1925-ல் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கான்பூர் தொடக்க மாநாட்டுக்குப் பிறகு, எஸ்.வி. காட்டேவுக்குப் பின்னர் ஜி. அதிகாரி, பி.சி. ஜோஷி ஆகியோர் கட்சியின் பொதுச் செயலாளர்களாகப் பணியாற்றினர். 1933-ல்தான் அகில இந்திய அளவில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது கம்யூனிச அகிலத்தில் உறுப்பு நாடாக இணைந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ல் தொடங்கப்பட்ட போதிலும், ஏறத்தாழ 25 ஆண்டுகளாக கட்சிக்குத் திட்டமோ, போர்த்தந்திர – செயல்தந்திரங்களோ, அமைப்பு விதிகளோ இல்லாமல்தான் அது இயங்கி வந்துள்ளது. திரிபுவாதத் தலைமையின் வலது சந்தர்ப்பவாத துரோகத்தனமும் புரட்சிகர அணிகளின் அளப்பரிய தியாகமும் நிறைந்ததுதான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் கடந்தகால வரலாறாக உள்ளது. பின்னர் 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, தனிக் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானபோதிலும், விரைவிலேயே அது நவீன திரிபுவாதக் கட்சியாகச் சீரழிந்தது.
நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு, திரிபுவாத – நவீன திரிபுவாதப் பாரம்பரியங்களை நிராகரித்து, உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உதயமாகி, இந்திய கம்யூனிச இயக்கம் புரட்சிகரப் பாதையில் அடியெடுத்து வைத்தாலும், இடது சந்தர்ப்பவாதப் பாதையில் சறுக்கி விழுந்து பெரும் பின்னடைவையும் இழப்பையும் சந்தித்தது. இடது சந்தர்ப்பவாதத்தை நிராகரிப்பது என்ற பெயரில் மீண்டும் வலது சந்தர்ப்பவாதப் போக்குகள் தோன்றி மா-லெ கட்சி பிளவுபட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதிலும், நாடு தழுவிய ஐக்கியப்பட்ட புரட்சிகர கட்சியாக வளரவில்லை