கிராம்சி ஒரு சிறிய தெடுதல்

நிலவுடமை சமூகத்தில் மன்னர்களின் ஆட்சி. அது அடிப்படையில் மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியாகும். மன்னர்கள் வைத்ததுதான் சட்டம். மன்னர்களுக்கு எதிரானவர்களும் சமூக வளர்ச்சிக்காக பாடுபடும் விஞ்ஞானிகளையும் மன்னர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். அதுபோலவே ஹிட்லர் ஒரு தனிநபராக சர்வாதிகார ஆட்சியை நடத்தினான். பல விஞ்ஞானிகளை நாடுகடத்தினான், படுகொலை செய்தான். இதுபோன்ற கொடுமைகளை ஹிட்லர் செய்ததனை பார்த்த கிராம்சி வளர்ச்சியடைந்த முதலாளித்துவ சமூகமானது பின்னடைந்துவிட்டதாகவும் அதாவது மீண்டும் நிலவுடமை அமைப்பைப் போன்ற அமைப்பை கட்டியமைக்கும் நோக்கம் கொண்டதுதான் இந்த பாசிசம் என்று வரையறை செய்கிறார். இந்த முடிவிற்கு அவர் வந்ததற்கான காரணம் பாசிச ஹிட்லர் பின்பற்றிய அந்த கொடூர படுகொலைகளை பார்த்து அதாவது பாசிச ஆட்சியின் வடிவத்தைப் பார்த்து முடிவெடுக்கிறார். ஆனால் பாசிச ஹிட்லரின் ஆட்சியின் உள்ளடக்கத்தை கிராம்சி பார்க்கத் தவறுகிறார். மேலும் வரலாறு எப்போதும் பின்னோக்கிச் செல்லாது என்ற வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தையும் பார்க்க மறுக்கிறார். ஆனால் கம்யூனிஸ்டுகள்தான் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்திலிருந்தும் நிதி மூலதன ஆதிக்கத்தின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்து பாசிசம் பற்றி தெளிவான வரையறைக்கு வந்தார்கள். முதலாளித்துவ வளர்ச்சிக்கு பாராளுமன்ற முறையிலான ஜனநாயகம் தேவை. ஆகவே முதலாளித்துவ சமூகத்தில் உழைக்கும் மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, போராடும் உரிமை போன்ற ஜனநாயக உரிமைகள் வழங்கப்பட்டன. ஆனால் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்த பின்பு இத்தகைய ஜனநாயகத்தைப் பயன்படுத்திக்கொண்டு உழைக்கும் மக்கள் தனது ஆட்சிக்கு எதிராக போராடுவார்கள் என்பதை ஏகாதிபத்தியவாதிகள் விரும்பவில்லை. ஏனெனில் இத்தகைய ஜனநாயகம் தங்களது கொடிய சுரண்டலுக்கு, வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று கருதுகிறார்கள். ஆகவே அவர்கள் கடைந்தெடுத்த பிற்போக்காளர்களாக மாறுகிறார்கள். உண்மையில் அவர்கள் நிலவுடமை மன்னர்களைக் காட்டிலும் மிகப் பிற்போக்கானவர்கள் ஆவார்கள்.என்ற உண்மையை கம்யூனிஸ்டுகள்தான் புரிந்துகொண்டு பாசிசத்தைப் பற்றி தெளிவான வரையறையை வைத்தார்கள். நிதிமூலதன கும்பல் ஒருபுறத்தில் ஜனநாயகவாதிகள் போல் தோற்றம் காண்பித்து நடிப்பார்கள், மறுபுறத்தில் சர்வாதிகார ஆட்சிக்கு தயாரிப்பில் ஈடுபடுவார்கள். மக்கள் போராட்டங்கள் எழுந்துவரும்போது அவர்களது ஜனநாயக வேடத்தை முற்றிலும் களைந்துவிட்டு அப்பட்டமான சர்வாதிகார ஆட்சியை செலுத்துவார்கள்.