ஒரு நிகழ்வு- சிறுகதை.(லூ ஷூன்).

ஒரு நிகழ்வு- சிறுகதை.(லூ ஷூன்).கிராமத்திலிருந்து நகரத்துக்கு நான் வந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. அக்காலத்தில் அரச அலுவல்கள் என்று சொல்லப்படுகிறவற்றைப் போதியளவுக்குக் கண்டும் கேட்டும் விட்டேன். அவற்றில் எதுவுமே என்னில் ஒரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. என் மீது அவற்றின் சூழ்வலி என்னவென்று கேட்டால் அவை என் முன்கோபத்தை மோசமாக்கின. மனந்திறந்து சொன்னால் அவை என்னை மேலும் மேலும் மனித வெறுப்புடையவனாக்கின.எவ்வாறாயினும், ஒரு நிகழ்வு முக்கியமானதாக எனக்குப் பட்டது. அது என்னை என் முன் கோபத்திலிருந்து எழுப்பி விட்டது. இன்றும் கூட என்னால் அதை மறக்க இயலவில்லை.அது 1917ம் ஆண்டின் குளிர்காலத்தில் நிகழ்ந்தது. கடுமையான வடபுலக் காற்று வீசிக் கொண்டிருந்தது. ஆனாலும் என் வயிற்றுப் பிழைப்புக்கு நான் வேளைக்கே எழுந்து புறப்பட வேண்டியிருந்தது. தெருவிலே ஒரு சீவராசியையும் காணவில்லை. என்னை வாயிலுக்கு கொண்டு செல்ல ஒரு ரிக்ஷாவை அமர்த்துவதற்குப் பெரும்பாடாகி விட்டது. தற்போதைக்கு காற்று சிறிது அடங்கி விட்டது. கட்டற்றுக் கிடந்த தூசி எல்லாம் ஊதி எறியப்பட்டு தெரு துப்புரவாயிருந்தது. ரிக்ஷாக்காரன் தனது ஓட்டத்தைத் துரிதப்படுத்தினான். நான் வாயிலை நெருங்கிக் கொண்டிருந்த வேளை, வீதியைக் கடந்து கொண்டிருந்த யாரோ எங்கள் வண்டியில் சிக்குண்டு மெல்ல விழுந்தார்.அவர் ஒரு பெண். தலைமயிரில் வெள்ளைக் கீற்றுக்கள் இருந்தன. கந்தையான உடைகள் அணிந்திருந்தார். ஒரு எச்சரிப்பும் இல்லாமல் எங்களுக்குக் குறுக்காகத் தெருவைக் கடப்பதற்காக நடைபாதையிலிருந்து இறங்கி விட்டார். ரிக்ஷாக்காரன் வழி விலகியபோதும் அப்பெண்ணின் பொத்தான் கழன்ற கந்தலான வெளிச்சட்டை காற்றில் படபடத்து வண்டியின் கைத்தண்டில் மாட்டிக் கொண்டது. நல்ல வேளையாக ரிக்ஷாக்காரன் துரிதமாகவே வண்டியை நிறுத்தி விட்டான். இல்லாவிடின் அப்பெண் மோசமாக விழுந்து கடுமையாகக் காயப்பட்டிருப்பார்.அப்பெண் தரையிலேயே கிடந்தார். ரிக்ஷாக்காரன் வண்டியை நிறுத்தினான். கிழவிக்குக் காயமேற்பட்டதாக நான் எண்ணவில்லை. நடந்ததற்கு ஒரு சாட்சியும் இல்லை. எனவே ரிக்ஷாக்காரனை வம்பில் மாட்டி என்னையும் தாமதப்படுத்தும் விதமான இக் கடமை மீறிய செயல் எனக்கு எரிச்சலூட்டியது.”பரவாயில்லை, நீ போகலாம்” என்றேன்.ரிக்ஷாக்காரன் அதைக் கருத்திற் கொள்ளவில்லை. ஒரு வேளை அது காதில் விழாமலிருந்திருக்கலாம். கைத் தண்டுகளைத் தரையில் அமர்த்தினான். கிழவியை மெதுவாக எழுப்பி விட்டான். அவளை ஒற்றைக் கையால் தாங்கியபடி ”உங்களுக்கு ஒன்றுமில்லையே?” என்று கேட்டான்.”எனக்கு அடிபட்டு விட்டது”.கிழவி எவ்வளவு மெல்ல விழுந்தாள் என்று கண்டேன். நிச்சயமாக அவளுக்குக் காயப்பட்டிருக்காது. அவள் பாவனை செய்கிறாள். அது எனக்கு வெறுப்பூட்டியது. ரிக்ஷாக்காரன் வலிந்து வம்பை வரவழைத்தான். இப்போது அனுபவிக்கிறான். இனி அதிலிருந்து தப்ப அவனே தான் வழி தேட வேண்டும்.கிழவி தனக்கு காயப்பட்டதாகச் சொன்ன பின்பு ரிக்ஷாக்காரன் ஒரு கணமும் தயங்கவில்லை. கிழவியின் கரத்தைப் பற்றியவாறு மெல்ல மெல்ல அவள் முன்னால் செல்ல உதவினான். எனக்கு வியப்பாக இருந்தது. நேரே பார்த்த போது ஒரு காவல் நிலையம் தெரிந்தது. கடுமையான காற்றினால் அங்கே யாரும் வெளியில் நிற்கவில்லை. கிழவி காவல் நிலைய வாயிலை நோக்கிச் செல்ல ரிக்ஷாக்காரன் உதவினான்.திடீரென எனக்குள் விநோதமான ஒரு உணர்வு. விலகிச் சென்று கொண்டிருந்த அவனுடைய உருவம் அக்கணத்தில் பெரிதாகத் தோன்றியது. அவன் தூர தூரச் செல்ல, நான் அவனை அண்ணாந்து பார்க்கும் வரை, அவன் மேலும் மேலும் பெரியவனாகத் தெரிந்தான். அதேவேளை அவன் என் மீது மெல்ல மெல்ல ஒரு அழுத்தத்தைச் செலுத்துவதாகத் தோன்றியது. அது நான் அணிந்திருந்த மயிர்த்தோல் வைத்துத் தைத்த மேலாடைக்குள் இருந்த சிறியவனான என்னை அடக்குவது போல மிரட்டியது.என்னுடைய வீரியம் வடிந்தாற் போலிருந்தது. வெறுமையான மனத்துடன் ஒரு போலிஸ்காரன் வரும் வரை அசைவின்றி அமர்ந்திருந்தேன். பின்பு வண்டியிலிருந்து இறங்கினேன்..போலிஸ்காரன் என்னிடம் வந்து ”வேறொரு ரிக்ஷாவை அமர்த்து. அவனால் உன்னை இதற்கு மேல் இழுத்துச் செல்ல முடியாது” என்றான்.சிந்தனையின்றி என் மேற்சட்டைப் பையிலிருந்து ஒரு கையளவு செப்புக்காசுகளை எடுத்து போலிஸ்காரனிடம் கொடுத்தேன். ”இதை அவனிடம் கொடுங்கள்” என்றேன்.காற்று முற்றாகவே அடங்கி விட்டது. ஆனாலும் தெருவில் யாருமே இல்லை. யோசித்தபடியே நடந்தேன். எனினும் சிந்தனையை என் மீது திருப்ப பயப்பட்டேன் எனலாம். முன்பு நடந்த அனைத்தையும் ஒரு புறம் வைப்போம். கையளவு செப்புக் காசுகளைக் கொடுத்ததற்கு என்ன பொருள்? அது ஒரு பரிசா? ரிக்ஷாக்காரனை மதிப்பிட நான் யார்? என்னால் மறுமொழி கூற இயலவில்லை.இன்றும் அது என் மனதில் அந்த நிகழ்வு தெளிவாகவே உள்ளது. இது பலமுறை எனக்கு மனவேதனையை ஏற்படுத்தி என்னைப் பற்றிச் சிந்திக்க முயலுமாறு என்னைத் தூண்டியுள்ளது. அக்காலத்தின் ராணுவ அரசியல் விவகாரங்கள் சிறுவயதில் நான் கற்ற காவியங்களைப் போன்று எனக்கு அறவே மறந்து போய் விட்டன. எனினும் இந்த நிகழ்வு மட்டும், நிசமான வாழ்வை விட உயிரோட்டமாக என்னிடம் மீண்டும் மீண்டும் வந்து எனக்கு வெட்கத்தைக் கற்பித்துச் சீர்திருத்துமாறு தூண்டி எனக்குப் புதிய தைரியத்தையும், நம்பிக்கையையும் தருகிறது.-1920 ஜூலை.(லூ ஷூன் சீனாவின் நவீன பண்பாட்டுப் புரட்சியின் தலைமைத் தளபதியாகவும், சீரிய சிந்தனையாளராகவும் அரசியல் கருத்துரையாளராகவும் சீனாவின் நவீன இலக்கியத்திற்கு அத்திவாரமிட்டவராகவும் கொண்டாடப்படுகின்றார். ஒருவரால் எவ்வாறு உன்னதமான இலக்கியவாதியாகவும் மக்களால் கொண்டாடப்படும் படைப்பாளியாகவும் அமைய முடியும் என்பதற்கு லூ ஷூன் நல்ல எடுத்துக்காட்டாவார்)LikeComment


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *