இயக்கவியல் பொருள் முதல்வாதம் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இங்கிலாந்தின் மார்க்சிய தத்துவ அறிஞரான மாரீஸ் கான்ஃபோர்த்தின் இந்நூல் இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள் முதல்வாதம், அறிவின் கோட்பாடு என்ற 3 பகுதிகளை உள்ளடக்கியது. அதில் முதல் பகுதியான இயக்கவியல் பொருள்முதல்வாதம் பற்றிய அறிமுகமே இங்கு தரப்படுகிறது.இயற்கை, மனிதசமூகம், சிந்தனை ஆகியவற்றை பற்றிய பொதுவான உலக கண்ணோட்டமே தத்துவமாகும். இவ்வகையில் உலகில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ ஏதாவதொரு தத்துவத்தை பின்பற்றி கொண்டிருப்பர். அதை தத்துவவியலாளர்கள் ஒழுங்கமைத்து ஒரு வடிவம் கொடுப்பர். சமூக தேவையினால் தான் தத்துவம் உதிக்கிறதே ஒழிய மாறாக தத்துவஞானியின் மூளையில் உதிக்கும் ஒரு கருத்தல்ல தத்துவம். வர்க்க சமூகத்தில் தத்துவங்களும் வர்க்க சார்புடையதுதான். அவ்வகையில் மார்க்சியத்திற்கு முந்தைய தத்துவங்கள் அனைத்தும் சுரண்டல் வர்க்கத்தின் தத்துவங்களாகும். மார்க்சியமே உழைக்கும் மக்கள் தத்துவம். சுரண்டும் தத்துவங்கள் அனைத்தும் தன்னை நிரந்தரமானதாகவும் மாறாததாகவும் காட்ட மிகவும் முயற்சித்தன. அதற்கு உதாரணமாக அடிமைச்சமூகத்தில் இயல்பாகவே சில மனிதர்கள் அடிமை குணம் கொண்டவர்கள் எனவே அடிமைச் சமுதாயம் இயற்கையானது என்றார் அரிஸ்டாட்டில். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் நிலப்பிரத்துவ கட்டமைப்புதான் அதாவது உச்சியில் அரசர் அல்லது தேவதூதர் சூழ அவரை சுற்றி பிரபஞ்சம் கட்டமைக்கப் பட்டுள்ளதாகவும் அதனால் நிலப்பிரத்துவம் நிலையானது என்றார் தோமஸ் அக்வினாஸ் என்ற தத்துவ அறிஞர். ஆனால் மார்க்சியம் அனைத்தும் மாறக்கூடியது தான் என அதன் முன் இருந்த அனைத்து சுரண்டல் தத்துவங்களின் இருத்தலை ஒழிக்க முன் எழுந்தது.மார்க்சிய தத்துவம் என்பதே இயக்கவியல் பொருள்முதல்வாதம் தான். அனைத்தையும் இயங்கிக்கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கின்ற நிகழ்முறைகளின் தொகுப்பாக தான் மார்க்சியம் பார்க்கிறது. அதன் அடிப்படையில் தான் சமூகத்தை ஆய்வு செய்கிறது. பொருள் முதல்வாதத்தில் எப்போதும் முன்வைக்கப்படும் முதல் கேள்வி, பொருள் முதலா? கருத்து முதலா? என்பது. உதாரணமாக இடி மின்னல் ஏன் ஏற்படுகிறது அது கடவுளின் கோவம் என கருத்து முதல்வாதமும் மேகத்துகள் உராய்வு என பொருள் முதல்வாத பார்வையுடையவர்களும் பதில் சொல்வர். ஆனால் அதன் இறுதி முடிவை அறிவியல் தான் கண்டறியும். ஆனால் அதற்கான வழிமுறை இயக்கவியல் பொருள் முதல்வாதம் தான் கருத்துமுதல் வாதமல்ல. மனிதனால் புரிந்துகொள்ள முடியாததை பயத்தை கடவுளாக்கி இவ்வுலகை இரண்டாக ஆன்மா- உடல், கடவுள்- மனிதன், மேலோகம் – பூலோகம் என கருத்து முதல்வாதிகள் பிரித்து விட்டனர். இதில் இரட்டைவாதம் என்ற கருத்தும் உண்டு. அதாவது இயற்கையை பொருள் வழியிலும் மனித சமூகத்தை ஆன்மீக வழியிலும் விளக்கும் தத்துவம். முதலாளித்துவமும் இந்த வகைமைக்குள் வரும். இன்னமும் மனிதனால் அறியப்படாத விடயங்கள் இருப்பினும் அதை மனிதன் எதிர்காலத்தில் கண்டறிவான். அறியவே முடியாத விடயம் என்று உலகில் எதுவுமே இல்லை என்கிறது மார்க்சிய அறிவியல்.இப்படி கருத்து முதல்வாதத்திலிருந்து அடுத்தக் கட்டமாக முதலாளித்துவத்தில் இயந்திரகதி பொருள்முதல்வாதத்திற்கு மாறினார்கள். அதாவது இயக்கத்தின் அனைத்தும் தழுவிய நிலையை காணாமல் வெறும் இயந்திரமாய் இயக்கத்தை கருதி நடந்ததே திரும்ப திரும்ப நிகழும் தொடர்ச்சியான இயக்கமாக இயந்திரவியலாக சுருக்கி மாற்றினார்கள். அப்போது வளர்ந்திருந்த இயந்திரவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் அவர்களின் வர்க்க கண்ணோட்டமும் இந்த தத்துவம் உருவாக வழி செய்தது. இதன் படி ஒவ்வொரு பொருளும் தனித்தனியான பண்புகளை கொண்டிருக்கும். புறக்காரணத்தினால் மட்டுமே இயக்கம் நடைபெறும். ஒவ்வொரு பொருளுக்கும் சுதந்திரமான மாறாத இயல்பு இருக்கிறது மற்றும் ஒவ்வொன்றுக்குமான உறவென்பது புற வயமானது என அது நிறுவியது. ஆனால் அதனை இயக்கவியல் பொருள்முதல்வாதம் மறுத்து உலகம் ஓர் சிக்கலான பொருட்களின் உலகமல்ல. மாறாக சிக்கலான நிகழ்முறைகளின் நிகழ்வுகளின் உலகம். மேலும் பருப்பொருள்களை இயக்கத்திலிருந்து பிரிக்கமுடியாது. பொருட்கள் தனித்தனியாக இருப்பதில்லை மாறாக ஒன்றுடன் ஒன்று பிணைப்பாக உள்ளது என்றது. ஒரு பொருளை இயக்குவது புறக்காரணமல்ல மாறாக ஒவ்வொரு பொருளிலும் உள்ள உள்முரண்பாடு தான் இயக்கத்தை வளர்ச்சியை தருகிறது என்கிறது இயக்கவியல் பொருள் முதல்வாதம். இயக்கவியலின் ஓட்டத்தின் இடையில் மீபொருண்மவியல் என்ற தத்துவம் குறுக்கிட்டது. மீபொருண்மவியல் என்பது பொருளின் உண்மையான மாற்றத்தை வளர்ச்சியை தவிர்த்து விட்டு கற்பிதத்தில் இருந்து அணுகி ஒரு கற்பனையான சூத்திரத்தை முன்மொழிகிறது. அதனால் அது எப்போதும் இணக்கமற்ற அதுவா? இதுவா? என்ற கேள்விகளையை முன்வைக்கிறது. இயற்கையிலும் சமூகத்திலும் உள்ள உள்முரண்பாடுகளையும் பொருளின் இயக்கத்திலுள்ள ஒற்றுமையையும் போராட்டத்தையும் அது காண்பதில்லை. அது இயக்கத்தை பார்க்காமல் பொருட்களை பார்த்து அதன் பண்புகளை என்றுமே நிரந்தரமாய் முடிவு செய்து கொள்கிறது. உதாரணமாக யுத்தம் சரியா? தவறா? என்ற கேள்விக்கு அது எம்மாதிரியான யுத்தம் யாருக்கு எதிரான யுத்தம் என்பதை அதன் இயக்கத்தில் நடப்பில் வைத்து பார்க்காமல் யுத்தமென்றாலே சரி அல்ல தவறு என அது முடிவு கட்டுகிறது. வன்முறைக்கும் இதே சித்திரத்தை அது கொடுக்கிறது. மூளையின் செயல்திறன் எனப்படும் IQ முறை இதற்கு ஓர் சிறந்த உதாரணம். அறிவு உருவாக காரணமான சமூகத்தை புறக்கணித்து மூளையில் இருந்து உதிக்கும் ஒன்றாக அதுவும் மாறாத ஒன்றாக அதனை இது அணுகிறது. ஒவ்வொரு பொருளையும் அது அல்ல இது என்று இரண்டு எதிரிடையாய் பார்க்கிறது. ஒரு பொருளுக்குள் உள்ள தற்காலிக ஒற்றுமையை கணக்கில் எடுக்காமல் போராட்டத்தை மட்டுமே பார்க்கிறது. இயக்கம் என்பதே ஒரு பொருளின் தற்காலிக ஒற்றுமையும் நிரந்தர போராட்டத்தினால் நடப்பதுதான். ஆனால் இது ஒற்றுமையை புறந்தள்ளி போராட்டத்தை முன்நிறுத்தி இணக்கமற்ற முறையில் சமூகத்தை அணுகுகிறது. மேம்போக்காக பார்த்தால் இது சரியாகவே தோன்றும். அந்த வலையில் தான் பெரும்பான்மையான மக்கள் இந்த இணக்கமற்ற பார்வையில் உள்ள மீபொருண்மவியல் கருத்தில் விழுகின்றனர். ஆனால் ஒரு பொருளின் பொதுத்தன்மை மற்றும் குறித்த தன்மை என் அனைத்தும் அடங்கிய நிகழ்முறைகளின் தொகுப்பாய் உலகை பார்ப்பதே இயக்கவியல்.இயக்கவியல் படி சமூகம் மற்றும் இயற்கை என்பது அதன் உள்முரண்பாட்டினால் தான் மேம்பாடு அடைகின்றது. அதாவது உள் முரண்பாடு என்பது அடிப்படை அதை வெளியிலிருந்து தள்ளும் புறக்காரணம் இரண்டாம்பட்சமானது என்கிறது. உதாரணமாக ஒரு முட்டை குஞ்சு பொரிப்பதற்கு அதன் உள் முரண்பாடு தான் அடிப்படை காரணம். அதற்கு வெளியிலிருந்து கொடுக்கப்படும் வெப்பம் அத்தியாவசிமானது என்றாலும் கூமுட்டையால் குஞ்சு பொறிக்க முடியாது. முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி சமூகமயமாகி அதன் சுவீகரிப்பு தனிமனிதர்களுக்கு செல்லும் உள்முரண்பாடு தான் சோசலிசத்தை நோக்கி உந்தி தள்ளுகிறது. ஆனால் அதனை நிறைவேற்ற வெளிப்புறத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையில் பாட்டாளி மக்களின் படை தேவைப்படுகிறது. ஆதலால் எப்போதுமே உள் முரண்பாடுதான் முதன்மையானது. புறக்காரணங்கள் தேவையானது.உள் முரண்பாட்டின் விளைவாக ஒரு பொருள் அதன் பழைய நிலையை மறுத்து புதிய நிலைமைகளுக்கு செல்கிறது. மீண்டும் அதனையே மறுத்து அதன் ஆரம்ப நிலையின் ஓர் உயர்ந்த கட்டத்திற்கு செல்கிறது. இதில் பழைய பொருள் முற்றிலும் அழிவதில்லை. அதனின் சிறப்பாக அம்சங்கள் புதிய ஒன்றை உருவாக்கியிருக்கிறது. பழையதின் நீட்சியாக புதியது உள்ளதே தவிர பழையதை ஒட்டுமொத்தமாக அழித்து புதியது உருவாக வில்லை. ஒரு விதை மறுத்து செடி உருவாகுகிறது அந்த செடி மறுத்து முதலில் உண்டான செடியை விட வீரியமிக்க அதிகமான விதைகளை அது வந்தடைகிறது. விதையின் மறுதலிப்பின் மறுதலிப்பால் மீண்டும் விதைதான் கிடைக்கிறது ஆனால் அது முன்பு இருந்த விதை கிடையாது அதைவிட வீரியமிக்க அதிக எண்ணிக்கையிலான விதைகள். ஆகவே மறுதலிப்பின் மறுதலிப்பு என்பது சமுகத்தின் மேம்பாடு ஆகிறது. உள் முரண்பாடு என்ற எதிர்மறைகளின் ஒற்றுமையும் போராட்டம் தான் அளவு மாற்றம் பண்பு மாற்றம் என்ற நிகழ்வு முறைகளை வழங்குகிறது. அதன் தொடர் நிகழ்வுகளின் தொகுப்பாக மறுதலிப்பின் மறுதலிப்பு உருவாகி அது சமூகத்தை முன்னேற்றுகிறது. ஆதி பொதுவுடைமை சமுகம் மறுத்து தான் ஆண்டான் அடிமை, நிலப்பிரத்துவம், முதலாளித்துவம் வந்தது. அதனை மறுத்து தான் முந்தைய பொதுவுடைமை யின் உயர்ந்த கட்டமான நவீன பொதுவுடைமை வருகிறது. இதைதான் மேம்பாடு என்கிறது மார்க்சியம்.கம்யூனிச சமூகத்தை நோக்கிய நமது பாதையின் ஒரு கட்டத்தில் சுரண்டல் ஒழிக்கப்பட்டு அதன் வழியாக மோதல், சண்டைகள் மூலமான மேம்பாடு என்பது முடிவு கட்டப்பட்டு உண்மையான பகுத்தறிவின் அம்சமான விமர்சனம் சுயவிமர்சன அடிப்படையில் சமூகம் முன்னேறும். அதனடிப்படையல் மேம்பாடு நிகழும் என்கிறார் மாரிஸ் கான்ஃபோர்த்முதலாளித்துவத்திற்கு அறிவியல் அடிமைப்பட்டு கிடக்கிறது. அறிவியல் ஆராய்ச்சி என்பது தனிநபர்களின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டு ஒரு நிறுவனமாக மாறியுள்ளது. அங்கு அதிகளவிலான பணம் தேவைப்படுகிறது. ஆதலால் முதலாளித்துவம் அதனை தன் கட்டுப்பாட்டில் வைத்து தனது லாபத்திற்கும் போருக்குமான அறிவியலையே உருவாக்க கட்டளை இடுகிறது. ஆதலால் அறிவியல் வளர்ச்சி தேங்கி நிற்கிறது. குறிப்பாக அணு அறிவியல் எவ்வாறு இயங்கும் என்பதை அறிவியல் படைக்கும். ஆனால் அதன் சமூக பயன்பாட்டை மார்க்சியம் எனும் சமூக அறிவியலே தீர்மானிக்க முடியும். இல்லையெனில் அந்த அறிவியல் அழிவையே கொடுக்கும். அதற்கான வரலாற்றை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே அறிவியலை மீட்டெடுக்க இச்சமயத்தில் நம்முன் உள்ள ஒரு ஆயுதம் மார்க்சியம் மட்டுமே என்கிறார் மாரிஸ் கான்ஃபோர்த்.வரலாற்றுப் பொருள் முதல்வாதம்