என்ன செய்ய வேண்டும்- அ.க.ஈஸ்வரன்
என்ன செய்ய வேண்டும்- அ.க.ஈஸ்வரன்

என்ன செய்ய வேண்டும்- அ.க.ஈஸ்வரன்

இந்தப்பகுதீ தோழர் அ.க. ஈஸ்வரன் அவர்களீன் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டவை சில தேவைக்காக

லெனின் எழுதிய, “என்ன செய்ய வேண்டும்?” என்கிற இந்தப் புத்தகம், சுமார் 300 பக்கத்தைக் கொண்டது. இது ஒரு பெரிய புத்தகம் தான்.

இந்தப் புத்தகத்தை முழுமையாக, வரிக்கு வரி விளக்கப் போவதில்லை, சுருக்கமாக அதன் சாரத்தை மட்டுமே சொல்லப் போகிறேன்.

இந்தச் சாரத்தை மனதில் வைத்துக் கொண்டு புத்தகத்தைச் சுயமாக, முழுமையாகப் படிக்க வேண்டும். சாரத்தை அறிந்து கொள்வதின் நோக்கமே, புத்தகத்தை முழுமையாகப் படிக்க உதவ வேண்டும் என்பதே.

இந்த நூல் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒருவகுப்பாக ஐந்து வகுப்பு எடுக்கப் போகிறேன். சுருக்கமாகச் சாரத்தை மட்டும் சொல்வதனால், ஐந்து வகுப்பில் இந்த மொத்த புத்தகத்தையும் சொல்லிவிடலாம்.

1 மற்றும் 5 அத்தியாயத்தை மிகவும் சுருக்கமாகத் தான் பார்க்கப் போகிறோம். இடையில் உள்ள மூன்று அத்தியாயம் கண்டிப்பாக விரிவாகப் படிக்க வேண்டியது. அந்த மூன்று அத்தியாயத்தில் என்ன பேசப்பட்டுள்ளது என்பதைச் சுருக்கமாக இன்று பார்ப்போம்.

2) இரண்டாவது அத்தியாயம், “மக்களின் தன்னியல்பும் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு நிலையும்.”

சமூக- ஜனநாயகவாதிகள் – அப்படினா.. கம்யூனிஸ்டுகள்.. அந்தக் காலத்தில் கம்யூனிஸ்டுகளைச் சமூக-ஜனநாயகவாதிகள் என்றே அழைத்தனர். பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதானால, இந்தப் பெயரே அப்போது வழத்தில் இருந்தது.

மக்களின் தன்னியல்பு :-

மக்கள் தங்களுக்கு நடக்கிற கொடுமைகளுக்கு, உடனடியாக எதிர்வினை புரிவது, தன்னியல்பு. எந்த இயக்கமோ, அமைப்போ, கட்சியோ அந்தப் பிரச்சினைக்குத் தலைமை தாங்காமல், பாதிக்கப்பட்ட மக்களே போராட்டத்தில் இறங்குவது தான் தன்னியல்பு.

சமூகஜனநாயகவாதிகளின் உணர்வு:-

சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு என்றால், கம்யூனிஸ்டுகளின் உணர்வு, அதாவது வர்க்க உணர்வு.

மக்களின் தன்னியல்பான உணர்வு என்பது ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு மட்டுமே போராடுவது, ஆனால் கம்யூனிஸ்டுகள் தன்னில்பாக எழுச்சி கொண்ட மக்களுக்கு, வர்க்க உணர்வை ஊட்ட வேண்டும், அவர்களை வர்க்க அரசியலுக்குக் கொண்டு வரணும். இது தான் கம்யூனிஸ்டுகளின் உணர்வு.

தன்னில்பான போராட்டத்தின் எல்லைக்கும், வர்க்க உணர்வு பெற்ற போராட்டத்தின் எல்லைக்கும் உள்ள வேறுபாட்டை இந்த அத்தியாயம் விவரிக்கிறது.

3) மூன்றாவது அத்தியாயம், தொழிற்சங்கவாத அரசியலும் சமூகஜனநாயக அரசியலும்.”

தொழிற்சங்கவாத அரசியல் என்பது, வர்க்க உணர்வு ஊட்டாமல், பொருளாதார முன்னேற்றத்திறகு மட்டும் போராடுவது. அதாவது கூலி உயர்வுக்காக மட்டும் போராடுவது. ஆனால் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் கூலி முறை ஒழிப்பதற்கான போராட்டம்.

கூலி உயர்வுக்கான போராட்டத்தில் தொடங்கி, கூலி முறை ஒழிவதற்கான போராட்டம் வரை கொண்டு செல்வது தான் கம்யூனிஸ்டுகளின் வர்க்க அரசியல்.

4) நான்காவது அத்தியாயம், பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்.”

இதுவும் மேலே கூறப்பட்ட விஷயத்தைப் பற்றியது தான், கூலி உயர்வுக்கு மட்டும் போராடுகிற பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையை வெளிப்படுத்தி, அந்தப் பக்குவமின்மையைப் போக்க வேண்டும் என்றால், புரட்சிகரக் கம்யூனிஸ்டுகள் தொழிற் சங்கங்களில் ஈடுபட வேண்டும். இந்த விஷயத்தைப் பற்றித் தான் இந்த நான்காம் அத்தியாயம் பேசுகிறது.

இந்த மூன்று அத்தியாயத்தைச் சற்று விரிவாக வகுப்பெடுக்க வேண்டும். 1 மற்றும் 5ஆம் அத்தியாயம் சுருக்கமாக வகுப்பெடுத்தா போதும்.

ஐந்தாவது அத்தியாயம், ஓர் அனைத்து ருஷ்ய அரசியல் பத்திரிகைக்கானதிட்டம்””

இது குறிப்பாக அன்றைய ருஷ்ய நிலைமைக்கானது. அதனால் இதைச் சுருக்கமாகப் பார்த்தால் போதுமானது.

இன்றைய வகுப்பு முதல் அத்தியாயம். 1) வறட்டுச் சூத்திரவாதமும்விமர்சன சுதந்திரமும்”.

இதில் இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன, ஒன்று வறட்டுச் சூத்திரவாதம், மற்றொன்று விமர்சன சுதந்திரம்.

மார்க்சியம், வறட்டுச் சூத்திரவாதமல்ல, செயலுக்கு வழிகாட்டியே, எதிர்படும் புதிய நிலைமைக்கு ஏற்ப தம்மை அது வளப்படுத்திக் கொள்ளும். இதைக் கேள்விபட்டிருப்பீர்கள்.

அதே போல, விமர்சனம், சுய விமர்சனம் என்பது பற்றியும் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால், 1) வறட்டுச் சூத்திரவாதமும் “விமர்சன சுதந்திரமும்” என்ற இந்த அத்தியாயம் இது பற்றிப் பேசவில்லை.

வறட்டுச் சூத்திரவாதம், விமர்சன சுதந்திரம் என்ற சொற்களைத் தவறாகப் பயன்படுத்தி மார்க்சிய அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குபவர்களை, லெனின் இந்த அத்தியாயத்தில் விமர்சிக்கிறார்.

அதாவது விமர்சன சுதந்திரம் வேண்டும் என்று, புதியதாகக் கிளம்பியவர்களின் உள் நோக்கம் என்ன என்பதை லெனின் இந்த அத்தியாயத்தில் விவரிக்கிறார்.

மார்க்சியத்தை, விமர்சன வழியில் அணுக வேண்டும் என்று சொல்கிற இவர்களின் கோரிக்க என்ன வென்றால்?

காலம் மாறிப் போச்சு, அதனால், கம்யூனிச கட்சி, புரட்சிரகமானதாக இருப்பதை விடுத்து, சமூகச் சீர்திருத்தங்களுக்கான கட்சியாக மாற வேண்டும். இது தான் இந்தப் புதிய போக்கினரின் அடிப்படை நோக்கம்.

இதை நல்லா புரிஞ்சிக்கிட்டா… இந்த அத்தியாயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

பொதுவாக வறட்டுச் சூத்திரவாதம் என்றால் என்ன? மார்க்சியத்தைப் புதிய மாற்றத்திற்கு ஏற்ப உட்படுத்தாம இருப்பதையே வறட்டுச் சூத்திரம் என்று கூறுவோம். ஆனால் இவர்கள்…..மார்க்சிய அடிப்படைகளை ஊன்றி நிற்பவர்களைப் பார்த்து, வறட்டுச் சூத்திரவாதிகள் என்று இந்தப் புதிய போக்கினர், கூறுகிறார்கள்.

ஏன் என்றால் மார்க்சிய அடிப்படைகளை விடாம பின்பற்றுவது இவர்களுக்கு வறட்டுச் சூத்திரவாதம். ஆனால் கம்யூனி’ஸடுகளைப் பொருத்தளவில், இயக்கவியல் பார்வை அற்ற போக்கே வறட்டுச் சூத்திரவாதம்.

அதே போல, விமர்சனம், சுய விமர்சனம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அனைத்தையும் சுய விமர்சனம் செய்து மேம்படுத்திக் கொள்வது என்பது கம்யூனிஸ்டுகளின் போக்கு. ஆனால் இந்தப் புதிய போக்கினருக்கு விமர்சனம் என்றால் வேறு பொருள். அது என்னவென்றால்.., மார்க்சிய அடிப்படைகளைச் சிதைப்பதற்கு விமர்சன சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

காலம்மாறி போச்சு, மார்க்சிய அடிப்படைகள் காலாவதியாகிவிட்டது என்பதே இந்தப் புதிய போக்கினர் கருத்து.

அவர்கள் கூறுகிற பட்டியலை முதலில் பார்ப்போம்:-

1) கம்யூனிசத்தை விஞ்ஞான அடிப்படையில் அணுகுவதை மறுப்பது.

2) சோஷலிச சமூகமாக மாறிடும் என்கிற தவிர்க்க முடியாத தன்மையை மறுத்தல், அதாவது வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வையில் இருந்து கூறப்படுகிற சமூக மாற்றத்தை மறுத்தல்.

3) முதலாளித்துவச் சமூகத்தில் வறுமை அதிகமாகி வருவதை மறுத்தல்,

4) முதலாளித்துவ உற்பத்தில் முரண்பாடுகள் கடுமையாகிக் கொண்டிருப்பதை மறுத்தல்,

5) பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையே மறுத்தல். 

6) “இறுதிக் குறிக்கோள்” என்று கூறுவதையே மறுத்தல். 

மொத்தத்தில் அவர்கள் கூறவருவது இதுவே:- 

புரட்சிகரமான கம்யூனிசக் கோட்பாடுகளை விடுத்து, முதலாளி வர்க்க சார்பான, சமூகச் சீர்திருத்தவாதத்தைக் கொண்டுவருதல். 

முதலாளித்துவ வர்க்கம் பல காலமாக மார்க்சியத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகளை, இந்தப் போக்கினர், கம்யூனிசத்தின் பேரால் “விமர்சன சுதந்திரம்” வேண்டும் என்ற போர்வையில் வைக்கின்றனர். அவ்வளவு தான். 

இந்தப் போக்கினர் கோருகிற சுதந்திரம் எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

“விமர்சன சுதந்திரம்” என்பது கம்யூனிசத்தில் சந்தர்ப்பவாதப் போக்குக்கு இடம் கொடுக்க வேண்டும் என்கிற சுதந்திரம், 

புரட்சியைக் கைவிட்டு சீர்திருத்தத்துக்கு மாறுகிற, ஜனநாயகக் கட்சியாக மாற்றுவதற்கான சுதந்திரம், 

கம்யூனிசத்தில், முதலாளித்துவக் கருத்துக்களையும், முதலாளி வர்க்கப் போக்குள்ளவர்களையும் புகுத்துவதற்கான சுதந்திரம். 

இந்தப் போக்கை லெனின் புதிய வகைச் சந்தர்ப்பவாதம் என்கிறார். 

இந்தச் சந்தர்ப்பவாதிகளின் இறுதி நோக்கம் என்னவென்றால், கம்யூனிசத்தில் உள்ள புரட்சிகரத் தன்மையை நீக்கி சீர்திருத்த பாதைக்கு அழைத்துச் செல்வதே ஆகும். 

சீர்திருத்தத்தால் புரட்சிகரச் சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. என்பது தான் நிதர்சனமான உண்மை. 

புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது.

புரட்சிகரமான இயக்கம் இல்லாமல் புரட்சிகரமாக, சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. அதனால் சீர்திருத்த போக்கை கடுமையாக விமர்சிக்க வேண்டும். 

கம்யூனிசத்தின் புரட்சிகரத் தன்மையைக் கைவிட்ட இந்தப் பழைய மார்க்சியவாதிகளின், திருத்தல் போக்கை அம்பலப்படுத்த வேண்டும். 

மார்க்சிய அடிப்படைகளை வீடாது பிடித்துக் கொண்டிருப்பவர்கள், வைதீக மார்க்சியவாதிகளாம். இவர்கள் தான் உண்மையான மார்க்சியவாதிகளாம். விமர்சன சுதந்திரத்தை இவர்கள் தான் பின்பற்றுவது போலப் பாசாங்கு செய்கிறார்கள். 

இந்தப் பாசாங்குக்காரர்களின் சீர்திருத்த போக்க் எதிர்த்து, கம்யூனிசத்தில் இருக்கும், விஞ்ஞானத் தன்மையையும், புரட்சிகரனமான போக்கையும் நாம் காப்பாற்ற வேண்டும். இந்த அத்தியாயம் நமக்கு இதைத் தான் போதிக்கிறது.

லெனின் வழியில், 

“திருத்தல்வாதம் எதிர்ப்போம் மார்க்சியம் காப்போம்” 

என்று கூறி, இந்த வகுப்பை முடித்துக் கொள்கிறேன்.

இன்று லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் இரண்டாவது அத்தியாயத்தைப் பார்க்கப் போகிறோம். அதற்கு முன், போன வகுப்பில் பார்த்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம். 

போன வகுப்பின் தலைப்பு, “1) வறட்டுச் சூத்திரவாதமும் “விமர்சன சுதந்திரமும்”. 

புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மாறாமல், பழைய கோட்பாட்டைப் பிடித்துக் கொண்டிருப்பதையே வறட்டுச் சூத்திரவாதம் என்று கூறுவோம், ஆனால் லெனின், ஒரு புதிய போக்கினரை இங்கே குறிப்பிடுகிறார். 

முதலாளித்துவம் வளமையாக இருக்கின்ற காலத்தைக் கணக்கில் கொண்டு, இனிமேல் முதலாளித்துவம் மறையாது, அதனால், பழைய பாணியிலான மார்க்சியம் மறைந்துவிட்டது. அதனால் பழைய மார்க்சியத்தைப் பிடித்துக் கொண்டு இருப்பது வறட்டுச் சூத்திரவாதம்.

பழைய மார்க்சியத்தை விமர்சிப்பதற்கு விமர்சன சுதந்திரம் வேண்டும், என்பதே இந்தப் புதிய போக்கினரின் கோரிக்கை. 

உண்மையில், இந்தப் புதிய போக்கினர் விமர்சனம் செய்ய விரும்புவது, மார்க்சிய அடிப்படைகளையே, கம்யூனிசத்தில் உள்ள விஞ்ஞானத் தன்மையையும், புரட்சிகரத் தன்மையையும் ஒழிப்பதே இதன் நோக்கமாகும். இத்தகைய புதிய போக்கை லெனின், புரட்சிகரப் போக்குகளை மறுக்குகிற சீர்திருத்தவாதம் என்று விமர்சித்துள்ளார். 

இது தான் இந்த முதல் அத்தியாயத்தன் சாரம். 

இன்றைக்கு இரண்டாம் அத்தியாயம், 2) “மக்களின் தன்னியல்பும் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வும்.” 

இந்த அத்தியாயம் சுமார் 40 பக்களைக் கொண்டிருக்கிறது. இதனை வரிக்குவரியாக விளக்காமல், இதன் சாரத்தை மட்டும் சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம். 

இந்த அத்தியாயத்தில் மூன்று கலைச்சொற்கள் இருக்கிறது:- 

மக்களின் தன்னியல்பு,

தன்னியல்பு வழிபாடு,

கம்யூனிஸ்டுகளின் உணர்வு, 

புத்தகத்தில் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு என்று தான் இருக்கும், அதனைக் கம்யூனிஸ்டுகளின் உணர்வு என்று புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே லெனின் ஒன்றை குறிப்பிடுகிறார். அதனை முதலில் படித்துப் பார்ப்போம். 

தற்கால இயக்கத்தின் பலம் மக்களின் (முதன்மையாக, தொழில் துறைப் பாட்டாளி வர்க்கத்தின்) விழிப்புணர்வில் அடங்கியிருக்கிறது, அதன் பலவீனம் புரட்சிகரமான தலைவர்களின் உணர்வு இன்மையிலும் முன்முயற்சி இன்மையிலும் அடங்கியுள்ளது, இதை யாரும் இதுவரை சந்தேகித்ததில்லை 

தொழிலாளர்கள், நேரடியாகப் பிரச்சினைகளைச் சந்திப்பதனால் அவர்கள் அதனை உணர்ந்து, உடனடியாக எதிர்பை தெரிவிக்கின்றனர். நிச்சயமாக அது தன்னியல்பான போராட்டம் தான் இருக்கும். தன்னியல்பான போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக மாற்றுவது கம்யூனிஸ்ட் கட்சியின் பணி. 

இந்தப் பணி தான் பலவீனமாக இருப்பதாக, லெனின் அன்றைய ருஷ்ய நிலைமையை முன்வைத்துக் கூறியுள்ளார். 

இங்கே தலைவர்கள் என்று பொதுப்படக் கூறப்பட்டிருந்தாலும், கட்சி தலைமையில் உள்ளவர்களை மட்டும் குறிப்பிடவில்லை. வெகுஜன அமைப்பில் உள்ள தலைவர்களையும் சேர்த்துத் தான் கூறப்பட்டுள்ளது. 

இதனைப் பொதுவாகக் கம்யூனிஸ்டுகளின் குறைபாடாக எடுத்துக் கொள்ளலாம். கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களுக்கு வழிகாட்டுவதானால், கம்யூனிஸ்டுகளும் தலைவர்களே. அதனால் கம்யூனிஸ்டுகளின் குறைபாடாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். 

தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிற, கம்யூனிஸ்டுகளின் விழிப்புணர்வைப் பற்றித் தான் இந்த நூல் பேசுகிறது. 

அதனால், இந்த நூலை கம்யூனிஸ்டுகள் அனைவரும் நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வகுப்பு, இந்த நூலைப் பற்றிய அறிமுகமே… சாரமே.. அதனால் இந்த அறிமுகத்தை நன்றாகப் புரிந்து கொண்டு “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலை முழுமையாகப் படித்து அறிய வேண்டும். 

கம்யூனிஸ்டுகள், தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், தொழிலாளர்களின் தன்னியல்புக்கும், கம்யூனிஸ்டுகளின் உணர்வுநிலைக்கும் உள்ள வேறுபாட்டை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 

தன்னியல்பான எழுச்சியின் தொடக்கத்தைப் பற்றி லெனின் கூறுகிறார். 

தொழிலாளர்களின் தன்னியல்பான போராட்டம் என்றால், முதலாவதாக இயந்திரங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் தொடக்ககாலப் போராட்டத்தைக் குறிப்பிட வேண்டும். நவீன இயந்திரங்கள் முதலில் புகுத்திய போது, தொழிலாளர்களில் பலர் வேலைகளை இழந்தனர். இந்த நிலைமைக்குக் காரணம் இயந்திரம் என்று நினைத்து அவர்கள் உடைத்தனர். இது தான் பாட்டாளிகளின் முதலாவதான தன்னியல்பான போராட்டம். 

அடுத்தப் படியாக வேலைநிறுத்தத்தைத் தன்னியல்பான போராட்டம் என்று சொல்லலாம். அதாவது கூலி உயர்வுக்கான போராட்டம் போன்றவை ஒரு தன்னியல்பான போராட்டமே. 

இந்தத் தன்னியல்புப் போராட்டம் கரு வடிவிலான வர்க்கப் போராட்டமே. கருவடிவிலான வர்க்கப் போராட்டம், சமூகத்தை மாற்றுகிற முழுமையான வர்க்கப் போராட்டமாக மாற வேண்டும் என்றால், தொழிலாளர்கள் கம்யூனிச உணர்வு பெற வேண்டும். 

தொழிலாளர்கள் கம்யூனிச உணர்வு பெற வேண்டும். 

இந்த இயந்திரத்தை உடைத்தல், வேலை நிறுத்தம் போன்ற போராட்டம் ஒரு வகையான அரசியல் போராட்டம் தான், ஆனால் அது கம்யூனிஸ்டுகளின் அரசியலாக இல்லாது, முதலாளித்துவ அமைப்புக்குள் போராடுகிற சீர்திருத்த வகைப்பட்ட போராட்ட அரசியலாகவே இருக்கிறது. 

இத்தகைய சீர்திருத்த அரசியல் போராட்டம், தொழிலாளர்களின் அன்றைய மேம்பாட்டை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளது. அந்த மேம்பாடு தொழிலாளர்களின் பிரச்சினைகளை முழுமையாகப் போக்காது. 

ஏன் என்றால் முதலாளி, தொழிலாளிகளுக்கு ஒரு வகையில் கொடுத்ததை, மற்றொரு வகையில் பறித்துக் கொள்ளவார். 

கூலி உயர்வுக்கான போராட்டம், “கூலை முறை”யை ஒழிப்பதற்கான போராட்டமாக மாறாதவரை, தொழிலாளர்களுக்கு அவ்வப்போது கிடைக்கிற மேம்பாடு என்பது, நிரந்திரத் தீர்வாக இருக்காது. 

பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதைத் தொழிலாளர்களும் காணாமல் இருக்க மாட்டார்கள். 

இந்தக் கூலிக்கான போராட்டத்தைக் கூலி உயர்வுக்கானப் போராட்டமாக மாற்ற வேண்டும் என்கிற உணர்வு கண்டிப்பாகத் தன்னியல்பில் கிடையாது. இதற்கு, மார்க்சியப் புரிதல் அவசியமாகிறது. 

மார்க்சியப் புரிதல் உள்ள கம்யுனிஸ்டுகளின் கடமை:- 

இந்தத் தன்னியல்பான போராட்டத்தின் எல்லைகளை, தொழிலாளர்களுக்குப் புரியவைத்து, கூலி உயர்வுக்காணப் போராட்டத்தை, கூலி முறை ஒழிப்பதற்கான போராட்டமாக உயர்த்த வேண்டும் என்பதை விளக்க வேண்டும். 

இந்தக் கடமையைக் கம்யூனிஸ்டுகள் உணரவேண்டும் என்பதையே இந்த அத்தியாயமும் இந்த நூலும் நமக்குச் சொல்லித் தருகிறது. 

இதுரைவரைப் பார்த்ததைத் தொகுப்போம்:- 

தொழிலாளர்களிடம் தன்னியல்பான போராட்டத்தை மட்டுமே எதிர்பார்க்க முடியும். 

தொழிலாளர்கள் தமது சொந்த முயற்சியால், தொழிற்சங்க உணர்வை மட்டுமே பெறமுடியும். 

அதாவது தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது, அவசியமான தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்ற, அரசை கட்டாயப்படுத்துவது. 

இந்தத் தன்னியல்பான போராட்டத்தைத் தாண்டி தொழிலாளர்கள் கம்யூனிச உணர்வு பெற வேண்டும். இந்த உணர்வை ஊட்டுவதற்கு வெளியில் இருந்து தான் அறிவு சக்தி வரவேண்டும் 

அந்த வெளி சக்தி தான் கம்யூனிஸ்டுகள். 

இந்த நூல் எழுதுகிற காலத்தில், அத்தகையா அறிவு சக்தி, வெளியில் இருந்து வரவேண்டிய நிலை இருந்தது. இன்று தொழிலாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் skilled labour-ராக, அதாவது கல்விபெற்ற தொழில்நுட்ப தொழிலாளர்களாக வளர்ந்துள்ளனர். 

அதனால் இன்றைய நிலையில், பாட்டாளி வர்க்கத்திற்குத் தேவையான அறிவுத் தலைமை, தொழிலாளர் மத்தியிலும், தொழிலார் குடும்பங்களில் இருந்தும் வருவதற்கு வாய்ப்பு பெருகி உள்ளது. இதையும் கணக்கில் கொள்ள வேண்டும். 

கம்யூனிசம் என்பது, வெறும் அரசியல் செயற்பாடு மட்டும் கிடையாது. 

ஏன் என்றால் கம்யூனிஸ்டுகளின் அரசியல் செயற்பாடு, விஞ்ஞானத் தன்மை கொண்டது. 

விஞ்ஞானத் தன்மை பெற வேண்டும் என்றால், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றும் அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றிலும் திறம்பெற வேண்டியுள்ளது. 

விஞ்ஞானத் தன்மையான அரசியலாக இருக்க வேண்டும் என்றால், தத்துவத்திலும் பொருளாதாரத்திலும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 

இத்தகைய பயிற்சிக்கான முயற்சியே இந்த “மார்க்சியர் மேடை” போன்ற படிப்புவட்டம் செயற்படுகிறது. 

லெனின் இந்த நூலில் தன்னியல்பை மறுக்கவில்லை, இந்தத் தன்னியல்போடு நின்று போகாமல், கம்யூனிச உணர்வாக மாற வேண்டும் என்று தான் கூறுகிறார். ஆனால் அதே நேரத்தில் லெனின், தன்னியல்பு வழிபடுவதைக் கடுமையாக எதிர்க்கிறார். இதை நன்றாகக் கவனித்தில் கொள்ள வேண்டும். 

லெனின், தன்னியல்பான போராட்டத்தை, கருவடிவிலான வர்க்கப் போராட்டம் என்று குறிப்பிடுவதனால், தன்னியல்பை லெனின் மறுத்துள்ளார் என்று தவறாகச் சிலர் புரிந்து கொண்டுள்ளனர். அது தவறு. 

கருவடிவிலான வர்க்கப் போராட்டத்தை, முழுமையான வர்க்கப் போராட்டமாக மாறா வேண்டும். லெனின் மறுப்பது தன்னியல்பு வழிபடுவதை. அதாவது தன்னியல்பான போராட்டத்தோடு நின்றுவிடுவதையே மறுத்துள்ளார். 

தொழிற்சங்கப் போராட்டமே தன்னியல்பான போராட்டம் தான். இதனைக் கடந்து கம்யூனிச உணர்வுபெற வேண்டும். இதற்குத் தன்னியல்பை வழிபடுகிற போக்குத் தடையாக இருக்கிறது. 

பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கத்தை முடக்குவது, தன்னியல்பை வழிபடுவதாகும். 

பொருளாதாரப் போராட்டங்கள் தொழிலாளர்களின் முழுமையான விடுதலைக்கு உதவிடாது, அதனால், பொருளாதாரப் போராட்டத்தை, வர்க்கப் போராட்டமாக, முதலாளிதுவத்தைத் தூக்கி எறிவதற்கான போராட்டமாக மாற்ற வேண்டும். 

இன்று நமது நாட்டில், தொழிலாளர்களிடம் செயற்படுகிற கம்யூனிஸ்டுகள் இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தைக் கடந்து வர்க்கப் போராட்டத்திற்கு வழிகாட்டுகிறார்களா? என்பது கேள்வக்குறியாகவே இருக்கிறது. 

இதனை இங்கே விவாதம் வேண்டாம். விவாதிக்க வேண்டிய ஒன்று என்பதை மட்டும் நினைவில் கொள்வோம், சுய விமர்சனம் செய்ய வேண்டும் என்பதை மனதில் கொள்வோம். இங்கே மார்க்சியக் கல்வி பெறுவதோடு நிறுத்திக் கொள்வோம். 

தன்னியல்பு போராட்டத்துடன் நிறுத்திக் கொள்வதை லெனின் ஏன் எதிர்க்கிறார்? அதை அவரே விளக்குகிறார். 

தொழிலாளி வர்க்க இயத்தின் தன்னியல்பு மீதான வழிபாட்டுப் போக்கும், தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வு பெறுவதை மறுக்கிற போக்கும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தொழிலாளிகள் மீது, முதலாளி வர்க்க சித்தாந்தத்தின் செல்வாக்கைப் பலப்படுத்துவதாகவே அர்த்தம் என்கிறார் லெனின். 

பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கத்தைச் சுருக்கிக் கொள்வது, இறுதியில் அது தொழிலாளி வர்க்கத்தை, முதலாளித்துவ வர்க்க தத்துவத்திற்கு ஆட்படுத்துவதில் போய்முடியும். 

இந்த ஆபத்தை உணராதவரை தொழிலாளர்களுக்கு முழுமையான விடுதலைகிட்டாது. 

உலகில் இரண்டு தத்துவப் போக்கு தான் இருக்கிறது. ஒன்று தொழிலார்களுக்கான தத்துவம், மற்றது முதலாளிக்களுக்கான தத்துவம். இதைக் கடந்து நடுவழி என்று எதுவும் கிடையாது, அப்படி நடுவழியை முயற்சிக்கிற போக்கு, இறுதியில் முதலாளித்துவத் தத்துவத்துக்கே சேவை செய்யும். இது தான் நடைமுறையில் கண்ட உண்மை. 

கம்யூனிஸ்டுகளின் பணியாக லெனின் கோடிட்டுக் கூறுவதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த வகுப்பை முடித்துக் கொள்வோம். 

கம்யூனிஸ்டுகளின் பணி தன்னியல்பை எதிர்த்துப் போராடுவதேயாகும். முதலாளி வர்க்கத்தின் அரவணைப்பின் கீழ் செல்லும் இந்தத் தன்னியல்பான, தொழிற்சங்கவாத முயற்சியில் இருந்து தொழிலாளி வர்க்க இயக்கத்தைத் திசைமாற்றி, புரட்சிகரமான கம்யூனிசத்தின் அரவணைப்பின் கீழ் கொண்டுவருவதேயாகும் 

இந்த அத்தியாயம் நமக்கு என்ன சொல்கிறது என்றால், தொழிலார்களின் போராட்டம் இயல்பாகத் தன்னியல்போடு நின்றுவிடும். அது அதிகபட்சமாகச் சங்கமாக இணைந்து, முதலாளியை எதிர்த்துக் கொண்டிருப்பதோடு நின்றுவிடும். இந்தப் போக்கில் இருந்து மாறாது இருப்பது, தன்னியல்பை வழிபடுவதாகும். 

அதனால், பொருளாதாரப் போராட்டம், தொழிற்சங்கப் போராட்டம் என்பதோடு நின்றிவிடாமல், வர்க்கப் போராட்டமாக, முதலாளியை எதிர்க்கின்ற போராட்டம் முதலாளித்துவ உற்பத்தி முறையை எதிர்க்கின்ற போரட்டமாக, சமூக மாற்றத்திற்கானப் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும். 

தொழிற்சங்கப் போராட்டத்தின் அவசியத்தை உணர வேண்டும், அந்தப் போராட்டம், பொருளாதாரப் போராட்டத்தோடு நின்றுவிடாமல், அரசியல் போராட்டமாக, சமூக விடுதலைக்கான போராட்டமாக மாற வேண்டும். 

இப்படிக் கற்பிக்கிற இந்த அத்தியாயத்தை, நாம் சரியாகப் புரிந்து, சிறந்த கம்யூனிஸ்ட்டாகத் திகழ வேண்டும். 

இந்த அத்தியாத்தைப் படிக்கும் போது நிச்சயமாக நமது நாட்டு நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. 1902ல் லெனின் ருஷ்ய நிலைமையாக என்ன சொல்கிறாரோ, அதைவிட மோசமாகத் தான். நமது நாட்டு நிலை இருக்கிறது. இதை ஒப்புக் கொள்வது கடினமாக இருந்தாலும். இந்த உண்மையை உணர்ந்து, சுய விமர்சனம் இடதுசாரிகள் செய்ய வேண்டும். 

இத்தோடு இந்த அத்தியாயம் முடிந்தது.

இன்று லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் மூன்றாவது அத்தியாயத்தைப் பார்க்கப் போகிறோம். 

போன வகுப்பில் இரண்டாவது அத்தியாயம் பார்த்தோம். அதனைச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, மூன்றாம் அத்தியாயத்திற்குச் செல்வோம். 

இரண்டாம் அத்தியாயத்தின் தலைப்பு, மக்களின் தன்னியல்பும் சமூகஜனநாயகவாதிகளின் உணர்வும்.” இரண்டாம் அத்தியாயத்தில் மூன்று விஷயங்கள் பேசப்பட்டுள்ளது. மக்களின் தன்னியல்பு, தன்னியல்பு வழிபாடு, கம்யூனிச உணர்வு. 

உழைக்கும் மக்கள், தாம் சந்திக்கிற பிரச்சினைகளுக்கு உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்துப் போராடுவது தன்னியல்பு, இந்தத் தன்னியல்பு, அந்தப் பிரச்சினை ஏன் வந்தது, அதனை எப்படி முழுமையாக நீக்குவது என்பது பற்றி எல்லாம் சிந்திக்காது, அந்தப் பிரச்சினையைத் தனித்துப் பார்த்து அதனைப் போக்குவதற்காகப் போராடுகிறது. அதனால் தான் அதற்குத் தன்னியல்பு போராட்டம் என்று பெயர். 

இந்தத் தன்னியல்பு போராட்டம் ஒரு அரசியல் போராட்டம் தான், கருவடிவிலான வர்க்கப் போராட்டம் தான். ஆனால் இது கம்யூனிச அரசியல் போராட்டம் கிடையாது, முழுமையான வர்க்கப் போராட்டம் கிடையாது. 

தன்னியல்பான போராட்டம், பிரச்சினையின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாது, வடிவத்துடன் போராடுகிறது. குறிப்பிட்ட இந்தப் பிரச்சினை, எதனடிப்படையில் தோன்றியது என்பதை அது அறியாது. தொடர்ந்து வருகிற இந்தப் பிரச்சினையை நிரந்திரமாகத் தீர்ப்பதற்கு அது முயலாது. 

உண்மையில் இந்தப் பிரச்சினை முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படுகிறது. இந்தப் பிரச்சினை, திரும்பத்திரும்ப வராமல் முழுமையாக நீக்க வேண்டும் என்றால், இந்த உற்பத்தி முறையையே போக்க வேண்டும். 

ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியாகப் பார்க்கக்கூடாது. அன்றைய உற்பத்தி உறவுகளில் இருந்து தான் அனைத்துப் பிரச்சினைகளும் தோன்றுகின்றன என்கிற புரிதல் வேண்டும். 

அந்தப் புரிதல் ஏற்பட்டால் தான் கூலி உயர்வுக்காணப் போராட்டத்தை, “கூலி முறை” ஒழிப்பதற்கானப் போராட்டமாக வளர்த்தெடுக்க முடியும். கருவடிவிலான வர்க்கப் போராட்டம், முழுமையான வர்க்கப் போராட்டமாக, சமூகத்தையே மாற்றுகிற, புரட்சிகரப் போராட்டமாக மாற்றமுடியும். 

இந்தப் புரிதலை விஞ்ஞானக் கம்யூனிசம் தருகிறது. 

கம்யூனிசத்தை அறிந்த கம்யூனிஸ்டுகளால் தான், இதனைத் தொழிலாளர்களுக்குப் புரிய வைக்க முடியும். இத்தகைய புரிதலுக்குத் தடையாக இருப்பது தன்னியல்பு வழிபாடு. 

கூலி உயர்வுக்கான போராட்டத்துடன் நின்றிபோவது, தொழிற் சங்க அரசியலுடன் நின்று போவது இவைகள் அனைத்தும், தன்னியல்பு வழிபாடாகும். 

தொழிற்சங்கத்தில் இணைந்து போராடுவது ஒரு அரசியல் தான், ஆனால் அது கம்யூனிச அரசியல் அல்ல, அரு ஒரு முதலாளித்துவ அரசியல். ஏன் என்றால், கூலி உயர்வுக்காக மட்டும் போராடுவது என்பது, முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் நின்று கொண்டு போராடுவதாகும். இந்தப் போராட்டம், பழைய உற்பத்தி முறையை வீழ்த்தி, புதிய உற்பத்தி முறையை ஏற்படுத்தாது. 

அதனால் தான் இதை ஒரு முதலாளித்துவ அரசியல் போராட்டம் என்று கூறப்படுகிறது, இதனைக் கடந்து கூலி உயர்வுக்கான போராட்டத்தை, “கூலி முறை” ஒழிப்புக்கான போராட்டமாக வளர்ப்பது தான் கம்யூனிச அரசியல். 

இந்த இரண்டாம் அத்தியாயம், கம்யூனிஸ்டுகளின் அரசியலை தெளிவுபடுத்துகிறது. இதனைப் படித்து, தொழிற்சங்கவாத அரசியலைக் கடந்து, கம்யூனிச அரசியலுக்கு, தொழிலாளர்களை அழைத்துவருவது, கம்யூனிஸ்டுகளின் கடமை என்பதை உணர வேண்டும். 

இந்தக் கடமையை உணரவில்லை என்றால், இத்தகைய கம்யூனிஸ்டுகளின் போராட்டம், முதலாளித்துவ உற்பத்தி முறைக்கே சாதகமாக மாறிவிடும். 

இன்றைய வகுப்புக்குப் போவோம்:- 

மூன்றாம் அத்தியாயத்தின் தலைப்பு, தொழிற்சங்கவாத அரசியலும் சமூகஜனநாயக அரசியலும்.” 

போன தலைப்பில், தொழிற்சங்கவாதத்துக்கும் கம்யூனிசத்துக்கும் உள்ள வேறுபாட்டை, உணர்வுநிலையில் இருந்து விளக்கப்பட்டது. இந்த அத்தியாயம் தொழிற்சங்கவாதத்துக்கும் கம்யூனிசத்துக்கும் உள்ள வேறுபாட்டை அரசியலைக் கொண்டு விளக்குகிறது. 

இந்த மூன்றாம் அத்தியாயம் அத்தியாயம் 60 பக்கத்திற்கு மேல் செல்கிறது. வழக்கமாகச் சொன்னதையே, இன்றும் நினைவு படுத்துகிறேன். இந்த அத்தியாயத்தை, வரிக்கு வரி படித்து, விளக்காமல், இதில் உள்ள கருத்தின் சுருக்கத்தையும், சாரத்தையும் மட்டுமே நாம் பார்க்கப் போகிறோம். 

இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே ஒன்றை லெனின் வலியுறுத்துகிறார், அது என்னவென்றால். 

பொருளாதாரவாதிகள், அதாவது பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கப் போராட்டத்தை நிறுத்திக் கொள்பவர்கள், அரசியலை முழுதாக நிராகரிப்பது இல்லை. அவர்கள் கம்யூனிச அரசியலில் இருந்து தான் விலகுகிறார்கள். 

தொழிற்சங்கப் போராட்டம் ஒரு வகை அரசியல் போராட்டம் தான். ஆனால் அது கம்யூனிஸ்டுகளின் அரசியல் என்று கூறிவிடமுடியாது. 

பொருளாதாரப் போராட்டத்தை லெனின் மறுக்கவே இல்லை. அந்தப் போராட்டத்தை, கம்யூனிசம் பரப்புவதற்கான, தொடக்கமாகப் பயன்படுத்தும்படி வலியுறுத்துகிறார். 

கம்யூனிச கருத்துக்களைப் பரப்புவதற்கான தொடக்கப் புள்ளியாகப் பொருளாதாரப் போராட்டத்தை லெனின் கருதுகிறார். இந்தக் கருவடிவில் காணப்படும் வர்க்கப் போரட்டமான, பொருளாதாரப் போராட்டத்தை, முழுமையான – கம்யூனிச வழிப்பட்ட, வர்க்கப் போராட்டமாக மாற்ற வேண்டும். இதுதான் கம்யுனிச அரசியல். 

கம்யூனிசக் கருத்துக்கள், அந்தரத்தில் இருந்து உருவாக்கப்படவில்லை, முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாடுகளில் இருந்தும் தான் கண்டு அறியப்பட்டது. அதாவது. கம்யூனிசக் கருத்து, சமூகத்திற்கு அப்பால் இருந்து உருவாக்கப்படவில்லை. இந்த முதலாளித்துவச் சமூகத்தின். வளர்ச்சியின் விளைவாக உருவாகியது. 

இந்தக் கம்யூனிச சித்தாந்தத்தை, கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. அத்தகைய பணியை, கட்சிகளுக்கு உள்ளே இருக்கின்ற படிப்பு வட்டங்களும், வெளியில் இருக்கிற, “மார்க்சியர் மேடை” போன்ற படிப்பு வட்டங்களும், செய்து வருகின்றன. 

கம்யூனிசத்தை, அறிந்து கொண்டிருந்தால் தான், தொழிற் சங்கத்தில் ஈடுபடுகிற கம்யூனிஸ்டுகள், பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிலாளர்கள் நின்றுவிடாமல், அவர்களைக் கம்யூனிச வழிபட்ட அரசியல் போராட்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியும். 

லெனின்:- 

“கம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டத்தை நடத்துவதோடு நின்றுவிடக் கூடாது என்பது மட்டுமல்ல, பொருளாதார அம்பலப்படுத்தல்களை முறையாகத் திரட்டிச் செய்வதை, அவர்களின் நடவடிக்கையின் மிக மேலோங்கிய பகுதியாகிவிட அனுமதிக்கக் கூடாது. நாம் தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியல் கல்வி அளிப்பதையும், அவ் வர்க்கத்தின் அரசியல் உணர்வை வளர்ப்பதையும் தீவிரமாகச் செய்ய வேண்டும்” 

இந்தக் கருத்தைத்தான் லெனின் இந்த நூல் முழுதும் விளக்குகிறார். 

பொருளாதாரப் போராட்டமே போதுமானப் போராட்டம் அல்ல. அது முதலாளித்துவ உற்பத்தி முறையைத் தூக்கி எறிவதற்கான முழுமையான வர்க்கப் போராட்டமாக வளர்க்க வேண்டும், என்பதைத் தான் லெனின் வலியுறுத்துகிறார். 

அரசியல் போராட்டங்களில் மக்களை ஈடுபடுவதற்கு, பொருளாதாரப் போராட்டம் மட்டுமே காரணமாகிறதா? என்ற, கேள்விக்கு இல்லை என்பதே பதிலாகும். 

அதிகாரிகளின் லஞ்சம், ஊழல், நகர்புறத்து பொது மக்களைப் போலீஸ் நடத்தும் முறை, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைத் தாக்குவது, வரிப் போட்டு மக்களைப் பிழிவது, மதப் பிரிவினரை அடக்கித் துன்புறுத்துவது, படையாட்களை மானக் குறைவாக நடத்துவது, மாணவர்களையும், முற்போக்கு அறிவாளிகளை ஒடுக்குவது ஆகியவையும், மக்களை அரசியலை நாடச் செய்யும். 

இவைகள் பொருளாதாரப் போராட்டத்துடன் நேரடியாகத் தொடர்பு இல்லை. இருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகளும் மக்களை அரசியலில் ஈடுபட வைக்கிறது. 

புரட்சிகரமான கம்யூனிசம், சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதைத் தனது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கிறது, ஆனால் சீர்திருத்த போராட்டத்தை, விடுதலைக்காகவும், சோஷலிசத்துக்காவும் நடக்கும் புரட்சிகரமானப் போராட்டமாகச் சுருக்கிக் கொள்வதையே மறுக்கிறது. பகுதியை முழுமைக்குக் கீழ்ப்படுத்துவதையே மறுக்கிறது. முழுமை நோக்கிச் செல்லாத பகுதிப் போராட்டம், முழுமையானப் போராட்டமாக ஆகாது. 

இதுவரை மூன்றாம் அத்தியாயத்தின், முதல் பிரிவைப் பார்த்தோம். அந்தப் பிரிவின் தலைப்பு, அரசியல் கிளர்ச்சியும் அதைப் பொருளாதாரவாதிகள் கட்டுப்படுத்துவதும் 

அதாவது அரசியல் கிளர்ச்சியைப் பொருளாவாதிகள் மட்டுப்படுத்துகின்றனர். இந்தப் பொருளாதாரப் போராட்டத்தோடு நிற்கிற அரசிலை, கம்யூனிச அரசியலாக வளர்த்து எடுக்க வேண்டும். இந்த உட்பிரிவின் இறுதியில், லெனின் தெளிவாக ஒன்றைக் கூறுகிறார், அதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். 

அரசாங்கத்திற்கு எதிரான பொருளாதாரப் போராட்டம் என்பது தொழிற்சங்கவாத அரசியலாகும், இதற்கும் கம்யூனிச அரசியலுக்கும் எவ்வளவோ தூரம் இருக்கிறது

 இப்படி தான் இந்த முதல் பிரிவை லெனின் முடிக்கிறார். 

நம் நாட்டில் நடைபெறுகிற தொழிற் சங்கப் போராட்டம், லெனின் குறிப்பிடுகிற கம்யூனிச அரசியல் போராட்டமாக வளர்க்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழத்தான் செய்யும். சுய விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு, இதை நிறுத்திக் கொள்கிறேன். இங்கே விவாதம் தொடர வேண்டாம். 

அடுத்து 

மூன்றாம் அத்தியாயத்தின் இரண்டாம் பிரிவு, குறிப்பான ருஷ்ய நிலைமைகளைப் பற்றிப் பேசுகிறது, இதுவும் அறிந்து கொள்ள வேண்டியவையே, என்றாலும், சுருக்கமான பார்வைக்குத் தேவையில்லை என்று அடுத்தப் பிரிவுக்குச் செல்வோம். 

அடுத்தப் பிரிவின் தலைப்பு அரசியல் அம்பலப்படுத்தல்களும்புரட்சிகரமான நடவடிக்கைக்கான பயிற்சியும்”” இந்தத் தலைப்பே, இதில் என்ன பேசப்படுகிறது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்திவிடுகிறது. 

தொழிலாளி வர்க்கத்திடம் இயல்பாய் தோன்றும் தன்னியல்பான உணர்வு, உண்மையான கம்யூனிச அரசியல் உணர்வாக இருக்க முடியாது. கம்யூனிச அரசியல் உணர்வை, தொழிலாளர்களுக்கு, கம்யூனிஸ்டுகள் தான் ஊட்டப்பட வேண்டும். 

கம்யூனிச அரசியல் உணர்வு பெறுவதற்கு, பொருளாதாரவாதிகளைப் போல், தொழிற் சங்கப் போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளாக்கூடாது. தொழிலாளர்கள் மற்ற மக்களின் நடவடிக்கைகளையும், வர்க்க சக்திகளின் அணிச் சேர்க்கையையும் பார்ப்பதற்குத் தொழிலாளர் திறமை பெற வேண்டும் இதற்குக் கம்யூனிஸ்டுகள் உதவ வேண்டும். 

கம்யூனிச “திறமை” பெறுவதற்கு லெனின் வழிகாட்டுகிறார். அதைப் பார்ப்போம். 

சிறந்த கம்யூனிஸ்ட் ஆவதற்கு, நிலப்பிரபு, புரோகிதன், உயர்நிலை அரசாங்க அதிகாரி, விவசாயி, மாணவன், நாடோடி, ஆகியோர்களின் பொருளாதார இயல்பு பற்றியும், தம் மனத்தில் ஒரு தெளிவான சித்திரத்தை தொழிலாளிகள் பெற வேண்டும். 

இந்த “தெளிவான சித்திரத்தை” எந்தப் புத்தகங்களில் இருந்து பெற முடியாது என்று லெனின் கூறுகிறார். சுற்றி நடைபெறுவதைக் காண வேண்டும், இன்னின்ன நிகழ்ச்சிகள், இன்னின்ன புள்ளி விவரங்கள், இன்னின்ன நீதி மன்ற தீர்ப்புகள் ஆகியவற்றை, நெருங்கி சென்று பார்க்க வேண்டும். 

அப்போது தான், தொழிலாளி, தம்மை ஒடுக்குகின்ற அதே தீய சக்திகள் தாம் மற்றவர்களையும் ஒடுக்குகிறது என்று அறிவார். அப்படி அறியும் போது தான், ஆதிக்க சக்தியை ஒழிப்பதற்குப் போராட வேண்டும் என்கிற, அடக்க முடியாத ஆர்வம் தொழிலாளர்களிடம் ஏற்படும் என்று லெனின் கூறுகிறார். 

கம்யூனிஸ்ட் ஆவது கடினமான பணியே. ஒரு கம்யூனிஸ்ட் பலவற்றை அலசி ஆராய வேண்டி இருக்கிறது. இந்தப் பொருளாதாரவாதிகள், அதாவது தொழிற் சங்கவாதிகள் வெற்றி பெற்றதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், அது தொழிலாளர்களின் உணர்களுக்குத் தக்கபடி தங்களைச் சரிசெய்து கொண்டது தான். அதாவது தொழிலாளர்களின் சிந்தனைக்குத் தக்கபடி, தங்களைத் தாழ்த்திக் கொண்டது தான். 

இத்தகைய போக்கு, தொழிலாளியை. ஒரு கம்யூனிச சிந்தனை உள்ளவராக மாற்றுகிற முயற்சியைத் தடுத்துவிடுகிறது. ஆனால், புரட்சிகரக் கம்யூனிஸ்ட், தொட்டறியத் தக்க பலன்களை மட்டும் கோருகிற கோரிக்கைகளை, சீற்றத்துடன் நிராகரிப்பான். பகுதிக்கான பிரச்சினை. முழுமையில் இருந்தே வந்தது என்பதைக் கம்யூனிஸ்ட் அறிந்துளான். அதனால், பகுதிக்கான போராட்டத்தை முழுமைக்கான போராட்டமாக மாற்றுவான். 

இத்தகைய அறிவுபெற்ற கம்யூனிஸ்டுகளையே தொழிலாளர்கள் விரும்புவர்கள். அவ்வாறு விரும்பினால் தான் அவர்களுக்கு முழுமையான விடுதலை கிடைக்கும். 

தங்களது உடனடிப் பிரச்சினைகளுக்குத் தொழிலாளர்கள், வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தின் மூலம் தீர்த்துக் கொள்வர். இதனை அவர்களின் அனுபவத்தில் இருந்தே கற்றுள்ளனர். அவர்கள் கற்க வேண்டியது சோஷலிசம் தான். அதனைத் தான் தொழிலாளர்கள் கம்யூனிஸ்டுகளிடம் எதிர் பார்க்கின்றனர். 

பொருளாதாரவாதிகளான கம்யூனிஸ்டுகளைப் பார்த்து, அதாவது தொழிற்சங்கவாதத்தில் அகப்பட்டுள்ள, கம்யூனிஸ்டுகளைப் பார்த்துத் தொழிலாளர்கள் கூறுவதை, லெனின் படிம்பிடித்துக் காட்டியுள்ளார்.

லெனின்:- “தொட்டறியத்தக்க விளைவுகளை அளிக்கக்கூடியதாயுள்ள ஸ்தூலமான கோரிக்கைகளை முன்வைப்பதின் மூலம் தொழிலாளிகளாகிய எங்களிடையே நீங்கள் தூண்டிவிட விரும்பும் “நடவடிக்கையை” நாங்கள் ஏற்கெனவே செயலில்காட்டி வருகிறோம்; மிக அடிக்கடி அறிவுஜீவிகளின் எந்த உதவியும் இல்லாமலே எங்களுடைய அன்றாட, வரம்புக்குறுக்கமுள்ள தொழிற்சங்க வேலையில் இந்த ஸ்தூலமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம். ஆனால், இப்படிப்பட்ட நடவடிக்கை எங்களுக்குப் போதாது, ”பொருளாதார வகைப்பட்ட” அரசியல் எனும் நீர்த்துப்போன கஞ்சி மட்டும் ஊட்டப்பெறுவதற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல; மற்றவர்கள் தெரிந்து கொண்டுள்ள அனைத்தும் நாங்கள் அறிய விரும்புகிறோம்;

அரசியல் வாழ்க்கையின் எல்லா அம்சங்களின் விபரங்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம், ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சியிலும் தீவிரமாகக் கலந்து கொள்ள விரும்புகிறோம். இதை நாங்கள் செய்வதற்கு, அறிவுஜீவிகள் எங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருப்பதைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக்கொண்டு எங்களுக்கு இன்னமும் தெரியாமலே இருக்கும் – எங்கள் தொழிற்சாலை அனுபவத்திலிருந்தோ, ”பொருளாதார வகைப்பட்ட” அனுபவத்திலிருந்தோ நாங்கள் என்றைக்கும் தெரிந்து கொள்ளமுடியாததாக இருக்கும் – விஷயத்தைப்பற்றி, அதாவது அரசியல் அறிவு பற்றி எங்களிடம் அதிகமாகப் பேசவேண்டும்.

அறிவுஜீவிகளாகிய நீங்கள் இவ்வறிவைப் பெறமுடியும்; இதுவரை செய்ததை விட நூறு மடங்காக, ஆயிரம் மடங்காக அவ்வறிவை எங்களிடம் கொணர்வது உங்கள் கடமையாகும்; விவாதங்கள், குறு நூல்கள், கட்டுரைகள் (அவை மிக அடிக்கடி சலிப்பூட்டுவதாயுள்ளன, உடைத்துச் சொன்னதற்கு மன்னித்து விடுங்கள்) வடிவத்தில் அதை எங்களுக்குக் கொணர்வது மட்டுமின்றி நமது அரசாங்கமும் நமது ஆளும் வர்க்கங்களும் இந்த வினாடியில் எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது பற்றிய எடுப்பான அம்பலப்படுத்தல்கள் வடிவத்திலே தான் கொண்டுவரவேண்டும்.

இக்கடமையைச் செய்வதில் மேலும் ஆர்வம் காட்டுங்கள், “உழைக்கும் மக்களின் நடவடிக்கையைத் தட்டியெழுப்புவது” பற்றிய பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கிறதை விட எவ்வளவோ துடிப்புடன் செயலாற்றி வருகிறோம், “தொட்டறியத்தக்க பலன்கள்” எதையும் அளிக்கிறதாயில்லாத கோரிக்கைகளையுங்கூடப் பகிரங்கமான தெருப்போர் மூலமாக நாங்கள் ஆதரிக்க முடியும்!

எங்கள் நடவடிக்கையைத் “தட்டியெழுப்பும்” தகுதி உங்களுக்கு இல்லை. ஏனெனில், நடவடிக்கை எனும் விஷயந்தான் உங்களிடம் பூஜ்ஜியமாயிருக்கிறது.

கனவான்களே, தன்னியல்புக்கு அடி பணிவதைக் குறைத்துக் கொள்ளுங்கள், உங்கள் சொந்த நடவடிக்கையைத் தட்டியெழுப்புவது பற்றி மேலும் சிந்தியுங்கள்!”

தொழிலாளர்களுக் வேண்டியது என்னவென்பதை லெனின் தொகுத்துத் தந்துள்ளார். மேலே லெனின் கூறியதை சுருக்கமாகப் பார்ப்போம்.

தொட்டறியத்தக்க பலன்களை, பெறுவதற்கான கோரிக்கைகளை, முன்வைப்பதற்கு எங்களுக்குத் தெரியும்.

அதை நாங்கள் ஏற்கெனவே செயலில் காட்டி வருகிறோம். இதற்குக் கம்யூனிஸ்ட் என்கிற அறிவாளிகள் தேவைப்படவில்லை.

இப்படிப்பட்ட நடவடிக்கை எங்களுக்குப் போதாது, பொருளாதாரப் போராட்ட அரசியல் என்கிற, நீர்த்துப்போன கஞ்சி மட்டும் ஊட்டம் பெறுவதற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல,

அறிவாளிகள் தெரிந்து கொண்டுள்ள அனைத்தையும் நாங்கள் அறிய வேண்டும். இதையே நாங்கள் விரும்புகிறோம்.

அதனால் கம்யூனிஸ்ட் என்கிற அறிவாளிகள் ஏற்கெனவே நாங்கள் தெரிந்து வைத்திருப்பதைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக் கொண்டு, எங்களுக்கு இன்னமும் தெரியாமல் இருக்கும், எங்கள் தொழிற்சாலை அனுபவத்தில் இருந்தும், பொருளாதாரப் போராட்டத்தில் இருந்தும் என்றைக்கும் கற்றுக் கொள்ள முடியாத, கம்யூனிச அரசியலை அதிகமாகப் பேச வேண்டும்.

கம்யூனிஸ்ட்டான, நீங்கள் இவ்வறிவை பெற முடியும், இதுவரை செய்ததைக் காட்டிலும், நூறு மடங்காக, ஆயிரம் மடங்காகக் கம்யூனிச அறிவை எங்களிடம் கொண்டுவர வேண்டியது உங்களது கடமை.

இக்கடமையைச் செய்வதில் மேலும் ஆர்வம் காட்டுங்கள், உழைக்கும் மக்களின் நடவடிக்கைகளை உயர்த்துவது என்கிற பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கிறதைவிட நாங்கள் சிறப்பாக, தொழிற் சங்கத்தில் செயலாற்றி வருகிறோம்.

தொட்டறியத்தக்க பலன்களைக் கடந்து, தொழிலாளர்களது நடவடிக்கையைஉயர்த்தும்தகுதி உங்களுக்கு இல்லை. ஏன் என்றால் நடவடிக்கை எனும் விஷயந்தான் உங்களிடம் அறவே இல்லை. 

லெனின் இங்கே தொழிலாளர் பார்வையில் கூறப்பட்டது மிகவும் கடுமையான கண்ணோட்டத்தில் இருக்கிறது. மிகவும் காட்டமாகத்தான் இருக்கிறது. 

இதன் முக்கியத்துவத்தைக் கருதியே கடுமையான வார்த்தைகளை லெனின் பயன்படுத்தி உள்ளார். இதனைப் படித்துக் கம்யூனிஸ்டுகள் தெளிவு பெறவில்லை என்றால், அவர்கள் தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் நிலையில் இருந்து விலகிவிடுவர். தொழிலாளர்களுக்குப் பயன்பாடாது போய்விடுவர். மொத்தத்தில் அவர்கள், கம்யூனிச அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவர். 

அடுத்தப் உட்பிரிவின் தலைப்பு, பொருளாதாரவாதத்துக்கும் பயங்காவாதத்துக்கும் பொதுவாக இருப்பது என்ன?” 

இடதுசாரிகளிடையே காணப்படும் வலது திரிபுஇடது விலகல் ஆகிய இரண்டையும் பற்றி லெனின் பேசுகிறார். 

பொருளாதாரவாதிகளுக்கும் பயங்காவாதிகளுக்கும் – தன்னியல்புக்கு அடிபணிவது எனும் பொதுவான வேர் இருப்பதாக லெனின் குறிப்பிடுகிறார். 

பொருளாதாரவாதிகளும், பயங்கரவாதிகளும் தன்னியல்பின் வெவ்வேறு கோடிகளை வழிபடுகின்றனர். 

பொருளாதாரவாதிகள் தொழிற்சங்க இயக்கத்தின் தன்னியல்பை வழிபடுகின்றனர். 

அடுத்து பயங்கரவாதிகளைப் பற்றி லெனின்:- 

புரட்சி இயக்கத்தையும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் ஒன்றிணைப்பதற்குசக்தியோ, வாய்ப்போ, திறமையோ இல்லாத அறிவுஜீவிகளின் ஆவேசமான வெஞ்சினத்தின்தன்னியல்பை பயங்கரவாதிகள் வழிபடுகின்றனர். புரட்சிகர இயக்கத்தையும்தொழிலாளர் வர்க்க இயக்கத்தையும் இணைத்திட முடியும் என்கிற நம்பிக்கை இழந்துவிட்டவர்களுக்கு அல்லது நம்பிக்கை இல்லாதவர்களுக்குப் பயங்கரவாதத்தைத் தவிர வேறு பாதை தேடிக் கொள்வதில் கஷ்டமாக இருக்கிறது.” 

இங்கே லெனின் கூறுவது என்னவென்றால், புரட்சிகரக் கம்யூனிஸ்டுகள் என்று கூறிக் கொள்கிற, சாகசவாத கண்ணோட்டம் கொண்ட கம்யூனிஸ்டுகள், சட்ட வழியிலான போராட்டத்தில் ஈடுபடுவதற்கு, திறமை இல்லாது இருப்பதையே லெனின் குறிப்பிடுகின்றார். இது இடது விலகல், மற்றொன்று புரட்சிகரப் போராட்டத்தை மறந்துவிட்ட வலது திரிபு. இந்த இரண்டையும் லெனின் இங்கே விமர்சிக்கிறார். இந்த இரண்டு தன்னியல்புகளுக்கு மாறானது கம்யூனிச அரசியல் உணர்வு. 

தன்னியல்பைக் கடந்து அனைத்தையும் – அரசியலாக்கத் தெரிந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். தன்னியல்பியல் முடங்கிப் போகாமல், தன்னியல்பை முழுமையான வர்க்கப் போராட்டமாக வளர்த்தெடுக்கும் அரசியலை பின்பவற்றுபவர்கள் கம்யூனிஸ்டுகள். 

பயங்கரவாதிகளும், பொருளாதாரவாதிகளும் மக்களின் புரட்சி நடவடிக்கையைக் குறைந்து மதிப்பிடுகின்றனர். 

அரசியல் கிளர்ச்சியிலும், அரசியல் அம்பலப்படுத்தல்களை ஒழுங்கமைப்பதிலும் தம் சொந்த நடவடிக்கையை வளர்த்துக் கொள்வதிலும் பொருளாதாரவாதிகளும் சரி, பயங்பகரவாதிகளும் சரி கவனம் செலுத்துவதில் தவறுசெய்கின்றனர். 

சரியான கம்யூனிச அரசியலுக்கு, இந்தப் பொருளாதாரவாதமும், பயங்கரவாதமும் மாறானது மட்டுமல்ல எதிரானதும் கூட. 

அடுத்தப் பிரிவின் தலைப்பு ஜனநாயகத்துக்கு முன்னணிப் போராளி தொழிலாளி வர்க்கம்.” 

தொழிலாளி வர்க்கமே புரட்சிக்கு முன்னணிப் போராளியாகும். 

அப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசியல் பயிற்சி கொடுக்கிற, கம்யூனிஸ்டுகள் எப்படிப்பட்ட பயிற்சி பெற்று இருக்க வேண்டும் என்ற புரிதல் அவசியமானது. 

நமது நாட்டின், இன்றைய நிலையைக் கணக்கில் கொண்டால், தொழிலாளர்களிடம் காணப்படும் அரசியல் விழிப்புணர்வுகூடப் பல கம்யூனிஸ்டுகளிடம் காணப்படவில்லை என்பதே உண்மையாகும். இந்த நூலின் முந்திய அத்தியாயத்தில், லெனின் கூறியதை மீண்டும் கவனத்தில் கொள்வோம். 

தற்கால இயக்கத்தின் பலம் மக்களின் விழிப்புணர்வில் அடங்கி இருக்கிறது. இயக்கத்தின் பலவீனம் புரட்சிகரமான தலைவர்களின் உணர்வு இன்மையிலும், முன்முயற்சி இன்மையிலும் அடங்கி இருக்கிறது. 

இதை யாரும் இதுவரை சந்தேகித்தது இல்லை என்று லெனின் ருஷ்ய நிலைமையை மனதில் கொண்டு கூறியுள்ளார். ஆனால் இங்கே நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகள், எதையும் சந்தேகப் படவில்லை என்கிற மோசமான நிலையில் தான் நாம் இருக்கிறோம்

சுய விமர்சனத்தின் மூலம் இந்த இக்கடான நிலைமைகளைக் கடந்து செல்வோம். சுய விமர்சனமே நமக்குச் சிறந்த வழிகாட்டி. 

தொழிலாளர்களுக்கு, கம்யூனிச வர்க்க அரசியல், பொருளாதாரப் போராட்டத்திற்கு வெளியில் இருந்துதான், தொழிலாளர்கள் முதலாளிகள் ஆகியோர்களுக்கு இடையேயுள்ள உறவுகளுக்கு அப்பால், வெளியில் இருந்துதான் வரவேண்டும் என்று லெனின் இந்த நூலில் கூறியுள்ளார். 

ஏன் அப்படி லெனின் கூறுகிறார் என்றால், முழுமையான கம்யூனிச வர்க்க அரசியலைப் பெற வேண்டுமானால், தனிப்பட்ட முதலாளி – தொழிலாளி பிரச்சினையைத் தாண்டி, முதலாளித்துவ உற்பத்தி முறையை அறிந்திருக்க வேண்டும். 

ஆனால் இன்றைய நிலையில், தொழிலாளர்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கின்றனர், அதனால் தொழிலாளர்கள் மத்தியிலும் தொழிலாளர்கள் குடும்பத்தில் இருந்தும், தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் கம்யூனிச அறிவாளிகள் தோன்ற முடியும். 

கம்யூனிஸ்ட் என்று கூறிவிடுவதினாலேயே சிறந்த அரசியல்வாதி என்று கூறிட முடியாது. சமூகத்தில் காணப்படும் அனைத்து அதிப்தியின் வெளிப்பாட்டையும் பயன்படுத்திக் கொள்ளவும், ஒவ்வொரு கண்டன ஆர்ப்பாட்டத்தையும், மிகச் சிறிதே ஆயினும் சரி, அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது நம் பணி, என்பதை உணரத் தவறினால், அப்படிப்பட்டவர்களை அரசியல்வாதிகள் என்றோ, கம்யூனிஸ்டுகள் என்றோ கூறிவிட முடியாது என்று லெனின் கூறுகிறார். 

இந்த மூன்றாம் அத்தியாயத்தின், இறுதிப் பிரிவுக்கு வந்துள்ளோம், இந்தப் பிரிவின் தலைப்பு, மீண்டும்தூற்றுவோர்மீண்டும்மருட்டுவோர்”” 

தொழிலாளி வர்க்க இயக்கத்தை – முதலாளித்துவ ஜனநாயகத்தின் கருவியாக மாற்றுவதற்கு, மறைமுகமாக வேலை செய்பவர்களை,- லெனின் குற்றஞ்சாட்டும் போது, பொருளாதாரவாதிகள், “மீண்டும் “தூற்றுவோர்” மீண்டும் “மருட்டுவோர்”” என்று பதிலளித்துள்ளனர். 

தொழிலாளி வர்க்கத்தின் தொழிற்சங்க அரசியல் என்பது முதலாளித்துவப் போக்கான அரசியலே ஆகும். 

அரசியல் போராட்டத்தில், ஏன் அரசியல் புரட்சியிலுங்கூட, தொழிலாளி வர்க்கம் கலந்து கொள்கிறது என்பதனால் மட்டும், தன்னளவில் அதன் அரசியல், கம்யூனிச அரசியலாக ஆகிவிடாது. 

இதை மறுக்கத் தைரியம் உண்டா? என்று பொருளாதாரவாதிகளைப் பார்த்து லெனின் கேட்கிறார். 

நாமும் நமது நாட்டு பொருளாதாரவாதிகளைதொழிற்சங்கவாதிகளைப் பார்த்து லெனினைப் போலக் கேட்போம். அவர்களுக்கு மறுக்கிற தைரியம் இருக்கிறதா? என்று பார்ப்போம். 

இந்த வகுப்பு ஒரு சுருக்கமே, இதனை முழுமையாக என்ன செய்ய வேண்டும் என்ற நூலை எடுத்துப் படிக்க வேண்டும். அப்போது தான், லெனின் நேரடியாக என்ன கூறியுள்ளார், எப்படி எல்லாம் கூறியுள்ளார், என்பதை அறிய முடியும். எந்த அறிமுகமும், சாரமும் அந்த நூலை முழுமையாகப் படிப்பதற்கு உதவுவதற்கே, இந்தச் சுருக்கமே நூலாகாது. சுருக்கம் என்பது நூலை முழுமையாகப் படிக்கத் தூண்டுவதற்கே. 

லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலை நேரடியாகப் படிக்க வேண்டும். அப்போதுதான், நான் சுருக்கமாகக் கூறியது, எந்த வகையில் சரியானது என்பது நேரடியாக அறிய முடியும்.

 லெனின் வழிகாட்டுதல்படி செல்வோம், வெல்வோம்.

இன்று லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் நான்காம் அத்தியாயத்தைப் பார்க்கப் போகிறோம். 

போன வகுப்பில் மூன்றாவது அத்தியாயம் பார்த்தோம். அதனைச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, நான்காம் அத்தியாயத்திற்குச் செல்வோம். 

மூன்றாவது அத்தியாயத்தின் தலைப்பு, தொழிற்சங்கவாத அரசியலும் சமூகஜனநாயக அரசியலும்.” 

கூலி உயர்வுக்காகப் போராடுகிற தொழிற்சங்க போராட்டம், ஓர் அரசியல் போராட்டம் தான், ஆனால் அது கம்யூனிச அரசியல் போராட்டம் அல்ல. அதே நேரத்தில் லெனின், பொருளாதாரப் போராட்டத்தை மறுக்கவில்லை, அந்தப் போராட்டத்தைக் கம்யூனிசம் பரப்புவதற்கான தொடக்கமாகக் கொள்ள வேண்டும் என்று தான் கூறியிருக்கிறார். 

கூலி உயர்வுக்கான போராட்டத்தையே மேலோங்கிய போராட்டமாக, பொருளாதாரப் போராட்டத்தையே சோஷலிசத்திற்கானப் போரட்டமாகக் கருதுகிற போக்கைத் தான் லெனின் மறுகிறார். 

பொருளாதாரப் போராட்டம் மட்டுமே, மக்களை அரசியலில் ஈடுபடுவதற்குக் காரணமாகும் என்ற கருத்தையும் லெனின் மறுத்துள்ளார். 

மார்க்சியத்தை வறட்டுத்தனமாகப் புரிந்து கொண்டவர்கள் பொருளாதாரப் போராட்டம் மட்டுமே அரசியலுக்கு உகந்தது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் அது தவறானதாகும். 

ஒரு பெண், தான் பெண் என்ற காரணத்திற்காக ஒடுக்கப்படுவதை எதிர்த்து அந்தப் பெண் அரசியலில் ஈடுபடலாம். அது கம்யூனிச அரசியலாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அந்தப் பெண் தனக்கும், தமது பெண் இனத்திற்கும் ஏற்பட்ட ஒடுக்கு முறைக்கு முதலில் குரல் கொடுக்க அரசிலுக்கு வரலாம், அப்படி வந்த பிறகு, தான் ஒடுக்கப்படுவது ஆணாதிக்கத்தால் மட்டுமல்ல, வர்க்க சமூகத்தில் சொத்துடைமையின் அடிப்படையில் தான் ஒடுக்க முறை நிகழ்கிறது. அதனால் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றால், வர்க்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற புரிதலுக்கு வரலாம். 

கம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டத்துடன் முடங்கிப் போகாமல், அனைத்து ஒடுக்கு முறைக்கும் எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். 

லெனின் பொருளாதாரப் போராட்டத்தைத் தவிர்த்த மற்ற பிரச்சினைகளில் இருந்தும் மக்கள் அரசியலுக்கு வருவார்கள் என்று கூறுகிறார். 

அது என்வென்று பார்ப்போம். 

லஞ்சல், ஊழல், பாதிக்கப்பட்ட மக்களையே போலீஸ் தாக்குவது, அதிகமான வரிப்போட்டு மக்களை வாட்டுவது, மதப் பிரிவினரை அடக்கி ஒடுக்குவது, மாணவர்களையும், முற்போக்கு அறிவாளிகளையும் ஒடுக்குவது போன்ற பிரச்சினைகளும், மக்களை அரசியலில் ஈடுபட வைக்கும். 

பொருளாதாரப் போராட்டத்திற்குக் காத்துக் கொண்டிருக்காமல், மக்களிடம் ஏற்படுகிற அனைத்து அதிருப்தியையும், அரசியலாக்கத் தெரிந்தவர்களே சிறந்த கம்யூனிஸ்ட் ஆவர்கள். 

புரட்சிகரமான கம்யூனிசமானது, பொருளாதாரம் போன்ற சீர்திருத்த போராட்டத்தை, தமது நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. ஆனால், சீர்திருத்த போராட்டத்தையே சோஷலிசப் போராட்டமாகக் கருதுவதை மறுக்கிறது. 

தொழிலாளர்கள் தங்களது உடனடிப் பிரச்சினைகளுக்கு வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தின் மூலம் தீர்த்துக் கொள்வர், இதனை அவர்கள் சொந்த அனுபவத்தின் மூலம் அறிந்துள்ளனர். அவர்கள் அறிய வேண்டியது சோஷலிசம் தான். அதாவது கம்யூனிசம். அதனைத் தான் கம்யூனிஸ்டுகளிடம் தொழிலாளர்கள் எதிர் பார்க்கின்றனர். 

இடதுசாரிகளிடம் காணப்படும் வலதுஇடது திரிபுகளைப் பற்றி லெனின் கூறுகிறார். 

பொருளாதாரவாதிகளிடமும் பயங்கரவாதிகளிடமும் வெவ்வேறு வடிவகத்தில் தன்னியல்பு வழிபாடு காணப்படுகிறது. 

அவ்விருவரும் வேறுவேறு வகையான தன்னியல்பை வழிபடுகின்றனர். 

பொருளாதாரவாதிகள் தொழிற்சங்க இயக்கத்தின் தன்னியல்பை வழிபடுகின்றனர்.

இதனைத் தான் நாம் இந்த நூலின் பெரும் பகுதியில் பார்க்கிறோம். ஆனால் பயங்கரவாதிகளின் தன்னியல்பு பற்றி லெனின் மிகவும் சில இடங்களில் தான் சுட்டியுள்ளார். 

பயங்கரவாதிகள், புரட்சிகர இயக்கத்தையும் – தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் ஒன்றிணைப்பதற்குத் திறமையில்லாத அறிவுஜீவிகளின் ஆவேசமான வெஞ்சினத்தின் தன்னியல்பை வழிபடுகின்றனர். 

இந்த மூன்றாம் அத்தியாயத்தில் புரிந்து கொள்ள வேண்டியதில் முக்கியமானது என்னவென்றால், கம்யூனிச வர்க்க உணர்வையும், கம்யூனிச அரசியலையும் தொழிலாளர்கள், தங்கள் பொருளாதாரப் போராட்டத்தின் மூலம் மட்டும் அறிந்து கொள்ள முடியாது. 

பொருளாதாரப் போராட்டத்திற்கு அப்பால் வெளியில் இருந்து தான் வரவேண்டும். 

ஏன்னென்றால், தொழிலாளர்கள், அவர்களின் தொழிற்சாலைப் பிரசினைகளை மட்டும் அல்லது அவர்களின் தொழில்துறையைச் சார்ந்த பிரிச்சினைகளை மட்டுமே புரிந்து கொள்வதற்கு வாய்பு அதிகம் உள்ளது. 

இது ஒரு முழுமையின் பகுதியே, முழுமையாகப் பார்ப்பதற்கு, வரலாற்றியல் பொருள்முதல்வாதம், மற்றும் மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பற்றிய புரிதலும், அதன் அடிப்படையில் அன்றைய பொருளாதார உற்பத்தி முறை அனைத்தையும் புரிந்து கொள்ளக்கூடி அறிவும் திறமையும் தேவைப்படுகிறது. அதனால் தான் அத்தகைய அறிவு வெளியில் இருந்து வரவேண்டியதாக லெனின் கூறுகிறார். 

இது தான் மூன்றாம் அத்தியாயத்தின் சுருக்கம். 

இப்போது நான்காம் அத்தியாயத்திற்குச் செல்வோம். 

நான்காம் அத்தியாயத்தின் தலைப்பு பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்.” 

இந்த அத்தியாயம் 80 பக்கத்திற்கு மேல் காணப்படுகிறது. வழக்கம் போல் நாம் அதன் சுருக்கத்தையும் – சாரத்தையும் தான் பார்க்கப் போகிறோம். 

முதலில் பக்குவமின்மை என்றால் என்ன வென்பதைப் பார்ப்போம். 

தன்னியல்பாய் தோன்றிய பொருளாதாரப் போராட்டத்துக்கும், தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் ஒன்றாக இணைவது போன்ற வடிவங்களுக்கும் அடிபணிவதே பகுக்குவமின்மையாகும். 

அதாவது, தொழிற்சங்க அரசியலையும், கருவடிவிலான் வர்க்கப் போராட்டத்தையும் முடிவான அரசியலாகக் கருதுவது பக்குமின்மையாகும். 

இந்தப் பக்குவமின்மை, நடைமுறை செயற்பாட்டில் பயிற்சியின்மையை மட்டும் சார்ந்திருத்தால் வேறு விஷயம், இதில் கோட்பாட்டுப் பிரச்சினையும் இருக்கிறது. 

பயிற்சி இன்மை என்கிற குறைபாட்டைப் பயிற்சி கொடுப்பதின் மூலம் நீக்கிவிடலாம். ஆனால் இந்தப் பக்குவமின்மை என்கிற குறைபாடு கோட்பபாட்டுப் பிரச்சினையுடன் இணைந்துள்ளது. 

பக்குவமின்மை, பொதுவாகப் புரட்சிப் பணியின் குறுகியக் கண்ணோட்டத்தைக் குறிப்பதாக இருக்கிறது. அது மட்டுமல்லாது, இந்தக் குறுகிய தன்மையை நியாயப்படுத்தி அது ஒரு கோட்பாடாக (theory) உயர்த்திப் பிடிக்கிற முயற்சியும் அதில் காணப்படுகிறது. அதன் ஆபத்து இதில் தான் அடங்கி இருக்கிறது. இறுதியில் அது தன்னியல்பை அடிபணிவதில் போய் முடிகிறது. 

மார்க்சிய சித்தாந்தம், கம்யூனிசத்தின் பாத்திரம், அதன் அரசியல் பணி ஆகியவை பற்றிய குறுகிய கருத்தோட்டத்தைப் போக்கிக் கொள்ளாதவரை இந்தத் தன்னியல்பு வழிவாட்டில் இருந்து விடுபட முடியாது. 

இந்தப் பிரச்சினை, தூய தொழிலாளர் இயக்கத்திற்கும் முழுநேரப் புரட்சியாளர்களின் அமைப்புக்கும் உள்ள உறவின் அவசியத்தை வலியுறுத்துவதில் போய் நம்மைச் சேர்க்கிறது. 

இந்தக் கூற்றின் மூலம், தொழிலாளர்களின் இயக்கம், தொழிற்சங்கவாத போக்கினரிடம் இருந்து விடுபட்டு, புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பில் இருக்க வேண்டிய தேவை அறிந்து கொள்ள முடிகிறது. 

குறிப்பாகச் சொல்ல வேண்டுமாயின், வலது–இடது திரிபுகள் அற்ற மார்க்சியத்தின் புரட்சிகரத் தன்மையைப் புரிந்து கொண்ட அல்லது புரட்சிகரத் தன்மையை இழக்காத கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை இங்கே வலியுறுத்தப்படுகிறது. 

தொழிற்சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்தைப் பரவவிடாமல் தடுப்பதற்கு, அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கிறது. இந்தப் பகுதிப் போராட்டமான தொழிற்சங்கப் போராட்டத்தை முழுமையானதுடன் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஆளும் வர்க்கம் பல்வேறு வகையில் தடைகளை ஏற்படுத்துகிறது. 

மேலும் லெனின் ஒன்றைக் கூறுகிறார், 

காலங் கடத்தி, தொழிலாளிகளைக் காத்தருக்கும்படி, புத்திமதி அளிக்கும் எண்ணம் மட்டும், கம்யூனிஸ்டுகளான நமக்கு வராமல் இருந்தால், தன்னியல்பாக விழித்து எழுந்துவரும் உழைக்கும் மக்களின் மத்தியில் இருந்தே முழுநேரப் புரட்சியாளர்களான கம்யூனிஸ்டுகள் அதிகமாகத் தோன்றுவார்கள். 

முழுநேரப் புரட்சியாளர்களான கம்யூனிஸ்ட்டுகள் உழைக்கும் மக்களிடையே உருவாகும் போது, இயக்கத்தின் பல்வேறு பிரச்சினைகள் முடிவுக்கு வரும். 

பொருளாதாரவாதிகளின் பிரச்சினை, கம்யூனிசத்தை விடுத்து தொழிற்சங்கவாதத்துக்கு எப்போதும் நழுவிச் செல்வதில் அடங்கி இருக்கிறது. 

முதலாளிகளுக்கும் – அரசாங்கத்திற்கும் எதிராகத் தொழிலாளர்கள் நடத்தும் பொருளாதாரப் போராட்டத்தை விட, கம்யூனிச அரசியல் போராட்டம் என்பது பல்வேறுபட்ட இணைப்புகளுடன் நடத்தும் விரிவானப் போராட்டமாகும். 

இதன் காரணமாகவே, புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தவிர்க்க முடியாத வகையில் தொழிலாளர்களின் அமைப்பில் இருந்து வேறுபட்ட வகையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாகிறது

லெனின் இங்கே தெளிவாகக் கூறுவது என்னவென்றால், தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டத்தை நடத்துகிற அமைப்பைக் காட்டிலும் வேறுபட்டதான புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு, கண்டிப்பாகத் தொழிலாளர் இயக்கத்திற்குத் தேவையானது என்பதே ஆகும். 

தொழிற்சங்க இயக்கத்திற்கும் புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியிக்கும் உள்ள வேறுபாடும் – இணைப்பையும் புரிந்து கொள்ளாதவரை, தொழிலாளர்களும் கம்யூனிஸ்டுகளும் நினைக்கிற வெற்றி கிட்டாது. 

சுதந்திரம் பெற்றுள்ள நாடுகளில். தொழிற்சங்க அமைப்பும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஓன்றுகூடுதலில் பிரச்சினை இல்லை என்று லெனின் கூறியுள்ளார். ஆனால் இங்கே நம் நாட்டில் கிடைக்கின்ற சுதந்திரத்தைப் பயன்படுத்திச் செய்ய வேண்டியதை செய்துமுடித்துள்ளோமா? என்ற கேள்வி எழுத்தான் செய்கிறது? 

செய்ய வேண்டியதை செய்யாமல், காலம் சென்று கொண்டிருக்கிறது, 100 ஆண்டுகள் கடந்துவிட்டது என்று வருத்தப்பட்டால் மட்டும் போதாது. அதற்கான பணிகளை முனைப்போடு செய்திடல் வேண்டும். 

லெனின் மற்றொன்றையும் வலியுறுத்துகிறார். 

பொருளாதாரப் போராட்டத்திற்கு உதவிடும் தொழிலாளர்களின் அமைப்புத் தொழிற் சங்கங்களாகத்தான் இருக்க முடியும். 

ஒவ்வொரு கம்யூனிசத் தொழிலாளியும் முடிந்தவரை இச்சங்கங்களுக்கு உதவிவர வேண்டும், அதற்குத் தீவிரமாக வேலை செய்ய வேண்டும். இது உண்மை தான், என்றாலும், கம்யூனிஸ்டுகள் மட்டுமே இந்தத் தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கத் தகுதி பெற்றவர்கள் என்று கூறுவது நிச்சயமாக நம் நலனுக்கு உகந்ததாக இருக்காது என்று லெனின் கூறுகிறார். 

முதலாளிகளுக்கும், அரசாங்கத்துக்கும் எதிரான போராட்டத்தில் ஒன்றுபடுவதின் அவசியத்தைப் புரிந்து கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் தொழிற் சங்கத்தில் உறுப்பினராவதற்குத் தகுதிப் பெற்றவர்களே ஆவர். 

போன அத்தியாயங்களில் கூறியது போல் தொழிலாளர்களுக்கு, கம்யூனிச வர்க்க அரசியல், பொருளாதாரப் போராட்டத்திற்கு வெளியில் இருந்துதான், தொழிலாளர்கள் முதலாளிகள் ஆகியோர்களுக்கு இடையேயுள்ள உறவுகளுக்கு அப்பால் இருந்துதான் வரமுடியும். அப்படி இருக்கையில் தொழிலாளர்கள் இயல்பாகவே கம்யுனிச உணர்வை பெற்றிவிடுவர் என்று எதிர் பார்க்க முடியாது. அதற்கான பயிற்சியினை, புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர உறுப்பினர்களால் தான் கொடுக்க முடியும். பயிற்சியின் மூலம் தான் தொழிலாளர்கள் கம்யூனிச அரசியல் உணர்வைப் பெறுவர். 

பக்குவமின்மை ஏற்படுவதற்குக் காரணம், கோட்பாட்டு (theory) தொடர்பான பிரச்சினையில் உறுதியின்மை, குறுகியப் பார்வை, தன் சொந்தச் சோம்பலுக்கு மக்களின் தன்னியல்புத் தன்மையைச் சாக்காக்குவது, மக்களின் தலைவராய் இருப்பதைவிட, தொழிற்சங்கச் செயலாளர் போலத் தோன்றுவது. 

எதிரிகளுங்கூட மதிக்கத்தக்க விரிவான, தைரியமான திட்டம் உருவாக்குவதில் திறமின்மை, எதிர்படும் எதிர்ப்பை சந்திப்பதில் அனுபவமின்மை – ஆகியவை ஆகும். இப்படிப்பட்டவர் கண்டிப்பாகப் புரட்சியாளனாக இல்லாது படுமோசமான கற்றுக்குட்டித் தன்மையிலேயே தங்கிவிட்டவராவர். 

இப்படி லெனின் கூறுவிட்டு தொடர்கிறார்.. 

வெளிப்படையாக இப்படிக் கூறுவதால், தீவிர கட்சி ஊழியர் எவரும் வருத்தப்படத் தேவையில்லை. 

எனென்றால் பயிற்சி போதாமை என்கிற விஷயத்தில் தன்னையே குறை கூறிக் கொள்வதாக லெனின் கூறுகிறார். அதற்குக் காரணம் தானும் ஒரு பயிற்சியாளன் என்பதனால் தன்னையும் குறை கூறிக் கொள்கிறார். 

இப்படித் தன்னைச் சுயமதிப்பீடு செய்யாமல் எந்தக் கம்யூனிஸ்டும் தமது செயற்பாட்டில் திறமையை வலுப்படுத்திக் கொள்ள முடியாது. 

தொழிலாளிகளைப் புரட்சியாளர்களின் தரத்திற்கு உயர்த்துவது கம்யூனிஸ்டுகள் முதன்மையாகக் கடமை ஆகும். 

தொழிலாளர்களுக்கு எளிதாகப் புரியக்கூடிய இலக்கியம் வேண்டும், குறிப்பாக, பிற்பட்ட தொழிலாளர்களுக்கு மிகவும் எளிதாகப் புரியக்கூடிய ஆனால் கொச்சைப் படுத்தப்படாத இலக்கியம் வேண்டும். 

தொழிலாளியும்-புரட்சியாளனும் தன் பணியைச் செய்தவற்கு முழுமையாகத் தயார்படுத்திக் கொள்வதற்கு ஒரு முழுநேரப் புரட்சியாளாராக ஆகியே தீர வேண்டும் என்கிறார் லெனின். 

இதனைப் புரிந்து கொள்ளாது, பொருளாதாரப் போராட்டத்தோடு முடங்கிப்போயுள்ள கம்யூனிஸ்டுகள், தொழிலாளர்களால் தூக்கி எறியக்கூடிய காலம் வராமல் போகாது. 

இந்த அத்தியாயத்தின் ஐந்தாவது உட்தலைப்பு, சதிவேலைக்கானஅமைப்பும்ஜனநாயகமும்”. இதன் தொடக்கத்தில் லெனின் குறிப்பிடப்படுவதைக் கவனத்தில் கொள்ளாதவரை இந்த நூலைப் படித்து எந்தப் பயனில்லை.

தொழிலாளி வாக்கத்தின் தன்னியல்பான போராட்டத்தைப் புரட்சியாளர்களின் பலமான அமைப்பு, தலைமை வகித்து நடத்திச் செல்லாதவரை, அந்தத் தன்னியல்பான போராட்டம் அதன் உண்மையானவர்க்கப் போராட்டமாகஆகாது.” 

அடுத்த உட்தலைப்பு, உள்ளூர் வேலையும் அனைத்து ருஷ்ய வேலையும் 

இந்த உட்தலைப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

உள்ளூர் வேலைக்கும். அனைத்து ருஷ்ய வேலைக்கும் இடையே உள்ள உறவுகளைப் பற்றிப் பரிசீலிக்கிறது இந்த உட்தலைப்பு. 

உள்ளூர் ஊழியர்கள், உள்ளூர் வேலையிலேயே மிதமிஞ்சி ஈடுபடுவதினால் இயக்கம் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தை. லெனின் இதில் கூறியுள்ளார். 

ஈர்ப்பு மையம். ஓரளவுக்கு அனைத்து ருஷ்ய வேலையாக மாற்றுவது மிகவும் அவசியமானது என்கிறார். இப்படி மாற்றுவது பொருளாதாரப் போராட்டத் துறைக்குப் பொருந்தாது என்று முதல் பார்வைக்குத் தென்படும். ஆனால் இது தவறானது ஆகும். 

குறிப்பிட்ட பொருளாதாரப் போராட்டத்தின் எதிரிகள், தனித்தனி முதலாளிகளோ அல்லது முதலாளிகளின் குழுவோ ஆவர். ஆனால், பொருளாதாரப் போராட்டம் என்பது தொழிற் சம்பந்தப்பட்ட போராட்டம் ஆகும். 

ஆகவே வேலை செய்யும் இடத்தில் மட்டும் இல்லாது தொழில் வரியாகத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும். 

முதலாளிகள் அனைவரும் எப்படி ஒன்றுபட்டு வருகிறார்களோ, அதற்கு இணையாகத் தொழில் வாரியாக, தொழிலாளர்களுடைய அமைப்புகளின் ஒற்றுமை அவசியமானதாகும். இத்தகைய ஒன்றுபட்ட அமைப்பு வேலைக்குத் தேர்ச்சிநயமின்மை பெரும் தடையாக இருக்கிறது. அதாவது திறமின்மை என்று சொல்லாம். 

பகுதிப் போராட்டத்தை முழுமைப் போராட்டத்துடன் இணைக்க முடியாமைக்குக் காரணம் தேர்ச்சியின்மையே. 

அனைத்து ருஷ்யத் தொழிற்சங்கங்களுக்கு, தலைமை வகித்துச் செல்லும் திறமையுள்ள புரட்சியாளர்களைக் கொண்ட, ஒரேயொரு அனைத்து ருஷ்ய அமைப்பு இருப்பது தேவையாகிறது என்கிறார் லெனின். 

மற்ற ஊர்களில் உள்ள அமைப்புகளில் இருந்து துண்டிக்கப்பட்ட உள்ளூர் அமைப்பு ஒரு சரியான தகவுப்பொருத்த உணர்ச்சியை நீடித்து வைத்திருப்பது மிகவும் கஷ்டமானதாகும். ஆனால் வழி பிறழாது மார்க்சிய அடித்தளத்தின் மீதுநிற்கும், முழு அரசியல் போராட்டத்திற்குத் தலைமை வகிக்கும், முழுநேரக் கிளர்ச்சியாளர் பணிக் குழுவைப் பெற்று இருக்கும் புரட்சிகர ஓர் அனைத்து ருஷ்ய அமைப்பிற்கு இது போன்ற கஷ்டங்கள் இருக்காது. 

இந்த அத்தியாயத்தை மிகவும் சுருக்கமாகக் கூறிவிடலாம். அது என்னவென்றால், பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையைப் போக்குவதற்குத் தேவையான புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியமே அது. 

இவைகள் தான் இந்த அத்தியாயத்தின் சாரம். 

இத்துடன் இந்த அத்தியாயத்தின் சுருக்கம் முடிந்தது. 

இந்தச் சாரத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கலாம், கலந்துரையாடலின் மூலம் விளக்கம் பெறலாம்.

இன்று லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் ஐந்தாம் அத்தியாயத்தைப் பார்க்கப் போகிறோம். 

அதற்குமுன், போன வகுப்பில் பார்த்ததை சுருக்கமாகப் பார்த்துவிட்டு, ஐந்தாம் அத்தியாயத்திற்கு செல்வோம். 

நான்காவது அத்தியாயத்தின் தலைப்பு, “பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்.”

கம்யூனிச வழிப்பட்ட போராட்டத்துக்கு எதிரான, தொழிற்சங்கவாதம், பொருளாதாரவாதம் ஆகியவற்றைப் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். 

நான்காம் அத்தியாயத்தில் பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் அதற்கு மாறான புரட்சிகர கம்யூனிச அமைப்பு பற்றியும் பேசப்பட்டுள்ளது. 

தொழிற்சங்கவாதத்தில் காணப்படும் பக்குவமின்மையைத் தான் இந்த அத்தியாயத்தில் விமர்சிக்கப்படுகிறது. பக்குவமின்மை என்று லெனின் எதைக் கூறுகிறார் என்பதை பார்ப்போம். 

தொழிலாளர்களின் தன்னியல்பானப் போராட்டம், தங்களது கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கத்தில், ஒன்றாக இணைவது போன்ற போக்குடன், தங்களை சுருக்கிக் கொள்வதையே, தொழிற் சங்ககத்தில் ஈடுபடுகிற பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மை என்று லெனின் கூறுகிறார். 

இந்தப் பக்குமின்மையை நியாயப்படத்தி, அதையே கோட்பாடாக தூக்கிப்பிடிக்கிறப் போக்கின் ஆபத்தை லெனின் சுட்டிக்காட்டுகிறார். 

இந்தப் பக்குவமின்மை, தொழிலாளர் இயக்கத்திற்கும் புரட்சிகர கம்யூனிச அமைப்புக்கும் உள்ள உறவின் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதாவது, தொழிலாளர் இயக்கத்தை புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்க வேண்டும் என்கிற அவசியத்தை வலியிறுத்துகிறது. 

இன்னொரு முக்கியமான விஷயமும் இந்த அத்தியாயத்தில் பேசப்படுகிறது. 

தொழிற் சங்கத்தில் உறுப்பினராவதற்கு கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே தகுதியானவர் என்று கருதுவது தவறாகும். 

முதலாளிகும், அரசாங்கத்துக்கும் எதிரான போராட்டத்தில் ஒன்றுபடுவதின் அவசியத்தைப் புரிந்து கொண்ட தொழிலாளர்கள் அனைவரும், தொழிற் சங்கத்தில் உறுப்பினராவதற்கு தகுதிப் பெற்றவர்களே ஆவர். 

புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பாத்திரத்தையே இந்த அத்தியாயம் வலியுறுத்துகிறது. 

தொழிலாளர்கள், பொருளாதாரப் போராட்டத்தை கடந்து முழுமையான வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டுமனால், தொழிலாளி வர்க்கத்தின் தன்னியல்பான போராட்டத்தைப் புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்க வேண்டும். 

இப்போது இன்றைய வகுப்புக்குச் செல்வோம். 

இன்று ஐந்தாம் அத்தியாயம். இதன் தலைப்பு, “ஓர் அனைத்து ருஷ்ய அரசியல் பத்திரிகைக்கானதிட்டம்”” 

இது பிரத்யேகமான ருஷ்ய நிலைமைக்கானது, அதனால் இதனை மிகமிக சுருக்கமாகப் பார்த்தால் போதுமானது. இருந்தாலும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதான். 

கட்சி தான் பத்திரிகையை படைக்க முடியும், கட்சி அமைப்பை  ஒரு பத்திரிகையால் படைக்க முடியாது என்பது பொதுவான உண்மை, ஆனால் ரஷ்யாவின் எதார்த்த நிலைமை இதற்கு இடம் கொடுக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்யாவில் தடை செய்யப்பட்டிருந்தது. 

கட்சி அமைப்பின் சார்பாக இரண்டு முறை பத்திரிகை தொடங்கப்பட்டு தோல்வி கண்ட பிறகு தான், ஒர் அதிகாரப் பூர்வமற்ற பத்திரிகையை வெளியிடுவது என்று லெனின் முடிவெடுக்கிறார். 

இது அன்று ரஷ்யாவின் நடைமுறை அனுபவத்தில் இருந்து எடுக்கப்பட்ட முடிவு. 

இந்தப் பத்திரிகை வெறும் பத்திரிகைப் பணியை மட்டும் செய்தால் போதாது. அதாவது, அனைத்து ரஷ்யப் பத்திரிகையின் மூலமாக, பலமான அரசியல் அமைப்புகளுக்குப் பயிற்சி அளிக்கும், படியான திட்டத்தை லெனின் முன்வைக்கிறார். 

ஒரு கூட்டுப் பிரச்சாரத்தையும், கூட்டுக் கிளர்ச்சியையும், கூட்டான அமைப்பாளனாகவும் அந்தப் பத்திரிகை செயற்படுத்த வேண்டும் என்கிறார் லெனின். 

போன அத்தியாயத்தில் பார்த்தது போல், ஊள்ளூர் வேலையையும் அனைத்து ரஷ்ய வேலையையும் இணைப்பதற்கு அன்றைய நிலையில் பத்திரிகையே, ஒரு அமைப்பாளனாக செயற்பட முடியும் என்பதை லெனின் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார். 

ஒருங்கிணைப்பை பத்திகையினால் தான் இதனை செய்ய முடியும் என்று கூறுகிற போதே லெனின் மற்றொன்றையும் குறிப்பிடுகிறார். எதேனும் உள்ளூர் ஒன்றில் கட்சி ஊழியர்கள் அனைவரையும் கைதி செய்யப்படுமாயின், அந்த உள்ளூர் தனிமைப்பட்டு, துண்டித்துப் போகும். ஆனால் அனைத்து உள்ளூர் அமைப்புகளும் ஒரே பொதுவான நடவடிக்கையில்  இணைந்து இருக்கும் போது, பல பேர் கைது செய்யப்பட்டாலும், புதியத் தோழர்களை கொண்டு, மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த ஒருங்கிணைந்த பொது நடவடிக்கை துணைபுரியும். 

அதாவது உள்ளூர் கைதுகள் உடனடியாக, பொது நடவடிக்கைக்கு தெரிந்துவிடுகிறபடியால், மாற்று தோழர்களை கொண்டு, அந்த உள்ளூர் வேலைகள் தடைபடாமல் தொடரச் செய்ய முடியும். 

இத்தகைய பொது நடவடிக்கையின் மூலமே ரஷ்யாவில், உள்ள அனைத்து புரட்சிகர  அமைப்புகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்ச்சியாகவும் அதே நேரத்தில் ரகசியமாகவும் தொடர்புகளை வைத்துக் கொள்வதற்கு பயிற்சி கொடுக்க முடியும். 

உள்ளூர் நடவடிக்கைகளையும் அனைத்து ரஷ்ய நடவடிக்கைகளையும் ஒன்றிணைப்பதற்கு பத்திரிகையே, கட்சி அமைப்பாளனாக செயற்பட முடியும் என்கிற புதிய முயற்சியை சரியாக முடிவெடுத்து, செயற்படுத்திக் காட்டியுள்ளார் லெனின். 

முதலாளித்துவ நாடுகளில் காணப்படும் ஜனநாயக உரிமைகள் இல்லாத ரஷ்யாவில், இதுவே சரியான வழி என்பதை அதன் வெற்றி உறுதிப்படுத்தியது. 

இந்த இறுதி அத்தியாயத்தின் சுருக்கம் இவ்வளவு தான். 

என்ன செய்ய வேண்டும்?” என்கிற நூலின் சுருக்கத்தையும் சாரத்தையும் பார்த்துவிட்டோம். 

இந்த சுருக்கம் காணொளி வடிவத்திலும் எழுத்து வடிவத்திலும் கிடைக்கிறது. 

இதனை மீண்டும் மீண்டும் கேட்டும் படித்தும் முடித்துவிட்டு, லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” நூலை முழுமையாகப் படித்தறிய வேண்டும். 

எந்த நூலையும் சுருக்கத்தையும் சாரத்தையும் அறிந்தால் மட்டும் போதாது, அந்த நூலை எடுத்து முழுமையாக படித்து அறிய வேண்டும். 

இந்த நூலில் காணப்படும் ஐந்து அத்தியாயத்தையும் மீண்டும் சுருக்கமாகப் பாத்துவிட்டு, இன்றைய வகுப்பையும், என்ன செய்ய வேண்டும்? என்கிற நூலின் தொடர் வகுப்பையும் முடித்துக் கொள்வோம். 

முதல் அத்தியாயத்தின் தலைப்பு 1) வறட்டுச் சூத்திரவாதமும்விமர்சன சுதந்திரமும்”. 

 மார்க்சியம் வறட்டுச் சூத்திரமல்ல, மார்க்ஸ் எங்கெல்சால் வளர்க்கப்பட்ட மார்க்சியம், ஏகாதிபத்திய காலகட்டத்தில் லெனினால், புதிய நிலைமைக்கு ஏற்ப மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். ஆனால் பொருளாதாரவாதிகளான தொழிற்சங்கவாதிகள் முதலாளித்துவ வளர்ச்சியைத் தவறாகப் புரிந்து கொண்டு, இன்றைய நிலையின் வளர்ச்சிக்கு அன்றைய மார்க்சியம் பொருந்தாது, மார்க்சியம் காலாவதியாகிவிட்டது. 

இதனை ஏற்க மறுப்பவர்கள் வறட்டுச் சூத்திரவாதிகள் என்று கூறினர். அத்தோடு நில்லாமல் இதனை மறுப்பதற்கு விமர்சன சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

உண்மையில் இந்த தொழிற்சங்கவாதிகள் குறிவைத்து தாக்குவது மார்க்சிய அடிப்படைகளையே, அதனை நன்றாகப் புரிந்து கொண்ட லெனின் இத்தகையப் போக்கை கடுமையாக இந்த அத்தியாயத்தில் விமர்சித்துள்ளார். 

இந்த தொழிற்சங்கவாதிகள் உண்மையில் விஞ்ஞான கம்யூனிச அடிப்படைகளையே மறுக்கின்றனர். அதன் மூலம் இன்றைய சமூகம், சோஷலிச சமூகமாக மாறிடும் என்பதையே மறுக்கின்றனர். 

வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ சமூகத்தின் உள்முரண்பாட்டை, மார்க்சிய வழியில் அணுகாமல், தன் அக நிலையினால், முதலாளித்துவத்தில் உள்முரண்பாடுகள் இப்போது கடுமையாக இல்லை என்று கூறிவிடுகின்றனர். இது உண்மை நிலைமைக்கு மாறான கருத்தாகும். 

மார்க்சியத்தின் அடிப்படையில் உள்ள முக்கியமானதையே மறுத்துவிட்டதால் அவர்களால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் மறுத்துவிடுகின்றனர். சோஷலிசமாக சமூகம் மாறும் என்கிற இறுதி குறிக்கோளையும் மறுத்துவிடுகின்றனர். 

இத்தகைய போக்கு புதிய வகை சந்தர்ப்பவாதமாகும் என்கிறார் லெனின். 

இவர்களை மறுத்து லெனின் புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான அமைப்பு இல்லை என்று வலியுறுத்துகிறார். 

அதாவது. இந்த சந்தர்ப்பவாதிகளின் கருத்தாக்கத்தால் புரட்சிகரமான அமைப்பைக் கட்ட முடியாது. புரட்சிகரமான அமைப்பு வேண்டும் என்றால் புரட்சிகரமான கோட்பாடு வேண்டும். 

அடுத்து, இரண்டாவது அத்தியாயம். இதன் தலைப்பு, மக்களின் தன்னியல்பும் சமூகஜனநாயகவாதிகளின் உணர்வும்.” 

இரண்டாம் அத்தியாயத்தில் மூன்று விஷயங்கள் பேசப்படுகின்றன. மக்களின் தன்னியல்பு, தன்னியல்பு வழிபாடு, கம்யூனிஸ்டுகளின் உணர்வு. 

மக்களின் தன்னியல்பு என்றால் என்ன? 

கூலி உயர்வுக்கான போராட்டத்தை தன்னியல்பானப் போராட்டம் என்று கூறலாம். ஆனால் இது கம்யூனிச உணர்வு வகைப்பட்டப் போராட்டமாக ஆகாது. இந்த கூலிக்கானப் போராட்டத்தை கூலி முறை ஒழிப்புக்கானப் போராட்டமாக மாற்றுவதே கம்யூனிச வகைப்பட்ட போராட்டமாகும். 

இதற்கு மாறாக கூலி உயர்வுக்கானப் போராட்டத்தோடு நின்று போவது தன்னியல்பை வழிபடுவதாகும். 

இந்த தன்னியல்பு கம்யூனிசப் போராட்டத்துக்கு பெரும் தடையாக இருக்கிறது. 

அதனால், புரட்சிகர கம்யூனிஸ்டுகள், தன்னியல்புப் போராட்டத்தை அம்பலப்படுத்தி, கம்யூனிச உணர்வை, தொழிலாளர்களுக்கு ஊட்ட வேண்டும். அவர்களை அரசியல் வழிப்படுத்த வேண்டும். அதாவது அவர்களை முழுமையான வர்க்க உணர்வு பெறும் வகையில், வளர்த்தெடுக்க வேண்டும். 

இந்த அத்தியாயத்தில் லெனின், மக்களின் தன்னியல்புக்கும் கம்யூனிச உணர்வுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி, கம்யூனிச உணர்வை வலியிறுத்துகிறார். 

அடுத்து மூன்றாம் அத்தியாயம். இந்த அத்தியாயத்தின் தலைப்பு தொழிற்சங்கவாத அரசியலும் சமூகஜனநாயக அரசியலும்.” 

இந்த அத்தியாயத்தில் லெனின் தொழிற்சங்க அரசியலுக்கும் கம்யூனிச அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கியுள்ளார். 

பொருளாதாரப் போராட்டத்தை லெனின் மறுக்கவே இல்லை, பொருளாதாரப் போராட்டத்தோடு, தொழிற்சங்க நடவடிக்கைகளை சுருக்கிக் கொள்வதையே மறுத்துள்ளார். 

தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை தொழிலாளர்கள் நன்றாக உணர்ந்து கொள்வர்,  இந்த தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருகிற கம்யூனிச போதனையே தொழிலாளர்களுக்கு வேண்டியது, தொழிலாளர்கள் முதலாளிகள் ஆகியோர்களுக்கு இடையேயுள்ள உறவுகளுக்கு அப்பால், வெளியில் இருந்துதான் கம்யூனிச அரசியல் தொழிற்சங்கத்திற்கு வரமுடியும். 

கம்யூனிஸ்டுகள் குறிப்பிட்ட தொழிலாளர் – முதலாளி பிரச்சினையைக் கடந்து, முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாட்டை முழுமையாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் தொழிற் சங்கத்தில் கம்யூனிச வழிப்பட்ட அரசியலை நடத்திட முடியும். 

இந்த வகுப்பின் தொடக்கத்திலேயே நான்காம் அத்தியாயத்தின் சுருக்கத்தைப் பார்த்துவிட்டோம். அதனால் அதை மிகமிக சுருக்கமாக இங்கே பார்ப்போம். 

நான்காவது அத்தியாயத்தின் தலைப்பு, பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்.” 

பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மை என்று லெனின் எதைக் குறிப்பிடுகிறார் என்பதைப் பார்ப்போம். 

பொருளாதாரப் போராட்டம், தொழிலாளர்கள் பிரச்சினை அடிப்படையில் தொழிற்சங்கங்களில் ஒன்றாக இணைவது போன்ற தன்னியல்பானப் போராட்டத்தோடு நின்றுவிடுவது தொழிற்சங்கவாதிகளின் பக்குவமின்மை ஆகும். 

இந்தப் பக்குவமின்மை குறுகிய பொருளதாரப் போராட்டத்தைக் குறிப்பிடுவதோடு, அதனையே கோட்பாடாக உயர்த்திப் பிடிக்கிறது. இதன் ஆபத்து இதில் தான் அடங்கி இருக்கிறது. 

இந்த ஆபத்தின் விளைவாக நமக்குத் தெரிய வருவது என்னவென்றால், தொழிலாளர் இயக்கத்திற்கும் – புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் உள்ள உறவின் அவசியத்தை அறிந்து கொள்வதாகும். 

கம்யூனிசக் கட்சி பலமான புரட்சியாளரின் அமைப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் கூலிப் போராட்டம் என்கிற தொழிற்சங்க போராட்டத்தைக் கடந்து கூலி முறை ஒழிப்புக்கான போராட்டமாக அதை மாற்ற முடியும். 

தொழிற்சங்கத்தில் ஈடுபடுகிற கம்யூனிஸ்டுகள், கம்யூனிசத்தை தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் தொழிற்சங்க அரசியலுக்கும் கம்யூனிச அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து, சிறப்பாக செயற்பட முடியும். 

அடுத்து ஐந்தாவது அத்தியாயம், இதனை சுருக்கமாக இப்போது தான் பார்த்தோம். இருந்தாரும் அதன் சாரத்தை மட்டும் பார்ப்போம். 

இந்த ஐந்தாம் அத்தியாயத்தின் தலைப்பு, ஓர் அனைத்து ருஷ்ய அரசியல் பத்திரிகைக்கானதிட்டம்”” 

இந்த நூலின் தலைப்பே ஒரு கேள்வியை எழுப்புகிறது. என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு இந்த அத்தியாயத்தில் லெனின் பதிலளிக்கிறார். 

முதலாளித்துவ சுதந்திரம் இல்லாத ரஷ்யாவில், எதேச்சாதிகாரம் கோலோச்சும் நிலையில், கட்சி கட்டுவது, அதுவும் ரகசிய கட்சி கட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல. 

இந்த ரஷ்ய பிரத்யேக நிலைமையை கணக்கில் கொண்டு, ஒரு பத்திரிகையின் வாயிலாக, பத்திரிகையை வினியோகிப்பதின் மூலம், கட்சி நடவடிக்கைகளை ஒன்றிணைக்கலாம் என்று திட்டமிட்டார் லெனின். 

இந்தத் திட்டம் சரியானது என்பதை அக்டோபர் புரட்சி உறுதிப்படுத்தியது. 

லெனினைப் போல, அந்தந்த நாட்டு நிலைமைகளை, அந்தந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள், நன்றாக பரிசீலித்து, அதற்கு உரிய செயல்தந்திரத்தை வகுத்து செயற்பட்டால், இறுதி குறிக்கோளை நிச்சயமாக அடையலாம். 

நம் நாட்டில் நாம் வெற்றி பெற வேண்டுமானால், இந்த நாட்டின் உற்பத்தி முறையையும், அதன் வர்க்கத் தன்மையையும் ஆய்வு செய்ய வேண்டும். 

கட்சி தொடங்கி 100 ஆண்டுகள் கடந்துவிட்டன. தொடக்க நிலையில் இருந்தது போல இன்றைய நாடு இல்லை. இன்றைய நிலைமையை நன்றாக ஆய்வு செய்து, நமது நடவடிக்கையை அமைத்துக் கொண்டால், நமது வெற்றி நடையை, வெற்றியுடன் தொடங்கலாம். 

இத்துடன் இந்த வகுப்பு முடிவடைந்தது. 

ஒரு நூலைப் பற்றி வகுப்பு எடுப்பது என்பது பல நோக்கங்களைக் கொண்டுள்ளது. 

நூலை அறிமுகப்படுத்துவது, நோக்கமாகக் கொண்ட வகுப்பு என்றால் அந்த நூல் தோன்றியதற்கான் காரணம், மற்றும் அந்த நூலில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை மட்டும் பேசினால் போதுமானது. இந்த வகுப்பை ஒன்று அல்லது இரண்டு முறை கேட்டாலே அதில் கூறப்பட்டது முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். 

இன்னொன்று வரிக்குவரி வகுப்பெடுப்பது இது நீண்ட நாள் பிடிக்கக்கூடியது ஆகும். இதனை இரண்டு மூன்று முறை கேட்டால் போதாது, பல முறை, மீண்டும் மீண்டும் கேட்டால் தான் அதனை நான்றாகப் புரிந்து கொள்ள முடியும். 

மூன்றாவது அந்த நூலின் சுருக்கமும் சாரமும் ஆகும். இது நூலை வரிக்குவரி விளக்கம் கொடுக்காமல், அதன் சுருக்கத்தையும் சாரத்தையும் மட்டும் எடுத்துக் கூறுவதாகும். 

நூலையே சுருக்கிக் கூறுவதால் இந்த வகுப்பை, ஒரு முறை கேட்டால் போதாது, பலமுறை கேட்டால் தான் அதனை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். மீண்டும் மீண்டும் வகுப்பை கேட்பது அவசியமாகும். 

நமது வகுப்பு சுருக்கமும் சாரமும் ஆகும். அதனால் அது சிறிது கடினமாக இருக்கும் என்பது மறுக்க முடியாது. 

நூலை ஒரு முறைப் படித்தால், அதனை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதது போல, வகுப்புகளையும் ஒரு முறை கேட்டால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது, இதனை பலமுறை கேட்க வேண்டும். அப்போது தான் அதன் சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். சாரத்தைப் புரிந்து கொண்ட பின்பு, அந்த நூலைப் படிக்கத் தொடங்கினால், நூல் முழுமையையும் புரிந்து கொள்வதற்கு அது துணைபுரியும். 

இத்துடன் இன்றைய வகுப்பும், தொடர் வகுப்பும் முடிந்து விட்டது. 

கேள்விக் கேட்பவர்கள் கேட்கலாம், என்னாலான பதிலை அளிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *