- தோழர் கட்சி சாராத தனிநபராக கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்ட ஒருவர் இருப்பது ஒரு குற்றம் அல்ல தோழர்.ஆனால் அவர் இறுதிவரை கட்சி சாராத தனிநபர் கம்யூனிஸ்ட் ஆகவே இருந்துவிட வேண்டும் என்ற இறுதி இலக்கோடு இருந்தால் அது குற்றம் என்று தான் நான் சொல்வேன்.ஏனெனில் அப்படி இருப்பவர் ஒருநாளும் கம்யூனிஸ்ட் ஆக முடியாது.இதற்கு அர்த்தம் ஒருவர் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தாலேயே கம்யூனிஸ்ட் ஆகிவிடுவார் என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை.கம்யூனிசம் என்பது அதாவது அதன் தத்துவார்த்த பெயரில் மார்க்சியம் என்பது ஒரு அறிவு தத்துவம் அல்ல; அது நடைமுறை தத்துவம். அதை சிலர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூலம் அறிந்து கொள்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் தனிநபராக சொந்த முயற்சியில் அதை அறிந்து கொள்கிறார்கள். ஆனால் ஏதோவொரு வழியில் மார்க்சிய தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பிறகு உங்களுடைய முழு முதற் கடமை அந்த தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதாக தான் இருக்கவேண்டும்.இப்போது அதை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய கருவியாகிய கம்யூனிஸ்ட் கட்சி உங்களுக்கு வேண்டும்.ஆனால் உங்களால் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இப்போதைக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் இல்லாமல் கடைசிவரை தனிநபர் கம்யூனிஸ்ட் ஆகவே இருந்துவிட முடியும் என்று நீங்கள் இருக்க முடியாது.இன்று இந்தியாவில் உங்களைப்போல் கம்யூனிசத்தின் மீது ஈர்க்கப்பட்ட தனிநபர் அறிவுஜீவிகளை ஆகர்ஷிக்கும் மையமாக எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் இல்லை. இந்த நிலையில் உங்களால் எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து வேலை செய்ய முடியவில்லை என்பது புரிந்து கொள்ளக்கூடியதே.ஏனென்றால் இன்று இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அது தேர்தல் பாதையில் இருக்கக்கூடிய சிபிஐ சிபிஎம் தொடங்கி ஆயுதப் போராட்டத்தில் இருக்கக்கூடிய மாவோயிஸ்டுகள் வரை மாறிய புதிய உலகச் சூழலையும் அதற்கேற்ற புதிய புதிய சிந்தனைகளையும் உள்வாங்கிக்கொள்ளும் இயக்கவியல் போக்கு எங்குமே கிடையாது. பல இடங்களில் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் கூட ஒரு தனிநபர் மார்க்சிய.அறிவுஜுவி அளவிற்கு மாக்சியம் தெரிந்தவராக இல்லாமல் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.அதனால் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சியில் உங்களால் இணைந்து செயல்பட முடியாமல் இருக்கலாம். ஆனால் பிரச்சனை எங்கு இருக்கிறது என்றால் நீங்களும் சரி உங்களைப் போல் தனிநபர் கம்யூனிஸ்டுகளாக முகநூலில் வலம் வரும் மற்றவர்களும் சரி, இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிலும் இணைய முடியாத அளவிற்கு அவற்றில் குறைகள் உங்களுக்கு தெரிந்திருந்த போதிலும் அக்கட்சிகள் எதையுமே நீங்கள் விமர்சனம் செய்வதே கிடையாது.நியாயமாகப் பார்த்தால் இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிலும் நீங்கள் இணைந்து வேலை செய்ய முடியாத அளவிற்கு அவை மோசமானவை என்பதால்தான் தனிநபர் கம்யூனிஸ்டாக நீங்கள் இருக்கிறீர்கள். அப்படியானால் அந்த கட்சிகளை நீங்கள் கடுமையாக விமர்சிக்க வேண்டியதே உங்களுடைய தார்மீகக் கடமை. அதுவே நீங்கள் கற்றுக்கொண்ட மார்க்சியத்திற்கு உண்மையுள்ளவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதற்கான.அடையாளம்.ஆனால் நீங்களும் உங்களைப் போன்ற தனிநபர் கம்யூனிஸ்டுகளாக முகநூலில் வலம்வரும் மற்றவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் அந்த கம்யூனிசத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கும் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சனம் செய்வதே இல்லை. தவிர்க்கமுடியாமல் விமர்சிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கூட பாம்பும் நோகாமல் கம்பு ஒடியாமல் மயிலிறகால் தடவிக் கொடுக்கும் வார்த்தைகளை தேடித்தான் அவர்களை விமர்சிக்கிறார்கள். அது உங்களுடைய முதல் சமரசம். இந்த முதல் சமரசமே மற்ற எல்லா சமரசத்திற்கும் ஊற்றுக்கண் ஆகிவிடுகிறது. இது உங்கள் கட்சியை நான் விமர்சிக்காமல் இருப்பதற்கு பிரதிபலனாக என்னை நீங்கள் கம்யூனிஸ்டு அறிவுஜீவியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற எழுதப்படாத வெளிப்படையாக சொல்லப்படாத ஒரு ஒப்பந்தம் ஆக மாறிவிடுகிறது. இறுதிவரை இதை பராமரிப்பதற்காகவே நீங்கள் உங்கள் மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு பாடுபட வேண்டிய கட்டாயத்திற்கு நீங்கள் தள்ளப்படுகிறீர்கள்.இரண்டாவதாக நீங்கள் ஒரு நடைமுறை தத்துவமாகிய மார்க்சிய தத்துவத்தை கைக் கொண்டு விட்ட பிறகு அதை நடைமுறைப்படுத்தி சமூகத்தை மாற்றும் கருவியாகிய சரியான கம்யூனிஸ்ட் கட்சி இங்கு இல்லை என்ற புரிதல் வந்த பிறகு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு கட்சியை உருவாக்குவதுதான். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் அளவுக்கு நான் பெரிய தனி நபர் அல்ல என்று நீங்கள் சொல்ல முடியாது. இந்த அளவிற்கு போராடி வளர முடிந்த உங்களால் ஒத்த கருத்துடையவர்களை இணைத்து கூட்டு போராட்டத்தில் ஈடுபட்டால் நீங்களும் ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க முடியும். அது முதலாளித்துவ தனிநபர்வாதத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்க கூட்டுவாதத்தை கைக்கொள்ளும் இயக்கவியல் சிந்தனைப் போராட்டத்தில் நீங்கள் இருக்கும் போது நிச்சயம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை உங்களால் உருவாக்க முடியும்.ஆனால் அதற்கான முயற்சியோ இலக்கோ உங்களிடம் மட்டுமல்ல உங்களைப்போல தனிநபர் கம்யூனிஸ்டுகளாக முகநூலில் வலம்வரும் பலரிடமும் இல்லை எனவே நான் உங்களிடம் முன்வைக்க விரும்புவது இதுதான்.இருக்கும் கம்யூனிஸ்ட்டு அமைப்புகள் எல்லாவற்றின் மீதும் விமர்சனம் இருந்தாலும் யாரையும் பகிரங்கமாக விமர்சிக்காமல் ஒரு காரியார்த்தமான நட்பை பராமரித்துக் கொண்டு, சரியான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கான எந்த முனைப்பும் காட்டாமல், கம்யூனிச தத்துவத்தை கற்றுத்துறைபோகிய தனிநபராகவே கடைசி வரை நீங்கள் இருந்து விட்டுப்போவதால் நீங்கள் கற்ற கம்யூனிச தத்துவத்தால் சமூகத்திற்கு என்ன பயன் என்பதை நீங்கள் யோசித்து ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும்.ஆனால்,”நான் தத்துவத்தை சொல்கிறேன்; இந்த தத்துவத்தை என் மூலம் கற்றுக்கொண்ட மற்றவர்கள் கட்சியைக் கட்டி புரட்சியை நடத்துவார்கள்” என்று மற்ற முகநூல் தனிநபர் கம்யூனிஸ்டுகள் சொல்வது போல தான் நீங்களும் சொல்வீர்கள் என்றால், அவர்களுக்குச் சொன்னதையே உங்களுக்கும் நான் சொல்ல ஆசைப்படுகிறேன்.மார்க்சியம் என்பது அறிவு தத்துவம் அல்ல; நடைமுறை தத்துவம் என்பதால் அறிவுத் தத்துவமாக மட்டும் கற்றவர்கள் சொல்லும் மார்க்சியம் முழுமையான நடைமுறைப்படுத்த படக் கூடிய மார்க்சியமாக கண்டிப்பாக இருக்காது. அது கோளாறு உடையதாகவே இருக்கும். ஏனென்றால் அவர் புத்தகத்தில் இருந்துதான் மார்க்சியத்தை கற்றிருக்கிறார். தான் கற்றுக்கொண்ட மார்க்சியத்தை நடைமுறைப்படுத்தி அதில் கற்றுகொண்ட அனுபவத்தை கொண்டு புத்தகத்தில் கற்றுக்கொண்ட மார்க்சியத்தை செழுமைப்படுத்தி கிடைத்த செறிவான மார்க்சியத்தை அவர் மற்றவர்களுக்கு சொல்லவில்லை.புத்தகத்தில் கற்றதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். அவரிடமிருந்து அதை கற்றுக் கொண்டவர்களால் சரியான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க முடியாது; சமுதாயத்தை மாற்ற முடியாது.எனவே நீங்கள் புத்தகத்தில் கற்றுக்கொண்ட மார்க்சியத்தை நடைமுறைப்படுத்தி சோதித்துப் பார்ப்பதற்கு (விவாதிப்பதற்கு அல்ல) ஏதாவது ஒரு அமைப்பை முதலில் உருவாக்கி தான் தீரவேண்டும். அப்போது தான் நீங்கள் கற்ற மார்க்சியத் தத்துவத்திற்கு உண்மையுள்ளவராக நீங்கள் ஆக முடியும்.தோழர் இதை நான் நீங்கள் ஒரு உதிரி என்று உங்களை உதாசீனப்படுத்துவதற்காகச் சொல்லவில்லை. தொடர்ந்து உங்களுடைய கடுமையான உழைப்பையும் சர்வதேச அளவில் ஸ்டாலின் புறக்கணிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த தருணத்தில் தமிழ் சமூகத்திற்கு ஸ்டாலினை மீண்டும் கொண்டு வந்து நிறுத்தியதில் நீங்கள் செலுத்திய உங்களுடைய கடுமையான உழைப்பையும் நானும் ஒரு மொழிபெயர்ப்பாளன் என்ற முறையில் அதில் உங்களுடைய இடர்களையும் உழைப்பையும் உணர முடிந்தவன் என்ற முறையிலும் உங்கள் தொடர் பதிவுகளை வாசித்துக் கொண்டிருப்பவன் என்ற முறையிலும் தோழமையுடன் இந்த வேண்டுகோளை உங்களிடம் வைக்கிறேன். பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
- தா.சிவக்குமார் அவர்களின் முக நூல் பதிவு