊடுருவவும், அதன் மீது கட்டுப்பாடு செலுத்துவதற்கான வழியையும் உருவாக்கியது. இது பல விவசாயிகளின் மற்றும் விவசாயக் கூலிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியது. இந்த பசுமைப்புரட்சி இந்திய மக்களின் பஞ்சத்தைத் தீர்க்கவில்லை, உணவுப் பற்றாக்குறைக்கு ஒரு வடிகாலாகவும் இல்லை, அதற்கு மாறாக பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் வேட்டைக்காடாக லாபம் கொழிக்கும் துறையாக இந்திய வேளாண்மை முழுவதும் கீன்சியத்தின் பேரால் கபளீகரம் செய்யப்பட்டது.

1970களில் முதலாளித்துவநாடுகள் பெரும் லாபநெருக்கடிக்கு (Profitability Crisis) உள்ளாயின. அதனோடு அப்போது ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியும் (Oil Crisis) உலகப் பொருளாதரத்தை தேக்கநிலைக்குத் (Stagflation) தள்ளியது. புதியதாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்த இந்த நெருக்கடியை முதலாளித்துவம் பயன்படுத்திக்கொண்டது. அதைப்பற்றி விரிவாகக் காண்போம்.

கீன்சியத்தின் வீழ்ச்சியும் புதிய தாராளக்கொள்கையின் தோற்றமும்

 1970 வரை முதலாளித்துவ அமைப்பு தொழிலாளி வர்க்கத்திடம் பல சமரசங்களை செய்து கொள்ள வேண்டியிருந்ததால் மொத்த உற்பத்தியில் லாபத்தின் பங்கைப் பெருக்குவதில் பல தடைகளைச் சந்தித்தது. இந்தத் தடைகளை உடைத்து லாபத்தை அதிகரிக்க உலக முதலாளித்துவக் கூட்டமைப்பின் முயற்சியில் உருவானதுதான் புதியதாராளவாத அல்லது சந்தைப் பொருளாதாரக் கொள்கையாகும். இந்தியாவில் டங்கல் திட்டம் என்ற பெயரில் புதியதாராளக் கொள்கைகள் 90ஆம் ஆண்டிளிருந்து செயல்படுத்தப்பட்டது.

உண்மையில் அரசு ஏகபோக முதலாளித்துவம் என்ற சொற்றொடர் லெனினால் பிரயோகிக்கப்பட்டது. அவர் 1917ல் R.S.D.L.P.(ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி )ஏப்ரல் மாநாட்டில் பேசும் போது இதைக் குறிப்பிட்டார். அவர் கூறுவதாவது: 

“மூலதனத்தின் திரட்சி மற்றும் சர்வதேசமயமாக்குதல் மிகப் பிரமாண்டமாக நடைபோட்டு வருகிறது. ஏகபோக முதலாளித்துவ அரசு, ஏகபோக முதலாளித்துவமாக மாறுகிறது. அநேக நாடுகளில் சமுதாயத்தால் தீர்மானிக்கப்படும் உற்பத்தியில் ஒழுங்கமைப்பு மற்றும் விநியோகத்தில் ஒழுங்கமைப்பு இவற்றின் சூழ்நிலையின் நிர்பந்தத்தினால் கொண்டு வரப்பட்டுள்ளது.” 

உண்மையில் மிக ஆரம்பத்திலிருந்தே அரசானது சொத்துடைத்த வர்க்கத்தின் கையிலுள்ள ஒடுக்கும் கருவியாக இருந்து வருகிறது. அது ஆளும் வர்க்கத்திற்குச் சேவை செய்து வருகிறது. எங்கெல்ஸ் சுட்டிக்காட்டியது போலவே, “முழுமையாக அரசு என்பது அதன் திரட்சியான வடிவத்தில் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிற வர்க்கத்தின் பொருளாதாரத் தேவைகளின் பிரதிபலிப்பு மட்டுமே.” 

 ஆனால் ஏகபோக முதலாளித்துவத்திற்கு முந்தைய காலகட்டத்தில் அரசானது முதலாளிகளின் பொருளாதார நடவடிக்கைகளில் தலையிடுவதிலிருந்து விலகிக்கொண்டது. மேலும் சந்தை சக்திகள் விலங்கிடப்படாத சுதந்திரத்துடன் அனுமதிக்கப்பட்டன. எங்கெல்ஸ் அரசின் இந்த பாத்திரத்தின் பண்பை விவரிக்கையில் “முதலாளித்துவ வர்க்கத்தின் சொத்துக்களை பாதுகாக்கின்ற இரவுக் காவலாளி போல செயல்படுகிறது” என்கிறார். இருப்பினும் ஏகாதிபத்தியத்தின் கீழ் ஏகபோக மூலதனம் முதலாளித்துவ அரசுடன் இணைய ஆரம்பித்து விடுகிறது. மேலும் ஒரு நெருக்கமான ஏகபோகங்களின் அமைப்பும் மற்றும் அரசும் உதயமாகிறது. 

அரசுத் தலையீடு என்பது நிதிமூலதனத்தின் கொள்கை என்ற மதிப்பீட்டின் அடிப்படையில்தான் அரசு ஏகபோகம் என்ற சொற்றொடரை லெனின் உருவாக்குகிறார். லெனினின் கூற்றுப்படி அரசு ஏகபோக முதலாளித்துவம் ஏகபோகங்களின் பலத்துடன் இணைகிறது. மேலும் ஏகாதிபத்திய அரசின் பலத்துடன் சேர்ந்து ஒரேயொரு செயல்பாட்டு முறையாக மாறுகிறது. அதன் நோக்கமானது நிதிமூலதனக் கும்பலை வளமாக்குவது, தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் வர்க்கத்தை அடக்குவது, மேலும் முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்பைப் பராமரிக்க ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்துவதுதான். இதுதான் கீன்சியம் செய்தது. இது மீண்டும் ஒரு பெரிய சமூக நெருக்கடிக்குத்தான் இட்டுச்சென்றது, இது கீன்சியத்தின் தோல்வியை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. அதற்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட கொள்கைதான் புதியதாராளவாதக் கொள்கையாகும். 

கீன்சிய பொருளாதாரக் கொள்கையும் பாசிசமும்

கீன்ஸியத்தின் தோற்றம் மற்றும் நல அரசின் தோற்றம் அதன் விரிவான பொருளாதார சமூக செயல்பாடுகளானது திட்டக்கொள்கை மற்றும் நடைமுறைக்கொள்கை இவை இரண்டிலும் அரசு தலையிடா பொருளாதாரக் கொள்கை கொண்ட முதலாளித்துவத்தை (Laisses – Faire Capitalism) மறுதலிப்பதற்குக் கொண்டுபோய் விட்டது. அரசு ஏகபோக முதலாளித்துவமானது இரண்டு யுத்தத்திற்கு இடைப்பட்ட காலத்தில் பாசிசம் வளர்வதற்கான ஒரு வசதியான அடித்தளமாக அமைந்தது. 

ஏகபோக முதலாளித்துவத்தின் பண்பானது, அரசின் விரிவான பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் மூலதனத்தை மையப்படுத்தவும், தேக்கம் மற்றும் வேலையின்மை இவற்றிலிருந்து எழுகிற சமூக முரண்பாடுகளை சாதகமாக எடுத்துக்கொண்டு பாசிசம் வளர்வதற்கு அனுகூலமாகவும் இருந்தது.

உதாரணமாக ஜெர்மன் பாசிஸ்டுகள் தங்களை “தேசிய சோஷலிஸ்டுகள்” அல்லது “நாஜி” என்று அழைத்துக்கொண்டனர். 1930-களுக்குள் கீன்ஸியத் தேவை, நிர்வாகம் மற்றும் பொருளாதாரத்தைப் பற்றிய அரசின் கொள்கை ஒழுங்குமுறைகள் அநேகமாக முதலாளித்துவ சர்வாதிகாரம் மற்றும் பாசிச சர்வாதிகாரம் இவை இரண்டையும் உள்ளடக்கிய அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும் பொதுமைபடுத்தப்பட்டவையாகி விட்டன. 

ரூஸ்வெல்ட் தலைமையிலான அமெரிக்க ஏகாதிபத்திய அரசு மட்டுமல்லாது பாசிச ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மானிய அரசும் இதே கீன்சியப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றியது. அமெரிக்காவும் ஜெர்மனியும் இந்தக் கொள்கையை வெவ்வேறு முறையில் செயல்படுத்தினர். அரசின் தலையீட்டின் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் முறையை அமெரிக்கா கடைபிடித்தது, அதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட அரசுக் கட்டமைப்பைக் கட்டியமைத்தது. ஹிட்லரின் அரசோ வேலைவாய்ப்புச் சந்தையில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதன் மூலம் இந்தக் கொள்கையைச் செயல்படுத்தி, பாசிச அரசமைப்பைக் கட்டி எழுப்பியது. பாசிஸ்டுகளுக்கும் பாசிசமல்லாத ரூஸ்வெல்ட் போன்றவர்களுக்கும் பயன்பட்ட கொள்கைதான் இந்தக் கீன்சியக் கொள்கை. மேலும், தோழர் டிமிட்ரோவ் சொல்வதுபோல பாசிசம் என்பது ஏகாதிபத்திய நிதிமூலதனக் கும்பலின் ஒருபிரிவினரின் இனவெறி சர்வாதிகாரமாகும். அதாவது பாசிசத்திற்கு ஊற்றுக்கண் நிதிமூலதன முதலாளித்துவச் சுரண்டல் மற்றும் ஆதிக்கமேயாகும். நிதிமூலதன ஆதிக்க கும்பலின் சுரண்டல் தடைபடும்போதும், தொழிலாளிவர்க்கம் நிதிமூலதன ஆதிக்கத்தை எதிர்த்து போர்க்குணமிக்க போராட்டங்களில் ஈடுபடும்போதும் நிதிமூலதன ஆதிக்க கும்பல்களால் மக்களை ஒடுக்க பாசிசம் கொண்டுவரப்பட்டது. ஜெர்மனியில் தொழிலாளர்கள் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கிலிருந்து நிதிமூலதன ஆட்சியை எதிர்த்துப் போராடியதால் அங்கே ஹிட்லரின் தலைமையில் பாசிசம் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒப்பீட்டளவில் அமெரிக்காவில் அத்தகைய தொழிலாளர்களின் போராட்டங்கள் இல்லாத காரணத்தால் அமெரிக்காவில் பாசிசம் கொண்டுவரப்படவில்லை. எனினும் அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்ட் காலத்தில் உலகம் முழுவதும் சமாதானம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டே உலகை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கத்தில் கொண்டுவருவதற்காக உலகத்தையே அச்சுறுத்துவதற்கான ஆயுதமான அணுஆயுதம் தயாரிப்பதற்கான ஆராய்ச்சியும் அதனை பயன்படுத்துவதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில் இந்த அணுகுண்டுகளை ஜப்பானில் போட்டு அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கான அச்சாரம் போடப்பட்டது. இதுபோன்று ஏகபோக நிதிமூலதன ஆதிக்க சக்திகள் பாசிசமயமாவதை இந்த கீன்சியக் கொள்கையால் தடுக்க இயலவில்லை. மாறாக, பாசிசம் வளர்வதற்குத்தான் இந்த கீன்சியக் கொள்கை சேவை செய்தது என்பது தான் வரலாற்று உண்மையாகும்.

நமது கொள்கைகளும் கடமைகளும்

நமது நாட்டிலுள்ள தொழிலாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்தும், பல்வேறு மதம் மற்றும் சாதிய அமைப்புகளில் இணைந்தும், பிளவுபட்டுச் சிதறிக் கிடக்கிறார்கள். ஒரு சமூக மாற்றத்தை சாதிக்கக் கூடிய முன்னணி செயல்வீரர்களான இந்த தொழிலாளி வர்க்கம் சிதறுண்டு இருப்பதால்தான் நமது நாட்டில் சமூக மாற்றம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. 

தொழிலாளி வர்க்கம் உள்வாங்கிச் செயல்படுத்த வேண்டிய மார்க்சிய லெனினிய தத்துவங்களுக்கு எதிரான பிற்போக்கு, திருத்தல்வாத, சீர்திருத்தவாத, சாதிவாத, மதவாதத் தத்துவங்களுக்கு இரையாகி பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான அரசியல் வழியைப் பின்பற்றாமல் திசைவிலகிச் செல்வதனால், அதன் விடுதலை என்ற இலக்கை அடையாமல் இருப்பது மட்டுமல்லாமல், ஒரு நீண்டகாலம் போராடிப் பெற்ற சில உரிமைகளையும் சலுகைகளையும் இப்போது இழந்து கொத்தடிமை நிலைக்குத் தாழ்வுற்றுக் கிடக்கிறது. 

தொழிலாளிவர்க்கமான இந்த முன்னணிச் செயல்வீரர்களை ஒன்றுதிரட்டும் பணி, மார்க்சிய லெனினியவாதிகளின் முதன்மையான பணியாகவும் உடனடிப் பணியாகவும் உள்ளது. இந்தப் பணியை நிறைவு செய்யவேண்டுமானால் அவர்களுக்கு மார்க்சிய- லெனினிய தத்துவத்தை ஆயுதமாகக்கொண்டு குறிப்பான சூழல்களை பருண்மையாக ஆய்வு செய்து, அரசியல் செயல்தந்திரம் வகுத்து, தலைமையளித்து வழிகாட்டக் கூடிய சித்தாந்த பலம் மிகுந்த தலைவர்களைக்கொண்ட ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி அவசியமாகும். அத்தகைய கட்சியால் மட்டுமே எதிரிகளை சரியாக அடையாளம்கண்டு அந்த எதிரிகளுக்கு எதிராக தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்தி அவர்களை ஒரு அமைப்பாக்க முடியும். 

ஆனால் தொழிலாளி வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்துவதற்கான சக்திகளான மார்க்சிய லெனினியவாதிகளும் பல்வேறு அமைப்புகளில் இணைந்து சிறுசிறு குழுக்களாகப் பிளவுபட்டு சிதறிக் கிடக்கிறார்கள். ஆகவே சிதறிக்கிடக்கும் மார்க்சிய லெனினியவாதிகள் ஓர் அமைப்பில் ஒன்றுபடவேண்டியது தற்போதைய முதன்மையான கடமையாக உள்ளது.

மார்க்சிய லெனினியவாதிகளின் ஒற்றுமை மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சாதித்தால் மட்டுமே தொழிலாளி வர்க்கம் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஒற்றுமையைச் சாதிக்கமுடியும். இவ்வாறு தொழிலாளி வர்க்கம் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் கூட்டணியை அடிப்படையாகக் கொண்டே பாட்டாளி வர்க்கம் தன்னை மட்டுமல்ல அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும், மக்களின் எதிரிகளின் சுரண்டல் மற்றும் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து ஒரு புதிய உலகத்தைப் படைக்க முடியும்.

நாம் வாழ்ந்துவரும் காலம் ஏகாதிபத்தியக் காலம் ஆகும். அதாவது பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கான காலமாகும். முதலாளிவர்க்கப் புரட்சிக்கான காலம் முடிந்து பல காலங்கள் ஆகிவிட்டது. இந்த உண்மையை கடந்த காலங்களில் மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்துகொள்ளத் தவறினார்கள். அதன் காரணமாகவே தொழிலாளி வர்க்கங்களிடம் தொழிலாளி வர்க்கம் புரட்சி நடத்தி ஏகபோக நிதிமூலதன முதலாளிகளின் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் ஒழித்துக்கட்ட தொழிலாளிவர்க்கத்தின் ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தி அவர்களை அணிதிரட்டிடத் தவறியது மட்டுமல்லாமல் ஏகபோக நிதிமூலதனக் கும்பல்கள் முன்வைத்த சீர்திருத்தக் கொள்கைகளையே தொழிலாளி வர்க்கம் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்று வழிகாட்டி தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணத்தை மழுங்கடித்துவிட்டு அவர்களைப் பிளவுபடுத்தி சிதறடித்துவிட்டார்கள். ஆகவே இப்போதாவது நமது தவறுகளை உணர்ந்து அதனைக் களைந்து மார்க்சிய லெனினிய புரட்சிகர அரசியல் வழியில் சர்வதேச ஏகபோக நிதிமூலதன முதலாளிகளின் சுரண்டல் மற்றும் ஆதிக்கத்திற்கு எதிராகவும் அவர்களின் எடுபிடி தரகுமுதலாளிகளின் ஆட்சிக்கு எதிராகவும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையின் அவசியத்தைப் பிரச்சாரம் செய்து போராடுவதன் மூலம் மார்க்சிய லெனினியவாதிகள் ஒன்றுபடுவோம். 

மார்க்சிய லெனினியவாதிகளின் முன்னால் இரண்டு பணிகள் உள்ளன. ஒன்று இந்த ஏகாதிபத்தியக் காலகட்டத்தில் உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் முதன்மையான எதிரிகளாக சர்வதேச ஏகபோக நிதிமுதலாளிகள் இருக்கிறார்கள். மேலும், இந்தியா போன்ற ஒடுக்கப்பட்ட நாடுகளில் இந்த ஏகபோக முதலாளிகளின் ஏஜெண்டுகளாக தரகுமுதலாளிகளின் ஆட்சி இருப்பதை உணர்ந்து இந்த எதிரிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக அவ்வப்போது எழும் மக்களின் பிரச்சனைகளுக்காக மக்களைத் திரட்டிப் போராடவேண்டும். நாம் சீர்திருத்தத்திற்காகப் போராடவேண்டும். அதேவேளையில் சீர்திருத்தவாதத்திற்கு பலியாகிவிடக்கூடாது. ஆகவே சீர்திருத்தவாதத்திற்கு எதிராகவும் போராடவேண்டும். இரண்டாவது கடமை மிகவும் முக்கியமானது அதாவது மார்க்சிய லெனினியம் என்று பேசிக்கொண்டு மக்களுக்கு எதிரான மார்க்சியத்திற்கு எதிரான கருத்துக்களைப் பிரச்சாரம் செய்து மக்களை குழப்புவது மற்றும் எதிரியை எதிர்த்த போராட்டத்திலிருந்து திசைதிருப்பும் கருத்துக்களை எதிர்த்து சித்தாந்தப் போராட்டம் நடத்திட வேண்டும். இத்தகைய சித்தாந்தப் போராட்டம் நடத்துவதன் மூலம் எதிரிகளின் சூழ்ச்சியை நாம் புரிந்துகொள்ள முடியும். மேலும் நமது சித்தாந்தத்தையும் புரிந்துகொண்டு வர்க்கப் போராட்டத்தில் முன்னேற முடியும்.

ஆகவே ஏகாதிபத்திய புதிய காலனிய ஆதிக்கத்தை எதிர்த்தும் புதிய ஜனநாயகப் புரட்சிக்காகவும் மார்க்சிய லெனினியவாதிகளே நாம் ஒன்றுபட்டு போர்க்குணமிக்க போல்ஷ்விக் பாணியிலான பாட்டாளிவர்க்கக் கட்சியை கட்டியமைப்போம். இத்தகைய கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளி வர்க்கத்தை ஒன்றுபடுத்தி அமைப்பாக்குவோம். இத்தகைய தொழிலாளிவர்க்க அமைப்பின் பலத்தில் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களையும் ஒன்றுதிரட்டி தொழிலாளிவர்க்கம் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் கூட்டணியைக் கட்டிடுவோம். குறிப்பான திட்டம் என்ற பெயரில் ஆளும் வர்க்கப் பிரிவோடு கூட்டணி என்று சொல்லி பாட்டாளிவர்க்க அமைப்பை ஆளும்வர்க்கங்களின் தொங்குசதையாக மாற்றிடும் திருத்தல்வாதக் கருத்துக்களை எதிர்த்து சித்தாந்தப் போர் நடத்துவோம்.

  • அமெரிக்க – சீன ஏகாதிபத்தியங்களின் உலக மேலாதிக்கதிற்கான போட்டியை முறியடிப்போம்!
  • புதியகாலனிய சுரண்டல் மற்றும் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டிட சபதம் ஏற்போம்!
  • திருத்தல்வாத, கலைப்புவாத, சீர்திருத்தவாத சித்தாந்தங்களை எதிர்த்து சித்தாந்தப் போராட்டத்தை கூர்மைப்படுத்துவோம்!
  • புதிய காலனிய சார்புத் தத்துவங்களான கீன்சியத்தையும், டிராட்ஸ்கியத்தையும், நவீன காவுட்ஸ்கியத்தையும் பரப்பும் சக்திகளை இனம்காண்போம்! முறியடிப்போம்!
  • மார்க்சிய லெனினியத்தை உயர்த்திப் பிடிப்போம்!
  • ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட எஃகு உறுதிபோன்ற கட்டுப்பாடுள்ள பாட்டாளிவர்க்க கட்சியை கட்டியமைபோம்!
  • புதியகாலனியத்திற்கும் பாசிசத்திற்கும் முடிவுகட்டுவோம்!
  • புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றேடுப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *