என்ன செய்ய வேண்டும்-லெனின்
என்ன செய்ய வேண்டும்-லெனின்

என்ன செய்ய வேண்டும்-லெனின்


“எ
ன்ன செய்ய வேண்டும்” நூல் 1902-ம் ஆண்டு ரசியாவின் கம்யூனிச இயக்கத் தோழர்களுக்காக தோழர் லெனின் எழுதிய நூல். இந்த நூல் எழுதப்பட்ட சூழலை புரிந்து கொள்ள அதுவரையில் ரசியாவின் கம்யூனிச இயக்கம் பற்றிய சுருக்கமான வரலாற்றையும், அதில் லெனின் வகித்த பாத்திரம் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நூலில் ரபோச்சியே தேலோ, ரபோச்சியே மிசல் என்ற இரண்டு பத்திரிகைகளும், பல நபர்களின் பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன. அவர்கள் முன் வைத்த கருத்துக்களை மேற்கோள் காட்டி, அதற்கு லெனின் பதில் சொல்வது போல ஒரு உரையாடல் முறையில் முன் செல்கின்றது. அவற்றை உள்வாங்கி புரிந்து கொள்வதுதான் இதை படிப்பதில் இருக்கும் முதன்மையான பிரச்சனை. இந்த விவாதங்களுக்கு இடையே முக்கியமான கருத்துக்களை சொல்லிச் செல்கிறார். அந்தக் கருத்துக்களின் சாராம்சங்களை  முதலில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு விவாதத்தில் பேசப்படும் மேற்கோள்கள், பதில்களை முடிந்த வரை படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

ரசியா என்பது ஐரோப்பிய கண்டத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு நாடு. அதன் கணிசமான பகுதி ஆசிய கண்டத்துக்குள் வருகிறது என்றாலும் ஐரோப்பாவில் ஏற்படும் மாற்றங்கள் ரசியாவின் பிரதான பகுதிகளின் அரசியல் பொருளாதாரத்தை வேகமாக பாதிக்கிறது. ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மார்க்சியமும், விஞ்ஞான சோசலிசமும் தோன்றி வளர்ந்த போது, ரசியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மூலதனம் போன்ற மார்க்சிய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. 1870-களிலேயே ரசியாவில் ஒரு மார்க்சிய சிந்தனை போக்கு தோன்றி வலுப்பெற்றது. 1861-ல் பண்ணை அடிமை முறை சட்டத்தில் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் அதற்கு முன்பே வேகமாக வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவ உற்பத்தி முறை இதற்கு அடிப்படையாக இருந்தது.

இந்த மார்க்சிய சிந்தனை மரபின் நடைமுறை அரசியல் நரோத்னியா வோல்யா என்ற இயக்கமாக வளர்ந்தது. அதில் ஒரு பிரிவு ரசியாவில் முதலாளித்துவ வளர்ச்சி சாத்தியமில்லை என்ற கோட்பாட்டு அடிப்படையில் விவசாய சமூகங்களை மையமாகக் கொண்டு புரட்சி நடத்துவது என்ற கண்ணோட்டத்தில் செயல்பட்டனர். தனிநபர் பயங்கரவாத செயல்கள் மூலம் அரசு பிரதிநிதிகளை கொலை செய்யும் செயல் தந்திரத்தை பயன்படுத்தினர். லெனினின் அண்ணன் ஜார் மன்னரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது இந்த இயக்கத்தின் பின்னணியில்தான்.

இந்த நரோத்னிய இயக்கத்தை எதிர்த்து சட்ட வாத மார்க்சியம் என்ற முதலாளித்துவ அறிஞர்களின் பிரச்சாரம் ஜார் அரசால் அனுமதிக்கப்பட்டது. அது நரோத்னிக்குகளின் கோட்பாடுகளை எதிர்த்து முறியடிக்க மார்க்சிய இலக்கியங்களை பயன்படுத்தியது. இதனோடு சேர்ந்து உண்மையான கம்யூனிஸ்டுகளின் மார்க்சிய எழுத்துக்களும் வேகமாக பரவின. இவை இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவி நாடு முழுவதும் பல மார்க்சிய குழுக்கள் – வாசிப்பு வட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த வாசிப்பு வட்டங்கள் நகரங்களில் உள்ள தொழிலாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டன.

தொழிலாளர்களின் போராட்டங்களும் 1880-களில் தீவிரமடைந்து, வேலை நிறுத்தங்கள், அரசியல் கோரிக்கைகள் என்று வளர்ச்சி அடைந்து வந்தன. தொழிலாளர்களுக்கு பிரசுரம் எழுதித் தருவது, அரசியல் முழக்கங்களை வடித்துக் கொடுப்பது என்று மார்க்சிய வட்டங்களும் தொழிலாளர் வர்க்க இயக்கமும் ஒன்றிணைய ஆரம்பித்தன.

அன்றைய ரசியாவில் தொழிற்சங்கம் அமைப்பது சட்ட விரோதமானது, வேலை நிறுத்தம் செய்வது கிரிமினல் குற்றம், மார்க்சிய படைப்புகளை படிப்பது தடை செய்யப்பட்டது என்று கொடூரமான ஜாரிச எதேச்சதிகார ஆட்சி நடைபெற்று வந்தது. எனவே, மார்க்சிய வட்டங்களில் இணையும் இளைஞர் குழுக்கள் அடிக்கடி போலீஸ் உளவாளிகளால் கண்காணிக்கப்பட்டு இறுதியில் கூண்டோடு கைது  செய்யப்பட்டு வந்தனர்.

இந்த சூழலில்தான் லெனின் தனது அரசியல் பணிகளை பீட்டர்ஸ்பர்க் நகரில் தொடங்கினார். மார்க்சிய கோட்பாட்டை கற்று, பிற பல படைப்புகளுடன் முதன்மையாக நரோத்னிக்குகளின் முதலாளித்துவம் பற்றிய கோட்பாட்டை முறியடிக்கும் விதமாக ரசியாவில் முதலாளித்துவத்தின் தோற்றம் என்ற நூலை எழுதினார். தொழிலாளர் இயக்கத்துடன் தொடர்பு கொண்டு அதன் விளைவாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போதும், பின்னர் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்ட போதும் இந்த நூலை எழுதி முடித்தார். இது தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டார்.

1897-ம் ஆண்டு வாக்கில் ரசிய புரட்சி பற்றிய கோட்பாட்டு அடிப்படைகளும் நிலைப்பாடுகளும் கிட்டத்தட்ட அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. சைபீரியாவிலிருந்து விடுவிக்கப்பட்ட லெனின் இந்நிலையில் ரசிய புரட்சிகர இயக்கத்தின் உடனடி தேவை, நாடு முழுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் சிதறுண்டு கிடக்கும் மார்க்சிய குழுக்களை ஒன்றாக இணைத்து ஒரு வலுவான கட்சியாக கட்டுவது என்று முடிவு செய்தார். அதை சாதிக்கும் முயற்சியில் இஸ்க்ரா என்ற அகில ரசிய ரகசிய பத்திரிகையை வெளியிடுவது என்று முன் வைத்து வெளியிட ஆரம்பித்தார்.

ரசியாவின் அடக்குமுறைக்கு மத்தியில் அரசியல் பிரச்சாரம் செய்வதற்கான முக்கியமான மையங்களாக ரசிய குழுக்களுடன் நெருக்கமான தொடர்புகளை பராமரிக்கும் வெளிநாட்டு இடம் பெயர்ந்த மார்க்சியர்களின் குழுக்கள் இருந்தன. இதற்கிடையில் ரசியா சமூக ஜனநாயகக் கட்சியை ஆரம்பிப்பதற்கான முயற்சியில் முதல் காங்கிரஸ் வெளிநாட்டில் கூடியது. ஆனால் போதுமான தயாரிப்பும், முதிர்ச்சியும் இல்லாமல் இருந்ததால் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.

2-வது காங்கிரசை கூட்டி கட்சியை அமைக்க வேண்டும் என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நேரத்தில், இயக்கத்தில் நிலவும் இடது, வலது திசைவிலகல்களை எதிர்த்த போராட்டத்தின் ஒரு பகுதியாக லெனின் “என்ன செய்ய வேண்டும்” நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூல் அதற்கு முந்தைய 2-3 ஆண்டுகளில் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகள், கடிதங்கள் ஆகியவற்றின் இறுதி தொகுப்பான வடிவம் என்றும் சொல்லலாம்.

ரசிய சமூகஜனநாயக (கம்யூனிச) இயக்கத்தில் பொருளாதாரவாதம், பயங்கரவாதம், மார்க்சிய பாதை என்று மூன்று போக்குகள் அப்போது இருந்தன. பொருளாதாரவாதிகள் தொழிற்சங்கங்களில் தொழிலாளர்களுடன் நெருக்கமாக வேலை செய்வதன் மூலம் அவர்களது பொருளாதார கோரிக்கைகளை முன்னெடுத்து செல்வதன் மூலம் அவர்களது அரசியல் உணர்வை வளர்த்துச் சென்று புரட்சியை சாதிக்கலாம் என்பதை அமல்படுத்தி வந்தவர்கள். பயங்கரவாதிகள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை தோற்றுவிக்க தனிநபர் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்த வேண்டும் என்ற அணுகுமுறையில் எழுதியும், பேசியும், செயல்பட்டும் வந்தவர்கள்.

இந்த இரண்டுக்கும் நடுவில், தொழிலாளர்களின் பொருளாதார போராட்டங்களோடு, புரட்சியின் இலக்கான ஜாரிச எதேச்சதிகாரம் பற்றிய அரசியல் அம்பலப்படுத்தல்களையும் தொழிலாளர் மத்தியில் செய்து, தொழிலாளி வர்க்கத்தை ஜாரிச எதேச்சதிகாரத்தால் ஒடுக்கப்படும் அனைத்து வர்க்கத்தினரின் தலைமைப் படையாக வளர்க்கும் பணியை சமூக ஜனநாயக வாதிகள் செய்ய வேண்டும் என்ற பாதையில் மார்க்சிய புரட்சிகர அணுகுமுறை பின்பற்றப்பட்டது.

மேலே சொன்ன இரண்டு பாதைகள், குறிப்பாக பொருளாதாரவாதம் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிலவிய அதே போன்ற போக்குகளின் ரசிய வடிவம்தான் என்பதையும், அவை எவ்வாறு பொருத்தமற்றவை என்பதையும் குறிப்பிட்டு விவாதித்து முறியடிக்கும் வகையில் என்ன செய்ய வேண்டும் நூல் எழுதப்பட்டது.

இந்த நூலில் மொத்தம் 5 அத்தியாயங்கள் உள்ளன. இந்த நூல் புரட்சிகர இயக்கத்தின் அனைத்து அம்சங்களையும் முழுமையாக விவாதிக்கும் கோட்பாட்டு அடிப்படையை கொண்டுள்ளது.

  1. முதல் 2 அத்தியாயங்களில் புரட்சிகர இயக்கத்தில் தத்துவார்த்த தலைமையின் முக்கியத்துவத்தையும், அது எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் பேசுகிறது.
  2. 3-வது அத்தியாயம் தொழிற்சங்க அரசியலுக்கும், சமூக ஜனநாயக அரசியலுக்கும் இடையேயான வேறுபாடுகளையும் உறவையும் விளக்குகிறது.
  3. 4-வது அத்தியாயம் தொழிலாளர்களின் தொழிற்சங்க அமைப்புக்கும் சமூக ஜனநாயகக் கட்சி அமைப்புக்கும் இடையேயான வேறுபாடுகளையும், அவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய நடைமுறை உறவையும் விளக்குகிறது.
  4. 5-வது அத்தியாயம் லெனின் செயல் தந்திரமாக முன் வைத்த அகில ரசிய ரகசிய பத்திரிகை எவ்வாறு ஒரு அமைப்பாளனாகவும், அரசியல் தலைமையாகவும், செயல்பட முடியும் என்பதை விளக்குகிறது.

முதல் அத்தியாயத்தில்

முதல் உள்தலைப்பு – பொருளாதாரவாதிகள் கோரும் விமர்சன சுதந்திரம் என்பது ஏற்கனவே விவாதித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்சிய நிலைப்பாடுகளை விமர்சித்து விட்டு சித்தாந்த தலைமைய கைவிட்டு பொருளாதார வாதத்தில் மூழ்கிக் கிடப்பதற்கான சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கைதான் என்பதை விளக்குகிறது.

இரண்டாவது உள்தலைப்பு – ரசியாவில் இந்த விமர்சன சுதந்திரத்தை கோருபவர்கள் யார் என்று பேசுகிறது (மேலே சொன்ன பத்திரிகைகள், நபர்கள் பேசிய, எழுதிய கருத்துக்களின் அடிப்படையில்)

மூன்றாவது உள்தலைப்பு, ரசியாவில் விமர்சனம் எவ்வாறு வளர்ந்தது என்பதை பேசுகிறது.

நான்காவது உள்தலைப்புதான் இந்த அத்தியாயத்தின் சாராம்சத்தை முன் வைக்கிறது. சித்தாந்த போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி எங்கெல்ஸ் என்ற தலைப்பில் தொழிலாளி வர்க்கத்தின் வெல்லவொண்ணா தன்மை அரசியல், பொருளாதார, தத்துவார்த்த போராட்டங்களை அவற்றின் உள் இணைப்புகளுடன், ஒரே நேரத்தில் ஒத்திசைவுடன் நடத்திச் செல்வதில் அடங்கியிருக்கிறது என்பதை எங்கெல்ஸ் ஜெர்மன் தொழிலாளர் இயக்கத்துக்கு சொன்னது எவ்வாறு ரசிய தொழிலாளர் இயக்கத்துக்கு பொருந்துகிறது என்பதை விளக்குகிறார்.

இரண்டாவது அத்தியாயத்தில்

மக்களின் தன்னெழுச்சியும், சமூக ஜனநாயகவாதிகளின் உணர்வும் என்ற தலைப்பில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தில் கலந்து கொண்டால் போதும், அதன் ஊடாக தொழிலாளர்கள் அரசியலை கற்றுக் கொள்வார்கள் என்ற பொருளாதார வாதத்தை எதிர்த்து முறியடிக்கிறார். தொழிலாளர்களுக்கு சமூக ஜனநாயக அரசியல் வெளியிலிருந்துதான் கொண்டு செல்லப்பட வேண்டும். எவ்வாறு, அறிவியல் தொழில்நுட்பம் நவீன தொழில்துறைக்கு வெளியில் விஞ்ஞானிகளாலும், பொறியியலாளர்களாலும் உருவாக்கப்பட்டு, வளர்ந்து தொழில்துறையில் தொழிலாளர்களால் பயன்படுத்தப்படுகிறதோ அதே போல சமூக ஜனநாயக அரசியல் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ பிரிவினரால் வளர்த்தெடுக்கப்பட்டு தொழிலாளி வர்க்கத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

3-வது அத்தியாயத்தில்

தொழிற்சங்க அரசியலுக்கும் சமூக ஜனநாயக அரசியலுக்கும் உள்ள வேறுபாடை பற்றி பேசுகிறது.

முதல் உள்தலைப்பில் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சாலை பிரச்சனைகள் பற்றி அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து அவற்றுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் இறங்குவது போலவே, இந்தப் பிரச்சனைகளுக்கு எதிரியாக நிற்கும் ஜாரிச எதேச்சதிராகத்தை எதிர்த்த அம்பலப்படுத்தல்களையும் கிளர்ச்சியையும் தொழிலாளி வர்க்கத்துக்கு கற்றுக் கொடுப்பதுதான் தொழிலாளி வர்க்கத்தை அரசியல் படுத்துவது என்பதாகும். இதற்கு சமூகத்தின் ஒவ்வொரு வர்க்கமும் எதேச்சதிகாரத்தால் எவ்வாறு ஒடுக்கப்படுகிறது என்பதை அம்பலப்படுத்தி அவற்றுக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுவதற்கு வழி நடத்த வேண்டும். அப்போதுதான் தொழிலாளி வர்க்கம் பிற வர்க்கங்களின் தலைமை சக்தியாக புரட்சியின் முன் வரிசையில் நிற்கும்.

இவ்வாறு பரந்து விரிந்த அரசியல் தளத்தை தொழிற்சங்க பிரச்சனைகள் மட்டும் என்று குறுக்குகின்றனர் பொருளாதார வாதிகள். இந்த விவாதத்தின் ஊடாக பொருளாதாரவாதிகளும், பயங்கரவாதிகளும் எவ்வாறு இந்த அரசியல் அம்பலப்படுத்தல்கள் மூலமாக தொழிலாளர்களை அரசியல்படுத்துவதை புறக்கணித்து தன்னெழுச்சியான போக்குகளுக்கு வால் பிடித்து செல்கின்றனர் என்பதை விளக்குகிறார்.

4-வது அத்தியாயம்

இவ்வாறு அரசியல் இயக்கத்தின் தன்மையையும் உள்ளடக்கத்தையும் முடிவு செய்த பிறகு இதை அமல்படுத்துவதற்கான அமைப்பு வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பேசுகிறோம்.

தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் முடிந்த வரை தொளதொளப்பான வடிவில், பரந்து விரிந்த அடிப்படையை கொண்டிருக்க வேண்டும். முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளும் எல்லா தொழிலாளிகளும் தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டிருக்கும் சூழலில் தொழிற்சங்க விதிமுறைகளும், கட்சியுடனான அவற்றின் உறவும் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்பதை வாத பிரதிவாதங்களை பயன்படுத்தி விளக்குகிறார்.

இதற்கு மாறாக பொருளாதாரவாதிகளின் தொழிற்சங்க அமைப்பு முறை அவர்களது அரசியல் பக்குவமின்மையை பிரதிபலித்து அர்த்தமற்ற ஜனநாயக முறைகளையும், அதிகார வர்க்க நடைமுறைகளையும் கொண்டிருக்கிறது என்று அம்பலப்படுத்துகிறார்.

இதன் இறுதி உள் தலைப்பில் ஒவ்வொரு சமூக ஜனநாயகக் குழுவும் தனது பணியை உள்ளூர் அளவில் சுருக்கிக் கொள்ளாமல், அகில ரசிய தாக்கம் செலுத்தும் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதை உள்ளூர் பத்திரிகைகளுக்கும் அகில ரசிய பத்திரிகைக்கும் இடையேயான வேறுபாட்டை விளக்குவதன் மூலம் உணர்த்துகிறார்.

5-வது அத்தியாயத்தில்

அகில ரசிய பத்திரிகை இஸ்க்ரா வெளியிடுவது என்ற திட்டத்தை எதிர்த்து பொருளாதாரவாதிகளும், பயங்கரவாதிகளும் முன் வைத்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கிறார். ஒரு பத்திரிகை நாடு தழுவிய ஒரு வினியோக வலைப்பின்னலை உருவாக்குவதன் மூலம் அமைப்பை வலுவாக கட்டுவதற்கான கருவியாக பயன்பட முடியும் என்பதை விளக்குகிறார்.

இந்த நூலின் தலைப்பே “என்ன செய்ய வேண்டும் – நமது இயக்கத்தின் கொதித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள்” என்பது. எனவே இதில் பேசப்படும் விஷயங்கள் ரசியப் புரட்சியை வழிநடத்திச் செல்வதற்கான முக்கியமான கோட்பாட்டு முடிவுகளை உள்ளடக்கியிருக்கின்றன. அந்த கோட்பாட்டு முடிவுகளை தனியாக தொகுத்துக் கொண்டு அவற்றுக்கு மாறான கருத்துக்களுடன் ஒப்பிட்டு எப்படி லெனின் அவற்றை நிறுவுகிறார் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். கட்சி தோழர்களுடனான விவாத முறையையும், கோட்பாட்டை எடுத்துச் சொல்லும் அணுகுமுறையையும் கற்றுக் கொள்ள வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *