கட்சி உறுப்பினர்களின் தரம்1902-03ஆம் ஆண்டுகளில் கட்சி உருவாக்கும் முயற்சிகளின் பொழுது லெனின் மூன்று முக்கியக் கோட்பாடுகளில் சமரசமின்றி போராடினார். 1)தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம். 2) தொழிலாளி- விவசாயிகள் வர்க்க ஒற்றுமை. 3) கட்சி உறுப்பினரின் தகுதி. அன்று ஆர்எஸ்டிஎல்பி (RSDLP) எனும் பெயரில் இயங்கிய போல்ஷ்விக் கட்சியின் கொள்கைகள் மற்றும் அமைப்பு விதிகளை உருவாக்கும் விவாதங்களில் இந்த மூன்று கோட்பாடுகளுக்காகவும் லெனின் சமரசமற்றுப் போராடினார். பிளக்கனவ் முன்வைத்த கட்சித் திட்டத்தின் நகலில் கட்சியின் வர்க்கக் குணாம்சம் குறித்து மேலோட்டமாக இருந்ததை லெனின் கடுமையாக ஆட்சேபித்தார். அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளி வர்க்கக் கட்சி என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட வேண்டும் என வாதாடினார். அதே போல ரஷ்ய சமூகம் முதலாளித்துவ சமூகமாக உள்ளது எனும் பிளக்கனவின் மதிப்பீடையும் லெனின் விமர்சித்தார். அன்றைய ரஷ்ய சமூகம் முதலாளித்துவம் மட்டுமல்ல; நிலப்பிரபுத்துவம் மற்றும் சிறு தொழில் உற்பத்தி முறையையும் கொண்டிருந்தது என்பதை நிலைநாட்டினார்.தான் செயல்படும் சமூகத்தை பற்றிய துல்லியமான சித்தாந்த மதிப்பீடை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருக்க வேண்டும் என்பதில் லெனின் அவர்களுக்கு இருந்த முனைப்பை இது வெளிப்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாகவே நவீன சமூக புரட்சியில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தையும் தொழிலாளி விவசாய வர்க்கங்களின் ஒற்றுமைக்கான தேவை குறித்தும் லெனின் தொடர்ந்து வலியுறுத்தினார்.கட்சி உறுப்பினரின் தகுதி குறித்து ஒரு மிகப்பெரிய கோட்பாட்டுப் போராட்டத்தை லெனின் நடத்தினார் எனில் மிகை அல்ல. கட்சி உறுப்பினராக இருக்க என்ன தகுதிகளை லெனின் முன் வைத்தார்? கட்சி உறுப்பினர் கட்சியின் திட்டத்தை ஏற்றுகொள்ள வேண்டும்; கட்சியின் ஏதாவது ஒரு அமைப்பில் நேரடியாக இணைந்து செயலாற்ற வேண்டும்; கட்சிக்கு பொருளாதார உதவிகளை செய்ய வேண்டும்.(பக் 474/Collected works 6). இதற்கு மாறாக வேலை நிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு தொழிலாளியும் கட்சி உறுப்பினர்தான் என வாதிட்டார் மார்ட்டோவ். இதனை மறுத்தார் லெனின். ஒவ்வொரு வேலை நிறுத்தத்தையும் கட்சி ஆதரிக்க வேண்டும். ஆனால் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது மட்டுமே கட்சி உறுப்பினர் ஆவதற்கு தகுதி அல்ல. கட்சி உறுப்பினருக்கு சில கடமைகள் உள்ளன என்பதை லெனின் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் கட்சிக்கு கடமைப்பட்டவர்கள்; அதே போல ஒவ்வொரு உறுப்பினருக்கும் கட்சி கடமைப்பட்டது என்றார் லெனின்.