தண்ணீரையும் வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என நமது முன்னோர்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால், இன்றைய உலகமயமாக்கலில் மற்ற பண்டங்கள் போலவே ஏழை எளிய மக்கள் தண்ணீரையும் வாங்கி குடிக்க முடியாமல் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டுள்ளனர் என்பதனையாவது நாம் அறிவோமா?
சரி தண்ணீர் நாள் பற்றி தெரிந்து மேலே செல்வோம்.
உலகின் பல நாடுகளில் தங்களின் ஆதிக்கத்தையும், மூலதனச் சுரண்டலையும் மூர்க்கத்தனமாக நடத்தி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரையும் விட்டுவைக்கவில்லை. தண்ணீர் மனிதர்களின் அடிப்படை ‘உரிமை’ என்பதிலிருந்து மாறி அடிப்படைத் ‘தேவை’ என வரையறுக்கப்பட்டுவிட்டது. பணம் கொடுத்தால் மட்டும் கிடைக்கும் பொருளாக்கி, மக்களின் இறப்பில் இலாபம் தேடுகின்றன உலகப் பன்னாட்டு நிறுவனங்கள். இனி, ‘பணம் இருப்போருக்கே தண்ணீர் உண்டு’ என்ற கொடுமையான நிலைமையை உலக வங்கியும், உலக வர்த்தக அமைப்பும் உருவாக்கியுள்ளன.
நமது இந்திய நடுவண் அரசின் தேசிய நீர்க்கொள்கை அறிக்கையின் 13 ஆவது படி, அதில் குறிப்பிட்ட நிலைமைகளைப் பொருத்து நீராதார வசதிகளின் கட்டுமானம், அவற்றைச் சொந்தமாக்குதல், குத்தகைக்கு அளித்தல், மாற்றுதல் என்று பல்வேறு முறைகளில் தனியார் துறைக்கு வக்காலத்து வாங்கும் அரசு தண்ணீரைத் தனியார்மயபடுத்தி தனியாருக்கு வக்காலத்து வாங்குகிறது. மக்களை நீருக்காக கையேந்த வைத்துள்ளது.
உலகின் பல பகுதிகளில் நன்னீர்ப் பற்றாக்குறை, பரவலாக காணப்படுகிறது. நன்னீர் ஆதார வளங்கள் வேகமாக மாசுபாடு அடைந்து வருகின்றன. கழிவு நீர், தொழிற்சாலைக் கழிவுகள், காடுகள் அழிப்பு, வேதிப்பொருட்களின் வெளியேற்றம், மோசமான வேளாண்மை முறைகள், இயற்கையான நீர்ப்பிடிப்பு பகுதிகளின் சீரழிவு போன்றவை இதற்கு முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன. அணைகள், ஆறுகள் திருப்பிவிடப்படுதல் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆகியவை நீரின் தரத்தையும் அளவையும் பாதிக்கின்றன.
மேலும் அன்று வாசிக்க தேடிய கட்டுரையே பயன் படும்
2000 ஆம் ஆண்டு மட்டும், பன்னாட்டு நிதி நிறுவனம் தண்ணீரைத் தனியார்மயமாக்க வேண்டும் அல்லது செலவையும் திரும்பப் பெற வேண்டும் என்ற நிபந்தனை விதித்தே 12 ஆப்பிரிக்க நாடுகளுக்குக் கடனுதவி ஒப்பந்தம் செய்தது. கடனுதவி பெறுவதற்கு நீர்வினியோகத்தைத் தனியார் மயமாக்குவதாக உறுதி தர வேண்டும் என்றது உலக வங்கி தனியார் மயமாக்கத்தால் நீரின் மீதான மக்களின் சனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நீர் தனியார் மயமாக்கத்தினால் ஊழியர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது.
சூலை 2002 இல் கூடிய உலக வங்கியின் ஆட்சிமன்றக் குழுவானது, கிராமப்புற மேம்பாட்டிற்கான தனது கொள்கை குறித்து விவாதித்தது. அதன் முக்கியமான பகுதி தண்ணீரைத் தனியார்மயமாக்குவதே. பல நாடுகளில் ஏற்கனவே தண்ணீர் தனியார்மயமாக்கம் தொடங்கிவிட்டது. தென்அமெரிக்காவிலுள்ள பொலிவியா, நிகாரகுவா, ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள மொசாம்பிக், கென்யா, கானா, பர்கினபாசோ, ஈக்வடார், தான்சானியா ஆகியவை இதில் அடங்கும். பொலிவியாவில் மக்கள் போராட்டத்தை இராணுவத்தைக் கொண்டு அடக்க வேண்டியதாயிற்று.
இன்று பெட்ரோலியப் பொருட்களைப் போல எதிர்காலத்தில் நீர் பெரும் வணிகப் பொருளாக மாறும் ஆபத்து உள்ளது; அப்படியான நிலையில் தனக்குக் கிடைக்கும் லாபத்தை எப்படி அதிகரிப்பது என்பது மட்டுமே தனியாரின் எண்ணமாக இருக்கும்.
வீட்டு உபயோகம், வேளாண்மை, தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்காக வழங்கப்படும் நீருக்கு விலை வைத்து, அதை லாபத்துடன் திரும்பப்பெறுவது என்ற கோட்பாட்டை உலக வங்கி முன்வைத்துள்ளது. உயிர்க்குலத்திற்கு இயற்கை அளித்த கொடையான நீருக்கு விலை வைப்பதும் தனியாரிடம் அளிப்பதும் மனித நேயமற்றதல்லவா? இது நாடுகளின் இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்குவதுமாகும்.
நீர் ஒரு சமூக உடைமையாகும். அதனை வணிகப் பொருளாக்குவது இயற்கையின் சட்டங்களை மீறுவதாகும். ஆனால், இந்தியாவில் தனியார்துறை இதில் நுழைவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் முதலிய மாநில அரசுகள் நீர்க்கொள்கை முதலிய மாநில அரசுகளின் நீர்க் கொள்கைகளும் தனியார் துறைக்கு அதிக முன்னுரிமை அளிக்கின்றன.
சட்டிஸ்கர் மாநில அரசு ஏற்கனவே ‘சியோநாத்’ ஆற்றின் குறிப்பிட்ட பகுதியை 22 ஆண்டுகளுக்கு ‘ரேடியல் வாட்டர் லிட்’ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இதனால், அந்த ஆற்றின் கரைகளில் வாழும் மக்கள் அந்த ஆற்றின் நீரைப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டது. ஆந்த ஆற்றையே நம்பி வாழ்ந்த மீனவர்களையும் மீன்பிடிக்கக்கூடாது என்று அந்த தனியார் நிறுவனம் தடுத்துவிட்டது. பெரும் போராட்டத்திற்கு பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டது.
பிற உயிரினங்களையோ, மக்களையோ பாதிக்காத வகையில் நாம் நீரைப் பயன்படுத்த வேண்டும். நீரை லாப நோக்கோடு விற்பனை செய்வதும் இயற்கையின் கொடையில் ஏழைகளின் பங்கை மறுப்பதும் மனித உரிமை மீறலாகும். நீர் என்பது அடிப்படை மனித உரிமை என்பதால் அதன் நிர்வாகம் பொதுநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, சுவீடன், நெதர்லாந்து முதலியவற்றில் நீர் வினியோகம் பொதுத்துறையின் கீழ் உள்ளது.
ஆனால், தம்மிடம் கடன் வாங்கும் நாடுகளிடம், பொதுத்துறை திறனற்றது என்று கூறி தனியார் மயமாக்கத்தினை வலியுறுத்துகின்றன. உலக வங்கி போன்றவை, அரசாங்கமே நீர் கட்டமைப்பை இயக்க வேண்டும் எனவும், நிர்வகிப்பதற்கான முழுத்தொகையும் மக்களிடமிருந்து திரும்ப வசூலிக்க வேண்டும் எனவும் கட்டளையிடுகின்றன.
‘நீரை ஓர் சமூகப் பண்பாட்டுச் சாதனமாகக் கொள்ள வேண்டுமே தவிர வணிகப்பொருளாக அல்ல’ – என்கிறது, ஜ.நா.பொருளாதார பண்பாட்டு, சமூக உரிமைக்குழு! இது, 1948-ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பிரகடனத்தை வெளியிட்டது. அதில், உலக மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு, சுகாதாரம், குடும்ப நலவாழ்வு, வேலை செய்யும் உரிமை, நல்ல வீடு, மருத்துவ வசதி போன்றவை வழங்கப்பட வண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நீர் என்பது மனிதனின்அடிப்படை உரிமை என்பதற்குப் பதிலாக, அடிப்படைத் தேவை என்று கூறப்படுகிறது. உரிமை என்றால் அதனை ஒவ்வொரு நபருக்கும் அளிப்பது, உறுதி செய்வது ஒவ்வொரு அரசினதும் கடமை என்றாகிவிடும். தேவை என்றாலோ அப்படியல்ல, இருக்கிறது விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்கிற கதையாகிவிடும்.
பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறிக்கும், கொள்ளைக்கும் துணை போகும் அரசுகளுக்கு மக்களைப் பற்றி என்ன கவலை? அருந்துவதற்குக் குடிநீர் இல்லாத, பல நாடுகளின் கிராமங்களில்கூட பெட்டிக்கடைகளில் ‘கோகோ கோலா’ விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க வணிகப் பிரதிநிதியான மிக்கி கண்டோர் 1993-ஆம் ஆண்டு “நீர் வணிகப் பொருளாகும்போது, சரக்கு வர்த்தகத்திற்குப் பொருந்துகிற ஒப்பந்தத்தின் அனைத்துப் பிரிவுகளும், நீருக்கும் பொருந்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
1998-ஆம் ஆண்டு வாஷிங்டனில் நடந்த கூட்டத்தில் உலக நீர் ஆணையத்தின் தலைவராகவும், உலக வங்கியின் துணைத் தலைவராகவும் விளங்கும் டாக்டர். இஸ்மாயில் செராஜில்டன், “21-ஆம் நூற்றாண்டில் ஏற்படும் போர்கள் நீருக்காகவே இருக்கும்” என்றார். அவரது கூற்று மெய்ப்படும் நிலையில் உலகம் உள்ளது.
தனியார் நிறுவனங்கள் தமது இலாபத்தை அதிகரிப்பதற்கான நீண்ட காலச் சலுகைகளைப் பெற முயலுகின்றன. இது ஊழலைத் தூண்டுகிறது. இதற்காக, தனிநபரோ அல்லது கட்சியோ அல்லது அரசியல்வாதியோ அல்லது அதிகாரியோ கையூட்டுப் பெறுகின்றனர். வளரும் நாடுகளில் பொதுச் சேவைத்துறைகளில் தனியார் மயமாக்கம் நடைமுறைப்படுத்தப்படும்போது இத்தகைய ஊழலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தனியார்மயமாக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் தண்ணீர்க் கட்டணம் அதிகரித்துள்ளது. தனியார்மயமாக்கத்தின் முக்கிய பாதிப்பு, விலை அதிகரிப்பே என்றபோதிலும், சுற்றுச் சூழலிலும் சேவைத்தரத்திலும்கூட இது எதிர்மறை வினாவையே உருவாக்குகிறது.
தனியார் நிறுவனங்கள் நீரைச் சேமித்து, கோடை காலத்தில் அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. தனியார்மயமாக்கத்தில் மற்றொரு பொதுவான சிக்கல் பொறுப்பின்மையாகும்.
தண்ணீர் தனியார் மயமாக்கத்தை மருத்துவர்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர். “மனித வாழ்விற்கும், சுகாதாரத்திற்கும் நலவாழ்விற்கும் தூய நீர் அவசியம் தேவை”-என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், பொதுசுகாதாரத்தை மேம்படுத்த அனைத்து வீடுகளுக்கும் போதுமான, தொடர்ந்த நீர் வினியோகம் தேவை. இணைப்பு துண்டிக்கப்படும்போது இது பெரிதும் பாதிக்கப்படுகிறது.
நீர் பொதுவானதாகப் பாதுகாக்கப்பட வேண்டும். நமக்காக மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைக்காகவும்தான். நீர் பெருமளவு உறிஞ்சப்பட்டு எடுக்கும் பகுதிகளில் நடுத்தர நிலநடுக்கம், காலநிலை மாற்றம் முதலியவை ஏற்படும். மண்ணரிப்பு, நீர் சேறாகிக் கலங்குதல் போன்றவற்றால் ஆறுகள் மற்றும் ஏரிகளின் உயிரியல் உற்பத்தித் திறன் குறைகிறது. நீர்ப்பெருக்கால் காடழிவு, வேளாண் நிலம் இழப்பு, கானுயிர்களின் வாழிடங்கள் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. மீனினங்களின் வாழிடங்கள் அழிகின்றன. நன்செய் நிலம், தண்ணீர்ப் பாசனப் பகுதிகள் அழிக்கப்படுகின்றன. நீரின் வெப்பநிலையும் தரமும் குறைகிறது. நீரோட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படுவதால் சால்மன் மீன்களின் முட்டையிடுதல் போன்ற உயிரியல் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. நீரோட்டம் குறைவது உப்பேரி மற்றும் கடலின் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நல்ல நீருக்கான மாற்று ஆதாரங்கள் உருவாக்கப்பட வேண்டும். மழை நீரைத் தேக்கி வைத்தல், கடல்நீரை சுத்திகரித்தல், நீரை மறு சுழற்சி செய்தல் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். நாடுகள் நீர்பிடிப்புப் பகுதிகளிலுள்ள காடுகளை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஒப்பந்தத்தைப் பெற விண்ணப்பித்திருந்த இரசிய நாட்டு நிறுவனத்திடமிருந்து உயர் அதிகாரிகள் 50 கோடி ரூபாய் இலஞ்சம் கேட்ட விவகாரம் இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது.
தற்போது உலக வணிக நிறுவனங்களுக்கு, நீர் ஒரு பெரிய வணிகப் பொருளாகிவிட்டது. அதிகரித்துவரும் நீர்த்தட்டுப்பாடும், தேவையும் நீருக்கான சந்தையை எல்லையற்றதாக்குகிறது. நீர்ச்சந்தையில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளவை பிரான்சைச் சேர்ந்த விவரண்டியும், சூயசுமாகும். இவை 120 நாடுகளில் நீராட்சி நடத்துகின்றன.
உலகம் முழுவதும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் கிராமப்புறங்களில் நிலத்தை வாங்கி, அதிலிருந்து நீரை எடுத்து விற்பனை செய்துவருகின்றன. தங்களது எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு பெருமளவில் நிலத்தை வாங்கிக் குவிக்கின்றன.
பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம் ஏழைகளுக்கு நீர் வழங்குவதோ, நியாயமாக, நேர்மையாகத் தொழில் செய்வதோ அல்ல. தாம் ஆதாயம் அடைவது மட்டுமே! ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் புட்ரோஸ் காலி, “மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்து போர் ஏற்படுவதாக இருந்தால் அது நீருக்கான தாகத்தான் இருக்கும்”- என்றார்.
கிராமங்களில் மக்கள் ஒரு குடம் நீருக்காக பல மைல்கள் அலைந்தும், பல மணிநேரம் செலவழித்தும் வருகின்றனர். ஆனால் உலக மயத்தின் கொள்கைகளின் காரணமாக, இந்தியாவில் கேளிக்கைப் பூங்காக்களும், நீர் விளையாட்டுகளும் பெருகி வருகின்றன. இந்த நீர் விளையாட்டுகளுக்கு தேவையான பல லட்சம் லிட்டர் தண்ணீர் நிலத்திலிருந்து உறிஞ்சப்படுகிறது.
நீர் பெறும் உரிமையை மக்களின் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்கான நீர் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தண்ணீரைத் தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கக் கூடாது.
– பி.தயாளன் (கீற்று இணையதளத்திலிருந்து).