இன்றை உலகமயமாக்கல் என்பது ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளை மேன்மேலும் சுரண்டிக் கொள்ளையிட்டு வருகின்றது.இதில் பெண்கள் பன்முகப்பட்ட வழிகளில் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் பெண் ஒடுக்குமுறைக்குள்ளாவதை காணமுடிகிறது.
பழமைவாதக் கருத்தில் அழுத்தப்பட்டுள்ள பெண்களை விடுவிப்பது,அடுத்து இன்றுள்ள சமூகச் சூழலின் பன்முகத் தாக்கங்களிலிருந்தும் பெண்கள் அறிவு ரீதியாகவும் நடைமுறை வாயிலாகவும் விடுபட வேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது.
வரலாற்றில் பெண்கள் விடுதலை இயக்கம் மற்றும் அதன் போக்குகளை சிறிது அலசி அறிவோம்:-
முதலில் தீவிரப் பெண்ணியம் (Radical Feminist) பற்றி அறிவோம்:- இந்த இயக்கம் பெண் விடுதலைக்கும் பெண்ணிய உணர்வு நிலையை வளர்த்தெடுப்பதற்குமான குழுக்களையும் பண்பாட்டு, வெகுசன அமைப்பு செயற்திட்டங்களையும் கொண்டிருந்தது. அத்துடன், பெண்கள் இயக்கம் எண்ணற்ற அரசியற் குழுக்களைக் கொண்டிருந்தது மட்டுமன்றி உயர் தொழிற் துறைகள், தொழிற் சங்கங்கள், அரச நிருவாகம் ஆகிய துறைகளில் செயற்திட்டங்களை ஏற்பாடு செய்தும் வந்தது.அமெரிக்காவின் பெண்கள் பலரது வாழ்விலும் அமெரிக்காவின் அன்றாட வாழ்விலும் அந்த இயக்கம் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. முற்றிலும் ஆண்கள் வசமிருந்த வேலைகளையும் உழைப்புத் துறைகளையும் அது பெண்களுக்குத் திறந்து விட்டது. தகவல் ஊடகங்களில் பெண்கள் பற்றிய சித்திரிப்பை அது மாற்றியது. அரசியல், நிறுவனமாக்கப்பட்ட மதங்கள், விளையாட்டு மற்றும் எண்ணிறந்த பல்வேறு தளங்களிலும் நிறுவனங்களிலும் பெண்களுக்கும் சமத்துவம் என்ற கோரிக்கையை அது முன்வைத்தது. இவற்றின் விளைவாக பல்வேறு துறைகளில் மாற்றங்கள் பாலின அடிப்படையிலான ஏற்பட்டன.
செல்வத்திலும், அதிகாரத்திலும் சமமின்மைகளால் பிளவுபட்டுள்ள ஒரு சமூகத்தில், ஆண்கட்கும் பெண்கட்குமிடையிலான சமத்துவம் தன்னளவிலேயே செயற்பட முடியாது. தீவிர பெண்ணியத்தின் இலக்கு ஒரு சமத்துவமான சமுதாயம், சமத்துவ அடிப்படையிலான புது வகையான சமூகங்கள்.
தீவிர பெண்ணிய வாதிகள் வேலைத்தலத்திற் பாலின அடிப்படையிலான சமத்துவத்தை வேண்டினர்.
பெண்கள் இயக்கத்தின் வியக்கத்தகு சாதனைகளும் அமெரிக்கச் சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளிற் பெண்களின் சமத்துவம் ஒரு இலக்காக ஏற்கப்பட்டதும் ஒருபுறமிருக்க, பாலின அடிப்படையிலான சமத்துவம் இன்னும் வென்றெடுக்கப்படவில்லை. மேலும் அதிகளவிற் பெண்கள் வீட்டுக்குவெளியே வேலை செய்த போதும், அவர்கள் குறைந்த ஊதியம் தரும் தொழில்களிலேயே அதிகம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்; பெண்கள் சராசரியாக, ஆண்களிலும் கணிசமான அளவு குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர்; பெண்கள் வறுமைக்குட்பட்டிருக்கும் வாய்ப்பு ஆண்களினதிலும் அதிகம், பெண்களுக்கெதிரான வன்முறை இன்னமும் பரவலாகவே உள்ளது. குழந்தைப் பராமரிப்பு, பெண்களுடைய பொறுப்பாகவே பெரும்பாலும் உள்ளது. பெரும்பாலான பெண்கள் வீட்டுக்கு வெளியே வேலை பார்த்த போதும், எங்கும் இது ஒரு குடும்ப பொறுப்பாகப் பார்க்கப்படுகிறதே ஒழியச் சமூகப் பொறுப்பாகப் பார்க்கப்படுவதில்லை.அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பெண்ணியவாதிகள் குடும்பத்தினுள்ளும் தனிமனித உறவுகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான அதிகாரச் சமமின்மை பற்றி ஆட்சேபித்தனர். ஆயினும், இவை யாவும் இன்றும் தொடர்கின்றன.
இதன் தாக்கம் மற்றும் வளர்ச்சி எவவளவு சிறப்பானதாக இருந்தாலும் இதன் லட்சியமான சமத்துவம் ஏற்படவில்லை என்பதே இங்கு நாம் கணக்கில் கொள்ள வேண்டியவை. அதனை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இரண்டாவதாக தாராளவாதப் பெண்ணியவாதிகள்:- ரூத் ரோஸன் (Ruth Rosen) எழுதிய “பிளந்து திறக்கப்பட்ட உலகம்: நவீன பெண்கள் அமெரிக்காவை மாற்றிய விதம்’ (The World Split Open: the Way Modern Feminism Transformed America) எனும், பெண்கள் இயக்கம் பற்றிய ஆய்வு நூலில்,இந்த வளர்ச்சிப் போக்குக்கள் பெண்கள் இயக்கத்தின் மீது ஏற்படுத்திய பொதுவான தாக்கம் பற்றிய தெளிவான பார்வை கொண்ட விவரம் உள்ளது.
இவைகளின் தாக்கம் பெண்களுக்கான சிறிது முன்னேற்றத்தை கொடுத்தாலும் இதனை முடக்கி மடை மாற்றிய பெருமை NGO க்களை சாரும்.
பல நல்ல சக்திகளது சீரழிவுக்குக் காரணமாகியுள்ள என்.ஜி.ஓ பெண்ணிய வாதிகளையும் விட்டு வைக்க வில்லை.
என்.ஜி.ஒ.க்கள் செய்கிற கெடுதல் பல விதங்களில் முக்கியமானது. தனிமனித மட்டத்தில், அரசியல்,சமூக உணர்வின் அடிப்படையில் ஒருவர் செய்கிற வேலைகள் அவர் வாழுகிற சமுதாயத்துக்கு அந்நியமான ஒரு நிறுவன நிதியுதவியில் கூலிக்காகச் செய்யப்படுகின்றன. சாதாரணமாக உழைத்துப் பெறக்கூடிய ஊதியத்திலும் பெரிய தொகைகள் சன்மானமாகக் கிடைப்பதன் விளைவாக, என்.ஜி.ஓ.வையே சார்ந்து வாழும் தேவை காலப்போக்கில் நடந்தேருகிறது.. என்.ஜி.ஒ.க்களில் தம்மைத் தொடர்புபடுத்திக் கொண்ட பல முன்னாள் இடதுசாரிகளும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் மிகவும் சீரழிந்து அரசியற் செயற்பாட்டை நிராகரித்து என்.ஜி.ஓ. அறப்பணிகள் மட்டுமே சமூகநலனைப் பேண முடியும் என்று வாதிப்பதை நாம் கேட்கலாம். இந்தச் சீரழிவை விட, திட்டமிட்ட முறையிலேயே என்.ஜி.ஒ.க்கள் புரட்சிகர அரசியலை மறுதலிப்பதற்கான மாற்றுச் சிந்தனைகளைப் புகுத்துகின்றனர். அவர்களிடம் கை நீட்டிப் பணம் பெறுகிற ஆய்வறிவாளர்களை விட யார் இதை நன்கு செய்ய முடியும்? என்.ஜி.ஓ. ஆதரவு, அரசியல் நிலை தடுமாறுகிற ஒருவருக்கு முதலில் ஒரு ஊன்றுகோல் போல உதவுகிறது. பிறகு அந்த ஊன்றுகோலின்றி நடக்க முடியாதளவுக்கு ஒருவரது சிந்தனை முடமாக்கப்பட்டு விடுகிறது. போதை மருந்துக்குப் பழக்கப்பட்ட ஒருவர் போல என்.ஜி.ஒ.க்கு அடிமையான ஒருவரால் சுதந்திரமாகச் செயற்பட முடியாமற் போகிறது.
என்.ஜி.ஒ.க்களில் பெண்ணுரிமை அமைப்புக்கள் சார்ந்துள்ளவரையும்,அவற்றால் பெண்ணிய அரசியலை அடிப்படையான பிற சமூகப் பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்திச் செயற்பட முடியாது போய்விடும்.
தனது பணியைச் செய்கிற முறையில் “கடமையைச் செய் (மாதாந்த ஊதியத்தை விட அதிகமாக) பலனை எதிர்பாராதே’ என்ற விதமாகச் சமூக ஈடுபாடின்றி ஈடேறுகின்றன. இந்தவிதமான செயற்பாடு, ஒரு முதலாளியக் கட்சிக்கே ஏற்றதல்ல.சமூக நீதிக்காகச் செயற்பட வேண்டியவர்கள் இப்படியான ஒரு கூலிப் பட்டாளமாக முடங்கிவிடுவதன் மூலம் அவர்களது போராட்ட வலிமை நிர்மூலமாகி விடுகிறது.