இந்திய – சீன எல்லை மோதல்: இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி, 4 பேர் கவலைக்கிடம்
இந்திய – சீன எல்லை மோதல்: இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி, 4 பேர் கவலைக்கிடம்

இந்திய – சீன எல்லை மோதல்: இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி, 4 பேர் கவலைக்கிடம்

இந்திய ராணுவத்தினர்
Image caption(கோப்புப்படம்)

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் நான்கு இந்திய ராணுவத்தினர் கவலைக்கிடமாக இருப்பதாக இந்திய அரசின் வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்திய – சீன எல்லை பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தளபதிகள், முப்படைகளின் கூட்டுத் தளபதி பிபின் ராவத் ஆகியோர் செவ்வாய் இரவு ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக, செவ்வாய் மதியம் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்திய – சீன எல்லை பிரச்சனை என்ன?

இந்திய ராணுவம் செவ்வாய் இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய – சீன துருப்புகள் இடையே இதற்கு முன்னர் கைகலப்பு ஏற்பட்ட லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15/16 அன்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. அதில் படுகாயமடைந்த 17 இந்திய ராணுவ துருப்புகள் அங்கு நிலவும் பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலை நிலவியதால் உயிரிழந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. எல்லைப் பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையும் காப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக இருக்கிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த மோதலில் மூன்று இந்திய ராணுவ துருப்புகள் உயிரிழந்ததாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மோதலில் ஆயுதப் பயன்பாடு எதுவும் நிகழவில்லை என்றும் ராணுவ வீரர்களின் கைகலப்பே இந்த மரணங்களுக்குக் காரணம் என்று பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்த மோதலின்போது சீன தரப்பிலும் பாதிப்பு நிகழ்ந்துள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது. சீன ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் தாக்கியதாக சீனா குற்றம் சாட்டுகிறது என்றும் அந்த செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள சீன தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதை மத்திய உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

இந்திய - சீன எல்லை மோதல்

இந்திய மற்றும் சீன ராணுவங்களின் மூத்த அதிகாரிகள் இடையே இந்தப் பதற்றத்தை தணிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய தரப்பு கூறுவது என்ன?

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, “லடாக் நிலவரம் குறித்து, இந்தியா – சீனா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஜூன் 6ல் உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இரு தரப்பும் சுமூகமாக செயல்பட முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.”

“பிரச்சனை சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கல்வான் பள்ளத்தாக்கில், நேற்று (ஜூன் 15) மாலை மற்றும் இரவில், இந்திய எல்லைக்குள் அத்துமீறிய சீனா ஒருதலைபட்சமாக நடந்தது. இதனால், இருதரப்பும் நேருக்கு நேர் மோதும் சூழல் உண்டானது. இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.”

“உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஏசி) இந்திய எல்லைக்குளேயே எங்களது நடவடிக்கைகள் இருந்தன என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது. சீன தரப்பிலிருந்தும் இதனை எதிர்பார்க்கிறோம். எல்லையில் அமைதியை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதே சமயம் இந்திய இறையாண்மையை பேணிப்பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று இந்திய வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா மேலும் தெரிவித்துள்ளார்.

(கோப்புப்படம்)
Image caption(கோப்புப்படம்)

இந்திய ராணுவம் மீது சீனா குற்றச்சாட்டு

ஒருதலைபட்சமாக செயல்பட்டு பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என சீன வெளியுறவுத்துறை இந்திய ராணுவத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

திங்களன்று இந்திய ராணுவத்தினர் இரண்டு முறை அத்துமீறி சீன எல்லைக்குள் நுழைந்து, மோதலைத் தூண்டும் விதத்தில் நடந்து கொண்டனர் என்றும், இது இருதரப்பினரிடையே கைகலப்புக்கு வித்திட்டது என்றும் சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இந்தியா – சீனா இடையே நிலவி வரும் எல்லை பதற்றத்தைத் தணிக்க, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இரு நாடுகளைச் சேர்ந்த படைப்பிரிவு தளபதி மற்றும் கமாண்டிங் அதிகாரிகள் நேற்றுதான் இரண்டாம் கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எல்லையில் உள்ள இரு கண்காணிப்பு பகுதியில், ராணுவக்குவிப்பை குறைப்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

முன்னதாக ஜூன் 6-ஆம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்ததைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு, பேட்ரோலிங் பாய்ண்ட் 15, உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவத்தினரை 2 முதல் 2.5 கிலோ மீட்டர் தூரம் வரை தங்கள் நாட்டு எல்லைக்குள் சீன ராணுவம் அழைத்துக் கொண்டது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

பழனி
Image captionபழனி

இந்திய – சீன எல்லையான லடாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே திங்கள்கிழமை இரவு நேரிட்ட மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவத்தை சேர்ந்த மூன்று பேரில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்பவரும் அடக்கம் என்று தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பிபிசி தமிழ் செய்தியாளர் சாய்ராம் ஜெயராமனிடம் பேசிய பழனியின் சகோதரரும் இந்திய ராணுவ வீரருமான இதயக்கனி, “நேற்று இருநாட்டு வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் எனது அண்ணன் உயிரிழந்துவிட்டதாக லடாக்கில் உள்ள ராணுவ அதிகாரிகள் என்னிடம் அலைபேசி வாயிலாக தெரிவித்தனர். தற்சமயம் ராஜஸ்தானில் பணியாற்றி வரும் நான் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள எங்களது சொந்த ஊரான கடுக்கலூருக்கு செல்ல டெல்லி விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கேன்” என்று கூறினார்.

40 வயதான பழனி கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாக, இந்த சம்பவம் நடந்த லடாக் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் பணியாற்றி வந்ததாக அவரது சகோதரர் இதயக்கனி கூறுகிறார்.

“நான் சுமார் 10 நாட்களுக்கு முன்னர் என்னுடைய அண்ணனிடம் பேசியபோது, தான் லடாக்கின் நகர்புறப்பகுதியிலிருந்து எல்லைப்பகுதிக்கு செல்வதாகவும், அங்கு தொலைத்தொடர்பு வசதி இருக்காது என்பதால் திரும்ப அழைப்பதற்கு நாளாகும் என்றும் கூறினார்.”

பழனி

“நான் ராணுவத்தில் சேர்வதற்கே என் அண்ணன் தான் காரணம். அவரது மறைவு எங்களது குடும்பத்திற்கு பேரிழப்பாகும். எனது அண்ணனின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் நிலையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என்று கூறும் இதயக்கனி கடந்த பத்தாண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், பழனியின் இறப்புக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @CMOTamilNadu

Edappadi K Palaniswami@CMOTamilNadu

#LadakhBorder பகுதியில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் – கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் திரு.பழனி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். வீரமரணம் எய்திய பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!10.7ஆபிற்பகல் 3:45 – 16 ஜூன், 2020Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமைஇதைப் பற்றி 1,921 பேர் பேசுகிறார்கள்

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @CMOTamilNadu

இந்த நிலையில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகவும், உயிரிழந்த ராணுவ வீரர்களின் ஆன்மாக்களை கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.

இந்த பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன?

இந்திய – சீன எல்லையில் நடக்கும் பிரச்சனை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஓய்வு பெற்ற லெஃப்டினன் ஜெனரலுமான நரசிம்மனிடம் பிபிசி பேசியது.

இந்த தாக்குதல் சம்பவம் எல்லை கட்டுப்பாடு பகுதியில் மேலும் நிலையற்ற தன்மையை தூண்டாது என்று அவர் தெரிவித்தார்.

“ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையான ராணுவ இயக்க நடவடிக்கைகளை கடைபிடிக்காமல் மீறும்போது, இவ்வாறான மோதல்கள் நடைபெறும். இன்னும் இந்த பிரச்சனையில் தீர்வு காண வேண்டும் என்பதில் சீனா தீவிரமாக உள்ளது என்பதை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. ராணுவத்தினர் பின்வாகும்போது ஏற்படும் வேறுபாடுகள் மற்றும் குழப்பங்கள் காரணமாக இந்த மோதல்கள் ஏற்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

(கோப்புப்படம்)
Image caption(கோப்புப்படம்)

“இனி புதிய ஒப்பந்தங்கள் எதுவும் நிறைவேற்ற தேவையில்லை, ஆனால் ஏற்கனவே கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின் விதிகளை பின்பற்ற வேண்டும்.

எல்லை பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர மூன்று கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். ஏற்கனவே முதல் கட்ட பேச்சு வார்த்தை முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் தற்போது அதற்கேற்ற நல்ல சூழல் நிலவவில்லை. மேலும் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை இன்னும் விரைவாக நடைபெற வேண்டும்” என்று ஓய்வு பெற்ற லெஃப்டினன் ஜெனரல் நரசிம்மன் குறிப்பிடுகிறார்.

லேவில் என்ன நடக்கிறது?

இந்த சம்பவம் தொடர்பாக பிபிசியிடம் பேசிய லே பகுதியின் கவுன்சிலரான கோஹ் சோக், “கல்வான் பள்ளத்தாக்கில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள முடியவில்லை. இங்குள்ள பொது மக்களுக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை, ஆனால் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை மட்டும் தேசிய ஊடகங்கள் அளிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி லேவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தகவல் தொடர்ப்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.”

இந்திய எல்லையில் உள்ள லே பகுதியில் 7 கிராமங்கள் உள்ளன. பதற்றம் அதிகரிப்பதால் மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. அங்குள்ள மக்கள் தங்களின் அன்றாட பணிகளை மேற்கொண்டாலும், தகவல் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கிராமங்களுக்கு சென்று வந்த கோஹ் சோக் கூறுகிறார்.

இந்திய - சீன எல்லை மோதல்
Image captionசீன ராணுவத்தினர். (கோப்புப்படம்)

“கல்வான் பள்ளத்தாக்கு அல்லது பான்கோங் ஏரி அருகே தான் மோதல்கள் நடைபெற்றிருக்க வேண்டும். அங்கு பொதுவாக மக்கள் நாடமாட்டம் இருக்காது. குளிர்காலத்தில் மட்டுமே மக்கள் அங்கு நடைபயணம் மேற்கொள்வதற்காக செல்வார்கள். தற்போது கோடை காலம் என்பதால் அங்கு பொதுமக்கள் யாரும் செல்லமாட்டார்கள். ஏற்கனவே எல்லையில் சீனாவுடன் மோதல்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பதற்றம் அதிகரித்துள்ளது. எனவே அரசாங்கம் பேச்சு வார்த்தை மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என கோஹ் சோக் கூறுகிறார்.

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை கடந்த சுமார் ஐந்து வார காலமாக பூதாகரமாகி உள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா தனது ரோந்து படகுகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

மே மாதத் தொடக்கத்தில் இந்த ஏரியின் அருகே இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதி லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது.

அக்சாய் சீனாவின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் சில கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக இந்தியா கூறியது. அதன்பிறகு அங்கு தனது ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்தது.

லடாக்கில் எல்லைப் பகுதியில் இந்தியா அமைதி சாலைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
Image captionலடாக்கில் எல்லைப் பகுதியில் இந்தியா அமைதி சாலைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால் சீனாவோ, கல்வான் பள்ளத்தாக்கு அருகே சட்டவிரோதமாக பாதுகாப்பு தொடர்பான கட்டுமானங்களை இந்தியா செய்து வருவதாக குற்றம் சாட்டியது.

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா தனக்கு சொந்தமான இடம் என்று கருதும் எல்லைப்பகுதிகளில் சீனப் படைகள் கூடாரம் அமைத்து, சுரங்கங்கள் தோண்டி அதன் வழியாக கனரக உபகரணங்களை கொண்டு வந்துள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *