இன்று கொரோனா பெயரில் சர்வதேச பொது நெருக்கடியால் தோன்றி உள்ள நெருக்கடியின் சுமையைத் தொழிலாளர்களிடம் சுமத்தி யிருப்பதாலும், இதை மறைக்க உருவாக்கப்பட்டுள்ள மத சாதி வெறி அடக்கு முறையாலும், வதைபடும் மக்கள் புரட்சிகர அரசியல் போதனையையும், போராட்ட உணர்வையும் ஊட்டாமல் திசைத் திருப்பும் ஒர் கூட்டம் நம்மிடையே முற்போக்கு முக மூடியில் உலா வரும் போது அதனை எதிர் கொள்வதோடு நமது பணியையும் அறிவோம்.
சமுதாய மாற்றத்திற்கான புரட்சி கரப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் பாட்டாளி வர்க்கம் – விவசாய வர்க்கம் ஆகியவற்றின் கூட்டணியை மையமாக வைத்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஓரணியில் திரட்டி விவசாயப் புரட்சியை முதன்மையாகக் கொண்ட ஸ்தாபன அரசியற் பணிக்கு நம்மை அர்பணிப்போம்.
இன்று என்றுமில்லாத மிகச்சாதகமான புரட்சிகர மான புற நிலைமை நிலவிவருகிறது. ஆனால் அகநிலையில் புரட்சிகர முற்போக்கு சக்திகளின் அமைப்பு ரீதியான பலம் பல்வேறு குழுக்களாக – இயக்கங்களாக ஐக்கியமின்றி – முக்கியமாகத் தோழர்கள் மத்தியிலும் – எதற்காகவோ (வர்க்க சிந்தனை மாறுபட்டதாகவோ, தனிநபர் தலைமை ஆசையோ, விசுவாசமாகவோ, அல்லது உளவாகவோ (?) ஏன் எதுவாகவோ இருக்கலாம்) பிரிந்திருக்கும் வருந்தத்தக்க நிலைமை நீடித்து வருகிறது. எனவே புரட்சிகர முற்போக்கு சக்திகளுக்கு இடையிலான ஐக்கியத்தைப் பலப்படுத்துவதற்காக (இயக்கங்களில் வரட்டுத்தனமான புரட்சிகர? வர்க்கசிந்தனை இல்லாதவற்றைத் தவிர்ந்த) கோட்பாடு ரீதியான போராட்டத்தின் மூலமும், சரியான கருத்துக்களை ஏற்று, தவறான கருத்துக்களை முறியடிப்பதன் மூலமும், சித்தாந்தப் போராட்டத்தையும் நடத்தி, முதன்மையான துணையான முரண்பாடுகளை பகுத்தும் தொகுத்தும் ஆராய்ந்து சுரண்டும் அதிஉயர் எதிர்த் தன்மையை உடைத்து அதை முற்றாக நீக்கவும் அரசியல் கடமையைத் தலையானதல்லவா?.
புரட்சிகரமான சூழ்நிலையில் புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் புரட்சிகரமான கட்சி இல்லை. புரட்சிகரக் கட்சி இல்லாமல் புரட்சி என்பதே இருக்க முடியாது – மாவோ, எனவே நாடு தழுவியதும், வெகுஜன இயல் புள்ளதும், சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும் உறுதிவாய்ந்த கம்யூனிச நடைமுறையினைக் கொண்ட “போல்சுவிச’ மயமான கட்சி ஒன்று அமைந்தால் மட்டுமே இன் நிலையில் இருந்து விடுபடுவோம்.
அரசியல் அதிகாரத்திற்கான பாட்டாளி வர்க்க உணர்வை சிருஷ்டித்து அதற்கான போராட்ட வடிவங்களை அதன் ஸ்தாபன வடிவில் உருவாக்குதல். இதை நடைமுறைப்படுத்த தத்துவப் போராட்டத்தை த் தொடர்ந்து முன்னெடுத்து அதில் சரியானவற்றை மக்களிடம் போதிப்பது போன்ற புரட்சிகர கடமைகளைச் செய்ய வேண்டாமா?
மேலும் முதலாளித்துவ பாராளுமன்றக் குட்டையில் நாறும் முதலாளித்துவ கட்சிகள், வலது, இடது திருத்தல்வாத கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் போன்ற கட்சிகளின் வர்க்கத் தன்மையைத் தோலுரித்து அம்பலப்படுத்துவதும், அதன் பின்னுள்ள மக்கள் அணியினரைப் பாட்டாளி வர்க்கத்தின் பாட்டாளிவர்க்க சிந்தனைத் தலைமையிலான விஞ்ஞான பூர்வ ஸ்தாபனத்தின் பின்னால் அணிதிரட்ட வேண் டிய கடமையையும் அல்லவா?.
அதே போல புரட்சிகர இயக்கங்களுள்ளும் இன்று வலது, இடது சந்தர்ப்பவாதத் திரிபுகள் தலைதூக்கியுள்ளது. இவற்றை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியம் பற்றித் தோழர் மாவோ பின்வருமாறு குறிப் பிடுகின்றர்.
“ஒரு சரியான அரசியல் ராணுவக் கோட்பாடுகள் என்பது தன்னெழிச்சியாகவோ, அமைதியாகவோ , வளராது; ஆனால், போராட்டம் என்ற போக்கின் ஊடே மட்டும்தான் வளரும் என்பதை – வரலாறு நமக்குக் கூறுகிறது. இந்தக் கோட்பாடுகளும் ஒரு புறத்தில் “இடது” சந்தர்ப்ப வாதத்தையும், மறுபுறத்தில் “வலது’’ சந்தர்ப்ப வாதத்தையும் எதிர்த்துப் போராடித் தோற்கடித்தாக வேண்டும். புரட்சிக்கும், புரட்சிகர யுத்தத்திற்கும் சேதப்படுத்தும் தீங்கு பயக்கும் போக்குக்களை எதிர்த்துப் போராடாமல், முற்றும் முழுக்க ஒரு சரியான கோட்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதோ யுத்தத்தில் வெற்றிபெறுவதே இயலாததாகும்.”
சுருங்கச் சொன்னல் இன்று மக்களது கனவான புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்பதே இன்றைய கடமை, இக்கடமைக்கு ‘தன்னைப் பூரணமாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டாமோ?.