ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்

ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்

SUNDAY, 13 SEPTEMBER 2009 09:23 HITS: 6655 SECTION: புதிய கலாச்சாரம் – நூல்கள்

இது தேர்தல் நாளன்று எழுதி முடிக்கப்பட்ட கட்டுரை. தமிழகத் தேர்தல் முடிவுகளோ, அனைத்திந்தியத் தேர்தல் முடிவுகளோ எப்படி அமையக் கூடும் என்ற ஊகமோ, இப்படி அமைய வேண்டும் என்ற விருப்பமோ எமது கட்டுரையின் பார்வையைத் தீர்மானிக்கவில்லை. இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படியிருப்பினும் அவை ஈழ மக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் வழங்கப் போவதில்லை என்பதே நாங்கள் முன்வைத்து வரும் கருத்து.

எனினும் இக்கட்டுரை அச்சுக்குப் போகும் தருணத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. இந்திய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி, இது காங்கிரசு தி.மு.க. கூட்டணியினரே எதிர்பார்த்திராத வெற்றி. பிரதமர் பதவிக் கனவில் மிதந்து கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கோ இது பேரிடி.

ஜெயலலிதா கூட்டணிக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரம் செய்த ஈழ ஆதரவாளர்களுக்கும் இந்த முடிவுகள் நிச்சயமாக பலத்த அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். மத்தியில் காங்கிரசு தோற்கடிக்கப்பட்டு, பாரதிய ஜனதா தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால், சிங்கள அரசுக்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவை நிறுத்திவிட முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த நம்பிக்கை பொய்த்து விட்டது.

தமிழக மக்கள் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பொய்த்து விட்டது. ஈழத் தமிழர்க்கு ஆதரவாகத் தமிழகமெங்கும் ஒரு எழுச்சி நிலவுவதாகவும், இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தின் எழுச்சியை விடவும் வலிமையான எழுச்சியை மக்கள் மத்தியில் காண்பதாகவும் அவர்கள் கூறி வந்ததையும் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கவில்லை.

இந்த வெற்றியை கருணாநிதியால் விலைக்கு வாங்க முடிந்திருக்கிறது. ஈழத் தமிழர்களின் எதிர்காலம் எக்கேடு கெட்டு அழிந்தாலும், தனது வாரிசுகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் குறியாக இருந்த கிழட்டு நரி கருணாநிதி, பரிதாபத்துக்குரிய ஏழைத் தமிழர்களை 200, 300க்கு விலைக்கு வாங்கிவிட்டார். தமிழ் இனத்துக்குத் தான் ஏற்கெனவே செய்த துரோகம் போதாதென்று மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தில் மக்களையே விலைக்கு வாங்கியிருக்கிறார் கருணாநிதி எனும் கொடூரன்.

இருப்பினும், தமது தோல்விக்குப் பணபலம், கள்ள ஓட்டு என்பன போன்ற காரணங்களைக் கூறும் அருகதை ஜெயலலிதா, பா.ம.க., ம.தி.மு.க. போலி கம்யூனிஸ்டுகள் போன்றோருக்குக் கிடையாது. இவர்கள் அனைவரும் தம் சக்திக்கேற்ப இத்தகைய முறைகேடுகள் அனைத்தையும் செய்பவர்கள்தான். மேலும், இவையெல்லாம் இல்லாத தேர்தல் எப்போதும் இருந்ததில்லை. இவை தேர்தல் எனும் ஆட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட முறைகேடுகளாக மாற்றப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்ட ஈழ ஆதரவாளர்களை இத்தகைய சமாதானங்கள் திருப்தி அடைய வைக்கின்றன என்றால், இதை ஒரு வசதியான சுயமோசடி என்றுதான் சொல்ல வேண்டும்.

ஈழ ஆதரவாளர்களின் தீவிரப் பிரச்சாரம், வலிமையான கூட்டணி, ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் மக்களின் மனோபாவம் என்பன போன்ற காரணிகளையெல்லாம் தாண்டி காங்கிரசு தி.மு.க. கூட்டணிக்குத் தமிழக வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால், தமிழக மக்களின் இன உணர்வை எப்படி மதிப்பிடுவது? ஒரு ரூபாய் அரிசி, வண்ணத் தொலைக்காட்சி, பணம், சாதி, நலத்திட்டங்கள் போன்ற எந்தக் காரணத்துக்காக தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று கொண்டாலும், அதிலிருந்து கிடைக்கும் விடை ஒன்றுதான் தமிழனுக்கு இன உணர்வில்லை, சொரணையில்லை. இந்த விடை புதியதல்ல. தமிழுணர்வாளர்கள் எனப்படுவோர் தமிழக மக்கள் மீது தேவைப்படும் போதெல்லாம் வைக்கும் குற்றச்சாட்டுதான் இது. ஒருவேளை இந்தத் தேர்தலில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றிருந்தால், “தமிழன் ஏமாளியல்ல என்பதை நிரூபித்து விட்டான்” என்பன போன்ற வீரவசனங்களை நாம் கேட்க நேர்ந்திருக்கும்.

ஆனால் உண்மை இந்த இரண்டு முனைகளிலிருந்தும் நெடுந்தூரத்தில் இருக்கிறது. ஜெயலலிதாவையும் ராமதாசையும் தாங்கள் நம்பியதைப் போலவே தமிழர்களும் நம்பவில்லை என்ற காரணத்துக்காக அவர்களை சொரணையற்றவர்கள் என்று குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, தனி ஈழப் பிரகடனத்தை வெளியிட்ட ஜெயலலிதா, போரை நிறுத்துவதற்கும் ஈழத் தமிழ் மக்களைக் காப்பதற்கும், அறிக்கை விடுவதற்கு மேல் இனி வேறு ஏதாவது செய்யப்போகிறாரா என்ற கேள்விக்கு ஈழ ஆதரவாளர்கள் விடை சொல்ல வேண்டும்.

போயஸ் தோட்டத்தின் நெடுங்கதவுகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சொர்க்கவாசல் திறந்து தரிசனம் எப்போது கிடைக்கும் என்பது கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கே தெரியாதபோது அவர்களை நம்பியிருக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கு எப்படித் தெரியும்?

அடுத்து அமெரிக்கத் தூதரகத்தின் கதவுகளைத் தட்டத் தொடங்கி விட்டார் நெடுமாறன். உலக மக்களின் எதிரியும் ஈராக், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பல இலட்சம் மக்களைப் படுகொலை செய்துவரும் ஆக்கிரமிப்பாளனுமான அமெரிக்க வல்லரசின் அதிபர் ஒபாமாவுக்குப் பூங்கொத்து கொடுப்பதற்கு! ஒபாமாவால் ஒப்புக்கு விடப்பட்ட ஒரு அறிக்கைக்கு இத்தகைய அடிமைத்தனமான மரியாதை!

கருணாநிதி, சோனியா, அத்வானி, ஜெயலலிதா… கடைசியாக ஒபாமா! இந்திய மேலாதிக்கத்தையோ, அமெரிக்க வல்லரசையோ அம்பலப்படுத்தாமல், அவர்களை எதிர்த்துப் போராடாமல், அவர்களுடைய தயவில் விமோசனம் பெற்றுவிடலாம் என்று நம்புகிறவர்கள், மக்கள் மீது நம்பிக்கை வைக்காததில் வியப்பில்லை.

பிழைப்புவாதிகளையும் பாசிஸ்டுகளையும் தாங்கள் நம்பியது மட்டுமின்றி, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்குமாறு மக்களிடமும் பிரச்சாரம் செய்தார்கள் ஈழ ஆதரவாளர்கள். உள்ளூர் பிரச்சினைகள், சாதி, ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி முதலான பல்வேறு காரணங்களால் ஆளும் கட்சிகள் மீது மக்களுக்குத் தோன்றியிருக்கக் கூடிய அதிருப்தியை, ஈழ ஆதரவாக அப்படியே மடைமாற்றி விட முடியும் என்று கணக்கு போட்டார்கள். அந்தக் கணக்கு பொய்த்து விட்டது.

இன்று கருணாநிதி அணி பெற்றிருக்கும் வெற்றியை, காங்கிரசின் ஈழக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கொள்வது எந்த அளவுக்குத் தவறானதோ, அதேபோல, ஜெயலலிதா அணி வென்றிருந்தால், அந்த வெற்றியை ‘ஈழ ஆதரவு அலை’ என்று வியாக்கியானம் செய்வதும் உண்மைக்குப் புறம்பானதாகவே இருந்திருக்கும்.

தாங்கள் அளித்த வாக்குகள் தந்த அதிகாரத்தையும், தாங்கள் வழங்கிய வரிப்பணத்தையும் இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகப் பயன்படுத்தும்போது, அது குறித்த உணர்வின்றி இருக்கிறார்கள் தமிழ் மக்கள் என்பது வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய உண்மை. இந்த உண்மை தெரிந்திருந்தும் அதனை ஈழ ஆதரவாளர்கள் அங்கீகரிக்கவில்லை. தமிழகமே பொங்கி எழுந்து நிற்பதாகப் புனைத்துரைத்தார்கள். ஜெயலலிதாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அந்தப் புனைவை உண்மையாக்கிவிடலாமென முனைந்தார்கள். அந்த முயற்சிதான் தோல்வியடைந்திருக்கிறது.

ஈழப் பிரச்சினையின்பால் அனுதாபம் கொண்டிருந்த மக்களும்கூட ஜெயலலிதா அணியினர் மீது கடுகளவும் நம்பிக்கை கொள்ளவில்லை. ‘இலட்சக்கணக்கில் கூட்டம் கூட்டி, மாநாடு நடத்தும் இந்தக் கட்சிகளுக்கு ஈழப் பிரச்சினையில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் தமது போராட்டம் மூலம் கருணாநிதி அரசை நிலைகுலைய வைத்திருக்க முடியும். பிணத்தைக் காட்டி ஓட்டுப் பொறுக்குவதைத் தவிர இவர்களுக்கு வேறு நோக்கமில்லை’ என்பதை மக்கள் தெளிவாகவே புரிந்து வைத்திருந்தனர். மக்களிடம் இருந்த இந்தத் தெளிவுகூட, மார்க்சிய லெனினியவாதிகள் என்றும் பெரியாரிஸ்டுகள் என்றும் கூறிக் கொண்டோரிடம் இல்லை என்பதே உண்மை.

இந்திய மேலாதிக்க எதிர்ப்பு, தேசிய இனங்களின் தன்னுரிமை என்ற அரசியல் முழக்கங்களின் கீழ் மக்களை அணிதிரட்ட முயற்சிக்காமல், ஈழப் படுகொலை தமிழக மக்களிடம் தோற்றுவித்த அனுதாப உணர்வை, அப்படியே குறுக்கு வழியில் இனவுணர்வாக உருமாற்றி விடலாமென ஈழ ஆதரவாளர்கள் முயன்றார்கள். அந்த முயற்சிதான் தோல்வியடைந்திருக்கிறது.

சாகச வழிபாடும் சரி, இத்தகைய சந்தர்ப்பவாத வழிமுறைகளும் சரி, அவை மக்களுடைய அரசியல் பங்கேற்பையும், முன்முயற்சியையும் மறுப்பதுடன் அவர்களை வெறும் பகடைக்காய்களாகவே கருதுகின்றன. சூதாட்டத்தின் தோல்விக்குப் பகடைக்காய்களை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்?

இந்தத் தேர்தலில் பல வகைப்பட்ட ஈழ ஆதரவாளர்கள் ஜெயலலிதாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாக்கு சேகரித்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அணி வென்றிருக்கும் பட்சத்தில் இவ்வெளியீடு அதிகம் பயனுள்ளதாக இருந்திருக்கக் கூடும். தற்போது ஜெயலலிதா தோற்றுவிட்டாரெனினும், சந்தர்ப்பவாதம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதுதான் இந்த வெளியீட்டின் இலக்கு.

******

ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான கொடிய இன அழிப்புப் போரின் இறுதித் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது சிங்கள இராணுவம். மிகக் குறுகிய நிலப்பரப்பிற்குள் சுற்றிவளைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவும், மருந்தும் இல்லாமல் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார்கள். “”புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை தோற்றுவித்துள்ள “மனிதப் பேரழிவு’ குறித்து விவாதிக்க வேண்டும்” என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன், பிரான்சு, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை.”இத்தகைய முயற்சிகள் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கவே பயன்படும் என்பதால், இவற்றைக் கடுமையாக எதிர்ப்போம்” என்று கூறியிருக்கிறது இலங்கை அரசு.

“இலங்கை இராணுவத்துக்கு எதிராக நேரடியான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட வேண்டும்” என்று ஒபாமாவிடம் கோரிக்கை வைத்து வெள்ளை மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது, “இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்’ எனும் அமைப்பு. அடுத்த இரண்டு நாட்களுக்குள் சுமார் 3.5 சதுர கி.மீ பரப்புள்ள பகுதியிலிருந்து புலிகள் இயக்கத்தினரை முற்றிலுமாக அப்புறப்படுத்தி விடுவோம் என்று அறிவித்திருக்கிறது இலங்கை இராணுவம்.

தமிழகமோ மக்களவைத் தேர்தல் மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறது. மடிந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு இந்த மக்களவைத் தேர்தல், ஏதோ ஒரு மாற்றத்தை வழங்கப்போவதைப் போன்றதொரு மயக்கம் தமிழ் மக்களுக்கும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் ஊட்டப்பட்டிருக்கிறது.

கொள்கைகள் அற்றுப்போன தேர்தல் களத்தில் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு ஒரு கொள்கைக் கோவணமாக இன்று பயன்பட்டு வருகிறது ஈழம். கொல்லப்படும் ஈழத்தமிழ் மக்களின் உடல்களோ, தமிழக மக்களின் பரிதாப உணர்ச்சியைத் தூண்டி, பதவிப்பிச்சை கேட்பதற்கு ஓட்டுப்பொறுக்கிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகிவிட்டன. குறைந்தபட்சம் ஒரு போர்நிறுத்தத்தைப் பெற்றுத் தருவதற்குக் கூட ஓட்டுப்பொறுக்கிகள் ஈழ மக்களுக்குப் பயன்படவில்லை. ஈழமக்களின் அவலம்தான் இவர்கள் பதவி நாற்காலிகளைப் பிடிப்பதற்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஈழப்படுகொலையை நிறுத்துமா இந்தத் தேர்தல்?

1991 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கு ராஜீவ் காந்தியின் சிதைந்த உடலைப் பயன்படுத்திக் கொண்டார் ஜெயலலிதா. புலிகளை மட்டுமின்றி, கருணாநிதியையும் ராஜீவ் கொலைக்காகக் குற்றம் சாட்டி, அந்த அனுதாப அலையில் நீந்திப் பதவியைக் கைப்பற்றினார். இன்று ஈழமக்களின் சடலங்கள் ஜெயலலிதாவின் தேர்தல் துருப்புச் சீட்டாகி விட்டன.

அன்று செய்யாத குற்றத்துக்காகத் தேர்தலில் “தண்டிக்கப்பட்ட’ கருணாநிதி, இன்று செய்த குற்றத்துக்குத் தண்டனையை எதிர் நோக்கிக் காத்திருக்கிறார். தமிழால் பிழைத்த கருணாநிதியின் முகத்திரையைக் கிழிப்பதற்கு, தமிழினப் பிரச்சனையே வந்து வாய்த்திருப்பதுதான் கவித்துவ நீதி போலும்!

“இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழ் ஈழம் அமைத்தே தீருவேன்” என்று தனது தேர்தல் பிரச்சாரத்தினூடாக ஜெயலலிதா வீசிய குண்டை சற்றும் எதிர்பார்க்காத கருணாநிதி, ஈழத்தமிழ் மக்களுக்காகத் தன்னாலியன்றதைச் செய்ததாகவும், இனியும் தனி ஈழம் அமைய தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

சிங்கள அரசோ ஜெயலலிதாவின் ஈழப்பிரகடனம் குறித்து சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. தமிழ் ஈழம் அமைவதை இந்தியாவின் எந்தக் கட்சியும் விரும்பவில்லை என்றும், ஆட்சிகள் மாறினாலும் இந்திய அரசின் இந்தக் கொள்கை மாறப்போவதில்லை என்றும், 10.5.09 அன்று ராஜபக்சே கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், “நாற்பது தொகுதிகளையும் தமிழக மக்கள் தனக்கு வழங்கினால், பிரதமர் பதவியே தன் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்றும், அடுத்த கணமே ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழத்தை பிச்சை போடத் தயார் என்றும்’ அறிவித்திருப்பதன் மூலம், தனது அரியணையின் காலில் ஈழத்தைப் பிணைத்து விட்டார் பார்ப்பன ஜெயலலிதா. ஜெயலலிதாவின் கூட்டாளிகள் இதனை ஆமோதிக்கின்றனர். ஈழத்தமிழ் மக்களின் கையறுநிலை, ஜெயலலிதாவின் மீது நம்பிக்கை வைக்குமாறு அவர்களைத் தள்ளியிருக்கிறது.

மக்களவைத் தேர்தலுடன் ஈழத்தமிழர் பிரச்சனை இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருப்பது போல இப்போது தோன்றினாலும், தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறுகணமே இந்தப் “பிணைப்பு’ அறுபட்டு விடும். தேர்தலில் எந்த அணி வெற்றி பெற்றாலும் நடக்கப் போவது இதுதான். மக்களவைத் தேர்தலுக்குப் பின் காங்கிரசு அணியோ, பா.ஜ.க அணியோ அல்லது மூன்றாவது அணியோ, நான்காவது அணியோ எந்த அணி ஆட்சி அமைத்தாலும், ஈழம் தொடர்பான இந்திய அரசின் அணுகுமுறை மாறப்போவதில்லை. “இலங்கையின் மீது மேலாதிக்கம் செய்வது என்ற இந்திய ஆளும் வர்க்கங்களின் கொள்கைதான்’ இந்திய அரசின் ஈழக் கொள்கையைத் தீர்மானித்து வருகிறது. எனவே இந்தத் தேர்தல்முறை மூலமும், ஓட்டுக்கட்சிகளின் தயவிலும் இதனை மாற்றிவிட முடியாது என்று நாங்கள் தொடர்ந்து கூறிவருகிறோம்.

எனினும் இந்தத் தேர்தல்முறை மூலம் இந்திய அரசின் ஈழக்கொள்கையை மாற்றிவிட முடியும் என்று ஈழ ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை அறிவுப்பூர்வமான ஆய்வுக்கு அவர்கள் உட்படுத்துவதில்லை. “”கருணாநிதியையும், சோனியாவையும் நம்பினோம். அவர்கள் துரோகம் இழைத்து விட்டார்கள். எனவே ஜெயலலிதாவை ஆதரிக்கிறோம்” என்பதே பொதுவில் தேர்தல் குறித்த ஈழ ஆதரவாளர்களின் அணுகுமுறையாக இருக்கிறது. “”ஜெயலலிதாவை நம்பலாமா?” என்ற கேள்வியைப் பின்னர் பரிசீலிப்போம். ஏற்கெனவே தி.மு.க. மீதும் காங்கிரசு மீதும் இவர்கள் நம்பிக்கை வைத்ததாகக் கூறுகிறார்களே, அந்த நம்பிக்கைக்கு ஏதேனும் அடிப்படை இருக்கிறதா?

காங்கிரசு தி.மு.க.வை நம்பிக்கெட்ட ஈழ ஆதரவாளர்கள்!

கடந்த 60 ஆண்டுகளில் கணிசமான காலம் தில்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு தொடர்ச்சியாக ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான கொள்கையை மட்டுமே பின்பற்றி வந்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் வாக்குரிமை பெற்றிருந்த இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்கள் 10 இலட்சம் பேரின் இலங்கைக் குடியுரிமையைப் பறித்து, அவர்களை அகதிகளாக்கிக் கப்பலேற்ற சிங்கள அரசுக்குத் துணை நின்றது, காங்கிரசு ஆட்சி இல்லையா? தனது தெற்காசிய மேலாதிக்கத்துக்கு உடன்படச் செய்வதற்காகக் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது, காங்கிரசு ஆட்சியில்லையா? 1983 இனப் படுகொலையைப் பயன்படுத்தி ஈழப்போராளிகளுக்கு உதவுவதாக நடித்து, தங்களுடைய அடியாள் படையாக மாற்றிக் கொள்வதற்காக உளவுத்துறை மூலம் அவர்களைச் சீரழித்ததும் சீர்குலைத்ததும், காங்கிரசு அரசு இல்லையா? ராஜீவ்ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைத் திணித்ததும், அதை ஏற்க மறுத்த புலிகள் மீது போர் தொடுத்ததும், காங்கிரசு இல்லையா? ராஜீவ் கொலையைச் சாக்கிட்டு ஈழப் போராட்ட ஆதரவையே பயங்கரவாத நடவடிக்கையாகச் சித்தரித்து ஈழ ஆதரவாளர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டது காங்கிரசு இல்லையா? சோனியாவின் மீதும், காங்கிரசு அரசின் மீதும் இவர்கள் நம்பிக்கை கொள்ள என்ன அடிப்படை இருந்தது?

தற்போது, புலிகளுக்கு எதிரான போரை 2006 இல் மகிந்த ராஜபக்சே அரசு துவக்கியதிலிருந்தே இந்தப் போரை இந்திய அரசுதான் திட்டமிட்டுக் கொடுத்து வழிநடத்தியும் வருகிறது. சென்ற ஆண்டின் பிற்பகுதியில் சிங்கள இராணுவத்தின் கிளிநொச்சி முற்றுகையும் தாக்குதலும் தீவிரமடையத் தொடங்கின. புலிகளுக்கு எதிரான தாக்குதல் என்று கூறிக்கொண்டு, போர் விமானங்களும், பீரங்கி பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர்களும், தமிழர் பகுதிகள் மீது குண்டுமழை பொழிந்தன. வீடு இழந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் காடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு, உணவோ மருத்துவமோ கிடைக்காமல் தவித்தார்கள்.

இதையொட்டி, போர்நிறுத்தம் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெறத் தொடங்கியது. அத்தகைய போராட்டங்கள் இந்திய மேலாதிக்கத்துக்கு எதிரானவையாக மாறிவிடாமல் தடுக்கும் நோக்கத்துடன், உடனே அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மனிதச் சங்கிலியாக அதனை நிறுவனமயப்படுத்தினார் கருணாநிதி. காங்கிரசாரும் கைகோர்த்து நின்ற இந்தச் சங்கிலியில் கைகோர்க்க மறுத்து, ஈழ ஆதரவாளர்கள் கருணாநிதியையோ காங்கிரசையோ அம்பலப் படுத்தவில்லை.

உணவு, மருந்து, உதவி என்று பிரச்சினை திசைதிருப்பப்பட்டதேயன்றி, இலங்கை அரசிடம் இந்திய அரசு ஒருபோதும் போர்நிறுத்தம் கோரவில்லை. போரை நிறுத்த முடியாது என்பதை இந்திய அரசு புரிந்து கொண்டிருப்பதாகவும், போரில் அப்பாவி மக்கள் பலியாவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்துவதாகவும்தான் இந்திய அரசு கூறி வந்தது. அது மட்டுமல்ல, மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மீதெல்லாம் சிங்கள இராணுவம் குண்டு வீசுவதையும், பாதுகாப்பு முகாம்கள் என்ற பெயரில் மக்களைச் சித்திரவதை முகாம்களில் துன்புறுத்துவதையும், மக்களுக்கு உணவையும், மருந்தையும் தடுப்பதையும், செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளையும் பத்திரிகையாளர்களையும் வெளியேற்றியதையும் உலக நாடுகள் எல்லாம் கண்டித்த போதும், இந்திய அரசு கண்டிக்கக் கூடத் தயாராக இல்லை. மாறாக, உலக நாடுகள் கொடுத்த நிர்ப்பந்தகளிலிருந்து இலங்கை அரசைப் பாதுகாப்பதற்கே, இந்திய அரசு முயன்றிருக்கிறது. எனவேதான் போர்நிறுத்தம் கோரி தமிழகச் சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானங்களையும் மைய அரசு கால் தூசுக்குச் சமமாகக் கூட மதிக்கவில்லை. “”போர்நிறுத்தம் செய்யுமாறு இந்திய அரசு எந்தக் காலத்திலும் எங்களிடம் கோரியதில்லை” என்று சமீபத்தில் கோத்தபய ராஜபக்சே இதனை உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழ்நிலையிலும், பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சியிலேயே ராமதாசு, திருமாவளவன், வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். “”நாராயணனை ஏன் அனுப்புகிறாய், பிரணாப் முகர்ஜியை அனுப்பு” என்பன போன்ற “பயங்கரமான’ கோரிக்கைகள் இவர்களால் எழுப்பப்பட்டன. முகர்ஜி, மேனன், நாராயணன் எல்லோரும் கொழும்புக்குப் போனார்கள். “”விரைவா கப் புலிகளை ஒழிப்பது எப்படி, போருக்குப் பிந்தைய கட்டுமானப் பணிகளில் இந்திய முதலாளிகளுக்குக் கிடைக்கும் பங்கு என்ன?” என்பனவற்றைப் பற்றிப் பேசிவிட்டு வந்தார்கள். இந்த விஜயங்களின் போது, தமிழகத்தின் கொந்தளிப்பைச் சமாளிக்க மத்திய அரசு அரும்பாடுபட்டுக் கொண்டிருப்பதாகக் கூறி, இந்தப் போராட்டங்களைக் காட்டி, ராஜபக்சே அரசிடம் கூடுதல் ஆதாயங்களைக் கறந்து கொள்வதற்கும் இவர்கள் முயன்றிருப்பார்கள். இருப்பினும் இவை ஒவ்வொன்றையும் போர்நிறுத்தம் கோரும் முயற்சியாகச் சித்தரித்தார் கருணாநிதி.

கருணாநிதியின் முதலைக்கண்ணீர்! ஜெயலலிதாவின் திமிர்ப்பேச்சு!

பின்னர் புலிகள் தொடுத்த தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரிகள் காயம்பட்டது அம்பலமானது. இந்திய இராணுவ அதிகாரிகள் நேரடியாகவே சிங்கள இராணுவத்துக்கு உதவியாகப் போரில் ஈடுபட்டிருப்பது மறுக்க முடியாதபடி நிரூபணமானது. மொத்தம் 265 இந்திய இராணுவ அதிகாரிகள் போர்க்களத்தில் இருப்பதாக இலங்கைப் பத்திரிகையே செய்தி வெளியிட்டது. இலங்கை இராணுவத்திற்கு நவீன ராடார்களையும், போர்த்தளவாடங்களையும் கொடுத்து உதவியது மட்டுமின்றி, அவற்றை இயக்குவதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களையும் இந்திய அரசு அனுப்பி வைத்ததும் அம்பலமானது. இவை குறித்த குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக எழுப்பப்பட்ட போதும், இவை எதற்கும் பதிலே சொல்லாமல் மவுனம் சாதித்தது மன்மோகன் அரசு.

மன்மோகன் சிங்கையும் கருணாநிதியையும் அம்பலப்படுத்தி, கடந்த அக்டோபர் மாதம் ஜெயலலிதாவின் சவடால் அறிக்கை வெளிவந்த பிறகுதான் வேறு வழியில்லாமல் கருணாநிதி வாய் திறந்தார். மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் பேசியதாகவும், அவர் மிகுந்த பரிவுடன் ஈழத்தமிழர்களின் துன்பம் பற்றியும், அது குறித்து தமிழக மக்கள் அடைந்திருக்கும் வேதனை பற்றியும் கேட்டுக் கொண்டதாகவும் சொன்னார் கருணாநிதி. “”ஏதோ ஒரு வகையில் தங்களையும் அறியாமல் ஏமாற்றப்பட்டு, இந்தியப் பேரரசு இலங்கை அரசுக்குத் துணையாக மாறி வருவதை ஏற்றுக் கொள்ள இயலாது. இந்திய அரசு ஒத்துழைத்தால் வெற்றி பெறுவோம். இல்லாவிட்டால் இங்குள்ள தமிழர்களும் அடியோடு சாவோம். அதற்குத் தேவையில்லாமல், இளகிய மனம் படைத்த பிரதமரும், அதைவிட இளகிய மனம் படைத்த சோனியாவும் முடிவு எடுக்க வேண்டும்” என்றார் கருணாநிதி.

சிங்கள அரசின் கூட்டாளியாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டு வரும் மன்மோகன் அரசுக்கும், அதற்குத் துணை நிற்கும் கருணாநிதி அரசுக்கும் எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்குப் பதிலாக, “இந்திய அரசு இலங்கையிடம் ஏமாந்து விட்டது’ என்ற கருணாநிதியின் பித்தலாட்டப் பேச்சை வழிமொழியும் வகையில், “”அன்று ராஜீவ் காந்திக்கும், இன்று மன்மோகனுக்கும் யாரோ சில அதிகாரிகள்தான் தவறாக வழிகாட்டுகிறார்கள்” என்றார் வைகோ. வலது கம்யூனிஸ்டு, பா.ம.க, ம.தி.மு.க மற்றும் பிற தமிழ் அமைப்புகள், “”மனிதாபிமான முறையில் தலையிடுங்கள், மக்கள் மீது போர் தொடுப்பதை தடுக்க முயலுங்கள்” என்று இந்திய அரசிடமே கோரிக்கை வைத்தார்கள். பிறகு கருணாநிதியின் பாணியிலேயே சோனியாவின் தாய்மையுணர்ச்சிக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். “”சிங்களர்களை விட தமிழர்கள்தான் இந்தியாவுக்கு அதிகம் நம்பிக்கையானவர்கள்; பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் இலங்கை அரசு உறவு வைத்திருப்பதால், இலங்கை அரசை நம்பி இந்தியா மோசம் போய்விடக் கூடாது” என்றெல்லாம் அறிவுரை கூறினார்கள். இந்தியாதான் இந்தப் போரை நடத்துகிறது என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும், “கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும்’ இத்தகைய தந்திரங்களில்தான் ஈழ ஆதரவு ஓட்டுக்கட்சிகள் ஈடுபட்டன.

இந்த ஓட்டுக்கட்சிப் பித்தலாட்டங்களுக்கு வெளியே, தமிழகமெங்கும் தன்னெழுச்சியான போராட்டங்கள் துவங்கின. முத்துக் குமாரின் தீக்குளிப்பு, அதனைத் தொடர்ந்து வழக்குரைஞர் போராட்டம், காங்கிரசார் மீதான தாக்குதல்கள், சோனியா மன்மோகன் கொடும்பாவி எரிப்புகள் போன்றவை தமிழகமெங்கும் பரவத் தொடங்கவே, அவற்றின் மீது அடக்குமுறையை ஏவியது கருணாநிதி அரசு.

“”காங்கிரசு அரசுதான் போரை நடத்துகிறது” என்று அக்டோபர் மாதத்தில் குற்றம் சாட்டிய ஜெயலலிதா, அப்படியே குட்டிக்கரணம் அடித்து, “” போர் என்றால் மக்கள் சாவது சகஜம்” என்றார். “”ஈழ மக்களுக்கு இங்கிருந்து அனுப்பப்படும் உணவும் மருந்துகளும், புலிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடும்” என்று கூறி, “சோ’வை வழி மொழிந்தார். இது காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஜெயா மேற்கொள்ளும் முயற்சி என்பதைப் புரிந்து கொண்ட கருணாநிதி, காங்கிரசைத் திருப்திப்படுத்த அடக்குமுறையின் மூர்க்கத்தை அதிகப்படுத்தினார். பேசினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம், படத்தை எரித்தால் ராஜதுரோகம் என்று அடக்குமுறைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன.

பா.ஜ.க முதல் தா.பா வரை ஓரணியில்!

பிறகு, கருணாநிதியின் அனைத்துக்கட்சி ஆலிங்கனத்திலிருந்து விடுபட்டு, “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ துவங்கினார் நெடுமாறன். “”இனப்படுகொலை நடத்தும் காங்கிரசுக்கும், அதற்குத் துணை நிற்கும் தி.மு.க.வுக்கும், நாங்கள் எதிரானவர்கள்” என்று இந்த இயக்கம் அறிவித்துக் கொண்டதா? இல்லை. “”நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவர்கள்” என்று தந்திரமாகக் கூறிக்கொண்டார்கள். ஏனென்றால், தி.மு.க. கூட்ட ணியில் இருந்த திருமாவும், ராமதாசும் இதில் அங்கம் வகித்தார்கள். மக்களவைத் தேர்தலுக்கு யார் எந்தப் பக்கம் தாவுவது என்று ஓட்டுப் பொறுக்கிகள் அப்போது முடிவு செய்யாமல் இருந்ததால், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமும் தனது “கொள்கையை’ முடிவு செய்யவில்லை. பாதுகாப்பு இயக்கத்தை மொத்தமாக அ.தி.மு.க. பக்கம் இழுத்துச் செல்ல வைகோவும், தா.பாண்டியனும் முயன்று கொண்டிருந்தனர்.

“”தனிஈழம் கூடாது, புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம்” என்று அந்தக் கணம் வரை அறிக்கை விட்டுக் கொண்டிருந்த பார்ப்பன பாசிஸ்டு பாரதிய ஜனதா, பாதுகாப்பு இயக்கத்தில் திடீரென்று சேர்ந்து கொண்டது. இல.கணேசனும், விடுதலை இராசேந்திரனும், தா.பாண்டியனும் கைகோர்த்து நின்று, இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கும் காட்சியைத் தமிழகம் கண்டது. “ஈழத்தமிழர் பாதுகாப்பு’ என்று சொன்னால் அம்மாவுக்குக் கோபம் வரும் என்பதற்காகவோ என்னவோ, “இலங்கைத் தமிழர்’ என்று பெயரை மாற்றி வைத்திருந்தார்கள் இந்தக் கொள்கைக்குன்றுகள். இருப்பினும் ஜெயலலிதா இதில் இணையவில்லை. அதன் பின்னர், புதுக்குடியிருப்பு இரசாயனக் குண்டு வீச்சுக்கு எதிராக தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதிலும் அ.தி.மு.க. கலந்து கொள்ளவில்லை.

அந்தக்கணம் வரை, ராஜபக்சேவின் அக்காளைப் போலத்தான் பேசிக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஆனால் வைகோ, தா.பாண்டியன், ராமதாசு உள்ளிட்ட யாரும் ஜெயலலிதாவை ஒரு பேச்சுக்காகக் கூடக் கண்டிக்கவில்லை. மக்களவைத் தேர்தல் மட்டுமே அவர்கள் மனதில் நின்றிருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

தமிழ் ஈழ மேக் அப்பில் “அம்மா’!

தேர்தல் நெருங்கியவுடனே, இந்த உத்தம புத்திரர்கள் உண்ணாவிரத மேடை அமைத்துக் கொடுத்து, ஜெயலலிதாவை அதில் உட்கார வைத்தனர். “”ஈழ ஆதரவு வாக்குகளைப் பொறுக்குவதற்காக, இடைக்காலமாகவாவது உங்கள் கொள்கையைக் கொஞ்சம் தளர்த்துங்கள் அம்மா” என்று போயஸ் தோட்டம் சென்று, அவர் காலில் விழுந்து இவர்கள் மன்றாடியிருக்கக் கூடும். இப்படியாக ஜெய லிதா திடீரென்று ஈழ ஆதரவாளராக உருமாற்றப்பட்டார். விகார முகத்தை அழகு முகமாக மாற்றும் சினிமா மேக்கப்மேன்கள் தங்களது தொழில் இரகசியத்தை எப்படி உலகுக்கு வெளியிடுவதில்லையோ, அதேபோல தங்கள் தொழில் தருமத்துக்கு ஏற்ப, இந்த அரசியல் மேக்கப்மேன்களும் போயஸ் தோட்டத்தின் மேக்கப் அறையில் நடந்தவை பற்றி வாய் திறக்கவில்லை.

ஜெயலலிதாவின் தற்போதைய புகழ்பெற்ற தனி ஈழப் பிரகடனம், கூட்டணிக்கு முந்தைய நிச்சயதார்த்த வைபவமாக நடத்தப்பட்ட உண்ணாவிரத மேடையிலிருந்து அறிவிக்கப்படவில்லை. அதன் பின் ஜெயலலிதா கூட்டணியின் கொள்கையாகவும் அறிவிக்கப்படவில்லை. கூட்டணிக் கட்சி சகோதரர்களுக்கு ஒரு தேர்தல் இனாமாக, திடீரென்று ஒரு பொதுக்கூட்ட மேடையிலிருந்து “தனி ஈழத்தை’ விட்டெறிந்தார் ஜெயலலிதா.

அன்று பிரபாகரனைக் கடத்திச் சென்று “சுதந்திரம் பெற்று விட்டதாக’க் கையெழுத்து போடச் சொன்னார் ராஜீவ். இன்று புரட்சித் தலைவியோ, அத்தகைய கையெழுத்து எதுவும் தேவைப்படாத “இலவசத் திட்டமாக’ தனி ஈழத்தை அறிவித்து விட்டார்.

கருணாநிதி ஜெயலலிதா: வேற்றுமையில் ஒற்றுமை!

“”40 தொகுதிகளையும் உத்திரவாதப்படுத்தினால், ஈழம் தருகிறேன்” என்றிருக்கிறார் ஜெயலலிதா. “”ஈழம் மலர்வதற்கு உத்தரவாதம் இருந்தால் நான் பதவி விலகுகிறேன்” என்றார் கருணாநிதி. இரண்டு கூற்றுகளுக்கும் என்ன வேறுபாடு? முரண்பாடுகளின் ஒற்றுமை என்பது இதுதான் போலும்!

காங்கிரசு அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்டு, மத்திய அமைச்சர் பதவிகளைத் துறந்து, மாநில முதல்வர் பதவியையும் துறந்து, ஈழமக்களைக் காப்பாற்ற கருணாநிதி முன்வந்திருக்க வேண்டும் என்பது ஈழ ஆதரவாளர்களின் விருப்பம். ஆனால் அத்தகைய தியாகங்களுக்கு கருணாநிதி தயாராக இல்லை என்பதைப் புரிந்து கொள்வதற்கு, ஈழ ஆதரவாளர்களுக்கு இத்தனைக் காலம் தேவைப்பட்டிருக்கிறதாம்! இது நம்பும்படியாகவா இருக்கிறது?

அவசர நிலைக்காலத்தில் வாங்கிய அடியின் தழும்புகள் மறையும் முன்னரே இந்திராவுடன் கூட்டுசேர்ந்து கொண்ட கருணாநிதி, பாரதிய ஜனதாவுடன் கூட்டுசேர்ந்து குஜராத் படுகொலைக்குப் பின்னரும் விசுவாசம் காத்த கருணாநிதி, மாநில அதிகாரம் மட்டுமின்றி, மத்திய அமைச்சர் பதவிகள் தரும் வாய்ப்புகளைக் கொண்டு பல்லாயிரம் கோடி தொழில் சாம்ராச்சியத்தை உருவாக்கிக் கொண்டு, தானே ஒரு பெரும் தரகு முதலாளித்துவக் குடும்பமாக வளர்ந்து விட்ட கருணாநிதி, பெண்டாட்டி, பிள்ளைகள், பேரன், பேத்திகள் என அனைவருக்கும் கூச்சமின்றிப் பதவிகளை வாரி வழங்கி, காங்கிரசு உறவை கெட்டிப்படுத்துவதன் மூலம், அவர்களது எதிர்காலத்தை உத்திரவாதப் படுத்திவிட்டு, அப்புறம் கண்ணை மூட வேண்டும் என்பதற்காகவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, ஈழத்தமிழருக்காகப் பதவியைத் தியாகம் செய்து விடுவாரென்று’ நெடுமாறனும் ராமதாசும் வைகோவும் நம்பி ஏமாந்து விட்டார்களாம்! அரசியல் பாமரனுக்குக் கூடப் புரியும் உண்மை, இவர்களுக்குப் புரியாமல் போய்விட்டதா? இதெயெல்லாம் நம்ப முடிகிறதா?

“”முதல்வர் மனசு வைத்தால் நடக்கும்” என்று இவர்கள் ஐஸ் வைத்த போதெல்லாம், அது கிடுக்கிப்பிடி என்பதைப் புரிந்து கொண்ட கருணாநிதி, “”அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடி யும், ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன செய்ய முடியும், அமைதி வழியில் ஈழம் மலர்ந்தால் அகமகிழ்வேன், நாளை ஈழம் மலரும் என்றால் இன்று பதவி விலகுகிறேன், நான் பதவியில் இருப்பதுதான் தமிழர்களுக்குப் பாதுகாப்பு” என்று பலவாறாக அந்தப் பிடியிலிருந்து வழுக்கித் தப்பித்தார் கருணாநிதி.

பா.ம.க, ம.தி.மு.க, போலி கம்யூனிஸ்டுகள்: கலைஞரை நம்பிக் கெட்டார்களாம்!

“”கருணாநிதியை நெருக்கடிக்கு உள்ளாக்கி பதவி விலக வைத்தால் இலாபம்; அல்லது கருணாநிதியிடமிருந்து பிரிந்து வந்து கூட்டணிக் கட்சிகள் தன் மடியில் விழுந்தால் அதுவும் இலாபம்; மொத்தத்தில் தலை விழுந்தாலும் இலாபம், பூ விழுந்தாலும் இலாபம்” என்று கணக்குப் போட்டுக் காத்திருந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா போட்ட கணக்கு மட்டுமல்ல, அவருடன் கூட்டணி சேரத் திட்டமிட்டிருந்த போலி கம்யூனிஸ்டுகள், பா.ம.க, ம.தி.மு.க போன்ற அனைவரும் போட்டிருந்த கணக்கும் இதுதான்.

கருணாநிதியின் துரோகம் குறித்த தங்களது கண்டுபிடிப்பை இவர்கள் அக்டோபர் மாதத்திலேயே வெளியிட்டிருக்கலாம். அவ்வாறு வெளியிட்டிருந்தால், ஏப்ரல் மாதம் வரையில் ஈழத்துக்காக இவர்கள் எதுவும் செய்திருக்கப் போவதில்லை. இவர்களுடைய கையாலாகாத்தனமும், செயலின்மையும் அம்பலமாகியிருந்தால், ஈழத்தைத் தமது தேர்தல் ஆதாயத்துக்காக இவர்களும் பயன்படுத்தியிருக்க முடியாது. எனவேதான் சோனியாவின் மீதும் கருணாநிதியின் மீதும் “அவசரப்பட்டு’ நம்பிக்கை இழக்காமல், அந்த முடிவைத் தேர்தல் நெருங்கும் வரை தள்ளிவைத்தனர் என்பதே உண்மை. மற்றபடி “சோனியாவை நம்பி ஏமாந்தோம், கருணாநிதியை நம்பி ஏமாந்தோம்’ என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம். ஈழப்பிரச்சினை என்பது, இவர்களுடைய பதவிச் சூதாட்டத்தின் பகடைக்காயாக மட்டுமே அன்றும் இருந்தது; இன்றும் இருந்து வருகிறது.

இன்று ஈழத்தைத் தம் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் இந்த ஓட்டுப்பொறுக்கிகள் யாரும் “இலட்சக்கணக்கான’ தம் தொண்டர்களைத் திரட்டி, தி.மு.க.வையும் காங்கிரசையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் போர்நிறுத்தம் கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள் பலவும், இந்த ஓட்டுப்பொறுக்கிகளுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாதவை. இவை தோற்றுவித்த நெருக்கடிக்கு ஏற்ப காங்கிரசும், தி.மு.க.வும் அவ்வப்போது பல நாடகங்களை அரங்கேற்றினர், அவ்வளவே.

ஒருக்கால் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு குவளைத் தண்ணீர் நிவாரணமாகக் கிடைத்திருக்கிறதென்றால், அதற்குக் காரணம் மேலை நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய போராட்டங்கள் தான். மேலை நாடுகளின் அத்தகைய தலையீடுகளும், இலங்கையில் அவரவர் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கானவை என்பதை விளக்கத் தேவையில்லை. உண்மை இவ்வாறு இருப்பினும், இந்தத் தேர்தலின் முடிவுகள் ஈழத்தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவதைப் போன்றதொரு மாயை திட்டமிட்டே உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலாதிக்கத்துக்கு ஆதரவு! டெல்லிக்குக் காவடி! ஈழத்துக்கு கண்ணீர்!

போட்டியிடும் எல்லாக் கட்சிகளும் இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்கத்தை அங்கீகரிக்கும் கட்சிகள் என்பதனால்தான் “”எந்தக் கட்சியும் ஈழத்தமிழர் பிரச்சினையைத் தீர்க்காது” என்று நாங்கள் கூறுகிறோம். இது அக்கட்சிகளின் இயலாமை அல்ல; அவர்களுக்கு அத்தகைய நோக்கம் எப்போதுமே இருந்ததில்லை என்றும் கூறுகிறோம்.

ஈழப்பிரச்சினை இருக்கட்டும். இந்திய தேசியத்தின் ஓரவஞ்சனையால், காவிரி முல்லைப் பெரியாறு போன்ற பல பிரச்சினைகளில் தமிழகம் பாதிக்கப்பட்ட போது, இந்தக் கட்சிகள் செய்தது என்ன? டெல்லிக்குக் காவடி எடுப்பதைத் தவிர வேறு எதையும் செய்ததில்லை. ஈழப்பிரச்சினையையும் கூட “தமிழ் இனத்தின் தன்னுரிமைக் கோரிக்கை’ என்ற கோணத்தில் தமிழக மக்கள் மத்தியில் இவர்கள் என்றுமே கொண்டு சென்றதில்லை. அத்தகைய கோணத்தில் இதனைப் பேசினால், இவர்கள் ஓட்டுக்கட்சி அரசியல் தளத்திலிருந்தே ஆளும் வர்க்கத்தால் தூக்கியெறியப்படுவார்கள். எனவேதான் காஷ்மீர், வட கிழக்கிந்தியப் பகுதிகளில் இந்திய அரசு நடத்தும் இன ஒடுக்குமுறையை இவர்கள் (நெடுமாறன் உள்ளிட்டு) நியாயப்படுத்துகிறார்கள். இந்தியாவில் தேசிய இனங்களுக்கு ஜனநாயகம் இருப்பதாகவும் அத்தகைய ஜனநாயகம் இலங்கையில் இல்லை என்பதனால்தான் அங்கே தனி ஈழம் கோருவதாகவும் விளக்கமளிக்கிறார்கள். இவர்களோடு ஒரே மேடையில் தோன்றுகின்ற தமிழ் தேசியம் பேசும் ஈழ ஆதரவாளர்களும், இவர்களது பார்ப்பன தேசிய எடு பிடித்தனத்தைக் கண்டிப்பதில்லை. சந்தர்ப்பவாதமாக மவுனம் சாதித்துக் கொள்கிறார்கள்.

இதன் விளைவாக ஈழத்தமிழர் பிரச்சினை என்பது, ஒரு தேசிய இனப்பிரச்சினை என்ற கோணத்தில் தமிழக மக்கள் மத்தியில் நிலை நிறுத்தப்படவில்லை. மாறாக, ஈழத்தமிழர்கள் நம் தொப்புள் கொடி உறவு, நாமும் தமிழர்கள் அவர்களும் தமிழர்கள் என்று கூறி, இந்திய அரசு ஈழத்தில் தலையிடுவதற்கான நியாயத்தைத்தான் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இந்த நியாயம், இந்திய ஆளும் வர்க்கங்களுக்கே பெரிதும் பயன்பட்டிருக்கிறது. யாழ் கோட்டை முற்றுகையிலிருந்து சிங்கள சிப்பாய்களை விடுவிக்குமாறு வாஜ்பாயி அரசு புலிகளுக்கு நெருக்கடி கொடுத்தபோது, அதனை ஆதரித்தவர்கள்தான் வைகோ, ராமதாசு, நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும். அதன்பின் சார்க் மூலம் இலங்கை அரசுடன் ஏற்பட்ட நெருக்கமான வர்த்தக உறவுகள், 2006இல் கிழக்கு மாகாணத்தில், சிங்கள அரசினால் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதியில் உருவாக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இந்தியா அமைத்துவரும் மின் நிலையம், இலங்கை இராணுவத்துக்கும் கடற்படைக்கும் இந்திய இராணுவம் அளித்துவரும் பயிற்சிகள், இந்தியக் கடற்படைக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இருந்த ஒத்துழைப்பு ஆகியவையெல்லாம், ராமதாசுக்கோ போலி கம்யூனிஸ்டுகளுக்கோ தெரியாதவை அல்ல.

இந்திய மேலாதிக்க எதிர்ப்பு என்ற கோணத்திலோ, ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை என்ற கோணத்திலோ ஈழப்பிரச்சினை தமிழக மக்கள் மத்தியில் இவர்களால் கொண்டு செல்லப்பட்டதே இல்லை. “”அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள், மனிதாபிமானம், கருணை” என்ற அரசியலற்ற சொற்களின் மூலம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள அனுதாபம் மட்டுமே இப்போது எஞ்சி நிற்கிறது.

ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது, இந்த அரசியலற்ற அனுதாபத்தை காங்கிரசும் அ.தி.மு.க.வும் பயன்படுத்திக் கொண்டன. ஈழத்துக்கு எதிரான அரசியல் தாக்குததலைத் தொடுப்பதற்கு ராஜீவ் கொலையை அடித்தளமாக்கிக் கொண்டன. அந்த சந்தர்ப்பத்திலும், ராஜீவ் கொலையின் அரசியல் நியாயத்தை இவர்கள் பேச மறுத்தார்கள். அதன் விளைவாக, அனுதாப அலையைத் தோற்றுவித்து, அதனை ஈழ எதிர்ப்பு அரசியலாக்கி, ஓட்டுக்களாக மாற்றி அபகரித்துக் கொண்டார் ஜெயலலிதா. இன்று ஈழத்தமிழ் மக்களின் அவலம் தமிழக மக்கள் மத்தியில் தோற்றுவிக்கும் அனுதாபத்தையும் அதே வகையில் அறுவடை செய்ய முயல்கிறார்.

அம்மாவுக்குத் தொழில் சொல்லிக் கொடுத்த அல்லக்கைகள்!

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இப்படி ஒரு அறுவடைக்கான வாய்ப்பு இருப்பதை “அம்மா’வுக்கும் அத்வானிக்கும் எடுத்துச் சொல்லி, அந்தத் தமிழின விரோத பார்ப்பனப் பாசிஸ்டுகளை மேடையேற்றி, ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை மூலதனமாக்கித் தொழில் நடத்தச் சொல்லிக் கொடுத்திருப்பவர்களே தா.பாண்டியன், வைகோ, ராமதாசு முதலான “அம்மா’வின் அல்லக்கைகள்தான்.

எனினும் ஓட்டுச்சீட்டு அரசியல் பிழைப்புவாதத்தினால், இவர்களெல்லாம் மக்கள் மத்தியில் ஏற்கெனவே அம்பலப்பட்டுப் போனவர்கள். அன்புமணியும் வேலுவும் அமைச்சர் பதவியில் அமர்ந்து கல்லா கட்டிக்கொண்டிருக்க, கருணாநிதியை ராஜிநாமா செய்யச்சொன்ன அய்யாவின் நேர்மையைக் கண்டு நாடே சிரித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே கூட, மருத்துவர் அய்யா தனது கொள்கையை முடிவு செய்து விடவில்லை. பதவிக்காக தாயுடன் உறவு கொள்வதற்குச் சமமான காரியத்தையும் செய்யத் தயங்காத ராமதாஸ், ஒரே ஒரு நாற்காலி கூடுதலாகக் கிடைக்கிறது என்பதற்காகப் போயஸ் தோட்டத்தின் பக்கம் தாவினார்.

புலிகளின் புகழ்பாடும் புயல் வைகோவோ, போன தேர்தலில் 2 சட்டமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக போயஸ் தோட்டத்துக்குத் தாவிய முயல்; கொத்துக் குண்டுகளால் ஈழத்தமிழினம் கொல்லப்படும்போது அதனை நியாயப்படுத்திப் பேசிய ஜெயலலிதாவை ஒப்புக்குக்கூட கண்டிக்கும் துணிவற்ற கோழை; ஜெயலலிதாவிடம் தன் அரசியல் எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கும் ஒரு கொத்தடிமை.

இந்தக் கூட்டணிக்கு “வைத்தி வேலை’ பார்த்த தா.பாண்டியனோ, முன்னர் ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி என்றொரு பெயர்ப் பலகையை வைத்துக்கொண்டு, ராஜீவ் காந்திக்கு வெற்றிலைப் பெட்டி தூக்கியவர்; இந்திய அமைதிப் படையின் அட்டூழியங்களை நியாயப்படுத்தி அன்றாடம் வானொலியில் உரையாற்றியவர்; ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவுடன் சேர்ந்து அடிபட்டு அந்தத் தியாகத்தழும்பை தமிழ்நாட்டு மக்களுக்கெல்லாம் காட்டிக் காட்டிப் பெருமிதம் கொண்டவர்; “வலது’ கம்யூனிஸ்டு கட்சிக்குள் இருக்கும் ஜெயலலிதாவின் உளவாளி; இந்தக் கூட்டணியின் தலைவி ஜெயலலிதாவோ, தான் தமிழினத்தின் ஜென்ம விரோதி என்பதைத் தனது நடவடிக்கைகள் மூலம் ஆயிரம் முறை மக்களிடம் நிறுவியவர்.

ஈழப்பிரச்சினையில் மட்டுமின்றி, வேறு பல பிரச்சினைகளிலும் இவர்களது அரசியல் சந்தர்ப்பவாதத்தையும் பிழைப்புவாதத்தையும் மக்கள் தம் சொந்த அனுபவத்தில் பார்த்திருக்கிறார்கள். தாமறிந்த முறைகளில் யோசித்து, இவர்களைப் பற்றி ஒரு மதிப்பீட்டுக்கும் வந்திருக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களின் துயரம் குறித்து, தமிழக மக்களுக்கு அனுதாபம் இருப்பினும், காங்கிரசு தி.மு.க. கூட்டணியின் மீது அதிருப்தியும் வெறுப்பும் இருப்பினும், ஈழ மக்களின் துயரத்தை ஜெ அணியினர் துடைத்து விடுவார்கள் என்று மக்கள் நம்பவில்லை.

அம்மாவின் புதிய அப்போஸ்தலர்களாக ஈழ ஆதரவாளர்கள்!

எனவே, இந்தச் சாத்தான்களைத் தேவதைகளாகக் காட்டும் சந்தர்ப்பவாதத்தை மக்கள் மத்தியில் நியாயப்படுத்த, தேர்தலில் நேரடியாகப் பங்கேற்காத ஈழ ஆதரவாளர்கள் களம் இறங்கியிருக்கிறார்கள். நெடுமாறன், பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகம், இன்னும் பல்வேறு அமைப்புகள், பாரதிராஜா சீமான் தலைமையிலான திரைப்பட இயக்குநர்கள்.. என ஒரு பெரும்படை இந்தச் சந்தர்ப்பவாதத்தின் “அவசியத்தை’ மக்களுக்குப் புரிய வைக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறது.

இவர்கள் ஒருவரோடொருவர் முரண்பட்ட கோணத்தில் முரண்பாடான நியாயங்களைப் பேசுகிறார்கள். எனினும் இவர்களுடைய வாதங்கள் அனைத்தும், பார்ப்பன பாசிஸ்டு ஜெயலலிதா மீது நம்பிக்கை கொள்ளுமாறு தமிழக மக்களை வலியுறுத்துவது மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் நெடிய போராட்டத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்தி, அவற்றை ஜெயலலிதாவின் கருணைக்காக மண்டியிடச் செய்கின்றன.

“”குறுந்தகடு பார்த்து மனம் மாறியதாகச் சொல்கிறார் ஜெயலலிதா. அவர் மனம் மாறவேண்டும் என்றுதான் நாம் காத்திருந்தோம். நமது ரத்தச் சொந்தங்களுக்கு ஜெயலலிதா ஈழம் அமைத்துத் தருவார். அதற்கு நாம் தேர்தலுக்குப் பின் அவருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்” என்று பேசியிருக்கிறார் இயக்குநர் சீமான்.

20 ஆண்டு காலம் ஈழத்தமிழ் மக்கள் மீதும், ஈழ ஆதரவாளர்கள் மீதும் கொடிய அடக்குமுறைகளை ஏவியது மட்டுமல்ல, புலிப்பூச்சாண்டி காட்டுவதையே தனது அரசியலாக வைத்திருந்த ஜெயலலிதா, ராஜீவ் கொலையைக் காரணம் காட்டி தமிழகத்திலிருந்த ஈழத்தமிழ் அகதிகளை இரக்கமே இல்லாமல் கதறக்கதறக் கப்பலேற்றிய ஜெயலலிதா, ஈழ அகதி முகாம்களையெல்லாம் சிறைச்சாலைகளாக மாற்றிய ஜெயலலிதா, குறுந்தகடு பார்த்து மனம் மாறிவிட்டாராம். இதென்ன செய்யும் கொடுமையெல்லாம் செய்து விட்டு, கடைசி காட்சியில் வில்லன் மனம் திருந்துகின்ற திரைக்கதையா? அத்தகைய திரைக்கதைகள் கூட, நடிகை ஜெயலலிதா காலத்துத் திரைப்படங்களுடன் காலாவதியாகி விட்டனவே! கடந்த 6 மாதங்களாக ஈழத்தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்படுவதைக் காட்டும் குறுந்தகடுகளையெல்லாம் பார்த்து மாறாத மனம், தேர்தல் நேரத்தில் ரவிசங்கர்ஜி கொடுத்த குறுந்தகட்டைப் பார்த்து மாறிவிட்டதாம். இதை இவர்கள் நம்புகிறார்களாம். நாமும் நம்ப வேண்டுமாம்.

“”எல்லாம் முடிந்து அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படும் வரை ஈழத்தமிழ் மக்களின் துயரம் உனக்கு உரைக்கவில்லையா?” என்று இவர்களுக்குக் கேட்கத் தோன்றவில்லை. ஜெயலலிதா மனம் மாறுவதற்காகத்தான் இவர்கள் காத்திருந்தார்களாம். இந்தப் பார்ப்பன பாசிஸ்டின் அருள் கிடைக்காமல்தான் இத்தனை ஆயிரம் ஈழத்தமிழ் மக்கள் உயிர் விட்டார்களா? தேர்தலுக்குப் பின் ஜெயலலிதா அமைத்துத்தர இருக்கும் ஈழத்துக்கு நன்றி சொல்வதற்காக எஞ்சியிருக்கும் ஈழத்தமிழர்கள் காத்திருக்க வேண்டுமா? ஈழம் என்பது ஜெயலலிதா வழங்கவிருக்கும் வட்டச்செயலர் பதவியா? இப்படி ஒரு அடிமைத்தனத்தை வரித்துக் கொள்வதற்காகத்தான் ஈழத்தமிழினம் போராடியதா?

“”தேர்தலுக்காகப் பேசுவதாக சிலர் ஜெயலலிதாவை குற்றம் சொல்கிறார்கள். அதற்காகவாவது நீங்களும் பேசுங்களேன்” என்கிறார் சீமான். “”ஒரு பொய்யாவது சொல் கண்ணே, உன் காதலன் நான்தான் என்று, அந்தப் பொய்யில் உயிர் வாழ்வேன்” என்ற திரைப்படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

கட்சிகளின் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு, ஆத்திரத்தில் குமுறும் மக்களைப் பார்த்திருக்கிறோம். பொய்களால் களைப்படைந்து தேர்தலையே புறக்கணிக்கும் மக்களையும் கண்டிருக்கிறோம். “”ஒரு பொய் வாக்குறுதியாவது தரக்கூடாதா?” என்று கோரிக்கை வைக்கும் கேலிக்கூத்தை இப்போதுதான் காண்கிறோம்.

ஒரு திரைப்பட இயக்குநரின் உணர்ச்சி வயப்பட்ட பேச்சு என்று இதனைப் புறக்கணித்து விடலாம் என்றால், இதையே திருத்தமான கொள்கையாகப் பிரகடனம் செய்திருக்கிறது பெரியார் திராவிடர் கழகம்:

“”அ.தி.மு.க. ஈழத்தமிழர் பிரச்சினையில் கடந்த காலங்களில் துரோகமான நிலைப்பாடுகளையே மேற்கொண்டு வந்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இப்போது மக்களிடையே உருவாகியுள்ள எழுச்சியின் காரணமாக, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதோடு, தமிழர்களுக்கு எதிரான போரை, இந்திய அரசே நடத்துகிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறுகிறார். “”தி.மு.க தனது ஆதரவை விலக்கிக் கொண்டிருக்க வேண்டு ம். அப்போதே மத்தியில் ஆட்சி கவிழ்ந்து, இனப்படுகொலை நிறுத்தப்பட்டிருக்கும்” என்று ஜெயலலிதா கூறுகிறார். அதே நேரத்தில் தி.மு.க. ….. இந்திய அரசுக்கு நியாயம் கற்பிக்கும் சந்தர்ப்பவாத அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. தி.மு.க.வின் இந்த சந்தர்ப்பவாதம், தமிழர்கள் உணர்வுக்கு எதிராக உள்ளது.”

“”எனவே ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதம் தமிழர்களின் உணர் வுகளுக்கு ஆதரவாகவும், கலைஞர் கருணாநிதியின் சந்தர்ப்பவாதம் தமிழர் உணர்வுகளுக்கு எதிரானதாகவும் இருப்பதால், ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதத்தை ஆதரிப்பதே இச்சூழலில் சரியான முடிவாக இருக்கும் என்று கருதுகிறோம்.”

நயவஞ்சகம் வாழ்க!

“”ஜெயலலிதா ஈழத்தமிழ் மக்களின் எதிரிதான். இருப்பினும் இன்று மக்களிடம் எழுச்சி இருப்பதனால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தருவது போல சந்தர்ப்பவாதமாகப் பேசுகிறார். கருணாநிதி அப்படிக்கூட பேச மறுக்கிறாரே” என்பதுதான் பெரியார் தி.க.வின் அங்கலாய்ப்பு. தமிழர் உணர்வுக்கு ஆதரவான சந்தர்ப்பவாதம், எதிரான சந்தர்ப்பவாதம் என்று இரு அரசியல் சொற்றொடர்களை இந்தத் தேர்தலையொட்டித் தமிழுக்கு வழங்கியிருக்கிறது பெ.தி.க. இதனை பாமரர்களுக்குப் புரியும்படி மொழிபெயர்த்தால், வெளிப்படையான எதிரி, நயவஞ்சகமான எதிரி ஆகிய இருவரில் நயவஞ்சக எதிரியை ஆதரிப்பது என்று பெரியார் தி.க தெரிவு செய்திருக்கிறதாம்.

“”தமிழர் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து, ஒரு மரியாதைக்கு, கொஞ்சமாவது தமிழனை ஏமாற்றுவது போலப் பேச வேண்டாமா, இப்படி வெளிப்படையாக டெல்லிக்குக் காவடி எடுத்தால் எப்படி?” என்பதுதான் கருணாநிதி குறித்த பெரியார் தி.க.வின் அங்கலாய்ப்பு போலும்! ஒரு வகையில் இது நியாயம்தான். பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்தது, குஜராத் இனப்படுகொலைக்குப் பின்னரும் பதவியைத் துறக்காதது, இந்து வெறியர்கள் பெரியார் சிலை உடைத்ததை எதிர்த்ததற்காகத் தங்களது தொண்டர்களையே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளியது போன்ற எண்ணற்ற காரணங்கள் இருந்தும் பெரியார் தி.க கருணாநிதியை ஆதரித்ததற்குக் காரணம், பார்ப்பன எதிர்ப்பாளன் போலவும் தமிழுணர்வாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ள அவ்வப்போது கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகள்தான் போலும்!

கருணாநிதியின் இந்த நயவஞ்சகங்களை வைத்துத்தான் தங்களது தி.மு.க. ஆதரவை அவர்கள் நியாயப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழர் உணர்வுக்கு ஆதரவான சந்தர்ப்பவாதத்தை முடிந்தவரை கலைஞர் கடைவிரிக்கத்தான் செய்தார். ஆனால் நிலைமை ஒரு எல்லைக்குச் சென்றுவிட்டதால் அவர் கடைவிரித்ததைக் கொள்வாரில்லை. அதைவிடக் கவர்ச்சிகரமான கடையை ஜெயலலிதா விரித்துவிட்டார்.

தமிழர் உணர்வுக்கு ஆதரவாக சந்தர்ப்பவாதமாகப் பேசத் தெரியாதவரா என்ன கருணாநிதி? ஒரு வேளை அவர் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால், பெரியார் தி.க. விரும்பும் “தமிழ் உணர்வுக்கு ஆதரவான சந்தர்ப்பவாத்தை’ மிகுந்த கலைநயத்துடன் அவர் வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் தற்போது ஜெயலலிதா பேசுவதைப்போல அவர் பேச வேண்டுமென்றால், அவர் தன் பதவியை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. பெறுவதற்கோ பிரதமர் பதவியே இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதம், “பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்யும்’ கருஞ்சட்டை வீரர்களையுமல்லவா அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது! முன்னர் வீரமணியாவது 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்காக “சமூகநீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கினார். அன்று அதனை எதிர்த்து வெளியேறியவர்கள்தான் பெரியார் தி.க.வினர். இன்று “மக்கள் உணர்வைக் கணக்கில் கொண்ட ஒரு சந்தர்ப்பவாதத்தை’ மட்டும் புரட்சித்தலைவியிடம் பெற்றுக் கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறார்கள்.

நாளை நடப்பதை யாரறிவார்?

தங்களது நிலைமை அவர்களுக்கே தடுமாற்றத்தைத் தருகிறது போலும். “”வீடு பற்றி எரியும் போது தண்ணீர் கொண்டு வருபவன் நண்பனா துரோகியா என்றெல்லாம் பார்க்க முடியாது” என்று தமக்குத் தாமே சமாளித்துக் கொள்கிறார்கள். யார் தண்ணீர் கொண்டு வந்தார்கள்? ஜெயலலிதாவா? கொழுந்து விட்டு எரியும்போது கைகொட்டி ரசித்து விட்டு, எரிந்து அடங்கும் நேரத்தில் தண்ணீர் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். பெரியார் தி.க வின் கூற்றுப்படியே விசயம் அவ்வளவுதான்.

“”அம்மா நாளையே காங்கிரசு பக்கம் தாவி விட்டால்?” என்ற கேள்வியும் பெரியார் தி.க.வினரைக் குடைகிறது.

“”தேர்தல் முடிவுக்குப் பிறகு இப்போதைய கூட்டணியில் இருப்பவர்கள் அப்படியே நீடிப்பார்களா என்பது சந்தேகம்தான் என்றாலும், இன்றைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த முடிவுகளை எடுத்துள்ளோம்” என்று தங்களது நிலைப்பாட்டுக்குக் கீழே ஒரு அடிக்குறிப்பும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

நாளைய சூழ்நிலையைத் தீர்மானிப்பதற்காகத்தான் தேர்தல் நடக்கிறதென்று வாக்காளர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். நாளை பா.ஜ.க. வந்தால், காங்கிரசு வந்தால், தி.மு.க. வந்தால் என்ன நடக்கு ம் என்பதை தம் அறிவுக்கு எட்டியவரை யோசித்து வாக்களிக்கவும் செய்கிறார்கள். “நாளையே ஜெயலலிதா தாவக்கூடும்’ என்ற ஐயத்தை மனதில் வைத்துக் கொண்டே, “”அம்மாவைத் தேர்ந்தெடுங்கள். ஈழப் பிரச்சினையைத் தீர்ப்பார்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள் பெரியார் தி.க.வினர். இதற்கு உண்மையிலேயே பெரும் மனவலிமை வேண்டும். “”இது கல் கடவுள் இல்லை” என்று தேர்ந்து தெளிந்த அர்ச்சகன், மக்களிடம் மட்டும் கடவுள் நம்பிக்கையைப் பரப்புவதற்கு ஒப்பான சாதனைதான் இது.

அரைக்கிணறு கால்கிணறு: கொள்கை வேறுபாடு!

“”எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் அவர்கள் இந்திய அரசுக்கு கங்காணி வேலைதான் பார்ப்பார்கள். செயலலிதா இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் ஒளிவு மறைவின்றி ஆணவத்தோடும், அதிகாரத்திமிரோடும் கங்காணி வேலை பார்ப்பார்” என்று கூறும் மணியரசன் நாம் யாருக்கும் வாக்குக் கேட்க வேண்டியதில்லை என்று கூறுகிறார். காங்கிரசு ஒழிப்பின் ஒரு கூறாகத் தேர்தலைப் பயன்படுத்தலாம் என்பதில் பெரியார் திராவிடர் கழகத்துடன் ஒத்த கருத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

தெளிவான இந்தக் கொள்கையை மக்கள் குழப்பமில்லாமல் புரிந்து கொள்ளும் வகையில் எப்படி விளக்குவார்கள்? “”காங்கிரசுக்குப் போடாதீர்கள். பா.ஜ.க, தி.மு.க., அ.தி.மு.க., விஜயகாந்த், சரத்குமார் என வேறு யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள். ஆனால் யார் வந்தாலும் இதைத்தான் செய்வார்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்” என்று பிரச்சாரம் செய்வார்களா? “”அப்புறம் ஏய்யா போடச் சொல்றே?” என்று மக்கள் கேட்டால்?

ஒருவேளை அதே மேடையில் பெரியார் தி.க. இரட்டை இலைக்கு வாக்கு கேட்டால், அதற்கெதிராக “ஜெயலலிதா ஆணவம் பிடித்த ஆளும் வர்க்கப் பிரதிநிதி’ என்று தங்கள் கருத்தை மக்களிடம் சொல்வார்களா அல்லது “”நாம் யாருக்கும் வாக்கு கேட்கவேண்டியதில்லை என்பதுதான் எங்கள் கருத்து. இருப்பினும் காங்கிரசு ஒழிப்பு என்பதில் பெரியார் தி.க.வுடன் எங்களுக்கு கொள்கை உடன்பாடு இருக்கிறது. அதேநேரத்தில் இரட்டை இலைக்கு நாங்கள் வாக்கு கேட்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்” என்று கூறுவார்களா?

அரைக்கிணறு தாண்டுவதற்கும் கால் கிணறு தாண்டுவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு என்னவோ அதுதான், பெரியார் தி.க.வுக்கும் மணியரசனுக்கும் உள்ள கொள்கை வேறுபாடு.

தேர்தல் தோல்வியால் திருந்தி விடுவார்களாம் ஓட்டுப்பொறுக்கிகள்!

இந்த காங்கிரசு ஒழிப்புக் கொள்கைக்கு, “”கருப்பனைக் கட்டி வைத்து அடித்தால் வேலன் வேலியை முறித்துக் கொண்டு ஓடுவான்” என்று ஒரு பழமொழியைக் காட்டி விளக்கமும் கூறுகிறார் மணியரசன். பல சந்தர்ப்பங்களில் உவமானங்களும் பழமொழிகளும்தான் சந்தர்ப்பவாதத்துக்கு ஊன்றுகோல்களாகப் பயன்படுகின்றன.

காங்கிரசைத் தோற்கடித்தால் பா.ஜ.க பயந்து விடுமா? அல்லது தி.மு.க. கூட்டணியினர் திருந்தி விடுவார்களா? தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்வது குறித்து அச்சம் கொள்வார்களா? தேர்தல் தோல்வியால் இத்தகைய ரசவாதங்களையெல்லாம் செய்ய முடியும் என்றால், ஊழலுக்காக மக்களால் தோற்கடிக்கப்பட்ட கட்சிகளைப் பார்த்துப் பயந்து மற்ற கட்சிகள் எல்லாம் ஊழலையே மறந்திருக்க வேண்டும். அவசரநிலைக் கொடுங்கோன்மைக்காகத் தண்டிக்கப்பட்ட காங்கிரசு தடாவைக் கொண்டு வந்திருக்கவே கூடாது. தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்தியதன் காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் எல்லாக் கட்சிகளுமே மக்களால் தோற்கடிக்கப்பட்டிருப்பதால் தனியார்மயத்தை அனைவருமே தலைமுழுகியிருக்க வேண்டும். வேலன் வேலியை முறித்துக் கொண்டு ஓடவில்லை. மாறாக, தனியார்மயம்தான் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் கொள்கையாகியிருக்கிறது. ஆளும் வர்க்கங்களின் தேவைகளும் நோக்கங்களும்தான் ஓட்டுக் கட்சிகளின் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றனவேயன்றி, மக்களின் விருப்பு வெறுப்புகள் அல்ல.

ஒவ்வொரு முறையும் ஆளும் கட்சிக்கு தண்டனை வழங்குவதாகக் கருதித்தான் மக்கள் அதனைத் தோற்கடிக்கிறார்கள். எனினும் தேர்தல் தோல்வியினால் அவர்கள் யாரும் திருந்தி விடுவதில்லை. இதனைப் பாமர வாக்காளர்களும் கூட இன்று புரிந்திருக்கிறார்கள். தேர்தல் தோல்வியின் விளைவாக ஓட்டுக்கட்சிகள் தங்கள் அணுகுமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். அந்த மாற்றங்களும் கூட ஆளும் வர்க்கத்தின் நலனை மக்களின் எதிர்ப்பின்றி நிறைவேற்றுவதெப்படி என்ற கோணத்திலேயே அமைகின்றன. ஆளும் வர்க்கத்தின் நலனை நிராகரிக்கின்ற அடிப்படைக் கொள்கை மாற்றம் எதையும் தேர்தல்பாதை உருவாக்கி விடுவதில்லை.

நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி வெடித்த நிலையிலும், மாவோயிஸ்டுகள் அதிகாரத்துக்கு வராமல் தடுப்பதற்கும், மன்னராட்சியைக் காப்பதற்குமே இந்திய மேலாதிக்கம் முயன்றது. இறுதியில் நேபாள மக்களின் எழுச்சியைக் கண்டஞ்சி மன்னராட்சி ஒழிப்பைச் சகித்துக் கொண்டது. பின்னர் மாவோயிஸ்டுகள் தேர்தலில் வெற்றி பெறாமல் தடுக்க சதி செய்தது. அதிலும் தோற்றதால் மாவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதைக் கசப்புடன் விழுங்கிக் கொண்டது. அடுத்த கணமே ஆட்சிக்கவிழ்ப்புக்கான சதி வேலைகளைத் தொடங்கியது. அதன் விளைவுதான் இன்று நாம் காணும் நேபாள நெருக்கடி.

ஈழப்பிரச்சினையில், “இலங்கையின் மீதான மேலாதிக்கம்’ எனும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குத்தான், இந்திய அரசு ஈழத்தமிழ் மக்களை சிங்கள இனவெறிக்குக் காவு கொடுக்கிறது. தேர்தல் தோல்வியின் காரணமாக ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்க நோக்கத்தை இந்திய ஓட்டுக் கட்சிகள் மாற்றியமைத்து விடும் என்று கூறுவது, குல்லாய் தன் அளவுக்கு ஏற்ப தலையைச் செதுக்கிச் சரி செய்து விடும் என்று கூறுவதற்கு ஒப்பானது. இவையெல்லாம் தேர்தலை ஒட்டி தாங்கள் எடுத்திருக்கும் சந்தர்ப்பவாத நிலையை நியாயப்படுத்துவதற்குக் கூறப்படும் நொண்டிச்சாக்குகளேயன்றி வேறல்ல.

அரசை வழிநடத்துவது அறவுணர்ச்சியா, ஆளும்வர்க்க நலனா?

கண்முன்னே விரியும் காட்சிகளைக் கலர்க் கண்ணாடி போடாமல் பார்த்தாலே உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். காங்கிரசை ஒழிப்பதுதான் என் முதல்பணி என்று முழங்கிய திருமாவளவன், தற்போது காங்கிரசு கூட்டணியில் இருக்கிறார். இது ஈழத்துக்குச் செய்த துரோகம் என்று கூறி அவரது கட்சி உடைந்து சிதறி விட்டதா? திமுகவுடனான தொகுதி பேரம் சுமுகமாக முடிந்து, ராமதாசு கூட்டணி தாவாமல் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்காக பா.ம.க அப்படியே குறுக்கு நெடுக்காகப் பிளந்திருக்குமா? “”வேறொரு சி.டி பார்த்தேன். தனி ஈழம் வேண்டாமென்று முடிவு செய்துவிட்டேன்” என்று ஒரு வேளை ஜெயலலிதா கூறினால், அதிமுகவிலிருந்து ஒரு நாயாவது வெளியேறுமா? எதுவும் நடக்கப் போவதில்லை. பிழைப்புவாதம் என்ற கொள்கையின் அடிப்படையில்தான் இந்தக் கட்சிகளே கட்டப்பட்டிருக்கின்றன எனும்போது, இவர்கள் தேர்தல் தோல்விக்குப்பின் “கொள்கையை’ மாற்றிக் கொள்வார்கள் என்று கூறுவது வெறும் பிதற்றல்.

இந்தத் தேர்தலில் காங்கிரசு தோற்றுப் போய், வேறு ஏதோ ஒரு அரசாங்கம்தான் வரட்டுமே. அவர்கள் ஈழ விடுதலையை எதற்காக ஆதரிக்க வேண்டும்? பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்படும் கொடூரத்தைப் பார்த்து மனமிரங்கி வரவிருக்கும் அரசாங்கம் தனது கொள்கையை மாற்றிக் கொண்டுவிடுமா? அப்படியானால் இந்த அரசை வழிநடத்துவது அறவுணர்ச்சியா, ஆளும் வர்க்க நலனா?

இந்த அரசு என்பது யார்? சோனியாவா, கருணாநிதியா, அத்வானியா, ஜெயலலிதாவா?

சில மாதங்களுக்கு முன் போர்நிறுத்தம் கோரி சோனியாவின் தாய்மையுணர்ச்சிக்கு வேண்டுகோள் விட்டார் நெடுமாறன். இன்று தேர்தல் மேடைகளில், இந்தப் படுகொலைக்குக் காரணம் காங்கிரசுக் கட்சியல்ல, சோனியாவின் பழிவாங்கும் போக்குதான் என்று மேடையில் முழங்குகிறார் வைகோ. அவ்வாறே இருக்கட்டும். ஆனால் பெருந்தன்மையோ, பழிவாங்கும் போக்கோ, அவையெல்லாம் “ஆளும் வர்க்க நலன்’ என்ற சட்டகத்துக்கு உட்பட்டுத்தான் வேலை செய்ய முடியும்.

“”காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.ஸைக் கூட நிரந்தரமாகத் தடை செய்யவில்லை, ராஜீவ் கொலைக்காக புலிகளை மட்டும் ஏன் தடை செய்கிறீர்கள்” என்று ஈழ ஆதரவாளர்கள் அடிக்கடி வாதிடுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இந்திய ஆளும் வர்க்கத்துக்குத் தேவைப்பட்டதும், அதன் சித்தாந்தம் காங்கிரசுக் கட்சிக்குள்ளேயே பெரும் செல்வாக்கு செலுத்தியதும்தான் அதற்குக் காரணம். “ராஜீவ் கொலையின் காரணமாகத்தான் இந்திய அரசு புலிகள் இயக்கத்தின் மீது தடை விதித்திருக்கிறது’ என்பது மக்களை ஏய்ப்பதற்குக் கூறப்படும் காரணம். ஈழம் பிரிவதையோ, தெற்காசியப் பகுதியில் ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுவதையோ இந்திய மேலாதிக்கம் விரும்பவில்லை என்பதுதான், சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா துணை நிற்பதற்கு முதற்காரணம்.

இதன் பெயர் அறியாமையா, அடிமைத்தனமா?

இந்திய அரசு ஈழ விடுதலையின் நண்பனல்ல — எதிரி. அதனை நண்பனாகக் கருதிக் கொள்வதும், இந்திராவின் கருணையையும், எம்.ஜி.ஆரின் புலிப்பாசத்தையும் புகழ்வதும் அறியாமையல்ல, அடிமைத்தனமான பார்வை. தனிநபர்களின் குணாதிசயங்களோ அவர்களுடைய அறவுணர்ச்சியோதான் அரசின் கொள்கைகளைத் தீர்மானிப்பதாகக் கருதுவது, முதலாளியின் நற்குணத்திலும் தயாள மனோபாவத்திலும் தனது விமோசனத்தைத் தேடும் முட்டாள் அடிமையின் சிந்தனைக்கு ஒப்பானது. வரலாற்றையும், மக்களின் விடுதலையையும் தனிநபர்களின் சாகசமாகவும், நாயகர்கள் போடும் பிச்சையாகவும் கருதும் மனோபாவம்தான் இப்படிச் சிந்திக்க முடியும்.

“”இந்திரா இருந்திருந்தால் ஈழத்தமிழர் துயர் துடைத்து நீதி கிடைக்கச் செய்திருப்பார் என்று கூறுவது ஒன்று விவரம் தெரியாத கருத்தாக இருக்க வேண்டும் அல்லது காங்கிரசைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும்” என்று சாடுகிறார் மணியரசன். தமிழ் ஈழ ஆதரவாளர்களின் தலைவர் நெடுமாறன்தான் பேசுமிடந்தோறும் இந்தக் கருத்தைப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அவர் விவரமறியாதவரா அல்லது காங்கிரசைப் பாதுகாப்பவரா என்று மணியரசன்தான் விளக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் தமிழ் ஈழப் பிரகடனத்தால் புல்லரித்துப்போன வைகோ இன்னொரு படி மேலே போய்விட்டார். “”புரட்சித்தலைவரால்தான் ஈழத்தில் களம் அமைக்கப்பட்டது. இன்று ஈழத்தை ஆதரித்து புரட்சித்தலைவி பேச ஆரம்பித்திருப்பது இயற்கையின் கொடை” என்கிறார் வைகோ. வசிட்டன் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் வாங்கத் தவமிருந்த விசுவாமித்திரனைப் போல, புரட்சித்தலைவி வாயால் ஈழம் அங்கீகரிக்கப்படுவதற்காக இவர்கள் தவமிருந்திருக்கிறார்கள் போலும்.

“”தமிழ் ஈழம் அமைக்க எவ்வளவு செலவாகும்?” என்று பிரபாகரனிடம் கொட்டேசன் கேட்ட புரட்சித்தலைவர்தான் ஈழத்துக்குக் களம் அமைத்தவராம். அந்த ஈழ மண்ணே பூண்டற்றுப் போகும் தருணம் பார்த்து, புரட்சித்தலைவி பொழிந்திருக்கும் இந்தப் பொய்ச் சவடால் இயற்கையின் கொடையாம்! அப்படியானால் நேற்றுவரை ஈழம் குறித்து அவர் பேசியதெல்லாம் என்ன, இயற்கையின் சீற்றமா?

இனவிடுதலைக்குத் தடையாக “சூத்திர அரசு’! இயற்கையின் கொடையாக பாப்பாத்தி!

விந்தைதான். பார்ப்பன இந்திய தேசியம் தொடுத்திருக்கும் இந்த இன அழிப்புப் போருக்கு கருணாநிதியின் “சூத்திர அரசு’ துணை போகிறது. பாப்பாத்தி ஜெயலலிதாவோ தனி ஈழத்திற்காகத் திடீரென்று கொடி பிடிக்கிறார். இதை இயற்கையின் கொடை என்கிறார் வைகோ. இது இயற்கைக்கு விரோதமானது என்று சொல்லியிருக்க வேண்டிய பெரியார் திராவிடர் கழகமும், பாப்பாத்தியின் வெற்றிக்குப் பாடுபடுகிறது. ஜெயலலிதா வெறும் பாப்பாத்தி அல்ல, பார்ப்பன மதவெறியில் பாரதிய ஜனதாவை விஞ்சும் பார்ப்பனப் பாசிஸ்டு என்பதை நடைமுறையில் நிரூபித்திருப்பவர்.

இதுதான் பெரியாரியல் போலும்! “”பார்ப்பானை நம்பக்கூடாது. பார்ப்பான் ஒருவேளை தமிழனுக்கு ஆதரவாகப் பேசினாலும் அதற்கு வேறு உள்நோக்கம் இருக்கும் என்று சந்தேகிக்க வேண்டும்” என்ற பெரியாரின் பார்வை அடிப்படையிலேயே தவறு என்று இவர் கள் கூறுகிறார்களா, அல்லது நடைமுறைக்கு ஒத்துவராதது என்று கை கழுவி விட்டார்களா? பார்ப்பனப் பாசிஸ்டுக்குக் காவடி எடுக்கும் இவர்களுடைய தேர்தல் நிலைப்பாட்டுக்கு வழிகாட்டும் கோட்பாடு எது?

10.5.09 அன்று புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தக் கொள்கையை இயக்குநர் சீமான் விளக்கினார். “”தமிழ் ஈழத்தை காந்தி எதிர்த்தால் நாங்கள் காந்தியை எதிர்ப்போம். கோட்சே ஆதரித்தால், நாங்கள் கோட்சேயை ஆதரிப்போம்” என்றார்.

அரசியல் சூதும், சொற்சிலம்பங்களும் பழகாதவர்கள் பேசும் போதுதான் உண்மை இயல்பாக வெளியே வருகிறது. இதுதான் அந்தக் கோட்பாடோ?

முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்தாலும், பயங்கரவாதிகள் என்று அவர்களை வேட்டையாடினாலும், கிறித்தவர்களைத் தீ வைத்துக் கொளுத்தினாலும், தலித் மக்கள் மீது தீண்டாமையை நிலைநிறுத்தினாலும், எஸ்மா, டெஸ்மா என்று உழைக்கும் வர்க்கத்தின் மீது பாசிசக் காட்டாட்சியை ஏவினாலும், சமூகம் முழுவதையும் பார்ப்பனப் பாசிசக் கொடுங்கோன்மையின் கீழ்க் கொண்டு வந்தாலும் அவை பற்றியெல்லாம் கவலை இல்லையாம். பார்ப்பன பாசிஸ்டுகள் ஈழத்தை ஆதரித்தால் இவர்கள் கோட்சேவையோ, ஜெயலலிதாவையோ தயங்காமல் ஆதரிப்பார்களாம்!

மாம்பழச் சின்னத்துக்கு வாக்கு கேட்க, பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த மேடையிலிருந்து இந்தக் கொள்கைப் பிரகடனத்தை சீமான் வெளியிட்டது கூடுதல் சிறப்பு! தனக்குக் கிடைக்கும் நாற்காலிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, எத்தகைய கோட்சே அணிக்கும் தாவத் தயங்காத மருத்துவர் அய்யா அல்லவோ, இந்தக் கொள்கையின் முன்னோடி!

அம்மாவின் பலிபீடத்தில் பகுத்தறிவே முதல் பலி!

“அம்மா’வை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அறிவை அடமானம் வைத்து விட வேண்டும் என்பதுதான் முதல் விதி போலும்! கடந்த 20 ஆண்டுகளாக ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தையும், புலிகள் இயக்கத்தையும், அதன் ஆதரவாளர்களையும் வேட்டையாடுவதைத் தனது அரசின் கொள்கையாக வைத்திருந்தது மட்டுமல்ல, புலிப்பூச்சாண்டி காட்டி கருணாநிதியை அச்சுறுத்தியது மட்டுமல்ல, இந்துத்துவ சக்திகள் மற்றும் பார்ப்பன ஊடகங்களின் துணையுடன் தமிழ் என்று பேசுவதையே பிரிவினைவாத, பயங்கரவாத நடவடிக்கையாக தமிழ்நாட்டிலேயே நிலைநாட்டிக் காட்டியவர் ஜெயலலிதா. தற்போதைய இனப்படுகொலைக்கு எதிராகவும் அவர் ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை.

“”ஈழத்தமிழர் என்றே சொல்லக் கூடாது, இலங்கைத் தமிழர் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று சனவரி மாதத்தில் பேசிய ஜெயலலிதா, திடீரென்று “”ரவிசங்கர்ஜி கொடுத்த சி.டி.யைப் பார்த்தேன். உண்மையைப் புரிந்து கொண்டேன். தனி ஈழம்தான் தீர்வு. இராணுவத்தை அனுப்புவேன்” என்று பல்டியடிக்கிறாரே, அப்படி அந்த சி.டி.யில் என்னதான் இருந்திருக்கும் என்ற கேள்வி ஈழ ஆதரவாளர்களுக்கு எழவில்லையா?

சி.டியைக் கொடுத்த ரவிசங்கர்ஜி, ராஜபக்சே அரசைப் புகழ்ந்து அறிக்கை விடுகிறார். தமிழ்நாட்டின் ஈழ அகதிகள் முகாம்களை விடவும், காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு இந்திய அரசு அமைத்துத் தந்துள்ள முகாம்களை விடவும் இலங்கை அரசின் முகாம்கள் சிறப்பாக இருப்பதாகவும், சிங்கள இராணுவ வீரர்கள் தமிழ் அகதிகளுக்கு அற்புதமாகச் சேவை செய்வதாகவும், மிக விரைவிலேயே அவர்களை தத்தம் இருப்பிடங்களில் குடியமர்த்த ராஜபக்சே உறுதியளித்திருப்பதாகவும் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார் ரவிசங்கர்ஜி. அந்த “ஜி’ கொடுத்த சி.டி.யைப் பார்த்த “ஜெ’யோ “”தமிழர்கள் அடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள். தனி ஈழம்தான் தீர்வு” என்று முழங்குகிறார். பொது அறிவுக்கே புரியும் இந்த முரண்பாடு, பகுத்தறிவுக்கு விளங்கவில்லையா?

இந்த அதிரடி அறிவிப்பு பற்றி சோ உள்ளிட்ட தமிழகத்தின் பார்ப்பன ஊடகங்களோ, காட்சி ஊடகங்களோ, ஜெயாவைப் பிரதமராக்க விரும்பும் சுப்பிரமணிய சாமி போன்றோரோ எவ்வித விமரிசனமும் செய்யாமல் மவுனம் சாதிக்கிறார்களே, இதுவும் இவர்களுக்கு விநோதமாகத் தோன்றவில்லையா?

இதுநாள் வரை ஈழத்தை எதிர்த்து வந்த ஜெயலலிதா, சிங்கள இராணுவத்தின் தாக்குதல் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் சூழலில், “புலிகளுக்குப் பிந்தைய இலங்கை’ என்பது குறித்த விவாதங்கள் எழுந்து விட்ட சூழலில், திடீரென்று தனி ஈழம் அறிவிக்கிறாரே, இந்த அறிவிப்பு ஏன் இந்தத் தருணத்தில் வரவேண்டும் என்ற கேள்வி கூட ஈழ ஆதரவாளர்களுக்கு எழவில்லையா?

காங்கிரசு கட்சியின் கபில் சிபல் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜெயலலிதா, “”சுதந்திரப் போராட்டம் என்ற பெயரில் போராளிக் குழுக்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தான் ஆதரிக்கவில்லை” என்று பதிலளித்து, தான் அமைக்கவிருக்கும் ஈழத்திலிருந்து புலிகளை நாசூக்காகக் கழற்றியிருக்கிறாரே, இதுவும் ஈழ ஆதரவாளர்களுக்குப் புரியவில்லையா?

இராமன் பாலம் ஆனது சேதுக்கால்வாய்!

ஜெயலலிதாவின் கூற்றை வழிமொழிந்திருக்கும் அசோக் சிங் கால், “”இலங்கையில் தமிழ் பேசும் இந்துக்களை அந்நாட்டு அரசு படுகொலை செய்து வருகிறது. இலட்சக்கணக்கான இந்துக்கள் ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்… இலங்கையில் இன்று நடப்பது போன்றே கிழக்கு பாகிஸ்தானிலிருந்து ஒரு கோடிக்கும் அதிகமான இந்துக்கள் அகதிகளாய் வந்தபோது, அப்போதைய பிரதமர் இந்திரா எடுத்த உறுதியான நிலைப்பாட்டினால் வங்காளதேசம் உருவானது. இன்று இலங்கையிலும் அதே சூழ்நிலைதான் உள்ளது… இலங்கைப் பிரச்சினை என்பது தமிழர்கள் பிரச்சினை மாத்திரமல்ல, இது உலகளாவிய இந்துக்களின் பிரச்சினை… தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குழம்பிப் போயுள்ளதோடு, சரியான தீர்வைக் கூற முடியாமல் மக்களைக் குழப்பி வருவதால், இந்தப் பிரச்சினை வெறும் தமிழர் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படுகிறது” என்று கூறியிருக்கிறார். இதற்கும் ஜெயலலிதாவின் பிரகடனத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கக்கூடும் என்ற ஐயம் கூட ஈழ ஆதரவாளர்களுக்கு எழவில்லையா?

பாரதிய ஜனதாவின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினரும், “இந்திய இலங்கை பிரகதி சன்சதியா’ என்ற அமைப்பின் உறுப்பினருமான சேஷாத்ரி சாரி, “”இலங்கை விவகாரத்தில் பி.ஜே.பி.யும், காங்கிரசும் கிட்டத்தட்ட ஒரே கொள்கையோடுதான் செயல்படுகின்றன. புலிகளுக்கு எதிராக நடக்கும் போரில் இந்தியா தலையிடாது. விடுதலைப்புலிகள் இருக்கும் இடத்தில் இராணுவத்தின் பணி முடிந்தவுடன், சமூதாயப் பணிகளை மேற்கொள்ளும் சிவிலியன்களின் முகம் மட்டுமே தென்பட வேண்டும். ஏற்கெனவே பிள்ளையான், கருணா போன்றவர்களின் உதவியோடு இந்தப் பணிகளை இலங்கை அரசு செய்து வந்தாலும், இவர்களை விடவும் தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிப் பணிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்” என்று ராஜபக்சேயிடம் கோரியிருப்பதாக 4.2.09 ஜூனியர் விகடனில் பேட்டியளித்திருக்கிறார்.

ஈழத்தமிழர்கள் மத்தியில் கிறித்தவ மதத்திற்கு உள்ள செல்வாக்கை ஒழிப்பது பற்றி இலங்கை நாளேடுகளிலேயே ஆர்.எஸ்.எஸ் எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். தமிழ் முசுலீம் மக்களுக்கு எதிரான புலிகளின் நடவடிக்கைகள் காரணமாக, அவர்கள் மத்தியில் பரவலாகத் தோன்றத் தொடங்கியிருக்கும் மதவாத அமைப்புகளும், அவற்றுக்கு பாகிஸ்தானும் சவூதியும் அளித்து வரும் ஆதரவும் கூட, ஈழத்தில் இந்துக்கள் கொல்லப்படுவது குறித்த கவலையையும் அங்கே தலையிடுவதற்கான அக்கறையையும் இந்துத்துவா அமைப்புகளுக்கு ஏற்படுத்தியிருக்கும். கூடுதலாக, புலி ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள இராணுவத்தால் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டிருக்கும் ஆதாரங்களையெல்லாம் காட்டி பாரதிய ஜனதாவின் ஆதரவையும் கோரி வருகிறார்கள்.

இலங்கை இந்து ஆகிறான் ஈழத்தமிழன்!

ஆகவே, ரவிசங்கர்ஜி, சிங்கால்ஜி, சாரிஜி ஆகியோருடைய கருத்துக்களுக்கும் ஜெயலலிதாவின் கருத்துக்கும் இடையில் காணப்படும் இந்த ஒற்றுமை, எந்த சி.டியையும் பார்த்துத் தோன்றியதல்ல. சேதுக்கால்வாய் திட்டத்துக்கு உரிமை கொண்டாடிக்கொண்டிருந்த ஜெயலலிதா, ராமர் பாலம் பிரச்சினையை சங்க பரிவாரம் எழுப்பிய மறுகணமே பல்டியடித்து, “ராமர் பாலத்தைக் காப்பாற்று, கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்’ என்று சாமியாடத் தொடங்கினாரே, அன்று அந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? ராம பிரான் பாலம் கட்டும் காட்சியை சி.டி யில் பார்த்துத்தான் அம்மையார் தன் கருத்தை மாற்றிக் கொண்டாரா? அல்லது ராமன் பிறந்த இடம் பாபர் மசூதிதான் என்று கல்வெட்டு ஆதாரத்தை வைத்துக் கண்டுபிடித்தாரா?

இந்த உண்மைகளையெல்லாம் ஈழ ஆதரவாளர்கள் பார்க்க விரும்பவில்லையா, அல்லது தமிழ் ஈழம் பெறுவதற்காக கோட்சே க்கு தெரிந்தே ஆதரவு வழங்குகிறார்களா? சேதுக்கால்வாய் ராமன் பாலமாக மாறியது போல ஈழத் தமிழர் பிரச்சினை இலங்கை இந்துக்கள் பிரச்சினையாகத் திரிக்கப்படுவது குறித்து இவர்களுக்குக் கவலையில்லையா?

“ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கான காரணம் என்னவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். காரியம் நடந்தால் சரி’ என்பதுதான் இப்போதைக்கு ஈழ ஆதரவாளர்களின் மனநிலை. “ஒருவேளை ஜெயலலிதா உண்மையிலேயே ஈழத்தைப் பெற்றத் தந்துவிடக் கூடும்’ என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு இருக்கும் போலும்! “பார்ப்பன சங்கராச்சாரியை அதிரடியாகக் கைது செய்ததைப் போல, 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதைப் போல, தமிழ் ஈழத்தையும் ஜெயலலிதா வழங்கக் கூடாதா என்ன” என்று ஒருவேளை இவர்கள் சிந்திக்கலாம்.

தன்னை முன்நிறுத்திக் கொள்வதில் பெருவிருப்பு கொண்ட ஜெயலலிதா, தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தருவதன் மூலம் உலகத் தமிழினத் தலைவரைப் பதவியிலிருந்து வீழ்த்தி, உலகத் தமிழினத் தலைவியாக அரியணையில் அமர ஆசைப்படக் கூடும். ஜெயலலிதாவின் பார்ப்பனப் பாசிச மனோபாவத்தில் பாசிசத் தன்மை மேலோங்கி, பார்ப்பனத் தன்மை சற்றே ஒதுங்கி வழிவிடும் அந்த இடைவெளியில், ஈழம் முளைத்து விடலாம் என்று இவர்கள் கனவு காணவும் கூடும். “”இயற்கையின் கொடை” என்ற வைகோவின் கூற்றும், “”அம்மா ஈழம் அமைத்துத் தருவார்” என்ற சீமானின் நம்பிக்கையும் இத்தகைய சிந்தனையிலிருந்துதான் தோன்ற இயலும்.

கலைஞர் வழங்கிய கலர் டிவி! ஜெயலலிதா வழங்கும் தமிழ் ஈழம்!

பார்ப்பனப் பாசிசம் அல்லது மேலாதிக்கக் கொள்கையின் பின்புலமாக இருக்கும் ஆளும்வர்க்க நலன்களை இருட்டடிப்பு செய்து விட்டு, அவை அனைத்தையும் தனிநபர்களின் விருப்பங்களாகவும் குணாதிசயங்களாகவும் காட்டுவது, ஓட்டுப்பொறுக்கி அரசியலின் சந்தர்ப்பவாதத்துக்குத்தான் வசதியானதாக இருக்கிறது!

நேற்று ஜெயலலிதா ஈழத்தை ஏன் எதிர்த்தார் என்று கேட்டால், அதற்கு விடை பாப்பாத்தி; கருணாநிதி ஆதரித்ததற்குக் காரணம் அவர் தமிழர்; இன்று கருணாநிதி துரோகி, ஜெயலலிதா இயற்கையின் கொடை. நளினி விவகாரத்தில் சோனியா கருணைக்கடல், ஈழப் பிரச்சினையிலோ பழிவாங்கும் பேய்! அதே நபர்களின் வாயிலிருந்துதான் இந்த வருணனைகள் வருகின்றன. “”தமிழினத் தலைவர் துரோகியாக மாறியது எப்படி” என்ற கேள்வியும் இவர்களுக்கு எழுவதில்லை; “”பாப்பாத்தி ஈழத்தாயானது எப்படி” என்ற கேள்விக்கும் இவர்கள் விடை தேடுவதில்லை.

இப்போதும் கூட “நாராயணன், மேனன் என்ற மலையாளி அதிகாரிகளை நீக்கிவிட்டு தமிழ் அதிகாரிகளை நியமித்துவிட்டால் இந்தியாவின் இலங்கைக் கொள்கை மாறிவிடும்’ என்றுதான் விளக்குகிறார் நெடுமாறன். கருணாநிதி என்ற தமிழர் முதல்வராகவு ம், சிதம்பரம் என்ற தமிழர் உள்துறை அமைச்சராகவும், இன்னும் அன்புமணி முதலான எண்ணற்ற அமைச்சரவைத் தமிழர்களும் டில்லியில் இருந்தும் நடக்காத காரியம், இரண்டு அதிகாரிகளை மாற்றினால் நடந்துவிடுமா? அந்த அதிகாரிகளும் தமிழ் உணர்வுள்ள அதிகாரிகளாக இல்லாமல் சிதம்பரம் போன்றோராக வாய்ப்பின் என்ன செய்வது? நியமிக்கப்பட இருக்கும் வெளியுறவுத்துறை தமிழ் அதிகாரிகளின் இன உணர்வை எந்த அளவுகோலை வைத்து அளப்பது?

இத்தகைய விளக்கங்களைக் கூறுபவர்கள்தான் “”இராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றுத் தருகிறேன்” என்று ஜெயலலிதா அறிவித்தவுடனே அதை வரவேற்கிறார்கள். கலைஞர் கொடுத்த டி.வி, ஜெயலலிதா கொடுத்த சைக்கிள் போல, எம்.ஜி.யார் தந்த களம்தான் ஈழம் என்கிறார் வைகோ. ஒரே நொடியில் முப்பதாண்டு காலப்போராட்டத்தை புரட்சித்தலைவி தனது முந்தானையில் முடிந்து கொள்ள முடிந்தது எப்படி என்பது விளங்குகிறதா? எனினும், ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு ஈழ ஆதரவாளர்களிடம் ஆரவாரத்தைத் தான் தோற்றுவித்திருக்கிறது. ஈழத்துக்கு ஆதரவாகத் தமிழகத்தில் தோன்றியிருக்கும் எழுச்சி ஜெயலலிதாவையே சரணடையச் செய்துவிட்டதாக அவர்கள் கருதிக் கொள்ளக்கூடும் அதுதான் தமிழர் உணர்வுக்கு ஆதரவான சந்தர்ப்பவாதம்.

அவலத்துக்குத் தீர்வு மீண்டும் அமைதிப்படை?

மூன்று மாதங்களில் 7000 மக்கள் கொல்லப்பட்டு, இலட்சக் கணக்கான மக்கள் அகதி முகாம்களில் தள்ளப்பட்டு, பல்லாயிரம் மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கி பரிதவித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழல், “எதைத் தின்றால் பித்தம் தீரும்’ என்ற பரிதாபத்துக்குரிய நிலைக்கு ஈழத்தமிழ் மக்களையும், புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களையும் தள்ளியிருக்கலாம். நேற்றுவரை கருணாநிதியின் மீது நம்பிக்கை வைத்து கைவிடப்பட்டவர்கள், தங்களுடைய புதிய தெய்வமாக ஜெயலலிதாவை வரித்துக் கொள்ளலாம். முப்பதாண்டு காலப் போரினால் களைப்படைந்து போன மனம், ஒருவேளை ஜெயலலிதாவின் ஈழப்பிரகடனத்தில் ஆறுதலைத் தேடலாம்.

புற்றுநோயின் துன்பத்தை ஒத்த கொடிய ரண வேதனையை அனுபவித்து வருகிறார்கள் ஈழத்தமிழ் மக்கள். இதனை நாம் உணராமல் இல்லை. அதற்காகப் புற்றுநோயாளியை சூனியக்காரியிடம் சிகிச்சைக்கு ஒப்படைத்துவிட முடியுமா?

நாற்பது தொகுதிகளையும் கொடுத்து, தான் கைகாட்டும் நபர் தான் பிரதமர் (ஜெயலலிதா வேறு யாரையாவது கை காட்டுவாரா என்ன) என்ற நிலையும் ஏற்பட்டால், இராணுவத்தை அனுப்பித் தனி ஈழம் வாங்கித் தருகிறேன் என்கிறார் ஜெயலலிதா. தூக்கித் தோளில் வைத்தால் மலையைச் சுமந்து காட்டுகிறேன் என்பதற்கு இணையான பேச்சு இது. ஜெயலலிதா பிரதமரே ஆகட்டும். அவர் தலைமையிலான கூட்டணி அரசு இலங்கை மீது உடனே படையெடுத்து சிங்கள இராணுவத்தை நிர்மூலம் செய்து விடுமா? அதற்குத் தோதாக தனது தேயிலைத் தோட்டங்களை டாடாவும், சிமெண்டு ஆலைகளை பிர்லாவும், இன்ன பிற தரகு முதலாளிகள் தங்கள் தொழில்களையும் மூட்டை கட்டிக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்பி விடுவார்களா? ஈழம் அமைவதால் எங்களுக்கென்ன இலாபம் என்று கேட்க மாட்டார்களா? இன்று இலங்கை இராணுவத்தின் தோழனாகத் தோளோடு தோள்நின்று தமிழர்களைக் கொன்றொழிக்கும் இந்திய இராணுவத்தின் உயரதிகாரிகள், புரட்சித்தலைவியின் ஆணை கேட்டவுடனே மறுபேச்சில்லாமல் சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தி விடுவார்களா? ஏற்கெனவே இந்தியாவுடன் தெற்காசிய மேலாதிக்கத்துக்குப் போட்டி போடும் சீனாவும், ஆயுதங்களை அள்ளித்தரும் பாகிஸ்தானும் புரட்சித்தலைவியின் போர்ப்பிரகடனத்தைக் கேட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிடுவார்களா? காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்குக் கொஞ்சம் விட்டுக் கொடுத்து முடித்துக் கொள்ளுமாறு இந்தியாவை ஏற்கெனவே அரட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, இந்தியாவின் இலங்கைப் படையெடுப்புக்கு உடனே ஆசி வழங்கி விடுமா?

வாதத்துக்கு வங்கதேச உதாரணத்தைக் காட்டலாம். ஆனால் அன்றைய உலகச் சூழல் வேறு. அத்தகைய நடவடிக்கையை ஆதரிப்பதற்கு இது பனிப்போர்க் காலமில்லை. வங்கதேசத்தைப் போல இலங்கையைப் பிளக்கும் நோக்கமும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு இல்லை. “”ஈழப்போராட்டத்தை நசுக்கி, தாங்கள் விரும்பும் தொழில் அமைதியை இலங்கையில் நிலைநாட்ட வேண்டும்” என்பதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் விருப்பம்.

மாறியிருக்கும் உலகச் சூழல் பார்க்க மறுக்கும் ஈழ ஆதரவாளர்கள்!

“”இராணுவத்தை அனுப்ப வேண்டாம். தமிழ் ஈழத்தை அங்கீகரித்தால் போதும். புலிகள் இயக்கத்தின் மீது இந்தியா விதித்திருக்கும் தடையை நீக்கினால் போதும். அதனைத் தொடர்ந்து மற்ற நாடுகள் அடுத்த கணமே தடையை நீக்கிவிடும். ஈழம் அமைப்பதைப் புலிகள் பார்த்துக் கொள்வார்கள்” என்று ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைக்கிறார் சீமான். புலிகளின் இராணுவத்திறன் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் பல ஈழ ஆதரவாளர்களும் இவ்வாறே கருதுகின்றனர். புலிகளுக்கு எதிராக சிங்கள அரசு மட்டுமா களத்தில் நிற்கிறது?

இலங்கை, இந்துமாக்கடலின் கேந்திரமான மையம். அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் போட்டியாக அங்கே கால் பதிக்கும் முயற்சியில் சீனா வெற்றி பெற்றுவிட்டது. இந்தியாவின் மேலாதிக்க நடவடிக்கைகளால் வெறுப்புற்ற தெற்காசிய நாடுகளையும் சீனா கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது. சீனரசியக் கூட்டணியின் மேலாண்மையை முறியடிக்க விரும்பும் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவின் துணையுடன் இலங்கையில் காலூன்ற விரும்புகின்றனர். இந்த நோக்கத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் எதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள்.

எனினும் புலம் பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்கள் காரணமாக அவர்கள் தலையிட்டனர். “மனிதாபிமான நோக்கில் நிலைமையை ஆய்வு செய்ய தங்களது பிரதிநிதியை போர்ப்பகுதிக்கு அனுமதிக்க வேண்டும்’ என்று பிரிட்டன் கோரியது. போரில் சிக்கிக் கொண்ட பொதுமக்களை மீட்பதற்கு பிரான்சு கோரிக்கை வைத்தது. புலிகள் இயக்கத் தலைமையை பத்திரமாக வெளியேற்றவும், மூன்றாம் தரப்பிடம் சரணடையவும் அனுமதிப்பதன் மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்றும் அமெரிக்கா கோரியது. அனைத்துக் கோரிக்கைகளையும் நிராகரித்தது மட்டுமல்ல, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதாக அவர்களைக் குற்றம் சாட்டியிருக்கிறது இலங்கை அரசு. ஒரு சுண்டைக்காய் அரசு அமெரிக்காவுக்கும் மேலை நாடுகளுக்கும் சவால் விடுவதைப் போலப் பேச முடிவதற்கு என்ன பின்புலம்? இந்திய அரசின் ஆதரவு மட்டுமல்ல, சீனா பாகிஸ்தானின் ஆதரவும்தான். மேலை நாடுகளைப் பொருத்தவரை அவை தமது போர்த்தந்திர நோக்கங்களுக்கும், வணிக நோக்கங்களுக்கும் குந்தகம் நேராத அளவிற்கு மட்டுமே இலங்கையில் தலையிடும்.மேலும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் எல்லா விடுதலை இயக்கங்களையும் ஒடுக்குவதே இன்றைய உலகமயக் கொள்கையின் அணுகுமுறை. இதனை மீறும் தேவையோ அவ்வாறு மீறுவதனால் ஆதாயமோ மேலை ஏகாதிபத்தியங்களுக்கு இல்லை.

இந்த ஒட்டுமொத்தச் சூழலையும் ஈழ ஆதரவாளர்களோ புலிகளோ பார்க்க மறுக்கின்றனர். அரசியலைப் புறந்தள்ளிய புலிகள் இயக்கத்தின் இராணுவவாதக் கண்ணோட்டமும், தமிழ்த் தேசியத் தனிமைவாதமும், ஜனநாயகத்தை மறுக்கும் பாசிசப் போக்கும், ஆட்சி மாற்றத்தின் மூலம் இந்திய அரசைத் தமக்குச் சாதகமாகத் திருப்பிவிட முடியும் என்று இன்னமும் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் அவர்களை அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

இராணுவத் தீர்வுக்குப் பிறகுதான் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்கிறது சிங்களப் பாசிச அரசு. இராணுவத் தீர்வுதான் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்று கருதுகிறது புலிகள் இயக்கம்.எனவே, இப்போதும் இராணுவரீதியாகத் தம்மைப் புனரமைத்துக் கொள்ளும் நோக்கத்தை மட்டுமே மையப்படுத்தி அவர்கள் அரசியல் தீர்வைத் தேடுகின்றனர். போர்நிறுத்தத்துக்கு உதவுமாறு ரவிசங்கரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர், நேரடியாக, இராணுவத்தலையீடு செய்யுமாறு ஒபாமாவிடம் மன்றாடுகின்றனர். ஜெயலலிதாவின் வாக்குறுதியை நம்புகின்றனர், அல்லது காங்கிரசு அரசை வீழ்த்திவிட் டால் இந்திய அரசின் ஈழக்கொள்கை மாறிவிடும் என்று எதிர்பார்க்கின்றனர். இவை எதுவும் உரிமை மறுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை தேசிய இனத்தின் கோரிக்கைகளையோ, மக்களது விருப்பங்களையோ பிரதிபலிக்கவில்லை.

தோற்றாலும் போராடுவாரா ஜெயலலிதா?

துயரமான ஒரு சூழ்நிலையில் சிக்கியுள்ள மக்கள் ஆறுதலான விடைகளையும் எளிய தீர்வுகளையும் எதிர்பார்ப்பது இயல்புதான். இந்தச் சூழலில் இத்தகைய கேள்விகளை எழுப்புவதே இரக்கமற்ற செயல் என்று ஈழ ஆதரவாளர்கள் சாடக்கூடும். விமரிசனப் பார்வையில் அணுகுவதே தமிழினத் துரோகம் என்று கோபப்படவும் கூடும். மருத்துவன் மீது கோபமும் மந்திரவாதியின் மீது நம்பிக்கையும் கொள்ளும் மனநிலை இது.

ஈழமக்களின் பரிதாபத்துக்குரிய நிலையையும், தமிழக மக்கள் கொண்டிருக்கும் நியாயமான அனுதாப உணர்ச்சியையும் தனது பதவி வேட்டைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஜெயலலிதாவின் பார்ப்பன நரித்தனத்தைப் பார்த்து இவர்களுக்குக் கோபம் வரவில்லையே! இதுநாள் வரை ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக ஜெயலலிதா கக்கி வந்த நஞ்சைக் காட்டிலும் கொடிய மோசடி இந்த வாக்குறுதிதான் என்பது இவர்களில் பலருக்கு உரைக்கவுமில்லையே!

நாற்பது நாற்காலிகளுக்குப் பதிலாக 30 கிடைத்தால், ஈழம் இல்லையா? ஜெயலலிதா கைகாட்டாத நபர் பிரதமர் ஆகிவிட்டால்,ஈழம் இல்லையா? அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடு காடுதானா? இருக்கின்ற நாற்காலிகளை வைத்துக் கொண்டு ஈழத்துக்காகப் போராடுவாரா புரட்சித்தலைவி? இத்தகைய கேள்விகளை ஜெயலலிதாவிடம் கேட்கும் தைரியம் ராமதாசுக்கோ, வைகோவுக்கோ, இரட்டை இலைக்கு வாக்கு கேட்கும் ஈழ ஆதரவாளர்களுக்கோ உண்டா? ஈழம் கிடைப்பது இருக்கட்டும், மே 16ஆம் தேதிக்குப் பின்னால் போயஸ் தோட்டத்தில் இவர்களுக்கெல்லாம் தரிசனம் கிடைக்குமா?

ஜெ துரோகமிழைத்தால் ஈழ ஆதரவாளர்கள் பொறுப்பேற்பார்களா?

இன்று ஈழ மக்களின் மீதான தமிழக மக்களின் அனுதாபத்தை அறுவடை செய்து ஜெயலலிதாவின் காலடியில் சமர்ப்பிக்கிறவர்கள், நாளை ஜெ துரோகமிழைத்தால், அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்வார்களா? கருணாநிதி குடும்பம் அடித்து வரும் கொள்ளையால் தீப் பிழம்பாகியிருக்கும் ஜெயலலிதாவின் வயிறும், ஊழித்தீயாய் மூண்டெ ழும் அவரது பிரதமர் பதவிக் கனவும் எத்தகைய இமாலயப் பொய்யையும் அலட்சியமாக உமிழும் என்பதை இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? தொங்குநிலை நாடாளுமன்றமும், பிரத மர் பதவியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பும் ஒவ்வொரு ஓட்டுப் பொறுக்கிக் கழிசடையின் முன்னாலும் பிரகாசமாக ஒளிவிடும் இன்றைய சந்தர்ப்பம்தான் “தமிழர் உணர்வைக் கணக்கில் கொண்ட சந்தர்ப்பவாதத்தை’ ஜெயலலிதாவிடம் தோற்றுவித்திருக்கிறது என்பது இவர்களுக்கு எட்டவில்லையா?

ஏற்கெனவே பாபர் மசூதி இடிப்பை ஆதரித்ததற்காக மெரினா கடற்கரையில் வருத்தம் தெரிவித்து “இனி ஒருபோதும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேரமாட்டேன்’ என்று சத்தியம் செய்தவர்தான் ஜெயலலிதா. த.மு.மு.க.வும் வலது கம்யூனிஸ்டுகளும் அதில் மதிமயங்கி ஆதரவு கொடுத்தனர். மதமாற்றத் தடைச்சட்டத்தைக் கொண்டு வந்தது முதல் இனப்படுகொலை நாயகன் மோடிக்கு விருந்து வைத்தது வரை அத்தனையும் அதன் பின்னர்தான் நடந்தன.

இன்று ஜெயலலிதாவின் பொய் வாக்குறுதிக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு வாக்கு சேகரித்தவர்கள், நாளை ஜெயா மாறிவிட்டால் என்ன செய்வார்கள்? “”அடுத்த தேர்தலில் எதிர்ப்பேன்” என்கிறார் சீமான். வேறு வழியில்லாத மக்கள் அதைத்தானே ஒவ்வொரு தேர்தலிலும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தன்னளவில் நம்பிக் கெடுவது வேறு, மற்றவர்களையும் நம்ப வைத்துக் கெடுப்பது வேறு. குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையில் காங்கிரசை வெளியிலிருந்து ஆதரிப்பதாகக் கூறிக்கொண்டு, நான்காண்டு காலம் நாட்டைச் சீரழிப்பதற்கு ஆதரவும் கொடுத்துவிட்டு, கடைசியில் நடந்ததற்கெல்லாம் நாங்கள் பொறுப்பில்லை என்று கூறி விலகிக் கொண்டார்களே மார்க்சிஸ்டுகள், அவர்கள்தான் இந்த மோசடிக் கலையின் முன்னோடிகள். அந்தப் பட்டியலில் ஈழ ஆதரவாளர்களும் சேருவதை இனி காணப் போகிறோம்.

“கட்சி மாறக்கூடும்’ கண்டிசன்ஸ் அப்ளை!

“”தேர்தல் முடிவுக்குப் பிறகு இப்போதைய கூட்டணியில் இருப்பவர்கள் அப்படியே நீடிப்பார்களா என்பது சந்தேகம்தான்” என்கிறது பெரியார் திராவிடர் கழகம். கம்பெனி விளம்பரங்களுக்குக் கீழே கண்ணுக்குத் தெரியாத எழுத்தில் “”கண்டிசன்ஸ் அப்ளை” என்று எழுதியிருக்கும் எச்சரிக்கையை நினைவுபடுத்துகிறது இந்த வாக்கியம்.

கூட்டணியும் சந்தேகமாம், கொள்கையும் சந்தேகமாம், ஓட்டு மட்டும் உத்திரவாதமாகப் போட்டு விட வேண்டுமாம். முந்தாநாள் வரை காங்கிரசுடன் குடும்பம் நடத்திய மருத்துவர் ஐயா, இன்று காங்கிரசு வெறுப்பை அறுவடை செய்து கொண்டு, நாளை காங்கிரசுடனேயே சேர்ந்து விடக்கூடும். “”காங்கிரசை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறிவந்த பிரகாஷ் காரத், “காங்கிரசை ஆதரிப்பது பற்றி தேர்தலுக்குப் பின் முடிவு செய்யப்படும்’ என்று மே 10ம் தேதி கூறிவிட்டார். “”காங்கிரசு அரசுக்கு ஆதரவு தருவீர்களா?” என்ற கேள்விக்கு “”எல்லா சாத்தியங்களும் திறந்தே இருக்கின்றன” என்று பதில் அளித்திருக்கிறார் அதிமுக எம்.பி மைத்ரேயன். இப்படியாக காங்கிரசை ஒழிப்பதற்காக இவர்கள் திரட்டிய ஓட்டு, தேர்தலுக்குப் பின் காங்கிரசை வலுப்படுத்துவதற்குப் பயன்படலாம். இருப்பினும் இன்றைய நிலவரப்படி இரட்டை இலைக்கு வாக்களியுங்கள், கண்டிசன்ஸ் அப்ளை என்கிறார்கள் பெரியார் தி.க வினர்.

ஈழ ஆதரவாளர்களின் பல வண்ணக் கூட்டணியைப் பாருங்கள்! ஜெயலலிதாவை நம்புங்கள் என்று சிலர், நம்ப முடியாது என்று சிலர், காங்கிரசை ஒழிக்கவேண்டும் என்று சிலர் காங்கிரசுக்குப் பாடம் என்று சிலர், யார் வரவேண்டும் என்பது நம் கவலை அல்ல என்று சிலர், அதிமுகதான் வரவேண்டும் என்று சிலர்….. எனினும் இந்தச் சிற்றோடைகள் எல்லாம் நடைமுறையில் “இரட்டை இலை’ என்ற நதியில்தான் சங்கமிக்கின்றன.

ஜெயலலிதா தமிழ் ஈழத்தைப் பிரகடனம் செய்தவுடனே, அவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு “”நீங்கள் தமிழ் ஈழத்தை ஏற்கிறீர்களா இல்லையா?” என்று கருணாநிதிக்கு சவால் விடுகிறார் மருத்துவர் ஐயா. பக்கத்திலேயே இருக்கும் ஏ.பி பரதன் “”நாங்கள் தனி ஈழத்தை ஏற்கவில்லை”என்று அறிவிக்கிறார்.

மார்க்சிஸ்டுகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் சிங்கள இனவெறி ஜே.வி.பியின் தோழமைக் கட்சி; ராஜபக்சேயின் தோழரான இந்து ராமுக்கும் அது தோழமைக் கட்சி; சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்கும் சீனத்தின் போலி கம்யூனிஸ்டு அரசுக்கும் அது தோழமைக் கட்சி; இங்கே தமிழ் ஈழத்தை வழங்கவிருக்கும் ஜெயலலிதாவுக்கும் அது தோழமைக் கட்சி. எனினும் இதற்குப் பெயர் ஈழ ஆதரவுக் கொள்கைக் கூட்டணியாம்!

தேர்தல் சதுரங்கத்தில் பகடைக்காய்களா மக்கள்?

“”இன்றைக்கு தனி ஈழம் என்று ஜெயலலிதாவே பேச வேண்டியிருக்கிறது என்றால் அதுவே ஒரு வெற்றிதான். ஜெயலலிதா துரோகமிழைப்பார் என்று எங்களுக்குத் தெரியாதா? அவருடைய ஆதரவைத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொள்கிறோம். அவ்வளவுதான்” என்று தங்களது சந்தர்ப்பவவாதத்துக்கு விளக்கமளிக்கும் மதியூகிகளும் இருக்கிறார்கள். 1983 முதல் இந்திய உளவுத்துறையைப் “பயன்படுத்திக் கொள்வதாகத்தான்’ எல்லா ஈழப்போராளி இயக்கங்களும் கூறினார்கள். யார், யாரைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதற்கு வரலாறு சாட்சி கூறுகிறது.

மக்களை அரசியல் முன்முயற்சி இல்லாத மந்தையாகக் கருதுவது என்ற விசயத்தில் “போராளி’களுக்கும் “புரட்சி’த்தலைவிக்கும்தான் எவ்வளவு ஒற்றுமை! “”எனக்கு ஓட்டுப்போடு. ஈழம் வாங்கித் தருகிறேன்” என்கிறார் ஜெயலலிதா. “”நான் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப் போடு, விடுதலை வாங்கித் தருகிறேன்” என்கிறார்கள் போராளிகள்.

“”தனி ஈழம் தருகிறேன் நம்புங்கள்” என்று ஜெயலலிதா மக்களிடம் கூறுவது அவரைப் பொருத்தவரை ஒரு தந்திரம். “ஜெயலலிதாவை நம்புங்கள்’ என்று ஈழ ஆதரவாளர்கள் மக்களிடம் கூறுவதும் இவர்களைப் பொருத்தவரை ஒரு தந்திரம்தான். இரு தந்திரக்காரர்களாலும் ஏய்க்கப்படும் மக்களோ, இந்தத் தேர்தல் சதுரங்கத்தில் வெறும் பகடைக்காய்கள்.

புறக்கணிப்பே பொருத்தமான பதிலடி!

“”மக்களை வெறும் பகடைக் காய்களாகக் கருதும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தல் என்பது எதிரிகளின் ஆயுதம். மக்கள் இதனைத் தம் ஆயுதமாகப் பயன்படுத்த முடியாது. ஓட்டுக் கட்சிகள் ஒருவருக்கு எதிராக ஒருவர் சவடால் அடிக்கவும், பதவிக்கு வந்து பொறுக்கித் தின்னவும் இந்தத் தேர்தல் பயன்படுகிறது. நாட்டின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையோ ஆளும் வர்க்கங்கள்தான் தீர்மானிக்கின்றன. இந்த விதியை ஏற்றுக் கொண்டு, அதன் வரம்புக்கு உட்பட்டுத்தான் இந்த நாடகம் நடக்கிறது. இந்திய ஆளும் வர்க்கங்களின் விருப்பத்துக்கு முரணான எதையும் எந்தக் கட்சியின் ஆட்சியும் செய்ய முடியாது. சொந்த மண்ணிலிருந்து இந்திய மக்களையே வெளியேற்றி அதனைப் பன்னாட்டு முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுக்கும் ஆட்சியாளர்கள், ஈழத்தமிழ் மக்களுக்காக இலங்கையில் இந்தியத் தரகு முதலாளிகளின் நலனை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்” என்று நாங்கள் கூறுகிறோம்.

அதனால்தான், “”இலங்கையின் மீது இந்திய ஆளும் வர்க்கத்தின் பிடி அகல வேண்டுமானால், அதன் காலடி நிலம் நடுங்க வேண்டும். இலங்கைக்கு ஆசைப்பட்டால், தமிழகத்தை இழக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்தையாவது இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு நாம் ஏற்படுத்த வேண்டுமானால், தமிழகமே தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்” என்று கூறுகிறோம்.

மேலாதிக்கத்துக்குப் பணிந்து பெறுவதன் பெயர் விடுதலையா?

ஈழ ஆதரவாளர்களோ ஆளும் கட்சியை மட்டுமே அச்சுறுத்த விரும்புகிறார்கள். இலங்கையின் மீதான இந்திய ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கத்தை அவர்கள் எதிர்ப்பதில்லை. அந்த மேலாதிக்கத்துக்கு உட்பட்டு ஈழம் கோருகிறார்கள். இந்திய மேலாதிக்கத்துக்கு சிங்கள அரசை விட ஈழத்தமிழர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். இலங்கையில் மேலாதிக்கத்துக்குப் போட்டியிடும் சீனா, சிங்கள அரசை ஆதரிப்பதைச் சுட்டிக்காட்டி ஈழத்துக்கு இந்திய மேலாதிக்கத்தின் ஆதரவைக் கோருகிறார்கள். எனவேதான் படையனுப்பி ஈழம் பெற்றுத்தருவேன் என்ற ஜெயலலிதாவின் கூற்று அவர்களுக்கு இனிக்கிறது, காரிய சாத்தியமானதாகவும் தோன்றுகிறது; தேர்தல் புறக்கணிப்பு கசக்கிறது, காரிய சாத்தியமற்றதாகவும் தோன்றுகிறது.

ஈழப்பிரச்சினையைக் காட்டி பதவிவேட்டை நடத்தும் வைகோவுக்கும், மருத்துவர் அய்யாவுக்கும், புரட்சித்தலைவிக்கும், போலி கம்யூனிஸ்டுகளுக்கும் “தேர்தல் புறக்கணிப்பு’ உவப்பளிக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் “நான் ஈழத்தின் எதிரிதான்’ என்று இந்திய ஆளும் வர்க்கம் ஒரு நூறு முறை நிரூபித்த பின்னரும், ஜெயலலிதாவின் செல்வாக்கை வைத்து ஆளும் வர்க்கத்திடம் மனமாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று ஈழ ஆதரவாளர்கள் நம்புகிறார்களே, இந்த மூட நம்பிக்கையை ஒழிக்க எந்தப் பெரியாரைக் கொண்டு வருவது?

தமிழர் உணர்வைக் கெடுத்தது யார்? தமிழர் ஒற்றுமையைத் தடுத்தது யார்?

ஜெயலலிதாவிடமும், ஆளும் வர்க்கத்திடமும் இவ்வளவு நம்பிக்கை வைப்பவர்கள், அந்த நம்பிக்கையை மக்கள் மீது வைப்பதில்லை என்பதுதான் வேடிக்கை! “”அரசியல் கட்சிச் சார்புகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்களாக ஒன்றுபடுங்கள்” என்று மேடையில் முழங்கும் இதே தமிழுணர்வாளர்கள்தான், தமிழர்கள் அப்படி ஒன்றுபடுவதற்கான வாய்ப்பையும் முறியடித்திருக்கிறார்கள்.

கலைஞர் ஈழப்படுகொலையைத் தடுக்கத் தவறிவிட்டார் என்று தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புகளின் ஆதரவாளர்கள் பலர் கருதுவதாகவே வைத்துக் கொள்வோம். அவர்கள் மருத்துவர் அய்யாவுக்கும், புரட்சித்தலைவிக்கும் வாக்களிப்பதன் மூலம் தங்களது தமிழ் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். இது நகைப்புக்குரியதாக இல்லையா? கருணாநிதி காரியவாதிதான் என்று ஒருவேளை தி.மு.க. தொண்டனொ ருவன் ஒப்புக்கொண்டாலும், அவருக்கு மாற்றாக ஜெயலலிதாவின் முன் மண்டியிட்டு விடுவானா? இவர்களது தேர்தல் தந்திரம் தமிழர்களைச் சேர்த்திருக்கிறதா அல்லது பிளவைப் பராமரித்திருக்கிறதா?

ஈழத்துக்காகத் தமிழக மக்கள் கொந்தளித்து எழ வேண்டும் என்ற ஆசையை இவர்கள் அடிக்கடி வெளியிடுகிறார்கள். ஆனால் மக்களைத் தமது சொந்த நடவடிக்கைகளில் நம்பிக்கை வைப்பதற்குப் பயிற்றுவிப்பதற்குப் பதிலாக, பிழைப்புவாதிகளை நம்புவதற்குத்தான் பயிற்றுவிக்கிறார்கள். அப்போதும் “நம்முடைய சொந்த மடமையைத்தான் மக்கள் மீது திணிக்கிறோம்’ என்று இவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. மாறாக, பிழைப்புவாதிகளின் பின்னால் ஓடும் மந்தைகளாகவும் மடையர்களாகவும் மக்கள் இருப்பதால், வேறு வழியில்லாமல் மக்களின் மடைமைக்குத் தலைவணங்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டுவிட்ட இனமானத் தலைவர்களாகவே தங்களைக் கருதிக் கொள்கிறார்கள்.

இரட்டை இலையும் மாம்பழமும் விடுதலையின் சின்னங்களா?

புதுச்சேரியில் பெ.தி.க ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஈழத்துப் பெண்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தும் பாலியல் கொடுமைகளை உணர்ச்சிபூர்வமாக விவரித்துக் கொண்டிருந்தார் சீமான். கூட்டத்தில் நிரம்பியிருந்த பா.ம.கவினரோ, தொலைக்காட்சிக் காமெராவின் முன் குதூகலமாக மாம்பழத்தை உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்தனர். புரட்சித் தலைவி தமிழ் ஈழத்தைப் பிரகடனம் செய்தபோதும், 10,000 கோயிலில் அன்னதானம் என்று அறிவித்த போதும் ஒரே மாதிரியாகத்தான் விசிலடித்துக் கொண்டிருந்தனர் ரத்தத்தின் ரத்தங்கள். இந்தப் பாட்டாளிச் சொந்தங்களும், ரத்தத்தின் ரத்தங்களும் போடும் வாக்கு இனப்படுகொலைக்கு எதிரான வாக்கு என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்.

“”ஈழத்தமிழினப் படுகொலையை முன்நின்று நடத்தும் இந்திய அரசின் நாடாளுமன்றத்துக்கான தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம்” என்ற முழக்கத்தை ஒருவேளை முன்வைத்திருந்தால், அந்த முழக்கத்தின் எதிரிகள் யார் என்பதை மக்கள் அடையாளம் கண்டிருக்க முடியும். அந்த முழக்கத்தின் அரசியல் ஆதரவையும் ஒன்று திரட்டி நாட்டின் கவனத்தை ஈர்த்திருக்க முடியும். அதுதான் நோக்கத்துக்கு உகந்த வழிமுறையாக இருந்திருக்கும்.

ஆனால் தங்களுக்கு அப்படிப்பட்ட நோக்கம் இருக்கிறதா என்பதை ஈழ ஆதரவாளர்கள்தான் கூறவேண்டும். ஒபாமாவை நேரடியாகத் தலையிடக் கோருவதும், தமிழினம் என்ற சொல்லையே வெறுக்கும் பாரதிய ஜனதாவின் “இந்துப் பாசிச’ அரசியலை ஈழத்துக்கேற்ப வளைப்பதும், ஜெயலலிதாவிடம் சரண்புகுவதும் விடுதலைக்கான வழிமுறைகள் அல்ல. ஏகாதிபத்தியத்துக்கும் மேலாதிக்கத்துக்கும் அடிபணிந்து நிற்கும் விடுதலை ஒரு தேசத்தின் விடுதலை அல்ல. அவ்வாறு “அருளப்படும்’ விடுதலை எவ்வாறு இருக்கும் என்பதற்கு வங்கதேசம் சான்று பகர்கிறது. அன்று ராஜீவ் வழங்கிய “விடுதலை’யை நிராகரித்து நின்ற ஈழத்தை, இன்று ஜெயலலிதாவிடம் கையேந்த வைத்திருக்கிறது இவர்களது தேர்தல் தந்திரம்.

தேர்தல் முடிந்தது… பேரம் தொடங்கியது… ஈழம் எங்கே?

மக்களவைத் தேர்தல் முடிந்துவிட்டது. முடிவுகள் வரத்துவங்குமுன்பே கூட்டணித் தாவல்களும், பதவிப் பேரங்களும் தொடங்கி விட்டன. தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரத் தரகர்களும் ஸ்பான்சர் செய்து நடத்தும் பதவிப் பேரப் பேச்சவார்த்தைகள் சூடு பிடித்து விட்டன.

கூட்டணி பேதமின்றி, கொள்கை பேதமின்றி ஓட்டுப்பொறுக்கிகள் எல்லோரும் எல்லோரோடும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதற்காக நட்சத்திர விடுதிகளில் திரும்பிய பக்கமெல்லாம் நடக்கும் இந்தப் பதவிப் பேர விருந்துகளில், ஈழப்பிரச்சினை பேசப்படுமா? “பேசப்படும்’ என்ற எதிர்பார்ப்பில், பசித்த வயிறுடன் வானொலிப் பெட்டியைக் காதில் வைத்தபடி முல்லைத்தீவின் மூலையில் ஓர் அப்பாவி ஈழத்தமிழன் காத்திருக்கக் கூடும். அதை நினைக்கும் போதே, நெஞ்சு பதறுகிறது. இரத்தம் கசியும் அந்த இதயத்தை இந்திய அரசின் நம்பிக்கைத் துரோகம் இன்னொரு முறை கீறப்போகிறது என்பதை நினைக்கும்போது குற்றவுணர்வில் உடல் குறுகுகிறது.

ஜெயலலிதாவின் கூட்டணி குறித்த பிரமையை இந்தியத் தமிழர்களுக்கு மட்டுமின்றி, ஈழத்தமிழர்களுக்கும் ஏற்படுத்தியவர்கள், ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்லும் ஆயிரக்கணக்கான மின் அஞ்சல்களைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பி வைக்கக் காரணமாக இருந்தவர்கள்…….. காத்திருங்கள்.

நோக்கத்தில் நேர்மை இருப்பதால், வழிமுறையின் நேர்மையின்மை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்று இதுகாறும் நீங்கள் இறுமாந்து இருந்திருக்கலாம்.

நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் தோற்றுவிக்கும் விளைவு ஒன்றுதான் என்பதை விரைவிலேயே காண்பீர்கள். அப்போதும், நாங்கள் எழுப்பிய கேள்விகளைப் புறக்கணிக்கவே நீங்கள் விரும்புவீர்கள். எனினும், அவை உங்களுக்குள்ளிருந்தே எழும் கேள்விகளாகவும் மாறியிருக்கும்.

“”இலங்கை விவகாரத்தில் காங்கிரசுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் ஒரே கொள்கைதான்!” — சேஷாத்ரி சாரி, பி.ஜே.பி. தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர். (4.2.09 ஜூனியர் விகடனில் வெளியான பேட்டி)

இலங்கை விவகாரத்தில் தமிழகத் தலைவர்கள் எதிர்பார்ப்பது போல எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதுதான் டெல்லியில் நிலவும் கருத்து. இலங்கைக்குச் சென்று வந்த சிவசங்கர் மேனன் போன்ற அதிகாரிகள் வெளிப்படையாகக் கருத்துச் சொல்ல முடியாது. ஆனால், சமீபத்தில் இலங்கைக்குச் சென்றுவந்த டெல்லி அரசியல் பிரமுகர்கள், அங்குள்ள நிலைமையைப் பற்றி நம்மிடம் வெளிப்படையாகப் பேசினார்கள்.

“””இந்திய இலங்கை பிரகதி சன்சதியா’ என்ற அமைப்பில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பியைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் இலங்கையில் நடந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வெளிவிவகாரப் பிரிவைச் சேர்ந்த ரவ்னி தாக்கூரும், பி.ஜே.பியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரான சேஷாத்ரி சாரியும் சென்று வந்தனர். இவர்களுடைய பயணத்துக்கு அரசியல் காரணங்களோடு பொருளாதார, வர்த்தக விவகாரங்களும் காரணம். இந்தியாவும் இலங்கையும் உள்ளார்ந்த பொருளாதாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட இருக்கின்றன. அது தொடர்பான ஆலோசனைகளோடு, அரசியல் விவகாரங்கள் குறித்தும் இலங்கை அதிபர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள்.

சேஷாத்ரி சாரியிடம் இது குறித்துப் பேசினோம்.

“”இலங்கை விவகாரத்தில் பி.ஜே.பியும் காங்கிரஸும் கிட்டத்தட்ட ஒரே கொள்கையோடுதான் செயல்படுகின்றன. இப்போது இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடக்கும் போரில் இந்தியா நிச்சயம் தலையிடாது. இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளில் நமக்குத் தொந்தரவில்லாத நாடுகள் என்றால், இலங்கையும் பூட்டானும்தான். பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளால் நமக்கு எப்போதும் தொந்தரவுதான். பொதுவாக இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியில் இலங்கையால் நல்ல பயன்பாடு உண்டு. பொருளாதார ஒப்பந்தங்களைப் போட நல்ல சூழ்நிலை வரவேண்டும். இலங்கையில் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், செய்துகொள்ளும் உடன்படிக்கைகளால் பலனில்லை. இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை இதை மனதில் வைத்துதான் முடிவு செய்யப்பட்டது. நாங்கள் இலங்கையில் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும் இந்திய அரசின் நிலையை எடுத்துச் சொன்னோம். நான், இலங்கை விவகாரத்தில் பி.ஜே.பியின் கொள்கை என்ன என்பதையும் விளக்கினேன். அதிபர் ராஜபக்ஷே வையும் அவருடைய ஆலோசகர் பசில் ராஜபக்ஷேவையும் சந்தித்துப் பேசினோம். இப்போது புலிகளை எதிர்த்து இலங்கை ராணுவம் போராடிக்கொண்டு இருக்கிறது. இதில் கிட்டத்தட்ட வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அரசு என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களிடம் எடுத்துச் சொன்னோம்.

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட அங்கு ஒரு பலம் வாய்ந்த அரசு தேவை. இதற்கு இரண்டு விஷயங்கள் முக்கியம். விடுதலைப்புலிகள் இயக்கம் மறுபடியும் பலம் பெற்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து, தமிழர் பகுதியில் தமிழ் மக்களுக்குரிய வசதிகளைச் செய்து, அவர்களுடைய நம்பிக்கையை அரசுத் தரப்பு பெறவேண்டும். விடுதலைப்புலிகள் இருக்கும் பகுதிகளில் இராணுவத்தின் பணி முடிந்தவுடன் அங்கு ராணுவம் அல்லாத, சமுதாயப் பணிகளை மேற்கொள்ளும் சிவிலியன்களின் முகம் மட்டுமே தென்பட வேண்டும். ஏற்கெனவே பிள்ளையான், கருணா போன்றவர்களின் உதவியோடு இந்தப் பணிகளை இலங்கை அரசு செய்து வந்தாலும், இவர்களை விடவும் தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிப் பணிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கையாக வைக்கப்பட்டது! ஆனால், இப்படி நாம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஓர் ஆபத்தும் இருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகு, இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்தான அச்சம் நிலவுகிறது.

அதிபர் ராஜபக்ஷே ஒரு மிதவாதி. அவர் சாதாரண எம்.பியாக இருந்த காலத்திலிருந்தே அவரை கவனித்து வருகிறோம். பி.ஜே.பி ஆட்சியில் 1999ல் பொக்ரான் அணுகுண்டுச் சோதனை நடந்தபோது, அவர் டெல்லிக்கு வந்து எங்களைப் பாராட்டிவிட்டுச் சென்றார். அவருடைய விஜயத்துக்கு அப்போதைய அதிபர் சந்திரிகா போன்றவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ராஜபக்ஷேவுக்கும் இந்தியாவுக்கும் நல்ல உறவு இருக்கிறது. இதனால் ராஜபக்ஷே இருக்கிறவரை பிரச்சனையில்லை. இலங்கையில் எல்லோரையும் அரவணைத்துப் போவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் சிங்களவாதத்தைக் கடைப்பிடிக்கும் சக்திகள் அதிகாரத்துக்கு வந்தால், தமிழர்களுக்கு எதிராகச் செயல்படமாட்டார்கள் என்ற உத்தரவாதம் இல்லை. மொழி, மத வேறுபாடு இன்றி எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்க அரசியல் சாசனம் மூலமாக நிரந்தரத் தீர்வு காணக் கோருகிறோம்.

ராஜபக்ஷே ஒரு விஷயத்தில் கண்டிப்பாக இருக்கிறார். தமிழ் மாகாணம், சிங்கள மாகாணம் என்பதையெல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே சமயம், பஞ்சாயத்து ராஜ் சட்டம் மூலம் உள்ளூர் மக்களுக்கு இங்கே அதிகாரம் கொடுப்பதைப் போல் இலங்கையில் மொழிவாரியாகவோ இனவாரியாகவோ இல்லாமல் சுய அதிகாரம் பெற்ற உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கத் தயாராக இருக்கிறார். இதன் மூலம் உள்ளூர் மக்கள் இன, மொழி வேறுபாடில்லாமல் பலனடைய வாய்ப்பிருக்கிறது!” என்றவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.

“”விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பி.ஜே.பி. முதலில் சாஃப் டாக இருந்ததே? பால் தாக்கரே போன்றவர்கள் பிரபாகரனை ஹீரோவாக நினைக்கிறார்களே? தமிழ் ஈழம் மட்டுமே தமிழர்களைப் பாதுகாக்கும் என்று சொல்லப்படுகிறதே?”

“”விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம். இதில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவை பி.ஜே.பியும் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ராணுவத் தீர்வு காண முடியாது என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். குறிப்பாக, புலிகள்தான் இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள். அதோடு, மற்ற தமிழ் அமைப்புகளையும் அழித்து விட்டு, சர்வாதிகார அமைப்பாகச் செயல்படுகின்றனர். இது இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதல்ல. அரசியல் தீர்வுக்குப் புலிகள் எதிராக இருக்கின்றனர். தமிழர்கள், சட்டப்படியான அதிகாரம் பெற விரும்புகிறார்கள். புலிகளால் இதற்குத் தடை ஏற்படுகிறது. விடுதலைப்புலிகளின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலமே இலங்கைத் தமிழர்களுக்கு பலன் கிடைக்கும்!”

“”இலங்கையில் இனி சிங்களர்களும் தமிழர்களும் ஒன்றாக வாழ முடியாது என்று சொல்லப்படுகிறதே….”

“”இது தவறான வாதம். இலங்கைத் தமிழர்களுக்கு, தாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். இலங்கையில் அந்நாட்டு அரசுகளும் பல தவறுகளைச் செய்துள்ளன. விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புகளும் தவறுகள் செய்தது. இலங்கையில் சிங்கள மொழியோடு தமிழும் அலுவலக மொழியாக உள்ளது. தமிழர்களும் அரசியலில் பங்கெடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அதிகாரங்களைப் பெற்றுத்தான் இலங்கைத் தமிழர்கள் முன்னுக்கு வர முடியும். சிங்கள மக்களை எதிர்த்து, தமிழர்கள் இலங்கையில் முன்னேற முடியாது!” என்றார் சேஷாத்ரி சாரி.

சாரியோடு இலங்கைக்குச் சென்ற காங்கிரஸ் பிரமுகர் ரவ்னி தாக்கூ ரும் சாரியின் கருத்துகளையே எதிரொலிக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் போடப்பட்ட போர்நிறுத்தத் தீர்மானம் குறித்து தாக்கூரிடம் கேட்டோம்.

“”விடுதலைப்புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் நாம் ஆதரவு அளிக்க முடியாது. அவர்கள் தீவிரவாதிகள். இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுகிறோம். அவர்களுடைய உரிமைகள் கிடைப்பதற்கும் நாம் ஆதரவு கொடுப்போம். பஞ்சாப்பில் காலிஸ்தான் போன்ற பயங்கரவாத இயக்கங்களைப் பூண்டோடு அழித்தோம். இப்போது பஞ்சாப் மற்ற மாநிலங்களைவிடச் சிறப்பாக இருக்கிறது. அதே மாதிரி இலங்கைத் தமிழர்கள், “விடுதலைப்புலிகள்தான் எதிர்காலம்’ என்று நம்பிக்கொண்டு இருக்கக் கூடாது!” என்று முடித்தார்.

சரோஜ் கண்பத் — ஜூனியர் விகடன்

குறிப்பு: இந்தப் பேட்டி வெளியானதற்குப் பிறகும், இல.கணேசனும் தமிழிசை செளந்தரராசனும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் பிரமுகர்களாக கம்பீரமாகத் தமிழகத்தை வலம் வந்து கொண்டுதானிருந்தார்கள்.

ஈழத்திற்கெதிரான பாசிச ஜெயாவின் குற்றப்பட்டியல்! பாசிச ஜெயாவின் திடீர் இரசிகர்களின் சிந்தனைக்கு…

ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து தமிழ் விரோத தமிழர் விரோத பார்ப்பன பாசிச ஜெயலலிதாவை இந்தத் தேர்தலில் தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்திருக்கின்றனர் ஈழ ஆதரவாளர்கள். ராஜீவ் கொலையைப் பயன்படுத்திக் கொண்டு பதவியைக் கைப்பற்றிய ஜெயலலிதா, “ஈழம் தமிழ் தமிழர்’ என்ற சொற்களைப் பயன்படுத்துவதே பயங்கரவாதக் குற்றம் என்று கூறுமளவுக்கு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார்.

“”அன்று ஈழத்தை எதிர்த்தார்; இன்று ஆதரிக்கிறார்” என இன்றைய இளைய தலைமுறையினர் இதனை எளிமைப்படுத்திப் புரிந்துகொண்டு விடக்கூடாது. எல்லாவிதமான மக்கள் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளி, புலிப்பூச் சாண்டி காட்டுவதையும், பயங்கரவாத பீதியூட்டுவதையுமே தனது பாசிச அரசியல் வழிமுறையாக வைத்திருந்தவர் ஜெயலலிதா. அதற்குச் சான்றாக சில விவரங்களை மட்டும் இங்கே தொகுத்துத் தருகிறோம். இது ஒரு முழுமையான தொகுப்பில்லை என்ற போதிலும், இதில் தொகுக்கப்பட்டிருக்கும் விவரங்களிலிருந்தே ஈழ மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த பல்வேறு அமைப்பினரை, அவர்களுடைய கருத்துக்காக மட்டுமே ஜெயலலிதா எந்த அளவுக்கு மூர்க்கமாக ஒடுக்கியிருக்கிறார் என்பதை நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடியும்.

ஈழம் குறித்த தன்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டு விட்டதாக அவர் கூறுவது எத்தனை பெரிய பித்தலாட்டம் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

ராஜீவ் கொலைக்கு முன்:

தி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்காகவே “”புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் பொது ஒழுங்கிற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது” எனப் பீதியைக் கிளப்பினார். ராஜீவ் கொலைக்கு முன்பே தன்னைக் கொல்லச் சதி நடப்பதாகக் கூறிய ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது, தன்னைப் பார்க்க வந்த தனது ரசிகரையே “விடுதலைப்புலி என்னைக் கொல்ல வந்தான்’ எனக் கூறி அவதூறு கிளப்பி ஆர்ப்பாட்டம் செய்தார். ·

ஜூலை 1991:

ராஜீவ் கொலையுண்டவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென பேட்டியளித்தார். ராஜீவ் கொலையுண்ட சில நாட்களில் இலங்கை அதிபர் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். இதனால் ஈழத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவர்களுக்கு உதவ இங்கிருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல்படை அமைத்து, ஈழ மக்களைப் பட்டினியில் வாடவைத்தவர் ஜெயலலிதா. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற துரோகக் குழுக்களைக் கருணையுடன் நடத்துவோம் என்றும் முழங்கினார். “”விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தோ, ஈழத்தமிழர் நலன் என்ற பெயரிலோ நடைபெறும் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலோ, ஏற்பாடு செய்தோலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்” என்று எச்சரிக்கை செய்தவர்தான் ஜெ..

 ·

செப்டம்பர் 1991:

சிவராசன், சுபா ஆகியோரின் தற்கொலைக்குப் பிறகு வேலூரில் ஈழ அங்கீகரிப்பு மாநாடு நடத்த முயன்ற தமிழ்நாடு இளைஞர் பேரவை, மாணவர் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டு, மாநாடு தடை செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் ஈழ அகதிகளை வெளியேற்றுவதை எதிர்த்து மாநாடு நடத்த முயன்ற பு.இ.மு மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் இவ்வமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சியில் தெருமுனைக் கூட்டம் நடத்திய மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியினர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்த கவிஞர் அப்துல் ரகுமானின் “சுட்டுவிரல்’ கவிதைத் தொகுப்பு “ஈழ ஆதரவு, புலி ஆதரவு’ எனக்கூறி நீக்கப்பட்டது. பாசிச ராஜீவுக்கு எதிரான அரசியல் விமரிசனங்களைக் கூட தேசத்துரோகக் குற்றமாகவும், வன்முறையையும் பிரிவினைவாதத்தையும் தூண்டுவதாகவும் ஜெயலலிதா சித்தரித்தார். ஈழ ஆதரவு இயக்கங்களைக் கூடத் தடைசெய்து, ராஜீவ் கொலை வழக்கில் சேர்த்து உள்ளே தள்ளிவிடப் போவதாக மிரட்டினார்.

“”என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தற்கொலைப்படை தமிழகத்துக்குள் ரகசியமாக ஊடுருவி உள்ளனர். ராஜீவ் கொலை தொடர்பான விசாரணை நடத்திவரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தைத் தகர்க்கவும், ராஜீவ் கொலையில் கைதாகியுள்ள முக்கியப் புள்ளிகளை மீட்கவும் அவர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்” என்று சட்டசபையிலேயே புளுகிப் பீதியூட்டினார்.

புலிகள் அமைப்பைத் தடைசெய்ய வேண்டுமென மத்திய அரசைத் தொடர்ந்து நிர்ப்பந்தித்தார். புலிகள் மீது மத்திய அரசு தடை விதித்ததும், “”புலிகள் மீதான தடை விதிப்பு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதை எளிதாக்கி இருக்கிறது” என்றார்.

1991இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார். ராஜீவ் பிணத்தைக்காட்டி ஒப்பாரி வைத்து மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பாசிச ஜெயலலிதா, புலிப்பூச்சாண்டி காட்டி, ஈழத் தமிழர்களைக் கைது செய்து, அகதி முகாம்களைத் திறந்தவெளிச் சிறைச்சாலைகளாக மாற்றினார்.

அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.

ஈழத்துரோகி பத்மநாபா கொலைவழக்கைக் காரணம் காட்டி முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜனைக் கைது செய்து மிரட்டி, துன்புறுத்தி அப்ரூவராக்கினார். அவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும், அவர் கணவர் ஜெகதீசனையும் தடாவில் உள்ளே தள்ளினார். வைகோவின் தம்பி ரவியைத் தடாவில் கைது செய்தார்.

பத்மநாபா கொலை வழக்கில் குண்டு சாந்தனை தலைமறைவாகப் போகச் சொல்லி கடிதம் எழுதினார் என்று சொல்லி சாந்தனின் வழக்கறிஞர் வீரசேகரனை (திக) தடாவில் கைது செய்தார்.

ஈழ அகதிகள்போராளிகள் உரிமைக்கும், ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த ம.க.இ.க, முற்போக்கு இளைஞர் அணித் தோழர்களை தடாவில் கைது செய்தார். ம.க.இ.க மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் உள்ளிட்ட 4 தோழர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

சிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தி.க.வினரையும் தடாவில் பிடித்து சிறையில் தள்ளினார்.

ஜெயா வாழப்பாடி கும்பல் தொடர்ந்து கொடுத்த நிர்ப்பந்தத்தால், ராஜீவ் கொலைக்கு பின்னர், வாரம் ஒரு கப்பல் வீதம் ஈழ அகதிகள் கட்டாயப்படுத்தி ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஈழ அகதிகள் வெளியேற்றப்படுவதை எதிர்த்த குற்றத்துக்காக, தமிழகம் முழுதும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்பின் தோழர்கள் ராஜத்துரோகக் குற்றத்தில் கைது செய்யப்பட்டனர்.

போயஸ் தோட்டத்துக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த நரிக்குறவர்களையும், “வயர்லெஸ்’ கருவியுடன் இருந்த “கூரியர்’ நிறுவன ஊழியரையும் கைது செய்து புலிகள் பிடிபட்டதாக வதந்தி பரப்பினார் ஜெயலலிதா.

·

1992

தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில், புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், த.தே.கட்சியின் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 7 பேர் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஜெ. அரசால் கைது செய்யப்பட்டனர்.

“”தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளையும், ஊடுருவ முயலும் புலிகளையும் துடைத்தொழிப்பதில் தமிழக போலீசார் மகத்தான சாதனை புரிந்துள்ளனர். அவர்களுக்கு நவீன ரகத் துப்பாக்கிகளும், சாதனங்களும் அவசியமாக உள்ளது” என்று கூறி இதற்காகக் கூடுதல் நிதி ஒதுக்கியதோடு, மத்திய அரசிடமும் இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கக் கோரினார்.

1992 செப்டம்பர் 10,11,12 தேதிகளில் பா.ம.க நடத்திய “தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை’ அடுத்து “தேசத் துரோக, பிரிவினைவாத சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை’ எனப் பாய்ந்தார் ஜெயலலிதா. ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், சுப.வீரபாண்டி யன், பெ.மணியரசன், தியாகு, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்தார். ராமதாசுக்கு பிணை கொடுத்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியத்தை மிரட்டி விடுப்பில் அனுப்பிவிட்டு, நீதிபதி கந்தசாமி பாண்டியனை அமர்த்திப் பிணையை ரத்து செய்ய வைத்து சி.பி.சி.ஐ.டி மூலம் 124ஏ (தேசத்துரோகம்) சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்தார்.

தமிழகத்தில் கேடிகள், ரவுடிகள் செய்த கொலை, கொள்ளை, கடத்தல்களை எல்லாம் புலிகள் செய்தாகக் கூறி பிரச்சாரம் செய்தார். நாகை கீவளூர் அருகே டிரைவரை அடித்துப் போட்டு டாக்சியைக் கடத்தியதாகக் கூறி, 4 புலிகளை அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போல் இருந்தனர் எனக்கூறி கைது செய்ததாக ஜெ. அரசு கூறியது. மதுரை கூடல்நகர் அகதி முகாம் அருகே சாராயம் காய்ச்சும் ரவுடிகளால் சமயநல்லூர் சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இதனைப் புலிகள்தான் செய்தனர் எனப் புளுகி, “”கொலை செய்த புலிகளை சும்மா விடமாட்டேன்” என்றும் முழங்கினார். ·

1993

புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக பழ.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார். பின்னர் போலி சாட்சியங்கள் ஆதாரங்களைக் கொண்டு பழ.நெடுமாறன் போன்றோரை “தடா’வின் கீழ் சிறை வைத்தார்.

1993 மே “”நள்ளிரவில் கிளைடர் விமானத்தில் வந்த புலிகள் எனது வீட்டைக் குறிவைத்து வட்டமடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலீசர் இதனைப் பார்த்துள்ளனர்” என்ற ஆகாசப் புளுகை அவிழ்த்து விட்டார் ஜெ.

கோவை ராமகிருஷ்ணன், (தற்போது பெ.தி.க.வின் பொதுச்செயலாளர்களில் ஒருவர்) கோவையில் சிறு பொறியியல் தொழிலை நடத்தியபடியே, தனியாக ஒரு தி.க அமைப்பை நடத்தி வந்தார். இவரையும் இவர் அமைப்பின் தலைமை நிலையச் செயலாளர் ஆறுச்சாமியையும் இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ. சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ. அரசு, இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது.

பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேசவிரோதமாகச் சதி செய்தாகக் கூறிய ஜெ. அவர்களை தடாக் கைதிகளாக்கினார். “திராவிடம் வீழ்ந்தது’ என்ற நூலை எழுதிய ஒரே குற்றத்திற்காக குணா என்பவரை வீரமணியின் ஆலோசனையின் பேரில் ஜெ. தடாவில் உள்ளே தள்ளினார்.

ஜெயாவின் ஆட்சி ஈழத்தமிழர்களை எப்படி எல்லாம் பழிவாங்கியது என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு எடுத்துக்காட்டாகும்.

கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற சி.பாலச்சந்திரன் எனும் ஈழத்தமிழர் இந்திய அரசு வழங்கிய விசா அனுமதியுடன் 24.4.90 முதல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத சூழ்நிலையிலும், அவர் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 12.3.91இல் க்யூ பிரிவு போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்டார். தி.மு.க.வை வன்முறைக்கட்சி எனச் சித்தரிக்கும் நோக்கத்தில் ஐ.பி தயாரித்திருந்த சதித்திட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அவர் மிரட்டப்பட்டார். அவர் அதற்கு மறுக்கவே, சட்டவிரோதக் காவலில் அவரை அடைத்து வைத்தன.

திலீபன் மன்றத்தின் சார்பில் தியாகு தொடுத்த ஆட்கொணர்வு மனுவால், 16.3.91 அன்று நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பாலச்சந்திரன் நிறுத்தப்பட்டார். நீதிமன்ற உத்திரவுப்படி மதுரைச் சிறையிலும் அடைக்கப்பட்டார். 1988இல் நடந்த (அதாவது பாலச்சந்திரன் தமிழ் நாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முந்தைய) கொடைக்கானல் தொலைக்காட்சிக் கோபுர வெடிகுண்டு வழக்கிலும், சென்னை நேரு சிலை குண்டுவெடிப்பு வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். 15.3.91 அன்று மாலை 5 மணி அளவில் தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் பொழிலனுடன் அமர்ந்து, குண்டுவைக்க சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, 7.5.91 முதல் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். (அந்தத் தேதியில் பாலச்சந்திரன் சிறைச்சாலையில் இருந்தார்). தே.பா.சட்டக் காவல் முடிந்ததும் வேலூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பாலச்சந்திரன் சோர்ந்துவிடாமல் நீதிமன்றம் போனார். உயர்நீதி மன்றம் 21.7.1992இல் நிபந்தனையுடன் கூடிய பிணை தந்தது. இந்தத் தீர்ப்பை முடக்கும் வகையில் பாலசந்திரனை சிறப்பு முகாமில் ஜெ. அரசு அடைத்தது. கொடைக்கானல் குண்டு வழக்கில் அதிகாரிகள் இவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி பாலச்சந்திரன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இது அரசின் பழிவாங்கும் செயல் என அவர் முறையிட்ட பின்னர் 24.8.1993இல் அரசு அவரை துறையூர் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டது. மீண்டும் அவர் நீதிமன்றம் போனார். 1.7.94 முதல் மேலூர் சிறப்பு முகாமில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். கொடைக்கானல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏனைய 14 நபர்களுக்கும் அப்போது பிணை வழங்க நீதித்துறை உத்தரவிட்டது. ஆனால் ஈழத்தமிழர் எனும் ஒரே காரணத்துக்காக நெடுங்காலமாய் சிறைக்கொட்டடியில் வைத்து அரசு அவரை வாட்டியது. இன்று ஈழத்துக்கு ஆதரவாகச் சவடால் அடிக்கும் ஜெயா எனும் பாசிஸ்ட் ஈழத்தமிழர்களை எவ்வாறெல்லாம் வக்கிரமாகச் சித்திரவதை செய்தார் என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு உதாரணம்.

1995இல் தஞ்சையில் ஜெ. நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பின் பேரில் வருகை தரவிருந்த கா.சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழ் அறிஞர்கள், புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி வெளியேற்றப்பட்டனர். ஜெயின் கமிசன் விசாரணையில் “விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த பா.ம.க, தவிர ம.க.இ.க என்ற அமைப்பை எங்கள் ஆட்சியில் ஒடுக்கினோம்’ என்று பெருமை பொங்க சாட்சியம் அளித்தார் ஜெயா.

2002 புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறவும், பேச்சுவார்த்தைகளின் போது வன்னிக்காட்டிற்கு சென்று பிரபாகரனுடன் கலந்தாலோசனை செய்யவும் சென்னையில் அவர் தங்குவது வசதியாக இருக்கும் என்ற கருத்து புலிகளால் முன்வைக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இதனை ஏற்றால், பேச்சுவார்த்தைகளில் இந்தியா “பார்வையாளர்’ ஆகிவிடக்கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்தனர். இக்கருத்து பத்திரிகைகளில் வெளியானவுடன் பயங்கரவாதப் பீதியூட்டி, “”புலிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது” என ஜெயலலிதா கொக்கரித்தார். ஜெயாவின் பினாமியான அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகள் செய்த படுகொலைகளைப் பட்டியல் போட்டு, “”ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது” என மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். ஜெயலலிதாவின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.

“”தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்” என்று இதே ஆண்டில் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றினார். ·

ஜூலை 2002 மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் காரணம் காட்டி, வைகோ மற்றும் 8 பேர் மீது பொடா சட்டத்தை ஏவிச் சிறையில் அடைத்தார். பொடா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என நியாயப்படுத்திய ஜெ, “”ம.தி.மு.க தடை செய்யப்படவேண்டிய இயக்கம்; இதனைப் பரிசீலித்து வருகிறோம்” என்றும் எச்சரித்தார்.

ம.தி.மு.க மட்டுமின்றி, புலிகளுக்கு ஆதரவாகப் பேசிவரும் ராமதாசு, பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக எச்சரித்தார்.

ஈழத்துடன் தமிழ்நாட்டையும் இணைத்து அகண்ட தமிழகமாக்க புலிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால்தான், தமிழகத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என ராமதாசு கோருகிறார் எனக் கூறி பிரிவினைவாதப் பீதியூட்டினார் ஜெயலலிதா. ·

செப்டம்பர் 2002 பயங்கரவாத பிரிவினைவாத பீதி கிளப்பி அரசியல் ஆதாயம் அடையும் பார்ப்பன சதிகார அரசியலின் ஒரு பகுதியாக, வைகோவும் நெடுமாறனும் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கைது செய்யப்பட்டனர். இக்கைதுகளைக் கண்டித்து வழக்குப் போடப் போவதாகக் கூறிய சுப.வீயும் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார். பெரிய ஆள்பலமோ, செல்வாக்கோ இல்லாத நெடுமாறனின் கட்சி தடை செய்யப்பட்டு, அலுவலகங்கள் அதிரடிப்படை போலீசால் சோதனை இடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. ·

செப்டம்பர் 2007 “”தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும், வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத்துரோகக் குற்றத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று ஜெ. கூறினார். தமிழ்ச்செல்வனுக்கு கருணாநிதி இரங்கற்பா எழுதிய காரணத்தால், தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றும் கூவினார். ·

2008

அதியமான் கோட்டையில் காவல்நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் சில காணாமல் போயின. போலீசாரிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களில் ஒரு தரப்பினரே இச்செயலைச் செய்திருந்தனர். ஆனால் இச்சம்பவத்தைக் கூட ஜெயலலிதா விட்டுவைக்கவில்லை. “”கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் எனப் பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது” என ஊளையிட்டார்.

“”போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று சிங்கள இராணுவத் தாக்குதலை நியாயப்படுத்தினார். ஈழப்பிரச்சினைக்காகத் திரைத்துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் என்றும், அவர்களைக் கைது செய்ய வேண்டுமென்றும் கருணாநிதியை மிரட்டினார். பிறகு திருமாவளவனைக் கைது செய்ய வேண்டுமென்றார். கடைசியில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

***

இப்படி, கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டுத் தமிழருக்கு எதிராகவும் ஆட்டம் போட்ட பாசிசப் பேய்தான், இப்போது நாற்பது தொகுதிகளிலும் தன்னை வெற்றிபெற வைத்தால், முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் ஈழத்தைத் தூக்கிக் கொடுப்பதாகக் கூக்குரலிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *