ஓட்டுக் கட்சிகள் என்றாலே ஏமாற்று. போலி வாக்குறுதிகளும் ஓட்டுப் பொறுக்குவதற்காக எதையும் சொல்வார்கள். செய்யாவிட்டால், யாரும் எதுவும் செய்துவிட முடியாது இதை வாக்காளர்களையும் இதற்குப் பழக்கப்படுத்தி விட்டார்கள்.
“சீட்டுக் கம்பெனி” நடத்துபவர்கள், பணம் வசூலித்துக் கொண்டு வாக்களித்தபடி பணமோ, பரிசோ தராமல் மோசடி செய்துவிட்டால் அவர்களைத் தண்டிக்க சட்டத்தில் இடமுண்டு. கம்பெனிகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மீறப்பட்டால் ஒப்பந்த மீறல், நம்பிக்கைத் துரோகம் என்று கூறி வழக்குப் போடமுடியும். இன்சூரன்சு காப்பீட்டுக் கழகங்கள் வாக்களித்தபடி தொகை தராமல் போக முடியுமா? அதேபோல வாக்குறுதிகள் கொடுத்து ஓட்டுக்களை அள்ளிக் கொண்டு போய், அவற்றை நிறைவேற்றாமல் மோசடி செய்வது நம்பிக்கைத் துரோகம், ஒப்பந்த மீறல் குற்றம் என்று கருதப்படுவதில்லையே, ஏன்?
ஒருமுறை ஓட்டுக்களை வாங்கிக் கொண்டு போய் ஆட்சியில் அமர்ந்துவிட்டால், இது இதைத்தான் செய்யவேண்டும் என்று கட்டாயம் இல்லாததைப் போல, நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக எது எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று வெற்றுத்தாளில் கையொப்பம் போட்டுக் கொடுப்பதாகத்தான் இருக்கிறது.
மத்தியில் காங்கிரசு கூட்டணி அரசாக இருந்தாலும் பா.ஜ.க. கூட்டணி அரசாக இருந்தாலும் தவறாமல் தனியார்மயம் தாராளமயம் உலகமயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அரசுத் துறைத் தொழில்கள் உள்நாட்டுவெளிநாட்டு ஏகபோக முதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. நாட்டையும் மக்களையும் பாதிக்கும் வகையில் அந்நியத் தொழில் கழகங்களுக்கு எல்லாத் தொழில்களும் திறந்து விடப்படுகின்றன. நாடாளுமன்றத்துக்குத் தெரியாமலேயே இராணுவ, அணுசக்தி, விவசாய தொழில் ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.
இலவசமே அரசியலாவதும், சாதியை வைத்து ஓட்டுப் பொறுக்குவதும் கூட தமிழக மக்களுக்குப் புதிதல்ல… திராவிடப் பேரறிஞர் என்று கழகங்கள் பெருமை பாராட்டும் அண்ணாவே “”சி.என். அண்ணாதுரை முதலியார்” என்ற பெயரில்தான் 1957இல் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
.
1967 தேர்தல்களில் தி.மு.க.வை வெற்றிபெறச் செய்தது இன்று அண்ணாவின் அரசியல் வாரிசு என்று உரிமை பாராட்டும் கட்சிகள் ஆட்சியில், விவசாயிகளும் தொழிலாளர்களும் நெசவாளிகளும் கஞ்சித் தொட்டியையும் தேடிப் போகும் இன்றைய நிலை.
1947க்குப் பிறகு ஆங்கிலேயன் கையில் இருந்து ஆட்சி அதிகாரம் இந்திய கொள்ளைக் கூட்டமான பெரும் பண்ணைகள், தரகு முதலாளிகள் கைக்கு மாறின இன்றோ ஏகாதிபத்தியம் கொள்ளையடிக்க திட்டங்கள் தீட்டப் படுகின்றன தனியார்மயம் தாராளமயம் உலகமயம், பொருளாதார சீர்திருத்தம், நவீனமயம் என்ற பெயரால் உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம் பன்னாட்டு தொழில் கழகங்கள் திணிக்கும் வளர்ச்சித் திட்டங்கள் அமலில் உள்ளன. புதிய பொருளாதாரக் கொள்கை சீர்திருத்தங்களின் பலன்கள் கசிந்து அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்திவிடும் என்ற வாக்குறுதி பொய்த்துப் போய், மக்கள் வறுமையும், பட்டினிச் சாவும், தற்கொலையுமே பரிசாக உள்ளது.
உழைக்கும் மக்கள் அடியோடு மாண்டு போனால் மலிவான உழைப்புக்கு பன்னாட்டு முதலாளிகள் எங்கே போவது? அல்லது அவர்கள் பொங்கி எழுந்தால் பன்னாட்டு முதலாளிகள் சுரண்டலும் ஆதிக்கமும் என்ன ஆவது? இலவசங்கள் மூலம் உழைக்கும் மக்களை மயக்கி வைப்பதுதான் அவர்களின் நலனுக்கு உகந்தது. அதைத்தான் இன்றைய ஆட்சியாளர்கள் செய்கிறார்கள்.