இன்று மார்க்சிய லெனினியவாதிகளையும் அமைப்புக்களையும் எதிர்நோக்கும் பணி

மார்க்சிய லெனினியக் கட்சி எனும் போது நாம் புரட்சிகர அரசியற் பாதையை முன்னெடுக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியையே கருத்திற் கொள்கிறோம். முதலாளியத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் காணுகிற போக்கை நாம் ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவற்றினுட் –குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு– காண முடிந்தது. எனினும், உலகின் முதலாவது சோஷலிச அரசான சோவியத் யூனியனில் நவீன திரிபுவாதம் அதிகாரத்திற்கு வந்த பின்பே, உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திரிபுவாதம –அதாவது மார்க்சிய லெனினிய மறுப்பு– வெளிப்படையாகத் தலையெடுத்தது. அதற்குச் சோவியத் ஒன்றியக் கம்யூனிஸ்ட் கட்சியும் சோவியத் ஒன்றிய அரசும் ஆதரவாயிருந்தன. கட்சிகளுள் இருந்த மார்க்சிய லெனினியர்கள் தமது கட்சிகள் மார்க்சிய லெனினியத்திலிருந்து திசை விலகுவதை எதிர்த்து உட்கட்சிப் போராட்டங்களை நடத்தினர். அதன் பயனாகப் பல கட்சிகள் பிளவுண்டன. சில கட்சிகள் உடைவின்றி மார்க்சிய லெனினியப் பாதையைப் பின்பற்றின. அரசுகளின் மீது சோவியத் ஆதிக்கம் வலுவாக இருந்த இடத்து, மார்க்சிய லெனினியர்கள் கட்சிகளிலிருந்து ஒதுக்கப்பட்டுச் சிறுகுழுக்களாகவே இயங்க முடிந்தது.

மார்க்சிய லெனினியத்தைக் கொள்கையளவில் ஏற்ற கட்சிகள் யாவும் அன்று தம்மைக் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றே அழைத்து வந்தன.

திரிபுவாதப் போக்குகள் குருஷ்சேவிற்கு முன்பிருந்தே பிரித்தானிய, பிரெஞ்சு, இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சிகளுள் தோன்றிவிட்டன. பின்னைய இரு கட்சிகளின் பாராளுமன்ற தேர்ந்த எண்ணிக்கை வலிமை அதற்கு உதவியது. யூகோஸ்லாவியக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்டாலின் காலத்திலேயே திசை விலகிவிட்டது. எனினும் ரஷ்யப் புரட்சிக்குப் பின்பு, எல்லாக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பெயரளவிலேனும் தம்மை மார்க்சிய லெனினியக் கட்சிகளாகவே அடையாளப்படுத்தி வந்துள்ளன என்பது முக்கியமானது. இவ்வகையிலேயே, இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோற்றத்தையும் இருப்பையும் கவனிக்க வேண்டும்.

பாராளுமன்ற இடதுசாரிகளான CPI, CPM கட்சிகளும் திரிபுவாதக் கம்யூனிஸ்ட் கட்சியாக படிப்படியாக முதலாளியத்துடன் செய்து வந்த சமரசங்களும் இடதுசாரி இயக்கத்தின் சரிவிற்கு அளித்த பங்கு பெரிது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை திரிபுவாதப் பாதையைத் தெரிவு செய்தது.

கட்சிக்குள் மார்க்சிய லெனினியம் வலுவான ஒரு போக்காக இருந்ததனாலேயே, 1967 கட்சியிற் பிளவு ஏற்பட்ட போது, பெரும்பாலான தொழிற்சங்க உறுப்பினர்களையும் கட்சி உறுப்பினர்களில் அரைவாசிப் பேரையும் செயற்குழுவிற் கணிசமானோரையும் மார்க்சிய லெனினியப் பிரிவுடன் கொண்டு செல்ல முடிந்தது. மார்க்சிய லெனினியத்தை ஏற்கக் கூடியவர்களை அணிதிரட்டுவதில் தோழர் சாரு மசூம்தார் போல தமிழகத்தில் தோழர் அப்பு பங்கு முக்கியமானது என்பதில் ஐயமில்லாத போதும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மார்க்சிய லெனினியச் சிந்தனை வலுவாக இருந்திராவிடின் தனி ஒருவரால் ஒரு பெருபான்மையினரை  வென்றெடுத்திருக்க இயலாது என்பது கவனம் கொள்ள வேண்டும்.

1964இல் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு ஒரு கடும் உட்கட்சி விவாதத்தின் பின்பு நிகழ்ந்தது என்பதும் இங்கு கவனிக்க உகந்தது. பிற்காலங்களில் மார்க்சிய லெனினியக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகளில் பல, முறையான விவாதமின்றியும் குழு மனப்பான்மையாற் தூண்டப்பட்டும் நிகழ்ந்தன. அவ்வாறு பிளவு கண்டவர்கள் பல்வேறு அரசியலுக்கு இரையானதையும் தனிமைப்பட்டு அடையாளமிழந்ததையும் கண்டுள்ளோம்.

இன்று யதார்த்தமான சூழல், பரந்துபட்ட ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்டியெழுப்புவதன் மூலமே சமூக மாற்றத்தைக் கொண்டுவர இயலும் என உணர்த்துகிறது. அத்துடன் உலக நிலவரங்களையும் நாட்டின் பின்தங்கிய முதலாளிய வளர்ச்சியும் 75% மக்கள் இன்றும் கிராமபுறங்களில் வாழும் பின் தங்கிய நிலபிரபுத்துவ சிந்தனையில் சிறைப்பட்டு கிடக்கும் புதிய காலனிய ஆதிக்கத்தைக் கொண்டுள்ள ஒரு நாடு என்பதை  கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது, சோஷலிசத்தை நோக்கிய நகர்வு முதலில் சனநாயகப் புரட்சியின் கடமைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதுடன் அந்தச் சனநாயகப் புரட்சி முதலாளிய சனநாயகத்திற்கானதல்ல எனவும் அதேவேளை சோஷலிச இலக்குக்களை நிறைவேற்றும் மக்கள் ஜனநாயகமாக அமைவது கடினம் எனவும் விளங்கும். எனவே புதிய ஜனநாயகத்திற்கான புரட்சிகர வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதன் மூலமே ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டணிகளான உள்ள பெருமுதலாளிய சக்திகளையும் முறியடித்துத் தொழிலாளர்-விவசாயிகள் உட்பட்ட அனைத்து உழைக்கும் மக்களதும் அதிகாரத்தை நிறுவ இயலும் என்பதும் தெளிவாகிறது.

எனவே பரந்துபட்ட ஐக்கிய முன்னணி என்பது, புதிய ஜனநாயகப் புரட்சி எனும் இலக்கை மனதிற் கொண்டு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. அத்தகைய முன்னணி ஒன்றிற் செயற்படுவதன் மூலமே ஒரு மாக்சிய லெனினியக் கட்சி தன்னை வலுப்படுத்திப் புரட்சிக்குத் தலைமை தாங்க இயலும்.

எந்தப் புரட்சிகரக் கட்சியும் கட்டியெழுப்ப முனையும் ஐக்கிய முன்னணியும் அடிப்படையான விடயங்களில் சந்தர்ப்பவாதச் சமரசங்கட்கு இடமளித்தால், அது, முடிவில், அந்த ஐக்கிய முன்னணிக்கும் அதைக் கட்டியெழுப்ப முனையும் புரட்சிகரக் கட்சிக்கும் கேடாகவே அமையும். இது வரலாற்றில் நாம் பன்முறை கண்ட உண்மை.

நிச்சயமாக, நாட்டில் உள்ள ஒரே மார்க்சிய லெனினியக் கட்சியையும் பிற மாக்சியவாதக் குழுக்களையும் தனிமனிதர்களையும் ஒரு அணிக்குட் கொண்டுவரும் முயற்சியும் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியின் நோக்கங்களுடன் பொருந்தி வருகிறது. எனினும், எந்த ஐக்கிய முன்னணியும் பேரினவாதம், குறுந்தேசியம், தரகு முதலாளியம், ஏகாதிபத்தியம், அந்நிய மேலாதிக்கம் என்பனவற்றுடன் எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லாதவாறு அமைவது அதி முக்கியமானது.

மார்க்சிய லெனினியவாதிகளையும் அமைப்புக்களையும் எதிர்நோக்கும் பணி பெரியது. அது கடினமானதுமாகும். ஆனால் நிலைமைகள் சாதகமாக மாறத் தொடங்கியுள்ளன. நேர்மையும் நிதானமும் நல்ல சக்திகளை அரவணைத்துச் செல்லும் ஆற்றலுமே அந்த நிலைமைகளைச் சரிவரப் பயன்படுத்த உதவுவன.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *