இந்திய சீன எல்லைத் தகராறின் வரலாறு ================================தெளிவான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு சீன – இந்திய எல்லையில் வரையறுக்கப்படாததற்கான காரணம் வரலாற்றுரீதியானது. இதன் அடிப்படை ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய ஆளும்வர்க்கத்திற்கு 1947-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட அதிகார மாற்றத்திலிருந்தே ( ‘சுதந்திரத்திலிருந்தே’ ) தொடங்குகிறது. அதிகார மாற்றம் நடந்த பின்னர், இந்திய தரகு முதலாளிகளின் கனவுகளைப் பிரதிபலிக்கும் முகமாகவே நேரு இருந்தார்.அகண்ட பாரதம் என்பது வெறுமனே ஆர்.எஸ்.எஸ்.-ன் கனவு மட்டுமல்ல. காங்கிரசின் கனவாகவும் இருந்தது. குறிப்பாக 1947 அதிகார மாற்றம் நடந்த சமயத்தில் இந்தியாவிற்கு அருகாமை நாடுகளான நேபாளம், காஷ்மீர், பூட்டான், தற்போதைய வடகிழக்கு மாநிலங்கள், மியான்மர், வங்கதேசம், திபெத் ஆகியவற்றை ‘இந்தியாவாக்க’ பெரும் அவா கொண்டிருந்தது இந்திய ஆளும்வர்க்கம்.அதன் ஒரு பகுதியாக வரையறுக்கப்பட்ட இந்திய வரைபடத்தின் எல்லைகளை தன்னிச்சையாக மாற்றியமைத்தது முதல், சீனாவுடனான எல்லைக் கோடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் நேரு தவிர்த்தது, திபெத்தில் சீனாவுக்கு எதிராக கலகம் உண்டாக்க அமெரிக்காவிற்குத் துணைபுரிந்தது, சீனாவுடன் பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு போரில் ஈடுபட்டது, அதில் படுதோல்வியைத் தழுவியது என ஒரு பெரும் வரலாறு நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு.1962 போருக்குப் பின்னணியில், அமெரிக்க ஏகாதிபத்தியம், ரசிய சமூக ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் நலன்கள் மற்றும் இந்தியாவின் ஆளும் வர்க்கங்களின் நலன்களும் குடி கொண்டிருந்தன. அவையே அந்தப் போரை பின் நின்று இயக்கின.பனிப்போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க, ரசிய நாடுகளுக்கு இடையிலான அந்தப் பொதுவான ‘நலன்’ குறித்தும், இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன் குறித்தும் போரில் அவை ஆற்றிய பங்கு குறித்தும் தமது “இமாலய சாகசம்”எனும் நூலில் ஆதாரப்பூர்வமாக விளக்கியிருக்கிறார் தோழர் சுனிதி குமார் கோஷ். நாடுகளுக்கு இடையே அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எழுதப்பட்ட கடிதங்கள், நேரு, படேல் உள்ளிட்டோர் எழுதிய கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நூலைப் படிப்பது வரலாற்றிரீதியாக இந்திய சீன எல்லைப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள உதவும். (“இமாலய சாகசம்” மின்னூலை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்)1962-ம் ஆண்டு இருந்த நிலைமைகள் வேறு; 2020-ல் தற்போது இருக்கும் நிலைமைகள் வேறு. அன்று இருந்தது மாவோவின் கம்யூனிச சீனா. ஆனால் இன்று இருப்பதோ இராணுவரீதியிலும், பொருளாதார ரீதியிலும் தனது விரிவாக்கக் கொள்கைகளைக் கொண்டிருக்கும் முதலாளித்துவச் சீனா. ஒரு ஏகாதிபத்தியமாக வளர்வதற்கான முயற்சியில் அது இருக்கிறது.சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு 1990-களில் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளின் மூலம் தனது வல்லாதிக்கத்தை இராணுவரீதியாகவும், ஐ.எம்.எஃப், உலகவங்கி ஆகியவற்றின் மூலம் பொருளாதாரரீதியாகவும் தக்க வைத்துக் கொண்டது அமெரிக்கா.மாவோவிற்குப் பின்னர் ஒட்டுமொத்தமாக முதலாளித்துவப் பாதையை நோக்கிச் சரிந்த சீனா, அங்கிருந்த சோசலிசக் கட்டமைப்பையும், சீன மக்களின் அயராத உழைப்பையும் பயன்படுத்திக்கொண்டு படுவேகமாக பொருளாதாரத்திலும், இராணுவரீதியிலும் வளர்ந்தது.பெருவீத உற்பத்திக்கு உகந்த வகையில் உருவாக்கப்பட்ட அதன் உட்கட்டமைப்பு, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உற்பத்திப் பின்னிலமாக சீனாவை உருவாக்கியது. மிகக் குறைந்த விலையில் அங்கு கிடைக்கப்பெறும் உழைப்புச் சக்தி, அமெரிக்க முதலாளிகளின் இலாபத்தை உறுதி செய்யும் அட்சய பாத்திரமாக விளங்கியது. இதன் காரணமாக உலகளாவிய உற்பத்திச் சங்கிலியில், சீனா ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக வளர்ந்தது.(மூலம் வினவு)…(“இமாலய சாகசம்” மின்னூலை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்)https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2020/07/sunitikumar-Gosh-Book.pdf
1Palani Chinnasamy