கட்சி அல்லது அமைப்பு என்பது பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து கட்டப்பட்டு செயல்படுகிறது. மேலும், பொதுமக்களின் அரசியல் பொருளாதாரம், பண்பாடு குறித்து விவாதித்து முடிவெடுக்கிறது. அதனால் கட்சியின் அரசியல், அமைப்பு பிரச்சினைகளை தெரிந்து கொண்டு விமர்சிக்க பழனி சின்னசாமி உள்பட அனைவருக்கும் உரிமை உண்டு.
கட்சி அல்லது அமைப்பில் இருப்பவர்கள், அரசியல் பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றை விவாதிக்காமலும், பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யாமலும் இருந்து, காலையில் மீன் குழம்பு ஊற்றி சாதம் சாப்பிடுவதா அல்லது வத்தக்குழம்பு ஊற்றி சாதம் சாப்பிடுவதா என்று விவாதித்தால் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அது அந்த அமைப்பின் அல்லது கட்சியின் தனிப்பட்ட உரிமையாகும்.
வெளிப்படையான கட்சி கட்ட, நிலவுகின்ற அரசு அனுமதிக்காமல் இருக்கும்போது ரகசிய கட்சி கட்டுவது ஒரு ரகம். எதேசச்சதிகாரத்தை மறைப்பதற்காக ரகசியமாக கட்சி கட்டுவது மற்றொரு ரகம். தற்போது எவர் கட்சி கட்டினாலும் ரகசியமாகத்தான் அது செயல்பட வேண்டும் என்று ஒரு பொதுப் புத்தி கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
அதனால் ரகசியத்தின் மூலம் எதேச்சதிகாரமாக கட்டப்பட்ட கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு பாசிச செயலில் ஈடுபடுகிறது. இந்த பாசிச செயலுக்கு ரகசிய கட்சி முறைதான் முதன்மையான காரணமாக இருக்கிறது. தற்போது பா.ஜ.க. அரசு கட்சிகளுக்கு கொடுக்கும் நன்கொடை கூட ரகசியமாகத்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுகிறது.
பா.ஜ.க.வும், காங்கிரசும் பாசிச போக்கில் செயல்படுவதற்கு கட்சி ரகசியமாகக் கட்டப்பட்டதுதான் முதன்மை காரணம். கட்சிதான் அரசை வழிநடத்துகிறது. அரசு பாசிசமாக செயல்பட்டால் அதற்கு கட்சி வடிவதம்தான் முதன்மை காரணம். அதனால் கட்சி அல்லது அமைப்பு பிரச்சினைகளில் பொதுமக்கள் தலையிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
துவக்கத்தில் ரகசிய முறையில் கட்சி கட்டுவது வளர்ச்சிக்கு உதவாது. ரஷ்யாவில் கூட துவக்கத்தில் தொழிலாளர் விடுதலைக்குழு வெளிப்படையாக கட்டப்பட்டு அதன் மூலம் நாடு முழுவதும் தொடர்புகள் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த தொடர்பு மூலம் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள்தான், பிறகு சூழ்நிலையைப் பொறுத்து கட்சியை முழுமையான ரகசியம் -& முழுமையான வெளிப்படை அல்லது ஒரு பகுதி ரகசியம் மற்றொரு பகுதி வெளிப்படை என்று இயங்கி இருக்க முடியும். இதுதான் இயக்கவியல் போக்காகும்.
எப்படி இருந்தாலும் துவக்கத்தில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு வெளிப்படையான அமைப்பு முறை, அதன் விதிகளை கடைபிடித்தல் அவசியமானதாகும். அதன் பிறகு அரசியல் நெருக்கடி ஏற்பட்டு, அமைப்பை ரகசியமாக மாற்றும் சூழ்நிலை ஏற்பட்டால் அதன்படி செயல்பட வேண்டி இருக்கும். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு மீண்டும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன்தான் செயல்பட வேண்டும். தற்போது இந்தியாவில் ரகசிய கட்சி கட்ட வேண்டிய தேவை இருப்பதாக நான் கருதவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் ரகசிய கட்சி வடிவம் சரி என்பவர்கள் பா.ஜ.க.வையும், காங்கிரசையும் பாசிஸ்ட் என்று விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது.