இன்றைய சமூகத்தில் பெண்ணின் நிலை-2

நிலப் பிரபுத்துவ அமைப்பு கட்டிக்காத்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைகளை முதலாளித்துவம் தகர்த்த போதிலும் குடும்பப் பொறுப்பு முரண்பாடுகள் நிறைந்த தனிக் குடும்ப அலகை தனது நலனுக்காகக் கட்டிக்காக்கவும் முற்படுகிறது. பழமைப் பிடிப்பும், பொருளாதாரப் பிணைப்பும் கொண்ட இக்குடும்ப உறவுமுறைகள் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், உழைக்கும் வர்க்கத்தின் சமூக மாற்றத்திற்கான எழுச்சியையும், பேராற்றலையும் மழுங்கடிக்கவும் உதவும் என்பதை இவ் அரசுகள் உணர்ந்துள்ளன.

முன்பு தாய், தந்தையர், பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள் என்று இருந்த கூட்டுக்குடும்பங்கள் இன்று பொருளாதாரக் காரணங்களினால் சிதைவுற்று கணவனும் மனைவியும் கொண்ட தனிக்குடும்பங்கள் உருவாகின்றன. இதனால் கணவனின் பெற்றோர், உற்றார், உறவினருக்குக் கீழ்ப்படிந்து சேவை செய்யும் நிலையிலிருந்து பெண் விடுதலைபெற்று வருகின்றாள். சோசலிச நாடுகளில் ஒருபுதிய குடும்ப உறவுமுறைக்கான திட்டமிட்ட கல்விமுறையும், வயது வந்த பெண்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பும் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வயது வந்த இளம்பெண்கள் பெற்றோரிடம் வாழும் நிலைமாறுகின்றது. தனிச் சொத்து வடிவம் அங்கு இன்மையினால் பெற்றோரின் தலையீடு இன்றியே வாழ்க்கைத் துணைவனைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அவள் பெறுகின்றாள். திருமணத்தின் பின்னும் சமூக உழைப்பில் அவள் தொடர்ந்தும் ஈடுபடுவதால் பொருளாதாரக் காரணங்களுக்காகக் கணவனில் தயவில் வாழ வேண்டிய அடிமை நிலையிலிருந்தும் அவள் விடுபடுகிறாள்.

முதலாளித்துவ அமைப்பின் தொழில்துறை வளர்ச்சியும்,சுரண்டல் அமைப்பும் ஒரு ஆணின் உழைப்பில் மட்டும் தங்கிநின்று ஒரு குடும்பம் வாழமுடியாத நிலையை உருவாக்கியபோது பெண்களும் வீட்டுக்கு வெளியே சமூக உழைப்பிலும் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய இரட்டைச் சுமைகளும், ஆணதிகாரமும் அழுத்தியதால் பெண் விடுதலை இயக்கங்கள் பிரிட்டன், அமெரிக்கா போன்ற தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே முதலில் எழுந்தன. இன்று தீவிர பெண்நிலைவாதிகள், மார்க்சியப் பெண்நிலைவாதிகள் என்று பல பிரிவாக இவர்கள் வளர்ந்து வருகின்றனர். இதில் தீவிர பெண் நிலை வாதத்தை ஆதரிப்போர் ஆண்களால் முன்னெடுக்கப்படும் சமூகவிடுதலை இயக்கங்களை ஆதரிக்க மறுப்பதுடன், பாலியல் பிறழ்வுகளை ஊக்குவிக்கும் நிலைப் பாட்டைக் கொண்டுள்ளவர்களாகவும், மார்க்சியப் பெண்நிலை வாதிகள் தமது தனித்துவத்தைப் பேணுவதுடன் ஆண்களுடன் இணைந்து தமது பொதுப் போராட்டங்களை ஏற்றுக்கொள்வதுடன் புதிய ஒழுக்கமுறைக்கு வழிகோலுபவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

தவறான பழமைக்கருத்துக்களில் இருந்து முற்றாக விடுபடாத நமது சமூகத்தில் பெண்விடுதலைக்கு எதிரான கருத்துடையவர்களாகவும் இருக்கின்றனர். உயிரியல், உளவியல், உடற்கூற்றுக் காரணங்கள் எதைக்கூறினும் இரத்தமும், சதையும், உடலும், உயிரும், உணர்வும் கொண்ட ஒரு மானிட உயிரி என்ற வகையில் பெண் சுதந்திரமானவள். ஒடுக்கப்படும் பெண்களுக்கு ஒடுக்குதலுக்கு எதிராகப் போராடும் உரிமை உண்டு. பெண்கள் தமது விடுதலைக்கு தாமே போராட வேண்டும்.

பெண்விடுதலை என்பது சமூகவிடுதலையின் ஒருபகுதி என்றவகையில் பெண்கள் தமது விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை ஒடுக்கு முறைகளுக்கு எதிரான ஏனைய போராட்டங்களுடனும் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். பகுதியும்,முழுமையும் இணையும் இத்தகைய போராட்டங்களினால்தான் முற்றுமுழுதான சமூக விடுதலையை விரைவுபடுத்த முடியும்.

நாம் வாழும் சமூகத்தில் பெண் ஒடுக்குமுறை போன்று பல்வேறு ஒடுக்குமுறைகள் நிலவுகின்றன. ஒரு சமூகத்தின் பொருளாதார அமைப்பு, கல்வி, கலை, கலாசாரம், மத நம்பிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி இயக்குகின்ற அதிகார நிறுவனம் அரசாகும். அந்த வகையில் அதன்கீழ் உள்ள அனைத்து அடக்குமுறைகளுக்கும் அரசே காரணமாகின்றது. முதலாளித்துவ அரசுகள் எங்கும் வசதி படைத்த ஒரு சாராரின் நலன்களைப் பேணுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

மனிதகுல விடுதலைக்கு வழிகாட்டிய மார்க்சியத் தத்துவம், மக்களை ஒடுக்கும் அரசுகளை ஒழித்து, மக்கள் தமக்கான அரசுகளை உருவாக்கும் வழிமுறையை காட்டி நின்றது. அந்த வழியிலே நின்று விடுதலைபெற்ற நாடுகளில் பெண் ஒடுக்குமுறை முற்றுமுழுதாக இல்லாவிட்டாலும் பெருமளவு குறைந்துள்ளது.

இன்று வரலாற்றின் போக்கைப் புரிந்துகொண்டு மார்க்சியத்தை எதிர்க்க ஏகாதிபத்திய அரசுகள் பலவகையான பொருளாதாரச் சீர்த்திருத்தங்களைச் செய்ய முன்வந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான அரசு சாரா உதவி நிறுவனங்கள் உலகின் பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் கிளைவிட்டுப் பரவியுள்ளன.இதன்மூலம் சிறுசிறு உதவிகளை வழங்கி விட்டு பெருந் தொகையான இலாபங்களைக் கொள்ளையடித்துச் செல்வதுடன், தமது கலாசார சிந்தனைகளை பரப்புவதிலும் இவர்கள் வெற்றி கண்டுள்ளனர். குறிப்பாக குட்டி முதலாளித்துவ சிந்தனைகள் இன்று உலகெங்கிலும் ஊட்டி வளர்க்கப்படுகின்றது.

முழுமனித குலத்தையுமே ஒடுக்குகின்ற போர்வெறி கொண்ட அவர்கள் பொதுவுடமை அரசுகளையும்,பொதுவுடமை அமைப்பை நோக்கிய விடுதலைப் போராட்டங்களையும் பலவீனப்படுத்து வதற்காக தாமும் சில ஒடுக்குமுறைகளுக் கெதிராக போராட்டங்களை வளர்த்தெடுக்க நேரடியாகவும்,மறைமுகமாகவும் ஆதரவு நல்குகின்றனர்.

 

சோசலிச சமூகத்தில் நடந்தேறியவை

“கம்யூனிசத்தின் மூலமாக மட்டுமே பெண்கள் மெய்யான விடுதலை பெறமுடியும் என்பது இந்த விரிவுரைகளில் நன்கு வலியுறுத்தப்பட வேண்டும் .மானுடர்கள் என்ற முறையிலும் சமுதாய உறுப்பினர்கள் என்ற முறையிலும் பெண்களுக்கு உள்ள நிலைக்கும் உற்பத்தி சாதனங்களில் தனியார் உடமைக்கும் நிலவும் துண்டிக்க முடியாத இணைப்பு பற்றிய பிரச்சினையை நீங்கள் தீர்க்கமாய் பகுத்து ஆராய வேண்டும் . பெண் விடுதலைக்கான முதலாளித்துவ இயக்கத்திலிருந்து நம்மைப் பிரித்திடும் தக்கதோர் எல்லைக்கோட்டை இது அளித்திடும் , மற்றும் இதன் மூலம் நாம் பெண்கள் பிரச்சினையை சமுதாய , தொழிலாளி வர்க்கப் பிரச்சினையின் ஒரு பகுதியாக கொண்டு பரிசீலிப்பதற்கான அடிப்படையையும் நிறுவிக்கொள்ளலாம். இப்பிரச்சனை பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட துடனும் புரட்சியுடனும் உறுதியாக இணைத்து பிணைக்கப் படுவதை இவ்வாறு இது சாத்தியமாகி விடும். பெண்களது கம்யூனிஸ்ட் இயக்கம் பொதுவான வெகுஜன இயக்கத்தின் ஒரு பகுதியாய் அமைந்த வெகுஜன இயக்கமாக நடந்தேற வேண்டும் . பாட்டாளி வர்க்கத்தாரின் இயக்கம் மட்டும் அல்லாது சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருவோர் அனைவரது , முதலாளித்துவத்துக்கு பலியானோர் எல்லோரது இயக்கத்தின் ஒரு பகுதியான வெகுஜன இயக்கமாய் இது இருத்தல் வேண்டும் . பாட்டாளி வர்க்கத்தினது வர்க்கப் போராட்டத்திலும் கம்யூனிச சமுதாயத்தை சமைப்பது என்னும் அதன் வரலாற்றுச் சிறப்புக்குரிய ஆக்கப் பணியிலும் பெண்களது இயக்கத்துக்கு உள்ள முக்கியத்துவம் இதில்தான் அடங்கியுள்ளது. புரட்சிகர பெண் குலத்து மாணிக்கங்கள் நமது கட்சியினுள் , கம்யூனிஸ்ட் அகிலத்தினுள் இருக்கிறார்கள் என பெருமிதம் கொள்ள நமக்கு முழு உரிமை உண்டு . ஆனால் இது மட்டும் போதாது, நகரையும் கிராமப்புறத்தையும் சேர்ந்த கோடானு கோடியான உழைப்பாளி பெண்களை நாம் நமது போராட்டத்திலும் இன்னும் முக்கியமாய் சமுதாயத்தின் கம்யூனிசப் புணரமைப்பிலும் அணிதிரள செய்தாக வேண்டும் .பெண்கள் இன்றி மெய்யான எந்த வெகுஜன இயக்கமும் இருக்க முடியாது.”

-லெனின் கிளாரா ஜெட்கினிடம், என் நினைவுகளில் லெனின் நூலிலிருந்து….

அரசினாலும், தொழிற்சாலைகளினாலும் நடத்தப்படும் பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், தொழில் பார்க்கும் பெண்களின் வேலைப்பழுவைக் குறைக்கின்றது. சமத்துவ உணர்வு பெற்ற வாழ்க்கைத் துணைவன் வீட்டு வேலைகளிலும் பங்காளியாகின்றான். முதியவர்களானபோது அவர்களைப் பராமரிக்க முதியோர் இல்லங்கள் உண்டு. இதனால் சமூக நலனை நோக்கித் திட்டமிடப்படாத நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ அமைப்புக்களில் அடிமையாக இருந்த பெண் அங்கு விடுதலை பெற்றவளாக வாழ்கிறாள்.

அரசே அவர்களது நலன்களை உறுதிசெய்வதால் தனியுடமை அமைப்பு காலம் காலமாக வளர்த்துவந்த சுயநலம் உணர்வு தளர்வடைகின்றது. பிறர்நலம் பேணும் பொது நோக்கு உருவாகின்றது.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *