ஊழியர் குறித்த சிக்கல்-மாவோ
ஊழியர் குறித்த சிக்கல்-மாவோ

ஊழியர் குறித்த சிக்கல்-மாவோ

ஊழியர் குறித்த சிக்கல்.
ஒரு மாபெரும் புரட்சியை வழிநடத்துவதற்குச் சிறந்த கட்சியும் முதல்தரமான ஊழியர்கள் பலரும் தேவைப்படுகிறது. 45 கோடி மக்கள் தொகையினையுடைய சீனாவில் தலைமை சிறிய குறுகிய குழுவினைக் கொண்டிருந்தாலும் கட்சித் தலைவர்களும் ஊழியர்களும் அற்ப குணமுடையோராக, குறுகிய பார்வையினை உடையவராக திறமையற்றோராக இருந்தால் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத நமது பெரும் புரட்சியினை முன்கொண்டு செல்வது என்பது சாத்தியமற்றது. சீனக் கம்யூனிஸ்ட்டு கட்சி நீண்டகாலமாக ஒரு பெரிய கட்சியாக இருந்துவந்திருக்கிறது என்பதுடன் பிற்போக்கு காலப் பகுதியின் போது இழப்புகள் ஏற்பட்டு இருப்பினும் இன்னமும் அது பெரியதாக இருக்கிறது. அது நல்ல தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் பலரையும் கொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் அது போதுமானதல்ல. நமது கட்சி அமைப்புகள் நாடு முழுவதும் கட்டாயம் திட்டமிட்டு பயிற்றுவிக்கப்பட வேண்டும். அவர்கள் மார்க்சிய – லெனினியத்தில் நல்ல அறிவையும் அரசியல் ரீதியாக தூரப் பார்வையினையும் பணியில் திறமையினையும் முழுமையான சுயதியாக உணர்வையும் தாங்களே சொந்தமாக சிக்கல்களைத் தீர்க்கும் திறமையினையும் கஷ்டங்களுக்கு மத்தியில் உறுதிப்பாட்டையும் தேசம், வர்க்கம் மற்றும் கட்சிக்கு சேவை செய்வதில் விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்ட ஊழியர்களாகவும், தலைவர்களாகவும் இருந்திட வேண்டும். கட்சியானது உறுப்பினர்களோடும் மக்கள் திரளோடும் தன் இணைப்புகளுக்காக இந்த ஊழியர்கள் மற்றும் தலைவர்கள் மீது சார்ந்துள்ளது. கட்சியானது மக்கள் திரளின் உறுதியான தலைமை மீது சார்ந்துதான் எதிரியினை தோற்கடிப்பதில் வெற்றிபெற இயலும். அத்தகைய ஊழியர்களும் தலைவர்களும் தன்னலத்திலிருந்தும், தனிநபரிய நாயகத்தனம், பகட்டு ஆரவாரம், சோம்பேறித்தனம், செயலின்மை மற்றும் குறுங்குழுவிய இறுமாப்பு ஆகியவற்றிலிருந்தும் விடுபட்டு தன்னலமற்ற தேசிய, வர்க்க நாயகர்களாக கட்டாயம் இருந்திட வேண்டும். நமது கட்சியின் உறுப்பினர்கள்; ஊழியர்கள் மற்றும் தலைவர்களிடமிருந்து அத்தகைய பண்புகளும் வேலைபாணியும் கோரப்படுகின்றன. அத்தகைய புனிதமான மரபுரிமைப் பண்பானது, லட்சியத்திற்காக தங்கள் உயிர்களை ஈந்த பத்தாயிரக்கணக்கான ஊழியர்களாலும் நமக்கு வழங்கப்பட்டது. நாம் இந்த பண்புகளைப் பெறுவது நம்மை மறுவார்ப்பு செய்வதிலும் ஒரு உயர்ந்த புரட்சிகர மட்டத்திற்கு நம்மை உயர்த்திக்கொள்வதிலும் மேலும் சிறப்பாக செய்வதும் எந்தவொரு அய்யமும் இன்றி கட்டாயமாகும். ஆனால், இதுகூட போதுமானதன்று. கட்சியிலும் நாட்டிலும் பல புதிய ஊழியர்களையும் தலைவர்களையும் கண்டுபிடிப்பதையும் கூட நமது கடமையாக கட்டாயம் கொள்ளவேண்டும். நமது புரட்சி ஊழியர்களை சார்ந்திருக்கிறது. ஸ்டாலின் கூறினாற் போன்று, “ஊழியர்களே அனைத்தையும் தீர்மானிக்கின்றனர்” (மாவோ, தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுதி – 1, பக்கம் -407, 408)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *