இன்றைய சமுகத்தில் பெண்

பெண்களுகெதிரான பாலியல் கொடுமைகளும் குடும்பத்தில் இழைக்கப் படும் தீமைகளை பற்றி தெரிந்துக் கொள்வதுடன் சமுகத்தில் சரிபாதியாக உள்ள பெண்கள் ஒடுக்கப்பட்டுகொண்டுள்ள நிலையில் அவர்களின் அவசியம் உணர்ந்து இந்தச் சமுகத்தில் அவர்களின் வளர்ச்சியின் ஊடாகவே சமுகமும் வளரும், படித்த பெண்ணாயினுஞ் சரி, படிக்காத பெண்ணாயினும் சரி பெண் என்றால் எப்படியும் நடத்தலாம் என்கிற எண்ணத்தை எப்படிப் போக்கலாம்? இதனை தேடியே எனது எழுத்துகள் தொடரும்.

இன்றைய ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாசிஸ்ட்டுகள் தங்களின் மக்கள் விரோத போக்கை மூடி மறைக்க மக்களை சீரழிவு பாதையில் கொண்டு செல்ல இத்து போ்ன நில உடைமையின் மிச்ச சொச்சங்களை மக்கள் மத்தியில் பரப்பி அதில் குளிர் காய்ந்துக் கொண்டுள்ளனர் அவை என்றோ காலாவதியாகி விட்டது இருந்தும் மக்களை எப்படி ஆளுமை செய்கிறது என்பதனை விளக்கவும் முற்படுவேன் இந்த தொடரின் ஊடாக…

இன்று உலகமயமாதல் என்பதன் ஊடாக ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளை மேன்மேலும் சுரண்டிக் கொள்ளையிட்டு வருகின்றது. இதில் பெண்கள் பன்முகப்பட்ட வழிகளில் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் பெண் ஒடுக்குமுறைகளை அடையாளம் காணமுடிகிறது.
முதலாளித்துவ சமூக அமைப்புக் கூட பெண்களை ஒடுக்குவதில் தனது பங்கை விட்டுவைக்கவில்லை. பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விளம்பரக் காட்சிப் பொருளாகவும், புத்தக அட்டைகள் முதல் சினிமாப் படங்கள்வரை, பெண்களின் நிர்வாணக் கோலங்களைக் காட்டி பணம் சேர்க்கும் குறுக்கு வழிகளையே கையாள்கிறது. தமிழ்த் திரைப்படங்கள், தொலைக் காட்சி நாடகங்களில் பெரும்பாலானவைகூட கதாநாயகியை வில்லனிடமிருந்து காப்பாற்றும் பழமையான வீரயுகக் காதலையும், பெண்ணடிமையைப் பேணும் பழமைக் கருத்துக்களையுமே பெண்களிடம் மென்மேலும் திணித்து வருகின்றது.
இதனால் அறியாமையும் , மூடத்தனங்களையும் ஆண்களைவிட அதிகம் பேணுபவர்கள் பெண்களாகவே இன்றும் உள்ளனர். இவைகளை இவர்கள் மீறமுடியாத சமுதாய விதிகளாகவே கருதுகின்றனர். அடிமைத்தனத்தையும், அடக்குமுறைகளையுமே தமக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதி அன்பு, காதல், தாய்மை, பதிவிரதாதன்மை என்று ஏற்று வாழும் அடிமையுணர்வு இன்றும் இவர்களிடம் தொடர்கிறது. ஆள்பவருக்கும், ஆளப்படுபவருக்கும் இடையே அன்பும், காதலும், தியாகமும் உள்ளது என்பது எவ்வளவு பொய்யானது, ஏமாற்றமானது, சமத்துவமான ஒரு நிலையிலேயே அவை உருவாகி நிலைக்க முடியும்.

அடிமைகளின் உழைப்பில் உல்லாசமாக வாழ்ந்த ஆளும் வர்க்கம் தம் அனுபவிக்கும் போகப் பொருட்களில் ஒன்றாகவே பெண்களையும் ஆக்கிக்கொண்டது. இயற்கை பாலியல் கவர்ச்சிக்காக பெண்களுக்கு அளித்த உடலழகு அன்றைய ஆளும் வர்க்கத்தினருக்குப் போதவில்லை. பொட்டிட்டு, மையிட்டு,பூக்கள்சூடி, பட்டும் சருகையும் சுற்றி, உடலெங்கும் ஆபரணங்கள் மாட்டி, பெண்களை அழகு பார்த்தனர். உடலழகைக் கூட்ட உண்டியைச் சுருக்கியும், இடையை மெலிதாக்க ஒட்டியாணமும், கால்களை சிறுகவைக்க இரும்புக் காலணிகளையும் கூட மாட்டி வைத்து, உணர்வற்ற பாவைகளாக பெண்களை தமது மாளிகைகளில் கொலுவைத்திருந்தனர் ஆளும்வர்க்கம் அறிவியல், மத, கலை, கலாசாரங்களுக் கூடாக ஊட்டிய இக்கருத்துக்களை அடிமைத்தனத்திலும், ஏழ்மையிலும் அறியாமையிலும் மூழ்கியிருந்த அன்றைய ஆண்களும், பெண்களும் ஏற்று நடந்தனர்.

ஏங்கல்ஸ் அவர்களின் கூற்றுப்படி “வரலாற்றில் தோன்றியமுதல் வேலைப்பிரிவினை அதுவானது. முதல் அடிமையும் பெண்ணானாள்’ பிற ஆடவனை நிமிர்ந்து நோக்காத அடக்கமும், கணவனுக்கு அஞ்சி, நாணி ஒடுங்கும் தன்மையும், எதித்து பேசாத அடிமை சிறுமதியும் பெண்களின் பண்பாக படிப்படியாகப் பேணிவளர்க்கப்பட்டது.

இதற்க்கு தீர்வு மார்க்சியம் மட்டுமே. ஆம் மார்க்சிசம் தான் பெண் ஒடுக்குமுறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையை வழங்கியது. வெறுமனே சுட்டிக் காட்டியது மட்டுமன்றி நடைமுறைப் போராட்டங்கள் புரட்சிகள் வாயிலாக பெண் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிந்து ஆண்-பெண் சமத்துவத்தை நாட்டிலும் வீட்டிலும் நடைமுறைப்படுத்த வழிகாட்டியது. சோஷலிசத்தின் கீழ் தான் முன்பு எப்பொழுதும் அனுபவித்திராத சுதந்திரத்தைப் பெண்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். அதில் முழுமையோ திருப்தியோ அல்லது முடிவான அம்சங்கள் யாவும் நிறைவுடையனவாக இருந்தன என்று கூறிவிட முடியாது.ஆனால் மனிதகுல வரலாற்றில் வர்க்கங்கள் தோற்றம் பெற்ற பின்னான சமூக அமைப்புகளில் சோஷலிச சமூக அமைப்பில் மட்டுமே பெண்கள் தமக்குரிய சமூக சமத்துவத்தை நிலைநாட்டக் கூடியதாக இருந்ததை மறுத்துவிட முடியாது.

இதனை பற்றி விரிவாக காண்பதே எனது இந்த தொடரின் நோக்கம் சிபி 8/12/19


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *