இருவேறு இந்தியா
இருவேறு இந்தியா

இருவேறு இந்தியா

இவை எனது பழைய பதிவே தேவைக் கருதி மீள்பதிவேற்றம் செய்கிறேன்.நேற்று நான் அலுவலகம் சென்றபோது ஒரு பெண் Lift கேட்டால் அவளையும் அவளின் கைகுழந்தையும் பார்த்த எனக்கு “மோடி பல நாடுகளுக்கு பறந்து கொணிருக்கிறார்” இந்த ஏழைகளின் நிலை உயர என்ன செய்துள்ளர் என்று நினைக்கும் போதுதான் என் நண்பர் ஒருவருடன் நடந்த விவாதம் நேபகத்திற்க்கு வந்தது, வாங்கும் சக்தியில்லாத இந்த ஏழைகள் நாட்டிற்க்கு தேவையில்லை என்று. ஆம் அவரின்வாதம் சரியானவையே,”மோடியும் அல்லும் பகலும் அயறது பாடுப்படுவது சில பெரும் முதலாளிகளுக்காகதான்”. அந்த பெரு முதலாளிகளும் ஏகாதியபத்தியங்களின் வருகையும் அந்த பணம் புழங்கும் இந்தியாவை நோக்கிதான், இங்கே பசி பட்டினியை ஒழிக்க அரசிடமும் திட்டம் இல்லை வரும் வெளி நாட்டு நிறுவனங்களோ கொள்ளையை மட்டுமே கொள்கையாக ஓடோடி வந்துகொண்டிருக்கின்றன. இப்படிபட்ட இந்தியா சிறிது அரிதல் அவசியம் அன்றோ?27 கோடி இந்தியர்கள் இரவுச் சாப்பாடு இல்லாமல் உறங்கச் செல்கின்றனர் என்று டாக்டர் மால்கம் ஆதிசேஷையா பல்லாண்டுகளுக்குமுன் வேதனையோடு குறிப்பிட்டிருந்தார். இன்றோ 14 கோடி பேர் இரண்டு வேளை உணவில்லாமல் வாழ்ந்து வருகின்றனர் நவீன தாராளமயம் உறக்கமற்ற இரவுகளை அதிகரித்து உதவுகிறது. அதுவும் இரண்டு இந்தியாவுக்கும் பொது. ஒரு பக்கம் லாப வேட்கையோடும், மூலதனத்தைப் பெருக்கும் வெறியோடும் கண்ணாடி தம்ளர்களில் திரவத்தின் மேற்பரப்பில் ஐஸ் கட்டி கிளிங் சத்தம் எழுப்ப இரவுகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் ஒதுங்க இடம் இன்றி, நிரம்பாத வயிறுகளோடு, எதிர்கால வாழ்வும் இருட்டிப் போன திசையில் வெறித்துப் பார்க்கும் கண்கள்.கார்டியன் நாளேட்டில் ஜான் பில்கர் எனும் சிந்தனையாளர் எழுதி இருந்த கட்டுரை ஒன்று தி ஹிந்து ஆங்கில நாளேட்டில் (ஜனவரி 4) வெளியாகியிருந்தது. இரண்டு எதிரெதிர் துருவங்களில் நசிந்து கொண்டிருக்கும் நாடு இந்தியா என்பது அதன் தலைப்பு. ஆனால், எதிர்ப்பும் வலுக்கிறது என்பதையும் அவர் தலைப்பில் சேர்த்திருந்தார். வளர்ச்சி, சாதனை என்று எழுப்பப்படும் கூச்சல்களுக்கிடையே பிளாட்பாரத்தில் வசிக்கும் மக்கள் – குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது அறியாது அவதியில் இருக்கும் குழந்தைகள்… என முரண்பாடுகளை அந்தக் கட்டுரை பேசுகிறது. எளிதில் குணப்படுத்தக் கூடிய வயிற்றுப் போக்கு போன்ற காரணங்களால் நமது நாட்டில், ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் மரிக்கின்றன. உயிர் பிழைப்பவரில் பாதிக் குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாது வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பவர்கள். பள்ளிக்கூடப் படிப்பைப் பாதியில் விட்டு வெளியேறும் மாணவர்கள் 40% பேர். இப்படியான புள்ளிவிவரங்கள் காட்டாற்று வெள்ளம்போல் பாயும். இந்த இழிவான நிலைக்குமுன்னால் வேறு எந்த நாடும் போட்டிக்கு நிற்க முடியாது என்று எழுதிச் செல்கிற பில்கர், இந்தியாவின் நிதி விவகாரத்திற்குத் தலைநகரமான மும்பையின் இன்னொரு முகம், அதன் செம்பாதி மக்கள் சுத்தம், சுகாதாரம் அற்ற சேரிப் பகுதிகளில் அவதியுறுவதுதான் என்கிறார். அமெரிக்க விளம்பர நிறுவனம் ஒன்று தயாரித்துக் கொடுத்த விளம்பரங்களை வைத்துக் கொண்டு இந்தியா மின்னுகிறது என்று பா ஜ க தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அடித்த கூத்தை மக்கள் 2004 தேர்தலில் நிராகரித்தனர். இந்தியா மின்னிக்கொண்டிருந்தால் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் ஏன் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று கேட்கும் பில்கர் இந்த எண்ணிக்கை கூட குறைத்து மதிப்பிட்டதாக இருக்கக் கூடும், உள்ளபடியே மரணத்தைத் தேடிக் கொண்ட விவசாயிகள் இன்னும் கூடுதலாக இருக்கும் என்கிறார். ஆட்சி மாற்றத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வந்தாலும் அவர்களும் இதே சந்தைப் பொருளாதார நவீன தாராளமய கொள்கைகளைத் தொடரவே செய்தனர். மைக்ரோசாப்ட், பிஸா ஹட், மான்சாண்டோ, கோகோ கோலா, ராபர்ட் முர்டோக் என கணினி, பிஸா உணவு, விதைகள், குளிர்பானம் மற்றும் தண்ணீர், ஊடகங்கள் எல்லாவற்றிலும் பன்னாட்டு நிறுவனங்கள் அதுவரை தங்களுக்கு திறக்கப்படாத வாசலைத் திறந்து புகுந்து கொள்ளை அடித்துக் கொண்டிருப்பதைக் குறிப்பிடும் பில்கர் பா.ஜ.க மற்றும் சுதந்திரம் பெற்றுத் தந்தாகச் சொல்லும் காங்கிரஸ் இரண்டையும் இந்த உலகமயம் கரைத்து விழுங்கிவிட்டது என்று சொல்வது முக்கிய கவனம் பெற வேண்டிய விஷயமாகும். மாற்று பிரதமராக இன்று முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி குஜராத்தில் நிகழ்த்திய வெறியாட்டம், படுகொலைகள், மதவெறிக்குப் பலியிட்ட அப்பாவி இஸ்லாமிய உயிர்கள் இவற்றை மறைத்துக்கொண்டு வளர்ச்சி நாயகன் வேடத்தில் வலம் வந்ததையும் பில்கர் விமர்சித்திருக்கிறார்.இப்படி எந்த ஆட்சி வந்தாலும் ஏழை மக்களுக்கு விடிவுயில்லை ஏனெனில் இந்த ஆட்சி அமைப்பே வாங்கும் திறன் கொண்ட அல்லது நுகர்வுவெறி கொண்ட கூட்டத்தின் அடிப்படையில் (இன்றொரு இந்தியா) அதனை தன் கைக்குள் வைத்து கொள்ள பெரும் நிறுவனங்களும் அரசும் தன் முற்போக்கு முகமூடியுடன் உள்ளது, ஏழைகளை சோம்பேரிகள், உழைக்காமல் வாழும் கூட்டம் திருடர்கள் இப்படி என்னென்வோ சொல்லி அவர்களின் உழைப்பை மட்டும் மறக்காமல் சுரண்டி கொள்கின்றனர். வாழ்வதற்காக மனிதர்கள் பொருளை உற்பத்தி செய்யவும், நுகரவும் வேண்டும். உற்பத்தியும் அதனோடு தொடர்புடைய நடைமுறைகளும் பொருளாதார நடவடிக்கைகளாகும். அதனால், மனித வாழ்வின் நிர்ணய சக்தியாக அதுவே விளங்குகிறது. இவ்வாறாக, மனிதர்கள் தனிநபர் அளவிலும், சமூக அளவிலும், உற்பத்தி உறவுகளுக்கு உள்ளாகிறார்கள், அதன் மறுபெயர் உழைப்பு உறவுகள். உழைப்பு உறவுகள் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றவையாக இருக்கின்ற போது, அதன் விளைவாக ஏற்படும் சமூக உறவுகளும் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றதாகவே இருக்கும்.அரசு என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களால்தான் ஆளப்படுகிறது எனும் புரிதல் இன்றி நாம் அரசிடமே அரசியல் சீர்த்திருத்தம் வேண்டி நிற்கிறோம். அரசு இயந்திரங்களானவை நிலவும் அதிகார அமைப்புகளுக்கு ஆதரவாக இயங்குபவை:அரசு என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களால்தான் ஆளப்படுகிறது எனும் புரிதல் இன்றி நாம் அரசிடமே அரசியல் சீர்த்திருத்தம் வேண்டி நிற்கிறோம். அரசு இயந்திரங்களானவை நிலவும் அதிகார அமைப்புகளுக்கு ஆதரவாக இயங்குபவை:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *