இயற்கையின் இயக்க இயல்…!‘இயற்கையின் இயக்க இயல்’ என்ற நூலானது மார்க்சிய அறிஞர் பிரடெரிக் ஏங்கெல்சினால் எழுதப்பட்டது. இது 1873-86 காலகட்டத்தில் உருவானது. இது ஒரு முடிவடையாத நூல் என்ற போதிலும் இயற்கை விஞ்ஞானம் குறித்த இயக்க இயல் பிரச்சனைகளை ஆராயும் நூலாகும்.இயக்க இயல் பொருள் முதல் வாதத்தின் தத்துவம் என்பது சமூக விஞ்ஞானங்களை மட்டும் குறித்து விரிவான அறிவை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது, ஆனால் இயற்கை விஞ்ஞானங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இயற்கை விஞ்ஞானங்கள் என்பவை இயக்க இயல் பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலொழிய வெற்றிகரமாக வளர்ச்சி அடைய முடியாது என்று ஏங்கெல்ஸ் இந்நூலில் திட்டவட்டமாகக் கூறுகிறார்.இந்நூலானது வரலாறு குறித்த ஆழமான தத்துவ ஆராச்சியையும் செய்கிறது. இயற்கை விஞ்ஞானம் குறித்த மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து ஆராய்கிறது. அத்துடன் இயற்கை விஞ்ஞானம் குறித்த இயந்திரரீதியான பொருள் முதல் வாத அணுகுமுறையையும். மாறா இயல் அணுகு முறையையும் அதேபோன்று கருத்து முதல் வாத மற்றும் பிரபஞ்சத்தை அறிய முடியாது என்று கூறும் போக்கையும் கடுமையாக விமர்சிக்கிறது.சமகால விஞ்ஞானத்தை விரிவாக ஆராய்ந்த ஏங்கெல்ஸ், இயற்கை குறித்த மாறா இயல் கோட்பாடானது விஞ்ஞானப்பூர்வ வளர்ச்சியால் உடைத்தெறியப்பட்டுள்ளது என்பதையும் இயக்க இயல் முறைக்கு கட்டாயம் இடம் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது என்பதையும் நிரூபித்தார்.இயற்கை விஞ்ஞானிகள் மாறா இயல் அணுகுமுறையைக் கைவிட்டு இயக்கஇயல் முறையை ஏற்றுக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் ஏங்கெல்ஸ் சுட்டிக்காண்பித்தார். பொருளின் இயக்க வடிவங்கள் குறித்த இயக்க இயல் பொருள்முதல்வாத போதனையை ஏங்கெல்ஸ் மேலும் வளர்த்தார். இந்தப் போதனைக்கேற்ப இயற்கை விஞ்ஞானங்களை வகைப்படுத்தும் கோட்பாட்டை அவர் உருவாக்கினார்.அவர் இயற்கை விஞ்ஞானத்தின் அடிப்படையான விதிகள் குறித்த ஒரு விரிவான தத்துவ ஆய்வைச் செய்து அவற்றின் இயக்க இயல் தன்மையை வெளிப்படுத்தினார்.பிரபஞ்சம் என்பது படிப்படியாக தன் வெப்பச்சாவை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற கூற்றின் தவறை அவர் வெளிப்படுத்தினார்.உயிரினங்களின் தோற்றம் குறித்த டார்வினுடைய போதனையை முற்றிலும் ஆராய்ந்த ஏங்கெல்ஸ் அதனுடைய வளர்ச்சிக் கோட்பாடானது பொருள் முதல்வாத இயக்க இயலுடன் முற்றிலும் ஒத்துப்போகிறது என்பதை சுட்டிக்காண்பித்தார். மனிதனின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் உழைப்பின் பங்கு குறித்து இந்நூலில் ஏங்கெல்ஸ் விரிவாக ஆராய்ந்துள்ளார்.இந்நூலில் தற்செயல் என்பதற்கும் அவசியம் என்பதற்கும் இடையிலான உறவை ஆராய்ந்த அவர் இந்தப் பிரச்சனைக்கு தரப்படும் இயந்திரவியல் வகைப்பட்ட, கருத்து முதல்வாத அணுகுமுறைகள் தவறானவை என்பதைச் சுட்டிக்காண்பித்தார்.இயற்கை விஞ்ஞானம் என்பது இயக்கஇயலில் கூறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறது என்பதைச் சுட்டிக்காட்ட ஏங்கெல்ஸ் டார்வினுடைய போதனையைப் பயன்படுத்தினார்.இயற்கை விஞ்ஞானத்தின் விசேஷ பிரச்சனைகள் குறித்து தன் நூலில் ஏங்கெல்ஸ் கொடுத்த சில விபரங்கள் பெரும் விஞ்ஞான வளர்ச்சி காரணமாக காலத்திற்கு ஒவ்வாது போய்விட்டாலும் இயற்கை விஞ்ஞானம் மற்றும் அதனுடைய தத்துவார்த்த பொதுமைப்படுத்தல் ஆகியவை குறித்த அவருடைய இயக்க இயல் பொருள் முதல் வாத அணுகுமுறை இன்றும் கூட முற்றிலும் பொருந்தும்.சுருங்கக்கூறின் இந்தப் புத்தகமானது இயற்கை விஞ்ஞானம் குறித்த சிக்கலான பிரச்சனைகள் மீது இயக்கவியல் சிந்தனைக்கு ஒரு முன்மாதிரி ஆகும்.ஆதாரம்: தத்துவ அகராதி (ஆங்கிலம்).(குறிப்பு: மாறா இயல் (metaphysics) என்றால் இயக்க இயலுக்கு எதிர்ச் சொல்லாகும் எதுவும் மாறுவதில்லை. அனைத்தும் அப்படியே இருக்கும் என்று கூறுவதாகும். அறிய முடியாத வாதம் (agnosticism) என்பது இந்த உலகையும், அதில் உள்ளவற்றையும் மனித சிந்தனையால் அறிய முடியாது என்று கூறுவதாகும்)