இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் குறிப்பாக 1930க்கு பிறகு நடைபெற்ற சர்ச்சைகளில் பிரதானமானது. இதில் இந்திய முதலாளி வர்க்கத்தின் குணாம்சத்தை நிர்ணயிப்பது பற்றியது முக்கியமானதாகும். இந்த விஷயத்தில் ரஷ்ய புரட்சியின் அனுபவங்களும் லெனினுடைய வரையறுப்புகளும் நமக்கு பெரிதும் உதவக் கூடியவை. தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று வர்ணிக்கப்பட்ட பழைய ரஷ்யாவில் மொழி, இனம், மதக் கலவரங்களால் ஏராளமான மனித ரத்தம் சிந்தப்பட்டது. புரட்சிக்கு பிறகுமிகக் குறுகிய காலத்தில் இப்படிப்பட்ட கலவரங்களே இல்லாத நிலை ஏற்பட்டது. அனைத்து இனங்களுக்கும் மொழிகளுக்கும் சமஉரிமை வழங்கப்பட்டு அங்கே நிகழ்த்தப்பட்ட இந்த மாறுதலிலிருந்து இந்தியர்கள் கற்றறிய வேண்டிவை ஏராளம்.
1917-ல் புரட்சி வெற்றியடைந்த போது முதல் உலகயுத்தம் நடந்து கொண்டிருந்தது. புரட்சியால் மலர்ந்த புதிய சோவியத் அரசு முதலில் எடுத்த நடவடிக்கை சமாதானத்திற்கானது. அடுத்த நடவடிக்கை சிலர் கையில் குவிந்து கிடந்த லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை பறிமுதல் செய்து நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கியது. இந்த நடவடிக்கை கிராமப்புறங்களில் புதிய மறுமலர்ச்சியை உண்டாக்கியது.
உலகில் பல மகத்தான புரட்சிகள் நடந்தது உண்டு. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கோஷங்களை இடிமுழக்கம் செய்து நிகழ்த்தப்பட்ட பிரெஞ்சு புரட்சியும், பிரிட்டனில் சார்லஸ் மன்னனின் தலையை சீவி எறிந்ததில் முடிந்த புரட்சியும் மகோன்னதமானவை. விஞ்ஞானம், தொழில்வளர்ச்சிமற்றும் கலாச்சார நாகரிக துறைகளில் மகத்தான முன்னேற்றங்கள் நிகழ்வதற்கு அந்த புரட்சிகள் வித்திட்டன. இன்றைய நாடாளுமன்ற ஆட்சி முறையும்கூட இந்த புரட்சியின் விளைவுதான். மன்னர்கள் தலைமையில் இருந்த நிலப்பிரபுத்துவ ஆட்சி முறைக்கு எதிராக நடந்த அந்த ஆயுதம் தாங்கிய புரட்சிகள் புதிய முதலாளி வர்க்க ஆட்சிகளை நிறுவின.
இந்த புரட்சிகள் அரசியல் அதிகாரத்தை ஒரு சுரண்டும் வர்க்கத்திடமிருந்து இன்னொரு சுரண்டும் வர்க்கத்திற்கு மாற்றின. சுரண்டலின் தன்மையும், முறையும் மாறினவே தவிர சுரண்டல் ஒழியவில்லை. இந்த புரட்சிகள் உருவாக்கிய முதலாளி வர்க்க ஆட்சிகள் ஏகாதிபத்திய ஆட்சிகளாகவே வளர்ச்சியுற்றன. பிறநாடுகளை அடிமை கொள்வதிலும், நாடு பிடிக்கும் யுத்தங்களை நடத்துவதிலும் போய் முடிந்தது. இப்போதும் அமெரிக்காவின் தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் நவீனமுறைகளில், புதிய வடிவங்களில் பிறநாடுகளை கபளீகரம் செய்யும் முயற்சிகளில் முனைப்பு காட்டி வருகின்றன. ஏகாதிபத்திய அமைப்பின் கருப்பையில் இருந்துதான் யுத்தம் என்கிற அரக்கன் பிறந்து வளர்ந்து இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றான்.
நமது நாட்டின் ஆட்சி மாற்றத்திற்க்கு பிறகு அடைந்த போது தொழில் வளர்ச்சி, மின் உற்பத்தி, ரயில் போக்குவரத்து போன்ற அனைத்து துறைகளிலும் நமது நாட்டில் இருந்ததைவிட குறைவான வளர்ச்சியே ஜாரின் ரஷ்யாவில் இருந்தது. ஆனாலும் புரட்சி முடிந்த குறுகிய காலத்தில் சகலதுறைகளிலும் நாலுகால் பாய்ச்சலில் சோவியத் யூனியன் முன்னேறியது. இந்தச் சாதனை சோசலிஷ அமைப்பால்தான் ஏற்பட்டது என்பது மிகவும் முக்கியமான படிப்பினை. சோவியத் புரட்சியிலிருந்து கிடைக்கின்ற இத்தகைய அடிப்படையான படிப்பினைகளும், அனுபவங்களும் புதிய தோழர்களுக்கும், இளைஞர்களுக்கும் உணர்த்தப்பட வேண்டும்.
தொடரும்….