எது மார்க்சியம்? எது மார்க்சியத்திற்கு எதிரானது-Ravinderan
எது மார்க்சியம்? எது மார்க்சியத்திற்கு எதிரானது-Ravinderan

எது மார்க்சியம்? எது மார்க்சியத்திற்கு எதிரானது-Ravinderan

எது மார்க்சியம்? எது மார்க்சியத்திற்கு எதிரானது அல்லது விலகல் என்பதை தெரிந்துகொள்வோம்.அரசு பற்றிய கோட்பாடு மார்க்சியம் முன்வைக்கும் கோட்பாடுகளில் மிகவும் முதன்மையானவைகளில் ஒன்று. அரசைப் பற்றி மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் மக்கள் தொடர்ந்து அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். மேலும் முதலாளித்துவ்வாதிகளால் குழப்பப்பட்டுள்ள விசயங்களில் அரசு பற்றிய விசயம் முக்கியமானது என்று லெனின் சொன்னார். ஆகவே அரசைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டியது மக்களுக்காக பாடுபடும் மார்க்சியத்தின் மீது நம்பிக்கைக்கொண்டவர்களின் முதன்மையான கடமையாகும். மேலும் இதனை மக்களிடம் கொண்டுசென்று அவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அரசு என்றால் ஒரு வர்க்கம் பிற வர்க்கங்களை அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்குவதற்கான வன்முறை கருவியே ஆகும் என்று மார்க்சியம் வரையறுக்கிறது. இதன் அடிப்படையில் ஒன்றை நாம் தெளிவாக உணரமுடியும். அதாவது அரசு என்பது ஒரு வர்க்கத்தின் நலன் சார்ந்த ஒரு வர்க்கத்தின் கருவியாகவே இருக்கிறது அதாவது ஒரு வர்க்கத்திற்கானதாகவே அரசு இருக்கிறது. ஆகவே இந்த அரசு எந்த வர்க்கத்திற்கான அரசு என்பதை மதிப்பீடு செய்து மக்களுக்கு புரியவைப்பதே மார்க்சியவாதிகளின் முக்கிய கடமையாகும். ஆனால் இந்தியாவில் ஆரிய, திராவிட இனவாதம் மற்றும் இந்து மதவாத அடிப்படையிலும் இந்திய அரசை மதிப்பீடு செய்து இது இந்துக்களுக்கான அரசு என்று சிலர் வரையறுக்கிறார்கள் ( ஆர்.எஸ்.எஸ், மற்றும் பா.ஜ.க.) இன்னும் சிலர் இதே இனவாதம் மற்றும் மதவாத அடிப்படையில் இந்தியாவை ஒரு தேசமாக மதிப்பீடு செயது பல தேசிய இனங்கள் உள்ளதை மறைத்துவிட்டு இந்திய தேசிய அரசு என்கிறார்கள். (காங்கிரஸ் கட்சி. ) வேறு சிலர் இதே இனவாதம் மற்றும் மதவாத அடிப்படையில் சாதியையும் ஆரிய இனத்தையும் ஒன்றாக பாவித்து சாதிய அடிப்படையில் பார்ப்பனிய அரசு என்கின்றனர் ( தி.மு.க போன்ற திராவிட கட்சிகள். ) இவர்கள் அனைவரும் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல ஆகவே மார்க்சியத்திற்கு எதிரான முறையில் இந்திய அரசை வரையறுக்கின்றனர். இவர்களது வரையறையானது முற்றிலும் மார்க்சியத்திற்கு எதிரானதாகும். இன்னும் சிலர் மார்க்சியத்தையும் இனவாதம் மதவாதம் சாதிவாதம் போன்ற அனைத்தையும் கலந்து இந்திய அரசை பார்ப்பனிய தரகுமுதலாளிய ஏகாதிபத்திய அரசு என்று வரையறுக்கிறார்கள் ( த.மா.லெ.க. ) இவர்களது சகோதரர்களும் இந்திய அரசை பார்ப்பன அரசே என்று வரையறுத்து தரகுமுதலாளிகள் என்று பெயருக்கு பேசுவார்கள். இங்கு மார்க்சியத்தின் அடிப்படையோடு இன, மத, சாதி வாத்த்தை இணைத்து கலந்து அரசை வர்க்க அரசாகப் பார்க்காமல் சாதிய அரசாக பார்ப்பது மார்க்சிய விலகலேயாகும். இந்திய அரசை வர்க்க அடிப்படையில் மதிப்பிடுபவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர் ஒரு வகையினர் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு முழு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்றும் இந்தியபெருமுதலாளிகளுக்கு அரசியல் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்றும் பொருளாதாரத்திற்காக அன்னியர்களை சார்ந்துள்ளார்கள் என்றும் இவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்றும் மதிப்பிட்டு இந்திய அரசை இறையாண்மைகொண்ட தேசிய முதலாளிகளின் அரசு என்று வரையறுக்கிறார்கள் (சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள் ) இவர்கள் இந்திய அரசை ஒரு வர்க்க அரசு என்று மார்க்சிய அடிப்படையில் சொன்னபோதும் இந்த வர்க்கத்தின் தன்மையை இவர்கள் மதிப்பிடுவதில் தவறு உள்ளது. இந்த அரசு அன்னியர்களுக்கு அடிபணிந்து நடக்கிறது என்பதற்கான சான்றுகள் பலவும் வந்துகொண்டிருக்கும் நிலையில் இவர்களும் மார்க்சியத்திலிருந்து விலகிச் செல்கிறார்கள். இதற்கு மாறாக எழுபதாம் ஆண்டுகளில் இந்திய வானில் வசந்தத்தின் இடிமுழக்கமாகத் தோன்றிய மார்க்சிய லெனினிய கட்சி இந்திய அரசை தரகு முதலாளித்துவ அரசு என்று வரையறுத்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் பல நாடுகள் கம்யூனிச நாடுகளாக மாறியது அந்த நாடுகளிலுள்ள அரசுகளும் கம்யூனிஸ்ட்டு கட்சிகளும் இந்தியா போன்ற நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தன ஆகவே இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் செல்வாக்கு வளர்ந்து காலனியாதிக்கத்திற்கு முடிவுகட்டிவிடுவார்கள் என்று அஞ்சிய ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவதாக நடித்து அவர்களின் நம்பிக்கைக்குரிய தரகு முதலாளிகளின் கட்சியான காங்கிரசின் கையில் ஆட்சியை மாற்றிக் கொடுத்துவிட்டு மறைமுகமாக அவர்களது காலனியாதிக்கத்தை பாதுகாத்துக் கொண்டனர். இதனை சரியாக மதிப்பிட்ட மாவோ மாபெரும் விவாத்த்தின்போது நாடுகள் சுதந்திரம் அடைந்ததை வரவேற்கும் அதேவேளையில் இந்த நாடுகளில் காலனியாதிக்கத்தை எதிர்த்தப் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்றும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் புதிய முறையில் காலனியாதிக்கத்தை தொடர முயற்சி செய்கிறார்கள் என்றும் சொன்னார். இதன் அடிப்படையில்தான் இந்திய மார்க்சிய லெனினிய புரட்சியாளர்கள் இந்திய அரசை தரகு முதலாளித்துவ அரசு என்று வரையறுத்தனர். இந்த வரையறைதான் மிகச் சரியானது என்பதை இந்திய வரலாறு காட்டிவிட்டது. ஆகவே எவ்விதமான சலனமும் இல்லாமல் தெளிவாக இந்திய அரசை இந்திய தரகுமுதலாளிகளின் அரசு என்றும் புதியகாலனியத்தை ஒழித்துக்கட்டி இதற்கு மாற்றாக இந்திய பாட்டாளிகளின் தலைமையில் அனைத்துவகையான ஜனநாயக வர்க்கங்களின் கூட்டு சர்வாதிகார அரசை உருவாக்கவேண்டும் என்று மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து மக்களை திரட்டிப் போராடுபவர்கள் யாரோ அவர்களே மக்களின் நண்பர்கள் ஆவார்கள். இதுதான் மார்க்சியம் மற்றவை எல்லாம் அரசு பற்றிய கோட்பாட்டில் மார்க்சிய விலகல் அல்லது மார்க்சியத்திற்கு எதிரானதே என்பதே எனது கருத்தாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *